சாதியின் தோற்றம்

சாதியின் தோற்றம் பற்றிய பல்வேறு கருதுகோள்கள் வேறுபட்ட அறிஞர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. சாதியின் தோற்றம் குறித்து தோழர் பக்தவத்சல பாரதியின் “மானிடவியல் கோட்பாடுகள்” என்னும் நூலில்

1.            மரபுக் கோட்பாடு

2.            தொழிற் கோட்பாடு

3.            சமயக் கோட்பாடு

4.            அரசியற் கோட்பாடு

5.            இனக் கோட்பாடு

6.            படிமலர்ச்சிக் கோட்பாடு. -- [படிமலர்ச்சிக் கோட்பாடு என்பது எந்தவொரு ஆய்விலும் நிச்சய மாக இடம்பெறும் ஒன்று. ஏனெனில் விட்டுப் போன வற்றையெல்லாம் இதில் அடக்கிவிடலாம்.]

என்று ஆறு கோட்பாடுகளாக விளக்கியபின்:

“ஆரியர்கள் இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்தபோது தொல் திராவிடர்களை அடிமைப்படுத்தி நிறுவிய அமைப்பே சாதி அமைப்பு. குடியேறிய ஆரியர்கள் இங்கிருந்தவர்களைக் காட்டிலும் உடல் தோற்றத்தில் பொலிவானவர்களாகத் திகழ்ந்ததால் அதனைப் பயன்படுத்தி அவர்கள் வருணப் பாகுபாட்டைக் காட்டத் தொடங்கினர்." என்று மிக எளிதான குறிப்பொன்றை முன்வைக்கிறார்.

· பத்தொன்பதாம் நூற்றாண்டின் இன ஒப்பாய்விய லாளர் கருத்து அடிப்படையில் இரு பிரிவினராகப் பிரிந்து இருந்தனர். பண்பாட்டுக்கூறுகள் ஓரிடத்தி லிருந்து இன்னோரிடத்திற்குப் பரவுகின்றன என்று வாதிட்டனர். வெவ்வேறு குழுவினருக்கு ஒரே மாதிரியான நம்பிக்கைகளையும் செயற்பாடுகளையும் சுதந்திரமாக உருவாக்கிக்கொள்ளக்கூடிய தகுதி உண்டு என்று மற்றவர்கள் கூறினர். லூயி ஹென்றி மார்கன் இன்னும் அழுத்தமாகப் பண்பாட்டுப் படி மலர்ச்சியில் வெவ்வேறு குழுக்கள் ஒரே கட்டங் களினூடு செல்வதாலேயே இம்மாதிரியான ஒரே மாதிரித் தன்மை காணப்படுகின்றது என்றார். 20 ஆம் நூற்றாண்டளவில் பெரும்பாலான சமூக-பண்பாட்டு மானிடவியலாளர்கள் இனவரைவியல் (ethnography) ஆய்வில் ஈடுபடலாயினர். இதில் மானிட வியலாளர் இன்னொரு சமூகத்தவர் மத்தியில் குறிப்பிடத்தக்க அளவு காலம் வாழ்ந்து அக்குழுவின் சமூகப் பண்பாட்டு வாழ்வில் பங்குபற்றி அவதானித்தனர்.

· சாதி என்பது, வழிவழியாய்ப் பரம்பரைத் தொழில் அடிப்படையில் இருந்த குழுக்களும் கூட்டங்களும் நாளடைவில், பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட சமூக அமைப்பாய் மாறி, பின் படிமுறை அமைப்பும் ஏற்பட்டது. சாதிகளில் படிமுறை ஏற்றத்தாழ்வுகள் தமிழரிடம் தொன்றுதொட்டு இருந்ததல்ல; ஆனால், எப்பொழுது எவ்வப் பகுதிகளில், எத்தனை வலுப்பெற்று இருந்தது என்பது திண்ணமாய்த் தெரியவில்லை. சாதி வகுப்பு முறைமைகளும் படிமுறை அமைப்பும் இடத்துக்கிடம் வேறுபடும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், முற்கால அரசரிடமும், பிற செல்வந்தர்களிடமும் இருந்த நெருக்கம், அணுக்கம் பற்றிய உறவாட்ட வேறுபாடுகளினாலும், சாதிகளில் ஏற்றத்தாழ்வுகள் மாறி வந்துள்ளன.

·             இந்தியச் சமூகத்தில் ஒரு புதிராகவே இருந்து வருகின்ற சாதி அமைப்பின் தோற்றம் தொடர்பான அனைத்து ஆய்வுகளும் ஆரியர்களுடன் தொடர்பு படுத்தியே பார்க்கப்படுகின்றன. இன்னும் ஆரியர்கள் புகுத்திய வர்ணங்களின் கலப்பில்தான் நூற்றுக் கணக்கான சாதிகள் தோன்றியதாகக் கருதப்படுகிறது. ஆரியர்கள் இந்தோ-ஐரோப்பிய மொழிகளைப் பேசிய வெள்ளை நிறம்கொண்ட இனக் குழுவினர் என்பது மானுடவியல் மற்றும் மொழியியல் அறிஞர் களின் கருத்தாகும். இந்தோ-ஐரோப்பிய மொழிக் குழு எனக் கூறும்போதே இந்தியத் தொடர்பற்ற பிற ஐரோப்பிய மொழிக் குழுவினரிடம் சாதி அமைப்பு காணப்படவில்லை என்பதையும் உய்த்துணர்ந்து கொள்கிறோம்.

·             “அகில உலகப் புகழ்பெற்ற மானுடவியல் அறிஞரான கிளாடே லெவி ஸ்ட்ராஸ் என்பவர் குறிப்பிட்ட மானுட குழுக்களுக்கும் அறிவுமுறைக்கும் உள்ள சம்பந்தத்தைப் பெரிய அளவில் விளக்கம் காட்டியவர். ஆதிவாசிகள் எப்படிச் சிந்திக்கிறார்கள். எப்படி ‘வித்தியாசம்’ என்ற கருத்தாக்கத்தைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று ‘காட்டுமிராண்டி மனம்’ என்ற நூலில் ஆய் கிறார். மார்க்சியர்கள் ஆரம்பத்தில் கருத்து என்பது பிரமை என்றே எண்ணினர். அல்துஸ்ஸர் என்ற பிரஞ்சு மார்க்சீயவாதி அது தவறு என்று நிரூபித்தார். இத்தாலிய மார்க்சீயவாதியான கிராம்சி கலாச்சாரம் முக்கியமானதென்றார். பொதுவாக இன்றைய மார்க்சீயத்தில் பொருளாதாரத்தைப்போல் கலாச் சாரமும் முக்கியம் என்ற பார்வையே கோலோச்சுகிறது. வர்க்கங்கள் மாறுபடும்போது பொருளாதாரம் மாறும். அதுபோல் கலாச்சாரமும் மாறுபடுகிறது. வர்க்கங்கள் அற்ற மேற்கில் உருவான இந்த மார்க்சீயப் பார்வையை சாதிகளைக் கொண்ட இந்தியச் சூழலுக்கு ஏற்ப மறுவியாக்கியானம் செய்ய வேண்டும். அப்படிப் பார்க்கையில் பலநூறு ஆண்டுகளாகத் தனித்தனியாய் இயங்கிய சாதிகளுக்கான கலாச்சாரமும் ஓரளவு அதனோடு சார்ந்த தனியான சிந்தனை இழை ஊடாட்டங்களும் உண்டாகின்றன என்று கூறலாம்.”

·             உலகில் மனித சமூகம் பல இடங்களில் பரிணமித் திருக்க முடியாது என்பதும் அத்துடன் மனித சமூகம் சுமார் இரண்டு லட்சம் ஆண்டளவில் ஆப்பிரிக்காவில் பரிணமித்து, பின்னர் அங்கிருந்தே உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது என்ற ஆதாரங்களின் அடிப் படையிலான உண்மையையும்தான். இரண்டாவதாக அகழாய்வு முடிவுகள். சிந்துவெளிப் பண்பாட்டு மக்கள் உட்பட இந்தியாவிற்குள் நிகழ்ந்துள்ள குடி யேற்றங்களைக் கவனத்தில் கொள்வது. ரிக்வேத ஆரியர்களின் வருகைக்கு முற்பட்டது சிந்துவெளி நாகரிகம் என்பதாலேயே அவர்களே பூர்வகுடிகள் என்றாகிவிடாது. சிந்துவெளிக்கு முன்னரே இந்தியாவிற்குள் குடியேற்றங்கள் நிகழ்ந்துள்ளதை அகழாய்வுகள் காட்டுகின்றன. இதுவரையிலும் இந்தியாவிற்குள் நிகழ்ந்துள்ள குடியேற்றங்களின் வரிசையில் முதலில் வந்தவரை பூர்வகுடிகள் என்போமாயின் பின்னர் வந்த அனைவரும் வந்தேறிகள் என்றாகிவிடும். பூர்வகுடிகள் அல்லது வந்தேறிகள் என்ற கருத்து முற்றிலும் சார்பானது

·             தொல் சமூகங்கள் மிகுந்த கவனத்திற்குரியன வென்றும் ஆதிவாசிகள் விசேஷமானவரென்ற அடிப்படைக் கருத்தாக்கத்திலிருந்தும் -- ஆதிச் சமூகங்களுக்கு மார்க்சிய வரையறையைத் தரவிடாவண்ணம், மார்க் சியத்தை மறுத்தே மானிடவியலாளர், இனவரைவியல் சித்தாந்தத்தைக் கட்டமைக்கின்றனர்.

                பண்பாட்டு மானிடவியலும் சமூக மானிடவியலும் பெரும்பாலும் இனவரைவியல் ஆய்வுகளின் அடிப் படையில் வளர்ந்தவையே. இத்துறைகள் சார்ந்த நூல்களும் பெரும்பாலும் இனவரைவியல் நூல்களே. 20 ஆம் நூற்றாண்டளவில் பெரும்பாலான சமூக-பண்பாட்டு மானிடவியலாளர்கள் இனவரைவியல் ஆய்வில் ஈடுபடலாயினர்.

                “பண்டைய சமூகங்கள்” மிகுந்த முக்கியத்துவ முடையன என்ற கருத்தை வலுவாகக் கொண் டிருக்கும் மானுடவியலாளர், அவர்களுடைய வாழ்க்கை மிக நூதனமானது, ஆச்சர்யமானதென்று கருதிக்கொண்டு ஆய்வு கொள்ளும் மானுடவிய லாளருக்கு "மிகத் தொன்மை வாய்ந்தவர்கள்" மட்டுமல்ல ஒட்டுமொத்த முற்றும் முழுதான ஆதி முதல் என்ற கருத்தாக்கத்தினடிப்படையில்தான் பூர்வ சமூகங்களின் இனவரைவியல் சித்தாந்தம் -- மானுடவியல் கோட்பாடுகளாக முன் வைக்கப் படுகிறது. "ஆதிகால சமூகம்" என்ற கருத்தாக்கத்தில் "ஆதி", "தொல்" என்ற சொல் "முதல் தோற்றம்" -- பூர்வகுடிகள், தொன்மை வாய்ந்தவர்கள் மட்டு மல்ல உலகின் முதன்முதலாகத் தோன்றிய சமூகமும் அதுவே -- என்றபொருளில் பயன்படுத்தப்படுகிறது. விஞ்ஞானத்திற்கு முந்திய மக்கள் யாவரும் மக்களே.

·             “ஆதிவாசிகள்” “பூர்வகுடிகள்” என்ற கருத்தாக்கமே தவறானது; தர்க்க அடிப்படையற்றது.

·             ஆதிவாசி எவரும் நம்மைப் போலவே குயுக்தியும் புத்திசாலியுமானவர்தான்.

                இந்த நாற்பதாயிரமாண்டு காலவெளியில் நாமெல் லோரும் அதே மக்கள்தான். ஓராயிரமாண்டு இங்கிருந்து கொடுத்தோ அல்லது அங்கிருந் தெடுத்தோ பார்த்தோமானாலும் நாமும் அதேயளவு ஆதிவாசிகள்தாம்; பூர்வகுடிகள்தாம்.

                கோட்பாட்டளவிலல்ல அனுபவப்பூர்வமாகவும் அறியக்கூடியவகையிலுமான ஓருண்மையை அச் சமூகங்கள் கொண்டிருந்தன; ஆனால் இன்றைய தொன்மையற்ற மிகச்சிக்கலான நாகரிகமடைந்த சமூகங்களிலிருந்து அவ்வுண்மை மறைக்கப்பட்டும் அந்நியமாகிப்போனதும்தான் நாம் கவனிக்க வேண்டியது.

                இனவரைவியலாளருக்கே உரிய சார்பு உணர்வினால் மார்க்சியத்தை மறுத்து மனித நாகரிகத்தின் தொட்டில் குழந்தையென தொல் குடிகளை 'மனித ஜீவன்கள்' என்று கண்டுபிடித்த மானிடவியலாளர், அதன் பின்னர் அவர்களின் நட்புறவை வளர்த்தெடுத்தனர். தமக்கும் தொல்குடியினருக்குமான நட்பை, பூர்ஷ§வா மனோ பாவ பரிவை, தோழமையை, சுவீகரிப்பை புள காங்கிதத்துடன் மானிடவியலாளர் பேசுவர். இவ்வாறான மேலோட்டமான இலக்கற்ற மானிட வியலாளரின் ஆய்வு முடிவுகள் பிற்போக்கான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

                முதல் பின்னடைவு எதுவென்றால், தம் வசதிக்கேற்ப மிக இலகுவான மிகவும் தவறான கருத்தாக்கத்தை வைத்துக்கொண்டு, இனவரைவியல் சித்தாந்தத்தை கேள்விக்குள்ளாக்காமல் விமர்சனப்பூர்வ அணுகு முறை இல்லாததால் மார்க்ஸை மறுக்கும் தொழிலில் அல்லாடுகின்றனர் மானிடவியலாளர்.

·             உண்மையிலேயே மார்க்ஸை வாசித்தோமானால், மார்க்ஸ் சொல்வதைக் கேட்போமானால்:

                1.            "தொல் குடிகள்" "ஆதிச் சமூகங்கள்" என்றெல்லா மில்லை.

                                “தொல் குடிகள்” “ஆதிவாசிகள்” என்ற கருத்தாக்கம் விஞ்ஞானக் கருத்தாக்கமன்று. ஆனால் “சமூக உருவாக்க”மென்ற விஞ்ஞானக் கருத்தாக்கத்தின்படி, ஆய்வு நிமித்தம் வசதிக்காக வேண்டுமானால் தொல் என்றழைத்துக் கொள்ளக்கூடிய "சமூக உருவாக்கங்கள்" உண்டு. “முதன் முதல் உருவானது” என்ற கருத்தாக்கக் கலப்படமற்ற -- பரிசுத்தமானது, புனிதமானது, நாகரிகத் தொட்டில் குழந்தை, தெளிவான உண்மை கொண்டது, தூய உள்ளூர் சகமனித சொந்தங்கள் இவை போன்ற தவறான கருத்தாக்கங்கள் எதுவுமற்ற ---- “சமூக உருவாக்கங்கள்” உண்டு.

                2.            வேறுள சமூக உருவாக்கங்கள் போன்றே ஓர் ஆதி சமூக உருவாக்கமென்பது "உற்பத்தி முறை"யினடிப் படையிலான அமைப்பாலானது. எந்த சமூகத்தையும் ஆராய அடிப்படையான வலுவான ஆய்வுக் கருவி "உற்பத்தி முறை"யாகும்; "உற்பத்தி முறை"யின் உப கருத்தாக்கங்களான -- "பொருளாதார அடித்தளமும், அரசியல்-சட்டம் போன்ற மேற்கட்டுமானமும் அதே போல் சித்தாந்த மேற்கட்டுமானம் -- எல்லாம் கட்டமைக்கப்பட்ட “சமூக உருவாக்கம்” நடந் திருக்கிறது.

                3.            வேறுள சமூக உருவாக்கங்கள் போன்றே ஓர் ஆதி சமூக உருவாக்கமென்பது குறைந்தபட்சம் கறாரான இரண்டுவகை "உற்பத்தி முறை"யினடிப்படை யிலான அமைப்புகளைக் கொண்டது. ஒன்று, மற்றதைக் கீழ்நிலைப்படுத்தி மேலாதிக்கம் கொண்டு இயங்கும் -- உதாரணமாக, வேட்டைத் தொழிலும்-- ஆநிரை வளர்த்தலும் (ஆநிரை கவர்தலும்)

                                வேட்டைத் தொழிலும் -- விவசாயமும் போன்ற இரட்டை முறைகள். வேட்டையும் சேகரிப்பும், சேகரிப்பும் மீன்பிடித்தலும், அல்லது விவசாயமும் சேகரிப்பும் வேட்டையும், அல்லது ஆநிரை வளர்த்தலும் இன்னபிறவும்.

                4.            வேறுள சமூக உருவாக்கங்கள் போன்றே இரண்டும் அதற்கு மேற்பட்ட உற்பத்தி முறைகளும் --ஒன்று மற்றொன்றை அல்லது அனைத்தையுமே மேலாதிக்கம் கொண்டியங்குவதால் அரசியல் -- சட்டம் மற்றும் சித்தாந்தம் போன்ற மேற்கட்டுமானங்களால் இறுகிய சமூக வடிவமெடுப்பதில் முக்கிய பங்கும் தாக்கத்தையும் ஏற்படுத்தும். ஓர் உற்பத்தி முறை, மற்றொன்றின் அல்லது மற்றெல்லாவற்றின் மீதும் மேலாதிக்கம் செய்வதால் முரண்பட்ட தாக்கங்களை மேற்கட்டுமான தளத்திலேற்படுத்தும். குறிப்பாக சித்தாந்த மேற்கட்டுமான வடிவத்தில் -- மானிட வியலாளர் உண்மையிலேயே கவனத்தில் கொள்வது சித்தாந்தம் குறித்து மட்டுமே --

ஒவ்வொரு உற்பத்தி முறையும் அதற்குச் சமமாகத் தொடர்புடைய தத்துவத்தை / சித்தாந்தத்தை மேற் கட்டுமானத் தளத்தில் உருவாக்கும். அதேபோல் படி நிலை உற்பத்திமுறைகளும் அதனதன் சக்திக்கேற்ப குறிப் பிட்ட வடிவத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்; பல்வேறு உற்பத்திமுறைகள் இணைந்தும் மேற்கட்டுமான தளத்தில் தாக்கத்தை உண்டுபண்ணும். இவையெல்லாம் இணைந்துதான் சமூகம் உருவாகும். சில சமூக மேற் கட்டுமானத்தில் சில வடிவங்கள் முனைப்பாக ஆதிக்கம் செலுத்துவதற்குக் காரணம் குறிப்பிட்ட உற்பத்திமுறை தான்.

மேலாதிக்கத் தாக்கங்கள் முரண்பட்டவையாக இருக்கலாம். பொருளாதார தளத்தில் மேலாதிக்கம் செய்யும் ஒரு உற்பத்தி முறை சமூக உருவாக்கத்தில் இருக்காது. வேறொரு கீழ் நிலை உற்பத்திமுறையின் மேற்கட்டுமான ஆதிக்கத்திலிருக்கும் சமூக உருவாக்கத்தில் முதன்மை உற்பத்திமுறையின் தாக்கம் பின்னுக்குத் தள்ளப்படும். நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையினால் உருவாகிக் கொண்டிருக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டு அரசு வடிவம், முதலாளித்துவ உற்பத்திமுறை சமூகத்திற்குச் சற்றும் சளைத்ததில்லை. வரலாறு நெடுக இதை நாம் பார்க்க முடியும்.

மேற்கட்டுமானத் தளத்தில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் ஓர் கீழ் நிலை உற்பத்திமுறையுள்ள அரசின் பொருளாதாரத்தளத்தில் வேறொரு உற்பத்தி முறை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும். ஆதிச் சமூகங்களில் கூட இவ்வகைக் குறுக்கும் நெடுக்குமான வேறுபட்ட உற்பத்தி முறைகளின் தாக்கங்களால்தான் சித்தாந்த வித்தியாசங்களுக்குக் காரணமென்பதை நாம் அவதானிக்க முடியும். சித்தாந்த அமைப்புகளில் வெறும் தர்க்க வகை மைகளைப் பதிலியாகப் போட்டுக்கொள்வதாலல்ல வித்தி யாசங்கள். ஆனால் ஏன் வேறு வேறு வகைமைகளைப் பயன்படுத்தினார்களென்ற வியப்பின் அறிகுறிகூட நம் மானுடவியலாளரிடமில்லை.

ஏனெனில், நமது மானுடவியலாளருக்குச் சமூக உருவாக்கம் அல்லது உற்பத்திமுறை என்றாலென்ன? இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உற்பத்திமுறைகளின் கூட்டுத் தாக்கங்களினால் மேற்கட்டுமானத்தில் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றிய அக்கறையின்றி, கவனமின்றி இருக்கும் பட்சத்தில் இனவரைவியலாளருக்குச் சார்பாக மானுடவியலின் கருத்தாக்கத்தைப் பயன்படுத்துவதற்கு மானுடவியலாளருக்கு எந்த உரிமையுமில்லை.

Pin It