மொழியென்பது தன் கருத்தை, தன் எண்ணத்தைப் பிறருக்குத் தெரிவிக்க உதவும் முக்கியமானதொரு கருவியாகும். எண்ணற்ற சொற்களையும் வாக்கியங் களையும் கொண்டுள்ள மொழி அதனைப் பேசும் அனைவரும் கருத்துப் பரிமாற்றம் செய்யும் வண்ணம் செவ்விய அமைப்பினை உடையது. தன் எண்ணங்கள் பிறரைச் சரியாகச் சென்றடைய, தக்கதான மொழிக் கூறுகளைக் கையாள வேண்டும். அப்பொழுது தான் பேசுபவர்தம் எண்ணத்தையும் கருத்தையும் உணர்வையும் கேட்பவர் துல்லியமாக வேறுபாடின்றி உணர முடியும். அப்போதுதான் கருத்தாடல் முழுமை பெறும். கருத்துப் பரிமாற்றத்தை மையமாகக் கொண்டு ஆக்கப்படும் விதிகள் மொழிப் பயன்பாட்டு ஆராய்ச்சி எனப்படும். இத்தகைய ஆராய்ச்சியை மொழியியலார் மொழிப் பயன்பாட்டு ஆராய்ச்சி என்பர். இந்நோக்கில் தொல்காப்பியத்தை அணுகும் போது பல செய்திகள் புலனாகின்றன.

பயன்பாட்டு விதிகள் பேச்சுச் சூழல், சமூகப் பழக்கவழக்கம் ஆகிய சமூக மொழியியல் காரணங்களாலும் தீர்மானிக்கப்படுகின்றன. கருத்தாடல் நிலையில் பல சூத்திரங்கள் தொல்காப்பியத்திலே இடம் பெறுகின்றன. பேச்சு மொழி மட்டுமன்றி உடல் மொழியான மெய்ப்பாடுகள் பற்றியும் தொல் காப்பியம் பொருளதிகாரத்தில் பேசும். காட்டாக, தலைவியின் ஆறு அவத்தைகள் அவளது மன நிலையை எண்ணத்தை உணர்த்தும் வகையில் தரப்பட்டுள்ளன. உடல் மொழி, பேச்சு மொழி, எழுத்து மொழி, சைகை மொழி, உடல் தோற்றம் போன்றவற்றின் மூலம் கருத்துப் பரிமாற்றம் நிகழும். பேச்சுச் சூழலுக்கேற்ப வாக்கியங்கள் அமைவதை நூற்பா விதிகளின் மூலம் விளக்குகிறார். இவ்விதிகள் பேச்சுச் சூழல், சமூக நியதி, மரபு நிலை முதலான பல கூறுகளின் அடிப்படையில் அமைந்துள்ளன. பேச்சு மொழியில் வழு வாக்கியங்களும் உள்ளன. வழு வாக்கியங்கள் இலக்கணப்படி ஏற்றுக்கொள்ளக் கூடியன அன்றெனினும் பயன்பாட்டு மரபு கருதி அவை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தையும் தொல்காப்பியர் முன்வைத்து வழு, வழு அமைதி நூற்பாக்களை அமைத்திருக்கிறார். அதுபோன்றே தகுதி, வழக்கு ஆகியவற்றின் அடிப் படையிலும் பேச்சுக் கூறுகள் அமையும் என்பதையும் கூறியுள்ளார்.

தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களில் தமிழ் இலக்கண வகைகளை எடுத்துரைத்துள்ளார். எழுத்ததிகாரத்தில் தமிழ் நெடுங்கணக்கின் ஒவ்வொரு எழுத்தைப் பற்றியும், அதாவது அவற்றின் ஒலிப்பு, அவை வரும் இடங்கள், அவற்றை உச்சரிக்கும் முறைகள் அவை பிற எழுத்துக்களோடு அல்லது ஒலிகளோடு இணையும் முறைகள், அவ்வாறு இணையும்போது ஏற்படும் மாற்றங்கள் முதலான பல செய்திகள் பேசப்படு கின்றன. எழுத்துக்கள் இணைந்து சொற்களாக மாறும்போது அவற்றிற்குப் பொருண்மை ஏற்படுகிறது. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்ற நூற்பா சொற்களின் பொருண்மையைச் சுட்டுகிறது. இருப்பினும் ஒருவன் தன் கருத்தை வெளிப்படுத்த தனிச் சொற்கள் மட்டும் போதா. வாக்கியம் தேவை. வாக்கியத்தில் சொற்கள் இடம்பெறுகின்றன. எனவே வாக்கியத்தில் சொற்கள் தொடரும் முறை, சொற்களுக் கிடையேயான இயைபு (ஊடிnஉடிசனயnஉந), முதலான பல செய்திகள் தொல்காப்பியத்தில் பேசப்படுகின்றன. பொருளதிகாரத்தில் அகம், புறம் முதலான வாழ்க்கை நெறிகளைப்பற்றிப் பேசுகிறார். இம்மூன்று அதி காரங்களிலுமே பொருண்மை பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன.

கருத்துப் பரிமாற்ற நிலையில், கருத்தாடல் நிகழும் விதம், கருத்தாடலில் பயன்படுத்தப்படும் அலகுகள், கருத்தாடல் நெறிமுறைகள் ஆகியவை முக்கியமானவை. கருத்துப் பரிமாற்றத்தில் சமுதாயச் சூழல், பேசுபவர்கள், மொழி வழக்கு, மொழி மரபு முதலான பல கூறுகள் இடம்பெறுகின்றன. மொழி யமைப்பைப் பற்றிய ஆராய்ச்சியும் மொழிப் பயன் பாடு பற்றிய ஆராய்ச்சியும் வேறுபட்டவை. இலக் கணப்படி வழுவாக இருக்கும் வாக்கியங்கள் கூட சூழல் அடிப்படையிலும் மரபு அடிப்படையிலும் ஏற்புத் தன்மையுடையனவாக மாறுவதும் உண்டு.

கருத்தாடல் கூறுகள்

கருத்தாடலில் கருத்து எவ்வாறு தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்குத் தொல்காப்பியரின் வரைவிலக்கணம் மிகவும் பொருத்தமானதாக உள்ளது.

ஆடி நிழலின் அறியத் தோன்றி

நாடுதல் இன்றிப் பொருணனி விளங்க (செய்-162)

ஒரு உருவத்தைக் கண்ணாடியில் பார்க்கும் போது உள்ளதை உள்ளபடியே அது காட்டும். அதுபோன்று கூறுவோன் மனக்கருத்தை அவன் கையாளும் மொழிக்கூறு கேட்போன் மனதில் தடுமாற்றமின்றி விளங்க வைக்க வேண்டும்.

கூற்று என்பது பேச்சுச் சூழலைக் குறிக்கிறது. அதில் பேசுபவர், கருத்து, கேட்பவர் ஆகிய மூன்று கூறுகள் உள்ளன. தன் உளக்கருத்தை வெளிப்படுத்த விரும்புபவனாகிய குறித்தோன் தன் கூற்றுக்கான சொற்களைத் தெரிந்து பயன்படுத்த வேண்டும் என்று கீழ்வரும் நூற்பாவிற்கு உரை காணலாம்.

குறித்தோன் கூற்றந் தெரித்துமொழிக் கிளவி (கிளவி-56)

பொருளதிகாரத்திலே, ஒருவர் குறித்த குறிப்பை மற்றவர் அறிவாராயின் அங்குக் கண்ணினால் குறித்த கருத்து நிகழும் என்ற பொருளுடைய நூற்பா உள்ளது. இது உடல் மொழியின் பாற்பட்ட கருத்தறிவிப்பாகும்.

குறிப்பே குறித்தது கொள்ளு மாயின்

ஆங்கவை நிகழும் என்மனார் புலவர்                (களவி-6)

மேலும் குறிப்பு என்பது இங்குக் கருத்து, குறித்தது என்பது சொல், கொள்ளுமாயின் என்பது கேட்பவர் அல்லது கருத்தைப் பெற வேண்டியவர் சரியாகக் கொள்ளுதல், ஆங்கவை என்பது கருத்து முழுமை என்பது பெறப்படும். மற்றொரு நூற்பாவில் தெளி வாகக் கருத்துக் குழப்பமின்றிப் பேசும் முறையைக் கூறுகிறார்.

பொருட்குத் திரிபில்லை உணர்த்த வல்லின் (உரியியல்- 96)

ஒருவன் தன் கருத்தைச் சரியான சொற்களில் உரிய தொடரமைப்பில் அமைத்துக் கூறித் தான் கருதிய பொருளைப் பிறர் அறியுமாறு உணர்த்த வல்லானாயின் அவன் நினைத்த கருத்து மயக்க மின்றிச் சென்றடையும்.

மேற்குறித்த இரு நூற்பாக்களும் பேசுபவரின் நோக்கில் தரப்பட்டவை. கேட்பவரின் நிலையிலும் தொல்காப்பியர் சிந்திக்கிறார்.

உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே (உரியியல்-97)

சொல்லப்படும் கருத்தை உணர்ந்துகொள்ளும் ஆற்றல் உணர்வோரின் ஆற்றலைப் பொறுத்ததே.

முன்னம் என்பதனை விளக்க வந்த தொல்காப்பியர்,

இவ்விடத் திம்மொழி இவரிவர்க் குரியவென்

றவ்விடத்து அவரவர்க் குரைப்பது முன்னம் (செய் - 199)

உரையாடல் நிகழ்ச்சியில் யார் யார் எதனைப் பேச வேண்டும் என்ற வரைமுறையைத் தொல்காப்பியர் சுட்டுகிறார் எனக் கொள்ளலாம்.

கருத்தாடல் நிகழும் விதம்

சொல் நிலையில் கருத்து வெளிப்பாடு இரு முறையில் நிகழும். ஒன்று செப்பு. மற்றொன்று வினா. இங்குச் செப்பு எனப்படுவது இருநிலை களைக் குறிக்கும். ஒன்று தன் கருத்தை வெளி யிடுதல், செப்புதல். அதாவது சொல்லுதல் அல்லது பேசுதல். மற்றொன்று கேட்கப்படும் வினாவிற்கு விடையளிக்கும் செப்புதல். எனவே உரையாடல் வகைகளான இவ்விரண்டையும் சொல்லும்போது கருத்துக் குழப்பமில்லாமல் பேச வேண்டும். வழாமல் அல்லது தவறில்லாமல் சொல்க என்கிறது தொல்.

செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்  (கிளவி-13)

பேச்சுச் சூழலில் வினாவும் விடையும் அமையு மாற்றினை விளக்குகிறார். சில வினாக்களுக்கு விடை யளிக்கும்போது வினாவாகவே விடையளிப்பதுண்டு. அது வழுவல்ல என்கிறார்.

வினாவுஞ் செப்பே வினாவெதிர் வரினே        (கிளவி-14)

உண்டாயிற்றா என்று ஒருவனிடம் வினா எழுப்பிய போது மணி என்ன? என்று வினா எழுப்பினால் அது தவறல்ல. அவ்வினாவில் இரு பொருள்கள் ஏற்படலாம். உணவு உண்ணும் நேரம் வரவில்லை யென்றால் நான் இன்னும் உண்ணவில்லை எனவும், உணவு உண்ணும் நேரம் தாண்டி விட்டால் இன்னும் உண்ணாமல் இருப்பேனா. உண்டுவிட்டேன் என்ற பொருளும் வருமல்லவா? இதனைச் சூழல் பொருண்மை என்பர்.

வினாவிற்கு மறுமொழியாகத் தொடர்பில்லாத ஒரு பதில் வந்தாலும் சிலவிடங்களில் அது வழு அமைதியாகக் கொள்ளப்படும். வீட்டுப் பாடம் எழுதினாயா? என்று மாணவனைப் பார்த்து வினா எழுப்பினால் அவன் நேற்று எனக்கு நல்ல காய்ச்சல் என்று பதிலளித்தால் அது வழு அமைதியாகும்.

செப்பே வழீஇயினும் வரைநிலை யின்றே

அப்பொருள் புணர்ந்த கிளவி யான        (கிளவி-15)

சில வேளைகளில் ஒரே தொடரில் வினாப் பொருளும் எதிர்மறைப் பொருளும் வருவதைச் சுட்டுகிறார்

வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொல்

எதிர்மறுத் துணர்த்துதற் குரிமையும் உடைத்தே

(வினை-47)

எ.டு. யானா செய்தேன்? என்பதில் வினாப் பொருளும் எதிர்மறைப் பொருளும் வருவதை உணரலாம்.

கருத்தாடலில் தோன்றும் அலகுகள்

கருத்துத் தெளிவிற்கு - பேசும் வாக்கியம் இலக்கண வழுவற்றதாக இருக்க வேண்டும். சொற் றொடர்களுக்கிடையேயான இணக்க நிலையைச் சொற்றொடர்களின் அமைப்பிணக்கம் என்பர். கருத்து வெளிப்பாட்டு நிலையில் பல்வேறு அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன.

அலகு இரட்டித்தல் - சொல்லடுக்குகள்

சில வேளைகளில் ஒரு கருத்தை ஆணித் தரமாகச் சொல்ல அல்லது பதற்றத்தை அல்லது அச்சத்தைக் குறிக்க எனப் பல்வேறு நிலைகளில் ஒரே சொல் அதாவது ஒரே அலகு திரும்பத் திரும்ப இடம்பெறுவதுண்டு. எ.டு.பாம்பு பாம்பு. இது அடுக்குத் தொடர் எனப்படும்.

மேலே குறிப்பிட்டது ஒரே சொல் இரட்டித்தல். சொல் இரட்டிப்பது மட்டுமன்றிச் சொல்லின் பகுதி இரட்டிப்பதும் உண்டு.

இரட்டைக் கிளவி இரட்டிற் பிரிந்திசையா      (கிளவி-48)

எ.டு. சுறுசுறுப்பாக. இதுபோன்றே சொற்கள் மட்டு மன்றிச் சொற்பொருண்மை இரட்டிப்பதும் உண்டு. ஒரே பொருள் தரும் இரு சொற்கள் ஒன்றிணைந்து வரும். அச்சொற்கள் பிரிவின்றித் தொடர்ந்து வந்தால் அது மீமிசைச் சொல் எனப்படும்.

ஒருபொரு ளிருசொல் பிரிவில வரையார்     (எச்ச-64)

எடுத்துக்காட்டாக, சரிநிகர்சமானம், மிச்சம் மீதி, புத்தம்புதிது, நட்டநடு, பச்சைப்பசேல் ஆகிய சொற்களைக் காட்டலாம்.

கால அலகு

காலத்தைக் குறிக்கும் நிகழ்வுகளுக்கான விதி களைத் தருகிறார். முக்காலத்தும் நிகழும் நிகழ்ச்சியை நிகழ்காலத்தில் கூறவேண்டும் என்பார். எ.கா. மலை நிற்கும். சூரியன் உதிக்கும்.

முந்நிலைக் காலமுந் தோன்றும் இயற்கை

எம்முறைச் சொல்லும் நிகழுங் காலத்து

மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும்

(வினை-43)

செய்தென் எச்சம் இறந்த காலத்திற்குரியது. அது எதிர்காலத்திலும் வரும் எனப் பொருள் மயக்கம் ஏற்படுவதைத் தொல். கூறுகிறது.

செய்தென் எச்சத் திறந்தகாலம்

எய்திட னுடைத்தே வாராக் காலம்       (வினை-42)

எ.டு. அவன் உண்டு வந்தான். அவன் உண்டு வருவான்.

விரைவுப் பொருளிலும் மிகுதிப் பொருளிலும் சிறப்புப் பொருளிலும் தெளிவுப் பொருளிலும் காலம் மயங்கி வருதல் கூறப்படுகிறது.

வாராக் காலத்தும் நிகழுங் காலத்தும்

ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி

இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்

விரைந்த பொருள என்மனார் புலவர்  (வினை-44)

எ.டு. வாராமலேயே வந்துவிட்டேன் எனல். இங்கு பொருண்மை காரணமாக இலக்கண அமைப்பு மாறிவருகிறதை அறியலாம்.

கருத்தலகும் சார்பலகும்

உரைத் தொடரில் எந்த அலகு மையப்படுத்தப் படவேண்டும்? கூற வரும் கருத்தில் அதனைக் குறிக்கும் முக்கியமான ஒரு சொல் இடம்பெறும். அக்கருத்தை அரண் செய்வதற்கு அல்லது விளக்குவதற்கு அல்லது தெளிவுபடுத்துவதற்கு போன்ற காரணங்களுக்காக அதனுடன் மேலும் சில அலகுகள் சேர்க்கப்படும். அவை சார்பலகுகள் எனப்படும். காட்டாக, முதல் சொல்லோடு அடையும் சினையும் சேர்ந்து வரும் போது அங்கு மூன்று சொற்கள் இடம்பெறும். அவ்வாறு வரும்போது முதலில் அடை அடுத்து சினைச் சொல் தொடர்ந்து பொருளை அதாவது முதலைக் குறிக்கும் சொல் எனத் தொடர்முறை மாறாது வரவேண்டும்.

அடை சினை முதல் என முறைமூன்றும் மயங்காமை

நடைபெற் றியலும் வண்ணச் சினைச்சொல் (கிளவி-26)

காட்டாக, செங்கால் நாரை என்ற தொடரில் நாரை என்பது கருத்தலகு. செங்கால் என்பது சார்பலகு.

அடை அலகு

அடைகளைப் பயன்படுத்தும்போது இனத்தைச் சுட்டும் பண்புகொள் பெயரடைகளேயே கூற வேண்டும். எனவே செஞ்ஞாயிறு என்பது வழக்கில் கூறத்தக்கதல்ல. ஏனெனில் ஞாயிறு ஒன்றுதான். அதனைப் பிறவற்றிலிருந்து வேறு பிரிக்கத் தேவை யில்லை.

இனச்சுட் டிலாப் பண்புகொள் பெயர்க் கொடை

வழக்கா றல்ல செய்யுளாறே      (கிளவி-18)

செஞ்ஞாயிறு, வெண்திங்கள் என வருவது செய்யுள் வழக்கின் பாற்படும்.

எண்ணலகு

பல பொருள்களைப் பட்டியலிட்டு எண்ணிக் கூறும்போது இனம் சேர்த்து எண்ண வேண்டும். பாணரும் கூத்தரும் விறலியரும் என வரும். இவ்வாறு சொல்லும்போது கருத்துக் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை.

உறுதிக் கருத்தலகு

இத்துணையென்று அறியப்பட்ட சினைமுதற் கிளவிகளைக் கூறும்போது வினைபடு தொகுதியில் உம்மை சேர்க்க வேண்டும்.

இனைத்தென அறிந்த சினைமுதற் கிளவிக்கு

வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும் (கிளவி-33)

மூவேந்தரும் வந்தார் (தொழிற்படு தொகுதி)

இரு கண்களும் சிவந்தன, தமிழக வேந்தர்கள் மூவர் (தொழிற்படாத் தொகுதி)

மூல அலகும் பதிலி அலகும்

ஒரு தனியனைக் குறிக்கும் இயற்பெயர்ச் சொல்லும் சுட்டுப் பெயர்ச் சொல்லும் வினைபடு வதற்கு ஒருங்கியலும் காலம் வரும்போது இயற் பெயர் தான் முதலில் வரவேண்டும், சுட்டுப் பெயர் தொடர்ந்து வரவேண்டும். சாத்தன் வந்தான். அவற்குச் சோறு கொடுக்க என வரும். சாத்தன் மூல அலகு. அவன் பதிலி அலகு. அவன் வந்தான். சாத்தற்குச் சோறு கொடுக்க எனச் சொன்னால், அவன் சாத்தன் ஆகியோர் வேறு வேறான இருவர் என்ற கருத்து ஏற்பட்டுவிடும். இந்நிலையைத் தொடர்களுக்கிடையேயுள்ள அமைப்பிணக்கம் என்பர் மொழியியலார்.

இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப்பெயர்க் கிளவியும்

வினைக்கொருங் கியலும் காலந் தோன்றிற்

சுட்டுப் பெயர்க்கிளவி முற்படக் கிளவார்

இயற்பெயர் வழிய என்மனார் புலவர் (கிளவி-38)

இணைப்பலகு

உலகப் பொருள்களை இரண்டாகப் பிரிப்பர். இயற்கைப் பொருள், செயற்கைப் பொருள். அவற்றைக் குறிப்பிடும்போது தொடரில் அவற்றை எவ்வாறு சொல்ல வேண்டும் என்ற விளக்கத்தைத் தருகிறார். இயற்கைப் பொருளை இத்தன்மைத்து என்று சொல்ல வேண்டும். வெயில் சுடும், நிலம் வலிது எனக் கூற வேண்டும்.

இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல் (கிளவி-19)

இயற்கைப் பொருள் செயற்கையாய்த் தன்னி யல்பில் வேறுபடும்போது அது செயற்கைப் பொருள் எனப்படும். அப்போது அதனை ஆக்கச் சொல்லோடு கூற வேண்டும். எ.டு. மண் குடமாயிற்று.

செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல் (கிளவி-20)

இவ்வாறு செயற்கைப் பொருளை ஆக்கத்துடன் கூறும்போது அதற்குரிய காரணத்தை முதலில் கூற வேண்டும்.

ஆக்கந்தானே காரண முதற்றே                (கிளவி-21)

ஆனால் எப்பொழுதும் காரணத்தைச் சொல்லித் தான் பேச வேண்டுமா என்ற நம்முடைய ஐயத் திற்கும் விடை கிடைக்கிறது. ஆக்கக் கிளவி காரண மின்றியும் வரும் என்கிறார்.

அண்மை இணக்க அலகு

கருத்து வெளிப்பாட்டில் பொருள் குழப்பம் இருக்கலாகாது. அதுவே சரியான கருத்தாடலுக்கு வழிவகுக்கும். சில வேளைகளில் சொற்றொடர்கள் பொருள் குழப்பத்தைத் தரும் வகையில் அமைவதுண்டு. ஒரு சொல் எந்தச் சொல்லின் அண்மையுறுப்பு என்பதைப் பொறுத்துப் பொருள் அமையும். காட்டாக, அவன் தம்பி வீட்டிற்குப் போனான் என்ற வாக்கி யத்தில் அவன் என்கிற எழுவாய் தன் தம்பி வீட்டிற்குப் போனானா? அல்லது அவன் தம்பி என்கிற எழு வாய் தன்னுடைய வீட்டிற்குப் போனானா என்று பொருள் மயக்கம் ஏற்படுகிறது. (ஆங்கில மொழி யிலே பல எடுத்துக்காட்டுகளைக் காட்டுவர். Beautiful girls dress, old student’s hostel) , பொருள் தடு மாற்றம் ஏற்படும் நிலையைத் தொல்காப்பியர் தடுமாறு தொழிற்பெயர் என்று சொல்லுவார். புலிகொல் யானை என்பதனைத் தடுமாறு தொழிற் பெயராகக் காட்டுகிறார். எங்கே கொல் என்பது புலி என்பதன் அண்மையுறுப்பாக வரும்போது ஒரு பொருளையும் யானை என்பதன் அண்மை யுறுப்பாக வரும்போது மாறுபட்ட மற்றொரு பொருளையும் தருகிறது. புலிகொல் என்று கொண்டால் புலியால் கொல்லப்படும் யானை என்ற பொருளையும் கொல்யானை என்று கொண்டால் புலியைக் கொல்லும் யானை என்ற பொருளையும் தருவதை மயங்கும் அண்மையுறுப்புகளுக்குக் காட்டாகத் தருவர் பேராசிரியர் அகத்தியலிங்கம்.

பொருண்மை உறவு

சொற்களின் பொருண்மை நிலை

சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு பெயரியலில்

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (பெயரியல் - 155)

பொருண்மை தெரிதலுஞ் சொன்மை தெரிதலும்

சொல்லி னாகும் என்மனார் புலவர்      (பெயரியல்-2)

என்ற நூற்பாக்களின் மூலம் வெளிப்படுகின்றன. உரிச்சொற்களின் பொருண்மை நிலையை உரியியலில் பேசுகிறார். உரியியல் முதல் நூற்பாவில் பொருண்மை வெளிப்படாத நிலையிலுள்ள சொற்களைப் பற்றியே தாம் பேசுவதாகக் கூறுகிறார்.

ஒரு சொல் பலபொருள் (கய முதலான சொற்களுக்குப் பல பொருள்கள்)

பலசொல் ஒரு பொருள் (உறு, தவ, நனி ஆகிய சொற்கள் மிகுதி என்னும் பொருள்

ஒரு சொல்லுக்கு ஒரு பொருள் (புரை-உயர்வு

உறழ்வு நிலையில் உள்ள சொற்களை விளக்குதல் (இசைப்பு-இசை)

சொல்லுகின்ற முறையால் பொருள் வேறுபாடு உணர்த்தல்

எழுத்தோ ரன்ன பொருள்தெரி புணர்ச்சி

இசையிற் றிரிதல் நிலைஇய பண்பே (தொகைமரபு-39)

இது சொல்கின்ற முறையால் பொருளுணர்த்து வதைக் குறிக்கும். செம்பொன் பதின்றொடி என்றால் பொன்னைப் பற்றிப் பேசுவது. செம்பு ஒன்பதின் தொடி என்னும்போது செம்பைப் பற்றிப் பேசுவது. பேசுபவர் சரியாகப் பிரித்துப் பேச வேண்டும். கேட்பவரும் சரியாகப் பொருளுணர வேண்டும். மற்றொரு எடுத்துக்காட்டு குன்றேறாமா. கோன் அல்லன், கோன் நல்லன், கோனல்லன்.

இலக்கணப் பொருண்மை

பெயர் - வினை தொடரியைபு

வாக்கியத்தில் எழுவாய் பயனிலை இவற்றிற் கிடையே இயைபு அமைய வேண்டும். பொதுவாக எழுவாய் என்பது பெயர்ச்சொல்லாகவே அமையும். பெயர்ச்சொல் திணை, பால், எண், இடம் ஆகிய வற்றைக் காட்டும். வினைச்சொல் இவற்றுடன் காலத்தையும் காட்டும். வாக்கியத்தில் இடம்பெறும் பெயர்ச் சொல்லும் வினைச் சொல்லும் இயை புடையனவாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது தொல்காப்பியம்.

வினையிற் றோன்றும் பாலறி கிளவியும்

பெயரிற் றோன்றும் பாலறி கிளவியும்

மயங்கல் கூடா தம்மர பினவே                (கிளவி-11)

திணை, பால், எண், இடம், கருத்தியைபு, மரபு வழி வழக்காற்றுப் பண்பு இவை வழாமல் பேச வேண்டும். இந்த மரபையே திணை, பால், எண், இடஇயைபு (concordance) ) என்பர்.

பால் மயக்குற்ற கிளவியைப் பற்றியும் பேசு கிறார். ஒருவன் கொல்லோ ஒருத்தி கொல்லோ என்று பால் பற்றிய ஐயம் வரும்போது தோன்று வான் என்று சொல்வதா? தோன்றுவாள் என்று சொல்வதா? என்பதற்குத் தொல். பன்மைச் சொல் லாகிய தோன்றுவார் என்பதையே பயன்படுத்தச் சொல்கிறது.

பான்மயக் குற்ற ஐயக் கிளவி

தானறி பொருள்வயிற் பன்மை கூறல்              (கிளவி-23)

இவ்வாறு தொடர் இயைபில், பல வழக்கு அமைதிகளையும் தருகிறார் தொல்காப்பியர். ஆண் பாலும் பெண்பாலும் மயங்கி வரும்போது பொதுச் சொல்லால் சொல்லுதல், அஃறிணையும் உயர் திணையும் விரவி வரும்போது வியங்கோள் வினை பயனிலையாக வருதல், தன்மைச் சொல்லும் அஃறிணைச் சொல்லும் விரவி வரும்பொழுது உயர்திணை முடிவு கொள்ளுதல் எனப் பல்வேறு விதிகளைத் தொல்காப்பியம் தரும்.

ஒருமை பன்மை இயைபு

எண் நிலையில் இரட்டிப்பாக வரும் உடலுறுப்புகள் அவை வினைக்கொருங்குங்காலை ஒருமையில் குறிக்கப்பட்டாலும் பன்மைப் பொருண்மை தரும்.

கண்ணும் தோளும் முலையும் பிறவும்

பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி

பன்மை கூறுங் கடப்பா டிலவே

தம்வினைக் கியலும் எழுத்தலங் கடையே (கிளவி-62)

எ.டு. இரண்டு கண்ணும் சிவந்தது

சொல் - கருத்து வரையறை

அறியாப் பொருள் வயின் செறியத் தோன்றும் கிளவிகளாக யாது? எவன் ஆகிய இருசொற்கள் தரப்படுகின்றன. அவற்றைக் கருத்து வரையறை செய்கிறார். யாது? எவன் ஆகிய சொற்கள் எந்தெந்த பொருண்மையில் வரும் என்பது வரையறுக்கப் படுகிறது. இவ்விரு சொற்களும் அறியாப் பொருளைக் குறித்து எழுமாயினும் யாது என்ற கிளவி எவன் என்பதிலிருந்து சிறிது வேறுபட்டது. யாது என்பது ஐயம் தீர்க்கக் கேட்கும் வினாவில் இடம்பெறும். அதாவது இதுவா? அதுவா? என்ற ஐயம் ஏற்படும் போது யாது? என்பது பயன்படும். எனவே யாது என்ற சொல்லிலேயே ஐயம் என்ற கருத்தும் இடம் பெறுகிறது. எந்தச் சொல்லை எங்குப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் காட்டும் விதி இது.

வேற்றுமைப் பொருள் மயக்கம்

ஒரு சொல்லின் பயன்பாட்டில் ஏற்படும் நுண்ணிய வேறுபாடும் தொல்காப்பியத்தில் குறிக்கப் பட்டுள்ளது. காட்டாக, இரண்டன் வேற்றுமைக்கு ஓதப்பட்ட சார்பு என்னும் பொருளைத் தரும் சொல் ஏழன் வேற்றுமையிலும் வரும். தூணைச் சார்ந்தான் அரசரைச் சார்ந்தான். இதில் இரு வகைச் சார்பு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஒன்று கருமச் சார்பு, மற்றொன்று கருமமல்லாச் சார்பு.

கருமம் அல்லாச் சாhர்பென் கிளவிக்

குரிமையும் உடைத்தே கண்ணென் வேற்றுமை

(வேற்றுமை மயங்-2)

அதுபோன்றே நோக்கல் நோக்கம் என்பதை ஊனக் கண்ணால் அறியலாகும் நோக்கம் என்பதிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது தொல்.

இரண்டன் மருங்கின் நோக்கல் நோக்கமவ்

விரண்டன் மருங்கின் ஏதுவும் ஆகும்

(வேற்றுமை மயங்-10)

இது கண்ணால் நோக்காமல் மனத்தால் நோக்குவது.

குறிப்புப் பொருண்மை

தெரிபுவேறு நிலையலும் குறிப்பிற் றோன்றலும்

இருபாற் றென்ப பொருண்மை நிலையே        (பெயரில்-3)

கருத்துப் பொருண்மையாவது சொல் வழி வெளிப் படையாகத் தோன்றி நிற்பதேயன்றிக் குறிப்பாகவும் பொருளுணர்த்தும்.

பொருளதிகார நூற்பா ஒன்றிலும் இக்கருத்து வெளிப்படுகிறது.

எழுத்தொடுஞ் சொல்லோடும் புணரா தாகிப்

பொருட்புறத் ததுவே குறிப்புமொழி என்ப      (செய்-172)

கருத்துப் பொருண்மை சில வேளைகளில் எழுத் தோடும் எழுத்தோடு சேர்ந்த சொல்லோடும் அமை யாது அதன் புறத்ததாகி நிற்கும் குறிப்பு மொழி என்கிறார்.

இடைச்சொற்கள் சில தத்தம் குறிப்பில் பொருள் செய்யும் நிலையில் வரும். காட்டாக உம் என்பது எச்சம், சிறப்பு, ஐயம், எதிர்மறை, முற்று, எண், தெரிநிலை, ஆக்கம் ஆகிய எட்டுப் பொருள்களைத் தரும். (இடை.250)

முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே

இன்ன வென்னும் சொல்முறை யான               (எச்ச-13)

சொல்லினாலன்றி, சொல்லும் குறிப்பினால் பொருளை அறிய முடியும். வெள்ளை மனசுக்காரன் என்ற வழக்கு கள்ளங்கபடமற்றவன் என்பதைக் குறிக்கும்.

மற்றொரு நூற்பாவில் கருத்தை முறையின் உணர்வதற்கான வழி தரப்படுகிறது.

இன்ன பெயரே இவைஎனல் வேண்டின்

முன்னம் சேர்த்தி முறையின் உணர்தல் (பெயரியல் - 39)

நீயிர், நீர், நான் ஆகிய சொற்களில் பால் அறிய வழியில்லை. முன்னம் சேர்த்தி என்பதற்குச் சொல்லு வானின் குறிப்போடு கூட்டி என்று விளக்கம் தரு வார் இளம்பூரணர். எழுத்ததிகாரத்தில் புணர்ச்சி பற்றிக் கூறும் தொல்காப்பியர்,

முன்னப் பொருள புணர்ச்சி வாயின்

இன்ன என்னும் எழுத்துக்கட னிலவே (தொகை மரபு - 40)

புணர்மொழிகள் புணர்ச்சியிடத்த இன்ன தன்மையவாயின என எண்ணும் எழுத்து முறை மையை உடையனவல்ல. குறிப்பினால் உணர வேண்டிய பொருண்மையை உடையன. தமிழ் கவிதை, தமிழ்க் கவிதை.

தருக்கப் பொருண்மை

தருக்க ரீதியாகக் கருத்தை அறியும் நிலையும் சுட்டப்படுகிறது

எடுத்த மொழியினம் செப்பலும் உரித்தே       (கிளவி-61)

“தென்சேரிக் கோழி வென்றது என்றவழி” வடசேரிக் கோழி தோற்றது” என்னும் பொருளும் காட்டி நின்றது. இது இனம் செப்பியது. அந்தணர் வாழ்கவென்ற வழி அரசரும் வணிகரும் கெடுக என்றவாறன்றி அந்தணரையே குறித்து நின்றது. இனம் செப்பலும் உரித்தே என்றதனாலே இனமல்லாதன செப்பலும் உரித்து என்று கொள்ளப்படும். அவ்வாறு வருவன ஏற்புழிக் கொள்க. சுமந்தான் வீழ்ந்தான் என்ற வழிச் சுமவாதான் வீழ்ந்திலன் என்னும் பொருள் படுதலேயன்றிச் சுமக்கப்பட்டதும் வீழ்ந்ததெனச் செப்பியவாறும் கண்டு கொள்க.

தொகைநிலைத் தொடரில் பொருண்மை அமைதல்

தொகை நிலைத் தொடர்களுள் பொருட் சிறப்பு முன்மொழியிலும் பின்மொழியிலும் இரு மொழியிலும் இவையல்லாத அன்மொழியிலும் அமையும்

முன்மொழி நிலையலும் பின்மொழி நிலையலும்

இருமொழி மேலும் ஒருங்குடன் நிலையலும்

அம்மொழி நிலையா தன்மொழி நிலையலும்

அந்நான் கென்ப பொருள்நிலை மரபே                (எச்ச-23)

தொகைச் சொற்களில் முன்மொழி நிலையல் - வேங்கைப்பூ, பின்மொழி நிலையல் - அலை கடல், இருமொழி மேலும் ஒருங்குடன் நிலையல் (இரவு பகல்) அன்மொழி நிலையல் - வெள்ளாடை.

சொற்பொருள் மரபு

சொற்களையும் சொற்பொருளையும் மரபுவழி ஆள வேண்டும். மரபுவழிப்பட்ட மொழிப் பயன் பாட்டைத் தொல்காப்பியம் “மரபு நிலை திரியிற் பிறிதுபிறி தாகும் (பொருள்.மரபி-88) என்பார். உரிச்சொல்லில் இன்ன சொற்கு இன்ன பொருள் என்று கூறவந்த தொல்காப்பியர் தாம் எல்லாப் பொருளையும் குறிப்பிடவில்லை என்கிறார்.

கூறிய கிளவிப் பொருநிலை யல்ல

வேறுபிற தோன்றினும் அவற்றொடுங் கொளலே

(உரி-94)

மேலும் அவற்றின் பொருளை மரபை ஒட்டியே திட்டப்படுத்தவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.

மெய்பெறக்கிளந்த உரிச்சொல் எல்லாம்

முன்னும் பின்னும் வருபவை நாடி

ஒத்த மொழியாற் புணர்த்தனர் உணர்த்தல்

தத்தம் மரபிற் றோன்றுமன் பொருளே             (உரி.93)

வேறுபட்ட வினைகளையுடைய பொருள்களைக் குறிக்கும்போது அவற்றுள் ஒன்றற்குரிய சிறப்பு வினையால் குறிக்காமல் இவற்றை உள்ளடக்கிய பொது வினையால் கூறுவர்.

வேறுவினைப் பொதுச்சொல் ஒரு வினை கிளவார்

(கிளவி-46)

பெயரினும் தொழிலினும் பிரிபவையெல்லாம்

மயங்கல் கூடா வழக்குவழிப்பட்டன (கிளவி-50)

உயர்திணையிலும் அஃறிணையிலும் பொதுவாக வரும் சொற்கள் குறிப்பினால் ஆண்பால் அல்லது பெண்பால் இவற்றில் ஒன்றை மட்டுமே குறிக்கும். இது உழவு மாடு, இது பால் மாடு

செயப்படுபொருளைச் செய்தது போலத் தொழிற் படக் கிளத்தல் நிலையும் சுட்டப்படுகிறது.

செயப்படு பொருளைச் செய்ததுபோலத்

தொழிற்படக் கிளத்தலும் வழக்கியல் மரபே (வினை.49)

எ.டு. திண்ணை மெழுகிற்று

மன்னாப் பொருள்

உலகத்தில் எங்கும் இல்லாப் பொருளைப் பற்றிப் பேசும்போது உம்மை கொடுக்க வேண்டும்.

மன்னாப் பொருளும் அன்ன இயற்றே சொல் (கிளவி-34)

எ.டு.மரணமில்லா வாழ்வு பெற யாராலும் இயலாது.

ஒரு வாக்கியத்தில் அமையும் தொடர்களில் இரு பொருள்களில் உயர்ந்த பொருளுடன் “ஒடு” என்பது இடம்பெற வேண்டும்.

ஒரு வினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே

(வேற்றுமைமயங்-8)

எ.டு. தந்தையொடு மக்கள் வந்தனர்.

பொருண்மை மயக்கம்

பல பொருளொரு சொற்களைத் தெளிவாகக் கூற வேண்டும். அதற்கான நூற்பாக்களைத் தருகிறார் தொல்காப்பியர். பொருள் வேறுபாட்டிற்கேற்ற படி சொற்களும் வேறுபடுத்தப்பட்ட நிலையைத் தொல்காப்பியம் சுட்டுகிறது. மா என்பது மரம், விலங்கு ஆகியவற்றைக் குறிக்கும் சொல். சே என்பது மரத்தையும் விலங்கையும் குறிக்கும் சொல். (hடிஅடிலேஅள). புளி என்பது மரத்தையும் சுவையையும் குறிக்கும் சொல் (Synonym)

வேற்றுமை மயங்கியல் - உருபுகள் மயங்கு வதைக் காட்டுவதோடு பொருள் மயக்கத்தை மிகுதியாக எடுத்துக்காட்டுகின்றது.

அன்ன பிறவும் தொன்னெறி பிழையா

துருபினும் பொருளினும் மெய்தடு மாறி

இருவயின் நிலையும் வேற்றுமை எல்லாம்

திரிபிடன் இலவே தெரியு மோர்க்கே (வேற்றுமைமயங்-18)

உருபுக்குத் தரப்படும் சிறப்பை விடப் பொருளுக்கே தலைமை தரப்படுகிறது.

யாதன் உருபிற் கூறிற் றாயினும்

பொருள் செல் மருங்கின் வேற்றுமை சாரும்

(வேற்றுமைமயங்-23)

தொடர் மொழியில் எந்த உருபு பயன்படுத்தப் பட்டாலும் பொருண்மைக்கேற்பவே வேற்றுமையைக் கொள்ள வேண்டும். ‘நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற’ என்ற பாடலில் மணற்கு என்பது மணற்கண் என்ற பொருளிலேயே வரும்.

தொடரால் ஏற்படும் பொருண்மை மயக்கம்

ஒரே தொடரில் இரண்டு பொருள்கள் நிலை பெறுதலும் உண்டு

இதுசெயல் வேண்டும் என்னுங் கிளவி

இருவயின் நிலையும் பொருட்டா கும்மே

தன்பா லானும் பிறன்பா லானும்            (வினை-46)

எ.டு.படித்தல் வேண்டும். அவன் தான் படிக்க வேண்டும் என்று கருதுகிறான். மற்றொரு கருத்தாக அவன் தந்தை அவன் படிக்க வேண்டும் என்று கருதுகிறான்.

சொற்பொருள் மயங்குதல்

பல பொருளொரு சொல் என்ற வகையில், மா என்பது விலங்கையும் மரத்தையும் குறித்து நிற்பது. இவ்வாறு வரும் சொற்களை இரு வகையாகக் குறிப்பிடுவார் தொல்காப்பியர். வினை வேறுபடும் பல பொருளொரு சொல், வினை வேறுபடாப் பலபொருளொரு சொல்.

வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல்

வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொலென்

றாயிரு வகைய பலபொரு ளொருசொல்         (கிளவி-52)

இப்பொதுச் சொல் வினை வேறுபடும் நிலையை நோக்கி அதன் பொருண்மையை மயக்கமின்றிக் கண்டறியலாம். மா ஓடியது என்று சொன்னால் அது விலங்கைக் குறித்து மரத்தை விலக்கும். மா+பூத்தது என்னும்போது அது மரத்தைக் குறித்து விலங்கை விலக்கும். இங்கே வினை வேறு படுவதால் ஒரு வடிவச் சொல்லை வேறுபடுத்தி அறிய முடிகிறது.

வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல்

வேறுபடு வினையினும் இனத்தினுஞ் சார்பினும்;

தேறத் தோன்றும் பொருள்தெரி நிலையே. (கிளவி-53)

இவ்வகைப் பொருள் மயக்கத்தைத் தீர்ப்பதற்கு வினை, இனம், சார்பு ஆகியவை உதவுமாற்றினை இந்நூற்பா குறிப்பிடுகிறது. இவ்வாறு வினை வேறுபடாமல் ஒரே வினையே இரு சொற்களுக்கும் பொருத்த மாக வருமானால் அது வினை வேறுபடாப் பல பொருளொரு சொல் என்கிறார். காட்டாக, மா வீழ்ந்தது என்பதில் மா என்பது விலங்கையும் குறிக்கலாம். மரத்தையும் குறிக்கலாம். விலங்கும் விழும்: மரமும் விழும். இவ்வாறு வரும்போது அவற்றைச் சூழலால் அறிந்துகொள்ள வேண்டும் என்று கூறுவார்.

ஒன்றுவினை மருங்கின் ஒன்றித் தோன்றும்

வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொல்

நினையுங் காலைக் கிளந்தாங்கு இயலும்.    (கிளவி-54)

அவற்றை வெளிப்படையாக எடுத்துக் கூறுவது மற்றொரு வழி. மாமரம் வீழ்ந்தது. விலங்குமா வீழ்ந்தது என்று வெளிப்படையாகக் கூற வேண்டும்.

தெரியாத ஒரு சொல்லின் பொருளை எவ்வாறு அறிவது? இதற்கான பதில் உரிச்சொல் இயல்பைப் பற்றிக் கூறும் வகையில் தெரிகிறது. ஒரு சொல் பலபொருட்கு உரிமை தோன்றினும் பல சொல் ஒரு பொருட்கு உரிமை தோன்றினும் பயிலாத வற்றைப் பயின்றவற்றோடு சார்த்திப் பொருளுணரும் வழியைக் குறிப்பிடுகிறார்.

பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்திக்

தத்தம் மரபிற் சென்றுநிலை மருங்கின்

எச்சொல்லாயினும் பொருள்வேறு கிளத்தல் (உரி-1)

வழக்கில் பயின்று வராத எந்தவொரு சொல்லா யினும் அதனைப் பயின்று வரும் சொற்களோடு சேர்த்துப் பொருள் வேறுபடுத்திக் காட்ட வேண்டும்.

எச்சவியலிலே ஒரு பொருள் குறித்த வேறு சொல் லாகியும் வேறு பொருள் குறித்த ஒரு சொல்லாகியும் வரும் திரிசொல் செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தில் வழங்கும் குறிப்பின் அடிப்படையிலேயே பொருள் விளங்கும் என்றார்.

சொற்களுக்குரிய புணர்ச்சி விதிகளைக் கூறும் தொல்காப்பியர் அதற்குச் சொற்பொருண்மையையும் பயன்படுத்துகிறார். காட்டாக, மேற்குறிப்பிட்ட மா என்ற சொல் மரத்தை உணர்த்தினால் மெல்லெழுத்து மிகும் என்று வரையறுக்கிறார். ஆண் என்ற சொல் உயர்திணையாகிய ஆணையும் அஃறிணையாகிய ஆண் என்னும் பெயருடைய ஒரு மரத்தையும் குறிக்கும். எனவே ஆண் என்னும் சொல் உயர்திணையைக் குறித்தால் இயல்பாகவும் மரத்தைக் குறித்தால் அம்முச்சாரியை பெற்று ஆணங்கோடு என வரும்.

எகின் என்ற சொல் ஒரு வகை மரத்தையும் குறிக்கும். அன்னப் பறவையையும் குறிக்கும். மரமானால் அம்முச்சாரியையும் பறவையானால் அகரமும் வல்லெழுத்தும் பெறும்

எகின் மரமாயின் ஆண்மர இயற்றே (புள்ளிமயங்-41)

எ.டு.எகினங் கோடு

ஏனையெகினே அகரம் வருமே

வல்லெழுத் தியற்கை மிகுதல் வேண்டும் (புள்ளிமயங்-42)

எ.டு.எகின கால், எகினக் கால்

சமூகவியல் நோக்கில் கருத்துப்புலப்படுத்தம்

சமூக அந்தஸ்து காரணமாகக் கூறப்படும் சில சொற்கள் இலக்கணக் கூறுகளின் உதவியின்றி தாமே அடையாளம் காட்ட வல்லவை. இதைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இவை மரபு வழிச் சொல் பயன்பாடாகும். செல், வா, தா, கொடு ஆகிய சொற்கள் தாமே தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்றிடங்களுக்கும் உரியனவாக வரும்.

செலவினும் வரவினும் தரவினும் கொடையிலும்

நிலைபெறத் தோன்றும் அந்நாற் சொல்லும்

தன்மை முன்னிலை படர்க்கை யென்னும்

அம்மூ விடத்தும் உரிய என்ப    (கிளவி-28)

தா, வா ஆகியவை தன்மை, முன்னிலைச் சொற்கள். செல், கொடு ஆகியவை படர்க்கை இடத்திற்குரியவை. சமுதாயத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஒப்பானவன் என்ற கருத்தும் தமிழ்ச் சமுதாயத்தில் உள்ளதை அறியலாம். தொல்காப்பியர் தா, ஈ, கொடு ஆகிய மூவகைச் சொற்களைக் குறிப்பிடுகிறார்: ஈ என்ற சொல் இரக்கப்படுவோனின் இழிந்த இரவலன் கூற் றென்பார். தாவென் கிளவி அவனொடொப்போன் கூற்று. கொடுவென் கிளவி அவனினுயர்ந்தோன் கூற்றென்பார். பேசுவோனுக்கும் கேட்போனுக்கும் உள்ள உறவு நிலையை ஒட்டியது இந்த நூற்பாக் கருத்து.

கொடு வென் கிளவி படர்க்கை யாயினும்

தன்னை பிறன்போற் கூறும் குறிப்பான்

தன்னிடத் தியலும் என்மனார் புலவர்               (எச்ச.52)

தன்னைப் பிறன் போற் கூறும் குறிப்பான் என்பதால் தன்னைப் படர்க்கையாக எண்ணிக் கூறுவதாகக் கொள்ளுவதைச் சுட்டுகிறார் தொல். ஒரு மகன் தன் தந்தையிடம் “நான் தருகிறேன் என்று சொல்லாமல் உங்கள் மகன் கொடுக்கிறேன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று தன்மையில் கூறாமல் படர்க்கையில் கூறுவது சுட்டப் படுகிறது.

ஒருவர் ஒரு பொருளைக் கேட்கிறார். அது அல்லது இல்லை என்று மற்றவர் பதில் கூறவேண்டிய நிலையில் அவர் கேட்ட பொருளல்லாது பிறிதொரு பொருளைக் கூற வேண்டும். எ.டு. பயறு உளவோ வணிகீர் என்றார்க்கு உழுந்தல்லது இல்லை என்று வேறு பொருள் சொல்லிக் கூற வேண்டும். சுட்டிக் காட்டிப் பதிலிறுக்கும் முறையையும் தொல். சுட்டு கிறது. பேச்சுச் சூழலில் கருத்துப் பரிமாற்றத்திற்கு உடல்மொழியும் உதவுமாற்றினை இந்நூற்பா சுட்டுகிறது.

அவையல் கிளவி

பிறரிடம் பேசும்போது தக்க சொற்களையே பேச வேண்டும். அவைக்கண் கூறத்தகாத சொற் களைக் கூறலாகாது என்பர். சபையிலே பேசக் கூடாத பொருண்மை, அமங்கலப் பொருண்மையை ஆகியவற்றைக் கூறும் முறையைத் தொல்காப்பியம் தருகிறது.

அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல்      (எச்ச-46)

‘பகரஇ’ என்பது மனிதக் கழிவைக் குறிக்கும் இடக் கரடக்கல் சொல். இக்காலத்தில் இதுபோன்ற இடக்கரடக்கற் சொற்களைக் குறிக்க ஆங்கில மொழிச் சொற்களைப் பயன்படுத்துவதைக் காணலாம். மோஷன், யுரின் போன்ற சொற்கள் பொது விடங் களில் பயன்படுத்துவதைக் காணலாம்.

இயல்பு வழக்கும் தகுதி வழக்கும்

தகுதியும் வழக்குந் தழீஇயின ஒழுகும்

பகுதிக் கிளவி வரைநிலை யிலவே     (கிளவி-17)

கருத்தாடல் என்பது பேசுவோன், கேட்போன், கருத்து ஆகிய மூன்று அடிப்படைக் கூறுகளுடன் நிகழுவது. கருத்தாடலில், இரட்டிப்பு அலகுகள், கால அலகு, கருத்தலகும் சார்பலகும், அடை அலகு, எண்ணலகு, உறுதிக் கருத்தலகு, மூல அலகும் பதிலி அலகும், இணைப்பலகு, அண்மை இணக்க அலகு முதலான பல அலகுகள் இடம்பெறுகின்றன. சொற் களுக்கிடையேயும் தொடர்களுக்கிடையேயும் உள்ள பொருண்மை உறவும் கருத்தாடலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இலக்கணப் பொருண்மை, குறிப்புப் பொருண்மை, தருக்கப் பொருண்மை ஆகியவையும் முக்கியமானவை. சொற்பொருள் மரபு கருத்தாடலில் இன்றியமையாத இடத்தை வகிக்கிறது. இன்ன சொற்களைத் தான் பயன்படுத்த வேண்டும். இன்ன கருத்தை இவ்வகையில்தான் வெளிப்படுத்த வேண்டும் என்ற மரபு சமூகவியல் நோக்கில் மிகவும் முக்கிய மானது.

Pin It