ராபர்ட் மக்னமாரா என்பவர் உலக வங்கியின் தலைவராக இருந்தபோது ஒரு சிறிய புத்தகம் ஒன்றை எழுதினார். அது பெரும் விவாதத்தை உருவாக்கியது. அவர் நாட்டின் பாதுகாப்பு என்ற தலைப்பில் எழுதிய அந்தச் சிறிய நூல், எதிர்காலத்தில் உலக நாடுகள் மக்கள் பெருக்கத்தால் சந்திக்கப் போகிற பிரச்சினைகள் குறித்து பல அடிப்படையான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அதாவது மக்கள் தொகைப் பெருக்கம், முறையற்ற ஆளுகை, ஊழல் நிறைந்த நிர்வாகம் பெருமளவில் மக்களை பிற நாடுகளுக்கு குடிபெயர வைக்கும். அந்தக் குடியேற்றம் என்பது ஒரு நிலையில் வளர்ந்த நாடுகளுக்கு அப்போது உதவிகரமாக இருப்பதுபோல் தெரியும்.

peoples crowd 600நாளடைவில் அது ஒரு பூதாகரப் பிரச்சினையாக அந்த நாடுகளில் பொதுமக்கள் மத்தியில் வெடிக்கும். அது மட்டுமல்ல உள்நாட்டுக் கலகம் ஏற்படுகின்ற நாடுகளிலிருந்து அகதிகளாக வரும் மக்கள் அடுத்த நிலையில் பிரச்சினைகளாக மாறுவார்கள். இந்தச் சூழல் வளர்ந்த நாடுகளை மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாக்கும். எனவே நாடுகளை பாதுகாப்பது என்பது விரிவான பார்வையில் விஞ்ஞான அடிப்படையில் ஒவ்வொரு நாடும் ஆளுகை செய்து செயல்படவில்லை என்றால் இன்று வளம்மிக்க, வசதிகள் மிக்க செல்வந்த நாடாக விளங்கும் நாடுகள்கூட சிக்கலுக்கு உள்ளாகிவிடும் என்று அவர் எழுதியபோது, அவரை அன்று பலர் தேவையில்லா பயத்தை உருவாக்குகின்றார் என்று விமர்சனம் செய்தனர். அன்று அவர் கூறியது இன்று எவ்வளவு தீர்க்க தரிசனமான கருத்து என்று வியக்க வேண்டி உள்ளது. இன்றைய உலகச் சூழல் என்பது மக்கள் கூட்டம் கூட்டமாக மற்ற நாடுகளை நோக்கி தஞ்சமடைய முயற்சிப்பதும், அதை தடை செய்ய பல நாடுகள் முயற்சி செய்வதும், ஒரே நாட்டில் மாநிலம் விட்டு மாநிலம் சென்று பிழைப்புத் தேடுவதும், அங்கு அவர்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்துவதும் எதைக் காட்டுகின்றது என்றால் திறனற்ற அரசாங்கங்கள் செயலற்று இருப்பதைத்தான்.

உலகமயப் பொருளாதாரத்தை முன்னெடுத்த நாடுகள் அனைத்தும் இன்று உள்ளூர்மயம் பற்றிப் பேசி நாட்டு மக்களின் பாதுகாப்புதான் பிரதானம் எனச் செயல்பட்டு வருகின்றனர். உலகத்தைப் பாதுகாக்க உருவெடுத்ததுபோல் பேசி வந்த நாடுகள் உள்ளூர் மக்களின் பாதுகாப்புக்காக புலம் பெயர்ந்து சென்றவர்களை ‘வந்தேரிகளே வெளியேறுங்கள்’ என்று வெளிநாட்டினரை வெளியேற்றும் திட்டத்தில் இறங்கினர். அதேபோல் ஒரே நாட்டில் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலம் சென்று தங்கள் வாழ்வாதாரத்திற்காக உழைப்பவர்களை வந்தேரிகள் என வர்ணித்து, அவர்களை வெளியேற்ற வேண்டும் எனக் கோஷமிடுகின்றனர். ஆனால் உண்மை என்ன என்று அலசும்போது நம் அனைவருக்கும் தெரியும் எந்த நாடும், சமூகமும் அல்லது மாநிலமும் இன்று தனித்து இயங்கி மேம்பாடு அடைய முடியாது என்பது.

இந்த உலக நாடுகளின் மற்றும் நாட்டின் மாநிலங்களின் இரட்டைச் செயல்பாடு ஏன் வந்தது என்று கேள்வி கேட்டால் நமக்குக் கிடைக்கும் விடை அந்த அரசு மற்றும் அந்த ஆளுகை என்பதுதான். அடுத்து மானுடச் செயல்பாட்டை ஒட்டுமொத்தமாகப் பொருள் செய்து, வணிகம் செய்து, லாபம் ஈட்டுவதற்குள் அடக்கியதுதான். மிகப்பெரிய வணிக யுத்தத்தை சமூகத்தில் கட்டவிழ்த்து விட்டதன் விளைவு, மனித சமூகத்தை அதன் உயரிய சிந்தனைப்போக்கை தாழ்த்தி பொருள் ஈட்டுவதை பிரதானப்படுத்தி மக்கள் சிந்தையில் பதிய வைத்ததன் விளைவுதான் இன்று நாம் பார்க்கும் பிரிவினைகள்.

இந்தச் சூழலின் பின்னணியை அலசிப் பார்த்தால் நமக்கு மற்றுமொரு உண்மை புலப்படும். அதாவது மக்களாட்சியை பல நாடுகள் எவ்வளவு திரிபுகளுடன் செயல்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு பயன்படுத்தியதன் விளைவு இன்று மக்களாட்சிக்கே ஆபத்தை விளைவிக்கும் சூழலுக்கு நாம் நம் அரசியலைக் கொண்டு வந்து விட்டோம். மக்களாட்சி என்பது தேர்தல், தேர்தலை வைத்து ஆட்சியைப் பிடிப்பது, ஆட்சியைப் பிடித்தவுடன் கட்சியின் ஆட்சியை நிலைநாட்டிக்கொள்வது என்ற நிலைமைக்கு மக்களாட்சியைக் கொண்டு வந்து விட்டோம். இந்தச் சூழல் என்பது உலகுக்கே மக்களாட்சிக்கு வழிகாட்டும் நாடுகள் நாங்கள்தான் என மார்தட்டிச் சொன்ன நாடுகள்கூட இந்த மக்களாட்சிச் சிதிலங்களுக்கு விதிவிலக்காக இருக்க முடியவில்லை. சமீப காலத்தில் சந்தைப் பொருளாதாரம், நாட்டின் அரசியலை அதன் காலடியில் போட்டு மிதித்துக் கொண்டுள்ளது என்பதைத்தான் எங்கும் மக்கள் பார்த்து வருகின்றனர்.

இது நம் நாட்டில் மட்டுமல்ல, இது ஒரு உலகளாவிய செயல்பாடு. அடுத்து ஆளுகை என்பது மக்கள் நலன் சார்ந்ததாக இருப்பதற்குப் பதில் பொருளாதார வளர்ச்சி என்பதை மையப்படுத்தி செயல்பட்டதின் விளைவு, ஆளுகை, நிர்வாகம் ஆட்சி என்பதெல்லாம் ஊழல் மயமாக்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் நிதியில் அரசியல் என்ற நிலைக்கு வந்துவிட்டது இந்த மக்களாட்சி. இந்தச் சூழலை தாமஸ் பெயின் என்ற சிந்தனையாளன் நம் அரசாங்கம் முறையாக பொதுமக்களால் கண்காணிக்கப்படவில்லை என்றால், அடிப்படையில் அரசாங்கம் தான் செய்யவேண்டிய பணியாகிய மக்கள் பாதுகாப்பு என்பதை மறந்து மக்களைச் சீரழிக்கும் செயல்களில் இறங்கிவிடும். எனவே “பொதுமக்கள் விழிப்புணர்வுதான் ஒரு மக்களாட்சி நாட்டைக் காக்கும் ஓர் அரண்” என்ற கருத்தினை முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே கணித்து எழுதி விட்டான்.

மக்களாட்சி நவீன வடிவத்தில் முன்னூறு ஆண்டுகளைக் கடந்தும் அதன் உண்மைத் தன்மையில் அது செயல்பட முடியவில்லை. மக்களாட்சி முதிர்ச்சி அடைவதற்குப் பதில் உலகம் முழுவதும் சிதிலமடைவதை நம்மால் பார்க்க முடிகிறது. அது மட்டுமல்ல, அரசாங்கம் என்பது மக்களைப் பாதுகாக்கும் ஓர் அரண். அதுதான் அதன் அடிப்படை. ஆனால் அந்தப் பணியை செய்வதில்தான் அரசாங்கமும் சிக்கித் தவிக்கிறது, பொதுமக்களும் அரசாங்கத்தை எப்படி வேலை வாங்குவது என்பது புரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர்.

பொதுவாக மக்கள் தங்கள் பாதுகாப்பை முன்னிருத்தித்தான் அரசாங்கத்தை உருவாக்குகின்றார்கள். ஆனால் அதே அரசாங்கம் எதற்காக உருவாக்கப்பட்டதோ அதை மறந்து மக்களுக்குப் பல கேடுகளைச் செய்கின்றது. அவைகளை மக்கள் பொறுத்துக்கொள்கிறார்கள். காரணம் தன் பாதுகாப்பிற்கு வேறு எந்த அமைப்பும் மக்களுக்குத் தென்படவில்லை. அது மட்டுமல்ல, அரசாங்கத்தை நம்மால் நிர்பந்தப்படுத்த முடியும் அதற்கு அரசாங்கம் செவி சாய்க்கும் என்ற நம்பிக்கையால்தான் என்று தாமஸ் பெயின் கூறுகிறான்.

peoples crowe in bus 600இன்றைய சூழலில் அரசாங்கமே இவ்வளவு பெரிய ராணுவத்தை வைத்திருந்தும், இவ்வளவு பெரிய கட்டமைப்புடன் காவல் துறையை வைத்திருந்தும், வானளாவிய அரசுத் துறைகளை நவீன வசதிகளுடன் வைத்திருந்தும், மக்களைப் பாதுகாப்பதில் தொடர்ந்து கோட்டைவிட்டுக் கொண்டே வருகின்றது. ஏனென்றால் மக்கள் பாதுகாப்பு என்பது மக்களை அண்டை நாட்டினர் தாக்குதலிலிருந்து பாதுகாத்தல் என்பதில் ஆரம்பித்து, மக்களின் உணவுக்குப் பாதுகாப்பு, உறைவிடத்திற்குப் பாதுகாப்பு, உடைமைகளுக்குப் பாதுகாப்பு, உரிமைகளுக்குப் பாதுகாப்பு, வாழ்வாதாரத்திற்குப் பாதுகாப்பு, பணிகளுக்குப் பாதுகாப்பு, ஆரோக்கியத்திற்குப் பாதுகாப்பு, கல்விக்குப் பாதுகாப்பு என்று பாதுகாப்புப் பணிகள் நீட்டிக்கப் பட்டிருக்கின்றன. இந்தப் பாதுகாப்புப் பணிகள் என்பதை அரசாங்கம் முழுமையாக அரசு இயந்திரங்களை திறமையுடன் இயக்கி மக்கள் மேம்பாட்டுக்கான கொள்கைகளை வகுத்து உருவாக்கிச் செயல்படுவதில்தான் இருக்கின்றது.

இன்று மக்களின் உயிருக்குப் பாதுகாப்பு, சொத்துக்குப் பாதுகாப்பு, தங்கள் உடைமைகளுக்குப் பாதுகாப்பு, தங்கள் பணத்திற்குப் பாதுகாப்பு, தங்கள் பணிக்குப் பாதுகாப்பு என்பதெல்லாம் கேள்விக்குறியாக உள்ளது. இந்தப் பாதுகாப்பை ஏன் அரசாங்கத்தால் தர இயலவில்லை. நம் நாட்டின் சந்தைச் செயல்பாடு அதாவது பொருள் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி பொருள் ஈட்டும் நிறுவனங்களின் நேர்மையற்ற, நியதியற்ற வரைமுறை மீறிய செயல் என்பதை யாரும் மறுக்க இயலாது. அதுதான் இன்று சமூகத்தைச் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தச் சந்தைதான் அரசியல்வாதிகளுக்கு கட்சிகளை எப்படிக் கம்பெனி நடத்துவதுபோல் நடத்துவது என்பதை கற்றுக் கொடுத்தது.

இந்தச் சந்தைதான் வாக்குகளைக்கூட சந்தைப் பொருளாக மாற்றிட கட்சிகளுக்கு வழிகாட்டி, வாக்குகளை வாங்க நிதி உதவியும் செய்தது. இதன் விளைவு இன்று அரசாங்கம் மக்களைப் பாதுகாப்பது என்ற நிலையிலிருந்து சந்தைப் பாதுகாப்பு என்ற இடத்திற்கு வந்துவிட்டது. அரசாங்க அமைப்புக்கள் மக்களாட்சியின் பல அடிப்படைக் கூறுகளான நேர்மை, நீதி, நியதி, சுதந்திரம், உரிமை போன்றவைகளை கடைப்பிடிக்க முடியாமல் கோட்டை விட்டுவிட்டன. மக்களாட்சி என்ற பெயரில் தேர்தலை மட்டும் நடத்தி மற்ற மக்களாட்சிக் கூறுகளைத் தவிர்த்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றன நம் அரசியல் கட்சிகள். எனவே மக்களைப் பாதுகாக்க, மற்றும் மக்களின் மேம்பாட்டை உறுதி செய்ய மக்களிடம் தேவையான அளவுக்கு பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அரசாங்கம் ஆளுகை மற்றும் நிர்வாகம் பற்றிய பொது அறிவை உருவாக்குவதைத் தவிர வேறு ஒரு குறுக்குவழி இல்லை என்பதைப் புரிந்து கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

உலகம் முழுவதும் அரசாங்கங்கள் பெரும்பான்மை சமுதாயத்தை நிராகரித்த நிலையில்தான் செயல்படும் சூழலில் இருக்கின்றன. அதைத்தான் நமக்கு உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை கூறுகிறது. எனவே மக்களைத் திரட்டுவது, அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பொதுமக்களுக்கு ஆட்சி, ஆளுகை, அரசியல் சாசனச் சட்டம் பற்றிய தேவையான அறிவை உருவாக்குவது மட்டுமே தேவையான மாற்றங்களை சமுதாயத்தில் கொண்டுவர முடியும்.

Pin It