தேசிய சுய நிர்ணய உரிமை என்ற கோட் பாட்டில் லெனின் உறுதி மாறாது நின்றார்.  அடிமைப்பட்ட நாடுகளின் தேசிய விடுதலைக் கான போராட்டங்களை - காலனியாதிக்கத்தி லிருந்து விடுதலை பெறுவதற்காக நடந்த இயக்கங் களை எப்போதும் ஆதரித்து வந்தார்.

இதற்குக் காரணம் அவரது ஆழ்ந்த ஜனநாயகக் கண்ணோட்டமும் உணர்ச்சியும் மட்டுமல்ல, ஏகாதிபத்தியத்தின் இயல்பு பாத்திரம் இவை குறித்து லெனின் நடத்திய சரியான புரட்சிகரமான ஆய்வின் அடிப்படையில் - ஏகாதிபத்திய நாடு களின் பாட்டாளி வர்க்க சோஷலிஸ்ட் புரட்சி களுக்கும், காலனி சார்பு நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியப் புரட்சிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத இணைப்பு இருத்தலை எடுத்துக் காட்டினார்.

லெனினைப் பொருத்தவரையில் காலனி நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் முதலாளித்துவத்தை எதிர்த்து சோஷலிஸத் திற்காகப் போராடும் சர்வதேசத் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தில் ஒரு பகுதியேயாகும்.  மேலை நாடுகளின் சோஷலிஸ்ட் தொழிலாளி வர்க்க இயக்கங்களும் - கீழ்த்திசை தேசிய விடுதலை இயக்கங்களும் பரஸ்பரம் இணைந்தவை என்றும் எனவே ஆசிய - ஆப்பிரிக்க தேசிய விடுதலை இயக்கங்களுக்குப் பரிபூரணமான தங்குதடையற்ற ஆதரவினை அளிக்க வேண்டியது ஐரோப்பா விலுள்ள தொழிலாளி வர்க்கக் கட்சிகளின் தலையாய கடப்பாடு என்றும் அவர் எப்போதும் வற்புறுத்தி வந்திருக்கிறார்.

வாஸ்தவத்தில் இதற்கு மேலும் பணியாற்றி யுள்ளார்.  குறிப்பிட்ட ஒரு சாம்ராஜ்ய நாட்டி லுள்ள தொழிலாளி வர்க்கக் கட்சி அந்த சாம் ராஜ்ய நாட்டின் ஆட்சியின் கீழ் இருக்கும் நாடு அல்லது நாடுகளின் விடுதலை இயக்கத்தினை முழுமையாக ஆதரிக்க வேண்டியது அதன் கடமை என்று வற்புறுத்தியுள்ளார்.  அதன் பொருள் - இந்திய விடுதலை இயக்கத்தினை ஆதரிப்பது பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் குறிப்பிட்ட கடமை, பிரெஞ்சு காலனிகளின் விடுதலைப் போர் களை ஆதரிப்பது பிரெஞ்சு கட்சியின் கடமை என்பதாகும்.

காலனி விடுதலை இயக்கம், தேசிய சுயநிர்ணய உரிமை என்ற உயிர் நாடியான பிரச்சினைமீது லெனின் சோஷல் டொமாகிரட் (சீர்திருத்தவாத) இரண்டாம் அகிலத்துடன் கருத்து மாறுபட்டுப் பிரிந்தார்.  காலனிகளில் ஏகாதிபத்திய ஆட்சிகள் நடப்பது பற்றி வெறும் பூச்சுப்பூசி அடிமைப்பட்ட நாடுகளுக்குச் சுயநிர்ணய உரிமை வழங்காதிருப் பதற்காகச் சாக்குப் போக்குகளை தேடித் திரிந்த சோஷல் டொமா கிரடிக் தலைவர்களை (உ-ம். ராம்ஸே மக்டொனால்ட் போன்றாரை) லெனின் ஆத்திரத்துடன் கண்டனம் செய்தார்.

துவக்க ஆண்டுகளிலேயே இந்தியா - சீனா முதலிய நாடுகளில் பிரிட்டனும் இதர ஏகாதி பத்திய வல்லரசுகளும் வகித்துவந்த பொருளாதார அரசியல் பாத்திரம் பற்றியும், அவற்றின் கொடூர மான பைசாச ஆட்சி முறைகளையும், அதோடு சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளையும் குறித்து லெனின் மிகவும் விரிவாக எழுதியிருந்தார்.  மேலும் இந்தப் பிரச்சினைகள் குறித்து ஏராள மான குறிப்புக்களை அவர் வைத்திருந்தார்.  உதாரண மாக பிரிட்டிஷார் சிப்பாய்க் கலகம் என்று அழைக்கும் 1857ஆம் ஆண்டின் எழுச்சியின் வெகுஜனப் புரட்சித் தன்மை பற்றிய குறிப்புகளை வைத்திருந்தார்.  1905ஆம் ஆண்டில் வங்காளம் பிரிக்கப்பட்டது குறித்து அவர் தமது ஏகாதி பத்தியம் பற்றிய குறிப்பேடு (பக் 448) களில் சுட்டிக் காட்டுவதாவது:

பிரிட்டிஷார் தமது பிரித்தாளும் சூழ்ச்சியை வைத்தே ஆதிக்கம் செலுத்துகிறார்கள்...  1905இல் பிரிட்டிஷார் (தேசிய இயக்கத்தைப் பலவீனப் படுத்தவே) வங்காளத்தைப் பிரித்தார்கள்.

அவரது பல்வேறு நூல்களில் இது போன்ற எண்ணற்ற குறிப்புகள் வருகின்றன.

இந்தியா-சீனா தேசிய விடுதலை இயக்கங்கள் குறித்து லெனின் பலமுறை எழுதியுள்ளார்- பேசி யிருக்கிறார்.  உலக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் இவை நிர்ணய மான முக்கியத்துவமுள்ளவை என்று அவர் கருதினார்.  ஏகாதிபத்தியத்தின் தடித்தனம், அச் சுறுத்தல் ஆதிக்கம் இவற்றுக்கு எதிராக இந்தியாவிலும் சீனாவிலும் எழுந்த வெகுஜனப் போராட்டத்தின் சிறுசிறு செயல்களையும் அவர் அடிக்கடி புகழ்ந்து பெருமைப்படுத்தினார்.

பண்பாடுள்ள ஐரோப்பியரும் காட்டுமிராண்டி ஆசிரியர்களும் என்ற கடும் நையாண்டிக் கட்டுரை 1913 ஏப்ரல் 13ந் தேதி பிராவ்தாவில் வெளிவந்தது.  இதில் அயினா என்னும் 11 வயது பணிப்பெண் பர்மாவில் ஒரு பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியால் பலவந்தம் செய்யப்பெற்று அறைக்குள் பூட்டி வைக்கப்பெற்ற சம்பவம் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது.  அவளது தந்தை சாகும் தருவாயி லிருந்தார்.  மகளைப் பார்க்க விரும்பினார்.  சம்பவம் பற்றித் தெரிந்து கொண்ட கிராம மக்கள் கோபாவேசமுற்று போலீசாரைக் கொண்டு அந்த பிரிட்டிஷ் அதிகாரியைக் கைது செய்ய நிர்ப்பந்தித் தார்கள்.  அந்த அதிகாரிக்கு எதிராக எல்லாச் சாட்சியங்களும் இருந்தும் நீதிபதி (அவரும் வெள்ளைக்காரர்) அயினா ஒரு வேசை! என்று கூறி அந்த பிரிட்டிஷ் அதிகாரியை விடுதலை செய்து விட்டார்.

லெனின் இந்த நிகழ்ச்சி முழுவதையும் தனது கட்டுரையில் விவரித்து “இந்தியாவில் இதைப் போல லட்சோப லட்சம் சம்பவங்கள் நடக் கின்றன” என்று குறிப்பிடுகிறார்.  காட்டுமிராண்டி தர்பார் நடத்தும் பிரிட்டிஷ் மிதவாதிகளை வன்மையாகக் கண்டிக்கிறார்.  “இந்த நிகழ்ச்சி 30 கோடி மக்களுக்கு மேல் உள்ள இந்திய நாட்டில் புரட்சி தீவிரமாக வளர்ந்து வருவதை - நீண்ட தோர் ஆய்வுரையைவிடத் தெட்டத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது” என்று குறிப்பிடுகிறார்.

மேலும் 1908ஆம் ஆண்டிலேயே லெனின் எழுதினார்:

இந்தியாவில் “நாகரிகம் படைத்த” பிரிட்டிஷ் முதலாளிகளின் கீழ் இருக்கும் சுதேசி அடிமைகள் அண்மைக் காலகட்டத்தில் தமது “எஜமானர் களுக்கு” விரும்பத்தகாத கவலையைக் கொடுத்து வருகிறார்கள்.  இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி அமைப்பு என்ற பேரில் நடக்கும் வன்முறைக்கும் கொள்ளைக்கும் எல்லையே இல்லை (உலக அரசியலில் தீப்பற்றத்தக்க தகவல்கள்).

இந்தக் கட்டுரையில் தான் லெனின் திலகரைப் பற்றியும், 1908இல் திலகர் மீது விதிக்கப் பெற்ற காட்டுமிராண்டித் தண்டனையை எதிர்த்து பம்பாய் பஞ்சாலைத் தொழிலாளர் நடத்திய கண்டன வேலை நிறுத்தம் பற்றியும் குறிப்பிடும் சிறந்த பகுதி வருகிறது.

அது கூறுவதாவது:

இந்திய மக்கள் தமது எழுத்தாளர்கள் அரசியல் தலைவர்களை ஆதரித்து நிற்கத் தொடங்கி விட்டார்கள்.  பிரிட்டிஷ் குள்ளநரிகள் இந்திய ஜனநாயகவாதி திலகருக்கு எதிராக விதித்த நெறிகெட்ட தண்டனை - நீண்ட கால நாடு கடத்தும் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.  பிரிட்டிஷ் காமன்ஸ் சபையில் எழுந்த கேள்வியி லிருந்து இந்திய நீதிபதிகள் அவரை விடுதலை செய்யத் தீர்ப்பளித்ததும் பிரிட்டிஷ் நீதிபதிகள் தீர்ப்பால் தண்டனை விதிக்கப் பெற்றதும் வெளி வந்தது - பணமூட்டைகளின் கையாட்கள் ஒரு ஜனநாயகவாதி மீது இவ்வாறு பழி வாங்கியது சம்பந்தமாக பம்பாய் தெருக்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.  வேலை நிறுத்தம் வெடித்தது.  இந்தியா விலும் தொழிலாளி வர்க்கம் போதபூர்வமான அரசியல் வெகுஜனப் போராட்ட முறையினை வகுத்துக் கொண்டு விட்டது.  எனவே இந்தியாவி லுள்ள ரஷ்யன்- வடிவ பிரிட்டிஷ் ஆட்சிக்கு அதோகதிதான்.

யுத்தப் பிற்கால இந்தியாவின் தேசிய எழுச்சி பற்றியும், காந்திஜி பற்றியும் காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற இயக்கம் குறித்தும் லெனின் எவ்வாறு அணுகினார் என்ற குறிப்பிட்ட விஷயத்தை இங்கு விவரிக்க விரும்புகிறோம்.  இந்த விஷயம் மிக மிக வரலாற்று முக்கியத்துவம் படைத்ததாகும்.  இ.ன்றைய இந்திய ஜனநாயகவாதிகளுக்கும் சோஷலிஸ்டுகளுக்கும் இது கருத்தைக் கவர்வ தாகும்.  1930-ஐ ஒட்டிய துவக்க நாட்களில் இந்தியக் கம்யூனிஸ்டுகள் இந்தப் பிரச்சினை குறித்து லெனின் வெளியிட்ட கருத்துக்களைப் படித்துப் புரிந்து கொண்டிருப்பார்களாயின் 1930-34 சட்ட மறுப்பு இயக்கத்தின்போது தாம் செய்த பெருந் தவறுகளிலிருந்து தப்பியிருக்க முடியும், அப் போராட்டத்தினூடே பலம் பொருந்திய தேசிய சக்தியாக முகிழ்ந்திருக்கக்கூடும்.

இதைப் பற்றி விரிவான ஒரே கட்டுரை லெனினால் எழுதப்படவில்லை.  ஆனால் அவரது கருத்துக்களை எடுத்து விளக்கத்தக்க போதிய அத்தாட்சிகள் இருந்தன.  லெனின் கிராடிலும் மாஸ்கோவிலும் 1920 ஜுலை 17 முதல் - ஆகஸ்ட் 7-ந் தேதி வரையில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது மாநாட்டில் தேசிய காலனியாதிக்கப் பிரச்சினைகள் பற்றிய கமிஷனில் இந்தப் பிரச்சினை சாங்கோபாங்கமாக விவாதிக்கப் பெற்றது.  லெனின் பங்கு பற்றிய இந்தக் கமிஷனின் விவாத விவரங்களைப் படித்துப் பார்த்தால் இந்தப் பிரச்சினை மீது மேலும் தெளிவு கிடைக்கும்.

இரண்டாவது மாநாட்டிற்கு அவர் சமர்ப் பித்த தேசிய காலனியாதிக்கம் பற்றிய பிரச்சினை ஆய்வுரையின் பூர்வாங்க நகலில் அடிமைப்பட்டுக் கிடக்கும் காலனி நாடுகளிலுள்ள கம்யூனிஸ்டுகள், சுதந்திரமாக தொழிலாளி வர்க்க விவசாயி ஸ்தாபனங் களைக் கட்டி வெகுஜனப் போராட்டங்களைக் கட்டவிழ்த்து விட வேண்டும் என்று தாமே வலியுறுத்தியுள்ளார் லெனின்.  இத்தகைய நாடு களிலுள்ள கம்யூனிஸ்டுகள் தேசிய பூர்ஷ்வாக் களின் சமரசப் போக்கினை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தி யுள்ளார்.  இந்த விஷயங்களில் கருத்து வேற்று மைக்கே இடமில்லை.

தேசிய பூர்ஷ்வாத் தலைவர்களால் நடத்தப் பெறும் தேசிய விடுதலை இயக்கங்கள் இத் தலைவர்கள் விஷயத்தில் கம்யூனிஸ்டுகள் எத்தகைய அணுகுமுறையினை அனுஷ்டிக்க வேண்டும் என்ற உண்மையான, உயிர்நாடியான விஷயந்தான் விவாதிக்கப் பெற்றது.  பெரும்பாலான காலனி நாடுகளில் குழந்தைப் பருவத்திலிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இது சோதனையான பிரச்சினை.

இரண்டாவது காங்கிரஸிற்குப் பல ஆண்டுகள் முன்பே காலனி நாடுகளில் இருக்கும் பூர்ஷ்வா வர்க்கம் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்தி, அது பிற்போக்குக்கு எதிராக நிற்கிறது என்ற கருத்தை லெனின் கொண்டிருந்தார்.

உதாரணமாக 1913 - மே மாதத்தில் அவர் எழுதிய பிற்போக்கு ஐரோப்பாவும், முன்னேறும் ஆசியாவும் என்ற புகழ்பெற்ற கட்டுரையில் லெனின் பிற்போக்கு முகாமுக்குள் புகுந்துவிட்ட ஐரோப்பிய பூர்ஷ்வாக்களையும், பிற்போக்குக்கு எதிராக அன்றும் நின்றிருந்த ஆசிய பூர்ஷ்வாக்களையும் ஒப்புநோக்கி வேற்றுமையினைக் காட்டினார்.  அக்கட்டுரையின் வாசகம் பின்வருமாறு:

ஆசியாவில் எங்கணும் வலிமைமிக்க ஜனநாயக இயக்கம் வளர்ந்து வருகிறது, பரவி வருகிறது, வலுப்பெற்று வருகிறது.  அங்கு இப்போதும்கூட பூர்ஷ்வாக்கள் பிற்போக்குக்கு எதிராக மக்கள் பக்கம் சார்ந்து நிற்கிறார்கள்.  லட்சோப லட்சம் மக்கள் ஒளிமிகுந்த வாழ்க்கை பெற விடுதலை காண விழிப்படைந்து வருகிறார்கள்.

தேசிய விடுதலைக்காக காலனி நாடுகளில் நடைபெறும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டங் களில் தேசிய பூர்ஷ்வாக்களுக்குரிய இடத்தை லெனின் எங்கே நிர்ணயித்து வைத்தார் என்பது பற்றி எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை.  பூர்ஷ்வாக் களைப் பற்றிப் பொய்யான பிரமைகளை வைத் திராமல் அவர்களை மக்கள் முகாமில் அவர் வைத்தார்- விரோதிகள் முகாமிலல்ல.

திலகரைக் குறித்து லெனின் பாராட்டியுள்ள பகுதியினை மேலே குறிப்பிட்டுள்ளோம்.

இதே கண்ணோட்டத்தினை, மதிப்பீட்டை முறையாகத் தொடர்ந்து லெனின் தனது தேசிய காலனிப் பிரச்சினைகள் பற்றிய பூர்வாங்க நகல் ஆய்வுரையில் கூறியதாவது:

நிலப்பிரபுத்துவ தந்தை வழி - தந்தை வழி விவசாய உறவுகள் ஆதிக்கம் செலுத்தி வரும் மிகவும் பின்தங்கிய அரசுகள் தேசங்களில் பின் வருவனவற்றை முக்கியமாகக் கருத்தில் வைக்க வேண்டும்.

முதலாவதாக: இந்த நாடுகளின் பூர்ஷ்வா ஜனநாயக விடுதலை இயக்கத்திற்கு எல்லாக் கம்யூனிஸ்ட் கட்சிகளும் உதவி செய்தல் வேண்டும்.  இதில் மிகவும் தீவிரமான உதவிகள் செய்ய வேண்டிய பிரதான கடமை - காலனி என்ற முறையிலோ நிதி விஷயத்திலோ பிற்பட்ட நாடு சார்ந்து நிற்கிற நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களுடையதாகும்.  (கீழ்த்திசை தேசிய விடுதலை இயக்கம் மாஸ்கோ 1962, பக். 254)

எனினும் கமிஷனில் தேசிய காலனிகள் ஆய்வுரை விவாதிக்கப்பட்டு வெளிவந்த போது இறுதியாக இரண்டாவது காங்கிரஸ் அங்கீகரித்த சமயம் “பூர்ஷ்வா ஜனநாயக விடுதலை இயக்கம்” என்ற சொற்களுக்குப் பதிலாக “தேசியப் புரட்சி இயக்கம்” என்ற சொற்கள் போடப்பட்டன, இது எவ்வாறு நிகழ்ந்தது இதன் பொருள் என்ன?

அந்தக் காலத்தில் - பிறகு சில ஆண்டு களுக்கும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் தலைமைப் பதவியில் இருந்த வளர்ச்சியுற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் எம்.என். ராய் என்பது தெரிந்ததே.  ராயின் மதிப்பீடுகளுக்கும் கருத்துக் களுக்கும் லெனின் முக்கியத்துவம் கொடுத்தார்.  ராய் கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது மாநாட்டிற்குப் (மெக்சிகோவிலிருந்து) பிரதி நிதியாக வந்திருந்தார்.  தேசிய காலனிப் பிரச்சினைகள் பற்றி விவாதித்த கமிஷனில் தீவிரமாகப் பங்கு பற்றிய கமிஷனுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர் அவர்.  வாஸ்தவத்தில் லெனினது ஆய்வுரைக்கு மாற்றாக தனது சொந்த ஆய்வுரை ஒன்றை ராய் கமிஷனுக்குச் சமர்ப்பித்தார்.

அந்தக் காலகட்டத்தில் ராய் எடுத்த நிலை மிக மிகத் தீவிர “இடதுசாரி”த் தனமானது.  1928க்குப் பிறகு கம்யூனிஸ்ட் அகிலத்தால் வெளி யேற்றப்பட்ட பிறகு அவர் படிப்படியாக வலது சாரிப் பக்கம் சாய்ந்து இறுதியாக மார்க்சிஸத் தையே மறுத்து விட்டார்.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாம் காங்கிரஸின் போது ராய், லெனினுக்கும் “இடதுசாரி”யாக இருந்தார் என்ற உண்மை எல்லோராலும் அங்கீ கரிக்கப்பட்டுள்ளது.  அவர் சமர்ப்பித்த மாற்று ஆய்விலும், பிற்பாடு வெளியிடப்பட்ட நினைவுக் குறிப்புகளிலும் இத்தகவல் தெளிவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் மிக நெருக்கமாக விவரம் தெரிந்த தாக ஜம்பமடித்த ராய் வெறும் கனவுலகில் சஞ்சரித்தார்.  தனது மனதில் கற்பனைகளைப் படைத்துக் கொண்டிருந்தார்.

ராயின் மாற்று ஆய்வுரையிலிருந்து பொருத்த மான பகுதிகளைத் தருகிறோம்:

சார்பு நாடுகளில் முற்றிலும் வேறுபட்ட இரு இயக்கங்கள் காணப்படுகின்றன.  நாளுக்கு நாள் இவை மேலும் மேலும் பிரிந்து செல்கின்றன.  ஒன்று: பூர்ஷ்வா ஜனநாயக தேசிய இயக்கம்.  பூர்ஷ்வா அமைப்புக்குள் அரசியல் சுதந்திரம் விழைகிறது.  மற்றது எல்லாவிதமான சுரண்டல் களையும் எதிர்த்து ஏழைகளும் பாமரர்களுமான விவசாயிகளும் தொழிலாளர்களும் நடத்தி வரும் வெகுஜனப் போராட்டம்.  (கோடிட்டது ஆசிரியர்.)

1920ஆம் வருடத்திய இந்தியாவில் இவ்வாறு இருவேறான இயக்கங்கள் பூர்ஷ்வா அமைப்புக்குள் அரசியல் சுதந்திரம் கோரும் வேலைத் திட்டமும், எல்லாவிதமான சுரண்டல்களிலிருந்தும் விடுதலை பெற விழையும் தொழிலாளர் விவசாயிகள் திட்டமும் இருந்தனவா? அவை ராயின் கனவில் இருந்திருக் கலாம். ஆனால் கனவுகள் நனவுகளல்லவே, மேலும் பார்ப்போம்.

பெரும்பாலான காலனிகளில் ஸ்தாபன ரீதியான புரட்சிக் கட்சிகள் ஏற்கெனவே உள்ளன. அவை உழைக்கும் பொது மக்களுடன் நெருங்கிய உறவுகள் கொள்ள முனைகின்றன.

1920ஆம் ஆண்டு மத்தியில் இந்தியாவில் மருந்துக்கும் ஒரு கம்யூனிஸ்ட் இருக்கவில்லை.  அப்படி இருக்க ஸ்தாபன ரீதியான புரட்சிக் கட்சிகளையும் உழைக்கும் மக்களுடன் நெருங்கிய தொடர்பையும் பற்றிப் பேசுவானேன்.  இந்தச் சொற்றொடரின் பொருள் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது என்பதேயாகும்.  கீழே தத்தம் நாட்டில் இந்தக் கட்சிகள் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படைகளாக விளங்கின என்று ராய் குறிப்பிடு கிறார்.  அவர் சாட்சாத் கம்யூனிஸ்ட் கட்சியையே குறிப்பிடுகிறார் என்று கொள்ளலாம்.

ராயின் ஆய்வுரையில் மிகவும் அதிசயமான வரையறுப்பு பின்னால் தரப்படுகிறது.

துவக்கத்திலிருந்தே காலனி நாடுகளின் தலைமை கம்யூனிஸ்ட் முன்னணி படையினர் கைகளில் இருந்திருக்குமானால் புரட்சிகரமான பொது மக்கள் திக்குத் தெரியாது சென்றிருக்க மாட்டார்கள்.  (கோடிட்டது ஆசிரியர்.)

ஓர் அடிமைப்பட்ட நாட்டில் எவ்வாறு கம்யூனிஸ்ட் கட்சி துவக்க முதலே விடுதலை இயக்கத்தின் தலைமையைப் பெற முடியும்? சரியான கொள்கையும் நடைமுறைத் தந்திரமும் இருந்தால் கூட மிகப் பெரும் உழைப்புக்கும் பொறுமைக்கும் பிறகு உருவாக வேண்டிய ஒரு கடமையினைக் கண்ணிமைக்கும் நேரத்தில் பெறத் துடிக்கிறார் ராய்.

தமது நினைவுக் குறிப்புகளில் (1964 பதிப்பு) ராய் லெனினுடன் இரண்டாம் காங்கிரசின் போது தமக்கு எழுந்த வேறுபாடுகளை விரிவாக வெளியிட்டிருக்கிறார்.  தனது நிலையினை நியாயப் படுத்துவதற்கான முயற்சியில் காலனிகளிலுள்ள (அடிமை - சார்பு நாடுகளில்) தேசிய பூர்ஷ்வாக் களின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாத்திரம் பற்றிய லெனினுடைய நிர்ணயிப்பினை மிகைப்படுத்திக் கூறுகிறார்.  எப்படியிருப்பினும் லெனின் தேசிய பூர்ஷ்வா தலைமையுடன் விமர்சன ரீதியான ஆக்க ரீதியான ஒத்துழைப்பு மனப்பான்மையினை அந்த நாடுகளிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் மேற் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.  அதே பொழுதில் ராய் முற்றிலும் எதிர்மறையான- எதிர்ப்பு மனப்பான்மையினைக் கோரினார்.  அவரே தனது நினைவுக் குறிப்புகளில் கூறுவதைப் பாருங்கள்.

அவர்(லெனின்) ஏகாதிபத்தியம் காலனி நாடுகளை நிலப்பிரபுத்துவ, சமூகச் சூழ்நிலையில் அழுத்தி வைத்து முதலாளித்துவ வளர்ச்சியைத் தடுத்து, சுதேசி பூர்ஷ்வாக்களின் ஆசைத் திட்டங் களுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது என்று வாதம் செய்தார்.  வரலாற்று ரீதியாக, தேசிய விடுதலை இயக்கத்திற்கு பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியின் முக்கியத்துவமுண்டு... எனவே கம்யூனிஸ்டுகள் தேசிய பூர்ஷ்வாத் தலைமையின் கீழுள்ள காலனி விடுதலைப் போருக்கு- அன்ன வர்கள் புறநிலையில் புரட்சிகர சக்தி என்று கருதி உதவி புரியவேண்டும்...

...காந்தியின் பாத்திரம் குறித்து தீவிரமான வேற்றுமைகள் இருந்தது.  ஒரு வெகுஜன இயக்கத் திற்கு உத்வேகமூட்டி தலைமை தாங்கியவர் என்ற முறையில் (காந்தி) புரட்சியாளர் என்று லெனின் நம்பினார்.  சமய கலாச்சார மறுமலர்ச்சிவாதி என்ற முறையில் அவர் அரசியல் துறையில் புரட்சி யாளராகத் தோற்றமளித்த போதிலும் சமூக ரீதியாக நிச்சயமாயும் பிற்போக்கானவராகவே இருக்க வேண்டும் என்று வாதிட்டேன்.

வேற்றுமையின் முக்கிய அம்சம் ராய் சற்று கோணமான ரீதியில் விளக்கம் தந்த போதிலும்- தெட்டத் தெளிவாகத் தெரிந்ததே.

இந்தப் பிரச்சினை மீது வெளிச்சம் தரும் இன்னோர் ஆதாரமும் உள்ளது.  கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது காங்கிரசின் பிரதி நிதியாக பிரெஞ்சு நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஆல்பிரட் ரோஸமர் கலந்து கொண்டார்.  லெனின் நாட்களில் மாஸ்கோ 1920-21 என்ற மகுடத்தில் வந்த தமது நினைவுக் குறிப்புகளில் அவர் கூறியதாவது:

லெனின் மிகவும் பொறுமையாக ராய்க்கு விளக்கம் தந்தார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பல காலம் அல்லது சிலகாலம் சிறிய கட்சியாகத்தான் இருக்கும்.  கொஞ்சம் உறுப்பினர்களே இருப் பார்கள், பலவீனமான வசதிகள் தான் இருக்கும்.  தனது வேலைத் திட்டம் தனது செயல்கள் மூலம் கணிசமான விவசாயிகள் தொழிலாளர்களை அணுகும் ஆற்றல் பெற்றிருக்காது.  மறுபுறத்தில் தேசிய சுதந்திரக் கோரிக்கையின் அடிப்படையில் பெருவாரியான மக்களைத் திரட்டுவது சாத்திய மாகலாம் - அனுபவம் இது சரி என்பதை பெரியளவுக்கு எடுத்துக் காட்டி விட்டது.  இந்தப் போராட்டத்தின் மூலம் தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது ஸ்தாபனத்தை உருவாக்கி வளர்த்து, பின்னர் தேசிய கோரிக்கைகளை திருப்திகர

மாகப் பெற்ற பிறகு இந்திய பூர்ஷ்வாக்களைத் தாக்குவதற்குரிய ஆற்றலைப் பெறமுடியும் (இந்தி யாவில் கம்யூனிசம் என்ற நூலிலிருந்து மேற்கோள் ஓவர்ஸ்ட்ரீட் & விஸ்ட் மில்லர்.).

இந்தக் கருத்துக்களையும் எழுத்துக்கெழுத்து எடுத்துக் கொள்ள வேண்டுவதில்லை.  ஆனால் இவை வழங்கும் விஷயம் ஒன்றே.

இதை எளிதாகச் சொல்லப்போனால் - இந்திய கம்யூனிஸ்டுகள் காந்தியையும் அவர் தலைமையில் நடந்த வெகுஜனப் போராட்டங்களையும் ஆதரிக்க வேண்டும்.  அவற்றோடு ஒத்துழைக்க வேண்டும்.  அதே பொழுதில் அந்த இயக்கம் மேலும் தீவிர மானதாகவும் போர்க்குணம் படைத்ததாயும் இருக்கத் தகுந்த நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பதே லெனின் விருப்பம்.

தேசிய காலனிப் பிரச்சினைகள் பற்றிய கமிஷனில் நடைபெற்ற விவாதத்தினடிப்படையில் முந்திய வாசகங்களை மாற்றுவதற்கு லெனின் ஒப்புக்கொண்டார் என்பது உண்மை.  இதை மறுக்க முடியாது.  இந்த வாசக மாற்றம் வருமாறு: “எல்லாக் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த (சார்பு-ஆர்) நாடுகளின் பூர்ஷ்வா ஜனநாயக விடுதலைப் போராட்டங்களை ஆதரிக்க வேண்டும்.  அதோடு பூர்ஷ்வா ஜனநாயக விடுதலை இயக்கம் என்ற வாசகத்திற்குப் பதில் தேசிய புரட்சி இயக்கம் என்பதைச் சேர்க்க வேண்டும் (கீழ்த்திசையில் தேசிய விடுதலை இயக்கம் பக் 265-66).

அந்த நாட்களில் லெனின் மிகவும் அடக்கத் துடன் நடந்து வந்தார்.  விவாதிக்கப்படும் விஷயத்தில் தன்னைவிட அதிகமாக ஞானமுடையவர்கள் என்று தாம் கருதியவர்கள் கருத்துக்கு மிகவும் மதிப்புக் கொடுத்து வந்தார்.  கமிஷனில் ராய் மாத்திரமல்ல ‘இடதுசாரி’.  அதே கருத்துடைய வேறு சிலரும் இருந்தனர்.  லெனின் தனது கருத்து களை மாற்றிக்கொள்ளும்படி ராய் வற்புறுத்தி யதாகச் சொல்லப்படும் கதையின் யதார்த்தம் இதுவே.

இதில் விசேஷம் என்னவென்றால் ராயின் “குறிப்புகளில்” இது இரண்டாந்தடவையாகக் குறிப்பிடப்படுகிறது.  ராயின் நிலைமைகள் சில வற்றை ஏற்றுக்கொண்ட பிறகும்கூட லெனின் “நாம் புதிய விஷயங்களைத் துருவி ஆராய் கிறோம், நடைமுறை அனுபவம் கிடைக்கும்வரை இவை பற்றிய இறுதி முடிவுகளை ஒத்திவைக்க வேண்டும்” என்று சுட்டிக் காட்டியதாகக் கூறப் படுகிறது.

தேசியத்தை ஆபத்தான ஒன்றாகச் சித்தரிக்க வேண்டாம் என்று லெனின் அடிக்கடி எச்சரிக்கை செய்து வந்ததாக ராயும் கூறுகிறார்.

எனவே இந்தத் தகவல்களின் மூலஸ்தானம் எதுவாக இருந்தபோதிலும் எல்லா அத்தாட்சி களும் அதே முடிவுக்கு இட்டுச் செல்கின்றன - அதாவது - காலனி நாடுகளிலுள்ள கம்யூனிஸ்டுகள் ஒரு பலம் பொருந்திய புரட்சிகர சக்தியாக ஓங்கி வளரவேண்டுமானால் பூர்ஷ்வா தேசிய விடுதலை இயக்கங்களில் கலந்து கொள்ளவேண்டும் என் பதை லெனின் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.  அப்படிக் கலந்துகொள்ளாதிருப்பது - அவற்றின் தலைவர்களை “பிற்போக்காளர்கள்” என்று கண்டனம் முழக்கிவிட்டு அவ்வியக்கங்களுக்கு எதிராக நிற்பது, “உண்மையான” தேசியப் புரட்சி இயக்கம் என்ற பேரில் “தனியாக” ஒரு மாற்று இயக்கத்தினை உருவாக்க முயல்வது இவை போன்ற செயல்களால் புரட்சி வராது.  மாறாக உயர்ந்துவரும் தேசிய விடுதலை இயக்க வெள்ள ஓட்டத்திலிருந்து கம்யூனிஸ்டுகள் தனிமைப்படுத்தப் படுவார்கள், வலுவற்றவர்களாக ஆக்கப் படுவார்கள்.

காலனி விடுதலை இயக்கத்தின் மிகவும் சிக்கலான நுட்பமாக உள்ள பிரச்சினைகளையும் கூட பிடிப்புடன் உணர்ந்து செயல்படும் அதிசய மான ஆற்றலை லெனின் பெற்றிருந்தார் என் பதைப் பிரகடனம் செய்யும் ஒரு சம்பவம் உள்ளது.

1920இல் இந்திய புரட்சியாளர் குழு ஒன்று லெனினுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியது.  லெனின் மே 20ந் தேதி அனுப்பிய பதிலில் பின் வருமாறு கூறினார்:

தொழிலாளர் விவசாயிகள் குடியரசினால் பிரகடனம் செய்யப்பெற்ற - விதேசி சுதேசி முதலாளி களின் சுரண்டலிலிருந்து ஒடுக்கப்பட்ட நாடுகளை மீட்பதற்காக சுய நிர்ணய உரிமை விடுதலை என்ற கோட்பாடுகள் தமது சுதந்திரத்திற்காக வீரமாகப் போராடிவரும் முற்போக்கு இந்தியர்களிடை உடனடியான பிரதிபலிப்பினை ஏற்படுத்தியிருப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.  ரஷ்யாவிலுள்ள உழைக்கும் மக்கள் இந்திய தொழிலாளி விவசாயி களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியை குன்றாத அக்கறையுடன் கவனித்து வருகிறார்கள்.  உழைக்கும் மக்களின் ஸ்தாபனச் சிறப்பும், கட்டுப் பாடும், அவர்களது விடாமுயற்சியும் உலகத் தொழிலாளருடன் அவர்கள் காட்டிவரும் ஒருமைப் பாடும் அவர்களது இறுதி வெற்றிக்கு உறுதி செய் வதாகும்.  முஸ்லிம்- முஸ்லிமல்லாதார் நெருங்கி இணைந்து செயல்படுவதை வரவேற்கிறோம்.  இத்தகைய இணைப்பு கீழ்த்திசையிலுள்ள உழைப் பாளி மக்கள் அனைவரிடமும் விரிவடைதல் வேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்புகிறோம்.  இந்திய - சீன கொரியா - ஜப்பான் பாரசீக துருக்கித் தொழிலாளர்களும் விவசாயிகளும் கரம் கோத்து - விடுதலை என்ற பொது லட்சியத்தை நோக்கி சேர்ந்து அணிவகுத்துச் சென்றால் மட்டுமே - சுரண்டும் சக்திகளை எதிர்த்து நிர்ணயமான வெற்றியை உறுதிப்படுத்த முடியும். சுதந்திர ஆசியா நீடுழி வாழ்க! (‘கீழ்த்திசையில் தேசிய விடுதலை இயக்கம்’ பக். 248.)

இந்தப் பதிலுரை முழுவதும் ஒடுக்கப்பட்ட நாடுகளின் விடுதலை பற்றிய பிரச்சினையில் லெனின் காட்டும் உணர்ச்சி, தெளிவு, கண்ணோட்டம், கொள்கை இவற்றை எடுத்துக் காட்டுகிறது- அதே பொழுதில் இந்தப் பதிலுரையிலுள்ள ஒரு குறிப்பிட்ட முக்கியமான அம்சத்தினைக் கவனத்திற்குக் கொண்டுவரவேண்டும்.

லெனின் தமது பதிலுரையில் வரவேற்றுள்ள “1920ஆம் ஆண்டின் முஸ்லிம் - முஸ்லிமல்லாதார் நெருங்கி இணைந்து” செயல்படும் சம்பவம் எது? கிலபாத் பிரச்சினையின் அடிப்படையில் இந்தி யாவில் ஏற்பட்ட இந்து - முஸ்லிம் ஒற்றுமை யினையே அவர் குறிப்பிடுகிறார் என்பதில் சந்தேக மில்லை. 

இந்திய சுதந்திர இயக்கத்தின் மிகவும் சிக்கலான கட்டத்தில் அந்த ஒற்றுமையின் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய விடுதலைப் பாத்திரத்தை லெனினது கழுகுக் கண்கள் குறிப்பாகக் கவனிக்கத் தவற வில்லை. ராயைப் பொறுத்தவரை கிலாபத் ஐக்கியம் வெறும் சமய சம்பந்தமான மறுமலர்ச்சி, பிற்போக்கானது - போலும்.

இந்திய விடுதலை இயக்கம் குறித்து லெனினுக் கிருந்த ஞானப் பிடிப்பு இத்தகையது, இந்தியாவின் உழைக்கும் மக்களின் இறுதி விமோசனத்திற்குரிய முன்னேற்றப்படி என்ற முறையில் அதன் வெற்றிக்கு இத்தகைய மதிப்பிட முடியாத வழிகாட்டுதலை லெனின் அருளினார்.

தமிழில்: கே.ராமநாதன்