ராஜவை விரட்டி அடித்த பிறகும் ஸ்பெயின் தேசத்தில் முதலாளிகளுடைய ஆட்சியே ‘குடி அரசு’ ஆட்சி என்னும் போர்வையைப் போற்றிக் கொண்டு அதாவது இந்தியாவில் எப்படி சுயராஜியம்-தேசீயம் என்னும் போர்வையை போத்திக் கொண்டு முதலாளிகளுடைய ஆட்சிக்கு காங்கிரசின் மூலம் சிறிது காலமாய் அஸ்திவாரம் போடப்பட்டு வருகின்றதோ அதுபோல் நடந்து வந்தது. இன்றும் அப்படியே நடந்து வருகிறது என்றாலும் இப்போது அங்கு இந்த முதலாளிக் குடி அரசு ஆட்சியையும் அழிக்க ஒரு கூட்டம் துணிந்து வெளியில் கிளம்பி வந்து, தேசீயத்தையும் ஒழித்து, போலிக் குடி அரசையும் ஒழிக்கப் புரட்சி செய்து பொது உடமை ஆட்சி ஆக்க முயற்சித்து ஒரு அளவுக்கு வெற்றியும் பெற்று வருகின்றதாக தெரிய வருகிறது.
ஸ்பெயினைச் சேர்ந்த கட்டலோனியா மாகாணத்தில் கிண்டிகலிஸ்ட் (அனார்க் கிஸ்ட்) அதாவது சர்க்கார் ஆட்சி என்பதே இல்லாமல் எல்லாம் தன்னரசு நாடாகவே இருக்க வேண்டும் என்கின்ற ஒரு வித கொள்கை மீது ஒரு பெரிய இயக்கம் நடந்து வருகின்றது. அந்த மாகாணத்தில் இந்த இயக்க மெம்பர்கள் தான் மெஜாரிட்டியாய் இருக்கிறார்கள். இவர்கள் ஸ்பெயின் தேசீய இயக்கத்திற்கும் “குடி அரசு” என்கின்ற இயக்கத்திற்கும் எதிராய் இருப்பவர்கள். ஆனாலும் ஒரு அளவில் பொது உடமை ஆட்சிக்கு சிறிது அனுதாபம் காட்டுகின்றவர்களாய் இருக்கிறார்கள். இந்த பொது உடமைக் கொள்கையிலும் ஸ்பெயின் தேச முழுவதிலுமே இரண்டு கட்சியார்கள் உண்டு. அதாவது ஒரு கட்சியார் இன்று ரஷியாவில் நடக்கும் ஸ்டாலினுடைய பொது உடமைக் கொள்கையை ஒப்புக் கொள்ளுகின்றவர்கள்.
மற்றொரு கட்சியார் ட்ராட்ஸ்க்கியினுடைய (இவர் முன் லெனினுடன் வேலை செய்து வந்தவர். இப்போது ஸ்டாலினால் நாடு கடத்தப்பட்டு வெளி நாட்டில் இருப்பவர்) பொது உடமைக் கொள்கையை ஒப்புக் கொள்ளுகின்றவர்கள். இவ்விருவருடைய பொது உடமைக் கொள்கைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர வாசகர்கள் ஆசைப்படக் கூடும். அவ்வளவு விபரமாய் விளக்க நமக்கும் தெரியாது. ஆனாலும் தெரிந்தவரை சிறிது விளக்குவோம். என்ன வித்தியாசமென்றால் இப்போது ரஷ்யாவில் நடைபெறும் ஸ்டாலினின் பொது உடமைக் கொள்கையானது ரஷ்யா தேசத்தை மாத்திரம் பொருத்த பொது உடமை என்றும், அதில் தேசீய வாடை வீசுகிறதென்றும் ட்ராட்ஸ்க்கியால் குற்றம் சொல்லப்படுகின்றது. ட்ராட்ஸ்க்கியின் பொது உடமைக் கொள்கையானது உலகம் முழுவதும் பொது உடமைக் கொள்கை ஏக காலத்தில் ஆக வேண்டும் என்றும், இதில் ரஷியாவென்றும், ஜர்மனி என்றும், இந்தியா என்றும் தேசீய உணர்ச்சியே இல்லாமல் எங்கும் பொதுவான புரட்சி நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டது என்று சொல்லப் படுகின்றது. இதை ஸ்டாலின் கட்சியார் குற்றம் சொல்லுகின்றார்கள். காரணம் என்னவென்றால் ஒவ்வொரு தேசமாகத்தான் பொது உடைமை ஆட்சியாக ஆக்கப்படக்கூடும் என்றும், அப்படிக்கில்லாவிட்டால் உலக முழுவதும் முதலாளி தொழிலாளி, புரட்சி ஒரே சமயத்தில் ஒன்றாய் சாதிக்க முடியாதென்றும், தோல்வி ஏற்பட்டால் எல்லா தேசத்தையும் அந்த தோல்வி பாதிக்குமென்றும், அந்தந்த தேச மக்களுக்கு அந்தந்த தேசத்திய புரட்சியை விட்டு விட வேண்டும் என்றும் சொல்லுவதாகச் சொல்லுகின்றார்கள்.இதற்கு டிராட்ஸ்கி சொல்லும் பதில் என்னவென்றால் உலகப் பரப்பில் ஒரு தேசம் மாத்திரம் பொது உடைமை ஆகி விட்டால் மற்ற தேச முதலாளிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து எதிர்த்துப் போர் தொடங்கி அதைக் கெடுத்து விடுவார்கள் என்றும் தனித் தேசத்திய பொது உடைமை என்றைக்கு இருந்தாலும் ஆற்றோரத்திய வீடு போல் ஒரு நாளைக்கு வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போகப்பட்டு விடும் என்றும் சொல்லுவதாகச் சொல்லுகிறார்கள்.
இந்தப்படி இன்னும் அனேக வித ஆட்சேபணை சமாதானங்கள் உண்டு. இந்த இரண்டு கட்சியும் ஐரோப்பிய தேச முழுவதிலுமுள்ள முக்கிய நாடுகளிலெல்லாம் இருந்து வருகின்றது. இருகட்சிக்கும் புஸ்தகங்கள் துண்டு பிரசுரங்கள் உண்டு. ஆனால் ஸ்பெயினில் ஸ்ட்ராட்ஸ்க்கி கட்சியே பலம் பெற்று இருப்பதாய் தெரிய வருகிறது.
நிற்க ஸ்பெயினில் தற்சமயம் இருந்து வரும் குடி அரசுக்கு சற்று பலம் குறைவு என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் அங்கு தற்சமயம் உள்ள குடிஅரசானது முன்குறிப்பிட்டதுபோல் ஒரு வகை முதலாளி குடிஅரசு ஆகத்தான் இருக்கிறது. ஆதலால் இதற்கு கிண்டிகலிஸ்ட் கட்சியாரும் இரண்டு வகை கம்யூனிஸ்ட் கட்சியாரும் பொது தொழிலாளிகளும் விரோதிகளாகவே இருக்கிறார்கள். குடிஅரசு கவர்ன்மெண்டானது நாஸ்திக கொள்கையாய் இருப்பதால் பாதிரிகளும் ஆஸ்திக முதலாளிமாரில் சிலரும் மற்றும் பழய ராஜாவுக்கு சேர்ந்தவர்களும் விரோதிகளாய் இருக்கிறார்கள். ஆனால் இந்த குடி அரசு சர்க்காருக்கு இப்போது உதவியாய் இருப்பவர்கள் எல்லாம் நமது நாட்டு (இந்திய) காங்கிரசுக்கு உதவி இருப்பது போல் சில முதலாளிகளும் (உத்தியோகத்தை எதிர்பார்த்த) படித்த கூட்டத்தாரும் அவர்களது கூலிகளான சில தேசீயவாதிகள் என்று சொல்லிக் கொள்ளப்படுபவர்களுமே ஆவார்கள். இவர்களுக்கு மேல் கண்ட தொழிலாளர் கூட்டத்தாரிடையும் பொது உடமை கூட்டத்தாரிடையும், தன்னரசு கூட்டத்தாரிடையும் மதிப்பு கிடையாது. இந்த மூன்று கூட்டத்தாரும் எக்காரணம் பற்றியாவது ஒன்று சேர்ந்தால் அந்த நிமிஷமே ஸ்பெயின் முழுவதுமே ஒரு வினாடியில் பொது உடமை நாடு ஆகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
இன்றைய ஸ்பெயின் குடி அரசை நிர்வாக விஷயத்தில் அதிகமாக குற்றம் சொல்லி எதிர் பிரசாரம் செய்பவர்களும், துண்டு பிரசுரம் வழங்குபவர்களும் பெரிதும் பாதிரிக் கூட்டங்களே ஆவார்கள். ஆதலால் ஸ்பெயின் குடி அரசானது சிற்சில விஷயங்களிலாவது பாதிரிகளுக்கு நல்ல பிள்ளையாய் நடக்க வேண்டி இருக்கின்றது. அதுபோலவே பொது உடமைக்காரரின் தயவை பெற சில விஷயங்களில் அவர்களுக்கு அனுகூலமாகவும் நடக்க வேண்டி இருக்கின்றது ஆகவே ஸ்பெயின் குடி அரசின் கொள்கைக்கு ஏதாவது ஒரு உதாரணம் காட்ட வேண்டுமானால் நமது சென்னை அரசாங்க மந்திரி சபையையே தற்சொரூபமான உதாரணமாய்க் காட்டலாம்.
சென்ற 5, 6 வருஷ காலமாய் சென்னை மந்திரி சபைகளுக்கு எப்படி யாதொரு வித கொள்கையுமில்லாமல் எப்படியாவது உத்தியோகம் நிலைத்தால் போதும் என்கின்ற ஒரே “பலமான” கொள்கை மீது மந்திரிகள் நிர்வாகம் நடை பெற்று வந்தனவோ அது போலவே தான் ஸ்பெயின் குடி அரசு அரசாங்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட கொள்கை இல்லாமல் நடந்து வருகின்றது. மக்களுக்கு உண்மை உணர்வு வந்து விட்டால் இம்மாதிரி கொள்கையற்ற ஆட்சி ஒழிந்து தான் தீரும். ஆதலால் தான் இன்று ஸ்பெயின் தேசத்தில் ஏற்பட்ட சில மக்களின் உண்மை உணர்வானது இன்று அந்த தேசத்தில் இரண்டொரு நகரங்களில் பொது உடமை ஆட்சி நிருவப்பட்டு விட்டதாக தினசரிகளில் காணப்படுகின்றது. (இதன் முடிவு எப்படி இருந்தாலும்) என்றைக்கிருந்தாலும் ஒரு நாளைக்கு, ஏன், வெகு சீக்கிரத்தில் ஸ்பெயின் தேச முழுவதுமே பொது உடமை தேசமாக ஆகித்தான் தீரும். ஜர்மனியும் இப்போது தனது முதலாளிக் கட்டுகளை அவிழ்த்துக் கொண்டு வெகு சீக்கிரத்தில் பொது உடைமை ஆட்சிக்கு ஓட்டம் பிடிக்கும் என்பதில் நமக்கு சந்தேகமில்லை.
இந்தியாவிலோ கைராட்டினமும், கோவில் பிரவேசமும் தான் தாண்டவமாடுகின்றது. இதைத்தான் தேசியமாகவும், சுயராஜ்யமாகவும், குடி அரசாகவும், புரட்சியாகவும் பாமர மக்கள் கருதும்படி காந்தியார் மூலம் பிரசாரம் நடைபெற மில் முதலாளிகளும், கோடீஸ்வரர்களும் பண உதவி செய்து வருகிறார்கள். இதற்கே அடிபிடி சண்டையும் சனாதனதர்மம், வருணாச்சிரம தர்மம் சண்டைகளும் எதிர்ப்புகளும் நடப்பதுடன் இதற்கு வேதத்தில் சாஸ்திரத்தில் ஆதாரமிருக்கின்றதா இல்லையா என்கின்ற விவகார சபைகளும் நடந்த வண்ணமாயிருக்கின்றன.
சட்டசபை வீரர்களின் தீவிரச் செயல்களோ “பிச்சை கொடுப்பவனை தடுக்கக்கூடாது” என்று சொல்லத் தக்க விஷயங்களையே தீர்மானங்களாக கொண்டு போவதாய் இருக்கின்றன.
அதாவது யாராவது, எவரையாவது கோவிலுக்குப் போக அனுமதி கொடுத்தால் அதை சர்க்கார் தடுக்கப்படாது என்பதாகும்.
இதற்கே பொது மக்களை இருகூட்டமாய் கிளப்பி விட்டு இந்த சட்டத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டுமென்று ஒரு கூட்டமும், அனுமதி கொடுக்கக் கூடாதென்று ஒரு கூட்டமும், காதடைபடும்படி கூப்பாடு போடச் செய்யப்பட்டு வருகிறது. இரண்டுக்கும் தேசீயவாதிகளும் சுயராஜ்யவாதிகளுமே காரணமாகும் (தப்பித் தவரி வைசிராய் பிரபு இந்த தீர்மானம் சட்ட சபைக்கு வருவதற்கு உத்திரவு கொடுக்க மறுத்து விட்டால் அந்தச் சாக்கிலேயே யெல்லா பொருப்புகளையும் சர்க்கார் தலையில் போட்டு விட்டு தாங்கள் பெரிய தீண்டாமை விலக்கு வீரர்களாய் விளங்கி விடலாம் என்கின்ற சூட்சியே இதில் விளங்குகின்றது) மற்ற சோம்பேரிகள் விளம்பரக்காரர்கள் இதில் எதிலாவது ஒன்றில் சேர்ந்து தங்கள் பெயர் விளம்பரமானால் போதும் என்று கருதிக் கொண்டிருப்பதே பெரிய தேச சேவையாய் இருந்து வரு கின்றது. எப்படியானாலும் இதன் கடைசி முடிவானது பணக்காரனும், படித்த சோம்பேரிக் கூட்டமான உத்தியோகஸ்தனும், இவர்களுக்கு நடுத் தூண்களாயிருக்கும் மதமும், கோவிலும், சாஸ்திரங்களும் என்றும் சிரஞ்சீவியாய் இருக்கப் போகிறது. “தேச பக்தர்கள், தேசியவாதிகள்” முதலியவர்கள் கதி, ‘ வெரும் நாய் சந்தைக்குப் போய் வெள்ளிக்கோலில் அடிபட்டது’ என்பது போல் நாளைக்கு ஏதாவது இந்தப் பணக்காரனையும், உத்தியோகஸ் தனையும் திட்டி காலம் கடத்துவதற்கு ஏதாவது ஒரு இயக்கமோ வழியோ கிடைக்காதா என்று தேட வேண்டியதைத் தவிர வேறு ஒரு வேலையும் கிடைக்கப் போவதில்லை. இத்தனை சந்தடியில் ‘கல்யாண சந்தடியில் தாலி கட்ட மறந்தது’ போல் பிரிட்டிஷ் முதலாளிகள் சங்கதி மறந்து போய் அவர்கள் என்றும் பதினாராக வாழப் போகின்றார்கள் என்பதில் யாரும் கடுகளவு சந்தேகமும் படவேண்டியதில்லை.
(குடி அரசு - தலையங்கம் - 15.01.1933)