மிசோ நாட்டார் இலக்கியத்தின் தனித் தன்மைகள், சிறப்பியல்புகள் போன்றவற்றை முதன்மைப்படுத்திக் காட்டுவது என்பதே இந்த முன்னுரையின் பிரதம இலக்காகும். எழுத்திலக் கியத்தைச் சேர்ந்த வகைகளின் எடுத்துக்காட்டுகள்- குறிப்பாகப் பாடல்களும் கவிதைகளும் இத் தொகுப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அவை தம்மளவில் பேசும் இயல்பின. நாட்டார் இலக்கியம் என்பது வெவ்வேறு வகைப்பட்ட நாட்டார் கதையாடல்களையும், மரபான பழ மொழிகள், கூற்றுகள், பாடல்கள், கதைகள், சிறுவர் பாடல்கள், புதிர்கள், யுத்தப் பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள் போன்ற பிறவற்றையும் உள்ளடக்கியது. மிசோக்கள் 1994-ஆம் ஆண்டில் தங்களுடைய எழுத்தறிவு மரபின் நூற்றாண்டினைக் கொண்டாடினார்கள். ஆயினும் மேற்குறிப்பிட்ட நாட்டார் இலக்கிய வடிவங்கள் அனைத்தும் முறை யாகச் சேகரித்துத் தொகுத்து ஆவணப்படுத்தப் படவில்லை. இந்நிலையில், மிசோ நாட்டார் இலக்கியத்தின் தனித்தன்மைகளையும் சிறப்பியல்பு களையும் பிரதிபலிக்கும் வகையில் வெவ்வேறு வகைப்பட்ட மிசோ பாடல்கள், கதைகள் போன்ற வற்றைச் சேகரித்து வெளிப்படுத்தும் ஒரு முயற்சி தற்போது எடுக்கப்பட்டுள்ளது.

thanajeyan 420மிசோ மக்கள், இசை பாடும் ஆதிவாசிச் சமூகத்தினர் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும். நாட்டில் ஏனைய இனக்குழுச் சமூகங்களின் இசை மரபுகளைப் போலன்றி, மிசோ மக்களின் இசை மரபு என்பது பல்வேறு வகைகளில் வளர்த்தெடுக்கப்பட்ட ஒன்றாகும். மிசோ வரலாற்றியலறிஞரான கே.சாவ்லா (K.Zawla) “எழுத்தறிவுக்கு முந்தைய நிலையிலான அனைத்து உலக மக்களிடையே மிசோக்கள்தாம் மிகச் சிறந்த பாடல் வடிவங்கள் என்னும் செல் வத்தைப் பெற்றுத் திகழ்பவர்கள் ஆவர்” என்று கூறியுள்ளார். “ஏராளமான பாடல்களைக் கொண் டிருப்பதை ஓர் அளவுகோலாகக் கொண்டு மக்களின் நாகரிகத்தை மதிப்பிடலாம் என்றால், எந்தவித மான ஐயத் திரிபுக்கும் அப்பாற்பட்ட நிலையில் மிசோக்களே முதலிடத்தைப் பெறுவார்கள்” என்று மற்றொரு அறிஞர் குறிப்பிட்டதும் இங்கு நினைவுகூரத்தக்கது. ஏனைய நாட்டார் இலக்கியத் தினைப் போலன்றி, பாடலாசிரியர் அல்லது பாடலைக் கட்டியவர் எவரோ அவருடைய பெயரையும் சேர்த்து மிசோ பாடலோடு அடை யாளப்படுத்தப்படுவது வழக்கம்.

பொதுவாக நாட்டார் இலக்கியம் பற்றி மேற்கொள்ளப்படும் ஆய்வில், பாடலைக் கட்டியவர் இன்னார்தான் என்று ஒருவரை ஆதாரத்துடன் உறுதிப்படுத்திப் பேசுவது வழக்கம் இல்லை. நாட்டார் பாடல் கட்டும் மரபின் வெளிப்பாடு என்றே நாட்டார் பாடல்களை அனுமானிப்பர். ஆனால், எவர் ஒருவர் அப்பாடல்களைப் பாடுகிறாரோ அவருடைய பாணியிலிருந்து அக்குறிப்பிட்ட பாடகர் புறக் கணிக்கப்படுவதில்லை. எனினும், மிசோ நாட்டார் மரபில் முந்தைய சந்ததியினர் தத்தம் ஆதாரங் களை வாய்மொழியாகவே கையளித்து வந்து உள்ளனர். இதற்கு உதாரணமாக மிசோ மக்கள் இடையே நன்கு அறிமுகமான வாய்மொழிப் பாடகியான முவாக்கி (HUmuaki) என்பவரைக் குறிப்பிடலாம்.

முவாக்கி வெவ்வேறு சந்தர்ப்பங்களுக்குரிய பலவகைப் பாடல்களைப் புனைந்து பாடும் ஆற்றலுடையவள். அவளுடைய கிராமத்தைச் சேர்ந்தவர்கள், எதிர்வரும் இளம் தலைமுறையினர் புதிய பாடல்களையும் புனைந்து பாடு வதற்கு வாய்ப்பளிக்காமல் இவளே அனைத்துப் பாடல்களையும் புனைந்து பாடிவிடுவாள் போலிருக்கிறதே என்று அச்சமுற்றனர். எனவே, அவளை உயிரோடு புதைத்துவிடுவது என்று முடி வெடுத்து அவளுக்காக ஒரு சமாதிக்குழியை வெட்டினர். அதற்குள் அவளைக் கிடத்திக் குழியை மண்ணைப் போட்டு மூடத் தொடங்கினர். அப் போது, உரத்த குரலில் சமாதிப் பாடலொன்றை (Dirge) வேண்டுகோளோடு பாடினாள்:

இளைய செல்வங்களே என்னூர் இளைய கிராமத்தாரே

எப்போதும் போல் முறையாக

என்னை இங்கே புதையுங்கள்

முவாக்கி மட்டுமல்லாமல், வேறு பல பெண் கவிஞர்களும் அவரைப் போலவே ஏராளமான பாடல்களைப் புனைந்துள்ளனர். லியான்ச்சியாரி, சாய்குட்டி, தர்ப்பாங்கி, லால்தேரி, டார்லெங்லேகி, தார்மணி முதலிய பெண் பாடகர்கள் என்றும் நினைவு கூரத்தக்க ஏராளமான நாட்டார் பாடல் களைப் பாடினர். அதே சமயத்தில் இக்கவிஞர் களின் பெயர்களில் உலவும் பாடல்கள் அனைத்தும் அவர்களே புனைந்தவை என்று சொல்ல இய லாது. வேறு கவிஞர்கள், மேற்கண்ட கவிஞர் களின் பெயர்களில் அவர்தம் பாணியிலேயே புனைந்து பாடிய பாடல்களும், அந்தந்தப் பாட கரின் பெயரோடு இணைத்துச் சொல்லப்பட்டன. இதனால், முன்னோடிப் பாடகர்களின் பாடல் களோடு இணைந்து வழங்கும் பாடல்களுடைய ஆசிரியர்களின் பெயர்கள் வெளியில் தெரியா மலேயே போய்விட்டன. அதனால், அப்பாடல் கள் யாவும் நாட்டார் பாடல்கள் என்றே கருதப் படலாயின.

லியான்ச்சியாரி (1750-1810) என்பவர், தங்க்ளு வாஹ் குலத்தின் தலைவரான வான்ஹ்னுயித் தங்கா வின் மகளாவார். அவர் மிசோரம் மாநிலத்தின் கீழ்த்திசைப் பகுதியைச் சேர்ந்த துங்கட் லாங் என்ற மிகப்பெரும் கிராமத்தை நிர்வகித்து வந்தவர். அங்கு ஏழாயிரம் குடும்பங்கள் இருந்தன. அந்த ஊரின் தலைவருடைய அழகான புதல்வி என்ற முறையில், அங்கிருந்த இளைஞர்கள் அனைவரும் லியான்ச்சியாரி மேல் காதல் கொண்டனர். ஆனால், இளமையும் ஆண்மையும் ததும்பும் அந்தக் காளை களில் இருந்து தனக்குப் பொருத்தமான ஓர் இணையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந் நிலையில், சாங்ஃபியாங்கா என்ற ஒரு சாதாரண இளைஞனின் மேல் அவளுடைய கவனம் திரும்பியது. ஆனால், அந்த இளைஞனுக்கோ அச்சம். ஓர் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்தால், தான் கொல்லப்பட்டு விடுவோமோ என்று தொடக்கத்தில் தயங்கிப் பின்வாங்கினான். ஆனால், குலத்தலைவனின் மகள் அவனுடைய அச்சத்தைப் போக்கித் தன்னுடைய காதலை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தினாள். இறுதி யில், லியான்ச்சியாரி, அவனோடு மனம்விட்டுப் பேசினாள். அதனால் சாங்ஃபியாங்கின் உறுதி யான மனம் இளகியது. இருவரும் பரஸ்பரம் காதலில் ஈடுபட்டனர். தங்களுடைய உண்மை யான உணர்வுகளையும் புலன் இன்ப ஈடுபாட்டை யும் மறைக்க முடியாத சந்தர்ப்பமும் வந்தது. அவளுடைய தந்தையும் குலத் தலைவனுமான வான்ஹ்னுய்த்தங்காவின் குவாங்சாவி திருவிழா கொண்டாட்டம் நடைபெற்ற இரவுப் பொழுது அது. வீட்டிற்குள்ளே சுற்றத்தாரும் நண்பர்களும் ஆட்டம் பாட்டு என்று கொண்டாடிக் கொண் டிருந்தார்கள். இருள்படர்ந்த வீட்டு வராந்தாவில் குவிக்கப்பட்டிருந்த விறகுக் குவியலின் மேல் இருவரும் காதல் இன்பத்தில் திளைத்திருந்தார்கள். அப்போது, அங்கு வந்த லியான்ச்சியாரின் தாய், விறகு அடுக்கிலிருந்து விறகுகளை எடுக்கையில், அவர்கள் இருவரும் காதலில் திளைத்திருந்ததைப் பார்த்தாள். அந்த இரவு நேர சிறப்பு விழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும் அந்தச் செய்தி பரவி விடவே, ஒருவருக்கொருவர் அந்தக் காதலர்களைப் பற்றியே பேசிக் கொண்டார்கள். அதன் பிறகு லியான்ச்சியாரி தன்னுடைய வருத்தத்தைப் பின்வரும் பாடல் வரிகளில் புலப் படுத்தியிருந்தாள்:

உலகம் போற்றும் என் தந்தையின்

புகழெல்லாம் மாசுபடிந்து போக

எல்லைமீறிச் சென்று இன்பம் அனுபவிக்கும் அளவுக்கு

எத்துணைப் பழிகாரி ஆகிவிட்டேன் நான்!

பின்னர், திருமணத் தரகனின் சுயநலம், சூழ்ச்சி ஆகியவற்றால், தன்னுடைய காதலியும் எதிர்கால மனைவியுமான லியான்ச்சியாரிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் சாங்ஃபியாங்கா அந்த ஊரைவிட்டு ரகசியமாக வெளியேறி, மற் றொரு ஊரில் சென்று குடியேறினான். அதனை அறிந்த லியான்ச்சியாரி வேதனை அடைந்தாள்:

உன் ரகசிய வெளியேற்றம் பற்றி

நீ என்னிடம் சொல்லவில்லை

எனைப்பிரிந்து செல்ல ஒரு போதும்

உனைவிட மாட்டேன் என் முதற்பிரிய காதலனே

சாங்ஃபியாங்கா அவளைவிட்டு நீங்கி வேறு ஊருக்குப் போய் விட்டாலும் அவன் குடியிருந்த வீட்டிற்கும் அதனைச் சூழ்ந்த இடங்களுக்கும் அவள் அடிக்கடிப் போய் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.

நீ விட்டுப் பிரிந்த அந்த இனிய இருப்பிடம்-

அங்கு நான் மீண்டும் வந்தேன்.

தரையில் கிடக்கும் இறகுகளைப் போல

எவரும் அந்த இடத்தைப் பராமரிக்கவில்லை.

அவர்கள் இருவரும் முன்னர் இணைந்து சென்றே காட்டில் விறகு சேகரிப்பதை வழக்க மாக்கிக் கொண்டிருந்தனர். அந்தத் தருணங்களை நினைத்துப் பார்த்து லியான்ச்சியாரி உரக்கப் பாடினாள்:

தனிமை சூழ நான் மட்டுமே கானகம் போகிறேன்

உனைத் தழுவிய நினைவுகள் என்மேல் பொழிகின்றன

மரம் உதிர்க்கும் இலைகளைப் போல

தன்னுடைய காதலனைப் பற்றியே பேசுவன வாக அமைந்த இத்தகைய ஏராளமான பாடல் களை லியான்ச்சியாரி புனைந்து பாடினாள். லியான்ச்சியாரிக்குப் பின்னர் வந்த கவிஞர்கள் சிலர், அவளுடைய பாடல்களைப் போன்ற பாடல் களையே புனைந்தனர். அவையாவும் லியான்ச்சி யாரியின் கவிதைகள்தாம் என்று கருதப்பட்டன.

முவாக்கி (Hmuaki) லியான்ச்சியாரி மற்றும் பல பெண் பாடகர்கள் தவிர, ஆண் பாடகர்கள் சிலரும் காணப்படுகின்றனர் அல்லது அவர்தம் பெயர் இசைலயங்களோடு அல்லது பாடல் களோடு இணைத்துச் சொல்லப்படுகின்றன. மிசோ இசைப் பாரம்பரியம் என்பது, மங்சேலா, சக்கவ்லா, தார்ச்சுமா, லால்கத்லகா, லால்ச் சிங்பா, லாலா வித்தாங்பா முதலிய பல இசைப் பாடகர்களின் பெயர்களை நினைவு கூர்கிறது. இவர்கள் அனைவரும் இசைப் பாடல்களை யாத்தவர்கள். இது மட்டுமல்லாமல் சாவ்ங்கென் சாய், ரால்ரன் சாய், ச்செரிஹ் சாய் முதலிய ஏராளமான வாய்மொழிப் பாடல்கள் இன்றும் பாடப்படுகின்றன. அவையாவும் தலைமுறை தலைமுறையாக வாய்மொழியாகவே கையளிக்கப் பட்டு வருவன.

அத்தகைய பாடல்கள் அனைத்தையும் குறித்து விரிவாகப் பேசுவதற்கு இங்கு இடம் போதாது என்பதால் சாத்தியமில்லை. ஆனால், நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டுவது யாதெனில், மிசோ நாட்டார் பாடல்கள் சில வற்றில் வெளிப்படும் இசைப் பாடகர்களின் பெயர்கள் அல்லது பாடல்களின் இசைலயங்கள் ஆகும். இது மிசோ நாட்டார் இலக்கியத்தின் தனித்ததோர் சிறப்புக் கூறாகும்.

மிசோ நாட்டார் பாடல்கள் பற்றிய முறை யான ஆய்வு என்பது நடத்தப்படுமானால், அதன் மூலம் மிசோ சமூகத்தில் பெண்களின் நிலை எவ்வாறு உள்ளது என்பது வெளிப்படுத்தப்படக் கூடும். இன்றைய சில அறிஞர்கள்- குறிப்பாகப் பெண் இறையியலர்கள் கடந்த கால மிசோ சமுதாயத்தில் பெண்களின் நிலை மிகவும் மோச மாக இருந்தது என்று உறுதிபடக் கூறுகிறார்கள். விற்பதற்கும் வாங்குவதற்கும் உரிய வெள்ளை நிற வீட்டு வளர்ப்பு விலங்குகளாகத் தான் கருதப் பட்டார்கள் என்கிறார் புகழ்பெற்ற பெண்ணிய வாதி ஒருவர். “திருமணம் என்று வரும்போது, ஏதோ சொத்தினை வாங்குவது போலவே ஆண்கள் மிசோ பெண்களை வாங்குகிறார்கள்” என்கிறார். திருமணம் செய்யும்போது, பெண்ணுக்காக ஒரு குறைந்தபட்ச அளவில் பணம் கொடுப்பது என்பது மிசோக்களிடம் நடைமுறையில் உள்ளது. ஆனால் பொதுவாக அசையும் சொத்துக்கள் போல், விருப்பமற்ற பெண்களை யாரும் விலைகொடுத்து வாங்க முடியாது.

மிசோக்களின் நாட்டார் பாடல்களில் தனி மனித ஆளுமை பற்றிய உணர்வு மேலதிகமாகப் பிரதிபலிப்பதை அறிய முடிகிறது. குறிப்பாகப் பெண்களின் பாடல்கள் உரத்த குரலில் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. மிசோ நாட்டார் பாடல் கள் கட்டப்பட்ட போது பெண்கள் மிகவும் இன்றியமையாத வகையில் பங்காற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள் பாடிய பாடல்களிலிருந்து சிலவற்றை இங்கு உதாரணமாகத் தருகிறேன்.

ஒருநாள் காலையில், ஜுஹும் விவசாயிகளும் காட்டில் வேலை செய்யச் சென்ற உழைப்பாளி களும் கிராமத்தின் எல்லையில் உள்ள லுங்காவா என்ற கல் மேடையில் திரண்டிருந்தார்கள். ரீங் காரம் பாடும் சில்வண்டு ஒன்று, வேலைக்குச் சென்றவர்களைத் தனது இசையால் கவர்ந்து அங்கு ஒருங்குகூடி நிற்க வைத்துவிட்டது. அப் போது அங்கிருந்த நினைவுக்கல் மேடை அருகே சாய்குட்டி வந்து சேர்ந்தாள். சில்வண்டின் இனிய ரீங்கார இசைக்கு இசைப்பாட்டுப் பாடுமாறு சாய்குட்டியிடம் அங்குக் கூடியிருந்தோர் கேட்டுக் கொண்டனர். அதற்கு இசைந்த சாய்குட்டி சில் வண்டு ரீங்காரக் குரலுக்கு இணையாகப் பின் வருமாறு பாடினாள்.

காட்டுவெளியில் பாடுபடச் செல்லும்

பாட்டாளிக் கூட்டத்தை

வழிமறித்துத் தடுக்கிறது- சில்வண்டே

நெட்டை நெடுமர உச்சியினின்று

மேளதாளம் இல்லாமல்

நீ இசைக்கும் தேனினிய உன் பாட்டுக் குரல்

சாய்குட்டி பாடிய ஈரடிப் பாடலை, அங்கு நினைவுக் கல் மேடையில் நிறைந்திருந்த ஒவ்வொருவரும் ரசித்துப் பாராட்டினர். அத்துடன், அன்றைக்கு அனைவரும் வேலைக்குச் செல்லாமல் ஓய்வெடுக்கும் நாளாக அறிவித்தார்கள். தத்தம் வீடுகளுக்குத் திரும்பிச் சென்ற பாட்டாளிகள் அனைவரும் நாள் முழுவதும் மதுவருந்திக் களித்துக் கூத்தாடிப் பொழுது போக்கினார்கள். மற்றொரு சந்தர்ப்பத்தில், அந்தக் கிராமத்திலிருந்த இளை ஞர்கள் ஏதோ காரணமாகக் கோபமுற்று, சிறப்பு வழிபாடு நடத்துவதற்காகப் பாதுகாத்து வைத் திருந்த விறகுக் கட்டைகளை எல்லாம் தீயிட்டுக் கொளுத்தி விடுவதென்று முடிவெடுத்தார்கள். ஊரிலிருந்த மூத்தவர்களால் அவர்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. கடைசியில், அவர்களைச் சமாதானப்படுத்துமாறு சாய்குட்டியிடம் வேண் டினர். அதற்கு இணங்க, சாய்குட்டி ஓர் ஈரடிப் பாடலைப் பாடினாள்:

விசேட விறகெரிக்கத் தீவட்டி ஏந்திநிற்கும் இளைஞர்களை

பலவீனமான வேலியைப் போன்ற

 என்னால் தடுத்து நிறுத்திட இயலாது

தன்னுடைய இயலாமையைப் பற்றி சாய் குட்டி தன் இனிய குரலால் பொருட்செறிவுடன் ஈரடிப் பாடலைப் பாடியதைக் கேட்ட இளை ஞர்கள் தங்கள் சினம் தணிந்து, அழிவுப் பாதையில் செல்ல வேண்டாம் என்று முடிவெடுத்தனர். இதனிடையே, சாய்குட்டி ஏறக்குறைய கிராம நிர்வாகத்தைத் தன்னுடைய பாடல்களாலேயே ஏற்று நடத்தத் தொடங்கியிருந்தாள். ஊரார் அனைவருமே அவளுடைய திறமைகளைப் பாராட்டினர். என்னுடைய அனுமானத்தின்படி, அக்காலத்தில் இங்கிலாந்தில் முதன்மை நிலையில் கொண்டாடப்பட்ட எந்த ஒரு கவிஞருக்கும் இணையானவராக சாய்குட்டி திகழ்ந்தார் என் றால், அதில் சற்றும் மிகை இல்லை என்பேன்.

அவ்வாறே லால்தேரியை எடுத்துக் கொள் வோமானால், அவரிடம் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்த கவித்துவ மேதைமையைப் பார்க்கிறோம். நாட்டின் தலைவராக விளங்கிய லால்சாவுங்காவின் இளைய மகளாக விளங்கி னாலும், சாமானிய மக்களோடு அவர்களுள் ஒருவராகக் கலந்து பழகுவதை லால்தேரி ஒரு போதும் தவிர்த்ததில்லை. இதில் ஒரு குறிப்பிடத் தக்க செய்தி என்னவென்றால், சாமானியனான சால்தங்கா என்ற இளைஞனின் மேல் லால்தேரி காதல்வயப்பட்டாள் என்பதுதான். ஆனால், அவளுடைய அண்ணன்கள், சால்தங்காவின் தலையைத் துண்டித்தபோது, அரண்மனைக்கு வெளியே நின்று துயரம் தாங்க முடியாமல் ஓலமிட்டு அழுதாள். தான் உடுத்தியிருந்த ஆடைகளைக் கிழித்து விட்டெறிந்தாள். அழகிய அணிமணிகளை எல்லாம் கழற்றி எறிந்துவிட்டு, உடம்பில் துணிமணி எதுவுமில்லாமல் பிறந்த மேனியாக முற்றத்தில் விழுந்து கிடந்தாள்.

மனம் கலங்கிய அவளுடைய தாய், ஆடை உடுத்தி அணிமணிகளைச் சூட்டிக் கொள்ளுமாறு மகளிடம் கேட்டுக்கொண்டாள். ஆனால், லால்தேரி, தாயின் வேண்டுகோளுக்கு இயைந்து கொடுக்காமல் உறுதி குலையாமல் பதிலிறுத்தாள்:

குருதி வெள்ளத்தில் என் காதலன் செத்து விழுந்துக் கிடக்க,

அம்மா! ஏதும் உடம்பில் உடுத்தமாட்டேன்.

தன்னுடைய விருப்பத்திற்கு எதிராகத் தன் காதலனைக் கொன்று கொடுஞ்செயல் புரிந்த பெற்றோரை நிந்தித்தாள்:

வீட்டு முற்றத்தில் சால்தங்கா தலையை நட்டு வைத்த

தாயே தந்தையே எத்துணை இரக்கமில்லா நெஞ்சத்தீர் நீரே!

அந்த மாபாதகச் செயலால் பெருஞ்சோகத் திற்கு ஆளான லால்தேரி, நீண்ட நாட்களாக அன்ன ஆகாரமின்றிக் கிடந்தாள். அவளின் தாய் மிகவும் கவலையுற்றவளாக மகளிடம் பட்டினி கிடந்தால் உயிர் இழக்க நேரிடும். ஆகையால், பிடிவாதத்தை விட்டு விட்டு உணவு உண்ணுமாறு மன்றாடினாள். லால்தேரி தன் அம்மாவுக்கு அமைதியாகப் பதில் சொன்னாள்:

சைலோ இளவரசி தனிமை காரணமாகச் செத்துப் போகலாம்

ஆனால், உணவில்லாமல் ஒருபோதும் நான் சாகமாட்டேன்.

லால்தேரியின் கவிதைகள் யாவும் ஷெல்லி கூறிய கருத்தினை இங்கு நினைவுறுத்துகின்றன. “பெண்ணின் சுதந்திரம்தான் காதல் கவிதையைப் படைத்துள்ளது” என்பது ஷெல்லியின் கூற்றாகும். காதல் ஒரு சமயமாகும். வழிபாட்டிற்குரிய அதன் சிலைகள் என்றும் நிலைபெற்றிருந்தன. தர்ப் பாங்கியின் ஈரடிப் பாடல்களில் தனிமனித உணர்வும் விடுதலை வேட்கையும் வெளிப்படு வதை வாசகர்கள் தெளிவாக அறிந்து கொள்ள வியலும்.

இதுவரையில் பார்த்த ஆதாரங்களின் வாயி லாக நாம் ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியும். அதாவது, பெண்கள் தங்கள் கருத்துக்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமை இருந்தது. அதுபோல் கிராமத்தில் அவர்கள் சம அந்தஸ் துடன் திகழ்ந்தனர். உண்மையில் இது மிசோ நாட்டார் இலக்கியத்தின் மற்றொரு தனிச்சிறப்புக் கூறாகும்.

மிசோ நாட்டார் கதைகளை எடுத்துக் கொண்டு நுணுகி ஆராய்வோமானால், அது நாம் மிசோ பெண்களின் அழகினை அறிந்து கொள் வதற்கு ஏதுவாக அமையும். பெண்கள்- குறிப்பாகப் பெண் போராளிகள் என்போர் வெகுளித்தன்மையும் கடுமையான உழைப்பாற்றலும் மிக்கவர்கள். அதே சமயத்தில் அவர்கள் மிகவும் அழகானவர்கள். துவாலுங்கி என்ற பெண்ணின் அழகு பற்றிய புகழ் மிசோரம் மாநிலம் எங்கும் பரவியிருந்தது. மிசோ இனத்தைச் சேராத வேற்றின மன்னனான ஃபுந்தி ஹா என்பவன் துவாலுங்கியின் அழகு பற்றி அறிந்து அவளை முகத்திற்கு முகம் சந்திக்க வேண்டும் என்று விரும்பினான். துவாலுங்கியின் அழகைக் கண்டு கிறங்கிப் போன மன்னன் ஃபுந்திஹா அவளை எப்படியாயினும் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று முடிவெடுத்தான்.

துவாலுங்கியை மணப்பதற்காகத் தன்னுடைய சொத்துக்களை எல்லாம் திரட்டித் தொகுத்து ஒரு பெருந்தொகையை அவளுடைய கணவனான சாவ்ல்பாலாவிடம் கொடுத்தான். துவாலுங்கி யின் பேரழகு, தன்னுடைய நாட்டை விட்டு நீங்கிவந்து மிசோரமில் குடியேறி, அவளைத் தன் னுடையவளாக்கிக் கொண்டு எப்போதும் அவளைப் பக்கத்தில் வைத்துப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்னும் அளவிற்கு ஃபுக்கிகாவை உந்தித் தள்ளியது. அந்தப் பேரழகியைப் பார்ப் பதற்காகவே பல்வேறு ஊர்களிலிருந்து மக்கள் நாள்தோறும் சாவ்ல்பாலாவின் ஊருக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

அரசி எஸ்தர் பெர்சியாவின் மன்னன் அகஸ்யூரின் மனைவியாக ஆக முடிந்ததற்குக் காரணமே அவளுடைய அழகுதான். இதனை ஒத்ததுதான் மௌருவாங்கி- வைவால்ப்பா திரு மணமும். மிசோரமைச் சாராதவனான சக்கர வர்த்தி வைலால்பாவைப் பேரழகியை மௌரு வாங்கி மணம் புரிந்ததால் அரசியாக ஆனாள். பேரரசனான வைலால்பா, உலகிலேயே மிகச் சிறந்த அழகியாக விளங்கும் ஒருத்தியைத்தான் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று தீர்மானமாக இருந்ததால், அரண்மனைப் பணி யாளர்கள் திசைகள் எங்கும் சென்று அத்தகைய பேரழகியைத் தேடினார்கள். நாடெங்கும் சென்று தேடிப் பார்த்தும் மன்னனுக்கு ஏற்ற ஒரு பேரழகி கூட கிடைக்காததால், கடைசியில் அவர்கள் மிசோரம் வந்து சேர்ந்தனர். சற்றும் எதிர்பாராத வகையில் நெல் வயல்களின் மத்தியில் மௌரு வாங்கியைப் பார்த்தார்கள். மௌருவாங்கி சூது வாது அறியாவதள்; அன்பானவள். அரண்மனைப் பணியாளர்களுக்குக் குடிக்கத் தண்ணீரும், சாப்பிட உணவும் கொடுத்து உபசரித்தாள். அவள் மிகவும் அழகாக இருந்ததால் ஒளிவு மறைவில்லாமல் நேரடியாகவே தங்கள் மன்னனின் மனைவியாகக் கரம் பற்ற சம்மதமா என்று அவளிடம் கேட்டார்கள். மௌருவாங்கியைத் திருமணத்திற்கு இணங்கச் செய்ய எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்குக் கெஞ்சிக் கூத்தாடி அவளைத் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளச் செய்தனர். அவளுடைய ஒப்பற்ற அழகுதான், மன்னன் வைலால்பாவின் மனைவியாக அமைவதற்குக் காரணமாயிற்று.

மிசோ வாய்மொழி மரபில் மேலும் பல அழகிய இளம் பெண்களைப் பற்றிய செய்தி களைக் காண்கிறோம். துவான்பூரி, சாண்குவிங்கி, தைலூங்கி போன்றவர்கள் அவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் (பெயரின் இறுதியில் இடம்பெறும் ‘இ’ விகுதியானது பெண்பாலைக் குறிக்கும்) கீழ்த் திசையை- அதாவது பர்மாவைச் சேர்ந்தவர் களான பெரிய இரும்பு வணிகர்கள். அழகிய தைலூங்கியைக் கண்ணுற்றமையால், தங்களுடைய விலை மதிப்பற்ற உற்பத்திப் பொருட்களைப் பரி வர்த்தனை செய்து கொள்ள உடனே சம்மதித் தார்கள். ஙைய்த்தேயியின் நீண்ட தலை முடியைப் பார்த்த உடனேயே நதிக்கரையில் வாழ்ந்த மிசோ அல்லாத மக்கள் தீர்மானித்து விட்டார்கள். ‘அந்த நீண்ட தலைமுடி எந்தப் பெண்ணுடையதோ அந்தப் பெண் நிச்சயம் அழகானவள்தான்’ என்று. அவ்வாறே அவர்கள் ஆற்றில் அலைந்த நீண்ட தலைமுடியைப் பின்பற்றித் தேடிச் சென்ற போது, அதன் உரிமையாளரைக் கண்டுபிடித்து விட்டார்கள். அவர்கள் எதிர்பார்த்தவாறே ஙைய்த்தேயி அன்பும் அழகும் ஒருங்கே வடிவம் கொண்டவளாக இருந்தாள். பெண்ணின் அழகினை மிசோ மக்கள் எத்துணை அளவிற்குக் கொண்டாடக் கூடியவர்களாக இருந்தார்கள் என்பதற்கு அவர்களுடைய நாட்டார் கதைகளில் காணப்படும் இத்தகைய செய்திகள் ஒரு சில உதாரணங்களாகும்.

நாட்டார் கதைகளில் காணப்படும் ஆண் களின் ஆற்றலும் நெஞ்சுறுதியும் நாட்டார் இலக்கி யத்தின் மற்றொரு சிறப்புக் கூறாகும். அவர்கள் மிகவும் பிரசித்திப் பெற்றவர்களோ அழகான இளைஞர்களோ அல்லர்; ஆனால், அவர்கள் உறுதியும் துணிவும் மிக்கவர்கள். அவர்களுடைய வீரதீரத்திற்கு எல்லையே இல்லை. அவர்களுள் ஒருவன்தான் மவுல்சாவதா (மவுல் சாவதா என் றால் நூறு குன்றுகளைத் தகர்த்தவன் என்று பொருள்), மிகவும் பலசாலியான மவுல்சாவதா ஒரே நாளில் நெல் வயலில் உள்ள நூறு காட்டுக் குன்றுகளை ((Forest hills)) அறுவடை செய்து முடித்து விடுவான். அவனுடைய வேலை செய்யும் வேகத் தைப் பார்த்தால் மின்னல் மாதிரி தோன்றும். இவனைப் போல் மற்றொரு நாயகன் உண்டு. அவன் பெயர் பங்புயில்த்லியாக்கா. தன்னுடைய கைகளாலேயே ஒரு பெரிய மரத்தை வெட்டி வீழ்த்துபவன் என்பது இப்பெயரின் பொரு ளாகும். இவர்களைப் போன்றே வேறு சில நாயகர்களான சாவ்ன்புரா, ஃபாலாவ்ங்சாம்கிரா, சாம்புயுமங்கா, சாய்சாஹாவ்லா போன்றவர்களும் ஆற்றல்மிகு மறவர்களாக மிமிசோ வாய்மொழி மரபுகளில் குறிப்பிடப்படுகிறார்கள் (ஒவ்வொரு பெயரிலும் இறுதியில் இடம்பெறும் ‘ஆ’ விகுதி ஆண் பெயரினைச் சுட்டுவது.)

சாவ்ண்புரா என்பவன் கியாங்கே குலத்தைச் சேர்ந்தவன்; அவன் தன்னுடைய துணிச்சலுக் காகவும் வீரதீர சாகசங்களுக்காகவும் மிகவும் புகழோடு விளங்கியவன். காட்டில் எந்தப் புலியைக் கண்டும் அவன் அஞ்சியதில்லை. அது காயம் பட்ட புலியாக இருந்தாலும்கூட புலி அடித்துத் தின்னவிருந்த ஒருவனை அதன் பிடியிலிருந்துக் காப்பாற்றியவன் அவன். வேட்டையின்போது அவன் மட்டுமே காட்டில் தன்னந்தனியே புலியைத் துரத்திச்செல்லக்கூடியவன். திடீரென்று வந்து தாக்கும் எதிரிகளைத் தனித்து நின்று தாக்கிப் புறமுதுகிட்டு ஓடச் செய்வதில் வல்லவன். தன் னுடைய கிராமத்திலிருந்து தப்பித்து ஓடும் எதிரிகள் கூட்டத்தைத் தான் மட்டுமே துரத்திச் சென்று தாக்கக் கூடியவன். அப்படி ஒரு சமயம் நடந்தபோது, அவனுடைய கிராமத்திற்கு வெகு தொலைவில் தப்பித்துச் சென்று எதிரிகள் தமக்குச் சாதகமான ஒரு புகலிடத்திலிருந்தவாறு சாவ்ண் புராவைச் சற்றுத் தொலைவிலிருந்தவாறு தாக்கி னார்கள். அச்சமயத்தில், மற்றொரு கிராமத்தில் வசித்து வந்தவனான அவனுடைய சீடன் ஒருவன். சாவ்ண்புராவுக்கு உதவும் வகையில் ஒரு குத் தீட்டியை விட்டெறிந்தான். ஆனால், சாவ்ண்புரா அதனைப் பயன்படுத்த விரும்பவில்லை. ஹாரன்பில் தனக்குப் பிடித்தமான ஒரு இறகினைக் கூட கீழே போடாது என்று சொன்னான். மேற்கொண்டு முன்னேறி எதிரிகளைத் தாக்கத் தொடங்கினான். ஆனால், அவனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக எதிரிகளோடு சமமாக நின்று எதிர்த்துப் போரிட முடியாமல் அப்படியே நிலைகுலைந்து, தரையில் உட்கார்ந்துவிட்டான். இந்நிலையில் அவனுக்குக் குத்தீட்டியைக் கொடுத்தவனான கர்ஹலுவானா தன்னுடைய முன்னாள் குரு காயமுற்றதைப் பார்த்து மிகவும் வருந்தினான். அவன் பட்ட வேதனையைப் பார்த்துக் கண்ணீர் சிந்தினான். அவன் கண்ணீர் சிந்துவதைப் பார்த்த சாவ்ண்புரா “நீ ஒரு பெண்ணைப் போன்றவன். உன்னுடைய கத்தியால் என் கதையை முடிக்க முடியாது. என் னுடைய நீண்ட கத்தியால் என் கழுத்தை வெட்டு. அப்பறம் என் தலையை வைத்துக் கொண்டாடு. அப்படி நீ செய்யவில்லையென்றால் ஆன்ம உலகில் என் ஆத்மாவை உன் ஆத்மாவால் வெல்ல முடியாது” என்று சொன்னான்.

தன்னுடைய குரு அறிவுறுத்தியவாறு கர்ஹ்லு வானா, சாவ்ண்புராவின் கத்தியாலேயே அவனுடைய கழுத்தை வெட்டித் தலையைத் துண்டித்து எடுத்து, அதனை விழா எடுத்துக் கொண்டாடி னான். அத்துடன், அந்த மாபெரும் நாயகனின் வீழ்ச்சியைப் பற்றி ஒரு பாடலைப் புனைந்தான். அந்தச் சம்பவத்திற்குப் பின்னர்தான் மிசோ வீரர்கள் எதிரிகளின் ஆயுதங்களால் அல்லாமல் தங்களுடைய ஆயுதங்களாலேயே தாங்கள் கொல்லப்பட வேண்டும் என்பது நடைமுறைக்கு வந்தது என்று நம்பப்படுகிறது. போரில் வெற்றி பெறும் நாயகர்கள் தங்கள் எதிரிகளின் உடலின் மேல் அல்லது வேட்டையில் கொல்லப்பட்ட கொடிய விலங்கின் மேல் நின்று மந்திரப் பாடலையோ வெற்றி முழக்கப் பாடலையோ பாடுவதை ஒரு சடங்கியல் நிகழ்வாக நடத்து வார்கள்.

போரில் தோற்றவர் அல்லது வேட்டையில் வீழ்த்தப்பட்ட விலங்கின் தலையை வெட்டி எடுத்து வைத்துவிட்டு அதன் உடலின் மேல் ஒரு காலை வைத்தவாறு ஒரு சில பாடல்களை உரக்கக் கத்திப் பாடுவார்கள். அத்துடன், வானை நோக்கி ஓரிரு முறை துப்பாக்கியால் சுடுவார்கள். அவ் வாறு அவர்கள் சடங்கினை மேற்கொள்ளா விட்டால், இறந்தோரின் ஆவியானது மறுஉலகில் தங்களுக்குச் சேவை செய்யாது என்று நம்பு கின்றனர். அத்தகைய சடங்கு ஒன்றில் பாடப் பட்ட பாடல் வருமாறு:

எதிரியைக் கொன்று களவெற்றியைக் கொண்டாடுகிறேன்

ஹார்ன்பில்லின் இறகுகள் தலையை அலங்கரிக்க

அங்குமிங்கும் வெற்றிநடை போடுகிறேன்

இதுபோன்ற ஏராளமான பாடல்கள் மிசோ நாட்டார் பாடல்களில் முக்கியத்துவம் வாய்ந்த வடிவமாகக் கருதப்படுகின்றன. ஒவ்வொரு தேச பக்தனும் அல்லது போர் வீரனும் தன்னுடைய எதிரிகளையோ பிரம்மாண்டமான காட்டு விலங் கையோ வென்றழிக்கும் போது தனித்த பாடலைப் பாடுவது வழக்கமாகும். ஒருமுறை சம்புயிமங்கா தனது கிராமத்தின் அருகே ஓர் ஒற்றைக் கத்தியைக் கொண்டு காயம்பட்ட புலி ஒன்றினைக் குத்திக் கொன்றான். எந்த ஒரு பெரிய புலியானாலும் சற்றுநேரம் அதனோடு போரிட்டுக் கொல்லும் அளவிற்குத் துணிச்சலும் வீரமும் உடையவன். அவ்வாறு கொன்ற புலியின் தலையைத் துண்டித்து விட்டு, அதன் உடலின்மேல் தன்னுடைய காலை எடுத்து வைத்து நின்றவாறு ‘ஹ்லதோ’ என்னும் பாடலைப் பாடுவான். புலியை வேட்டையாடிக் கொல்லும் சமயத்தில் இவ்வகை நாட்டார் பாடலைப் பாடுவது வழக்கம். புலியினை வீழ்த்தி யதன் அடையாளமாக அமைந்த இப்பாடல் பாடப் பட்ட பின்னரே கிராமத்தினர் அவ்விடத்திற்கு வந்து புலியின் உடலை எடுத்துச் செல்வார்கள்.

பண்டைக்காலம் முதற்கொண்டே மிசோக்கள் தங்களுக்கென்றே உரிய பழமொழிகளை வழங்கி வருகிறார்கள். தலைமுறை தலைமுறையாக இப்பழமொழிகள் கையளிக்கப்படுவது என்பது இன்றும் தொடர்ந்து வரும் ஒரு படிமுறையாகத் திகழ்கிறது. உதாரணமாக மிசோக்கள் வழங்கும் ‘சியால் ரங்கின் சியால் ரங் யஹ்ரிங்’ பழ மொழியைக் குறிப்பிடலாம். இதன் பொருள் ‘ஓர் அழகிய பெண் எப்போதும் அழகான மகளைத் தான் பெற்றெடுப்பாள்’ என்பதாகும். ஆண்களை மையப்படுத்திச் சொல்லும் போது ‘சக்காளின் சாகால யஹ்ரிங்’ - அதாவது ‘ஒரு வீரத் தந்தைக்குப் பின்னே ஒரு வீர மகன் வருவான்’ என்ற பழ மொழியை வழங்குவர். எதிரிடைப் பொருளிலும் இவற்றைப் போன்ற பழமொழிகள் மிசோக் களிடம் காணப்படுகின்றன. ‘நூ சியார், நூ சியார்’ என்பதற்கு ‘ஆத்தாளைப் போலவே அவள் பெண்ணும் உருப்படாது’ என்று பொருள். ‘பா சியார் பாசியார்’ என்ற பழமொழி. ‘அப்பனைப் போன்றுதான் பையனும் இருப்பான்’ என்னும் பொருளைத் தருவது. ‘சன்ஹ்லு குங்காஹ் தேய் தங் ய ராஹ் தெய் லோ’ என்பதற்கு ‘ஒரு மரத்தின் கனியால் அடிமரத்தை மாற்றவியலாது’ என்று பொருள். நல்லவர்களோ கெட்டவர்களோ பெற் றோர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே அவர்தம் குழந்தைகளும் அமைவார்கள் என்று விளக்கும் வகையில் மேற்கண்ட பழமொழிகள் கையாளப்படுகின்றன.

இவ்வாறு மிசோக்களிடம் வழங்கும் மக்கள் மரபுகளின் தனித்தன்மையைப் பற்றி விளக்கிக் கூறமுடியும். அவற்றின் சிறப்பியல்புகளில் ஒரு

சில சிறப்பியல்புகளைப் பற்றி மட்டுமே இங்கு நான் எடுத்துக் காட்டியுள்ளேன். உண்மையில் மிசோக்கள் வளமான நாட்டார் இலக்கியத்தைப் பெற்றிருப்பவர்கள் என்பதையும் அது இந்திய மரபுச்செல்வத்திற்கு மேலும் செழிப்பூட்டவல்லது என்பதையும் இத்தொகுப்பினைப் படிக்கும் வாசகர்கள் புரிந்துகொள்வார்கள் என்னும் நம் பிக்கை எமக்கு உள்ளது.

மிசோக்கள் அல்லாதவர்களான வாசகர்கள், மிசோ மக்களின் பண்பாடு, இலக்கியம் மற்றும் நாட்டார் கதைகள் போன்றவற்றைப் பற்றி மேலதிக மாக அறிந்துகொள்ள விரும்புவார்கள் என்பதற் காகவே மிசோக்களின் நாட்டார் கதைகள் என்ற பகுதி இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந் நூலைத் தொகுக்கும் நிலையில், மிசோ இனக்குழு மக்களுடைய நாட்டார் கதைகள், அச்சமூகத்தின் நாயகர்கள், நாயகிகள், அவர்கள் புரிந்த சாதனைகள், வாய்மொழி மரபு, நாட்டார் வழக்காறுகள் போன்ற அனைத்தையும் பற்றி வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்தை முதன் மைப்படுத்தி இந்நூல் தொகுக்கப்பட்டிருக்கிறது. மிசோக்களின் பண்பாடு, இலக்கியம் ஆகியவை பற்றிய ஆய்வில் அறிஞர்கள் ஈடுபாடு காட்டு வார்கள் என்று நான் நம்புகிறேன்.

மிசோக்களால் தங்க்ளியானா என்றழைக்கப் பட்டவர் லெப்டினன்ட் கோல் டி.எச். லெவின், பி.எஸ்.சி. அவர் சிட்டகாங் மலைப் பகுதிகளின் டெபுடி கமிஷனராகப் பணியாற்றியவர். இவர் மிசோ மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்த முதல் அறிஞர். ட்சோ அல்லது குக்கி மொழியின் லுஷை வட்டார வழக்கில் உள்ள முற்போக்கான பேச்சு வழக்குகள் (progressive Colloquial Exercises in the Lushsai Dialect of the Dzo or Kuki Language) என்னும் லெவினின் நூல் 1874-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அந்நூலில் ஏராளமான மிசோ சொற்களின் அகராதியையும், பரவலாக அறியப்பட்ட மூன்று மிசோ நாட்டார் கதை களையும் அவர் ஆவணப்படுத்தியிருந்தார். அதுவே முதன் முதலில் மிசோ நாட்டார் இலக்கியம் பற்றி அச்சிடப்பட்ட நூலாகும். இந்நூலில் லெவின் மூன்று மிசோ நாட்டார் கதைகளைச் சுருக்கமாகக் கொடுத்திருந்தார். அவற்றை அவருக்குச் சொன்னவன் சமா என்ற பதினான்கு வயதுப் பையன். அவன் ரோதங்புயியா என்ற நாட்டாண் மைக்காரரின் கிராமத்தைச் சேர்ந்தவன். செம் தாத்ராவ்தாவைப் பற்றிய கதையைத் தான் எவ்வாறு அறிந்துகொள்ள முடிந்தது என்பது குறித்து லெவின் பதிவு செய்துள்ளார். அது வருமாறு:

“அந்தக் கதையை விவரிக்கும்போது, அதனை மிகவும் ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்த குழந்தைகள் எங்களைச் சுற்றிச் சூழ்ந்து உட்கார்ந் திருந்தார்கள். இதற்கு முன்னமே அவர்கள் அந்தக் கதையை அடிக்கடி கேட்டிருக்க வேண்டும். எனினும் ஸ்கொயர் ஹார்ட்கேஸ்ட்லின் ‘துப்பாக்கி அறையின் குறைபாடு’ என்னும் கதையைப் போல, இந்தக் கதையும் காலத்தாலோ திரும்பத் திரும்பக் கூறக் கேட்டதாலோ தன்னுடைய ஈர்ப்பினை ஒரு போதும் இழந்துவிடவில்லை. ஆனால், கதையின் உச்சக்கட்டத்தை எட்டியபோது, எழுந்த சிரிப்புச் சப்தம் கேட்டு, நாட்டாண்மைக்காரர் தன்னுடைய வீட்டை விட்டு வெளியில் வந்து என்ன நடக்கிறது என்று பார்க்கத் தொடங்கிவிட்டார். செம்தாத் ராவ்தா கதைக்கு இணையான கதை ஆங்கில மழலையர் கதைகளிடையேயும் வழங்குகிறது. “பூனை எலியைக் கொல்லத் தொடங்கியது. எலியோ கயிற்றைக் கடித்துத் துண்டாக்கியது. கயிறோ கசாப்புக்காரனைத் தூக்கில் போடத் தொடங்கியது. கசாப்புக்காரன் எருதினைக் கொல்லத் தொடங்கினான், எருது தண்ணீரைக் குடிக்கலாயிற்று. தண்ணீரோ தீயைத் தணிவித்தது. தீயோ குச்சியை எரிக்கத் தொடங்கிற்று. குச்சியோ பன்றியை விளாசியது. இவ்வாறு, அந்த முதிய பெண்மணி இரவு நேரம் வருவதற்குள் தன்னுடைய வீட்டிற்குள் போக முடிந்தது.”

ஏனைய இனக்குழு மக்கள் அல்லது மற்ற நாடு களில் வழங்கும் நாட்டார் கதைகளைப் போன்ற பல நாட்டார் கதைகளை யாரும் எதிர்பார்க்கக் கூடும். வாய்மொழி இலக்கியத்தின் வாயிலாக நமது முன்னோர்கள் நம்மிடம் எவற்றைக் கையளித்துச் சென்றார்களோ அவற்றோடு ஒப்பிட்டு நோக்கவும், அவற்றை அறிந்துகொள்ளவும் இத் தொகுப்பி லுள்ள கதைகள் கூடிய அளவிற்கு நமக்கு உதவும் என்று நம்புகிறோம்.

டி.எச்.லெவின் வெளியிட்ட நூலை அடுத்து, லுஷை மலைப் பகுதியின் மேற்பார்வையாளராக இருந்த ஜே.ஷேக்ஸ்பியர் 1898-இல் ‘மிசோ மற்றும் மிசோ அல்லாதோரின் கதைகள்’ (mizo and NonMizo Tales) என்ற தொகுப்பு நூலை வெளியிட்டார். இந்நூல் சுருக்கமான ஆறு மிசோ நாட்டார் கதைகளையும், மிசோ மொழியில் வழங்கிய மிசோ மக்கள் அல்லாதோரின் மூன்று கதைகளையும் கொண்டிருந்தது. மிசோரம் மாநிலம் ப்ரெஸ்பை ட்டீரியன் தேவாலயத்தைச் சேர்ந்த வெல்ஸ் மிஷனெரியான அருள்திரு எஃப், ஜே.சாண்டி என்பவர். 1919-ஆம் ஆண்டு பழைய லுஷையின் ஒரு பழமரபுக் கதை (A legend of old lushai) என்னும் நூலை வெளியிட்டார். 1926-ஆம் ஆண்டில் மறு பிரசுரம் கண்ட இந்நூலில் சாண்டி இருபத் திரண்டு குறுங்கதைகளை இடம் பெறச் செய் திருந்தார்.

இம்மூன்று நாட்டார் கதைகளின் தொகுப்பு களிலும் இடம் பெற்றிருந்த கதைகளைக் கூறிய கதை சொல்லிகள் அனைவரும் மிசோ இனத்தவர் அல்லர். இக்கதைகளை எடுத்துரைத்த முறை மையும் கதைகள் எழுதப்பட்டிருந்த விதமும் மிசோ இனக்குழு மக்களின் முன்னோர்கள் கூறிய அப்பட்டமான கதைகளிலிருந்து சற்றே வேறு பட்டவை எனலாம்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர், செர்க் கானைச் சேர்ந்தவரான திருமதி நுச்சூங்கி என் பவர் குழந்தைகள் வாசிப்பிற்காக, மிசோ நாட்டார் கதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘செர்க்கான் கிரேடட் டெக்ஸ்புக்’ என்னும் நூலாக வெளி யிட்டார். பி.எஸ். தாஹ்ராவ்கா என்பவர் கணிச மான எண்ணிக்கையில் மிசோ மொழியிலேயே வழங்கிய நாட்டார் கதைகளைத் தொகுத்து ‘மிசோ தான்த்து’ (Mizo Thawnthu) அதாவது, மிசோ நாட்டார் கதைகள் என்னும் தலைப்பில் 1962-ஆம் ஆண்டில் வெளியிட்டார். அண்மைக்காலங்களில், மேலும் பல அறிஞர்கள், மிசோ மொழியில் வழங்கும் நாட்டார் கதைகளைச் சேகரித்து உள்ளனர்.

தனிப்பெரும் நூல் வெளியீடுகளின் ஒரு பகுதியாக அமையும் வகையில், எழுத்தாளர்கள் சிலர் மிசோ நாட்டார் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர். ஜே.ஷேக்ஸ்பியரின் லுஷை குக்கி குலம் (The Luzhai kuki clan) ஏஜி. மெக்காலின் லுஷை க்ரைசாலிஸ் ((Lushai Chrysalis, 1949), எஸ்.எம். பார்கட்டாக்கி தொகுத்து வெளி யிட்ட அசாம் இனக்குழு நாட்டார் கதைகள் (Tribal Folk-Tales of Assam, 1970), எல்.பி.தங்கா எழுதிய மிசோக்கள் ((The Mizos,, 1978) போன்ற நூல்களை அவ்வகையில் இங்குக் குறிப்பிடலாம். மேற்கண்ட அறிஞர்கள், மிசோ நாட்டார் கதைகளைச் சேகரித்துப் பதிவு செய்ததில் பாராட்டத்தக்க வகையில் பங்களித்துள்ளனர்.

இத்தகைய வாய்மொழி மரபுகளைப் புத்தக மாகத் தொகுத்து வெளியிட வேண்டுவதன் முக்கியத் துவத்தை அறிந்து மிசோ நாட்டார் கதைகளை 1991-ஆம் ஆண்டில் மொழிபெயர்க்கத் தொடங்கி னேன். தொடக்கத்தில் இக்கதைகளைச் சேகரித்து வெளியிட்ட முன்னோடி எழுத்தாளர்களின் இன்றி யமையாத நூல்களுக்காக அவர்களுக்கு என் இதயமார்ந்த நன்றியைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். அவர்தம் நூல்களில் இருந்து பயன் மிக்க சிந்தனைகளையும் தகவல்களையும் பெற்றுக் கொண்டிருக்கிறேன். அத்துடன், அவர்கள் விட்டுச் சென்ற கணிசமான நாட்டார் கதைகளை எனது பாணியில் நான் மொழியாக்கம் செய்துள்ளேன்.

ஓர் உண்மையையும் நான் சொல்ல வேண்டும். அதாவது, இம்மொழிபெயர்ப்புகளை எல்லாம், எனது தாத்தாவிடமிருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில்தான் மேற்கொண்டேன். நான் மிகவும் கொடுத்து வைத்தவன். என்னுடைய இளம் பருவத்தில் என் தாத்தாவான அருள்திரு. லியாங் கையா (அவர் ஒரு எழுத்தாளர், வரலாற்றியலர், கவிஞர், இறையியலர், வானியலர், போதகர், கதை சொல்லி) எனக்கு ஏராளமான நாட்டார் கதை களையும் வாழ்க்கை வரலாற்றுக் கதைகளையும் சொல்வார். அவரை அடுத்து, என் பாட்டியும் வேறு ஆண்களும் பெண்களும் பழமரபுக் கதைகள், புராணங்கள் போன்றவற்றைச் சொல்லிக் கேட்டி ருக்கிறேன். எனவே எனது மொழிபெயர்ப்பில் என தாத்தாவும் பாட்டியும் எனக்குச் சொன்ன கதைக் கருக்களை எல்லாம் பயன்படுத்தியுள்ளேன்.

மிசோ நாட்டார் கதைகளின் உலகம் என்பது ஆண் பெண்களின் கதைகள் விவரிக்கும் ஆர்வம் அளிக்கும் பல விஷயங்களை உட்கொண்டதாகும். உள்ளடக்கங்களின் அடிப்படையில், வெவ்வேறு தரவுகளையும் கருப்பொருட்களையும் பல தரப் பட்ட பகுதிகளாகப் பிரித்துக் கொடுத்துள்ளேன்.

நூலின் முதற் பகுதியில், மிசோ நாட்டார் கதைகளில் பேசப்படும் உண்மையான கதைத் தலைவரான சூர்புராவைப் பற்றி விளக்கப்பட்டு உள்ளது. மிசோ நாட்டார் வழக்காறுகள் என்னும் உலகில் காணப்படும் மிகவும் ஆர்வம் மிக்க பாத்திரமாகத் திகழ்பவர் சூர்புரா. சூர்புராவின் நகைச்சுவை என்பது அளப்பரியது. ஒவ்வொரு வருக்கும் அவருடைய நகைச்சுவை மிகவும் பிடிக்கும். எதனையும் எளிதில் நம்பக்கூடிய ஏமாளிகள் உலகில் மிகவும் நினைவுகூரத்தக்க கதாநாயகன்தான் இந்தச் சூர்புரா.

சூர்புராவை மையப்படுத்தி ஏராளமான கதைகள் பகுதிப் பகுதியாக உள்ளன. அவை அனைத்தையும் இத்தொகுப்பில் சேர்க்கவியலாது. அவற்றைப் படிக்க விரும்புவோர் மிசோ நாட்டார் வழக்காறுகள்- 1) மிசோரம் நாட்டார் கதைகள் ((Mizo Folkore I: Folk Tales of Mizoram, 1997) என்னும் நூலை வாசிக்கலாம். அந்நூலில் சூர்புராவின் கதைகள் பலவற்றோடு ரசிக்கத்தக்க மிசோ நாட்டார் கதைகளும் ஒருங்கே காணப்படுகின்றன.

நூலின் இரண்டாம் பகுதியில், மிசோ ஆண் களின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங் களை வரிசைப்படுத்திக் கொடுத்திருக்கிறேன். இந்த மனிதர்கள் பல்வேறு ஆளுமைகளைக் கொண்ட வர்கள். பலவான்கள், தத்தம் வீரதீர சாகசங்களுக் காகப் போற்றப்படுபவர்கள். பிரபல்யமான சோம் பேறிகள், வியக்கத்தக்க வகையில் வேகமான வர்கள். மேலும் பல்வேறு வகைப்பட்ட கவரத்தக்க பண்புகளை சமமாக வாங்கி வந்தவர்கள்- இப்படிப் பலதரப்பட்ட மனிதர்கள். மற்றொருபுறம், பெண் களின் அவலம் தோய்ந்த சம்பவங்கள் பற்றிய கதைகள் மூன்றாம் பகுதியில் இடம் பெற்றுள்ளன. இதற்கு அடுத்துள்ள பகுதி ஆண், பெண்களின் காதல் பரிவுணர்வு சார்ந்தவையான மனதைத் தொடக்கூடிய நான்கு கதைகள் இடம்பெற்று உள்ளன. நான்காவது சிறப்புப் பகுதியில் வெவ் வேறு வகைப்பட்ட கதைகள் தொகுத்தளிக்கப் பட்டுள்ளன. இவ்வியலில் அடங்கும் கதைகளில் இடம்பெறும் விலங்குகள் மனிதனைப் போல் பேசுவதோடு மட்டுமல்லாமல் அவனைப் போலவே செயல்படுபவன. மனிதர்கள் நாம் ஒருவருக் கொருவர் ஊடாடிக் கொள்வதுபோல், ஒரு காலத்தில் மனிதனும் விலங்குகளுடன் ஒரு பொது வான மொழியைப் பெற்றுத் தமக்குள் தகவல் தொடர்பு செய்து கொண்டிருக்கக்கூடும்.

இந்தப் புத்தகத்தில் நான் சேகரித்துக் கொடுத் திருக்கும் நாட்டார் கதைகள், இன்றும் கூட மிசோ மக்களிடம் மிகவும் ரசனையோடு வாய்மொழி யாகப் பயின்று வருபவை. நான் வார்த்தைக்கு வார்த்தை பொருள் தரக்கூடிய மொழிபெயர்ப் பினையே இந்நூலில் கொடுத்திருந்தாலும்கூட மிசோ நாட்டார் இலக்கியத்தினைப் பயிலவும் ஆய்வு செய்யவும் விரும்பும் அறிஞர்களுக்கு ஓர் அறிமுகமாக இந்நூல் உதவும் என்று நான் நம்புகிறேன். நாட்டார் பாடல்கள், நாட்டார் கதைகள், சில முற்காலக் கவிதைகள், சில தற்காலக் கவிதைகள் ஆகியவற்றை மட்டுமே இந்நூலில் தொகுத்தளித்துள்ளேன். மிசோ சிறுகதைகள், நாவல்கள், குறுநாடகங்கள், நாடகங்கள், கட்டு ரைகள் போன்றவை இந்நூலில் சேர்க்கப்பட வில்லை. ஆனால், இம்முயற்சியைத் தொடர்ந்து மேற்கோள்வோமானால், அடுத்து வெளிவரும் தொகுப்பில் மிசோ எழுத்தாளர்களின் இன்றி யமையாத படைப்புகள் பலவற்றை இணைத்து வெளியிடலாம் என்பது எனது நம்பிக்கை.

ஆதிவாசிகளின் மொழிகள் மற்றும் வாய் மொழி மரபுகளில் இந்திய இலக்கியம் என்பது பற்றிய திட்டத்தினை மேற்கொண்ட சாகித்திய அகாதெமி இத்தொகுப்பினைத் தயாரிக்க எனக்கு வாய்ப்பளித்தமைக்காக அதற்கு நான் என் நன்றியைப் புலப்படுத்திக் கொள்கிறேன். இனக்குழு மக்களின் மொழிகளில் வழங்கும் இலக்கியத்தின்பால் சாகித்திய அகாதெமி ஆர்வம் காட்டத் தொடங்கி யிருப்பது மகிழ்ச்சியளிக்கக்கூடியது.

(சாகித்ய அகாடமி வெளியீடான லால்த்லுவாங் லியானாகி கியாங்கேயன் எழுதிய மிசோ பாடல்களும் நாட்டார் கதைகளும் என்ற நூலின் முன்னுரை.)

Pin It