ஆங்காங்கே குறும்புதர்களும் உடை முதலிய முள் மரங்களும் பனை மரங்களும் நிற்கும் செம் மணற் பாலையாக இன்று காட்சியளிக்கும் தேரிக் காடு, முன்னொரு காலத்தில் ஒரு குறுநில மன்னனின் ஆட்சிக்கு உட்பட்ட நாடாக இருந்தது. அதன் பெயர் மானவீரவளநாடு. அப்போது அந்நாட்டில் மனிதர்கள் வாழ்ந்தார்கள். வீடுகள், வீதிகள் இருந்தன. சிற்றூர்கள் இருந்தன. அக்குறுநிலத்தை ஆண்ட மன்னனுடைய அரண்மனையும் அரசச் சுற்றத்தினருடைய வசிப்பிடமும் இருந்தன. நீர் வளத்தோடு நல்ல வேளாண்மை நிலங்களைக் கொண்டிருந்த இவ்வகண்ட நிலப்பரப்பு பிற் காலத்தில் செம்மண் பாலை நிலமாக எவ்வாறு மாறியது என்பது புதிர்மையான கேள்வி. மணற் பாங்காக உள்ள இத்தேரிக்காடு தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி என்பது குறிப் பிடத்தக்கதாகும். வெளிர் சிவப்பு வண்ணத்தில் சிறுசிறு மணற் குன்றுகளும் (மணல்மேடுகள்) சரிவான பெருங்கிண்ணம் போன்ற பள்ளங்களும் கொண்ட, அகண்ட, மணற்பரப்பினைத் தேரி அல்லது தேரிக்காடு என்று இங்குள்ள மக்கள் தம் வழக்கில் குறிப்பிடுகின்றனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக அமைந்த பெருங்கிண்ணம் போன்ற பள்ளங்களில் பசுமைக் குவியல்களாகப் பனைமரங்கள், ஆல் போன்ற தாவரங்கள் செழித் தோங்கிப் பாலைவனச் சோலைகளை நினைவூட்டு கின்றன.

மக்களுடைய வாய்மொழி வழக்காறுகளின் அடிப்படையில், தேரிக்காடு உருவானமை பற்றிய விளக்கங்கள் நமக்குக் கிட்டுகின்றன. முற்காலத்தில் ஒரு நாடாக விளங்கிய நிலப்பகுதி இன்று தேரி வனமாகக் காட்சியளிப்பதற்குரிய காரணம் என்ன? ‘இடையர் சமூகத்தைச் சேர்ந்த விதவை ஒருத்தியின் சாபத்தால்தான் வளமான நாடு, மண்மாரி பெய்து தேரிக்காடாக மாறியது.’ இந்த சம்பவத்தை விவரிக்கும் ஒரு கதை, கற்குவேல் அய்யனார் கோயில் பூசாரிகள், வழிபடும் பக்தர்கள், கோயிலின் பட்டரைக் காரர்கள், அவ்வட்டார மக்கள் போன்றோரிடம் வழங்குகிறது. அத்துடன் வில்லிசைக் கலைஞர் களால் கதைப் பாடலாகவும் இக்கதை பாடப் படுகிறது.

விதவை இடைச்சியின் கதை இப்போது தேரிக்காடாக விளங்கும் அந்நிலப் பகுதி முன்னர் ஒரு குறுநில மன்னனின் ஆட்சிக் குட்பட்ட நாடாகத் திகழ்ந்தது. மானவீரவளநாடு எனும் அந்நாட்டின் பொதுமக்களுக்குக் குடி தண்ணீர் வழங்கிய கிணறு ஒன்று ஊரின் புறத்தே இருந்தது. கிணற்றுக்கு அருகில் ஒரு மாமரம் இருந்தது. மிகவும் விசேடமான மாமரம் அது. ஆண்டுக்கு ஒரு முறை ஒரே ஒரு பூ பூக்கும். அது பிஞ்சாகிக் காயாகிக் கனியும். கனிந்தவுடன் அதனைப் பறித்துச் சென்று சேவகர்கள் பாது காப்பாக மன்னனிடம் சேர்த்துவிடுவார்கள். ஏதோ அசாத்தியமான சக்தி உள்ள மாங்கனியாம் அது. அந்த ஆண்டிலும் மாமரத்தில் ஒற்றை மாங்காய் காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்தது. இருபத்து நான்கு மணிநேரமும் மாமரத்துக்கு மன்னனுடைய சேவகர்கள் காவல் காத்து நின்றனர். எந்நேரமும் பெண்கள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்த வண்ணமிருந்தனர். மாங்கனியை யாரேனும் தெரியாமற் பறித்துச் சென்றுவிடக் கூடாதல்லவா? அதனால்தான் காவல் போடப்பட்டிருந்தது.

அந்த ஊரில் இடைச்சாதிப் பெண்ணொருத் தியும் இருந்தாள். விதவை; தனியாக வசித்து வந்தாள். வீதி முதலிய பொது இடங்களில் விதவை மற்றவர் எதிரில் வருவது போவது அபச குணம் என்று விலக்கப்பட்டிருந்தால், அவள் யாருடைய கண்ணிலும் படாதவாறு வீட்டுக் குள்ளேயே இருப்பாள். குடிதண்ணீர் எடுக்கவோ வேறு வீட்டுத் தேவைக்குரிய பொருட்களைப் பெறவோ அவள், மனித நடமாட்டம் குறைந்த அதிகாலைப் பொழுதிலோ, அல்லது மாலையில் ‘கையெழுத்து மறையும்’ நேரத்திற்குப் பின்ன ரோதான் வெளியே வருவாள். அன்று வழக்கம் போல் யாரும் படுக்கையைவிட்டு எழுந்திராத அதிகாலை வேளையில் குடி தண்ணீர் எடுப் பதற்காகக் கிணற்றடிக்குப் போனாள். பனை ஓலைப் பட்டையைக் கிணற்றில் விட்டுத் தண்ணீர் ‘சேந்தி’, தான் கக்கத்தில் எடுத்து வந்த குடத்தில் ஊற்றிக் கொண்டாள். அவள் தண்ணீர் எடுப் பதற்கு முன்னரே மாமரத்திலிருந்த அந்த ஒற்றை மாங்கனி கிணற்றுக்குள் விழுந்திருந்தது. அவள் தண்ணீர் எடுக்கும்போது அக்கனி அவள் அறியா மலேயே பனை ஓலைப்பட்டைக்குள் புகுந்ததோடு அல்லாமல், அத்தண்ணீரைத் தனது குடத்திற்கு மாற்றும்போது தண்ணீரோடு சேர்ந்து குடத் திற்குள் விழுந்துவிட்டது. இதை அறியாத அவள், தண்ணீர்க் குடத்தோடு வீட்டுக்குச் சென்று விட்டாள்.

இந்நிலையில், விடிந்ததும் காவலுக்கு வந்த சேவகர்கள், மாமரத்தில் இருந்த மாங்கனி காணாமற் போயிருந்ததை அறிந்து பதைபதைத்துப் போனார்கள். மன்னருக்குத் தகவல் பறந்தது. ஒவ்வொரு வீடாகச் சோதனை போட்டுக் கனியையும் அதைத் திருடியவரையும் கையோடு கொண்டு வருமாறு மன்னர் உத்தரவிட்டார். சேவகர்கள் வீடு வீடாகப் போய்த் தேடினார்கள். அந்த விதவையின் வீட்டில் சோதனையிட்ட போது, குடி தண்ணீர்க் குடத்தில் மாங்கனி இருந்ததைச் சேவகர்கள் கண்டுபிடித்தனர். கோனார் வீட்டுக் கைம்பெண் ஒருத்திதான் மாங்கனியைத் திருடிச் சென்றவள் என்று செய்தி பரவியது. மன்னனின் முன்னர் அவள் இழுத்துச் செல்லப்பட்டாள். மன்னனுடைய பரிவாரங்கள் எல்லாம் புடை சூழ்ந் திருந்தன. அந்தப் பரிவாரங்களில் ஒருவராகத் தலைமை அமைச்சராக இருந்தவர் அய்யனார்.

“நீதானே மாங்கனியைத் திருடியவள்?” மன்னரின் விசாரணை தொடங்கியது. “சாமி சத்தியமா நான் மாம்பழத்தைத் திருடவில்லை” என்று அவள் குற்றச்சாட்டை மறுத்தாள். “நீ திருடவில்லை என்றால் உன் வீட்டிற்குள் இருந்த தண்ணீர்க் குடத்தில் மாங்கனி எப்படி வந்தது? செய்த குற்றத்தை மறைக்காமல் ஒப்புக்கொள்” என்று பிடிவாதமாக அவளைக் குற்றவாளி ஆக்கினார் மன்னர். “மாம்பழம் என் குடத்திற்குள் எப்படி வந்தது என்று எனக்கே தெரியாது. ஏதோ மாயமா இருக்கு. ஆனால் மனதறிந்து நான் எந்தத் தப்பும் செய்யவில்லை” என்று தான் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்க எவ்வளவோ மன்றாடிப் பார்த்தாள். ஆனால் மன்னன் அதனை ஒப்புக் கொள்ளவில்லை. “மாம்பழத்தைத் திருடியவள் அவளே” என்று உறுதியாக இருந்தான். தலைமை அமைச்சராக இருந்த அய்யனார் மன்னனிடம் பணிவாக எடுத்துச் சொன்னார். “அவளைப் பார்த்தால், அப்பாவிப் பெண்போல் தோன்று கிறாள். நிச்சயமாக அவள் மாங்கனியைத் திருடி யிருக்கமாட்டாள். அவளை அறியாமல் ஏதோ நடந்திருக்கிறது. பாவம், கைம்பெண். அவளை மன்னித்துவிட்டுவிடுங்கள்...” அய்யனாரின் அறி வுரையும் வேண்டுகோளும் மன்னனுடைய மனத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அருகில் இருந்த ஏனைய அரசப் பரிவாரங்களோ “அவளே குற்ற வாளி. மன்னவன் தின்ன வேண்டிய அரிய மாங்கனியைத் திருடியது மிகப்பெரிய குற்றம், அவளுக்குக் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்” என்று மன்னனுக்கு உசுப்பேற்றி னார்கள். “மாங்கனியைத் திருடியவளுக்கு மரணத் தண்டனை கொடுத்துத் தீர்ப்பளிக்கிறேன்” என்று மன்னன் முடிவை அறிவித்தான்.

குற்றவாளியின் உடம்பில் வைகோற்பிரியைச் சுற்றி, உயிரோடு தீ வைத்து எரித்துக் கொல்வது என்பது அந்நாட்டில் மரணத் தண்டனையை நிறை வேற்றும் முறையாக இருந்தது. அவளை நிற்க வைத்து உடல் முழுவதும் வைகோற்பிரியைச் சுற்றினார்கள். ஊர்கூடி வேடிக்கை பார்த்தது. வைக்கோற்பிரி சுற்றப்பட்ட உடலோடு நின்றிருந்த அந்த அபலைக்கு ஒருவன் தீ வைத்தான். நல்லது - கெட்டது என்று வேறுபாடு அறியாத தீயின் சுடர்கள் அவளைப் பற்றிப் படர்ந்தன. “எந்த பாவமும் அறியாத என்மேல் அபாண்டமாகக் குற்றம் சுமத்தி, என்னைக் கொன்னவங்க எல் லோருக்கும் குடி அற்றுப்போவணும். நீதி தவறிய இந்த மன்னனுடைய நாடு, மண்மாரி பெய்து மண்மேடு ஆவணும்...” என்று சாபம் விட்டவாறு அவள் எரிந்து கீழே சரிந்தாள். அவள் சாபம் பொய்த்துப் போய்விடவில்லை. எங்கும் காணாத அதிசயமாக அந்நாட்டில் தொடர்ந்து மண்மாரி பெய்தது. விரைவில் அந்நாட்டின் பெரும்பகுதி மணல் சூழ்ந்து அழிந்து போயிற்று. எல்லோரும் அழிந்து போயினர். அபலை ஒருத்தி அபாண்ட மாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கொல்லப்பட்ட அவலத்தை நேரில் பார்த்ததும், அதனைத் தடுத்து நிறுத்த முடியாத இயலாமையும் அய்யனாரின் மனதைச் சுட்டெரித்தன. முறை தவறிய மன்ன னுடைய நாட்டில் அமைச்சராக இருப்பதைவிடச் சாவதே மேல் என்று நினைத்தவராக அமைச்சர் பதவியை உதறிய அய்யனார் கால் போன திசையில் நடந்தார். சென்ற திசையில் கற்குவாளை என்னும் மரம் ஒன்று நின்றிருந்தது. அது இரண் டாகப் பிளந்து அய்யனாரைத் தனக்குள் வாங்கி மூடிக்கொண்டது. கற்குவாளை மரத்தின் அருகே சென்றவர், திடீரென்று மறைந்துவிட்டது கண்ட அவருடைய பரிவாரத்தினர் திகைத்துப் போய் நின்றனர்... (கதை கூறியவர்: கோயிற் பூசாரிகளில் ஒருவர்)

பிற்காலத்தில் மண்ணில் புதையுண்டிருந்த இக்கற்குவாளை மரத்தின் மக்கிப்போயிருந்த வேர்ப்பகுதியிலிருந்து, சில அதிசய நிகழ்வுகளின் வாயிலாகக் கற்குவேல் அய்யனார் தோன்றியதும், ஆடுமேய்க்கும் கோனார் சகோதரர்கள் அய்யனாருக்குக் கோயில் கட்டியதும் வரலாறு. (ஹ. னுhயயேதேயலயn, 2011: 39 - 45)

அபாண்டமாகத் தண்டிக்கப்பட்ட விதவையின் சாபத்தால் மானவீரவளநாடு மண்மாரி பெய்து அழிந்து போனதையும் அந்நாட்டின் அமைச்சர் கற் குவாளை மரத்தில் திடீரென்று மறைந்த சம்பவத் தையும் மேற்கண்ட புராணக்கதை சித்திரிக்கிறது. வில்லிசைப் பாட்டிலும் வாய்மொழியாக வழங்கும் கதைகளிலும் மேற்கண்ட கதையின் சம்பவங் களோடு கூடுதல் குறைவான நிகழ்ச்சிகளை இணைத்துக் கொண்டிருக்கும் மாற்று வடிவங் களைப் படிக்கவும் தகவலாளிகளிடமிருந்து கேட்கவும் நேர்ந்தது. மானவீரவளநாடு மண்மாரி பெய்து தேரிக்காடாக மாறியது குறித்து மற்றொரு சேகரிப்பாளர் சேகரித்த கதை, மேலே விவரிக்கப் பட்ட கதையிலிருந்து ஒரு சில கூறுகள் என்னு மளவில் சிறிது மாறுபட்டிருக்கிறது.

அப்பகுதி வருமாறு:

மாம்பழம் கிடைத்த செய்தியை இராசா வுக்குத் தெரியப்படுத்துகிறார்கள். உடனே இராசா பழத்தை எடுத்தவர் யாராயினும் அவரை மொட்டை யடித்துக் கரும்புள்ளி செம்புள்ளிக் குத்தி நிர்வாண மாக இழுத்துக்கொண்டு வருமாறு ஆணையிட்டார் உடனே மந்திரி கற்குவேல் அய்யனார், “தீர விசாரிக் காமல் இப்படித் தண்டனை கொடுப்பது தவறு. ஆணையை மாற்றிக் கொள்க” என்று மன்னருக்கு அறிவுரை கூறினார். மந்திரி சொன்ன அறிவுரையை இராசா செவி கொடுத்துக் கேட்கவில்லை. இராசா ஆணையிட்டவாறே அவ்விதவைப் பெண்ணின் தலையை மொட்டை அடித்துக் கரும்புள்ளி - செம்புள்ளி குத்தியதோடு அவளை நிர்வாண மாக்கி அவமானப்படுத்தினார்கள். மானம்போன பின்னர் வாழக்கூடாது என்று முடிவு செய்து அவள் இறந்து போனாள். அவ்வாறு இறப்பதற்கு முன்னர் “எனக்கு அநீதி செய்த இந்த மன்ன னுடைய நாடு மண்ணோடு மண்ணாகட்டும். கண்ணில் கண்டதைச் சொன்ன கற்குவேல் அய்ய னார்க்கு மட்டும் சொளவு (முறம்) போல இடம் கிடக்கட்டும். அது பூங்காவனமாக இருக்கட்டும். மற்ற எல்லா இடமும் மண்மாரி பெய்து அழி யட்டும்” என்று மண்ணை வாரிவிட்டுச் சாபம் விட்டாள். அந்தச் சாபத்தின்படியே அந்நாட்டில் மண்மாரி பெய்தது. நாடு அழிந்தது. அய்யனார் இருந்த இடம் மட்டும் தப்பியது. இப்போதும்கூட கற்குவேல் அய்யனார் கோயிலைச் சுற்றிச் சொளவு வடிவில் இடமும், அதில் பச்சைப் பசேல் என மரங்கள் அடர்ந்த தோப்பும் உள்ளன. கோயிலைத் தவிர ஏனைய இடமெல்லாம் செம்மணல் மூடிய தேரியாக உள்ளது. இவ்வாறு சபித்தவள் இடையர் குலப் பெண்ணாவாள் (சேகரிப்பாளர்: திரு. சுப்பையா).

மேலும் பல மாறுதல்களோடு கூடிய கதை ஒன்று வில்லிசைப் பாடல் மூலம் பாடப்பட்ட கதைப்பாடலின் சுருக்கமாக தசரதன் எழுதிய நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இடையர் குலத்தைச் சேர்ந்த ஓர் இளம் விதவை வைகறையில் சுனையில் நீராடி, அய்யனை வழிபட்டு, குடத்தில் நீர் எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண் டிருந்தாள். அவள் ஆடவர்கள் கண்ணில் படாத வாறு வந்து சென்றுவிடுவாள். சுனையிலுள்ள மரத்தில் மாங்கனியொன்று மிகவும் அதிசயிக்கத் தக்க வகையில் பழுத்திருந்தது. அது சுனை நீர்த் தேக்கத்தில் வீழ்ந்து அப்பெண்ணின் குடத்துள் அவளை அறியாமல் புகுந்துவிட்டது. மாங்கனி திருடப்பட்டதாகச் சுனையைக் காத்து நின்ற காவலர்கள் அறிந்தனர். அதிகாலையில் குளிக்க வரும் இடையர் வீட்டுப் பெண்தான் அதைத் திருடியிருக்க வேண்டும் என முடிவு செய்தனர். ‘கனி திருடிய கள்ளி’ என அவளைக் குற்றம் சாட்டினர். அவள் சபையில் நிறுத்தப் பட்டாள். சபையில், தான் கனி திருடிய கள்ளி அல்லள் என அப்பெண் முறையிட்டாள். சுனை அய்யனார் அவள் முறையீட்டை மதித்து, அவள் குற்ற மற்றவள் என ஆராய்ந்து பார்க்குமாறு கூறினார். கருக்குவேலய்யனாரும் அவள் குற்ற மற்றவள் எனக் கூறிச் சபையிலிருந்த தன் பரிவாரங் களுடன் வெளியேறினார். பிற அய்யனார்கள் ‘அவள்தான் குற்றவாளி’ என வாதிட்டனர்.

ஒன்றுமறியாத அப்பெண் தன்னைக் குற்றம் சாட்டி தண்டனை அளிப்பதாகக் கூறியவர்கள் மண்மாரியால் அழிந்துபோகுமாறு சாபமிட்டாள். தனக்காகப் பரிந்துபேசிய சுனை அய்யனார் அம்மண் மாரியிலிருந்து அழியாதிருக்கும்படியும், கருக்குவேலய்யனாருக்கும் அவருடைய பரிவாரங் களுக்கும் மேன்மேலும் புகழ் சேரும்படியாகவும் அவள் வாழ்த்தினாள். மண்மாரி பெய்து, பிற அய்யனார் கோயில்களும் குடியிருப்புகளும் அழிந்து போயின. மானவீரவள நாட்டின் பெரும்பகுதி மணலால் மூடப்பட்டு அழிந்துபோயிற்று. (ஆ.தசரதன் 2005: 82 - 83). சுனையை ஒட்டிய வட்டாரங்களில் வில்லுப்பாட்டாகப் பாடப்படும் இக்கதையைப் பெரும்பாலும் தளவாய்புரத்துக் கோனார் சமூகப் பாடகர்களே பாடுகின்றனர் என தசரதன் கூறுகிறார்.

இதுவரையில் ஒரு சில வேறுபாடுகளை (Variations) மட்டும் கொண்ட ஓர் அரிய பெரும் நிகழ்ச்சியைப் பற்றி எடுத்துரைக்கும் கதையின் திரிபு வடிவங்களைப் பார்த்தோம். இனி, சுனையில் நீரெடுத்தல், மாங்கனி குடத்திற்குள் விழுதல், மன்னனுடைய சேவகர்கள் பெண்ணொருத்தியை மாங்கனி திருடியவள் எனக் குற்றம் சாட்டி அவளை அவமானப்படுத்துதல், தண்டித்தல், சபித்தல், மண் மாரி பெய்தல், நாடு அழிதல் ஆகிய கதைக் கூறுகளின் அடிப்படையில் வலங்கை நூல் என்னும் வெங்கலராஜன் கதை (வெங்கலராஜன் காவிய விற்பாட்டு)யின் ஒரு பகுதி மட்டும் மேற் கண்ட கதைப் போக்கோடு எவ்வளவு ஒத்துக் காணப்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.

சங்குமுகத்தழகியின் கதை

வெங்கலராஜன் என்பவன் தன் குடும்பத்தின ரோடு இலங்கையிலிருந்து வந்து தெற்கு நாஞ்சில் நாட்டின் பறக்கை நகரில் வெண்கலக் கோட்டை கட்டி வாழ்ந்தான். அவனுக்கு இரண்டு மகள்கள்; ஒருவர் பெயர் திரைமுகத்தழகி; மற்றவர் பெயர் சங்கு முகத்தழகி. இவர்களைப் பறக்கை நகர் ஆறாட்டு விழாவில் காணும் வஞ்சி மன்னன், திரை முகத்தழகியைத் திருமணம் செய்துகொள்ள விரும்பு கிறான். ஆனால், அவனுக்குப் பெண் தருவதற்கு வெங்கலராஜன் மறுத்துவிடுகிறான். இதனால் கோபமுற்ற வஞ்சி மன்னன், வெங்கலராஜன் கோட்டையைத் தாக்குகிறான். தன்னால் ஏற்பட்ட தகராறுக்குத் தானே முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய திரைமுகத்தழகி, தன் தலையை வெட்டிக் கோட்டைக்கு வெளியில் வீசுமாறு தந்தையிடம் வேண்டுகிறாள். மனவேதனையோடு அவனும் ஒப்புக்கொண்டு அவ்வாறே செய்கிறான். அது கண்டு வருந்திய வஞ்சி மன்னன் அத்தலையைச் சந்தன விறகால் எரித்து ஒரு பொய்கையில் காடாற்றிவிட்டு திருவிதாங்கோட்டிற்குத் தன் படையுடன் சென்றுவிட்டான்.

நாஞ்சில் நாட்டில் தொடர்ந்து வசிக்க விரும்பாத வெங்கலராஜன், தன்னுடைய இனத் தாருடன் மானவீரவள நாட்டின் (வீரவளாநாடு) வட எல்லைப் பகுதியிலிருந்த குரும்பூரில் கோட்டை கட்டி அதில் வசிக்கலானான். அப்போது குரும்பூர் நாட்டினை ஆண்டவன் நளராசன். ஒரு நாள் தோழியருடன் பொய்கையில் நீராடிவிட்டுத் தலை கோதியபோது சங்குமுகத்தழகியின் பன்னிரண்டு முழநீள ஒற்றை முடியொன்று காற்றில் பறந்து வந்து நளராசன் ஏறிச் சென்ற சிவிகைக் கொம்பில் சுற்றிக்கொண்டது. அவ்வளவு நீளமான முடியைப் பார்த்து ஆச்சரியமடைந்த நளராசன், அம்முடிக் குரிய பெண்ணழகியைத் தான் மணமுடிக்க விரும்பு வதாக அறிவித்தான்.

“பன்னிருசாண் முடியுடைய பாவையரைக் கண்டதில்லை

பாவலரே காவலரே என்ன

இந்தமுடி யுள்ளபெண் களிவ்வுலகி லுண்டோடா

இப்படியும் பெற்று வளர்த்தாரோ

கண்டதில்லை யிப்படிப்பெண் காசினியி லே நாமும்

கலியாணஞ் செய்ய வேணு மென்ன

அன்றரச னும்மயங்கி ஆசைத்துய ராலேயவர்

அகங்குழைத்து மெய்மறந்து நின்றார்”

(வெங்கலராஜன் காவியம்)

‘சாதி வலங்கைத் தலைவனான வெண்கல ராஜன், குரும்பூர் நாட்டு மன்னன் நளராசன் தனக்கு நிகரானவன் அல்லன். ஆதலால் அவனுக்குப் பெண் கொடுக்க முடியாது’ என்று சொல்லி ஓலை கொண்டு வந்தவனை விரட்டி அடித்தான். அது கேட்டு வெகுண்டெழுந்த நளராசன், கோட்டைக்குள் புகுந்து சங்குமுகத்தழகியைச் சிறையெடுத்து வரு வேன் என்றுரைத்தான். ஆனால், பெண்ணைச் சிறையெடுத்தால் உலகம் அதனை ஏற்காது. ஆகை யால் ‘மந்திரத்தால் கபடு செய்து வரவழைத்து நாமெல்லாம் சந்தியிலே கொண்டு வந்து தாரணி யோர் தாமறிய கள்ளியென்று அவள்தனையும் கவல் படுத்த வேண்டுமென்று மந்திரிகள் மன்னனுக்குப் பக்குவமாக எடுத்துரைத்தனர். அவ்வாறே சுனையில் மாமரத்தில் மந்திரத்தால் மாங்கனி காய்த்துத் தொங்க ஏற்பாடு செய்தனர். சுனையில் குளித்து விட்டு நீரெடுத்துச் சென்ற சங்குமுகத்தழகியின் குடத்தினுள் மாயமாங்கனி விழுந்தது. சுனையில் கனியைக் காணவில்லை என்று செய்தி போனது. நளராசன், வீடுவீடாகச் சென்று தண்ணீர் எடுத்துச் சென்ற பெண்களுடைய குடங்களைச் சோதிக்கக் கட்டளையிட்டான். வீடுதோறும் தேடினர். யாருடைய வீட்டிலும் மாங்கனி கிடைக்கவில்லை. மன்னவன் நளராசன் உத்தரவுப்படி சேவகர்கள் வெங்கலக் கோட்டைக்குள் சென்று அங்கிருந்த சங்குமுகத்தழகியின் கைக்குடத்தைப் பார்த்தார்கள். கைக்குடத்துக்குள்ளாகக் கனியிருக்கக் கண்டார்கள். உடனே ஆரவாரத்துடன் அவளைக் குடத்தோடும் மாங்கனியோடும் தெருவில் இழுத்துச் சென்றனர். மகளை இவ்வாறு இழுத்துச் செல்வதைக் கண்ட வெங்கலராஜன். ‘மானம் - மரியாதை போய் விட்டதே உலகம் சிரிக்குமே’ என்று மனம்

நொந்து, கதவுகளைப் பூட்டச் செய்து, கோட்டைக் குள்ளிருந்து குடும்பத்தாரோடு தற்கொலை செய்து கொண்டான்.

திருக்கனியைக் களவாண்ட கள்ளிதனைக் கண்டோம் என்று சங்குமுகத்தழகியை நளராசன் முன்நிறுத்திக் குடத்தையும் மாங்கனியையும் கீழே வைத்தனர். ‘என்னுடைய நாட்டிலிருந்து கொண்டு என் கனியைப் பறித்தவள் மன்னவள் மகளா னாலும் விடமாட்டேன். மரியாதை கெடுத்திடு வேன்’ என்று சீறிப் பாய்ந்த நளராசன்,

“கொண்டைதனைக் குலையுமடா குறடு கொண்டு அடியுமடா

வண்டத்தனஞ் செய்தவளை மயிர் முடியை அறுவுமடா

மயிர் முடியைத் தான் பகிர்ந்து மரத்தோடே கட்டுமடா

வயிராக்கி யமாக வலுவுடனே நிற்குகிறாள்

முட்டாக்கை குலையுமடா முடியைப் பிடித்து இழுவுமடா

பட்டாலே பொதிந்திருந்த பழிகாரி சரீரமதில்

கிட்டியிட்டு அடியுமடா கீறுமடா சரீரமதை

மட்டிபெற்ற மகள் தனக்கு மானமுண்டோ சுனையுமுண்டோ

முள்ளுவெட்டி அடியுமடா மூளிநாயைக் கடிக்கவிடு

தெள்ளுமகள் பெண் தனக்கு தேசமதில் சரியில்லையாம்

கள்ளிக்கனி பறித்தவளைக் கட்டிக்கொண்டு வாருமென்றான்

கொள்ளையிட்டு அவளுடைய கோட்டையில் தீக்கொழுத்து மென்றான்

நாட்டிலிருந்தக் கள்ளிதனை நாலு பெயர் தானறிய

கேட்டவளை நாலு துண்டாய் கீறிநடை தனில்தூக்கும்”

(வெங்கலராஜன் காவியம்)

என்று கூறியதைக் கேட்டுத் தன்னை நளராசன் கொல்லப் போகிறான் என்பதை அறிந்த சங்கு முகத்தழகி துணிவோடு, எதிர்நின்று அவனுடைய அதர்மங்களுக்காக அவனைப் பலவாறு ஏசினாள். ‘உன்னாலே நீ முடிவாய் உன்குலமும் தான் முடியும்’ என்று சபித்தாள்.

“கற்புடைய சிறீயானால் கன்னிபெற்ற மகளானால்

அற்பத்திலே நீமுடிவாய் அரும்பாவி உன்நாடு

மண்மாரி பொழியுமடா மாபாவி நளராசா

எண்ணமற்றாய் உன்நாடு இயல்கூகை அடையுமடா

கூகையது அடையுமடா குட்டிச் சுவராகுமடா

மாயையினால் மாயவினை வந்து உன்னைச் சூழுமடா

வெளவாலும் அடையுமடா வாழ்வுகுன்றி நீ முடிவாய்

எவ்வாறும் உன்நாடு இப்போது அழியுதடா”

(வெங்கலராஜன் காவியம்)

என்று சாபம் கூறிய சங்குமுகத்தழகி, தன்னாலே தந்தை முதலியோர் இறந்துவிட்ட நிலையில் தானும் சாக வேண்டும் என்றெண்ணிக் கடவுளிடம் வேண் டினாள். கடவுள் மனமிரங்கி அவள் வேண்டுதலை நிறைவேற்றினார். சங்குமுகத்தழகியின் கற்பின் வலிமையால் அவள் விடுத்த சாபம் செயல்பட லாயிற்று. நளராசனின் குரும்பூர் பட்டணம் மண் மாரி, கல்மாரி பெய்து அழியத் தொடங்கியது. கற்குவேல் அய்யனாரும் இளம்பாளை அய்யனும் தத்தம் பரிவாரங்களுடன் நளராசனின் நாட்டை மேலும் தாக்கி அழிக்க வந்தனர். ஆனால் சங்கரன் துணையால் மண்மாரி பெய்து நளராசன் நாடு முற்றிலும் அழிந்தது. கற்குவேல் அய்யன் தன் பரி வாரத்துடன் நின்ற இடம் மட்டும் மண்மாரியால் மூடப்படாமல் தப்பியது. குரும்பூர் பட்டணம் அழிந்தது. மன்னனுடைய குடும்பத்தினர், சுற்றத் தினர், மக்கள் யாவரும் மண்மாரியால் அழிந்தனர். அவனுடைய சேனைகளும் அழிந்தன. அங்கிருந்த வெங்கலராஜன் கோட்டையும் மண்மூடிப் போனது.

மண்மாரியால் தான் அழிந்துவிடக்கூடும் என்றஞ்சிய நளராசன் தன்னுடைய ஆட்களோடு திருச்செந்தூர் நோக்கி ஓடினான். அங்கு ஆறுமுக நயினாரை அடிதொழுது வணங்கித் தன்னைக் காக்குமாறு வேண்டினான். ஆனால் அவரோ “பெண் பாவஞ் செய்தவனே, பெரும்பாவி நளராசா, கண்ணெதிரே நில்லாதே! கடலில் போய் விழு” என்று கோபத்துடன் கூறவே, அடைக்கலம் கிடைக்காத நிலையில், நளராசன் கடலில் வீழ்ந்து மாண்டு போனான்.

இவ்வாறு வெங்கலராஜன் காவியத்தின் பிற் பகுதி சங்குமுகத்தழகியின் சாபம் காரணமாக குரும்பூர் பட்டணம் மண்மாரி பெய்து மண் மேடாக அழிந்துபோனதை விவரிக்கிறது.

தன்னுடைய சாபத்தால் மண்மாரி பெய்ய வைத்து ஒரு நாட்டையே அழித்த சங்குமுகத் தழகியைப் பற்றிப் பேசும் வெங்கலராஜன் காவியக் கதையைப் போலவே தன்னுடைய கற்பின் வலிமை யால் கணக்கன் குடியிருப்பு என்னும் ஊரைச் சாபத்தின் மூலம் மண்மாரி பெய்யச் செய்து அழித்தவளான சேசுமரியாயியைப் பற்றி மற்றொரு கதை பேசுகிறது.

சேசுமரியாயி கதை

சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மானவீரவள நாட்டின் தென்பகுதியிலிருந்த கணக்கன் குடியிருப்பில் சேசுமரியாயி வாழ்ந்து வந்தாள். ஏழைப் பனைஏறியின் மகள். ஒரு நாள் அவளுடைய தந்தை பனைமரத்திலிருந்து கீழே தவறி விழுந்து இறந்து போனார். குடும்பம் வறுமையில் வாடியது. சேசுமரியாயி மிகவும் அழகானவள். அவளுடைய வறுமையைப் பயன் படுத்தி அவளைப் பல இளைஞர்கள் அடைய வேண்டுமென்று வட்டமிட்டனர். அவர்களுள் ஒருவன் அவ்வூரைச் சேர்ந்த செல்வந்தருடைய மகன். எவ்வளவு முயன்றும் அவனால் அவளைத் தீண்ட முடியவில்லை. இதனிடையே மகள் விரும்பிய வாறு சூசைமுத்து என்னும் இளைஞனுக்கு அவளை அவள் தாய் மணமுடித்து வைத்தாள். தனக்குக் கிடைக்காத சேசுமரியாயியை அவள் கணவனோடு சேர்ந்து சந்தோசமாக வாழவிட மாட்டேன் என்று அந்தப் பணக்கார இளைஞன் வஞ்சகத்தோடு காத்திருந்தான். ஓராண்டு காலம் கழிந்தது. சூசைமுத்துவை ஒருநாள் அவ்விளைஞன் தந்திரமாகக் கொலை செய்து, விபத்தில் இறந்து விட்டதாக ஊராரை நம்ப வைத்தான்.

சேசுமரியாயி, கணவனின் மரணத்தால் மனம் ஒடிந்து போனாள். மகளின் துயரத்தைக் கண்டு சகிக்க முடியாத அவளுடைய தாயும் ஒருநாள் இறந்தாள். திக்குத் தெரியாமல் திகைத்து நின்றாள் சேசுமரியாயி. அவளைத் துரதிஷ்டக்காரி என்றும் அவள் முகத்தில் விழிப்பதே பாவம் என்றும் அவளை ஊரார் ஒதுக்கி வைத்தனர். ஆதரவற்று அனாதையாக நின்ற சேசுமரியாயி, ஒரு வாய் சோற்றுக்கும் வழியின்றித் தவித்தாள். அவளுக்கு உதவி செய்ய எவரும் முன்வரவில்லை. இந்நிலையில் அன்னை மரியாளிடம் தன்னுடைய துயரங்களைக் கொட்டி அழுது ஆறுதல் தேடினாள். ஒருநாள் அவள் கனவில் தோன்றிய அன்னை மரியாள் ‘ஓருயிர் ஜீவனுக்கும் உணவளிக்கும் தேவன் உன்னை மட்டும் கைவிட்டு விடுவாரோ? இறை வல்லமையின் மகிமையைக் காலையில் காண் பாய்’ என்று கூறி மறைந்தாள்.

மறுநாள் காலையில் தன் வீட்டு வாசலி லிருந்த ஆலமரத்தில் கூடுகட்டி வாழ்ந்த நாரைகள் நாள்தோறும் இடும் எச்சங்களைக் கூட்டி வாசலைத் தூய்மை செய்வதற்காக வெளியில் வந்த சேசுமரி யாயி, அந்த ஆச்சரியத்தைப் பார்த்தாள். ஆலமரத் தடியில் நாரைகளின் எச்சங்களுக்கிடையே ஏராள மாக மீன்கள் சிதறிக்கிடந்தன. இரவில் கண்ட கனவை நினைத்துப் பார்த்த சேசுமரியாயி, ‘இதெல்லாம் அன்னை மரியாளின் திருவிளை யாடல்’ என்று அறிந்து கொண்டவளாக அம்மீன் களைச் சேகரித்துச் சமைத்து உண்டாள்.

அன்று முதல் கணக்கன் குடியிருப்பின் அருகி லிருந்து புத்தன் தருவைக் குளத்திலிருந்து நிறைய மீன்களைப் பிடித்து, வாயில் கவ்விக்கொண்டு ஆலமரத்திலுள்ள தத்தம் கூடுகளுக்குத் திரும்பும் நாரைகள் அம்மீன்களை சேசுமரியாயின் வீட்டு வாசலில் போடுவதை வழக்கமாகக் கொண்டன. நாளடைவில் சேசுமரியாயி உணவிற்காகச் சமைத்துச் சாப்பிட்டது போக, எஞ்சிய மீன்களை விற்கத் தொடங்கினாள். இதனால் வயிற்றுப்பசியிலிருந்து மட்டுமல்லாமல் வறுமையின் பிடியிலிருந்தும் விடுபட்டாள்.

இந்தச் சம்பவங்களை அறிந்த செல்வந்தர் வீட்டு இளைஞன், “சேசுமரியாயிக்கு நாரைகள் மீன்களைக் கொண்டு வந்து கொடுக்கவில்லை. யாரோ கள்ளப்புருஷன் இரவில் வந்து அவளோடு தங்கிவிட்டு மீன்களைக் கொடுத்துச் செல்கிறான். இப்படிப்பட்ட விபச்சாரியை ஊரில் விட்டு வைக்கக் கூடாது” என்று மக்களைத் தூண்டிவிட்டான். அந்த இளைஞனுடைய சூழ்ச்சியை அறியாத ஊராரும் அவளை விபச்சாரி என்று பழிசுமத்தி, மன்னன் துறவிப் பாண்டியனின் சபையில் இழுத்துச் சென்று நிறுத்தினர்.

மன்னன் துறவிப் பாண்டியன், 1798ஆம் ஆண்டளவில் மானவீரவள நாட்டின் தென் அஞ்சுபத்து பகுதிகளில் ஒன்றான கணக்கன் குடியிருப்பை ஆண்டவன். பாண்டிய அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவன். வழக்குகளைப் பாகு பாடின்றி நடத்த வேண்டும் என்று கண்களைக் கட்டிக்கொண்டு நீதி வழங்கும் வழக்கமுள்ளவன். ஆனால், சேசுமரியாயின் வழக்கு விசாரணையில் மட்டும் அவன் தடம்புரண்டு விட்டான்.

தன் முன்னர் கொண்டு வந்து நிறுத்திய சேசு மரியாயியைத் துறவிப் பாண்டியன் விசாரித்தான். ஊராரும், செல்வந்தர் வீட்டு இளைஞனும் அவள் ஒரு விபச்சாரி என்று கூறி அவளுக்கு எதிராகச் சாட்சியமளித்தனர்.

சேசுமரியாயி, “நான் குற்றமற்றவள், பரிசுத்த மானவள், அன்னை மரியாளின் பக்தை, மாதாவின் துணையால் என் வீட்டு முற்றத்திலுள்ள ஆல மரத்தில் குடியிருக்கும் நாரைகள் தாம் மீன்களைக் கொண்டு வந்து போடுகின்றன. எனக்கு யாரோடும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் கெட்ட நடத்தை உடையவள் இல்லை. வேண்டுமானால் மன்னரே என் வீட்டிற்கு வந்து நாரைகள் மீன்களைக் கொண்டு வந்து போடும் உண்மைக் காட்சியை நேரில் கண்டு கொள்ளலாம்...” என்று வாதாடினாள். பொய்யர் களின் பேரிரைச்சலே எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்த சூழ்நிலையில் அவளுடைய குரலில் தொனித்த உண்மையையும் அவள் நிரபராதி என் பதையும் துறவிப் பாண்டியனால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. எனவே, அக்கால வழக்கத்தின்படி ‘nசுசுமரியாயை நடைவிளக்கெரித்துக் கொலை செய்யு’மாறு உத்தரவிட்டான்.

நடை விளக்கெரித்தல் என்பது அக்காலத்தில் விபச்சாரக் குற்றத்திற்கு அளிக்கப்படும் கொடுந் தண்டனையாகும். அதாவது குற்றவாளியின் தலையை மொட்டையடித்துக் கரும்புள்ளி - செம் புள்ளி குத்தி, கழுத்தில் எருக்குமாலை செருப்பு மாலை அணிவித்துச் சிறிய அளவில் சிலுவை வடிவம் செய்து தோளில் வைத்து, தலையில் முள் முடி வைத்து, இறுதியில் உச்சியில் சிறிய துளை யிட்டு எண்ணெய் ஊற்றித் தீ வைத்து எரிந்த நிலையில் ஊர்வலமாகக் கொண்டு செல்வர். தீ மெல்ல மெல்லப் பரவி பெருந்தீயாக மாற, குற்றவாளி துடிதுடித்துச் சாவார். இக்கொடுந் தண்டனை முற்காலத்தில் நடைமுறையில் இருந்தது.

மன்னனுடைய உத்தரவுக்கு இணங்க சேசு மரியாயிக்கு இந்தக் கொடிய தண்டனை நிறை வேற்றப்பட்டது. நெருப்பின் வெம்மையைத் தாங்காது அலறித் துடித்த அப்பெண், இறுதியில் சாபமிடத் துணிந்தாள். “மாதாவே நீயே சாட்சி. மாசற்ற என்னை, மாணபங்கப்படுத்திய கணக்கன் குடியிருப்பு அழியட்டும். மண்மாரி பொழியட்டும். மண்மேடாய்க் குவியட்டும். ஒருவர்கூட தப்பாது செத்தொழியட்டும்” என்று சாபம் விட்டவாறு உயிர்விட்டாள்.

சேசுமரியாயி என்ற அபலையின் சாபம், அகிலத்தை அதிரவைத்து, மண்மாரி பொழிந்தது. ஊரே அழிந்தது. அத்துடன் அன்னைமரியாளின் ஆலயமும் மண்ணுக்குள் புதைந்து மறைந்து போனது. (சொக்கன் குடியிருப்பு அதிசய மணல் மாதாகோயில் சிறப்பு மலர் 1999).

காரண விளக்கப் பழமரபுக் கதைகள்

இம்மூன்று கதைகளும் யாவர் துணையு மின்றி நிர்க்கதியாக விடப்பட்ட மூன்று அபலை களைப் பற்றிப் பேசும் கதைகளாகும். செய்யாத குற்றங்களுக்காக அபாண்டமாகக் குற்றம் சுமத்தப் பட்டு, அவர்களுடைய வாதங்களைச் செவிசாய்த்துக் கேட்காமல், முறையற்ற நீதிமுறை மூலம் மூன்று மன்னர்களால் கொல்லப்பட்டவர் தாம் அவ்வ பலைகள். கொல்லப்படும் முன் அவர்கள் விடுத்த சாபங்களால் மண்மாரி பெய்து மானவீரவள நாடு என்னும் நிலப்பகுதி முழுவதும் அழிக்கப் பட்டு, செம்மண்தேரிக்காடாகத் திரிபடைந்த அதிசயத்தைப் பற்றிப் பேசும் இக்கதைகள், குறிப் பிட்ட நிலத்தின் இயல்பைப் பற்றி எடுத்துரைக் கின்றன. செம்மண் தேரிக்காடாக ஓர் அகண்ட நிலப் பரப்பு இடையில் எப்படி மாறியது. அதற்கான காரணம் என்ன என்பது பற்றி நமக்கு வியாக்கி யானம் செய்கின்றன. பரந்த தேரிக்காட்டின் நடுவிலுள்ள கற்குவேல் அய்யனாரின் கோயில் வளாகம் மட்டும் முறம் போன்ற வடிவத்தில் ஏன் சமநிலமாக நல்ல நிலமாக இருக்கிறது, ஏன் பசுஞ்சோலையாக இருக்கிறது. என்பன போன்று கேள்விகளுக்கு விடையிறுக்கும் வகையில் ஒரு வகைத் தர்க்கத்தை இக்கதைகள் உள்ளடக்கி யுள்ளன. அதனால்தான் இந்தத் தன்மையைக் கொண்டிருக்கக்கூடிய கதைகளை எல்லாம் காரண விளக்கக்கதைகள் (Etilogical Tales) என்றோ ((Darly Cumber Dance 1976:3) காரண விளக்கப் பழமரபுக் கதைகள் அல்லது புராணங்கள் என்றோ மக்கள் வழக்காற்றியலர்கள் தனியாக அடையாளப்படுத்தி வகுத்துரைத்தனர். இவ்வகைக் கதைகளைத் ‘தோற்றப்பழமரபுக்கதைகள்’ (Origin Legends) என்றும் கூறுவர். சமயம் சார்ந்த மரபுகளோடு தொடர்புடைய அறிதல் சார்ந்த கண்ணோட்டங் களாக (Cognitive level)) அமையக்கூடியவையே தோற்றப் பழமரபுக்கதைகள். இந்தக் கதைகள் ‘ஏன்?’ என்னும் வினாவை எழுப்பும் மக்களுக்கு உரிய விடைகளைக் கொடுக்கக் கூடியவை (Juha Pentikaineni 1987:297) உலகம் முழுவதும் இத் தன்மையுடைய காரணவிளக்கக் கதைகள் ஏராள மாக வழங்குகின்றன. தமிழ்நாட்டில் வழங்கும் எண்ணற்ற காரண விளக்கக் கதைகளில் அடங்கு பவையே இத்தேரிக்காட்டுக் கதைகள். தமிழகத்தின் நிலப்பகுதிகளில் தனித்தன்மையோடு விளங்கும் பாலைவனம் போன்ற தேரிக்காடு உருவான பின்னணியை விளக்கும் ஐதிகங்களாக விளங்கு வதாலும் அப்பகுதிவாழ் மக்கள் மரபுகளாகத் திகழ்வதாலும் இவற்றுக்குத் ‘தேரிக்காட்டுக் கதைகள்’ எனக் கட்டுரையாளரால் பெயரிடப் படுகின்றன.

மூன்று கதைகளிலும் பெண்கள் (கைம் பெண்கள் இருவர், கன்னிப்பெண் ஒருவர்) ஆண் களை எதிர்த்துக் குரலையெழுப்புவதாக உள்ளது. மூன்று ஆண்களுமே ஆளும் அதிகாரத்தைக் கொண்டிருந்த ஆட்சியாளர்கள் - மன்னர்கள் மூவரும் (மானவீரவளநாட்டு மன்னன், குரும்பூர் நளராசன், துறவிப் பாண்டியன்) தத்தம் ஆளும் அதிகாரம் என்னும் பலத்தை, எதிரிகள் செய்த தாகச் சொல்லப்பட்ட குற்றங்களைப் பற்றி முறை யாக விசாரிக்காமல், ஆராய்ந்து பார்க்காமல், குற்ற வாளிகளாகக் கருதப்பட்டவர்களுக்கு எதிராக அநீதிக்கு ஆதரவாகப் பிரயோகித்தவர்கள். “அர சியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்” என்பது சிலப்பதிகாரம் முன்வைத்த கருத்து (பதிகம் 55). ஆராய்ந்து பார்க்காமல் கோவலன் கொல்லப்படுவதற்கு வித்திட்ட முறைதவறிய தீர்ப்புக்காகத் தன் மனசாட்சியின் உந்துதலால் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டவன் பாண்டிய மன்னன். அவன் தன் கணவனுக்கு அநீதி இழைத் தமைக்காக அவனை எதிர்த்துத் தன்னந்தனியாகப் போராடி நீதியை நிலைநாட்டியதோடு அல்லாமல், அநீதியாளன் ஆண்ட பாண்டிய நாட்டின் தலை நகரான மதுரை மாநகரம் முழுவதும் அழியட்டும் என்று சாபமிட்டு அவ்வாறே அழித்தவள் கண்ணகி.

தேரிக்காட்டுக் கதைகளில் இடம்பெறும் மூன்று பெண்களும் (இடைக்குலக் கைம்பெண், சங்கு முகத்தழகி, மற்றுமொரு கைம்பெண்ணான சேசுமரியாயி) ஒரு வகையில் சிலப்பதிகாரக் கண்ணகியை நினைவூட்டுகிறார்கள்; அவளுடைய சாயைகளாகத் தோன்றுகிறார்கள். எனினும் கண்ணகி, தன்னுடைய கணவன் கோவலனைக் குற்றவாளி என்று தீர்ப்புரைத்த பாண்டிய மன்னனின் அநீதியை எதிர்த்துக் கணவனுக்காகத் தனித்து நின்று போராடி நீதியை நிலைநாட்டியவள். தேரிக் காட்டுக் கதைகளின் பெண்கள் மூவருமே தங்கள் மேல் சுமத்தப்பட்ட அபாண்டங்களை எதிர்த்துத் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்துக் காட்டும் வகையில் தமக்காகவே தனித்து நின்று போராடியவர்கள். ஒரு வகையில் மூவரும் அபலைகள். நிர்க்கதியானவர்கள். சாமானியர்கள். வெங்கலராஜன் காவியத்தில் சொல்லப்பட்ட சங்குமுகத்தழகி அரசப் பாரம்பரியம் உடையவள் என்றாலும் அவள் புலம் பெயர்ந்தவள் என்பது குறிப்பிடத்தக்கது. அவள் தந்தை வெங்கலராஜன் ஒரு மன்னனாக இருந்தவன். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து தமிழகத்தில் குடியேறி நாஞ்சில் நாட்டில் கோட்டை கட்டி வாழ்ந்தவன். சேர மன்னனால் தன் மகள் திரைமுகத்தழகியைப் பறிகொடுத்துக் கோட்டையை விட்டு வெளியேறி குடும்பத்தினரோடு மானவீர வளநாட்டின் குரும்பூரில் அடைக்கலம் புகுந்தவன். ஆனால் தற்போது அவனும் இல்லை.

மகளைக் கள்ளி என்று கூறித் தெருவில் இழுத்துச் சென்றதைச் சகித்துக்கொள்ள மாட்டாதவனாக அவமானம் தாங்கமுடியாத நிலையில் கோட்டையினுள் குடும்பத்தாரோடு சேர்ந்து தானும் தற்கொலை செய்து கொண்டவன். இந்நிலையில் அனாதை யாக விடப்பட்டவள் சங்குமுகத்தழகி. ஏனைய தேரிப்பெண்களான இடையர் வீட்டுக் கைம் பெண், பனைஏறி வீட்டுக் கைம்பெண்ணான சேசு மரியாயி ஆகிய இருவரைப் போலவே சங்குமுகத் தழகியும் ஓர் அபலை. நிர்க்கதியானவள். திக்கற் றோர்க்கு தெய்வமே துணை என்பார்கள். இவர் களைப் பொறுத்த வரையில் இம்முதுமொழி பொருந்துவதாகத் தெரியவில்லை. ஏனெனில், இவர்களுடைய வாழ்க்கையில் இல்லாத துணை மரணத்தில்தான் கிடைத்தது. விதவைகளில் இரு வரும் அவமானப்படுத்தப்பட்டு மிகவும் கொடூர மான மரண தண்டனை அதாவது, - வைக்கோற் பிரியைச் சுற்றித் தீ மூட்டப்படுதல், நடைவிளக் கெரித்துக் கொல்லப்படுதல் என்பனவற்றின் மூலம் கொல்லப்பட்டவர்கள் - அவமானப்படுத்தப்பட்டுக் கொடூரமான முறையில் கொல்லப்படும் தண்டனையி லிருந்து தப்பித்துக் கொள்ளும் வகையில் அது நிறைவேற்றப்படும் முன்னர், சிவனிடம் சாவை வேண்டிப் பெற்றுத் தன்னை மாய்த்துக் கொண் டவள் சங்குமுகத்தழகி.

இம்மூன்று பெண்கள் மேலும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைக் கவனத்தில் கொள்ளவேண்டும். முதல் கதையில் வருபவள் இடைக்குல விதவைப் பெண். மன்னனுக்குரிய அருமாங்கனியைத் திருடி யவள் என்பது அவள் மேலுள்ள குற்றச்சாட்டு. ‘வானவர்களானாலும் தீண்டத் தயங்கும் தான் புசிக்கும் மாங்கனியைத் திருடிச் சென்ற கள்ளி அவள்’ என்பது வெங்கலராஜனின் இளைய மகள் சங்குமுகத்தழகியின் மீது நளராசன் சுமத்திய குற்றச் சாட்டு. ஆனால், ஏழைப் பனைத் தொழிலாளியின் மகள் சேசுமரியாயி என்னும் விதவையின் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டோ ‘அவள் விபச்சாரம் செய்து பிழைப்பு நடத்துகிறாள்’ என்பதாகும். இது முற்கூறப்பட்டதிலிருந்து முற்றிலும் வேறு பட்டது. பெண்ணின் நடத்தையில் சந்தேகம் எழுப்பி, அவள் கற்புநெறி தவறியவள் என்று அவமானப்படுத்துவது. இதனோடு ஒப்பிடும் போது முன்னது - மாங்கனித்திருட்டு - அற்ப மானதுதான். ஆனால், சாதாரண மாங்கனித் திருட்டல்ல. ஆண்டுக்கொரு முறை மட்டுமே பூத்துக்காய்க்கக்கூடிய, மன்னன் மட்டுமே புசிக்க வேண்டும் என்னும் நியதியுடைய அருமாங்கனியைத் திருடியமை. அதனால்தான் இரண்டு வகைக் குற்றங்களுக்கும் ஒரே மாதிரியான தண்டனை, அதாவது மரணதண்டனை கொடுக்கப்பட்டது.

பொதுவாக வழக்கு விசாரணை என்றால் ஏதேனும் ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டே ஒருவர் மீது குற்றம் சுமத்தப்படுவது வழக்கம். வாதி - பிரதிவாதி இருவருக்கும் சமமான வாய்ப்பளித்து, வாதி முன்வைக்கும் குற்றம் சுமத்தலுக்கான ஆதாரங் களையும் அவற்றின் மீதான பிரதிவாதியின் மறுப்பு களையும் நடுநிலைமையிலிருந்து சீர்தூக்கி ஆராய்ந்து நோக்கி, அதன் அடிப்படையில் தீர்ப்புரைப்பது என்பதே பொதுவாக ஒரு நியாயதிபதி கடைப் பிடிக்க வேண்டிய நீதி ஒழுங்கு. இந்நீதி ஒழுங்கு மூன்று அபலைகளின் மேல் சுமத்தப்படுவதற்குப் பின்னணியில் இருந்த நோக்கம் நியாயத்தை நிலை நாட்டுவது அன்று. அநியாயம் இழைப்பதாகும். அரசு அதிகாரத்திலிருக்கும் அதிகாரி அல்லது அமைச்சருக்கு வேண்டப்படாத ஓர் எதிரி, எப்படி யாவது தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் உள் நோக்கம். இந்நோக்கத்திற்காக ஆதாரங்களும் விசாரணை முறைகளும் எப்படி வேண்டுமானாலும் குயுக்தியுடன் பயன்படுத்தப்படலாம்.

பணபலம் அல்லது அதிகாரபலம் உடைய ஒருவன் தனக்குப் பிடிக்காத ஒருவனைத் தண்டிக்க விழையும் போது ‘அரசுக்கு எதிராக பயங்கரவாதத்தைத் தூண்டக் கூடிய இலக்கியப் பிரசுரங்களைத் தன்னுடைய இருப்பிடத்தில் வைத்திருந்தவன்’ என்னும் ‘ஆதாரத்தின்’ அடிப்படையில் ஒருவன் கைது செய்யப்படலாம். ‘நக்சல்பாரி’யாகவோ ‘பயங் கரவாதி’யாகவோ ‘விசாரணை’ மூலம் முத்திரை குத்தப்பட்டுச் சிறை தண்டனை அளிக்கப்படலாம். கஞ்சாவை ஓர் ஆதாரப் பொருளாகக் கொண்டு ஒருவனைக் கஞ்சா வைத்திருந்தவன் என்று குற்றம் சுமத்திக் கைது செய்யலாம். ‘விசாரணை’ மூலம் போதை மருந்துக் கடத்துபவன் என்று அவன் தண்டிக்கப்படலாம். இவ்வாறு, ‘ஆதாரம் - குற்றம் சுமத்தப்படுதல் - விசாரணை - குற்றவாளி - தண்டித்தல்’ என்னும் (அ)நீதிமுறை, அன்றி லிருந்து இன்றுவரை பணம், அதிகாரம் என்னும் சக்திமிக்க பலவான்களுக்குச் சாதகமாகவும் அவர் களுக்கு இணையாக நிற்க முடியாத பலமற்றவர் களுக்கு எதிராகவும் தொடர்ந்து கொண்டிருக் கிறது. இதில் பொருள் வசதியற்றவர்கள், பெண்கள், அபலைகள், பொதுமக்கள் என்ற பலதரப்பட்டவர் களும் காலந்தோறும் உரிமைகள் மறுக்கப்பட்டு, குற்றவாளிகளாகத் தண்டிக்கப்பட்டுக் கொண்டே யிருக்கின்றனர். இவர்களை மக்கள் வழக்காறுகள் பதிவு செய்துள்ளன. இடையர்குலப் பெண்ணும், சங்கமுகத்தழகியும் சேசுமரியாயியும் அப்படித் தண்டிக்கப்பட்ட நிரபராதிகளுள் சிலர். அவ் வகையில், காலந்தோறும் சமநிலையற்ற நீதி முறையே கடைப்பிடிக்கப்பட்ட தன் வரலாற்றைப் பதிவு செய்திருப்பனவாக தேரிக்காட்டுக் கதைகள் விளங்குகின்றன.

பெண் கொலைபுரிந்த நன்னன் மரபு

வெங்கலராஜன் காவியத்தில் ‘முன்னிருந் தோர் பெண்ணாலே முடிந்ததுவும் அறியாயோ?’ என்று சங்குமுகத்தழகி குரும்பூர் நளராசனை நோக்கி எச்சரிக்கும் வகையில் ஒரு வரி இடம் பெற்றுள்ளது. இது பண்டை இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்களையும் கதை மாந்தர்களையும் நமக்கு நினைவூட்டுகிறது. திரௌபதி, கண்ணகி, சீதை முதலிய பெண்களும், அவர்களால் அழிவுற்ற துரியோதனன், பாண்டியன் நெடுஞ்செழியன் இராவணன் முதலிய ஆண் களும் நினைவுக்கு வருகின்றனர். தேரிக்காட்டுக் கதைகளில் இடம்பெற்ற மாங்கனியைத் திருடிய தாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இருபெண்களும், சங்க காலத்தில் நன்னன் என்னும் குறுநில மன்னனால் கொல்லப்பட்ட கோசர்குலப் பெண்ணொருத்தியை நினைவுக்குக் கொணர்கின்றனர். நன்னனுடைய காவல் மரமான மாமரத்திலிருந்து தானே விழுந்துப் புனலில் மிதந்து வந்த மாங்காயை அப்புனலில் நீராடச் சென்ற கோசர்குலத்துப் பெண் தற்செய லாகப் பார்த்து எடுத்துத் தின்றாள். அது தவறு என்று குற்றம் சுமத்தி அவளைக் கொல்ல முற் பட்டான். அதிலிருந்து தப்பிக்கும் பொருட்டு அவள் எடைக்கு எடை பொன்னால் அமைந்த பாவையைச் செய்து, அதனோடு எண்பத்தொரு களிறுகளையும் சேர்த்து கொடுத்தனர். ஆனால் அவற்றை வாங்க மறுத்த நன்னன் அவளைக் கொன்றான். இக்கொடூரச் செயல் புரிந்த நன்னனை ‘பெண்கொலைபுரிந்த நன்னன்’ என்று குறுந்தொகை முதலிய நூல்கள் தூற்றுகின்றன (குறுந்:292) இந்த நன்னன் மரபைச் சேர்ந்தவர்களாகக் குறும்பூர் நளராசன் முதலிய முறைதவறிய மன்னர்கள் தேரிக் காட்டுக் கதைகளில் தலைகுனிந்து நிற்கின்றனர்.

மாங்கனி: ஆக்கமும் அழிவும்

புராணயுகக் கதைகளிலும் நாட்டார் வழக்காறு களிலும் தொடர்புடைய மனிதர்களுடைய வாழ்க் கையிலோ கதைகளிலோ மற்றொரு திருப்புக் கட்டத்திற்கு வழிவகுக்கும் ஒரு கூறாக மாங்கனி திகழ்ந்திருக்கிறது. சிறிய கலகம், உற்பத்தி அல்லது குழந்தைப் பேறு, மரணம் மற்றும் பேரழிவு போன்றவற்றிற்கு வித்திட்ட காரணியாக மாங்கனி செயல்பட்டிருக்கிறது. விநாயகர் - முருகன் இருவருக் கிடையே தோன்றிய சச்சரவு, காரைக்கால் அம்மை யார் இல்லற வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம். குழந்தைப் பேறு இல்லாத புராணயுக இல்லத்தரசி களுக்கு முனிவர்கள் குழந்தை வரம் அளித்தல், சங்க காலத்தில் வாழ்ந்த குறுநில மன்னனான நன்னன், பெண்கொலை புரிந்தவனாகப் பழிக்கப் பட்டமை மானவீரவளநாடும் குறும்பூர் நாடும் அழிந்து, தேரிக்காடாக உருப்பெற்றமை ஆகிய அனைத்திற்கும் மாங்கனி ஒரு மூலக் காரணியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

சாபத்தின் சாட்சியங்கள்

தேரிக்காட்டுக் கதைகளில் இடம்பெறும் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம், சாபம் விடுதல். இதுவும் புராணக்கதைகள் முதல் மக்கள் வாழ்க் கையின் அன்றாட நிகழ்ச்சிகள் வரை தொடர்ந்து இடம் பெற்று வருகிறது. எதேச்சதிகாரிகள், சுரண்டுவோர், அநீதியாளர்கள், அசுரபலமிக்க வர்கள் முதலிய கெடுதியாளர்களுக்கு எதிராகப் போராடும் புராண முனிவர்கள், பெண்கள், அபலைகள், சாமான்யமானவர்கள் முதலிய பலவீனர்கள் பிரயோகித்த, பிரயோகித்துவரும் ஆயுதமாகச் சாபம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. புராண யுகத்தில் முனிவர்களாலும் ஏனையவர் களாலும் விடப்பட்ட சாபத்தால் அநீதியாளர்கள் அழிந்துள்ளனர். உடைமைகளும் நிர்மூலப்படுத்தப் பட்டுள்ளன. மந்திரமோ, மாயமோ, கற்பனையோ - இது இன்றும் நம்பப்படுகிறது. அதனால்தான் தற்காலத்திலும்கூட பாதிக்கப்பட்டவர்கள், குறிப் பாகப் பெண்கள் அநீதியாளர்க்கெதிராகக் கோயிலில் மண்ணை வாரி வைக்கிறார்கள். மண்ணை வாரித் தூற்றுகிறார்கள். ‘மண்ணாய்ப் போக’ என்று சாபம் விடுகிறார்கள். பெரும்பாலும் தமிழ் நாட்டில் பெண்கள் பயன்படுத்தும் நம்பிக்கை சார்ந்த சடங்கியல் வடிவங்கள் இவை. ‘இந்தச் சாபங்கள் பொய்ப்பதில்லை - பலிக்கும்’ என்னும் நம்பிக்கையை வலியுறுத்தும் சாட்சியங்களாகத் தேரிக்காடும் அத்தேரிக்காட்டைப் பற்றிக் கூறும் கதைகளும் நம்முன் நிற்கின்றன.

கண்ணகியும் தேரிக்காட்டுப் பெண்களும்

தேரிக்காட்டுக் கதைகள், முக்கிய கருத்துக்கள் சிலவற்றை நமக்கு முன்வைக்கின்றன. தெய்வங்கள், மன்னர்கள், சாமானிய மக்கள் ஆகியோர் ஒரு பொதுவான தளத்தைப் பகிர்ந்து கொள்ளும் தருணங்களை வெளிப்படுத்துகின்றன. அவ்வகையில், சமூக யதார்த்தமும் புராணக்காலமும் மயங்கிய நிலையை நாம் பார்க்கிறோம். அரசு என்று வரும் போது, அதன் கை எப்போதும் ஓங்கியதாகவே இருக்கிறது. சாமானியர்கள் - குறிப்பாகப் பெண்கள் என்போரை மையப்படுத்திய அணுகுமுறையானது ஆணாதிக்க மனோநிலையையும் அதிகாரத்திலிருப் போர் தமக்கு சாதகமாக நீதியை எப்படி வேண்டு மானாலும் வளைத்துக் கொள்ளும் பிழையான கண்ணோட்டத்தையும் முன்னிறுத்துகிறது. மேலும் அதே சதிகாரப் போக்குடன் நீதிமுறையில் பிழைகள் இழைத்த அரசபாரம்பரியத்தின் தொடர்ச்சியை ஆவணப்படுத்தி வைத்திருக்கும் சான்றுகளாக இவ்வாய்மொழி இலக்கியங்கள் அமைந்துள்ளன. “அரசமுறை பிழைத்தோர்க்கு அறமே கூற்றாக அமையும்” என்பது சிலப்பதிகாரம் முன்வைக்கும் பாவிகங்களுள் ஒன்று. அவ்வாறே முறைதவறிய மன்னனின் ஊரையே அழிக்கும் ஆற்றல், நெறி பிறழாத பெண்களின் சொற்களுக்கு (சாபம்) உண்டு என்னும் மரபுதழுவிய நம்பிக்கையை இவ் வாய்மொழிக்கதைகள் அழுத்தத்துடன் வெளிப் படுத்துகின்றன. அவ்வகையில், சிலப்பதிகாரக் கதைக்கூறுகளான மன்னனுக்கு பாத்தியப்பட்ட அரிய பொருள் (சிலம்பு) களவாடப்படுதல், கள்வர் எனத் தவறாக ஒருவரைச் சுட்டுதல், ஆராய்ந்து பாராமல் மன்னன் தீர்ப்புரைத்தல், குற்றமற்றவர் கொல்லப்படுதல், கொல்லப்பட்டவர் குற்றமற்றவர் என மெய்ப்பித்தல், வஞ்சினம் கூறுதல், நாடு, நகரம் அழிக்கப்படுதல் என்பன போன்றவற்றை நினைவு கூர்ந்திடும் வண்ணம் தேரிக்காட்டுக் கதைகளில் சிலவகைக் கதைகூறுகள் முக்கியத் துவம் பெறுகின்றன. தேரிக்காட்டுக் கதைகள் வாய்மொழி எழுத்துமொழி ஆகிய இரண்டிலும் பரவி வந்திருப்பவை. இக்கதைகளை - குறிப்பாக சங்குமுகத்தழகி, இடையர்குல விதவைப் பெண் ஆகியோர் பற்றிய கதைகளை முறையே வெங்கல ராஜன், அய்யனார் பற்றிய வில்லுப்பாடல்களில் புலவர்கள் புனைந்துப் பாடியுள்ளனர். அப்புலவர் களிடத்துச் சிலப்பதிகாரத்தின் கதையினுடைய தாக்கம் ஏதோ ஒருவகையில் செல்வாக்கு செலுத்தி யிருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆராய்ந்து பார்க்காது தீர்ப்புரைத்துத் தன் கணவன் கோவலனைக் கொன்ற பாண்டிய மன்னனின் மதுரை நகரைத் தீயிட்டழித்தாள் கண்ணகி. அந்நகரம் அழிவதற்கு முன் அவள் கூறிய வஞ்சினம் வருமாறு:

“பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில்

ஒட்டேன் அரசோ டொழிப்பேன் மதுரையுமென்

பட்டிமையுங் காண்குறுவாய் நீ என்னா விட்டகலா

நான் மாடக் கூடல் மகளிரும் மைந்தரும்

வானக் கடவுளரும் மாதவரும் கேட்டீமின்

யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த

கோநகர் சீறினேன் குற்றமிலேன் யானென்று”

(சிலம்பு. வஞ்சினமாலை: 36 - 42)

நான் ஒரு பத்தினி என்பது உண்மையானால் மதுரையை அழிப்பேன் என்று கூறிய கண்ணகியின் சீற்றம் மிகுந்த கூற்றுகள் ஒரு வகையில் சாபமாகும். தெய்வத்தன்மை நிறைந்த அக்கூற்றின் அடிப் படையில் மதுரை தீக்கிரையானது. ஆனால் தேரிக்காட்டு கதைகளில் இடம் பெறும் பெண்கள் மூவருமே குற்றவாளிகளாக பழிசுமத்தப்பட்ட நிலையில் கொடூரமான தண்டனையால் இறக்கும் தறுவாயில் அவர்களிடமிருந்து வெளிப்பட்ட வஞ்சினச் சொற்கள், மண்மாரி பொழியச் செய்து நாடுகளை அழித்தன.

தன்னுடைய உடல் முழுவதும் வைகோற் பிரியைச் சுற்றித் தீ வைத்த போது உடல் எரிந்து கொண்டிருக்கும் தறுவாயில், “எந்தப் பாவமும் அறியாத என்மேல் அபாண்டமாகக் குற்றம் சுமத்தி, என்னைக் கொன்னவங்க எல்லார்க்கும் குடி அற்றுப் போவணும். நீதி தவறிய இந்த மன்னனுடைய நாடு மண்மாரி பெய்து மண்மேடு ஆவணும்” என்று யாதவர் குல விதவைப் பெண் விடுத்த சாபத்தால், மண்மாரி பெய்து நாடழிந்தது. மதுரையைத் தீக்கு இரையாக்கிய கண்ணகி பின்னர் தெய்வமாகப் போற்றப்பட்டாள். மானவீரவள நாட்டை அழித்துத் தேரிக்காடாக்கிய விதவைப் பெண்ணும் பின்னர் தெய்வமாக வணங்கப்பட்டாள். எந்தக் கற்குவேல் அய்யனார், அவள் தண்டிக்கப் படும் நிலையில், அவள் அப்பழுக்கற்றவள் என்று கூறி, பாண்டியன் அவையில் தண்டனையைத் தடுக்க முயன்று தோல்வி அடைந்தாரோ, அந்தக் கற்குவேல் அய்யனாரின் கோயில் வளாகத்திலேயே தனிக்கோயில் பெற்று அம்மனாக வீற்றிருக்கிறாள் என்பது ஐதிகமாகும்.

குரும்பூர் நாட்டின் நளராசனையும் அவனுடைய நாட்டையும் அழித்த சங்குமுகத்தழகி, தான் தண்டிக்கப்படும் தறுவாயில், “நான் கற்புடைய வளானால், என் சாபத்தால் நீ அழிவாய், உன் நாடு மண்மாரி பெய்து மண்மேடாகும்” என்று சபித் தாள். அவளுடைய சாபத்திற்கேற்ப எல்லாமும் அழிந்து போயின. வெங்கலராஜன் காவியம் பேசும் சங்குமுகத்தழகி போலவே சேசுமரியாயியும் தன் கற்பின் வலிமையால் துறவிப் பாண்டியனின் கணக்கன் குடியிருப்பை அழித்தவள், இடையர் குலப் பெண்ணைப் போலவே சேசுமரியாயியும் கணவனை இழந்த கைம்பெண். ஆனால், மேட்டுக் குடி வீட்டு இளைஞனின் பாலியல் வேட்டைக்கு இணங்காத அவளின் மனவுறுதிக்கு முன்னால் தோற்றுப் போனவனுடைய சதிவலைப் பின்னல் காரணமாக விபச்சாரி எனப் பழிசுமத்தப்பட்டு ‘நடைவிளக்கெரித்துக் கொலை செய்யப்பட்டாள். சங்குமுகத்தழகியும் சேசுமரியாளும் ஆண்களின் பாலியல் இச்சைக்கு இணங்கிப் பலியாகாமல் இருக்க, தம்மைத் தற்காத்துக்கொள்ள போராடித் தங்கள் உயிரை இழந்தவர்கள். இவர்தம் வரலாறு தெய்வத்தன்மை நிறைந்ததாக இருப்பினும் இடையர் குலப்பெண் போல, இந்தப் பெண்கள் இருவரும் இறப்பிற்குப் பின், தெய்வங்களாக எங்காவது வணங்கப்படுகிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால், அவர்தம் ஆணாதிக்க எதிர்ப்புணர் வையும் தெய்வீகப் பண்பையும் தேரிக்காட்டு வாய்மொழிக் கதைகள் தேரிமணற்பரப்பெங்கும் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.

துணை நூல்கள்:

ஆசிரியர்குழு, 1999: சொக்கன் குடியிருப்பு அதிசய மணல்மாதா கோயில் சிறப்பு மலர்.

ஆறுமுக நாடார் (பதி.) 1979: வெங்கலராஜன் காவியம், நாகர்கோவில்: நாஞ்சில் அச்சுக்கூடம்.

சோமசுந்தரனார், பொ.வே. (பதி) 1969: சிலப்பதிகாரம் விளக்கவுரை, சென்னை: தி.தெ.சை.தூ.ப.க. பிரைவேட் லிமிடெட்.

தசரதன், ஆ.2005: அருஞ்சுனை காத்த அய்யனார், சென்னை: தழை ஓலைச் சுவடிகள் பாதுகாப்பு மையம்.

Darly Cumber Dance, 1978: Shuckin and Jivin Folklore From Cotemporary Black Ameri cans, Bloomington: Indiana University Press.

Dhananjaya, A.2011: ‘Oral History of Karkuvel Aiyannar Temple’ (11.39-45) in K.A. Manikumar&Vinod Vincent Rajesh (eds) Southern TamilNadu Through the ages Tirunelveli: Dept of History, Manonmaniam Sundaranar University.

Juha Pentikainen, Julla Jurikka, 1976: Suomalaisen kirjalisuuden seura, Helsinki: Finnish Literary Society. Thasarathan, A. 2001: MANAD Social History of Manaveera Valanadu, Chennai: Centre for Preservation of Tamil Palm - Leaf Manuscripts.

Pin It