international institute tamil 450முன்னுரை: இலக்கிய மானிடவியல் இலக்கிய மானிடவியல் (Literary Anthropology) என்பது பற்றிய ஒரு முறையியல், மானிடவியலர்கள், இலக்கியவாதிகள், ஆகியோரால் 1980களில்தான் அமெரிக்கா, இந்தியா, ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகளின் பல்கலைக்கழகங்களில் அறிமுகப் படுத்தப்பட்டது.  ஃபெர்னாண்டோ பொயத்தோஸ், இலக்கிய மானிடவியல் குறித்த கருத்துருவத்தினை அறிமுகம் செய்து வைத்ததன் பின்னணியில் (1983) வேறு சில அறிஞர்களும் அந்நெறிமுறையினைக் கையாண்டு உலகின் வெவ்வேறு மொழிகளில் வெளிவந்திருந்த இலக்கியப் படைப்புகளை குறிப்பாக நாவல்களை- ஆராய்ந்துத் தத்தம் கட்டுரைகளை எழுதி வெளியிட்டனர். 

அத்துடன், இலக்கிய மானிடவியலின், கருத்துருவம், முறை யியல் உள்ளிட்ட கருத்துப்பரப்பை மையப்படுத்திய கூட்டு விவாதம் (symposium) ஒன்றும் 1983ஆம் ஆண்டு நடைபெற்ற ‘மானிடவியல் மற்றும் இன அறிவியலின்’ பதினொன்றாம் சர்வதேசக் காங்கி ரசின் ஒரு பகுதியாக நடைபெற்றது.  இலக்கிய மானிடவியல் பற்றிய கட்டுரைகளும், மேற்கண்ட கூட்டு விவாதங்களின் தொகுப்பும் ஃபெர்னாண் டோ பொயத்தோஸ் தொகுத்து வெளியிட்ட இலக்கிய மானிடவியல் (Literary Anthropology, 1988) என்னும் ஆங்கில நூலில் இடம் பெற்றுள்ளன.

எழுத்திலக்கியப் படைப்புகளை முதன்மை ஆதாரங்களாகக் கொண்டு, அவற்றில் பயிலும் சமூக நிறுவனங்களை முதன்மைப்படுத்தி ஆராயக் கூடிய ஓர் ஆய்வு முறையியலையே ‘இலக்கிய மானிடவியல்’ என்று பொயத்தோஸ் அடையாளப் படுத்தினார்.  இலக்கிய மானிடவியல், தனது கருத்தியலில் மிகவும் முக்கியமான சாராம்சமாகக் கொண்டிருந்தது என்னவென்றால், “இலக்கியத்தின் ஊடாக மக்களையும், அம்மக்களுடைய பண் பாட்டு வெளிப்பாடுகளையும் பற்றி மேற்கொள்ளப் படும் ஆய்வுதான் இலக்கிய மானிடவியல்” என்னும் கருத்தாகும் (Vincent Erickson, 1988:95) இது, ஃபெர்னாண்டோ பொயத்தோஸ் முன்வைத்த வரையறையாகும்.

இலக்கிய மானிடவியலின் இலக்குகள் குறித்துத் தமது கருத்துக்களை முன்வைத்த வெர்னர் என்னிஞ்சர் என்பவர், “இலக்கிய மானிடவியலின் இலக்கு என்பது, இலக்கியத்தினைப் பகுத்தாராய் வதன் வாயிலாக மானிடவியல் தரவினைக் கண்டு பிடிப்பதாகும்.  ஒரு குறிப்பிட்ட இனத்தைப் பற்றிய தகவல்களை அறிவதே இலக்காகும்; அதற்கு உதவும் கருவியே இலக்கியமாகும்” என்று கூறினார்.  இலக்கிய மானிடவியலின் ஆய்வுப் பொருள் எதுவாக இருக்க வேண்டும் என்பதையும் அவர் வரையறுத்தார். 

அதாவது, “இலக்கிய மானிடவி யலின் ஆய்வுப் பொருட் பரப்பினைத் தீர்மானிக்கக் கூடிய அலகு என்பது, ஒரு சமூக அலகேயாகும்.  அதாவது, ஏதேனும் ஒரு மனித சமூகக் குழுவே அல்லாது,  அதாவது ஏதேனும் ஒரு மனித சமூகக் குழுவே அல்லாது, இலக்கியமோ இலக்கிய வடிவமோ ஒரு இலக்கியப் படைப்போ கூட அல்ல” என்று தெளிவுப்படுத்தினார் (Enniger, 1988: 332)

இலக்கிய மானிடவியலின் பொருட்பரப்பு

ஃபெர்னாண்டோ பெயத்தோஸ் அறிமுகப் படுத்திய இலக்கிய மானிடவியலின் கலப்புப்புல ஆய்வுப்பரப்பு என்பது, வெவ்வேறு பண்பாடு களில் காணப்படும் நீண்ட வருணனைக் கவிதைகள், நாவல்கள் போன்ற கதையாடல் இலக்கியங்களை மானிடவியல் ரீதியில் பயன்படுத்திக் கொள் வதையே தனது அடிப்படையான அணுகுமுறை யாகக் கொண்டிருந்தது.  ‘இலக்கியத்தின் வாயி லாக ஆய்வுமேற்கொள்ளப்படும் இனவியல் அறிவியலாக இலக்கிய மானிடவியல் அமையும்’ என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.  இலக்கிய மானிடவியலின் ஆய்வுக்குரிய பொருட்பரப்பில் அடங்கும் கூறுகள் பற்றியும் அவர் பின்வருமாறு சுட்டிக்காட்டினார்.

“மனித நடத்தைகள் பலவற்றின் வாயிலாக வெளிப்படுத்தப்படும் குழு சார்ந்த நிகழ்வுகள், பருப்பொருட் படைப்புகள், கருத்துருவங்கள், ஏனைய பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும் நாம் உற்றுநோக்கிப் புரிந்து கொள்ளத்தக்க ஒழுங்கமைப்புகளாக இலக்கிய மானிடவியல் அணுகுகிறது.  அவ்வகையில், சமயச் சிந்தனைகள், சடங்குகள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், உறவுமுறை அமைப்புகள், அறநெறி சார்ந்த மதிப்பீடுகள், பண்பாட்டு அடிப்படையிலான ஒழுகலாறுகள், வீடுசார்ந்த செயற்பாடுகள் போன்ற வையும், அரசியல் மற்றும் மக்கள் தங்களுக்கிடையே படைத்து வழங்கும் வழக்காற்று விவரங்கள், வெகுமக்கள் நம்பிக்கைகள், விளையாட்டுகள், கலை விவரங்கள் போன்றவையும் இலக்கிய மானிட வியல் அக்கறை செலுத்தும் பொருட்பரப்பில் அடங்குவனவாகும்.

” இவ்வாறு, இலக்கிய மானிடவியல் கவனம் செலுத்தும் சமூக, பண்பாட்டுக் கூறுகள் பலவற்றை வரிசைப்படுத்திக் காட்டும் ஃபெர்னாண்டோ பொயதோஸ், ‘இந்தப் பொருட் பரப்பானது, ஆய்வாளர்களிடையே பன்முகக் கல்விப்புல ஆர்வத்தைப் பெருமளவில் தூண்டுவ தாக அமையும்’ என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.  அத்துடன், ‘இலக்கியத்தின் வாயிலாக ஆய்வு மேற்கொள்ளப்படும் இனவியல் அறிவியலாக இலக்கிய மானிடவியல் அமையும் என்பது மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளப்படும்’ என்றும் உறுதிபடக் கூறுகிறார்.

இலக்கிய மானிடவியல், இலக்கியம் ஆகிய இரண்டினையும் பற்றி பொயத்தோஸ் கூறியுள்ள கருத்துக்களில் மேலும் சிலவற்றையும் நாம் கவனத்தில் கொள்ளலாம்:

* தேசிய அளவிலான கதையாடல் இலக்கியங் களிலிருந்தே மானிடவியல் ரீதியில் அமையும் தரவுகளைக் கண்டடையக்கூடிய வகையில், மானிடவியல் புலத்திற்குரிய கருத்தாக்கங்களையும் தலைப்புகளையும் இலக்கிய மானிடவியல் பயன் படுத்த வேண்டும் என்பது இன்றியமையாதது.

* இலக்கியங்களைப் படைத்தளிப்பதற்குப் பின்னணியாக விளங்கும் சமுதாயத்தின் பண்பாட்டி னைத் தொடர்ந்து ஆவணப்படுத்தும் செயலை அவ்விலக்கியங்களே செய்து வருகின்றன என்பதை இலக்கிய மானிடவியல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

* “இலக்கியம், பண்பாட்டைப் பிரதிபலிக் கிறது; மோசமாக எழுதப்பட்ட நாவல்கூட, ஒரு குறிப்பிட்ட பண்பாட்டைப் பற்றிய கவர்ச்சிமிக்க சித்திரிப்பாக விளங்கக்கூடும்.  காலம் செல்லச் செல்ல, அந்நாவலின் ஆவண மதிப்பீடு என்பது கேள்விக்கு அப்பாற்பட்ட வகையில் வளர்ச்சி அடையும்.”

தமிழில் கலப்புப்புல ஆய்வு

இலக்கிய மானிடவியலின் அடிப்படையே அதன் கலப்புப்புல அணுகுமுறையும் பன்முகப்புல அணுகுமுறையும் ஆகும்.  இதனைப் பற்றி பொயத் தோஸ் உட்பட அறிஞர்கள் ஆங்காங்கே தத்தம் எழுத்துக்களில் குறிப்பிட்டுள்ளனர்.  அவற்றைத் தொகுத்து தமிழிலக்கிய ஆய்வுச் சூழலோடு ஒப்பிட்டு நோக்கும்போது, ஏறக்குறைய ஓர் ஐம்பது ஆண்டுகள் என்னும் கால எல்லைக்கு முன்னரும் பின்னரும் மேற்கொள்ளப்பட்ட தமிழ் இலக்கிய ஆய்வுகள் சிலவற்றில் பன்முகக் கலப்புப்புல அணுகுமுறை- குறிப்பாகத் தமிழ் இலக்கியம்- மானிடவியல் என்ற இருவேறு கல்விப்புலங்களை ஒருங்கிணைத்த கலப்புப்புல அணுகுமுறை என்பது கையாளப்பட்டிருப்பதை அறிய முடிகிறது.

தமிழ்நாட்டில் அறிஞர்கள் தாம் மேற்கொண்ட கலப்புப்புல அணுகுமுறை தழுவிய ஆய்வுகள் என்பன இருவேறு களங்களில் நிகழ்ந்துள்ளன:

1. இலக்கியப் படைப்புகளை முதன்மைப்படுத்தாமல் சமூக நிறுவனங்கள் மற்றும் பண்பாட்டை மட்டுமே முதன்மைப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வு களில் காணப்படும் கலப்புப்புல அணுகுமுறை

2. தமிழ் இலக்கியப் படைப்புகளை முதன்மைப் படுத்தி அவற்றிலிருந்து இனங்காணப்பட்ட மானிடவியல் தரவுகளைக் கொண்டு மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளில் புலப்படும் கலப்புல அணுகு முறை இவ்விரண்டு களங்களிலும் மானிடவியல் என்பது ஒரு பொதுவான அளவுகோலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முதல்வகை ஆய்வில், சாதி மற்றும் இனக் குழுச் சமூகங்கள், அவற்றின் சமூக நிறுவனங்கள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், வாய்மொழி மரபுகள், நிகழ்த்துதல்கள் போன்றவை உட்பட சமூகப் பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும் மானிடவியல் என்னும் புலம் சார்ந்த கருத்துக் களின் கோணத்திலிருந்து விளக்குவது என்பது அடிப்படையானது.  குறிப்பாகத் தற்காலப் பண் பாட்டினை உள்ளடக்கும் நாட்டார் வழக்காற்றி யலை எடுத்துக் கொள்வோமானால், மானிடவி யலை ஒருங்கிணைத்துக்கொள்ளும் ஒருவகைக் கலப்புப்புல அணுகுமுறை என்பது அதனில் செயல்படுவதைக் காண்கிறோம்.

இரண்டாவது வகை ஆய்வில், நாம் காணும் கலப்புப்புல அணுகுமுறை என்பது முன்னதிலிருந்து முற்றிலும் வேறுபடுவதாகும்.  அதாவது, இலக்கியப் படைப்புகள் பேசும் உலகங்களின் செய்திகளை மானிடவியல் தரவுகளாகப் புரிந்துகொள்வதற்குத் தேவையான ஒரு முறையியலையே இக்கலப்புப்புல அணுகுமுறை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. 

அத்துடன், பண்பாட்டிடை ஒப்பாய்வையும் துணையாக இணைத்துக் கொள்கிறது.  ‘இலக்கியம் பற்றிய மானிடவியல் ஆய்வு’ என்று நாம் இது காறும் புரிந்துகொண்டிருந்த இக்கலப்புப்புல அணுகுமுறையிலிருந்தே ‘இலக்கிய மானிடவியல்’ தமிழில் எதேச்சையாக அதே சமயத்தில் செறி வோடு வெளிப்பட்டுள்ளது என்பதே நமது அனுமானமாகும்.  அவ்வனுமானத்தை உறுதிப் படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அறிவுப்புலங்களின் எல்லைகளைக் கடந்து செல்லுதல்

தத்தம் கல்விப்புலச் சூழல்கள் காரணமாகப் பன்முகக் கல்விப் புலக்கண்ணோட்டத்தில் பயிற்சி பெற்ற தமிழறிஞர்கள் சிலர், தமிழ் இலக்கியப் படைப்புகளை, இலக்கியம் என்னும் வரையறுக்கப்  பட்ட எல்லைக்குள்ளேயே நின்று நோக்குவது என்னும் ஆய்வு மரபினைக் கடந்து சென்று, வேறு அறிவுப்புலங்களின் கருத்துக்களோடு அணுகி, அவ்விலக்கியப் படைப்புகள் தம்மில் பொதித்து வைத்திருக்கும் கருத்துலகிற்குள் நுணுகி ஆராய்ந்துப் புதிர்மைகளை அகற்றி அதற்குள் நிலவும் சமூக உலகின் இயல்புகளை வெளிப்படுத்திக் காட்டு வதற்கு முயன்றுள்ளனர். 

அவர் தம் முயற்சி பிரதிபலிக்கும் உண்மையே ‘புலங்களின் எல்லை களைக் கடந்து செல்லுதல்’ என்பதாகும்.  அதாவது,  இது கலப்புப்புலப் பார்வையைக் குறிப்பதாகும்.  இது இலக்கிய மானிடவியலை முன்னிறுத்திப் பேசுவோர் வலியுறுத்தும் அடிப்படையாகும்.  இதனைச் சற்று மேலும் தெளிவுபடக் கூறலாம்.  “இலக்கிய மானிடவியல் என்பது, ஒரு கலப்புப் புலச் சொல்லாடல் என்னும் வகையில், அறிவுப் புலங்களுக்கு இடையிலான மரபான சுவர்களைக் கடந்த ஒன்றாகும். (சுடிளந னுந ஹபேநடளை, 2003:1)

தமிழ் இலக்கிய நூல்கள் பற்றிய ஆய்வு வரலாறு என்பது மிகவும் பரந்து விரிந்தது.  அதில், கலப்புப்புலப் பார்வை சார்ந்த அணுகுமுறைக் கென்று ஒரு தனித்த கிளை உண்டு.  அதற்கெனத் தோற்றம், வளர்ச்சி உண்டென்றாலும், அவ் வரலாற்றை விரித்துப் பேசுவது இங்கு நமக்கு நோக்கமல்ல.  ஆனால், சமூக அறிவியல் சிந் தனைகள் தழுவிய கலப்புப்புல ஆய்வுமுறை- குறிப்பாக மானிடவியல் புலம் சார்ந்த சிந்தனை களோடு கூடிய கலப்புப்புல அணுகுமுறைக்குத் தமிழியலில் வித்திட்ட அறிஞர்களுடைய எழுத்துக் களில் இலக்கிய மானிடவியலின் தடயங்கள் எவ்வாறு காணக்கிடக்கின்றன என்பதை மட்டும் முதன்மையாகக் கொண்டு ஆராயலாம்.

தமிழாய்வும் மானிடவியலும்

இலக்கிய மானிடவியல் என்னும் கலப்புப்புல ஆய்வுமுறை ஏறக்குறைய 1980ஆம் ஆண்டுகளில் தான் ஆங்கிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.  ஆனால், இந்த ஆய்வுமுறை அறிமுகம் ஆவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே, சமூக அறிவியற்புலங்களின் கருத்தாக்கங்கள், கோட் பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு கலப்புப்புல ஆய்வுமுறையைத் தமிழ் இலக்கியம், பண்பாடு உள்ளிட்ட தளங்களில் பயன்படுத்திய அணுகுமுறை யானது நடைமுறையில் இருந்தது. 

மார்க்சியம் அல்லது சமூகவியல், வரலாறு, தொல்லியல், மானிடவியல் உள்ளிட்ட சமூக அறிவியல் புலங்கள் சார்ந்த கருத்துருவங்களின் தாக்கம் க. கைலாசபதி, நா,வானமாமலை, கா. சிவத்தம்பி, தொ.மு.சி. ரகுநாதன் போன்றோருடைய ஆய்வுப் படைப்பு களில் பிரதிபலித்தது.  அதுகாறும் தமிழ் நூல்கள் பற்றி மேற்கொள்ளப்பட்டிருந்த அறிஞர்களுடைய ஆய்வுகளில் இருந்து இவர்தம் ஆய்வுகள், தத்தம் கலப்புப்புல அணுகுமுறை காரணமாக முற்றிலும் வேறுபட்டவையாக இருந்தன.

பொதுவான நிலையில் கலப்புப்புல அணுகு முறையைப் பிரதிபலித்த மேற்குறிப்பிட்ட அறிஞர் களுடைய எழுத்துக்களில் - குறிப்பாக க.கைலாசபதி, நா.வானமாமலை, கா.சிவத்தம்பி போன்ற அறிஞர் களின் எழுத்துக்களில் மானிடவியல் அணுகு முறை என்பது ஆழமாகவே காலூன்றியிருந்தது.  இவர்தம் எழுத்துக்களில் ஊடுபாவாகச் செயல் பட்டிருந்த கலப்புப்புல அணுகுமுறை என்பது, ஏனைய தமிழறிஞர்களுடைய கலப்புப்புல அணுகு முறை காட்டிலும் தனித்ததோர் அடையாளத் தைக் கொண்டிருந்தது.  அதற்குரிய காரணங்களாக இரண்டினை இங்குச் சுட்டிக் காட்டலாம்.  அவர் தம் எழுத்துக்களில் (1) புலங்களின் எல்லைகளைக் கடந்த பன்முகக் கல்விப்புலஞ் சார்ந்த அணுகு முறை (2) இலக்கியம்- மானிடவியல் என்னும் இரண்டு கல்விப்புலம் தழுவிய கலப்புப்புல அணுகுமுறை ஆகிய இரண்டு வகை அணுகுமுறை களும் செயல்பட்டிருந்தன.  அவர்தம் கட்டுரைகள் அல்லது நூல்கள் சிலவற்றைக் கூர்ந்துக் கவனிப் போர் அதனைப் புரிந்துகொள்ள இயலும்.

எடுத்துக்காட்டாக நா. வானமாமலையின் ‘கலைகளின் தோற்றம்’ (1971: 7: 273-293) என்னும் கட்டுரையை எடுத்துக் கொள்வோமானால், அதனில் இழையோடிக் கிடக்கும் பன்முகக் கல்விப் புலச் சிந்தனைகள் காரணமாக அதன் தனித்துவம் நமது கவனத்தைக் குவியமைப்படுத்தும்.  தொல் லியல், வரலாற்றியல், மானிடவியல், உளவியல் என்பன உள்ளிட்ட புலங்களின் ஊடாக ஆய்வின் மையப்பொருள் நோக்கி நம்மை இட்டுச் செல்லும் நா.வா.வின் பன்முகப்புலக்கலப்புச் சொல்லாடல் என்பது, மந்திரம், ஆவிக்கொள்கை, குலக் குறியியல் என்பன போன்ற புராதன சமயக் கோட்பாடுகளின் வெளிச்சத்தில் - அதாவது, கணிச மான அளவில் மானிடவியலைச் சார்ந்து நின்று- கலைகள் தோற்றம் பெற்ற பின்புலத்தை விளக்கு வதாக அமையும். 

கலைகள் என்பன கடவுளிட மிருந்து தோன்றியவை என்றோ, மனிதனின் உள்ளுணர்வுத் தூண்டல் காரணமாகத் தோன்றி யவை என்றோ பற்பலவாறு அகவயமாக விளக்கம் செய்யப்படும் சூழலில், மக்கள் தங்களுடைய வேட்டை, வேளாண்மை உள்ளிட்ட பொருளியல் தேடலை மையப்படுத்திய உழைப்புச் செயற் பாட்டின் ஊடாக, மந்திரச்சடங்கு, உளவியல் ஆகியவற்றின் கூட்டுப்பொருளாகத் தோன்றியதே கலை என்று அளிக்கப்படும் விளக்கம், வாசக ருக்குத் தர்க்க ரீதியாகப் புரிந்துகொள்ள உதவக் கூடியது. 

நா.வா.வின் ‘கலைகளின் தோற்றம்’ என்னும் கட்டுரையை வாசிப்பவர்கள், ஜார்ஜ் தாம்சனின் ‘மனித சாரம்’ நூலினை வாசித்த அனுபவத்திற்கு இணையான அனுபவத்தைப் பெறவியலும்.  ‘கலைகளின் தோற்றம்’ பற்றிய ஆய்வில் படிமலர்ச்சிக் கோட்பாடு மற்றும் பண்பாட்டிடை ஒப்பாய்வு என்பன கணிசமான அளவில் இடம் வகித்திருப்பதையும் அக்கட்டு ரையை வாசிப்பவர்கள் நிச்சயம் உணர்ந்து கொள்வார்கள்.

மானிடவியல் புலம் சார்ந்த கருத்துருவங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றை இயல்பாக ஒருங் கிணைத்துக் கொண்டிருக்கும் பன்முகப்புலக் கலப்பு ஆய்வுக் கண்ணோட்டம், கலப்புப்புலக் கண்ணோட்டம் என்பனவற்றைப் பிரதிபலிக்கும் ஒருசில தமிழறிஞர்களுடைய நூல்களிலோ கட்டுரை களிலோ ஒரு தனித்துவமான அணுகுமுறையையும் நாம் வேறுபடுத்திக் காணமுடியும்.

  அவ்வணுகு முறையே இலக்கிய மானிடவியல் என்பதாகும்.  இலக்கிய மானிடவியல் என்னும் கலப்புப்புல ஆய்வு முறை என்பது மேற்கத்திய நாடுகளிலேயே தோன்றியிராத காலத்தில் தமிழியல் ஆய்வுகளில் அது எவ்வாறு தனது தாக்கத்தைச் செலுத்தி யிருக்க இயலும் என்னும் கேள்வி எழலாம். 

தமிழ் இலக்கியப் படைப்புகளை ஆய்வுக்கு உட்படுத்திய அறிஞர்கள், அப்படைப்புகள் சித்திரித்த சமூக உலகினையும் அதன் நிறுவனங்கள் பண்பாட்டு நடத்தைகள் போன்றவற்றையும் சரியாக இனம் காண்பதற்குச் சமூக அறிவியலான மானிடவியலின் கருத்துக்களையும் கோட்பாடுகளையும் சார்ந்து நின்று ஒரு முறையியலை வகுத்துக் கொண்டு விவாதிக்க முற்பட்டனர்.  அவ்வகையில், அந்த அறிஞர்களுடைய ஆய்வுப் படைப்புகளில் மானிட வியல்- இலக்கியம் தழுவிய கலப்புப்புல அணுகு முறையே அழுத்தம் பெற்றது எனலாம்.

தமிழில் இலக்கிய மானிடவியல்

இங்கு நாம் அனுமானிக்க முயலும் செய்தி என்னவென்றால், அவர்கள் கையாண்ட கலப்புப் புல அணுகுமுறையின் ஊடாகவே ‘இலக்கிய மானிடவியல்’ என்ற கலப்புப்புல ஆய்வு முறை யானது அத்தமிழறிஞர்களுடைய முன் திட்ட மிடல் எதுவுமில்லாமல், தன்னியல்பாகத் தோன்றி விட்டது என்பதுதான். 

இலக்கியத்தின்பால் ஆர்வம் காட்டிய ஃபெர்னாண்டோ பொயத் தோஸ் உள்ளிட்ட மானிடவியர்கள், ஆங்கிலம் உள்ளிட்ட மேற்கத்திய மொழிகளில் தத்தம் தொடர் முயற்சியின் வாயிலாகப் படிப்படியாக உருவாக்கிய இலக்கிய மானிடவியல் என்பது, தமிழ் இலக்கிய நூல்களில் மிகவும் ஆய்ந்துத் தோய்ந்தவர்களான க.கைலாசபதி முதலிய அறிஞர்கள் தாங்கள் மானிடவியலின்பால் காட்டிய ஈடுபாட்டின் காரணமாக, அவர்களுடைய கலப்புப் புல அணுகுமுறையின் மூலம் அவர்கள் அறியாம லேயே இலக்கிய மானிடவியல் தோற்றம் பெற்று விட்டது எனலாம்.

இவ்வாறு சொல்வதற்குரிய வலுவான காரணிகள், அவர்களுடைய எழுத்துக்களில் பொதிந்துள்ளன.  அதாவது, அவ்வெழுத்துக்கள் (அ) அறிவுப்புலங்களுக்கு இடையிலான மரபான சுவர்களைக் கடந்த கலப்புப்புலச் சொல்லாடல்களாகத் திகழ்கின்றன. (ஆ) ‘இலக்கியத்தினைப் பகுத்தாராய்ந்து, அதற்குள் இருக்கும் மானிட வியல் தரவினைக் கண்டுபிடிப்பதே இலக்கிய மானிடவியலின் இலக்காகும்.  அதற்கு உதவும் கருவியாக அமைவது இலக்கியமாகும்’ என்னும் இக்கருத்து, ஒரு மறைமுக விதியாக அவ்வெழுத்துக் களில் செயல்படுவதை உணர முடிகிறது.  அத்துடன் (இ) ‘எழுத்திலக்கியமற்ற மக்களையும் கவனத்தில் கொள்ளக்கூடிய வகையில், இலக்கிய மானிடவியல் பண்பாட்டிடை ஒப்பாய்வினைச் சாத்தியமான தாக ஆக்கவேண்டும்’ என்பது ஒரு பரிந்துரையாக வைக்கப்பட்டுள்ளது. 

இப்பரிந்துரையை ‘இலக்கிய உலகம் காட்டும் பண்பாட்டுச் செய்திகளைப் பண்பாட்டிடை ஒப்பாய்வுக்கு உட்படுத்தும் வண்ணம் இலக்கிய மானிடவியல் அமைய வேண்டும்’ என்று சற்று மாற்றி அமைத்துக் கொள்ளும் வண்ணம், மேற்குறிப்பிட்ட அறிஞர் களுடைய எழுத்துக்களில் பண்பாட்டிடை ஒப்பாய்வுக் கண்ணோட்டம் பொருத்தமாகக் கையாளப்பட்டுள்ளமையை இங்குச் சுட்டிக் காட்டுவது தேவையாகும்.

மேற்கண்டவாறு இலக்கிய மானிடவியலின் இயல்புகளில் சில நன்கு பொருந்துமாறு அமைந் துள்ள ஓர் ஆய்வுக் கட்டுரையை உதாரணமாகக் காட்டவேண்டுமென்றால் அறிஞர் க.கைலாசபதி யின் ‘பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்’ நூலில் இடம் பெற்றுள்ள “பேய் மகளிர்” என்னும் கட்டுரையைக் குறிப்பிடலாம். (1996: 49-70)

இலக்கியத்தில் பேய் மகளிர்

தம்முடைய “பேய் மகளிர்” பற்றிய கட்டுரையில் பேய்கள், அவை பிணந்தின்னும் வழக்கம் ஆகிய வற்றை பாரதியார் பாடல், பெரியபுராணம், மூத்ததிருப்பதிகம், சுடலைமாடன் கதைப்பாடல் போன்ற இலக்கியங்கள் பேசுமாற்றைச் சுட்டிக் காட்டும் பேராசிரியர் கைலாசபதி, திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போதும் வழக்கில் காணப்படும் பேச்சியம்மன் வழிபாட்டையும், குழந்தையைத் தனது வாயில் வைத்துக் கடிப்பது போல் அமைந் திருக்கும் அத்தெய்வத்தின் சிலை வடிவத்தையும், பேச்சி, பேச்சிமுத்து என்னும் பெயர்கள் மக்கள் பெயர்களாக வழங்குவதையும் குறிப்பிடுகிறார்.  அத்துடன், சங்கப் புலவர்களான கல்லாடனார் (புறம், 371 கதையங்கண்ணனார் (புறம், 356) காவிட்டனார் (புறம் 359) மாங்குடி மருதனார் (மதுரைக் காஞ்சி, 24-28) போன்றோர் தத்தம் பாடல்களில் பேய்மகளிர் பற்றிப் பேசியுள்ள செய்திகளையும் எடுத்துக் காட்டுகிறார்.  அப் பாடல்கள் கூறும் செய்திகளை,

1.   பேய் மகளிர், காண்பார்க்கு அச்சத்தைக் கொடுப் பவர்.

2. அவர் பிணம் தின்பவர்; குருதி குடிப்பவர்

3.   சுடுகாட்டை விரும்புபவர்

4.   மிருகங்களின் பிணத்தையும் திண்பவர்; குடலை மாலையாகப் போடுபவர்

5.  கூத்தாடுபவர் (துணங்கை)

என்று வரிசைப்படுத்தும் அவர், “இச்செய்திகளை ஆதாரமாகக் கொண்டு, புராதன மக்கட் கூட்டத் தினரிடையே வழங்கிய பழக்க வழக்கங்கள், நம்பிக்கை முதலியவற்றின் துணையுடன் இத்தகைய பேய் மகளிரின் செயல்களுக்கு விளக்கங்காண முயல்வோம்” என்கிறார் (1991: 52-53)

மானிடவியல் தரவுகள்

இதில் அவர் எதிர்கொள்ளும் முதல் சிக்க லானது இலக்கியங்கள் பிரதிபலிக்கும் இச்செய்தி களை வெறும் தரவுகள் என்னும் நிலையிலிருந்து சமூக முக்கியத்துவம் பெற்றவையாக அவற்றின் கடந்த காலத்திய பண்பாட்டுச் சூழலுக்குள் பொருத்தி எவ்வாறு இனங்காண்பது என்பதாகும்.  அதாவது, இலக்கியச் செய்திகளை, மானிடவியல் தரவுகளாக அடையாளங்காண முயல்வதாகும். 

அவ்வகையில், புலங்களின் எல்லையைக் கடக்கும் நிலையில்தான் கலப்புப்புல அணுகுமுறை சாத்திய மாகும் என்னும் விதியையும் நடைமுறைப்படுத்தும் விதமாகப் பேய் மகளிர் பற்றிய செய்திகளை, அண்மைக் காலக்கட்டம் வரையில் உலகின் ஏனைய பழங்குடிப் பண்பாடுகளில் வழங்கிய பேய்கள் மற்றும் பிணந்தின்னும் வழக்கம், மந்திரச் செயல்பாடுகள் போன்றவை உள்ளிட்ட நம்பிக்கை மரபுகள் பற்றி மானிடவியர்கள் பலர் ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ள கருத்துக்களோடு ஒப்பிட்டு நோக்கி அவற்றின் இயல்பினை மதிப்பிடுகிறார்.  இங்கு, பண்பாட்டிடை ஒப்பாய்வு முறையும் அவருடைய தேடலில் இயல்பாக ஒருங்கிணை வதைக் காண்கிறோம்.

‘பேய் மகளிர் பற்றி சங்கப்பாடல்கள் காட்டும் செய்திகளை, உலகப் பழங்குடி மக்களின் பழக்க வழக்கங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தல்’ என்னும் இப்படிநிலை என்பது, அடிப்படையில், இலக்கிய மானிடவியலின் கலப்புப்புலப் பார்வையில் அடங்கும் முதல்படிமுறையாகும்.

பேய்மகளிர் பற்றிப் பேசும் பழங்காலப் புலவர்கள் அம்மகளிரைக் குறித்து எத்தகைய கருத்துக்களைக் கொண்டிருந்தனர் என்பதை அறிந்துகொள்ள முற்படும் கைலாசபதி, பெரிய புராணத்தில் காரைக்கால் அம்மையார் பெற்ற பேய் வடிவத்திற்கு உரையாசிரியர் கூறும் விளக் கத்தை நாடுகிறார்.  “பேய்வடிவு-வாயுவவுடம்புடன் கூடித்திரிந்து மக்களை அலைத்து வரும் பேய்வடிவ மன்று. 

அவை, ஐம்பூதச் சேர்க்கையாலாகிய உடற்கூட்டில் ஏனைப் பகுதிகள் மறைய வாயு ஒன்றுமே மிகுத்துக் கண்ணுக்குத் தோன்றாவகை திரியும் பாசவுடம்புகள்.  இங்கு அம்மையார் வேண்டிப் பெற்றது, மானிட உடம்பினுள் ஏனையவை ஒழித்து எலும்புக்கூடு ஒன்றுமே காணப்பெற்றதும், காற்றுப் போற் கடிதுசெல்லும் தன்மை வாய்த்ததும், மண் என்ற ஒரு பூதச் செயல் மிகுந்த எலும்பு வடிவாயினும், களிம்பு நீங்கிப் பொன்னான செம்பு போலப் பாசநீக்கித் தூய்மை யாக்கப்பட்ட சுத்த மாயா வுருவம் வாய்த்ததும், ஆனால் மக்கள் கண்ணுக்குப் புலப்படுவதுமாகிய ஓர் ஒளிபெற்ற திருவுடம்பு என்க.”

சு.கே. சுப்பிர மணிய முதலியாரின், ‘காரைக்காலம்மையார் புராணமும் அவரது அருணூல்களும்’ என்னும் நூலிலிருந்து இம்மேற்கோளை எடுத்தாளும் பேராசிரியர், சமய நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த காரைக்காலம்மையார் பெற்றிருந்த பேயுருவிலிருந்து, பொது மக்களின் நம்பிக்கையில் நிலவக்கூடிய சாதாரணமான பேய்களின் வடிவற்ற வாயுவுடம்பு அல்லது சூக்கும உடம்பு என்பது வேறுபடுவதைப் புலப்படுத்துகிறார்.

ஆக பொதுமக்களின் நம்பிக்கையில் அமைந்த பேய் உருவம், சைவ இலக்கியத்தில் பேசப்படும் காரைக்காலம்மையாரின் பேயுருவம் ஆகியவற்றி லிருந்து சங்கப்பாடல்கள் காட்டும் பேய் மகள் உருவம் வேறுபடுவதை அறிகிறார்.  அதாவது, சுடுகாட்டில் போய்த் தழுவிய பேய்மகள் சூக்கும வடிவமின்றிச் சாதாரண மானிட உடம்பு பெற்றி ருந்ததையே சங்கப் பாடல்கள் காட்டுகின்றன என்பதை அறியும் பேராசிரியர், வழக்கமாகப் பேய் என்று நாம் சொல்லும் பொருள், சங்கப் பாடல்களில் பேய் மகளுக்குப் பொருந்தவில்லை என்பதை வெளிப்படுத்துகிறார். 

சங்ககாலப் பேய்மகள் ஒரு வகையில் காரைக்காலம்மை யாரைப் போல மக்கள் கண்ணுக்குப் புலப்படும் உடம்பினையே பெற்றிருந்தாள்.  அவள் உருவற்ற ‘ஆவி’யுமல்லள்; தெய்வ அருள் பொருந்திய வளுமல்லள்.  அப்படியாயின் பேய் மகள் என்பவள் யார்?” (பக்.53-54) என்னும் கேள்வியை முன்னிறுத்து கிறார்.

பண்பாட்டிடை ஒப்பாய்வு

இக்கேள்விக்கு விடை காணுவதற்கு அவர் பண்பாட்டிடை ஒப்பாய்வு முறையைக் கiயாளு கிறார்.  அதாவது, பண்டைய சமயங்கள், மந்திரம் முதலியவை பற்றிய மானிடவியலரின் கோட்பாடு களைச் சார்ந்து நின்று, அமெரிக்கா, ஆஃபிரிக்கா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளின் பழங் குடிப் பண்பாடுகளில் காணப்படும் மாந்திரீகம் பற்றியும் அவற்றில் முதன்மையாக விளங்கும் பெண் மாந்திரீகர்களின் பல்வேறு வகைப்பட்ட மாந்திரீக நடத்தைகள் குறித்தும் பேசுகிறார். 

அவற்றுள், பல பண்பாடுகளில் பெண்மாந்திரீகர் களே பெரும்பான்மையாகக் காணப்பட்டனர்.  பெண்களுக்கே முதன்முதலில் மந்திர ஆற்றல் இருந்தது என்பதும் அப்பழங்குடிகளின் நம்பிக்கை யாகும்.  வேறு சில பண்பாடுகளில் மாந்திரீகர் களாகச் செயல்படும் ஆண்கள், பெண்ணுக்குரிய ஆடைகளை அணிந்து அவர்களைப் போன்ற பாவனையோடு நடந்து கொள்வதைக் கவனித்த மானிடவியலர், முற்காலத்தில் பெண்களே மாந்திரீகராக விளங்கியிருக்க வேண்டும் என்பதை அச்செயல்கள் சுட்டிக் காட்டுவனவாக உள்ளன எனக் கூறினர்.

வேறுபல பண்பாடுகளில் பெண்மாந்திரீ கர்கள் நிர்வாணமாக இரவில் இடுகாடுகளில் திரிந்து நடனமாடி மனிதரைக் கொல்லும் தமது சக்தியை அதிகரித்துக் கொள்வர்; பிணங்களை அகழ்ந்தெடுத்து அவற்றின் உறுப்புகளிலிருந்து மந்திரத்திற்கு உதவும் பொருட்களைச் செய்து கொள்வர்.  வேறுசில பண்பாடுகளில், பெண் மாந்திரீகர்கள் குழுவாகச் சேர்ந்து மனித மாமிசம் தேடி விருந்துண்டுக் களிப்பது வழக்கமாக இருந்துள்ளது. 

மாந்திரீகர்கள் தாம் எந்த மனித உடலைத் தின்கின்றனரோ அம்மனிதரின் ஆவி, மாந்திரீகச் சடங்கியற்றும்போது தமக்கு உதவும் என்று நம்புகின்றனர்.  இவ்வாறு, பல்வேறு பண்பாடுகளில் மாந்திரீகம், பெண்மாந்திரீகர், பிணம், பிணந்தின்னும் வழக்கம் ஆகியவை ஒருங்கிணைந்து வெளிப்படும் நம்பிக்கைகளைத் தொகுத்து வழங்கும் பேராசிரியர் தமது ஆய்வுப் பொருளை மையப்படுத்திய விவாதத்தின் இறுதியில் சில முடிவுகளை வந்தடைகிறார்:

1. மானிடவியல், சமூகவியல் ஆகிய துறைகள் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் விவரிக்கும் மாந்திரீ கர்கள் பிணந்தின்னும் வழக்கம், சங்க இலக்கியங் களில் காணப்படும் பேய் மகளிரின் செயல் களோடு ஒத்துக் காணப்படுகிறது.  இலக்கிய நூல்களில் தற்செயலாக இடம் பெற்றுள்ள பேய் மகளிர் பற்றிய செய்திகள், பல்வேறு பழங்குடி மக்கள் பண்பாடுகளில் காணப்படும் வழக்கங் களால் அரண் செய்யப்படுகின்றன. (ப.57)

2. “... பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டும் பேய் மகளிர் செயல்கள் உண்மையில் ஒரு மக்கள் கூட்டத்திலே காணப்படும் பொழுது அச்செய்கையை (Magic, Withcraft) மந்திரச்சடங்கு அல்லது சூனியம் என்று மனிதவியல் ஆராய்ச்சியாளர் வருணிப்பர்...”  “ பேய் மகளிர் பெண்மாந்திரீகர் என்பது அவரது செயலால் தெரியவில்லை. 

ஆனால், அதே செயல்கள் உலகின் பிற பகுதிகளிலே மாந்திரீக மாகக் கொள்ளப்படுவதை நோக்கும் பொழுது பேய்மகளிர் மாந்திரீகராயிருந்திருப்பர் என்று கொள்வதில் தவறிருக்காது.  அது மட்டுமின்றி உலகின் பல பகுதிகளிலே மக்கட் கூட்டங்களிலே பெண்களே மந்திர சக்தி பெற்றவராக விளங்கினர்.  சுருங்கக் கூறின் மந்திரசக்தி புராதன சமூகங்களில் பெண்களின் தனியுரிமையாகயிருந்தது.” (ப.58)

3. ‘புராதன உலகில் முக்கிய தெய்வங்களுள் ஒன்று பேரன்னை; அது தமிழர் (திராவிடர்) தெய்வமாக இருந்தது; அது மந்திரச் சடங்கு களால் வழிபடப்பட்டது.  அதன் பின்னர், அது உழவுத் தெய்வமாகவும் மாறியது.  அவற்றின் அடிப்படையில் இறப்பு, பிறப்பு முதலியவற்றின் தெய்வமாகப் பிற்காலத்தில் நிலவியது.  பிற்காலச் செய்யுட்களான சங்க இலக்கியங்கள் அத்தகைய பழைய செய்திகள் சிலவற்றை ‘இனநினைவுகளாக வோ அல்லது எஞ்சியிருந்த வழிபாட்டு முறையாக வோ, எமக்குக் காட்டுகின்றன.

  பேய்மகளிர் உண்மையான மகளிரே.  ஆனால் பெண் தெய்வ வழிபாட்டிற்காகப் பிணந்தின்னிகளாகவும் இருந்தனர்.  அந்த வழக்கம் பின்னாளிலே சில வழிபாட்டுடன் கலந்தது....’ (ப.68)

இவ்வாறு சங்க இலக்கியப் படைப்புகளில் காணப்படும் பேய் மகளிர் பற்றிய தகவல்களை அவற்றின் இலக்கியத் தன்மையிலிருந்து வேறு படச் செய்து, கலப்புப்புலப் பார்வையின் ஊடாக மானிடவியல் தரவுகளாக மாற்றும் பேராசிரியர் கைலாசபதி, மந்திரம், ஆவியியம், இயற்கை வழிபாடு Naturism) உள்ளிட்ட மானிடவியல் கோட்பாடுகள், உலகப் பண்பாடுகளில் காணப்படும் மாந்திரீகர், பேய்கள் மற்றும் பிணந்தின்னும் வழக்கம் என்பன போன்றவற்றை உள்ளடக்கிய பண்பாட்டிடை ஒப்பாய்வு அணுகுமுறை ஆகியவற்றைப் பயன்படுத்தி மேற்கண்ட ஆய்வு முடிவுக்கு வந்தடைகிறார்.

தமிழ் இலக்கிய மானிடவியலின் முன்னோடி

இலக்கியம்- மானிடவியல் ஆகிய இருவேறு புலங்கள் தத்தம் எல்லைகளைக் கடந்து சென்று, ஒன்றை ஒன்று நெருங்குதல் என்னும் படிமுறையை உள்ளடக்கிய இலக்கிய மானிடவியலின் அடிப்படை யான விதியானது பேராசிரியர் கைலாசபதியின் ‘பேய் மகளிர்’ என்னும் கட்டுரையில் மிகவும் நுட்பமாகச் செயல்படுவதையே நம்மால் தெளி வாகக் காணமுடிகிறது. 

மானிடவியலில் அவர் பெற்றிருந்த ஈடுபாடும் பயிற்சியும் கோட்பாட்டுப் புரிதலும் தமிழ் இலக்கியத்தினை முதன்மைப் படுத்திய கலப்புப் புல அணுகுமுறையை மிகவும் இலாவகமாகக் கையாளுவதற்கு அவருக்கு உதவி யுள்ளன.  (மானிடவியல் பற்றி விமர்சனப் பார்வையும் பேராசிரியருக்கு உண்டு.  காண்க: சமூகவியலும் இலக்கியமும், 2002: 22-24) அவ் வகையில் தமிழில் கலப்புப் புல அணுகுமுறையைத் தனித்தன்மையோடு கையாண்ட முன்னோடியா கவும் அவரை நாம் பார்க்கிறோம். 

இலக்கியம்- மானிடவியல் என்னும் இரு வேறு கல்விப் புலங்களின் சிந்தனைகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கும் கலப்புப் புல அணுகுமுறையின் வாயிலாகப் ‘பேய் மகளிர்’ பற்றிய இலக்கியச் செய்திகளை ஆராய்வதற்குத்தான் அவர் கலப்புப் புல அணுகுமுறையைத் திட்டமிட்டுக் கையாண்டார் என்றாலும், அவருடைய கட்டுரை எழுதப்பட்டு ஏறக்குறைய இருபதாண்டுகள் கடந்த பின்னர், அறிமுகம் செய்யப்பட்ட இலக்கிய மானிடவியல் என்பது தன்னியல்பில் அக்கலப்புப் புல அணுகு முறையின் வாயிலாக மிகவும் தெளிவாக வெளிப் பட்டுள்ளது என்பதே நமது கணிப்பாக உள்ளது.

சங்ககால இலக்கியங்களில் இனக்குழுச் சமுதாயம்

இலக்கியப் படைப்புகள் பேசக்கூடிய சமூகம் பற்றிய செய்திகளை ஓர் ஆராய்ச்சியாளர் அவற்றின் இயல்பிலே மட்டுமே புரிந்துகொண்டால் போதும் என்று தன்னை ஒருவகை எல்லைக்குள்ளேயே நிறுத்திக் கொள்ளாமல், காலம் மற்றும் தளப் பார்வையோடு மானிடவியல் என்னும் ஒரு சமூக அறிவியற்புலத்தினைச் சார்ந்து அதன் கருத்தியல் தளங்களில் இருந்தவாறு அவ்விலக்கியச் செய்தி களைச் சரியான கோணத்தில் அணுகுவதற்குரிய கலப்புப்புல அணுகுமுறையையே பேராசிரியர் கைலாசபதியின் கட்டுரையில் நாம் பார்த்தோம்.  ஏறக்குறைய இப்பாங்கில் அமைந்த அணுகுமுறை யினை வேறுசில ஆராய்ச்சியாளர்களுடைய எழுத்துக்களிலும் பிரதிபலிக்கக் காண்கிறோம்.

தமிழில் வழங்கும் தொன்மையான இலக்கியங் களைப் பற்றிப் பேசும்போது ‘சங்க காலம்’ ‘சங்க கால இலக்கியம்’ என்னும் சொல்லாட்சிகளை அறிஞர்கள் பொதுவாகத் தத்தம் எழுத்துக்களில் கையாளுகின்றனர். 

சங்க காலம் பற்றிய கால எல்லைகள் குறித்து அவர்களிடையே கருத்து மாறுபாடுகள் காணப்படுகின்றன.  இந்நிலையில் கி.மு.மூன்றாம் நூற்றாண்டுகள் தொடங்கி கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையில் அமைந்த காலக்கட்டத்தையே சங்க காலம் என்றும் இக் காலக் கட்டத்திலே தோன்றியவற்றையே சங்க கால இலக்கியங்கள் என்றும் குறிப்பர் (கைலாசபதி,  1999:61,) சங்க இலக்கியங்கள் தோன்றிய காலக் கட்டம் பற்றிக் குறிப்பிடும்போது, அக்காலத்தில் நிலவிய சமுதாயம், ‘முற்றுமுழுதான புராதனச் சமுதாயம் எனக் கொள்ள முடியாது. 

ஏனெனில் தாய்வழிச் சமூகம் சங்க காலத்தில் மாறத் தொடங்கி விட்டது.  சங்க காலத் தமிழகம் ‘நாகரிகப்’ பாதையிலே நடைபோடத் தொடங்கியிருந்தது... அங்குக் குலங்களும் குடிகளும் மறைந்து, அரசுகள் தோன்றியிருந்தன....’ என்று பேராசிரியர் கைலாசபதி மதிப்பிடுகிறார் (1999:61)

‘சங்க காலம் என்பது ஒரு பெரும் சமூக மாற்றம் நிகழ்ந்த கட்டத்தினைக் குறிப்பிடுகிறது.  அதாவது, இனக்குழுச் சமூக வாழ்க்கை முறை அழிந்து, நிலவுடைமை மலரும் காலகட்டத்தைக் குறிக்கிறது’ என்று சங்க இலக்கியங்களின் சான்று களைக் கொண்டு பேசும் ஆராய்ச்சியாளரின் கருத்துக்களை அடியொற்றியும், அதே சமயத்தில் சற்று மாறுபட்ட நிலையிலும்... “சங்க காலத்திலும் சங்க முற்காலத்திலும் இனக்குழு வாழ்க்கை தமிழகத்தில் நிலவிவந்தது.

  இக்காரணத்தாலேயே சங்க இலக்கியங்களில் இனக்குழு வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் பல நிகழ்காலச் செய்திகளையும் எச்சங்களையும் காணலாம்” என்னும் முற்கோளை முன்னிறுத்தி சங்க கால சமுதாயம் என்னும் தம்முடைய நூலில் “சங்க இலக்கியத்தில் இனக் குழு வாழ்க்கை” என்ற தலைப்பிட்ட கட்டுரையில் ஆராய்கிறார் பேராசிரியர் கா.சுப்பிரமணியன். (1982: 9-53)

சங்க இலக்கியப் படைப்புகளான எட்டுத் தொகை, பத்துப்பாட்டு ஆகிய இரண்டு தொகுப்பு களில் அடங்கும் பாடல்களில் சிலவற்றை முதன்மை யான ஆதாரங்களாக எடுத்துக் கொண்டு அவற்றில் காணப்படும் சமூக-பண்பாட்டுத் தகவல்களை, மானிடவியல் தரவுகளாக இனங்காணுவது, மானிடவியல் நூற் கருத்துக்கள் கோட்பாடுகள் ஊடாக இனக்குழுச் சமூக நிறுவனங்களை, இலக்கியப் பிரதிகள் பிரதிபலிக்கும் சமூக நிறுவனங்களோடு ஒப்பிட்டுக் காட்டுதல், பண்டைய தமிழ் இனக்குழுக்களைத் தற்கால இனக் குழுக் களோடு ஒப்பிட்டு நோக்குதல் என்பன போன்ற படிநிலைகளின் வாயிலாக கா.சுப்பிரமணியன் சங்ககால இனக்குழுச் சமூக வாழ்க்கையை ஒரு தெளிவான சித்திரமாகத் தீட்டிக் காட்டுகிறார்.

பேராசிரியர் வானமாமலை கூறுவது போல, க.கைலாசபதி, சிவத்தம்பி, டி.பி,சட்டோபாத் யாயா முதலிய அறிஞர்களின் நூல்களையும் ஃப்ரேசர், மாலினோவ்ஸ்கி, டி.என்.மஜும்தார் போன்ற மானிடவியலர்களின் நூல்களையும் பயின்றதன் வாயிலாகத் தமது கலப்புப்புல அணுகு முறை சார்ந்த முறையியலை மிகவும் திறமையாகக் கையாண்டு, சங்கப் பாடல்களை ஆராய்ந்துள்ளார்.

‘சங்க இலக்கியத்தில் இனக்குழு வாழ்க்கை ‘சங்க கால அரசர்,’ ‘நாள் மகிழிருக்கை’, ‘சங்க காலச் சமுதாய வாழ்க்கையில் மந்திரம், சமயம் ஆகிய வற்றின் பங்கு’, ‘ஆற்றுப்படை- ஒரு சமுதாய வரலாற்று விளக்கம்’ ஆகிய ஐந்து கட்டுரைகள் அடங்கிய கா.சுப்பிரமணியனின் சங்க காலச் சமுதாயம் (1982) என்னும் நூல்,சில முக்கியமான காரணங்களால் தனித்துவமான இடத்தைப் பெறுகிறது.

அந்நூலின் தனித்துவத்தை மதிப்பிடுவதற்கு உதவும் காரணங்கள் வருமாறு

1. இலக்கியம்- மானிடவியல் என்னும் இருவேறு புலங்களின் கலப்பில் தோன்றுவது இலக்கிய மானிடவியல்.  அவ்வகையில், சங்க இலக்கியப் பாடல்கள் பற்றிய மானிடவியல் அணுகுமுறையின் வாயிலாகப் பேராசிரியர் கைலாசபதி வித்திட்டதுபோல் பேராசிரியர் கா. சுப்பிரமணியனும் தம்முடைய ‘சங்க காலச் சமுதாயம்’ நூலின் வாயிலாக இலக்கிய மானிடவியலுக்குத் தளமிட்டிருக்கிறார்.

2. அத்துடன் சங்கப் பாடல்களைத் தமது நூலின் கட்டுரைப் பொருளுக்கு முதன்மை ஆதாரங் களாகக் கொள்ளும் நூலாசிரியர்,  இலக்கியத் தினை வெற்றிடத்தில் வைத்துப் பார்க்கவோ அல்லது இலக்கியத்தினைச் சுயேட்சையான நிறுவனமாக அணுகவோ செய்யாமல், அதனைச் சூழலோடு பொருத்திப் பார்க்கக்கூடிய இலக்கிய மானிடவியலின் அணுகுமுறையையே தற்செயலாகக் கையாண்டிருப்பதை அவருடைய கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன.  இலக்கியத்தைப் பண் பாட்டின் படைப்பாகவும். அதன் ஒரு பகுதியா கவும். சமூகப் பொருளாகவும் அணுகுவது இலக்கிய மானிடவியலின் சாராம்சமாகும் என்பதையும் இங்கு நாம் நினைவுகூர்தல் வேண்டும்.

3. குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் ஆகிய ஐந்து நிலங்களில் வாழ்ந்த  மக்களின் நடத்தை முறைகளைப் பற்றிப் பேசும் சங்கப்பாடற் செய்திகளை இனக்குழுப் பண்பாடுகளில் காணப் படும் நடத்தை முறைகளோடு ஒப்பிட்டு நோக்கு வதன் வாயிலாக அவை ஒவ்வொன்றும் எவ்வாறு பண்டைய இனக்குழுச் சமூக வாழ்க்கையின் வெளிப்பாடுகளாக அமைகின்றன என்பதை கா. சுப்பிரமணியன் நிறுவுகிறார்.  அவ்வகையில் பாடல்கள் பிரதிபலிக்கும் மக்களின் நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவை மந்திரச்சடங்கு, வனச் சடங்கு, மந்திரம் வழிபாடு ஆகிய இரண்டும் கலந்த சடங்கு, வேட்டைச் சடங்கு என்பனவாக அமையுமாற்றை விளக்குகிறார். 

தொல்பழங்குடிச் சமய மரபான குலக்குறியியலை, சங்கப் பாடல்கள் பிரதிபலிப்பதையும் விளக்குகிறார்.  பொதுவாக இனக்குழுப் பயன்பாட்டில் ஆவியியம், உயிரியக் கொள்கை (nimatism) குலக்குறியியல் முதலிய தொல்பழஞ் சமய வடிவங்களும் மந்திரமும் இன்றியமையாதவையாக விளங்குவன.  இத்தகைய புராதன சமய வடிவங்களும் ஏனைய பல மரபுகளும் ஒருங்கிணைந்துக் காணப்படும் இனக் குழுப் பண்பாட்டை சங்கப் பாடல்கள் பிரதிபலிப் பதைக் கொண்டு, பண்பாட்டிடை ஒப்பாய்வுக் கண்ணோட்டத்தில், ‘சங்க இலக்கியத்தில் இனக் குழு வாழ்க்கை, (பக். 9-53), ‘சங்க காலச் சமுதாய வாழ்க்கையில் மந்திரம், சமயம், ஆகியவற்றின் பங்கு’ ஆகிய இரண்டு கட்டுரைகளும் தர்க்க ரீதியாக விவாதித்துள்ளன.  இந்த இரண்டு கட்டுரைகளிலும் இழையோடும் மானிடவியல் அணுகுமுறையின் வாயிலாகப் பேராசிரியர் கா. சுப்பிரமணியன் தமிழில் இலக்கிய மானிடவியல் தோன்றுவதற்கு வித்திட்டவர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

இனக்குழு மன்றம்

சங்கப் பாடல்கள் குறிப்பிடும் செய்திகளுள் மன்றம் என்பது முக்கியமானது.  இனக்குழுச் சமூக, அரசியல், பண்பாட்டு நிகழ்வுகள் நடை பெற்ற முக்கிய சமூகப் பொது வெளியாகத் திகழ்ந்தது மன்றம்.  இம்மன்றத்தினைத் தமது ஆய்வுக்கு உட்படுத்தும் பேராசிரியர் கா. சுப்பிர மணியன். “சங்க இலக்கியங்களில் கூட்டு வாழ்க் கையின் மையமாக மன்றம் விவரிக்கப்படுகிறது.  இனக்குழு வாழ்க்கையில் மன்றம் முக்கிய பங்கு வகிக்கிறது.” (1982: 47-48) என்று கூறுகிறார்.

இம்மன்றம் குறித்து, ‘பழந்தமிழகத்தின் இனக்குழு மன்றம்’ என்ற தலைப்பில் நீண்ட கட்டுரை ஒன்றினைப் பேராசிரியர். ஆ. சிவசுப்பிர மணியன் எழுதியுள்ளார்.  (தமிழ்க்கலை -6: கலை 1-2 பக்1-14). சங்கப் பாடல்களில் பேசப்படும் ‘மன்றம்’ என்னும் சொல்லின் பொருளையும், இயல்பையும், செயற்பாட்டையும் மானிடவியல், வரலாறு, பொதுவுடைமைக் கோட்பாடு உள்ளிட்ட பன்முக அறிவுப்புலப் பார்வையோடு விவாதிக்கும் அக்கட்டுரை, “.....இவ்வினக்குழு மன்றம் குறித்து ஒரு நிறைவான சித்திரத்தை இவ்விலக்கியங்கள் எதுவும் தரவில்லை.  ஆயினும் ஆங்காங்கே மேலோட்டமாகக் காணப்படும் குறிப்புகளைத் தொகுப்பதன் மூலமாகப் பழந்தமிழகத்தின் இனக்குழு மன்றம் குறித்து ஓரளவுக்கு நாம் அறிய முடியும்’ (பக்20-3) என்னும் ஆய்வுநோக்கத்தை முன்வைக்கிறது. 

அத்துடன், “இனக்குழுவின் உறுப்பினர் அனைவரும் பங்குகொள்ளும் இனக் குழு மன்றமானது இனக்குழுவின் இன்ப துன்பங் களிலும், அதன் சமூக வாழ்வில் தோன்றும் சிக்கல்களைத் தீர்ப்பதிலும் முக்கியப் பங்கு வகித்தது”.(ப-2) என்னும் அனுமானத்தை முதன்மைப் படுத்தி சங்க இலக்கியத் தரவுகளைப் பகுத்தாராய் கிறது.

இனக்குழுச் சமூகம் பற்றிய மானிடவியலர் களின் கருத்துக்களை சங்கப் பாடல்கள் சித்திரிக்கும் குறிஞ்சி, முல்லை, பாலை, நெய்தல் முதலிய நால்வகை நிலங்களிலும் வாழ்ந்த மக்களுடைய வாழ்க்கை முறையோடு பொருந்திப் பார்க்கும் நிலையில், அவ்வாழ்க்கை முறையானது இனக் குழுவியம் தழுவியதாக அமைந்திருந்ததை ஆ. சிவசுப்பிரமணியன் வெளிப்படுத்துகிறார்.  அவ்வினக் குழு வாழ்க்கை முறையின் சமூக, அரசியல், பண்பாட்டு நடவடிக்கைகள் இடம்பெறும் முக்கிய வெளியாக மன்றம் எவ்வாறு விளங்கியது என்பதை ஏராளமான இலக்கியத் தரவுகளை எடுத்துக்காட்டிப் பண்பாட்டிடை ஒப்பாய்வுப் பார்வையில் நிறுவுகிறார்.

“வர்க்கப் பிரிவினைகள் தோன்றாத இனக் குழு வாழ்வில் மன்றமானது வழிபடும் இடமா கவும், நீதி வழங்கும் இடமாகவும், இனக்குழு வாழ்வின் சொத்தான ஆநிரைகளை அடைத்து வைக்கும் இடமாகவும், பொழுதுபோக்கும் இட மாகவும், எல்லாவற்றிற்கும் மேலாகக் கூட்டு வாழ்வின் சமத்துவத்தை வெளிப்படுத்தும் சின்ன மாகவும் திகழ்ந்தது. 

தனிச்சொத்துரிமையின் வளர்ச்சியும், அதனை ஒட்டி நிகழ்ந்த வர்க்கப் பிரிவினைகளும் தோன்றிய நிலவுடைமைச் சமூக அமைப்பில் மன்றம் அழிந்தாலும் அதன் பயன் பாடுகள் தனித்தனியாகப் பிரிந்து தனித்தனி அமைப்புகளாக மாறின.”  இவ்வாறு, தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் தோன்றிய நிலவுடைமை அரசுதான் இனக்குழு மன்றத்தின் மறைவுக்குக் காரணமாய் அமைந்தது என்று முடிவு கூறுகிறார். (ப.13)

பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியனின் ‘பழந்தமிழகத்தின் இனக்குழுமன்றம்’ என்னும் கட்டுரை, ஒருவகையில் பன்முகப்புலக்கலப்பு அணுகுமுறையைத் தழுவியதாகும்.  அதே சமயத்தில், ‘இலக்கியம்’, ‘மானிடவியல்’ ஆகிய இருவேறு புலங்களின் சிந்தனைகளை ஒருங்கிணைக்கும் கலப்புப்புலப் பார்வையை முகாமையாகக் கொண்டது.  அதனால்தான் இலக்கியச் செய்தி களைக் கொண்டு இனக்குழுச் சமூகத்தையும் அதன் ஒருங்கிணைந்த பகுதியுமான மன்றத்தையும் சரியான கண்ணோட்டத்தில் வெளிப்படுத்து கிறது.

முடிவுரை

மானிடவியலரான ஃபெர்னாண்டோ பொயத் தோசின் முயற்சி காரணமாக எண்பதுகளில் கனடா, ஹங்கேரி, இந்தியா, ஜப்பான், ஸ்பெயின், யுகோஸ்லாவியா உள்ளிட்ட நாடுகளில் ஆங்கிலம் உட்பட பிற மொழிகளில் இலக்கிய மானிடவியல் அறிமுகமானது.  இந்தியாவில் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கின் வாயிலாக அறிமுகப்படுத்தப்பட்டது. 

எனினும். அதனைத் தொடர்ந்து நமது நாட்டில் ஆங்கிலத்திலோ, இந்திய மொழிகளிலோ இலக்கிய மானிடவியலை அடிப்படையாகக் கொண்ட விவாதங்கள் குறிப் பிடத்தக்க வகையில் நடைபெற்றதாகத் தெரிய வில்லை.  ஆனால், இலக்கிய மானிடவியல் என்னும் தனி ஒரு நெறிமுறை தோன்றுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமிழில் ஏறக்குறைய அம்முறையியலானது,  அப்பெயரி லேயே அல்லாமல், ‘இலக்கிய நூற்பொருட்கள் பற்றிய மானிடவியல் அணுகுமுறை’ அல்லது கலப்புப் புல அணுகுமுறையாகத் தோன்றியிருந்தது என்னும் முற்கோளை முன்வைத்தே இதுவரையில்  விவாதித்தோம்.

தமிழ் இலக்கிய நூல்கள் பற்றி மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகள் தொடர்பான நீண்ட வரலாற்றில் காணப்படும் தனித்ததோர் ஆய்வுத்தடம் ஒன்றினைக் குறிப்பிட வேண்டுமானால், அது பன்முக அறிவுப் புலங்கள் தழுவிய கலப்புப் புல அணுகுமுறையே யாகும்.  வரலாறு, தொல்லியல், சமூகவியல், மானிடவியல் போன்றவற்றை உள்ளடக்கிய பன்முகக் கலப்புப்புல அணுகுமுறையானது தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வில் செறிவாகக் கையாளப்பட்டது. 

இந்த அணுகுமுறையிலிருந்து ஒரு சிறிது தனித்துக் கிளைவிட்ட ஒரு நெறி முறையே ‘இலக்கியம் பற்றிய மானிடவியல் கண்ணோட்டமாகும்.’ இந்த நெறிமுறையிலிருந்து ஒரு சில அறிஞர்களுடைய ஆய்வுப்படைப்புகளின் ஊடாகத் தன்னியல்பாகத் தோன்றிய கலப்புப்புல அணுகுமுறையே தமிழ் இலக்கிய மானிடவிய லாகும்.

பொயத்தோஸ் உள்ளிட்ட மேற்கத்திய அறிஞர்கள் அறிமுகப்படுத்திய இலக்கிய மானிடவி யலுக்கும், தமிழில் தன்னியல்பில் முகிழ்த்த இலக்கிய மானிடவியலுக்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாட்டைக் காண்கிறோம். 

அதாவது, மேற்குலக நாடுகளில், பெரும்பான்மை யினராக மானிடவியலர்களே - அதாவது, இலக்கிய மானிடவியலர்களே இலக்கியப் படைப்புகளைத் தத்தம் ஆய்வுக்கான மூலாதாரங்களாக எடுத்துக் கொண்டு அவற்றிலிருந்துத் திரட்டிய தரவுகளை மானிடவியல் தரவுகளாகப் படிநிலை மாற்றம் செய்து, இலக்கிய மானிடவியல் ஆய்வினை மேற்கொண்டனர்.  ஆனால், தமிழில் இலக்கிய நூல்களை - குறிப்பாக சங்க இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட மானிடவியல்  பாங்கிலான கலப்புப்புல ஆய்வில் ஈடுபட்டவர்கள் முதன்மையாகத் தமிழறிஞர்களே ஆவர்.  மானிடவியல் புலம் சார்ந்த முறைசாரா ஈடுபாடு, மானிடவியலின் கருத்தாக்கங்கள், கோட்பாடுகள்.

இனவரைவியல் உள்ளிட்ட தனிவரைவு நூல்கள் வாசிப்பு, பண்பாட்டை ஒப்பாய்வு ஆகியவற்றில் தோய்ந்தவர்களான அவ்வறிஞர்கள் தாமாக ஏற்படுத்திக் கொண்ட பயிற்சியே தமிழில் தன்னியல்பாக இலக்கிய மானிடவியல் என்னும் கலப்புப்புல ஆய்வுமுறை தோன்றுவதற்கு வித்திட்டது.

மேற்கத்திய மானிடவியலர் அறிமுகப்படுத்திய இலக்கிய மானிடவியலுக்கும் தமிழில் தன்னியல் பாகத் தமிழறிஞர்களால் வித்திடப்பட்டுத் தோன்றிய இலக்கிய மானிடவியலுக்கும் இடையே காணப் படும் இவ்வேறுபாடு என்பது மிகவும் நுணுகி நோக்கத்தக்கதாகும்.  அத்துடன் மற்றொரு வேறு பாட்டினையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

 பொதுவாகக் கதையாடல் இலக்கியப் படைப்பு களையே மேற்கத்திய இலக்கிய மானிடவியலர்கள் சார்ந்திருந்தனர்.  தமிழில் தோன்றிய இலக்கிய மானிடவியலோ, தனிப்பாடல்களாக அமைந்த சங்கப் பாடல்களை அடிப்படை ஆதாரங்களாகக் கொண்டு திரட்டப்பட்ட மானிடவியல்  தரவு களையோ தனது பகுப்பாய்வுக்குப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. 

இந்த வேறுபாடும் கூட மிகவும் கவனிக்கத் தக்கதாகும்.  நீண்ட வருணனைக் கவிதைகளே அல்லாது தனிப்பாடல்களாக அமைந்த சங்கக் கவிதைகளின் சமூக-பண்பாட்டுத் தரவுகளைக் கலப்புப் புல ஆய்வுக்கு உட்படுத்திய வகையில் தமிழில் இலக்கிய மானிடவியலைத் தோற்றுவித்த முன்னோடியாகப் பேராசிரியர் கைலாசபதி திகழ்கிறார்.

தமிழில் இலக்கிய மானிடவியல்

ஆசிரியர்: முனைவர் ஆ.தனஞ்செயன்

வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

இரண்டாம் முதன்மைச் சாலை,

மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்,

தரமணி, சென்னை - 600 013

விலை: ரூ. 80.00

Pin It