பேரா.கா.சிவத்தம்பி அவர்களின் புலமைத் தளச் செயல்பாட்டைப் புரிந்துகொள்ள கீழ்க்காணும் முறையில் அணுகலாம். தமிழ்ப்பேராசிரியர்கள் ச.வையாபுரிப் பிள்ளை, சு.வித்தியானந்தன், தனிநாயகம்அடிகள், தெ.பொ.மீ ஆகிய பிற அறிஞர்களின் புலமைத் தளச் செயல்பாடுகள், அவர்களது ஆசிரிய மற்றும் நிர்வாகப் பணிகள் சார்ந்து எவ்வகையில் நிகழ்ந்தன? என்ற புரிதலும் தேவைப்படுகிறது.

இப்பேராசிரியர்கள் குறிப்பிட்ட துறையை அடிப்படையாகக் கொண்டு தொடர்ச்சியாகச் செயல்படும் வாய்ப்புப் பெறாதவர்கள். அவர்களது ஆசிரிய மற்றும் நிர்வாகப் பணிகளுக்கிடையில் கட்டுரைகள் எழுதினார்கள். முழுநூல் எழுதுவது என்பது அரிதாகவே வாய்த்தது. பேரா.ச.வையாபுரிப்பிள்ளை முழுமையாக எழுதிய நூல் ஒன்றே ஒன்று. அது ‘தமிழ் இலக்கிய சரிதத்தில் காவியகாலம்’ என்னும் நூல். பிற அனைத்தும் கட்டுரைகளே. இந்தப் பின்புலத்தில் பேரா.கா.சிவத்தம்பி அவர்களின் செயல்பாட்டையும் புரிந்துகொள்ள வேண்டும். அவரது ஆய்வுச் செயல் பாட்டைப் பின்வரும் வகையில் தொகுத்துக் கொள்ளலாம்.

- கலாநிதி ஆய்வுப்பட்டத்திற்கென, தமிழ்ச் செவ்விலக்கிய மரபில் உள்ள நாடகக் கூறு களைக் கிரேக்க மரபு சார்ந்த நாடகக் கூறு களோடு ஒப்பிட்டு உருவாக்கிய படைப்பு ‘பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்’ என்னும் நூல். இதற்காக செவ்விலக்கியங் களை வாசிப்பிற்குட்படுத்திய பேராசிரியர், அதன் அடிப்படையில் ஆய்வுக் கட்டுரை களை எழுதினார். அவை பெரிதும் உலகத் தமிழ்மாநாடுகளில் (IATR) ஆங்கிலத்தில் படிக்கப் பெற்ற கட்டுரைகள்.

அவை இப்போது ‘பண்டைத்தமிழ்ச் சமூகம்: வரலாற்றுப் புரிதலை நோக்கி...’ என்னும் பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இவ்விரு ஆக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் (கி.மு.300 - கி.பி.250) பல்வேறு கூறுகளைப் பேராசிரியர் ஆய்வுசெய்துள்ளார்.

பேராசிரியரின் ஆழங் காற்பட்ட புலமைத்தளச் செயல்பாடாக இப் பகுதி அமைகிறது. பண்டைத் தமிழ்ச் சமூகம் குறித்த வரலாற்றைத் தொல்லியல் மற்றும் மானிடவியல் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளும் வகையில் பேராசிரியர் ஆய்வு செய் துள்ளார். இத்துறை சார்ந்த இவரது பங்களிப்பு தமிழ்ச் சமூகத்திற்குக் கிடைத்த அரிய கொடை யாகக் கூற முடியும்.

-  பண்டைத் தமிழ்ச் சமூகம் குறித்து ஆய்வு செய்ததைப் போல், பேராசிரியர் முழுமை யாகக் கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல் பட்ட பிறிதொரு துறை ‘தமிழ்க் கவிதையியல்’ ஆகும். 1960 - 1980 காலப் பகுதியில் தமிழ்ச் செவ்வியலக்கியம் தொடர்பான கவனக் குவிப்பில் செயல்பட்ட பேராசிரியர், 1990-2011 காலச் சூழலில் தமிழ்க் கவிதை குறித்தே விரிவான ஆய்வுகளையும் செய்துள்ளார்.

‘தொல்காப்பியமும் கவிதையும்’, ‘சங்க இலக்கியம்: கவிதையும் கருத்தும்’, ‘மதமும் கவிதையும்’, ‘தமிழின் கவிதையியல்’ ஆகியவை கவிதை தொடர்பாக மேற்கொண்ட ஆய்வு நூல்கள். சில கட்டுரைகளையும் எழுதி யுள்ளார். இவை அனைத்தும் கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்தவை. இறுதி இரண்டு நூல்கள் அவரது சொற்பொழிவு களின் நூல் வடிவமாகும். எனவே, பேராசிரியர் தமிழ்க் கவிதையியல் தொடர்பான தீவிரமான அக்கறையோடு செயல்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.

- ‘தமிழில் இலக்கிய வரலாறு: வரலாறு எழுதியல் ஆய்வு’ என்ற நூலும் யாழ்ப்பாணச் சமூகம் குறித்து எழுதியுள்ள நூலும் தவிர, பிற அனைத்தும் பெரிய அளவிலான கட்டுரை களே. அவை தொகுப்புகளாகவும் குறுநூல் களாகவும் வெளிவந்துள்ளன. அவற்றில் இலக்கிய விமர்சனம், இலக்கியக் கோட்பாடு, புனைகதை வரலாறு, அரங்க வரலாறு, திரைப் பட வரலாறு எனப் பல்பரிமாணங்களில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

இவற்றைப் பொருண்மை அடிப்படையில் தொகுத்து நூல் தொகுதிகளாகக் கொண்டுவரும் தேவையுள்ளது. பல்வேறு தேவைகளுக்காகப் பல் வேறு சூழலில் எழுதப்பட்ட இந்த ஆக்கங்கள் குறித்து ஒருசேரக் கூறஇயலாது. பண்டைத் தமிழ்ச் சமூகம் மற்றும் தமிழ்க்கவிதையியல் என்று ஒரு குவிப்பு நிலையில் கூறுவதைப் போல் மேற்குறித்தவைகள் குறித்துக் குவிப்பாக முன்வைப்பது கடினம்.

  • மேற்குறித்த பண்டைத்தமிழ்ச் சமூகம், தமிழ்க் கவிதையியல், தமிழ்ச் சமூகம் தொடர்பான பல்வேறு பரிமாணங்கள் என்ற வகையில் அமைவன அவரது ஆய்வுகள். இதில் ஈழப் போராட்ட வரலாறு தொடர்பான ஆக்கங்கள் இடம்பெறவில்லை. இப்பொருள் தொடர்பான கட்டுரைகள் பெரும்பகுதி ஆங்கிலத்தில் பேராசிரியரால் எழுதப்பட்டிருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழில் எழுதியது மிகமிகக் குறைவே. இத்தன்மை அவரது செயல் பாட்டின் இன்னொரு பரிமாணத்தைப் புரிந்து கொள்ள உதவும்.

இந்தக் கட்டுரையில் பேரா.கா.சிவத்தம்பி அவர்களின் தமிழ்க் கவிதையியல் தொடர்பான உரையாடல்கள் குறித்து, உரையாடல் நிகழ்த்துவது நோக்கமாக அமைகிறது. அவரது பிற ஆய்வுகள் குறித்து அறிந்த அளவிற்கு அவரது கவிதையியல் குறித்த ஆய்வுகள் இன்னும் தமிழ்ச் சூழலில் பெரிதும் அறியப்படவில்லை யென்றே கூறலாம். அவரது இறுதிக்கால ஈடுபாடாகவும் இத்துறை இருந்தது. அதனைப் பின்வரும் வகையில் தொகுத்துக் கொள்ளலாம்.

  • சங்க இலக்கியப் பாடல்களுக்கும் தொல் காப்பியம் கூறும் அகம் மற்றும் புறம் தொடர் பான இலக்கணக் கூறுகளுக்கும் உள்ள உறவு
  • அகப்புற மரபின் தொடர்ச்சியாகச் சிலப்பதி காரக் கவிதை மரபு உருப்பெற்றுள்ளமை; அதன் பிறிதொரு பரிமாணமாகத் திருக்குறள் அமைந்துள்ளமை.
  • பக்தி இலக்கியக் கவிதைகளுக்கான இலக்கண வரையறைகள் இல்லாமை தண்டியலங்கார மரபிலிருந்து வேறுபட்டு நிற்கும் கம்பராமாயணம் மற்றும் பெரிய புராணம்
  • பாட்டியல் நூல்கள் வழி அறியப்படும் அழகியல்
  • தமிழ்க்கவிதைப் பாய்வின் திருப்பங்கள்
  • ஊடகங்கள் வழிக் கவிதைச் செயல்பாடு

கடந்த 2500 ஆண்டுக்காலத் தமிழ்ச் சமூகத்தின் இயங்குதளத்தைக் கவிதை என்னும் தரவை அடிப் படையாகக்கொண்டு உரையாடலுக்குட்படுத்தும் வரலாற்று ஆய்வைப் பேராசிரியர் நிகழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்த தமிழ் இலக்கிய வரலாறு குறித்த புரிதல் உருவான அளவிற்குத் தமிழ்க் கவிதை பற்றிய புரிதல் இருப்பதாகக் கருதமுடியாது. இத்துறை தொடர்பாக அவர் முன்வைக்கும் பின்கண்ட செய்திகள் கவனத்தில் கொள்ளத்தக்கன.

“நாங்கள் கவித்துவ நிலையிலிருந்து பார்ப்போ மானால் முதலில் அடிநிலையில் மக்களிடையே காணப்படுகின்ற ஒரு பாடல் மரபு; அந்தப் பாடல் மரபைச் செம்மை செய்து பாடுகின்ற பாணர்மரபு, அந்தப் பாணர்மரபிலிருந்து வளர்ந்த புலவர் மரபு என மூன்று நிலைகள் இருந்துள்ளன” (தமிழின் கவிதையியல்: 2007:7).

“தொல்காப்பியத்தில் பேசப்படும் ‘பா’ வகைகள் தமிழ்க் கவிதையியல் வரலாற்றில் முக்கியமாகக் குறிப்பிடல் வேண்டும். ஏனெனில் அவை வடமொழி இலக்கிய ஆக்க மரபுகள் தமிழோடு இணைவதற்கு முன்னர் நிலவிய ஓசை மரபுகள்” (மே.கு.நூல்:2007:50).

“சிலப்பதிகாரம் முதல் கம்பராமாயணம் வரையிலான வளர்ச்சியை இலக்கிய அழகியல் நின்று விரிவாக ஆராயும் ஒரு பெரும் ஆராய்ச்சி நூல் இதுவரை இல்லையென்றே கூறலாம்” (மே.கு.நூல்:2007:74).

“அரசியல், சமூகவரலாற்று நிலைநின்று பார்க்கும் பொழுது கி.பி.12ஆம் நூற்றாண்டின் பின்னர், ஆங்கிலக் காலனித்துவ நிர்வாகம் நிலைநிறுத்தப் படும் வரை புதிய திசை மாற்றமெதுவும் இடம் பெற முடியாத சூழ்நிலையிருந்ததைப் பார்க்கி றோம்” (மே.கு.நூல்:2007:150).

“காப்பிய எடுத்துரைப்புகள், சிற்றிலக்கிய வகைப் பயன்பாடுகள் ஆகியவற்றிலும் பார்க்க, இப் பொழுது ஆள்நிலை பதிற்குறி (ஜீமீக்ஷீsஷீஸீணீறீ க்ஷீமீsஜீஷீஸீsமீ) கவிதையின் பிரதான பொருள் நிலையாகிறது” (மே.கு.நூல்:2007:190).

“உண்மையில் சினிமாவழி வரும் தமிழ்க் கவிதை இந்தச் சமூகச் சமவீனங்களை ஊடறுத்து ஒரு பொதுப்படையான கவித்துவ உணர்வுப் பகர் வினைத் தமிழ்மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது/ஏற்படுத்துகிறது எனலாம். இந்த அமிசத்தைத் தமிழின் இன்றைய கவித்துவப் பண்பாடு என்று கூறலாமென்று கருதுகிறேன்” (மே.கு.நூல்:2007: 208).

மேற்குறித்த அவரது பதிவுகள் வழித் தமிழ்க் கவிதையியல் தொடர்பான மதிப்பீடுகளை ஓரளவு உள்வாங்க முடியும். பேராசிரியர் இவ்வரலாறு குறித்து உரையாடியுள்ள பல் வேறு தகவல்கள், தமிழ்க் கவிதை வரலாற்றுப் போக்கு களைக் கண்டறிய உதவும். இக்கோணத்தில் இப்பொருள் பற்றி யாரும் விரிவாகப் பேசவில்லை.

சங்கப் பாடல்களில் தொகுக்கப்பட்டிருக்கும் அடிக் குறிப்புகள், பாடலோடு தொடர்பற்றிருப்பதைப் பல் வேறு சான்றுகள் வழிக் காணமுடியும். பாடல் பாடப் பட்ட காலம் மற்றும் சூழல், பாடல் தொகுக்கப்பட்ட காலம் மற்றும் சூழல், பாடல் பதிப்பிக்கப்பட்ட காலம், பாடல் புதிதாக வாசிக்கப்படும் காலம் எனப் பல்வேறு பரிமாணங்களைச் செவ்விலக்கியப் பிரதி கடந்து சென்று கொண்டிருக்கிறது. அப்பிரதியில் அவ்வப்போது செய்யப்படும் ஊடாட்டங்கள், அப்பிரதியின் கவிதை பற்றிய புரிதலுக்கு உதவுமா? என்பதே பேராசிரியரின் அடிப்படைக் கேள்வியாக அமைகிறது.

இந்தப் பின் புலத்தில் தொல்காப்பியர் பேசியுள்ள அகப்புற மரபுகள் சங்கப் பாடல்களில் நெகிழ்ச்சியுறும் போக்கைச் சுட்டும் பேராசிரியர், அதற்கான பல்வேறு காரணங்களை முன் வைக்கிறார். தொல்காப்பியம் சுட்டும் மரபு, வாய் மொழிப் பராம்பரிய மரபின் போதாமையாக ஆகி விடுவதையும் அதனால் புதிய கவிதை மரபு உருவாகி விடுவதையும் பேராசிரியர் சுட்டுகிறார்.

நற்றிணை, குறுந்தொகை மரபுகளிலிருந்து ஆற்றுப் படை மரபு வேறுபடுகின்றது. ஆற்றுப்படை மரபுகளிலிருந்து பத்துப்பாட்டில் உள்ள நெடுநல்வாடை, மதுரைக் காஞ்சி வேறுபடுகிறது. இவற்றிலிருந்து முற்றிலும் புதிதான பாடல்களாகக் கலித்தொகையும் பரிபாடலும் அமைந் துள்ளன. இந்த வரலாற்றுப் போக்கை, தொல்காப்பியர் துணைகொண்டு அறிந்து கொள்ள முடியுமா? என்னும் கேள்வியைப் பேராசிரியர் எழுப்புகிறார்.

தொல்காப்பியத்தில் பல கேள்விகளுக்குப் பதில் கிடைப்பதில்லை என்பதையும் கூறுகிறார். இவ்வகையில் எழுதப்பட்ட இலக்கண மரபு சார்ந்து சங்கக் கவிதைச் செயல்பாடு இல்லை, அது தனக்குள் பல்வேறு புதிய புதிய கூறுகளைத் தானே உருவாக்கிக் கொண்டுள்ளது என்பதை நாம் காண முடிகிறது. ‘விருந்திற்பாணி’, ‘விலக்கு’ என்னும் கவிதை மரபுகளை இவ்வகையில் காணமுடியும்.

தமிழ்ப் புலமைச் சூழலில் எழுதப்பட்ட இலக்கண மரபினின்றே சங்கக் கவிதைகள் வாசிக்கப்பட்ட கல்விச் சூழலில், பேராசிரியர் அதிர்வுகளை உருவாக்கியுள்ளார். இவ்வகையான குறுக்கீடு, புதிததாகச் சங்கப் பாடல் களுக்குள் பயணம் செய்வோருக்குப் புத்தொளி தருவதாக அமைகிறது. இலக்கணம் உருவாக்கம் என்பது அது எழுதப்பட்ட காலத்தின் பதிவாக இருக்கலாம். காலம் மாறும்போது இலக்கணமும் மாறவேண்டும்.

தொல்காப்பியத்திற்கும் சங்கப் பாடல்களுக்குமான உறவை மேற்கூறிய கண்ணோட்டத்தில் வெளிப்படுத்தும் தேவையுண்டு. அதற்கான அடிப்படை உரையாடல் களைப் பேராசிரியர் முன்னெடுத்துள்ளார் என்று கூற முடிகிறது.

நாட்டிய சாஸ்திரம், தொல்காப்பியம் ஆகிய இரு நூல்களில் பேசப்படும் மெய்ப்பாட்டியல் தொடர்பான செய்திகள், சங்கப்பாடலின் அழகியல் குறித்தப் புரிதலுக்கு உதவுமா? தொல்காப்பிய மரபுகள் நாட்டிய சாஸ்திரத்தில் உள்வாங்கப்பட்டதா? அல்லது நாட்டிய சாஸ்திர மரபு தொல்காப்பியத்தில் உள்வாங்கப் பட்டுள்ளதா? இந்தக் கேள்விக்கு விடையளிப்பதில் பெரும் குழப்பம் நிலவுகிறது.

இரண்டு நூல்களின் உருவாக்கப் பின்புலம், காலம் தொடர்பான தரவுகளில் உள்ள முரண்பாடுகள் மேற்குறித்த குழப்பத்திற்குக் காரணமாக அமைகின்றன. இலக்கணங்களுக்கும் பாடல்களுக்கும் உள்ள உறவு குறித்த முரண்பாடுகளை, சமூக இயங்குதளத்திலிருந்து நாம் புரிந்துகொள்ள முடியும். அவ்வகையில் சமூக இயங்குதளத்திலிருந்து கவிதை வரலாற்றை உரையாடலுக்கு உட்படுத்த முனைகிறார். அதற்கான விரிவான விளக்கங்களைத் ‘தமிழின் கவிதையியல்’ நூலில் விரிவாகக் காண முடிகிறது.

‘கவித்துவ உணர்வுச்செவ்வி’ என்னும் தொடரைப் பேராசிரியர் பயன்படுத்துகிறார். இதில் கவிதையின் ஓசை முதன்மையான இடம்பெறுவதாகக் கருதுகிறார். ஓசை மரபு, பா மரபாகக் கட்டமைக்கப்படுவதைக் காண் கிறோம். இம்மரபை நாம் யாப்பு என்று அழைக்கிறோம். யாப்பு மரபு இசைமரபின் கட்டப்பட்ட வடிவமாக அமைய வேண்டும். காலப்போக்கில் இசை மரபைப் புறந்தள்ளிய யாப்பு மரபும் உருவாகியது. பக்திப் பாடல்கள் என்பவை அடிப்படையில் இசை மரபைச் சார்ந்தவை.

அவை ‘பண்’ என்று அழைக்கப்பட்டன. இவ்வகையான மரபு சங்க மரபிற்குள்ளிலிருந்து மேலெழுந்த வளர்ச்சியா? அல்லது புதிதாக உருவானதா? என்ற உரையாடல் முக்கியமானது. இந்தக் காலச் சூழலில் தமிழில் வந்து சேர்ந்த வடமொழி மரபுகள் நமது கவிதைமரபில் உருவாக்கிய ஊடாட்டங்கள், இவ் வகையான பாசுர மரபு உருவாக்கத்திற்குக் காரணமா? வடமொழியில் உள்ள மனப்பாட மரபில் அமையும் ஓசை மரபுகள் நமது மொழியில் எவ்வகையில் இடம் பெற்றன? தமிழ்க் கவிதை மரபு இந்தச் சூழலில் அனைத் திந்திய மரபாக வடிவம் பெறுவதாகப் பேராசிரியர் பல இடங்களில் பதிவுசெய்கிறார்.

தமிழ்மரபு, சமஸ்கிருத மரபு, பாலி, பிராகிருத மரபு எனப் பன்மொழிச் சூழல் உருவானபோது அதன் தாக்கம் தமிழ்க் கவிதையில் ஏற்படுவது தவிர்க்க முடியாது. ஆனால், இம்மரபில் சங்க இலக்கியப்பாடல் மரபின் தாக்கம் இருந்த அளவிற்கு, பிற மொழித்தாக்கம் உருவானதாகக் கூற முடியுமா? பாடல் பொருண்மையில் ஏற்பட்ட தாக்கம்; பாடல் வடிவில் ஏற்பட்டதா? இவ்விதம் பல்வேறு உரையாடல் களைப் பக்தி இலக்கியம் சார்ந்து நிகழ்த்த முடியும். அதற்கான தளத்தைப் பேராசிரியரின் ஆய்வு உருவாக்கி யுள்ளது. இந்தப் பின்புலத்தில் பேராசிரியரின் பின்வரும் கூற்று கவனத்தில் கொள்ளத்தக்கது.

“மாமல்லபுரக் கடற்கரைக் கோவிலிலிருந்து தஞ்சைப் பெருவுடையார் கோவிலுக்கு வாருங்கள். காரைக்காலம்மையாரை எலும்புக்கூடாகச் சித்திரிக்கும் சிற்பம் முதல் பிற்சோழர்காலத்து வெண்கல நாடராஜ உருவத் திருமேனிக்கு வாருங்கள். திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தி லிருந்து திருவாசகத்துக்கும் முதலாழ்வார்கள் பாசுரத்திலிருந்து நம்மாழ்வாருக்கும் வருகின்ற பொழுதும் உணரக்கூடிய பண்பாட்டுத் திருப்தியையும் அழகியல் உணர்வில் ஏற்படும் அழுத்த வேறுபாடு களையும் நாம் ஒட்டுமொத்தமாக உணர்ந்து கொள்ளல்வேண்டும்” (மே.கு.நூல்:2007:99).

பேராசிரியரின் பக்திமரபு தொடர்பான மேற்குறித்த பதிவு, தமிழ் அழகியலை, பல்கலை இணைவாக அணுகும் பாங்கை நமக்குச் சொல்கிறது. சிற்பச் செந்நூலில் கூறப் படும் சிற்பம் செதுக்குவது தொடர்பான அலகுகளுக்கும் யாப்பில் கூறப்படும் அலகுகளுக்கும் தொடர்பிருப்பதை நாம் உணரவேண்டும்.

தமிழ்ச் சூழலில் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலம் என்பது பல்வேறு புதிய மரபுகளை உள்வாங்கிய காலம். சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் ஆகிய காப்பிய வளங்கள் இதற்கு முன் இருந்த மரபின் உச்ச வளர்ச்சியாக உருவாயின. கவிதை அழகியலில் இவற்றின் இடம் தனித்தது. புதிய நிகண்டுகள் உருவாக்கப்பட்டன. தமிழ்ச் சொற்கள் தொகுப்பு முறைமை புலமைத் தளத்திற்குச் செல்கிறது. சொற்களின் பொருண்மை குறித்த கூடுதல் கவனம் ஏற்படுகிறது. வீரசோழியம், நன்னூல் ஆகிய புதிய இலக்கணங்கள் உருவாக்கப்படுகின்றன.

யாப்பு, அணி ஆகியவற்றில் புதிய போக்குகள் உருப்பெறுகின்றன. இவற்றை எல்லாம் முறைப் படுத்திக் கூறும் பாட்டியல் கூறுகள் உருவாகின்றன. இக் காலத்திய கவிதை பற்றிய புரிதலுக்குப் பாட்டியல் நூல்களை அடிப்படையாகக் கொண்டு, பேராசிரியர் உரையாடல் நிகழ்த்துகிறார். இதுவரை இருந்த கவிதை மரபிலிருந்து முற்றிலும் மாறிய கவிதை உருப்பெற்றது. சமூகத்தில் உருவான புதிய அதிகாரப் படிநிலையைக் கவிதையும் உட்கொண்டது. பேராசிரியர் இத்தன்மையைக் கீழ்க்காணும் வகையில் பதிவுசெய்கிறார்.

“பாட்டினை இவர்கள் முதலில் எழுத்துக்களின் தொகுதிகளாகவே பார்க்கின்றனர். அந்த எழுத்துக்கள் வருணத்தின் அடிப்படையில் பிரிக்கப்படலாம் என்றும் அவை வானவர், மக்கள், நரகர், விலங்குகள் என்ற கருத்துநிலைப்பட நோக்கப்படலாம் என்றும், எழுத்துக்களில் அமுத எழுத்துக்கள், நஞ்செழுத்துக்கள் உண்டென்றும் எழுத்துக்கள் ஆண்பால், பெண்பால் எழுத்துக்கள் எனப் பிரிக்கப்படலாமென்றும் குழந்தை நிலை, குமாரநிலை, மூப்புநிலை, மரணம் ஆகிய ஒவ்வொரு நிலையைக் காட்டும் எழுத்துக்கள் உண்டு என்றும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் சிற்சில எழுத்துக்கள் உள்ளன வென்றும் விரிவாகக் கூறிச்செல்லும் சொற்களின் பயன்பாடு பற்றிய இயற்கையதீத நம்பிக்கையன்று நிலவிற்று” (மே.கு.நூல்:2007:101).

பாட்டியல் வழிக் காணப்படும் தமிழ்க்கவிதை பல் வேறு மொழித்தாக்கத்தோடு தமிழில் உருப்பெற்றதாகக் கருதலாம். பாலி, பிராகிருத, சமஸ்கிருத மொழிகளில் உள்ள பல்வேறு கூறுகளைத் தமிழ்க்கவிதைஉள் வாங்கிக் கொண்டது. இதனால், கவிதையின் வடிவம் பின் தள்ளப்பட்டது. கவிதையின் பொருண்மை முதன்மை பெற்றது. அவை ஒரு வகையில் இசைக்க இயலாத வறட்டுச் செய்யுட் களாகவும் வடிவம் பெற்றன. பிரபந்த மரபுகளை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டவை களாகவும் கவிதைகள் உருவாயின. இத்தன்மைகளைப் பேராசிரியர் உரையாடலுக்கு உட்படுத்தியுள்ளார்.

இத்தன்மைகளை அகில இந்தியத் தன்மை என்னும் ஒரு விவரணமாகக் கருதுகிறார். அகில இந்தியத் தன்மை யுடையதாகத் தமிழ்க் கவிதை உருவானது வளர்ச்சியா? வீழ்ச்சியா? என்னும் உரையாடல் மேற்கொள்ள வேண்டும். பேராசிரியர் அகில இந்தியத் தன்மை என்பதை ஏற்பு நிலையில்தான் பல இடங்களில் பதிவு செய் கிறார். சங்கப் பா மரபு, பாசுரப் பா மரபு ஆகிய இசை மரபுகள் தமிழ்க் கவிதையில் இல்லாமல் போயிற்று. இது தமிழ்க் கவிதையின் வளர்ச்சியாகக் கருதமுடியாது.

கவி, கமகன், வாதி, வாக்கி என்னும் நிலையில் புலவர்கள் உருவானார்கள். ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக் கவி என்னும் வகையில் கவிஞர்கள் உருவானார்கள். இவ்வுருவாக்கம் அடுத்த கட்ட வளர்ச்சியாகக் கருதமுடியுமா? என்னும் உரை யாடல் சுவையானது.

தமிழ்க் கவிதை வரலாற்றில் இளங்கோவடிகள், கம்பன், பாரதி ஆகிய புள்ளிகள் திருப்புமுனைகள் என்பது பேராசிரியர் கணிப்பு. இத்திருப்புமுனை களுக்கான விரிவான காரணங்களைப் பேராசிரியர் விவாதித்துள்ளார். இத்தன்மைகள் அனைத்திற்கும் முற்றும் முழுதான புதிய மரபை ஊடகங்களின் வருகைக்குப் பிறகு தமிழ்க் கவிதை உள்வாங்குகிறது. தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகளுக்கும் கவிதை உருவாக்கத்திற்குமான உறவுகள் குறித்தும் பேராசிரியர் விரிவாகப் பேசுகிறார்.

இக்கவிதை வரலாறு குறித்துப் பேராசிரியர் தரும் விளக்கம்; தமிழ்க்கவிதை வரலாற்றைப் புரிந்து கொள்ள உதவும்.

“எந்த நாட்டிலோ அல்லது மொழியிலோ தோன்றிய கவித்துவ வெளிப்பாடுகளை ஒன்றாக வைத்து நோக்கும் பொழுது கவிதைகள் கேட் போரால்/வாசகர்களால் உள்வாங்கப்பட்டு ரசிக்கப்பெறும் முறையில், காலத்துக்குக் காலம் அழுத்த வேறுபாடுகள் ஏற்படுவது வழக்கம். கவிதை என்பது யாது, அது எவற்றைப் பற்றிப் பேசுதல் வேண்டும். எப்பொழுது எந்த நிலையில் ஒரு கவிதையாக்கம் கவர்ச்சிகரமான கவிதையாக அமையும் என்பன பற்றி, அவற்றின் ஆக்கத்தில் ஈடுபடுவோருடைய கருத்து நிலைப்பாடுகள், கவிதை, கவிதையெனக் கொள்ளப்படுவதற்கான எடுத்துக்கூறல் முறைமைகள் ஆகியனயாவும் ஒருங்கு சேர்கின்றபொழுதுதான் மேலே கூறிய கவித்துவ உணர்வுச் செவ்வியலே மாற்றம் தெரிய வரும்.

கவிதையாக்கம் பற்றிய எண்ணங்களின் இணைவிலே தான் இந்தக் கவித்துவ உணர்வுச் செவ்வி தெரியவருகிறது. சுருக்கமாகச் சொன்னால் கவித்துவ உணர்வுச்செவ்வியென்பது கவிதைகளில் வரும் பன்முகப்பட்ட உணர்ச்சிச் சூழலமைவு களுக்கும் அவற்றுடன் இயைந்துவரும் அழகியல் நிலைகளுக்கும் (கேட்போர்/வாசகர் காட்டும்) பதிற்குறித் திறனாகும்” (மே.கு.நூல்:2007:58).

தமிழ், சமஸ்கிருதம் பாலி, பிராகிருதம் என்பவை தொல்பழம் மொழிகள். இவை கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக, செயல்பட்டுவந்த நிலப்பரப்பை இன்று இந்தியா என்று அழைக்கிறோம். முன்னர் அந்த மரபில்லை. இன்று உருப்பெற்றிருக்கும் இத்தன்மையை, அனைத்திந்தியத் தன்மை என்று பேராசிரியர் கா.சிவத் தம்பி பதிவுசெய்கிறார்.

தமிழ்க் கவிதையில் அவ்வகை யான அனைத்திந்தியத் தன்மை உருப்பெற்றதாகக்கருதுகிறோம். இதன்மூலம் தமிழின் கவிதை வளம் சார்ந்த வரலாறு எவ்வகையான பின்னடைவுகளை உள் வாங்கியது? அது எதனால் ஏற்பட்டது? ஆகிய பிற உரையாடல்களைப் பேராசிரியர் தவிர்த்து விடுகிறார். தமிழ்க் கலை வரலாறு தொடர்பான உரையாடலில் இந்தியத் தன்மை என்பதை எப்படிப் புரிந்துகொள்வது? அது எந்த மட்டத்தில் செயல்பட்டது/செயல்படுகிறது என்பது குறித்த உரையாடலும் தேவைப்படுகிறது.

பேராசிரியரின் சான்றாதார நூல்கள்:

2000 மதமும் கவிதையும், தமிழ்ச் சங்கம், கொழும்பு.

2005 பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம், மொழிபெயர்ப்பு: அம்மன்கிளி முருகதாஸ், குமரன் புத்தகநிலையம், கொழும்பு - சென்னை.

2007 தொல்காப்பியமும் கவிதையும், குமரன் புத்தகநிலையம், கொழும்பு - சென்னை.

2009 சங்க இலக்கியம்: கவிதையும் கருத்தும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

குறிப்பு:

06.07.2011-இல் மறைந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினை வாக இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.

Pin It