படித்துப் பாருங்களேன்..........

S. Jeyaseela Stephen (2009) Expanding Portuguese Empire and the Tamil Economy

(Sixteenth – Eighteenth Centuries)

 தமிழ்நாட்டில் முதல்முதலாகக் காலனிய ஆட்சியை நிறுவியவர்கள் போர்ச்சுக்கீசியர்கள். 16ஆவது நூற்றாண்டில் இராமேஸ்வரம் தொடங்கி, கன்னியா குமரி வரையிலான கடற்கரைப் பகுதியில் காலூன்றி அப் பகுதியில் ஆட்சி செலுத்தியவர்கள். ஆனால் அதற்கு முன்பே போர்ச்சுக்கல் நாட்டு வணிகர்கள் நாகப் பட்டினம், சென்னையின் சாந்தோம் ஆகிய பகுதிகளில் குடியேறி வாணிபம் மேற்கொண்டிருந்தனர்.

கி.பி.1658இல் டச்சுக்காரர்கள் நிகழ்த்திய படை யெடுப்பிற்குப் பின்னரே இவர்களின் ஆதிக்கம் மறைந்தது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட கால அளவில் நீடித்த போர்ச்சுக்கீசிய ஆட்சி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வது, 16ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தின் சமூகப் பண்பாட்டு வரலாற்றாய்வுக்குப் பெரிதும் துணை புரியும்.

ஏனெனில் இக்காலத்தில்தான் கத்தோலிக்கம் தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகளில் வலுவாகக் காலூன்றியது. கொல்லம், அம்பலக்காடு, புன்னைக் காயல் ஆகிய ஊர்களில் கத்தோலிக்கக் குருக்கள் நிறுவிய அச்சகங்களில் தமிழ் நூல்கள் அச்சாயின. மருத்துவ மனை, கல்லூரி போன்றவை அமைக்கப்பட்டன. மேற் கத்தியப் பண்பாட்டிற்கும் தமிழ்ப்பண்பாட்டிற்கும் இடையிலான ஊடாட்டங்கள் நிகழ்ந்தன.

மதுரை நாயக்கமன்னர், இராமனாதபுரம் சேதுபதி மன்னர், பரமக்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட தும்பிச்சிநாயக்கர், கயத்தாறைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட வெட்டும் பெருமாள், கன்னியாகுமரியின் உன்னி கேரளவர்மன் ஆகியோருக்கும் போர்ச்சுக்கீசியர்களுக்கும் இடையே, சிலபோழ்து உறவும் சிலபோழ்து முரண்பாடும் நிலவின. இதே நிலைதான் இஸ்லாமிய வணிகர்களுடனும் நிலவியது.

இவ்வாறு தமிழ்நாட்டில் செயல்பட்ட போர்ச்சுக் கீசியர்கள் குறித்தும், இவர்களை அடுத்துவந்த டச்சுக் காரர்கள் குறித்தும் விரிவான செய்திகள் எவையும் நமது கல்விப்புலம் சார்ந்த வரலாற்றுப் பாடத்தில் இடம் பெறவில்லை. இன்று வரை விரிவாக ஆராயப்படாத ஓர் ஆய்வுக்களமாக போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர் ஆட்சிக் காலம் அமைந்துள்ளது. இதற்கு ஓர் அடிப்படைக் காரண மாக அமைவது, இக்காலத்தில் உருவான ஆவணங்கள் போர்ச்சுக்கீஸ் மற்றும் டச்சுமொழியில் இருப்பதுதான். மேலும் இவையும் கூட மேற்கூறிய இருநாடுகளில் உள்ள அரசு மற்றும் சமய ஆவணக் காப்பகங்களில்தான் உள்ளன. இத்தடைகளை மீறி இவற்றைப் பயன்படுத்தி வரலாற்று உண்மைகளை வெளிக்கொணரும் ஆர்வமும் முயற்சியும் தமிழக ஆட்சியாளர்கள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு இல்லை.

இலங்கையைச் சார்ந்த சின்னப்ப அரசரத்தினம், சஞ்சய் சுப்பிரமணியம் (இந்தியா) ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டு ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் வெளி யிட்டுள்ளனர். இத்தகைய சூழலில் இம்முயற்சியில் ஈடுபட்ட முதல் தமிழ்நாட்டவராக ஜெயசீல ஸ்டீபன் அமைகிறார். தமிழ்நாட்டின் முத்துக்குளித்தல் வரலாறு தொடர்பாக The History of the Pearl Fishery of Tamil Coast என்ற நூலை அருணாசலம் வெளியிட்டிருந்தாலும் போர்ச்சுக்கீசிய மொழி ஆவணங்கள் எவற்றையும் அவர் பயன்படுத்தவில்லை. தமிழகத்தில் போர்ச்சுக்கீசியர் குறித்து ‘The coromandel coast and its Hinterland Economy Society and political system 1500-1600 (1977), Portuguese in the Tamil coast Historical Explorations in commerce and culture 1507-1749 (1988),என்ற நூல்களை, போர்ச்சுக்கீசிய மொழியில் உள்ள ஆவணங்களின் துணையுடன் இந்நூலாசிரியர் ஏற்கனவே எழுதியுள்ளார்.

தாம் எழுதிய நாட்குறிப்பினால் புகழ்பெற்ற புதுச்சேரி ஆனந்த ரங்கப்பிள்ளையின் தம்பிமகன், ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளை என்பவர் 18ஆம் நூற்றாண்டில் எழுதியுள்ள நாட்குறிப்புகளை ‘ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளை நாட்குறிப்பு’ என்ற தலைப்பில் 2000-ஆம் ஆண்டில் இரு தொகுதிகளாக இவர் வெளியிட்டுள்ளார்.

இவரது மகன் முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை என்பவர், எழுதிய நாட்குறிப்பையும் 1999இல் வெளி யிட்டுள்ளார். இவற்றிற்கு அவர் எழுதியுள்ள முன்னுரையும் அடிக்குறிப்புகளும் இவரது புலமையையும் உழைப்பையும் வெளிப்படுத்துவன.

“தமிழில் நாட்குறிப்புகள்: செய்தி இதழ்களின் முன்னோடிகள்” (பதினெட்டாம் நூற்றாண்டு) என்ற இவரது நூல், புதுச்சேரியில் பிரஞ்சு ஆளுகையின்போது எழுதப்பட்ட நாட்குறிப்புகள் குறித்த நல்ல அறிமுக நூலாகும். மேற்கு வங்கத்திலுள்ள, விஸ்வபாரதி பல்கலைக் கழகத்தில் (சாந்தினிகேதன்) கடல்சார் வரலாற்றுத் துறையில் (Maritime History) பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இங்கு அறிமுகப்படுத்தப்படும் இந்நூலுக்காக, போர்ச்சுக்கல், ஸ்பெயின், இத்தாலி, நெதர்லந்த், பிரான்ஸ் ஆகிய அய்ரோப்பிய நாடுகளில் உள்ள ஆவணக் காப்பகங்களில் உள்ள ஆவணங்களையும் நூல்களையும், இந்தியாவில் கோவா, செம்பகனூர், சென்னை, டெல்லி ஆகிய ஊர்களில் உள்ள ஆவணக் காப்பகங்களில் உள்ள ஆவணங்களையும் நூல்களையும் பயன்படுத்தியுள்ளார். போர்ச்சுக்கீஸ், டச்சு, பிரெஞ்ச் ஆகிய அய்ரோப்பிய மொழி களை இவர் அறிந்துள்ளமை இதற்குத் துணை நின்றுள்ளது.

இனி இந்நூல் குறிப்பிடும் செய்திகளின் சுருக்கத்தைக் காண்போம்.

நூலின் அறிமுக உரையில், தமக்குமுன் இத்துறையில் ஆய்வுசெய்தோர், நூல் எழுதியோர் குறித்த தமது மதிப்பீட்டை முன் வைக்கிறார். இதையடுத்து போர்ச்சுக் கீசியர் வருகைக்கு முன்னர், தமிழர்கள் நிகழ்த்திய கடல் மற்றும் தரை வாணிபம் குறித்த செய்திகளைத் தொகுத் துரைக்கிறார். இவற்றை அடுத்து போர்ச்சுக்கீசியரின் வாணிப நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

தமிழகத்தில் போர்ச்சுக்கீசியர்

இராமேஸ்வரம் தொடங்கி கன்னியாகுமரி வரை யிலான, முத்துக்குளித்துறையில் வாழ்ந்த பரதவர்கள் 1533 அல்லது 1535இல் போர்ச்சுக்கீசியரால் கத்தோலிக்கர் களாக மதம் மாற்றம் செய்யப்பட்டனர். இது பரவலாக அறிமுகமான செய்தி. இந்நிகழ்வுக்குப் பின்னரே, போர்ச்சுக்கீசியர் தமிழ்நாட்டில் நிலைபெற்றனர்.

ஆனால் 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே போர்ச்சுக்கீசிய வணிகர்களும் போர்ச்சுக்கல் கப்பற் படையும் தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதியில் காலூன்றியிருந்ததை இந்நூல் குறிப்பிடுகிறது.

தமிழ்நாட்டின் முத்துக்களை வாங்கி அனுப்பும்படி டோம் மானுவல் (1495-1521) என்ற மன்னன் இந்தி யாவில் உள்ள தன் வைஸ்ராய்க்கு 1508இல் கடிதம் எழுதியுள்ளான். காயல் ஊரிலுள்ள பரதவர் தலைவன் தனக்கு இரண்டு கப்பல்களை விற்கும்படி 1519-இல் போர்ச்சுக்கல் படைத் தளபதியிடம் கேட்டுள்ளான்.

போர்ச்சுக்கீசியரின் வணிகக் கப்பல்களில் முத்துக் குளித்துறைப் பகுதியைச் சேர்ந்த இந்துக்களும் முஸ்லீம் களும் ஊழியர்களாகப் பணிபுரிந்துள்ளனர்.

கடலில் முத்துக் குளிக்கும்போது கடற் கொள்ளை யர்கள் தாக்குதல் நடத்தி முத்துக்களைக் கொள்ளை யடிப்பது நிகழ்ந்துவந்தது. இதனால் காயல், கீழக்கரை ஊர்களின் தலைவர்கள் போர்ச்சுக்கீசியப் படைத் தளபதியின் உதவியை நாடினர். முத்துக்குளிப்பின்போது போர்ச்சுக்கீசியப்படை, பாதுகாப்பளித்தது. இப்படை யினர்க்கு ஊதியமும் உணவுப் பொருட்களும் ஊர் மக்களால் வழங்கப்பட்டன. கீழக்கரை இஸ்லாமியர் களின் தலைவர் நயினார் என்றழைக்கப்பட்டார். 1523 இல் கீழக்கரை நயினார், பெரும்பாலும் இஸ்லாமியர்கள் அடங்கிய கடற்கொள்ளைக் கூட்டத்திடமிருந்து, பாது காப்புக் கொடுக்க, போர்ச்சுக்கல் படைத்தளபதியை வேண்டினார். அப்பாதுகாப்பிற்காகப் பணம் வழங்கினார்.

அரிசி, வெண்ணெய், தேங்காய், இறைச்சி, விறகு ஆகியனவற்றை இப்பகுதியில் இருந்த போர்ச்சுக்கீசிய வணிகர்கள் சேகரித்து, கொம்புத்துறை, பெரியதாழை, போன்ற கடற்கரை ஊர்களுக்கும், ஸ்ரீலங்காவிற்கும் ஏற்றுமதி செய்தனர்.

போர்ச்சுக்கீசியர்கள் வலிமையான கடற்படையைக் கொண்டிருந்தமையால் வங்கக்கடலில் பயணிக்கும் வாணிபக் கப்பல்கள் தம்மிடம் அனுமதிச் சீட்டு வாங்கும் படி வலியுறுத்தினர். இதற்குக் கட்டணம் வாங்கி ஆதாய மடைந்தனர்.

கீழக்கரை மரைக்காயர்கள், ஸ்ரீலங்காவுக்கு அரிசியும் ஆடைகளும் கொண்டு சென்று பண்டமாற்று வாணிபம் செய்து வந்தனர். வாணிபப் போட்டியின் காரணமாக, ஏற்கெனவே வாணிபத்தில் நிலைபெற்றிருந்த மரைக் காயர்களுக்கும் போர்ச்சுக்கீசியருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.

வேதாளையில் போர்ச்சுக்கீசியர் (1520-1573)

இலங்கையுடனான வாணிபத்திலும், கீழக்கரையில் முத்து வாணிபத்திலும் ஈடுபட விரும்பிய போர்ச்சுக் கீசியர்கள் இதற்கு உதவும் வகையில் கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பான இடம் ஒன்றைத் தேடினர். இவ்வகையில் கீழக்கரைக்குச் சில கிலோ மீட்டர் வடக்கில் இருந்த வேதாளை என்ற ஊர் பொருத்தமான இடமாக அவர்களுக்குப்பட்டது.

இந்துக்களின் புண்ணியத்தலமான இராமேஸ்வரம் தீவுக்கு அருகிலுள்ள ஊராக வேதாளை அமைந்திருந்தது. சோழமண்டலக் கடற்கரையில் உள்ள, துறைமுகங் களுக்கும், வங்காளம், பெகு, சயாம், ஆகிய பகுதி களுக்கும் செல்லும் கப்பல்கள், தம்மிடம் அனுமதிச் சீட்டு வாங்கிச் செல்கின்றனவா என்பதை வேதாளையில் இருந்து கொண்டு கண்காணிப்பது அவர்களுக்கு எளிதாயிருந்தது.

வேதாளையில் கோட்டையன்றைக் கட்டிக் கொள்ள, அப்பகுதியை ஆண்ட பரமக்குடி தும்பிச்சி நாயக்கரிடம் அனுமதிவேண்டினர். செங்கற்களைப் பயன்படுத்தாமல் மண்ணால் கட்டப்பட்டு, ஓலைக் கூரையுடன் கூடியதாகக் கட்டிக் கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையுடன் பரமக்குடி சிற்றரசன் அனுமதி வழங்கினான். தமிழகத்தின் கடற்கரையில் போர்ச்சுக் கீசியர் கட்டிய முதல்கோட்டையாக வேதாளைக் கோட்டை அமைந்தது. கோட்டையினுள், பண்டக சாலைகளும், போர்ச்சுக்கீசிய வணிகர்களும் அதிகாரி களும் வசிக்க வீடுகளும் கட்டப்பட்டன.

வேதாளையில் இருந்தவாறே, கீழக்கரை இஸ்லாமிய மரைக்காயர்களைக் கட்டுப்படுத்தலாயினர். இதனால் இருதரப்புக்கும் இடையே முரண்பாடு உருவானது. காலப்போக்கில் மரைக்காயர்கள் தம் வளத்தை இழக்கலாயினர். இதைத் தவிர்க்கும் வழிமுறையாகப் போர்ச்சுக்கீசியரின் எதிரியாக இருந்த கள்ளிக்கோட்டை சாமரின் மன்னனின் துணையை நாடினர். அவர் அனுப்பிய படை இருமுறை (1537, 1538) போர்ச்சுக்கீசியர் களுடன் மோதித் தோல்வியடைந்தது.

கீழக்கரைப்பகுதியில் போர்ச்சுக்கல் ஆதிக்கம் நிலை பெற்ற பின், இப்பகுதியின் உரிமையாளராய் விளங்கிய விஜயநகரப் பேரரசின் வருவாய் தடைப்பட்டது. இதைப் பொறுக்கமுடியாத விஜயநகரப் பேரரசு, தன்படையை 1549-இல் அனுப்பியது. அதனுடன் போரிட முடியாது போர்ச்சுக்கீசியப்படை தோற்று ஓடிப்போனது.

1553-இல் கீழக்கரை முஸ்லீம்கள் வேதாளைக் கோட்டையைத் தாக்கி, முத்துக்குளித்தலில் தம் ஆதிக்கத்தை மீண்டும் நிலை நிறுத்தினர். அவர்களிட மிருந்து வேதாளையை மீட்க கொச்சியில் இருந்து போர்ச்சுக்கிஸ் படையன்று வந்தது.

பரமக்குடி சிற்றரசனும் முஸ்லீம்களுக்கு எதிராக அவர்களுக்குத் துணைபுரிந்தான். இறுதியில் வேதாளையை மீண்டும் தம் கட்டுப்பாட்டிற்குள் போர்ச்சுக்கீசியர் கொண்டுவந்தனர்.

ஏற்கனவே கப்பல்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கி ஆதாயம் பெற்றுவந்த போர்ச்சுக்கீசியர், இராமேஸ்வரம் தீவுக்கு, இந்து யாத்திரிகர்கள் செல்லும் சிறுபடகு களுக்கும் வரி விதித்தனர். பின்னர் வேதாளைக் கோட்டையைச் சுற்றி அகழி ஒன்றை வெட்டினர்.

அகழியைக் கடந்தே யாத்திரிகர்கள் செல்ல வேண்டிய நிலை உருவானது. இவ்வாறு அகழியைக் கடக்கும் ஒவ்வொரு யாத்திரிகர்களிடமிருந்தும் வரிவாங்கத் தொடங்கினர். உள்நாட்டுப் பகுதியில் இது எதிர்ப்பை உருவாக்கியது.

இதனால் யாத்திரிகர்களின் வருகை குறைந்து கோவில் வருவாயும் குறைந்தது. இச்செய்தியை விஜய நகரமன்னருக்குக் கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் வித்தாலராயா என்பவரின் தலைமையில் ஒரு படையை அனுப்பினார். போர்ச்சுக்கீசியரால் தம் வாணிபத்தை இழந்திருந்த கீழக்கரை இஸ்லாமியர்கள் வித்தாலராயனுக்கு ஆதரவுதந்தனர். வேதாளையில், போர்ச்சுக்கீசியப் படைத்தளபதியால் விஜயநகரப் படையை எதிர்கொள்ளமுடியவில்லை அங்கிருந்த போர்ச்சுக்கீசியர்கள் அருகிலுள்ள தீவுகளுக்கு ஓடிப் போனார்கள்.

போர்ச்சுக்கல் தளபதி தப்பியோடினான். வெற்றி பெற்ற வித்தாலராயனின் படை, கடலில் நங்கூரமிட்டு நின்றிருந்த போர்ச்சுக்கீசியக் கப்பல்களை அழித்ததுடன், கோட்டையையும் இடித்துத் தரைமட்டமாக்கி, அகழியைத் தூர்த்தது. அந்தோணி கிரிமினாலி என்ற இத்தாலிநாட்டு சேசுசபைத் துறவியும் இப்போரில் கொல்லப்பட்டார்.

வேதாளையைக் கைப்பற்ற போர்ச்சுக்கீசியர் முயற்சி எதுவும் செய்யவில்லை. ஆனால் அருகிலிருந்த கீழக் கரையில் தம் ஆதிக்கத்தைத் தொடர்ந்தனர். முத்துக் குளித்தலை மேற்கொண்டதுடன், கீழக்கரையிலும், வேதாளையிலும் முத்துக்குளிப்போரிடம் வரிவாங்கினர். இது தவிர குறிப்பிட்ட அளவு எடையுள்ள நான்கு முத்துக்களை போர்ச்சுக்கல் மன்னனுக்கென்று ஆண்டு தோறும் காணிக்கையாகப் பெற்றனர். வேதாளை மீனவரிடமிருந்து ஆண்டுதோறும் இருபது கூறு சங்குகளை 1564 தொடங்கி 1572 முடிய போர்ச்சுக்கல் மன்னனுக்கென்று பெற்று வந்தனர்.

புன்னைக்காயல்

தூத்துக்குடிக்குத் தெற்கில் உள்ள கடற்கரைக் கிராமம் புன்னைக்காயல். இங்கு வாழும் பரதவர்கள் கத்தோலிக்கச் சமயத்தைத் தழுவியதுடன், போர்ச்சுக்கல் நாட்டின் குடிமக்களாகவும் வாழ்ந்தனர். இதன் அடிப் படையில் போர்ச்சுக்கல் மன்னனுக்கு வரிசெலுத்தி வந்தனர். இப்பகுதியில் முத்தெடுக்கும் உரிமையை, தம் ஏகபோகமாக போர்ச்சுக்கீசியர் ஆக்கிக் கொண்டனர். இங்கிருந்த போர்ச்சுக்கீசிய அதிகாரிகளின் ஊழல் தன்மையால் பரதவர்கள் பாதிப்புக்காளாயினர். இங்குப் பணியாற்றிவந்த சேசுசபைக் குருக்கள் பரதவர்களுக்கு ஆதரவாய்ச் செயல்பட்டனர்:

போர்ச்சுக்கல் மன்னனுக்குப் பரதவர்கள் வரி செலுத்தத் தொடங்கியபின், மதுரை நாயக்கமன்னனுக்கு அப்பகுதியின் வருவாய் நின்று போனது. இதனால் மதுரையை ஆண்ட விசுவநாத நாயக்கன் (1559-63) புன்னைக் காயல் மீது தாக்குதல்தொடுத்து வீடுகளையும், படகுகளையும் கொளுத்தினான். போர்ச்சுக்கல் படைத்தளபதி தப்பியோடினான். நாயக்கமன்னனுக்கு வரி செலுத்துவதாகப் புன்னைக்காயல் பரதவர்கள் 1551இல் ஒப்புக்கொண்டனர்.

1553இல் விசயநகரப் படைத்தளபதி வித்தாலராயன் புன்னைக்காயலைப் பிடித்துக்கொண்டான். இவர்களில் கத்தோலிக்கக் குருக்களும் அடக்கம். வித்தாலராயனுக்குப் பணம் கொடுத்து அவர்களைப் பரதவர்கள் மீட்டனர். 1560இல் மீண்டும் மதுரை நாயக்கர் படையெடுப்பு நிகழ்ந்தது. 1562இல் முஸ்லீம் கடற்கொள்ளைக்காரர் களின் தாக்குதலும், கொள்ளையும் நிகழ்ந்தன.

இதுபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் வழிமுறையாக, மண்கோட்டை ஒன்றை புன்னைக் காயலில் போர்ச்சுக்கீசியர் கட்டினர். போர்ச்சுக்கீசியரின் தலைமையகம் என்ற நிலையை, புன்னைக்காயல் அடைந்தது. இப்பகுதியில் முத்துவளம் குறைந்தபின் தன்முக்கியத்துவத்தைப் புன்னைக்காயல் இழந்தது.

தூத்துக்குடி

1560இல் புன்னைக்காயல் மீது நிகழ்ந்த நாயக்கர் படையெடுப்பையடுத்து தம் வாணிப நடவடிக்கைகளை, தூத்துக்குடிக்குப் போர்ச்சுக்கீசியர் மாற்றினர். இங்கு வாழ்ந்த போர்ச்சுக்கீசியர்கள் தமக்கெனத் தனியாகக் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர். இவர்களில் சிலர் உள்ளூர்ப் பெண்களை மணம் புரிந்துகொண்டனர். இவர்கள் போர்ச்சுக்கீசிய மொழியில் கசாது (Casadu) என்றழைக்கப்படனர்.

இங்கும் முத்துக்குளித்தலில் போர்ச்சுக்கீசியர் ஆதிக்கம் செலுத்தினர். முத்து வாணிபம் நிகழும் புகழ் பெற்ற சந்தையாகத் தூத்துக்குடி விளங்கியது. பதினைந்து வகையான முத்துக்கள் இங்கு விற்பனையாயின. இங்குக் கிடைத்த ஒரு வகை முத்தைப் பொடி செய்து மருத்துவக் காரணங்களுக்குப் பயன்படுத்தினர்.

குதிரை வணிகம்

1565இல் நிகழ்ந்த தலைக்கோட்டைச் சண்டையில் விசயநகரப் பேரரசு தோல்வியடைந்த பின்னர், இதற்குக் கட்டுப்பட்டிருந்த, மதுரை, தஞ்சை, செஞ்சி நாயக்க மன்னர்கள், சுயேச்சையான ஆட்சியாளர்களாயினர். இவர்களுக்குத் தேவையான குதிரைகளை, பாரசீகம், அரேபியாப் பகுதிகளில் இருந்து வாங்கிவிற்கும் வணிகத்தில் போர்ச்சுக்கீசியர் ஈடுபட்டனர்.

கொச்சித் துறைமுகத்தில் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டு அங்கிருந்து காயல், புன்னைக்காயல் துறைமுகங்களுக்குக் கொண்டுவரப்பட்டன. வாணிப ஆதாயத்தை மட்டுமின்றி, நாயக்கமன்னர்களின் ஆதரவைப் பெறவும் குதிரை வாணிபம் உதவியது.

யானை வணிகம்

இலங்கையின் கண்டி இராச்சியத்தில் இருந்தும் பர்மாவில் (மியான்மர்) இருந்தும் யானைகளை வாங்கி வந்து விற்பதில் போர்ச்சுக்கீசியர் ஈடுபட்டனர். கடலூர் அருகிலுள்ள தேவனாம்பட்டினத்தில் இவை இறக்குமதி யாயின. யானைகளுக்குப் பண்டமாற்றாக சோழ மண்டலக் கடற்கரையில் நெய்யப்பட்ட ஆடைகளை வழங்கினர்.

வெடியுப்பு வணிகம்

வெடிமருந்து செய்யப்பயன்படும் வெடியுப்பு அய்ரோப்பிய நாடுகளில் அரிதாகவே கிடைத்தது. தமிழகத்தில் முத்து உற்பத்தி குறைந்ததால், வேறு வாணிபத்திற்கு மாற எண்ணியிருந்த போர்ச்சுக்கீசியர், வெடிமருந்து வாணிபத்தில் ஈடுபடலாயினர். ஏற்கெனவே அரபிக்கடல் பகுதியில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் இவ்வணிகத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்பகுதியில் தம் ஆதிக்கத்தை நிலைநாட்டிய போர்ச்சுக்கீசியர் வெடியுப்பு வணிகத்தைத் தமதாக்கிக் கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் உள்நாட்டுப் பகுதிகளில் வெடியுப்பைச் சேகரித்து, சாந்தோம், தேவனாம்பட்டினம், தூத்துக்குடி துறைமுகங்களின் வாயிலாகப் போர்ச்சுக்கல்லுக்கு அனுப்பலாயினர். போர்ச்சுக்கல் மன்னரும் வெடியுப்பு வணிகத்தில் ஆர்வங் காட்டினார்.

மண்ணிலிருந்து வெட்டியெடுக்கப்படும் வெடி யுப்பை, குழிகளில் இட்டு, அக்குழிகளில் நீரைத் தேக்கி வைப்பர். வெயிலில் ஆவியானது போக எஞ்சியுள்ள நீரை வடித்து விடுவர். குழியில் படிந்து கிடக்கும் வெடி யுப்பைச் சேகரித்து நீர் நிரம்பிய பாத்திரத்திலிட்டுக் கொதிக்க வைப்பர். தண்ணீர் கொதித்து ஆவியான பின்னர் பாத்திரத்தில் வெடியுப்பு படியும். இது, தரம் குறைந்த வெடியுப்பாகும். மூன்று அல்லது நான்குமுறை கொதிக்க வைத்த பின்னர் படியும் வெடியுப்பே தரமான வெடியுப்பாகும்.

இந்தியாவின் எந்தப்பகுதியிலும் கிடைக்கும் வெடியுப்பைவிட, மதுரைப் பகுதியில் கிடைக்கும் வெடி யுப்பு தரமானதாய் இருந்தது. ஏனெனில் இதைச் சுத்தப் படுத்த இருமுறை கொதிக்கவைத்தல் போதுமானது. வெள்ளை நிற வெடியுப்பு, கருப்பு நிற வெடியுப்பு என இருவகையான வெடியுப்புகள் கிடைத்தன.

அய்ரோப்பாவில் நிகழ்ந்த முப்பதாண்டுப் போரின் (1618-1648) விளைவாக, இந்தியாவில் இருந்து போர்ச்சுக்கல்லுக்கு வெடியுப்பு ஏற்றுமதி அதிகரித்தது. வெடியுப்பு வணிகமானது இருநூறு விழுக்காட்டிற்கும் அதிகமான ஆதாயத்தை அந்நாட்டுச் சந்தையில் வழங்கியது. இதனால் மதுரை நாயக்கர் ஆட்சிப் பகுதியில் வெடியுப்பைக் கொள்முதல் செய்வதை, மையமாகக் கொண்டு, போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர், டேனீசியர் ஆகியோரிடையே போட்டி உருவானது.

கி.பி.1629இல் கூத்தன் சேதுபதி என்ற இராமனாத புரம் பாளையக்காரருக்கும், மதுரை திருமலை நாயக் கருக்கும் இடையே போர்மூண்டபோது, போர்ச்சுக் கீசியர் திருமலை நாயக்கருக்கு உதவிசெய்தனர். வெடி யுப்பு வணிகப் போட்டியே இவ்வுதவிக்குக் காரண மாகும். இவ்வுதவிக்கு நன்றிக்கடனாக, மதுரை நாயக்கர் ஆட்சிப்பகுதியில் வணிகம் செய்யவும் கப்பல்களைக் கொண்டு வரவும் டச்சுக்காரர்களை மதுரை நாயக்கர் அனுமதிக்கவில்லை. இருந்தாலும் பழவேற்காட்டில் இருந்த டச்சுக்காரர்கள், திருமலை நாயக்கரிடம் நட்புறவு கொண்டு வெடியுப்பைக் கொள்முதல் செய்யலாயினர்.

திருமலை நாயக்கருக்குப் பணம் கொடுத்து, தூத்துக்குடியில் பண்டகசாலை நிறுவி வெடியுப்பைக் கொள்முதல் செய்ய டேனிசியர் அனுமதி பெற்றனர். இந் நிகழ்வுகளை அவதானித்த போர்ச்சுக்கீசியர் திருமலை நாயக்கருடன் வெடியுப்பு வணிகம் தொடர்பாக ஒப்பந்தம் செய்துகொண்டனர். இவ்வொப்பந்தத்தின் படி, போர்ச்சுக்கீசியரை மட்டுமே திருமலை நாயக்கர் வெடியுப்பு வணிகத்தில் அனுமதிப்பார். அவருக்கு மட்டுமே போர்ச்சுக்கீசியர் யானைகளை விற்பார்கள்.

இவ்வொப்பந்தத்தை போர்ச்சுக்கீசியர் நிறை வேற்றாததால் அவர்களின் வெடியுப்பு வணிகத்தை அவர் தடை செய்தார். டச்சுக்காரருடன் நெருக்கம் காட்டியதுடன் காயல் பட்டினத்தில் தொழிற்பட்டறை ஒன்றைக் கட்டிக்கொள்ள 1645இல் அவர்களுக்கு அனுமதி வழங்கினார்.

துணிவணிகம்

துறைமுகங்களைச் சுற்றியுள்ள உள்நாட்டுப் பகுதி களில் நெய்யப்படும் துணிகளைச் சேகரித்து ஏற்றுமதி செய்யும் வணிகத்திலும் போர்ச்சுக்கீசியர் ஈடுபட்டனர். திருவொற்றியூர், மணலி, குன்றத்தூர், பூந்தமல்லி, வேளச் சேரி, ஆதம்பாக்கம், கோட்டூர், எழும்பூர், கோயம்பேடு ஆகிய ஊர்களில் துணிகள் நெய்யப்பட்டு வந்தன. இவற்றைச் சேகரித்து, பழவேற்காடு துறைமுகத்தின் வாயிலாக ஏற்றுமதி செய்தனர்.

சென்னைக்குத் தொலைவிலுள்ள காஞ்சிபுரம், மணிமங்கலம், திருக்கச்சியூர், உத்தரமேரூர், அச்சிறு பாக்கம், திருக்கழுகுக்குன்றம், ஆகிய ஊர்களில் நெய்யப் படும் துணிகள் சாந்தோம் துறைமுகம் வாயிலாக ஏற்றுமதி செய்யப்பட்டன. சென்னை மாம்பலத்தில், வண்ணம் பூசப்பட்ட துணிகள் உற்பத்தியாயின. இங்கு, சாயம் தோய்ப்பவர்களும் ஓவியர்களும் வாழ்ந்தனர். இங்கு உற்பத்தியாகும் துணிகளும் சாந்தோம் துறை முகத்தின் வாயிலாக ஏற்றுமதியாயின.

அடிமை வணிகம்

மாலுமிகளாகவும், கப்பல் துறைகளிலும், பட்டறை களிலும் தொழிலாளர்களாகவும் பணிபுரிய, அடிமைகள் போர்ச்சுக்கீசியருக்குத் தேவைப்பட்டனர். இஸ்லாமிய வணிகர்களும் மேற்குக் கடற்கரையில் இருந்த போர்ச்சுக் கீசிய வணிகர்களும் அடிமை வாணிபத்தில் ஈடுபட்டு வந்தனர். சோழமண்டலக் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட பஞ்சத்தினால் தம்மைத் தாமே விற்றுக் கொண்ட மக்களை ஒன்று திரட்டி, கப்பல்களில் ஏற்றிச் சென்றனர்.

மலபார்ப் பகுதியைச் சேர்ந்த வணிகர்களால் தமிழ்நாட்டில் வாங்கப்படும் அடிமைகள் கோவாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு வாழ்ந்த போர்ச்சுக் கீசியர்கள் அவர்களை விலைக்கு வாங்கினர். அயல்நாடு களில் விற்பனை செய்வதற்காகக் கோவாவில் இருந்து அடிமைகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

சேசுசபையின் நிறுவனரான இக்னேஷியஸ் லயோலாவுக்கு, நிக்கோலோ லான்சிலாட் என்ற சேசுசபைத் துறவி கொல்லத்தில் இருந்து 1550ஆம் ஆண்டு டிசம்பர் அய்ந்தாம் நாள் எழுதிய கடிதத்தில், கசாதுக்கள் (இந்தியப் பெண்களை மணந்து கொண்ட போர்ச்சுக்கீசியரைக் குறிக்கும் சொல்) ஒவ்வொரு முறையும் பத்து அல்லது பன்னிரண்டு அடிமைகளை விலைக்கு வாங்குவதாகவும், ஒரு தடவை இருபத்திநாலு அடிமைகளைத் தனிமனிதனொருவன் வாங்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். கிழக்குக் கடற்கரைப் பகுதியில் குடியேறிய போர்ச்சுக்கீசியர்கள் தம் வீட்டு வேலை களைச் செய்ய அடிமைகளை வைத்திருந்தனர்.

பதினேழாம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களின் வருகைக்குப்பின் அடிமைகள் ஒரு வாணிபப் பொருளாகத் தமிழ்நாட்டில் மாறினர். தமிழ்நாட்டில் அவர்கள் மேற் கொண்டிருந்த துணி வணிகத்தைவிட முக்கியமானதாக அடிமை வணிகத்தைக் கருதினர்.

1618, 1620ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த பஞ்சமானது பலரை அடிமைகளாக்கியது. தம்மையோ தம் குழந்தைகளையோ அடிமைகளாக மக்கள் விற்றனர். இறந்து போவதைவிட அடிமைமுறை மேலானதாக அம்மக்களுக்குத் தோன்றியது.

பஞ்சம் நிகழ்ந்த இரண்டு ஆண்டுகளில் பதினைந்தா யிரத்தில் இருந்து இருபதினாயிரம் பேர் வரை அடிமை களாகச் சென்றுள்ளனர். 1622 டிசம்பரில் பெரும்பாலும், பெண்களும் குழந்தைகளுமாக ஆயிரம் பேர், டச் நாட்டின் பாட்வியா நகருக்கு அடிமைகளாக அனுப்பப்பட்டனர்.

கத்தோலிக்க மறைப்பணியாளர்கள் அடிமை வணிகத்தை எதிர்த்ததால் டச்சுக்காரர்களைப் போன்று அடிமை வணிகத்தில் அதிக அளவில் போர்ச்சுக்கீசியர் ஈடுபடவில்லை. அடிமைகளாக விற்கப்பட்டவர்கள், நாகப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்குள் நுழைய 1632 ஜுன் 26ஆம் நாள் போர்ச்சுக்கல் நிர்வாகம் தடைவிதித்தது. மறைப்பணியாளர்களின் துணையுடன் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. என்றாலும் தமிழ்நாட்டில் குடியேறிய போர்ச்சுக்கீசியர்கள் வீட்டடிமைகளை வைத்திருந்தனர்.

பிற ஏற்றுமதிப் பொருட்கள்

சோழமண்டலக் கடற்கரையில் இருந்து நெல்லும் அரிசியும் வாங்கி, அதனை மலபார் பகுதிக்கு அனுப்பி, பண்டமாற்றாக மிளகைவாங்கும் வணிகத்தில் தமிழக மற்றும் மலபார் முஸ்லீம்களும், இந்துக்களும் ஈடுபட்டு வந்தனர்.

இவ்வணிகத்தில் போர்ச்சுக்கீசியர் நுழைந்த பின்னர் ஏனையோர் இதில் ஈடுபடத் தடைவிதித்தனர். அதிக ஆதாயத்தைத் தரும் வணிகத்தை, தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதும், அவர்கள் ஆர்வம் காட்டாத வணிகத்தை இந்திய வணிகர்களிடம் விட்டுவிடுவதும் போர்ச்சுக்கீசியரின் நடைமுறையாக இருந்தது.

தமிழ்நாட்டு அரிசியை இலங்கைக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து “வெற்றிலை” போடத் தேவைப் படும் பாக்கைக் கொண்டு வரும் வணிகத்தில் தமிழ் வணிகர்கள் ஈடுபட்டு வந்தனர்.

அரிசி வணிகத்தில் ஈடுபட்ட போர்ச்சுக்கீசியர் இலங்கையில் இருந்து இலவங்கத்தை வாங்கி, தம் நாட்டிற்கு அனுப்பத் தொடங்கினர். அங்கு அதன் தேவை அதிகமிருந்தது. இவ்வணிகத்தில் தமிழக மரைக்காயர்களின் வாணிபச் செல்வாக்கு இடையூறாக உள்ளதாகப் போர்ச்சுக்கீசியர் கருதினர். மரைக்காயர்களை இலங்கையை விட்டு வெளியேற்றும்படி இலங்கை மன்னனை வேண்டினர்.

மற்றொரு பக்கம், நாகப்பட்டினம் அருகிலுள்ள மரைக்காயர்கள், காவேரிச் சமவெளியில் விளையும் நெல்லைச் சேகரித்து, சுமத்திராவுக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து பட்டு நூலை இறக்குமதி செய்தனர். உள்நாட்டுப் பகுதியின் நெசவுத் தொழிலுக்கு இது பயன்பட்டது. சுமத்திராவுடனான அரிசி வணிகத்தில் மரைக்காயர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

பிற இறக்குமதிப் பொருட்கள்

பட்டு, சீனப்பட்டாடை, அணிகலன்கள், நறுமணப் பொருட்கள், கிராம்பு, ஆபரணக் கற்கள், வைரம், தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், கந்தகம், ஆகியன போர்ச்சுக்கீசியர் களால் தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட முக்கிய பொருட்களாகும்.

கட்டிவடிவில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. ஒன்பதரை பத்தரை என்று தங்கம் தரப்படுத்தப்பட்டது. (இதன் அடிப்படையில் ‘பத்தரை மாத்துத் தங்கம்’ என்ற சொல்லாட்சி உருவாகியிருக்கலாம்).

நகரமயமாதல்

போர்ச்சுக்கீசியர் ஆதிக்கத்தின்போது தமிழ்நாட்டுக் கடற்கரைப் பகுதிகளில், ஒரு முக்கிய நிகழ்வாக, நகரங்கள் உருவாயின.

பிற்காலப்பாண்டியர், சம்புவராயர், விசயநகர ஆட்சியாளர்கள் ஆகியோரின் ஆளுகையின்போது தமிழ்நாட்டு நகரங்கள் உள்நாட்டுப் பகுதிகளையே நம்பி யிருந்தன. போர்ச்சுக்கீசியர் ஆட்சியில் இவை உற்பத்தி மையங்களாக மாறின. நகரங்களுக்கும் கிராமப்புறங் களுக்கும் இடையிலான எல்லையானது எல்லைச் சுவர் களால் அடையாளங்காட்டப்பட்டது. நாகப்பட்டினம், சாந்தோம் ஆகிய கடற்கரை ஊர்கள் போர்ச்சுக்கல் மன்னனால் நகரம் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டன. கடல்கடந்த நாடுகளுடனும் உள்நாட்டுப் பகுதி களுடனும் கொண்டிருந்த தொடர்பால் பொருளாதார நிலையில் இவை உயர்ந்தன.

ஏற்கனவே துறைமுகங்களாக இருந்த ஊர்களில் தான் போர்ச்சுக்கீசியரின் குடியிருப்புகள் உருவாயின. மீன்பிடிக்கும் தொழில் புரிவோரே வாழும் பழைய முறையில் இருந்து வேறுபட்டு, தேவாலயங்கள், பெண் துறவியர் மடம், துறவியர் மடம், சந்தைகள், நகராட்சி, கோட்டை எனப்பல புதிய அமைப்புகள் தோன்றின.

கோவிலை மையமாகக் கொண்டு கோவில் நகரங்கள் என்று கூறும் அளவுக்கு மத்தியகாலத் தமிழகத்தில் உருவான நகரங்களுக்கு மாறாக, பொருளாதார நடவடிக்கைகளை மையமாகக் கொண்டு நகரங்கள் உருவாயின. எடுத்துக்காட்டாக, நாகப்பட்டினம், சாந்தோம், என்ற இரு நகரங்களைக் குறிப்பிடலாம்.

நாகப்பட்டினம்

உப்பணாறு என்ற ஆறுகடலில் கலக்கும் பகுதியில் நாகப்பட்டினம் அமைந்துள்ளது. தஞ்சாவூரைத் தலை நகராகக் கொண்டு ஆண்ட தஞ்சை நாயக்க மன்னர்களின் ஆட்சிப் பகுதியாகப் பதினாறாவது நூற்றாண்டில் இவ்வூர் இருந்தது. செவப்பநாயக்கர் (1532-1690) என்ற தஞ்சை நாயக்க மன்னரின் அனுமதியைப் பெற்று, போர்ச்சுக்கீசியர் தம் குடியிருப்பை இங்கு அமைத்துக் கொண்டனர். உப் பணாற்றின் வடகரையில் மேற்குப் புறமாக இக்குடியிருப்பு அமைந்தது.

டச்சுக்காரர்களின் தாக்குதலில் இருந்து பாது காத்துக் கொள்ள, மண்கோட்டையன்றை 1582இல் போர்ச்சுக்கீசியர் இங்கு அமைத்தனர். 1594இல் இது கற்கோட்டையாக மாறியது. இக்கற்கோட்டைக்குள் நாகப்பட்டினம் நகர் இடம்பெற்றிருந்தது. கோட்டையின் மூன்று நுழைவாயில்களிலும் பாதுகாவலர்கள் நியமிக்கப் பட்டனர். நகராட்சி தோற்றுவிக்கப்பட்டு, அதற்கென்று அதிகாரிகளும் ஊழியர்களும் நியமிக்கப்பட்டனர். நகரின் மேட்டிமையோர் குழு நகராட்சியை நிர்வகித்தது.

நகரில் வாழும் மக்களிடம் இருந்து போர்ச்சுக்கல் மன்னருக்கு வரி வாங்கப்பட்டது. கசாதுக்கள் அய்வர் அடங்கிய குழு ஒன்று உள்ளூர் வாசிகளிடம் உருவாகும் வழக்குகளைத் தீர்த்து வைத்தது. 1645 ஆகஸ்ட் 29ஆம் நாள் இந்நகரம் மேரிமாதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டு City of Our Lady of Immaculate Conception (அமலோற்பவ மாதாவின் நகரம்) என்றழைக்கப்பட்டது.

விஜயராகவ நாயக்கர் (1634-1673) என்ற தஞ்சை நாயக்க மன்னரிடமிருந்து, நாகப்பட்டினத்தைச் சுற்றி யுள்ள புதூர், நாகூர், அந்தணப்பேட்டை, கருவேலங்காடு, புறாவாச்சேரி, ஆனைமங்கலம், நாங்குடி, மஞ்சக் கொல்லை, நிருத்தமங்கலம், சங்கமங்கலம் என்ற பத்து ஊர்களில் வரிவாங்கும் உரிமையைப் போர்ச்சுக்கீசியர் பெற்றனர். வாங்கியவரியில் ஒரு குறிப்பிட்ட பங்கை, தஞ்சை நாயக்கமன்னருக்குக் கொடுத்தனர்.

1646 நவம்பர் 15க்குப் பின் ஆங்கிலேயர், டச்சுக் காரர் டேனிசியர் ஆகியோருடனான வணிகத்தைப் போர்ச்சுக்கீசிய அரசு தடை செய்தது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் வணிகம் நடத்துவோர் பின்பற்ற வேண்டிய இருபது விதிமுறைகளை வகுத்தது. அவற்றுள் சில வருமாறு:

1.உள்நாட்டுப் பகுதியில் இருந்து நாகப்பட்டினத்திற்குக் கொண்டுவரப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் வரி செலுத்த வேண்டும். தவறினால் அவை பறிமுதல் செய்யப்பட்டு போர்ச்சுக்கல் மன்னரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

2.சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்து விற்பனைக் காகவோ, ஏற்றுமதிக்காகவோ கொண்டுவரப்படும் பொருட்களுக்கு ஐந்து விழுக்காடு நுழைவுக் கட்டணம் விதிக்கப்படும்.

3.இங்குக் கொண்டுவரப்படும் பாக்குக்கு மணங்கு ஒன்றுக்கு இரண்டு பணம் வரிசெலுத்த வேண்டும்.

4.‘இலவங்கம்’ வணிகம் செய்ய விரும்புவோர் உரிமம் பெறவேண்டும். இவ்வணிகத்திற்குச் சுங்கவரி கிடையாது.

5.விற்பனைக்காகக் கொண்டு வரப்படும். கயிறுக்கு அய்ந்து விழுக்காடு வரி செலுத்தவேண்டும்.

6.இலங்கை, தூத்துக்குடி, மன்னார், யாழ்ப்பாணம் பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் இருந்து கப்பல்களிலும் ஏனைய நீர்வழிக் கலன்களிலும் கொண்டுவரப்படும் பொருட்களுக்கு வரிவிலக்குண்டு. ஆனால் துறைமுகத்தை விட்டு வெளியேற, கப்பல்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

7.இந்நகரில் வாழும், போர்ச்சுக்கீசிய, இந்து, முஸ்லீம் வணிகர்கள் ஏழு விழுக்காடு ஏற்றுமதி வரி செலுத்த வேண்டும்.

8.சுங்கவரிகளில் ஒரு பகுதி தஞ்சை நாயக்க மன்னருக்கு வழங்கப்படும்.

வரிக்கணக்கை எழுதி வைத்தல், அதைச் செய்யும் ஊழியர்களுக்கான ஊதியம், வரிப்பணத்தைப் பாதுகாத்து வைத்தல், துறைமுகத்தின் காவல் அதிகாரி என்பன தொடர்பான செய்திகளும் இவ்விதிமுறையில் இடம் பெற்றுள்ளன. மலபார் கடற்கரையிலுள்ள சிரியன் கிறித்தவர்களின் கப்பல்கள் நாகப்பட்டினம் வழியாகவே மியான்மர் சென்றன.

வாணிப வளர்ச்சியில் பன்னாட்டு வணிகநகராக இந்நகரம் மாறியது. இங்கிருந்து ஏற்றுமதியாகும் உணவுத் தானியங்களுக்கும், துணிகளுக்கும் ஏற்றுமதி வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டது. விபத்துக்காளாகி கரையதுங்கும் கப்பல்களும் அவற்றில் உள்ள சரக்குகளும் போர்ச்சுக்கீசியர்களின் உடைமையாயின. போர்ச்சுக்கீசியரின் ஆதிக்கம் இங்கு வலுப்பெற்றபின், நாகூர் குன்னிமேடு ஆகிய துறைமுகங்களின் வாயிலாகக் கடல் வாணிபம் செய்து வந்த மரைக்காயர்கள் பாதிப்புக்காளாயினர். போர்ச்சுக்கீசியரின் வாணிப வளம் டச்சுக்காரர்களை உறுத்தியதால் 1658 ஜுலை 20ஆம் நாள் நாகப்பட்டினத்தைத் தாக்கி, 23ஆம் நாளன்று அதைக் கைப்பற்றினர். இங்கிருந்த போர்ச்சுக்கீசியர் கோவாவுக்கு இடம் பெயர்ந்து சென்றனர்.

சாந்தோம்

சென்னை மயிலாப்பூர் அருகில் உள்ள சாந்தோம் பதினாறாவது நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியரின் வணிகத் தளமாக விளங்கியது. நாகப்பட்டினத்தைப் போன்றே இங்கும் கோட்டை கட்டியதுடன் தமக்கெனக் குடியிருப்பு களையும் உருவாக்கியிருந்தனர். ஒரு நகராட்சியாக சாந்தோம் விளங்கியது.

நாணயம் அச்சிடும் நாணயசாலை இங்கிருந்தது. சாந்தோமில் வாழ்ந்த போர்ச்சுக்கீசியர் பணம் ஈட்டு வதற்காக, சட்டவிரோதமான வழிமுறைகளை மேற் கொண்டதாகவும், ஊழலும் ஒழுக்கக்கேடும் உடையவர் களாக இருந்ததாகவும் 1559க்கும் 1563க்கும் இடையில் எழுதப்பட்ட சேசுசபையினரின் கடிதங்கள் தெரிவிக் கின்றன. இங்குக் குடியேறியிருந்த போர்ச்சுக்கீசியர்களில் பலர் குற்றச் செயலுடையவர்களாகவோ, பொறுப்பை விட்டு ஓடுபவர்களாகவோ இருந்ததாகவும் அக்கடிதங்கள் குறிப்பிடுகின்றன.

1662 மே மாதம் கோல்கொண்டா சுல்தான் சாந்தோமைக் கைப்பற்றினான். 1672இல் பிரெஞ்சுக் காரர்கள் அவனிடமிருந்து சாந்தோமை மீட்டனர். கோல்கொண்டாசுல்தானின் படையெடுப்பின் போது வெளியேறிய போர்ச்சுக்கீசியர் இதன்பின் திரும்பி வந்தனர். அவுரங்சிப் ஆட்சியில் சாந்தோம் மொகலாயர் ஆட்சியின் கீழ் வந்தது. 1749 அக்டோபரில் ஆங்கிலேயர் தம் கட்டுப்பாட்டிற்குள், சாந்தோமைக் கொண்டு வந்தனர்.

நூலாசிரியரின் மதிப்பீடு

இவ்வாறு, 16ஆவது நூற்றாண்டுத் தமிழ்ச் சமூகத்தின் வாணிபப் பொருளாதாரத்தில் போர்ச்சுக் கீசியர்களின் பங்களிப்பை ஆய்வு செய்து அறிமுகப் படுத்திய நூலாசிரியர் நூலின் முடிவுரையில் போர்ச்சுக் கீசியர் குறித்த தமது மதிப்பீட்டைக் கூறியுள்ளார். தமிழ் நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் டச்சுக்காரர்களின் ஆதிக்கம் 17 ஆவது நூற்றாண்டில் (1658) உருவானது. இதனால் போர்ச்சுக்கீசிய வணிகர்கள், மூலதனம் மற்றும் வணிக இழப்புக்கு ஆளானார்கள். இதைக் குறிப்பிட்டு விட்டு இறுதியாகப் பின்வருமாறு எழுதியுள்ளார்.

‘திரட்டி வைத்திருந்த மூலதனத்தை இழந்த பின்னர் பெரும்பாலான போர்ச்சுக்கீசியர் தமிழகத்தை விட்டுக் கிளம்பி போர்ச்சுக்கீசியராட்சியில் இருந்த கோவாவில் குடியேறத் தொடங்கினர். ஏனையோர் தமிழ்ப் பகுதியில் இருந்த பிற அய்ரோப்பியருடனோ, உள்நாட்டு மக்களுடனோ கலந்துவிட்டனர்.

தமிழ்நாட்டின் வளத்தை உறிஞ்சுவதிலோ,கொள்ளையடிப்பதிலோ போர்ச்சுக்கீசியர் ஈடுபடவில்லை; மாறாகத் தமிழகத்தில் இருந்து அய்ரோப்பாவிற்கும், தென்கிழக்கு ஆசியாவிற்கும், இங்கிருந்த உபரி உற்பத்திப் பொருட்களைக் கொண்டு சென்றதால் வாணிபத்தையும், பொருளாதாரத்தையும் வளர்த்தனர் என்று உறுதியாகக் கூறலாம். இது போன்று போர்ச்சுக்கல் நாட்டின் லிஸ்பன் நகருக்கு, துணிகளையும் முத்துக்களையும் ஏற்றுமதி செய்தனர். பதினேழாம் நூற்றாண்டின் மத்தியில் தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் போர்ச்சுக்கீசியரின் அதிகாரம் வீழ்ந்தபோது காலனியம் என்ற கருத்தியல் வலுப்பெறவில்லை. எனவே, பிரிட்டிஷார் மற்றும் பிற அய்ரோப்பியரைப் போல போர்ச்சுக்கீசியரைக் காலனியவாதிகளாகக் கருத முடியாது.

நூலாசிரியரின் இக்கணிப்பு விவாதத்திற்குரிய ஒன்று. ஒரு நாட்டை அடிமைப்படுத்தி ஆளுவது என்பது மன்னர் ஆட்சிக் காலத்திலேயே அறிமுகமாகி விட்டது. ஆனால் காலனி ஆட்சி என்பது இம்முறையில் இருந்து மாறுபட்ட ஒன்று. காலனிய ஆட்சியின் முக்கிய செயல்பாடுகளாகப் பின்வருவன அமைகின்றன.தான் அடிமைப்படுத்திய நாட்டில் கிடைக்கும் வேளாண் உற்பத்திப் பொருட்களையும், இயற்கை வளங் களையும் தன் நாட்டின் தொழிற்சாலைகளுக்கு மூலப் பொருட்களாக ஏற்றுமதி செய்தல் தனக்குத் தேவையான கச்சாப் பொருட்களை விளைவிக்கும்படி வேளாண்குடிகளை வற்புறுத்தல்.

அப்பொருட்களின் விற்பனை விலையைத் தானே நிர்ணயித்தல் தம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களின் சந்தையாக, தான் அடிமைப்படுத்திய நாட்டை மாற்றுதல். இதற்கு இடையூறாக இருப்பின் அந்நாட்டின் பாரம்பரியத் தொழில்களை ஈவு இரக்கமின்றி அழித்தல். போர்ச்சுக்கல் ஆட்சியில் இவை நிகழவில்லை என்பதன் அடிப்படையில் நூலாசிரியர் இம்முடிவுக்கு வந்திருக்கலாம்.

போர்ச்சுக்கீசியர் இங்கு வந்த காலகட்டத்தில் தொழிற்புரட்சி நிகழவில்லை. இதனால் நவீன ஆலைகள் உருப்பெறவில்லை. எனவே, வணிக முதலாளித்துவம் (Merchant Capitalism) உருப்பெற்ற நாடாகவே அது விளங்கியது.

காலனியம் குறித்து வரலாற்றறிஞர் பிபின் சந்திரா (2012:78)கூறும் சில முக்கிய கருத்துக்களை அறிந்து கொள்வதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் போர்ச்சுக்கல் ஆதிக்கம் காலனிய ஆட்சிக் கூறுகளைக் கொண்டிருந்ததா என்பதைக் கண்டறியலாம். அவரது கருத்துக்கள் வருமாறு:

‘காலனியத்தின் முதலாவது கட்டத்தில் காலனி யத்தின் குறிக்கோள்கள் (1) காலனியின் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் ஆகியோருடன் அய்ரோப்பிய வர்த்தகர்கள் செய்யும் வர்த்தகத்தை ஏகபோகமாக்குவது. (2) அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி வருவாய் அல்லது உபரியை நேரடியாகப் பறித்துக் கொள்வது.

காலனியத்தின் முதலாவது கட்டத்தில் (1) உபரியைச் சூறையாடும் நேரடியாகப் பறித்துக் கொள்ளும் கூறு வலுவாக இருந்தது, மற்றும் (2) காலனி நாட்டிற்குள் காலனியாதிக்க நாட்டின் உற்பத்திப் பொருட்கள் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு இறக்குமதி செய்யப்படவில்லை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பிபின் சந்திராவின் இக்கருத்துக்களின் பின்புலத்தில், தமிழகத்தில் போர்ச்சுக்கீசியர்களின் நடவடிக்கைகளை ஆராய்ந்தால் காலனியத்தின் முதற்கட்ட நடவடிக்கை களை அவர்கள் மேற்கொண்டிருந்தமை புலனாகும். சுருக்கமாகப் பின்வரும் செயல்பாடுகளைத் தொகுத் துரைக்கலாம்.

(1) முத்து, சங்கு குளித்தலில் தம் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தியது

(2) தமிழ்நாட்டின் கடற்பகுதியில் செல்லும் கப்பல் களுக்குக் கட்டணம் வாங்கியது.

(3)முத்துக்குளித்துறைப் பரதவர்களை, போர்ச்சுக்கீசிய மன்னரின் குடிமக்களாக்கியது.

(4)முத்துக்குளிப்பில் கிட்டும் முத்துக்களில் நான்கில் ஒரு பங்கை போர்ச்சுக்கல் மன்னனுக்கு வரியாகவும், ஒரு பங்கை முத்துக்குளிப்பின்போது பாதுகாப்பு தரும் போர்ச்சுக்கல் படைத்தளபதிக்கும் ஒருபங்கை சேசுசபைக் குருக்களுக்கும் காணிக்கையாக வழங்க வேண்டிய கட்டாயத்துக்குப் பரதவர்கள் ஆளானார்கள்.

எஞ்சிய ஒரு பங்கே, பரதவர்களைச் சென்றடைந்தது. பிற்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்தில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே வரியாக இருந்தது. எஞ்சிய ஒன்பது பங்கு பரதவர்களின் பங்காக இருந்ததாக, மார்க்கோ போலோ தன் பயணக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

(5)போர்ச்சுக்கீசிய அதிகாரிகளும், சேசுசபைத் துறவி களும் பரதவர்களைச் சிறையில் அடைக்கவும், தண்டம் விதிக்கவும் அதிகாரம் பெற்றிருந்தனர்.

(6)தமக்கெனப் படையைக் கொண்டிருந்தனர். இது வாணிபப் பாதுகாப்புக்காக மட்டுமின்றித் தாக்கு தலுக்கும் பயன்படுத்தப்பட்டது.

(7) தம்கட்டுப்பாட்டில் இருந்த துறைமுகங்களில் சுங்கவரி வாங்கி வந்தனர். இதில் பெரும்பகுதி போர்ச்சுக்கல் மன்னனுக்கு அனுப்பப்பட்டது.

“சில குறிப்பிட்ட பொருட்களின் வாணிபத்தைத் தம் ஏகபோக உரிமையாக்கிக் கொள்வதும், பிற பொருட்களின் வாணிபத்தைக் கட்டுப்படுத்துவதும், வரி விதிப்பதும் பதினாறாவது நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்களின் குறிக்கோளாக இருந்தது”

என்று இந்நூலில் (பக்கம் 95) நூலாசிரியர் எழுதி யுள்ளமை குறிப்பிடத்தக்கது. இச்சான்றுகளின் அடிப் படையில் ஒருவகையான காலனிய ஆட்சியைத் தமிழ் நாட்டின் கடற்கரைப் பகுதியில் போர்ச்சுக்கீசியர்கள் நிறுவியிருந்தார்கள் என்ற முடிவுக்கு வரமுடியும்.

***

16ஆவது நூற்றாண்டில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த கடல்சார் வாணிபம் குறித்த பல புதிய செய்திகளை இந்நூல் வாயிலாக அறியமுடிகிறது. இதன் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த நூலாக இந்நூல் அமைகிறது. இதுவரை பயன்படுத்தப்படாத போர்ச்சுக்கீசிய மொழி ஆவணங்களை நூலாசிரியர் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

16ஆவது நூற்றாண்டுக் காலத்திய தமிழ்ச் சமூகத்தின் வரலாற்று வரைவுக்கு போர்ச்சுக்கீசிய மற்றும் டச்சு மொழியறிவு மிகவும் இன்றியமையாதது என்ற உண்மையை இந்நூல் உணர்த்தி நிற்கிறது.

Pin It