காந்தியின் புகழ் அவர் மறைவுக்குப் பிறகு முன்பைவிட வேகமாகப் பரவத் தொடங்கியது என்றால் நேருவின் புகழ் அவர் வாழும் காலத்திலேயே சுருங்க ஆரம்பித்துவிட்டது. நடைமுறைத் தேவையைப் பொருத்தே ஒருவருடைய வாழ்வும் சிந்தனைகளும் நினைவுகூரப்படுகின்றன. அந்த வகையில், காந்தி தேவைப்பட்ட அளவுக்கு இந்தியாவுக்கு நேரு தேவைப் படவில்லை என்பதுதான் நடைமுறை உண்மை. அன்று மட்டுமல்ல இன்றும்தான்.

இத்தனைக்கும் காந்தியின் வாரிசாக காந்தியாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டவர் நேரு. வெகு சில விஷயங்கள் தவிர பெரும்பாலும் காந்தியோடு நேரு முரண்பட்ட தில்லை. ஆனாலும் அந்தக் காரணங்களுக்காகவே நேரு புறக்கணிக்கப்படுகிறார். சித்தாந்த அளவில், சோஷலிசம் மீது நேரு கொண்டிருந்த பிரமிப்பு அவரைக் காந்தியிடம் இருந்தும் காங்கிரஸிடம் இருந்தும் அந்நியப்படுத்தியது. இரண்டாவதாக, 1962 சீன யுத்தத்தில் இந்தியா சந்தித்த தோல்வியை நேருவின் தோல்வியாகவே இந்தியா (அன்றும் இன்றும்) கண்டது. ஆக, நேருவின் சித்தாந்தம், நடை முறை இரண்டும் காங்கிரஸால் அப்போதைக்கு அப் போதே நிராகரிக்கப்பட்டுவிட்டது.

192627 ஆண்டுகளில் ஐரோப்பாவில் பயணம் மேற்கொண்டபோது சோஷலிஸ்டுகளின் அறிமுகம் நேருவுக்கு ஏற்பட்டது என்று சொல்கிறார்கள். குறிப்பாக, பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து சோஷலிச தாக்கம் கொண்ட வர்கள் ஒன்று கூடினார்கள். இந்தச் சந்திப்புகளின் முடிவில் நேரு தெரிந்துகொண்ட உண்மை, நாடாளு மன்ற ஜனநாயகத்தின் மூலம் மட்டுமே தனிமனித முன்னேற்றம் சாத்தியமில்லை என்பதுதான். தற்போதைய சமூகத்தின் கட்டமைப்பை மாற்றாமல் லட்சக்கணக்கான மக்களின் ஏழைமையையும் பஞ்சத்தையும் ஒழிக்க முடியாது என்று நேரு கற்றுக்கொண்டார். அந்த வகையில், சோஷலிசத்தை நோக்கி நேரு நம்பிக்கையுடன் நகர்ந்ததற்கு உந்து சக்தியாக இருந்தது அவரது தனி மனித முன்னேற்றம் என்னும் கனவுதான்.

நேரு சுபாஷ் சந்திர போஸுக்கு எழுதிய கடிதத்தில் இதுபற்றிக் குறிப்பிடுகிறார். உண்மையிலேயே அது (சோஷலிசம்) என்னைக் கவர்ந்துவிட்டது. ஏனென்றால் கணக்கற்ற மக்களைப் பொருளாதார மற்றும் கலாசாரத் தளைகளில் இருந்து (சோஷலிசம்) விடுவிக்கிறது. சுதந்தரத்துக்கு முன்பும் சரி, பின்பும் சரி சோஷலிசம் என்பதை நேரு இப்படித்தான் அர்த்தப்படுத்திக் கொண்டார். இந்தக் கனவோடு அரசியலை அணுகுவதே சரியான தேர்வாக இருக்கும் என்று நேரு நம்பினார்.

காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே நேருவுக்கு எதிர்ப்புகள் தோன்றிவிட்டன. ராஜேந்திர பிரசாத்திடம் இருந்து கடிதம் பறந்து வந்தது. வல்லபபாய், ஜம்னாலால்ஜி, நான் மூவரும் உங்கள் கருத்தோட்டத்தில் இருந்து முற்றிலுமாக மாறுபடு கிறோம். அந்தக் கடிதம் ஒரு மிரட்டலையும் விடுத்தது. நமது பணித்திட்டத்தில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தும்வரை, நாம் ஒன்றிணைந்து பணியாற்றுவது சாத்தியமில்லை. சோஷலிசத்தை நீங்கள் துறக்கா விட்டால் நிறைய ஆபத்துகளைச் சந்திக்கவேண்டிவரும் என்று எம்.ஏ.அன்சாரி உள்ளிட்ட நண்பர்கள் நேருவுக்கு அறிவுரை கூறவேண்டியிருந்தது.

நேரு பிரதமரானபோது அவரது அமைச்சரவையில் பழமைவாதிகளே அதிகம் இடம்பெற்றிருந்தனர். படேலின் கை மேலோங்கியிருந்தது. நேருவின் சோஷலிசக் கனவைப் புரிந்துகொள்ள யாருமில்லை. இருந்தும் நேரு மதச்சார்பின்மை, சோஷலிசம், பகுத்தறிவு வாதம் ஆகியவற்றை பிரசாரம் செய்ய ஆரம்பித்திருந்தார். நேருவின் இந்தப் பிரசாரம் பூர்ஷ்வா இளைஞர்களையே அதிகம் கவர்ந்தது. நேரு ஒரு நேர்மையான, முற்போக்கான தலைவர் என்னும் தோற்றத்தை அவர்களிடையே ஏற்படுத்தியது. நேரு எங்குச் சென்றாலும் கூட்டம் அலைமோதியது. அவருடைய தரிசனத்துக்காக பெரும் கூட்டம் காத்திருந்தது. ஆனால் அதற்கு மேல் அவருடைய கொள்கைகளை யாரும் பரிசீலிக்கத் தயாராகயில்லை.

ஆகஸ்ட் 1947க்கு முன்பும்கூட நேரு விரிவான சுற்றுப்பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். தனது சோஷலிசக் கனவுகளைப் பொதுக்கூட்டங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். பிரதமரான பிறகும் அதனை அவர் தொடரவே செய்தார் என்றாலும் ஒரு தலைவராக அவருக்குக் கிடைத்த வரவேற்பும் அங்கீகாரமும் அவரது கொள்கைகளுக்குக் கிடைக்கவில்லை.

புதிதாகக் கிடைத்திருக்கும் சுதந்தரத்தைக் கொண்டு என்னென்ன சாதித்துக்கொள்ளலாம் என்று தான் அரசியல் வாதிகள் கணக்கு போட்டுக்கொண்டிருந்தனர். சுதந்தரம் பல நல்ல விஷயங்களைக் கொண்டுவரப்போகிறது என்று தான் மக்களும் காத்திருந்தனர். இவர்கள் அனைவரையும் விட அதிக ஆர்வத்துடன் சுதந்தரத்தை எதிர்நோக்கியிருந் தவர்கள் முதலாளிகள்தாம். எப்போது பிரிட்டன் வெளி யேறும், எப்போது நாம் சந்தையைக் கைப்பற்றலாம் என்று அவர்கள் காத்திருந்தனர். அவர்களில் சிலர் ஆகஸ்ட் 1947க்கு முன்பே காங்கிரஸுடன் உறவு ஏற்படுத்தி வைத்திருந்தனர். நேரு விவரிக்கும் சோஷலிச சித்தாந்தங்களை உள்வாங்கிக்கொண்டு பரிசீலிக்கும் அளவுக்கு யாருக்கும் பொறுமையும் ஆர்வமும் இல்லை. தேசபக்தியும் தேசநலன் சிந்தனைகளும் தியாகங்களும் மறந்துபோயிருந்தன.

டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஜனவரி 15, 1958 பத்திரிகையில் A Deep Malice என்னும் தலைப்பில் நேரு எழுதிய கட்டுரை அவரது அப்போதைய மனநிலையை படம் பிடித்துக் காட்டுகிறது. யதார்த்தத்தைப் புறக்கணிக்கும் அளவுக்கு நாம் துவண்டு போய்விட்டோமா? இதுவே போதும் என்று திருப்தி கண்டுவிட்டோமா? கடந்த காலங்களில் காங்கிரஸுக்குப் பலத்தைக் கொடுத்த வெற்றியின் இழைகள் சோர்ந்துவிட்டனவா?

சுதந்தரத்துக்கு வெகு காலத்துக்கு முன்பே காங்கிரஸ் கொள்கையளவில் ஏற்றுக்கொண்ட பல விஷயங்களைக் கூட நடைமுறைப்படுத்த முடியவில்லை. குறிப்பாக, பாது காப்புத் துறை, பெரிய தொழிற்சாலைகள் ஆகியவற்றை அரசுடைமையாக்கவேண்டும் என்பதை காங்கிரஸ் முன்னர் ஏற்றிருந்தது. இப்போதோ சோஷலிசம் என்னும் பதமே எரிச்சலூட்டும்படியாக மாறிப் போனது.

காங்கிரஸ் சந்தர்ப்பவாதிகளின் அமைப்பாகச் சுருங்கிப்போனது. மாற்றுச் சிந்தனையாளர்களால் அங்கே தாக்குப்பிடிக்கமுடியவில்லை. சோஷலிச குழுவின் தலைவரான ஆச்சாரிய நரேந்திர தேவ் மார்ச் 1948இல் காங்கிரஸில் இருந்து வெளியேறினார். அதற்குக் காரணம் பிப்ரவரி மாதம் காங்கிரஸில் சர்தார் படேல் கொண்டு வந்த தீர்மானம். காங்கிரஸுக்குள் குழுவாதம் இருக்கக்கூடாது என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் பொருள் சோஷலிசம் பேசுபவர்களுக்கு இங்கே இடமில்லை என்பதுதான். இதைத் தொடர்ந்து, சொற்ப சோஷலிச ஆதரவாளர் களும் ஒவ்வொருவராக வெளியேற ஆரம்பித்தனர். வெளியேறியவர்களின் கூட்டத்தில் காந்திய ஆதர வாளர்களும்கூட இருந்தனர். புனரமைக்கப்பட்ட புதிய காங்கிரஸில் அதிகார நாட்டம் கொண்டவர்களும் கொள்கைகளைக் கைவிட்டவர்களும் சமரசவாதிகளும் லாப மீட்ட விரும்பியவர்களும் மட்டுமே இருந்தனர். நேருவின் சோஷலிசக் கனவு படிப்படியாக முடிவுக்கு வந்தது. 1962 சீனப் போர் நேருவின் சோஷலிசக் கனவின் சவப்பெட்டிமீது கடைசி ஆணியைப் பாய்ச்சியது.

நேருவின் சோஷலிசக் காதலைத் தீவிர வலதுசாரிகள் மட்டுமல்ல தீவிர இடதுசாரிகளும் நிராகரித்தனர். சோஷலிசத்தை நேரு அளவுக்கு அதிகமாகக் கொண்டு செல்கிறார் என்பது முந்தைய குழுவின் குற்றச்சாட்டு என்றால், போதுமான அளவுக்கு சோஷலிசத்தைக் கொண்டுவரவில்லை என்பது இரண்டாவது சாராரின் குற்றச்சாட்டு. நேருவின் சோஷலிசம் சோஷலிசமே அல்ல, அது வெறும் socializing மட்டுமே என்னும் விமரிசனமும் முன்வைக்கப்படுகிறது. நேருவின் சோவியத் நாட்டமும் சீன நாட்டமும் விமரிசிக்கப் பட்டது. நேருவின் காஷ்மிர் கொள்கையும் மொழிக் கொள்கையும் விமரிசிக்கப்பட்டது.

பிரிட்டன் வெளியேறியதைத் தொடர்ந்து இந்தியாவை வலதுசாரிகள் கடத்திக்கொண்டு போகாதபடி நேரு தடுத்தார் என்கிறார்கள் சிலர். சோஷலிச இந்தியாதான் நேருவின் விருப்பம் என்றால் அதற்கான அடித்தளத்தை அழுத்தமாக அவர் உருவாக்கவில்லை என்கிறார்கள் வேறு சிலர். 1991க்குப் பிறகு நேருவின் அடையாளம், தேவைப்படாதவர் என்பதில் இருந்து ஆபத்தானவர் என்னும் நிலைக்கு உயர்த்தப்பட்டது.

நேருவின் சோஷலிசப் பரிசோதனை தோல்வி யடைந்தது ஏன் என்பது விரிவாக ஆராயப்படவேண்டிய ஒன்று. ரஷ்யாவைப் போலன்றி இந்தியாவில் ஆட்சி முறை புரட்சியால் தூக்கியெறியப்படவில்லை. மாறாக, இங்கு நடைபெற்றது ஒரு ஆட்சி மாற்றம் மட்டுமே. பிரிட்டனிடம் இருந்து இந்தியா அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டது. நேருவுக்கு சோவியத் மாதிரி புரட்சிமீது நாட்டம் இல்லை. ஆனால், சோவியத் மாதிரி சோஷலிசத்தின்மீது நாட்டம் இருந்தது. இருந்தும், இங்கே அவரால் உருவாக்க முடிந்தது ஒரு முதலாளித்துவ ஜனநாயக அரசை மட்டுமே. அதில் இயன்றவரை சோஷலிசத்தின் நிழல் படிந்திருக்குமாறு செய்ய மட்டுமே அவரால் முடிந்தது.

இப்படியான ஒரு முயற்சி தோல்வியையே தழுவும் என்றார் லெனின். அவர் எழுதுகிறார். பாட்டாளி வர்க்கத்துக்குக் கல்வி புகட்டுவதற்கும், போராட்டத்துக்காக அதற்குப் பயிற்சி அளிப்பதற்கும் முதலாளிய ஜனநாயகம் விலைமதிப்பற்றதாக இருக்கிறது. என்றாலும், அது எப் போதும் குறுகலான, போலித்தனமான, மாய்மாலம் நிறைந்த, பொய்யான ஒன்று. அது எப்போதும் வசதி படைத்தவர்களுக்கு ஜனநாயகமாகவும் வறியவர் களுக்கு மோசடியாகவும் உள்ளது.

இந்த வரையறையின்படி நேருவின் சோஷலிசம் முழுமையானது அல்ல. எனவே அது தோல்வியுற்றது. உலகமயமாக்கலையும் தாராளமயமாக்கலையும் தீவிரமாக எதிர்க்கும் தீவிர இடதுசாரிக் குழுவினருக்கு நேரு போன்ற ஒரு மென்மையான சோஷலிஸ்ட் தேவையில்லை. மொத்தத்தில் நேரு இன்று யாருக்கும் தேவைப்படவில்லை.

லெனின் இன்னோரிடத்தில் இவ்வாறு குறிப்பிடு கிறார். வர்க்கப் போராட்டத்தை மட்டும் ஏற்பவர்கள் மார்க்சியவாதிகள் ஆகிவிடமாட்டார்கள். வர்க்கப் போராட்டத்தை ஏற்பதைப் பாட்டாளி வர்க்க சர்வாதி காரத்தை ஏற்பது வரை விரித்துச் செல்பவனே மார்க்சிய வாதியாவான். மார்க்சியத்திற்கும் சாதாரண சிறு அல்லது பெரு முதலாளிக்கும் இடையே உள்ள மிகவும் ஆழமான வேறுபாடாக இதுவே அமைகிறது. மார்க்சியம் பற்றிய உண்மையான புரிதலையும், அதை ஏற்றுக்கொள் வதையும் சோதித்து அறிவதற்கான உரைகல்லும் இது தான்.

மேலதிக விவரங்களுக்கு

Retreat of Socialism in India, Two decades without Nehru 1964-1984, R.C. Dutt.

Pin It