மனித இனத்தின் வாழ்க்கை முறையை வெளிப்படுத்திப் பதிவுசெய்துள்ள தமிழ் இலக்கியங்களில் தொன்மையான பதிவுகளைக் கொண்டவையாகச் சங்க இலக்கியங்களே கிடைத்துள்ளன. இலக்கியங்களைப் புனையத் தேவையான பாடுபொருள்கள் சமூகத்திலிருந்துதான் கிடைக் கின்றன. அவை இலக்கியத்தின் பாடுபொருளாக மேன்மையாக்கம் அடைகின்றன. அதுவரை அவை சமூக வழக்கங்களில் ஒன்றாக நிலவுகின்றன.

ஆதிச் சமூக வாழ்க்கையைத் தாய்வழித் தலைமை, புறமண உறவு, சுதந்திர மணம், உடன் போக்கு என்ற அமைப்பில் குறிஞ்சித் திணைப் பாடல்கள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. இந்தச் சமூக அமைப்புக்குப் பின்னர் ஆநிரைகள் நிறைந்த தனியுடைமைச் சமுதாயமாக முல்லைத் திணை இருந்தது. நாகரிக நிலையின் முதல் சொத்தாக ஆநிரைகள் இருந்தன. “தனியுடைமை தோன்றவே அதனைக் காப்பாற்றிக் கொள்ள வாரிசுரிமை தோன்றியது. அதனை நிலைநாட்ட ஒருதாரமணமும் அதில் தோன்றும் வழுக்களைக் களையக் கற்பு விதிகளும் உருவாயின.” (சிலம்பு நா.செல்வராசு (2005); சங்க இலக்கிய மறுவாசிப்பு) முல்லைத் திணையின் காதல் உரிப்பொருளான ‘இருத்தல்’ என்பது தலைவனின் பிரிவினைத் தலைவி தாங்கி ஆற்றி இருத்தல் என விளங்கிக் கொள்ளவேண்டும். ஆநிரைகளின் வழியே நிலவுடைமைச் சமுதாயம் மலர்ந்தது. பெண்ணுக்குரிய ஒழுக்கம், கற்பு வாழ்க்கை, இல்லறக் கடமை, ஆணுக்குரிய கடமை என அறங்கள் உருவாயின.

சங்க இலக்கியங்களில் அறம்பற்றிய பதிவுகளைக் கவனிக்கும்போது, ஒரு காலகட்டத்தில் களவு வாழ்க்கையே சமூக அறமாக இருந்தது என்பதும், அப்போது தாய்வழிச் சமூகமாகத் தமிழ்ச் சமூகம் இருந்தது என்பதும், அது தந்தை வழிச் சமூகத்தில் தடை செய்யப்பட்டு, அறமற்றதாக ஆக்கப்பட்டு, பெற்றோர் ஒப்புதலுடன் கூடிய மணம் அல்லது கற்புமணம் அறமுடையது என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேற்கண்ட பின்னணியில் கவனிக்கும்போது, சங்கப் பாடல்கள் குறிப்பிட்ட காலத்தில் எழுதப் பட்டன என்று கருதவே முடியாத அளவிற்கு நீண்டகால வரலாற்றின் பதிவாக இருப்பதனைக் காணலாம். ஆனால் அவை திட்டமிட்டு ஒருகாலத்தில் தொகுக்கப்பட்டன. தொகுத்தவர் மனநிலையையும், தொகுப்பித்தவரின் அதிகாரமும் தொகுப்பு முயற்சியின் பின்னணி என்பதை மறக்காமல் அவற்றிற்கு உரை எழுதியோர் காலம் வேறு என்பதையும் உணர வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். உரை எழுதியோர் அவர் காலத்து மன உணர்வும் பதிவுகளைச் செய்யாமல் உரை எழுத முடியாது என்பது எதார்த்தம்.

இனக்குழுச் சமூகப்பதிவு:

சங்க இலக்கியங்களைத் திணை, துறை பாகுபாட்டு அடிப்படையில் காண்பது என்பது பாடல்களின் பின்னணி பற்றி அறிய உதவும் ஒரு கருவியே அன்றி அதனை அடிப்படையாகவோ உறுதியாகவோ பற்றி நின்று விளக்குவது சரியான தாகாது. ஏனென்றால் தொகுத்தோர் வகுத்த பாகுபாடு என்பதால் சங்க இலக்கியப் புரிதலுக்குத் தடையாக அமைவதையும் உணரலாம். பாடல் களைச் சமூகப் பின்னணியோடு புரிந்து கொள்வது சங்ககாலச் சமூகத்தை உணர்ந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.

மக்கள் வாழ்வதற்கு ஏற்ற நிலப்பகுதியோடு தொடர்புகொண்டு நிலைத்து வாழத்தொடங்கினர். அப்போது இயற்கைச் சூழலை அடிப்படையாகக் கொண்டு தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். இயற்கையைப் பயன்படுத்திக் கொண்டு, உற்பத்திக் கருவிகளை உருவாக்கிப் பயன்படுத்திய நிலைமைக்கு ஏற்ப அவர்தம் வாழ்க்கை அமைந்தது. அதன் அடிப்படையில் சமூகவளர்ச்சி வேகமாகவோ, மெதுவாகவோ அமைந்தது.

வெவ்வேறு நிலப்பகுதிகளான மலை, நாடு, நன்செய், கடல் என்ற பாகுபாட்டையும் அந்தந்த நிலப்பகுதியில் இயற்கையான விளைபொருட்களும், உற்பத்திப் பொருட்களும், உணவுமுறை, மரம்செடி கொடிகளும், தொழில், இசை முதலான உற்பத்தி முறைகளும் வேறானவையாக இருப்பதையும் சங்ககால ஆற்றுப்படை நூல்கள் வழி அறிய முடிகிறது.

நால்வகை நிலப்பாகுபாடு:-

சங்க இலக்கியத்தை அணுகும் மானிடவியல் பார்வைகொண்டோர், வேட்டையாடும் இனக்குழு வாழ்க்கையும் ஆடுமாடு மேய்க்கும் இனக்குழு வாழ்க்கையும் அழிந்தநிலையில் தனிச்சொத்துடை மையும் அரசுகளும் தோன்றிய வரலாற்றுக்காலம் என்று சங்ககாலத்தை வரையறுக்கின்றனர்.

இனக்குழுச் சமூகத்தின் எச்சங்களாக, பண்படுத்தப்படாத புன்செய் நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் இயல்பையும் அந்நிலத்தையும் உரைப்பதாக,

....    .....   .....   ....    .....

கருங்கால் வரகே, இருங்கதிர்த் தினையே

சிறுகொடிக் கொள்ளே, பொறிகிளர் அவரையொடு

இந்நான்கு அல்லது உணாவும் இல்லை

துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று

இந்நான்கு அல்லது குடியும் இல்லை (புறம்:335)

எனப்புன்புலப் பூக்கள், உணவு முதலியனவும், நடுகல் வழிபாடு தவிர நெல் பரப்பி வழிபடுவது இல்லை என நெல்விளைவற்ற புன்புலமான நிலத்தில் வாழ்க்கை அமைந்திருந்த இனக்குழு வாழ்வைப்பதிவு செய்துள்ளது இச்செய்யுள்.

குறிஞ்சி நில வாழ்க்கையைப் பற்றிக் கூறும் போது, கபிலர்,

இயற்கை வளம் கைகொடுத்ததைக் குறிப்பிடுகிறார்.

“உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே

ஒன்றே சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே

இரண்டே தீஞ்சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே

மூன்றே கொழுங்கொடி வள்ளிக்கிழங்கு                                 வீழ்க்கும்மே

நான்கே அணிநில ஓரி பாய்தலின் மீது அழிந்து

திணிநெடுங் குன்றம் தேன் சொரியும்மே (புறம்: 109)

மேலும் அகப்பாடல்களில் தலைவன் உணவு திரட்டுபவனாகவும் தலைவி உணவு உற்பத்தியில் ஈடுபட்டவளாகவும் இருப்பது கவனத்துக்குரியது. குறிஞ்சி, முல்லை ஆகிய இருநிலங்களுக்கும் தொடர்பில்லாத வகையில் மருதநிலம் அமைந்திருப்பதைக்காணலாம்.

பொருளாதார மேம்பாட்டிற்கும் உபரி உற்பத்தி மிகுதிப்படுவதற்கும், நாகரிக வளர்ச்சிக்கும் களமாக அமைந்திருக்கும் நிலம் மருதமாகும். மருதநிலத் தலைவனின் செல்வம் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் தரும்தன்மை கொண் டது.

“வட்டவரிய செம்பொறிச் சேவல்

ஏனல் காப்போர் உணர்த்திய கூடம்

கானத்தோர் நின்தெவ்வர்; நீயே

புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து, அகத்தோர்

புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்

பூம்போது சிதைய வீழ்ந்தென, கூத்தர்

ஆடுகளம் கடுக்கும் அகநாட்டையே.’ (புறம்: 28)

என மருத நிலத்தின் பெருமை பாடப்பட்டுள்ளது. ஆக, சங்ககால வாழ்க்கையானது நிலவியல்புக் கேற்ப அமைந்து அதற்கேற்ப நிலத்தலைமைகளும் வேறுபட்டுள்ளன. இதனைச் சீறூர்மன்னர், முதுகுடி மக்கள், குறுநில மன்னர், வேந்தர் எனச் சமூகத் தலைவர்களைப் பகுத்துக்கொள்ள சங்க இலக்கியங்கள் இடம் தந்துள்ளன. மேலும் பாண்டியன் நெடுஞ்செழியன் கூறுவதுபோல, வேற்றுமை தெரிந்த நாற்பால் என்பது நானிலத்தைக் குறிப்பிடுவதாக அறிய முடிகிறது.

சீறூர் மன்னர்:-

புன்செய் நிலப்பகுதியின் உடைமையாளர்களான இவர்கள் ஆண்ட நிலப் பகுதி ‘புன்புலம் தழீஇய அம்குடிச்சீறூர் (புறம்:324) என்றும் “புன்புலச் சீறூர் நெல்விளையாதே” (புறம்:328) என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் வரகு, தினை, கொள், அவரை மட்டுமே விளைகின்றன. சீறூர் மன்னனும் அவன் மனைவியும் மக்களோடு மக்களாக வாழ்ந்தனர். இவர்கள் வீரம்சார்ந்த பெயர்களாலும், மன்னர் என்ற பெயராலும் குறிப்பிடப்படுகின்றனர். கொடுப்பதற்குப் பொருள் ஏதுமில்லாத நிலையில் வரகைக் கடன்பெற்றும் (புறம்:327) வாளையும் சீறி யாழையும் பணயமாக வைத்தும் (புறம்: 316) விருந்து பேணும் பண்பினர். இருப்பது குறைவானாலும் பகிர்ந்துண்ணும் (புறம்:331) இயல்பினர். விதைக்காக வைத்திருந்த தினையைக் கூட இடித்துச் சமைத்து உணவு பரிமாறுபவளாகச் (புறம்:333) சீறூர்த்தலைவி இருந்தாள்.

இனக்குழுச் சமுதாயத்தின் பொதுப்பண்பு “பொதுவில் வைத்து உண்ணுதல்” என்பதாகும். இதன் தொடர்ச்சி இன்றும் கிராமப்புறங்களில் காணக்கூடியதாக உள்ளது. வேந்துவிடு தொழிலில் ஈடுபட்டவர்கள் இவர்கள். (புறம் : 319, 320, 326) இந்தத் தொழில் ஈடுபடாத பாரி மூவேந்தர்களால் அழிக்கப்பட்டதைச் சீறூர் மன்னர் அழிவிற்கான அடையாளமாகப் புறநானூறு பதிவு செய்துள்ளது.

சீறூர் மன்னர் வாழ்ந்த இனக்குழுச் சமுதாயத்தில் வீரவணக்கம் பெருவழக்குடையதாகும். மாடுபிடி சண்டையில் இறந்தவர்களுக்கு நடு கற்கள் வைக்கப்பட்டன. இதனை வழிபடுவது வீரவணக்கமாகும்.

நல்லமர் கடந்த நாணுடை மறவர்

பெயரும் பீடும்எழுதி அதர்தொறும்

பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்

வேலூன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்

(அகம்: 67)

வேந்தர் சமுதாயத் தாக்கம் ஏதுமற்ற இனக் குழுச் சமுதாயத்தில் மாடுபிடி சண்டையில் இறந்த வீரர்கள் தம்மோடு வாழ்கின்றனர் என்ற நம்பிக்கை வகைப்பட்ட வழிபாடாக அதனைக் காணமுடிகிறது.

குறுநில மன்னர்கள்:-

ஆவியர், மழவர், வேளிர் போன்ற பல்வேறு தொல்குடிவழி வந்தவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக மலையும் மலைசார்ந்த பகுதிகளையும் ஆட்சி செய்தனர். நன்னன், அதியமான், பாரி, காரி, ஆய் அண்டிரன், பேகன், கண்டீரக்கோப்பெருநள்ளி, இளவிச்சிக்கோ, ஓரி, குமணன், பிட்டங்கொற்றன், ஏறைக்கோன், கொண்கானங்கிழான், முதலியோரைப் பற்றிப் புறநானூறு பேசுகின்றது. இனக்குழுச் சமூகத்தின் அடையாளமாகக் குறுநில மன்னர்கள் பின்பற்றிய ‘கொடை’, சிறப்புடைய அறமாகத் திகழ்ந்தது. வேந்தர்களின் நாடு கொள்ளும் ஆசையில் குறுநில மன்னர்கள் பலியாயினர்.

முதுகுடிமன்னர்:-

சீறூர் மன்னர்களைப் போல இவர்களும் இயற்பெயரால் அழைக்கப்படாமல், ஓரெயில் மன்னர் (338), தொல்குடி மன்னர் (353) எனப்பொதுவாக அழைக்கப்பட்டனர். இவர்கள் சீறூர் மன்னர்களைப் போலல்லாமல் மருதநிலமாகிய நன்புல மன்னர்களாவர். “சங்க காலத்தில் மருதநில வாழ்க்கை பிறநில வாழ்க்கையைவிட செழிப்பானதாக இருந்தது. இங்கு குழுவாழ்க்கை அழிந்து அரசு தோன்றியது. பிற மக்களையும் அரசுடன் இணைத்துக்கொள்ளப் பல போர்கள் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு குழுவாக அழிந்தது” (நா. வானமாமலை (2008);ப:52) அப்படி அழிந்தவர்களில் முதுகுடி மன்னர்களும் அடங்குவர்.

“ஏர் பரந்த வயல், நீர் பரந்த செறுவின்

நெல்மலிந்த மனை, பொன் மலிந்த மறுகின்

படுவண்டு ஆர்க்கும் பன்மலர்க்காவின்

நெடுவேள் ஆதன் போந்தை அன்ன

-------------------------------------

-------------------------------------

-------------------------------------

பிணங்கு கதிர்க்கழனி நாப்பண் ஏமுற்று

உணங்கு கலன் ஆழியின் தோன்றும்

ஓர் எயில் மன்னன் ஒருமடமகளே” (புறம்: 338)

என்ற பாடலில் மருதநிலவளமும் அவ்வளத்தைப் பாதுகாக்க ஓர் எயில் கோட்டை அமைத்து ஆட்சி செய்யும் மன்னன் பற்றிக் கூறும் முதுகுடி மன்னரைப் பற்றிய பதிவைக் காணமுடிகிறது. இவர்கள் ஊர் ஆண்டவர்களாகவே பாடப்பட்டுள்ளனர். இவர்களது சமுதாயம் உடைமைச் சமுதாயமாகும். மருதநிலப் பெருக்கத்தால் மற்ற வேந்தர்களின் கவனத்தை ஈர்க்கும் நிலையில் இருந்துள்ளனர்.

வேந்தர்கள்:-

இவர்கள் புதிதாக எங்கிருந்தோ வந்தவர்கள் அல்லர். இனக்குழுச் சமுதாயத்திலிருந்து வந்தவர்களாவர். பொருளாதாரப் பெருக்கம் காரணமாகப் படைபலம், பொருள்வளம் முதலியவற்றால் மற்ற குறுநில, சீறூர் மன்னர்கள் பார்வையில் வம்பவேந்தர்களாகப் (புறம்: 287, 345) புலப்பட்டனர்.

வேந்தர்கள் சமுதாயம் என்பது பாண்டியர், சேர, சோழர் என மலர்ந்தது எனலாம். குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு என அழைக்கப்படும் நிலப்பரப்பில் பாண்டியர் ஆட்சி இருந்தது. சோழ அரசினர் இருவேறு குடிகளாகப் பிரிந்து உறந்தையையும், அழுந்தூரையும் ஆட்சி செய்தனர். சேர மரபினரும் இருகுழுவினராக, இரும்பொறை, கருவூரிலிருந்தும், உதியன் சேரல் குழுமூரிலிருந்தும் ஆட்சி செய்துள்ளனர். (சு.வித்தி யானந்தன் (1971); தமிழர் சால்பு)

வேந்தர்களின் நோக்கம்:-

சிறுசிறு தலைவர்களையெல்லாம் வென்று உயர்ந்ததன் நோக்கம்,

தென்குமரி வடபெருங்கல்

குணகுட கடலா எல்லைத்

தொன்று மொழிந்து தொழில் கேட்ப

வெற்றமொடு வெறுத்து ஒழுகிய

கொற்றவர்தம் கோன் ஆகுவை.

(மதுரைக்; அடி; 70-74)

என மதுரைக் காஞ்சி குறிப்பிடுவது போல, தமிழ் மொழி பேசப்படும் இடமெல்லாம் தம் கீழ்க் கொண்டுவர வேண்டும் என்பதுதான். மேலும் குடபுலவியனார் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாராட்டும் முகமாகப் பாடிய புறப்பாடலில் (18)

முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்

பரந்துபட்ட வியன்ஞாலம்

தாளில் தந்து தம்புகழ்நிறீஇ

ஒருதாமாகிய உரவோர் உம்பல் (1-4)

என்ற அடிகளால், பரந்துபட்ட உலகத்தை முயற்சியால் கைப்பற்றித் தாமே ஆண்ட வலிமை யுடையோர் வழித்தோன்றலே என்று புகழ்கின்றார்.

வேந்தர்களைப் புலவர்கள், யாணர்வைப்பின் நன்னாட்டுப் பொருந (புறம்:2) விழுநீர் வேலி நாடு கிழவோன் (புறம்:13), கடல் பஃறாரத்த நாடுகிழ வோய் (புறம்:30) நாடுகெழு செல்வத்துப் பீடு கெழு வேந்து (புறம்:35) எனக்கடலை வேலியாக உடைய நிலத்துக்கு உரியவன், கடல்தரு பல்வளம் உடையவன், மண்ணாள் செல்வம் அடைந்தவன் எனப் புகழ்கின்றனர். இவர்கள் வழி வழியாகத் தாயம் எய்தினர் என்பதற்குப் புறநானூறு (75)

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்

பாறர வந்த பழவிறல் தாயம் (1,2)

எனவும்,

“உருகெழு தாயம் ஊழின் எய்தி” (பட்டினப்: 227)

எனவும் வரும் அடிகளால் அறியலாம்.

வேந்தர்கள் வாழ்ந்த நகர வள வாழ்வுபற்றிப் பத்துப் பாட்டில் புலப்படுகிறது. அகழியும் மதிலும் உடைய, மேகங்கள் தொடுமளவு உயர்ந்த மாடங்கள் உடைய வளமனைகளையுடைய மதுரை மாநகரின் அகன்ற நெடுந்தெருக்கள், அங்கு நடைபெற்ற வணிகம், விழாக்கள், முதலியன பற்றி மதுரைக்காஞ்சி (343-450) புலப்படுத்துகிறது. மன்னர்க்குரியது போல அமைக்கப்பட்ட இல்லங்கள், கொடியோடு யானைபுகுமளவு பெரிய வாயில், அந்தப்புற அமைப்பு, தக்கவேலைப்பாடு அமைந்த அரசியின் கட்டில், முதலியனபற்றி நெடுநல் வாடை (75-130) குறிப்பிடுகின்றது.

நால்வகை நிலங்களையும் தனித்தனியே ஆண்ட நிலைமாறி நானிலத்தையும் ஒருவரே பொதுவின்றி ஆண்ட நிலை உருவானது. பாண்டியன் நெடுஞ்செழியன் நானிலத்தோடு வழிபடு மளவிற்கு ஆட்சி செய்தவனாக அறியப்படுகிறான். (புறம்: 17)

நாடன் என்கோ ஊரன் என்கோ

பாடிமிழ் பனிக்கடல் சேர்ப்பன் என்கோ

யாங்கனம் மொழிகோ ஓங்குவாள் கோதையை                                     (புறம்: 49)

எனச் சேரன் கோக்கோதை மார்பன் பேசப்படுகிறான். குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய மூன்று நிலங்களும் பொருளாதார மேம்பாட்டிற்கு அடிப்படையாக இருந்த காரணத்தால் வேந்தர்களின் போர் நோக்கமானது அம்மையங்களைக் கைப்பற்றுவதாகவே இருந்தது.

போர் அறம் என்பது வணங்காதவர்களின் மருத நிலங்களையும் நீர் நிலைகளையும் அழிப்பதும், கழுதை ஏர் பூட்டிக் கடுகு விதைத்தலுமாகிய செயல்கள் வேந்தர்களின் கொற்றம் காக்க நடந்த நிகழ்ச்சிகளாகப் புறப்பாடல்கள் பதிவு செய்துள்ளன.

பேரரசுகள் உருவான காலத்தில் வேளாண்மையை விட வணிகம் இன்றியமையா இடம் வகிக் கிறது. நேரடி உற்பத்தியில் ஈடுபடுகின்ற வேளாண் வர்க்கத்திற்கு மாறாக, வணிக வர்க்கம் உள்நாட்டு வணிகம், அயல்நாட்டு வணிகம் என்னும் இரண்டிலும் பெருமளவில் ஈடுபட்டது. இதற்கான சான்றுகளைப் பட்டினங்களின் பெருவளர்ச்சியும், பெருவழிகளின் உருவாக்கமும் துறைமுகங்களின் உருவாக்கமும் உறுதிப்படுத்துகின்றன.

சேர சோழர்களின் கடல்வணிகம் பொருளாதார வளர்ச்சியையும் அயல்நாட்டினராகிய யவணர் தமிழகம் வந்து தமது வணிகத்தை மேம்படுத்திய நிலையையும் அறியமுடிகிறது. பாண்டியரின் மதுரை வீதிகளில் நாளங்காடி, அல்லங்காடி முதலியன வணிக வளத்தைப் பதிவு செய்துள்ளன.

சமூகநிலை:-

சங்க இலக்கியங்களில் புற நானூறு காட்டும் சமுதாயத்தை இனக்குழுச் சமுதாயம் என்றும் நில உடைமைச் சமுதாயம் என் றும், வகைப்படுத்தலாம். இனக்குழுச் சமுதாயத்தை முல்லைநிலம், சார்ந்த புறநானூற்றுப் பாடல்கள் காட்டுகின்றன. குறிஞ்சி நிலம் சார்ந்த குறுநில மன்னர் சமுதாயங்களிலும் இந்த வாழ்வின் எச்சங்களைக் காணமுடிகிறது. மூதின் முல்லை, வல்லாண்முல்லை ஆகிய துறைகளைச் சார்ந்த பாடல்கள் சங்க இனக்குழுச் சமுதாய வாழ்வை வரையறுக்க உதவும் அடிப்படைச் சான்றுகளாக உள்ளன. இவ்விரு துறைகள் சார்ந்த பாடல்கள் காலத்தால் முற்பட்டவையாக உள்ளன. இவைகாட்டும் சமுதாயம், மன்னர் என்ற அரசியல் தலைவனுக்குரிய பண்புகளற்ற சீறூர் மன்னர் எனப்படும் இனக்குழுத் தலைவர்தம் செயற்பாடுகளையும் பொது வாழ்வில் ஈடுபட்டு விருந்து பேணும் அறமாண்பினராக, வீரம் செறிந்த முதுகுடி மகளிராக விளங்கிய தலைவியரின் அறமறம் சார்ந்த சமுதாயச் செயற்பாடு களையும் கொண்டுள்ளன. (பெ.மாதையன் (2009) தமிழ்ச் செவ்வியல் படைப்புகள்).

அறம் என்னும் கருத்தாக்கம்: அறம் என்ற சொல்லுக்குக் கடமை, நோன்பு, தருமம், கற்பு, இல்லறம், துறவறம், நல்வினை, அறநூல், அறக்கடவுள், தருமதேவதை, தீப்பயன் உண்டாக்காத செயல் போன்ற பொருளைக் கழகத் தமிழ் அகராதி தருகிறது. அறம் என்ற சொல் தோன்றும் முன்னர் இச்சொல்லைக் குறிக்க, பழமொழி, முதுமொழி, மூதுரை, வாயுரைவாழ்த்து, நன்றி, நன்று, நன்மை, நல்லது, முறை, முறைமை, நயம், நன்னெறி, நெறி, ஒழுக்கம், கடமை, புண்ணியம், ஈகை, அறக்கடவுள், சமயம், ஆகியவை வழங்கி வந்தன; வழங்கி வருகின்றன. பிற்காலத்தில் வட மொழிக் கலப்பால் ‘நீதி’ என்ற சொல்லும் வேரூன்றிவிட்டது. இவற்றைவிட அறம் என்ற சொல்லுக்கு ‘எதிக்ஸ்’ எனப்படும் ஆங்கிலச் சொல்லுக்குத் தரப்படும் விளக்கம் பொருத்தமானதாக உள்ளது.

ஏதோஸ் எனப்படும் கிரேக்கவேர்ச் சொல்லிலிருந்து தோன்றியது எதிக்ஸ் (ethics). இச்சொல்லுக்குப் பழகிப் போன நடத்தை, வழக்கம், மரபு என்னும் பொருள் உணர்த்தி நாளடைவில் எதிக்ஸ் என்பது ‘ஒழுக்கத்தைப் பற்றிய அறவியல் கலை’ என்று போற்றப்படும் நிலையை அடைந்துள்ளது. எனவே, தனிமனிதன், சமூகம், சமயம், அரசு ஆகியவற்றிற்கான ஒழுக்கம் தான் ‘அறம்’ என்பது புலனாகிறது.

பிளாட்டோ எதிக்ஸ் பற்றிக் குறிப்பிடும் போது, எவையெல்லாம் ஒருவனை அவன் வழியில் முன்னேற்றுகின்றனவோ அவையெல்லாம் நல்லன. எவை அவனை அமுக்கி, அவனது குறிக் கோளை அடையவிடாமல் தடுக்கின்றனவோ அவை தீயன. ஜார்ஜியாஸ் என்ற நூலில் பிளாட்டோ, முழு நல்லதன் முடிவு மகிழ்ச்சி ஆகும். நமது செயல்களின் முடிவு நல்லதாக இருக்க வேண்டும். அதற்காகவே எல்லாச் செயல்களையும் செய்யவேண்டும். ஆக, நல்லது என்பது மகிழ்ச்சிக்காகவோ, அதிகாரத்திற்காகவோ, விதிக்காகவோ, நேர்மைக்காகவோ அன்று, அதற்காகவே ஏற்படுகிறது என்று விளக்குகிறார்.

நல்லது என்பது பற்றி அரிஸ்டாட்டில் கூறும் போது மகிழ்ச்சிதான் முழுமையான நல்லது என்கிறார். அதாவது வாழ்வின் லட்சியம் என்பது அதற்கான நல்லது என்பதல்ல பொருள். ஆனால் மகிழ்ச்சியின் ஒரே அர்த்தம் நல்லது என்பதுதான். (R.Sarangapani (1982); A Critical Study of Ethical literature in Tamil)

வரலாற்று அடிப்படையில் காணும்போது, மனிதகுலம் அவ்வப்போது பல்வேறு குழப்பங்களைச் சந்தித்துப் பாடம் கற்று வருகிறது. அனுபவத்திலிருந்து பல நெறிகளை உருவாக்கிக் கொண்டு அவற்றிலிருந்து மீண்டு வருகிறது. மனிதர்கள் ஒன்றுகூடி வேட்டையாடியபோது ஒலிக்குறிப்புகளின் (ஓரெழுத்து ஒருமொழிச் சொற்கள்) மூலம் செய்தியினைப் பகிர்ந்து கொண்டனர். அது வேட்டைக்கான நல்லசூழலை, வழியை உருவாக்கிக் கொடுத்தது. அவ்வொலிக் குறிப்புகள் தான் பிற்காலத்தில் மொழியாக வளர்ந்தது. மொழி உருவான பிறகுதான் மனித வாழ்க்கை குறிப்பிடத்தக்க உயர்வை எட்டியது. ஒலி பெற்ற இடத்தை மொழிபெற்றதும் வழிகளில் தெளிவு ஏற்பட்டுச் ‘செயல்நெறி’ உருவானது. இச்செயல் நெறியானது வாழ்க்கை அமைப்புகளிலும் தொழிலாற்றி ஒழுக்க நெறியை ஏற்படுத்தியது. ஒழுக்கம் என்பது ‘இடையறாது கடைப்பிடிக்க வேண்டியது’ என்று பொருள்படும்.

நெறிமுறைகளை எக்காலத்தும், எவ்விடத்தும் இடையறாது மேற்கொண்டு ஒழுகுவதையே ஒழுக்கம் என்பர். இதற்கு அடிப்படையாக இருப்பது எண்ணம். ஆகவே வள்ளுவர் எண்ணம் உரு வாகும் மனம் தூய்மையானால் எண்ணமும் ஒழுக்கமும் தூய்மையாகும் என்று ‘மனத்துக் கண் மாசிலனாதல்’ வேண்டும் என்று குறிப்பிடுகிறார். இந்நிலையே ‘அறம்’ என்கிறார். அறம் என்பது ‘அறு’ என்னும் அடிச்சொல்லிலிருந்து பிறந்தது. ‘அறு’ என்றால், அறுத்துச்செல், வழிஉண்டாக்கு, துண்டி, வேறுபடுத்து எனப் பல பொருள் கொண்டது. எனவே, மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதிதான் அறம் எனப்படும். தானே வரையறுத்துக்கொண்ட ஒழுக்க முறைகளில் ஆளுவோரும் சமயங்களும் தாக்கம் ஏற்படுத்துவதும் உண்டு.

தனிமனிதனின் உரிமைகளும் கடமைகளும் சமூக இணைப்பும் பழக்கவழக்கங்களும், விருப்பு வெறுப்பு ஆகிய இயல்புகளும் என எல்லாம் அறக்கோட்பாட்டால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும் இவ் அறக்கோட்பாட்டை உருவாக்குவதும், வழி நடத்துவதும் சமூகத்தின் பொருளாதார உறவு முறைகளே ஆகும். பொருளாதார வளர்ச்சியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்போர் அவர்களது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள சமூகத்தின் கருத்துகளையும் தன்கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர். பொருளாதார வளர்ச்சியால் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களை நெறிப்படுத்துவதே ‘அறம்’ என்பதன் தலைமையான நோக்கமாகும். ஆயினும் அது சில நேரம் ஆள்வோரின் சாதகமானதாக மாறிவிடுகிறது. இருப்பினும் சமூக வளர்ச்சியில் ‘அறம்’ என்ற கருத்தாக்கத்தின் செயல்திறன் குறிப்பிடத்தக்க மதிப்பு வாய்ந்ததாக உள்ளது.

உலகின் பல்வேறு பகுதிகளில் வழக்காற்று ஒழுக்க நெறியைச் (Customary morality) சிறப்பாக விளக்கும் மூதுரைகளும், முதுமொழிகளும் பழ மொழிகளும் தோன்றிப் படிப்படியாக வளர்ந் துள்ளன. இவ்வாறே தமிழ்ப்பண்பாட்டிலும் திருக்குறள் முதலான அறத்தை நேரடியாகச் சொல்லும் நூல்கள் தோன்றுவதற்கு முன்னர் முதுமொழி, பழமொழி, வாயுரை வாழ்த்து போன்ற அறநெறியுணர்த்தும் செய்யுள் வகைகள் தோன்றியிருத்தல் வேண்டும்.. (க.த.திருநாவுக்கரசு (1977); திருக்குறள் நீதி இலக்கியம்) அந்த வகையில் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியம் முதுமொழி என்பதற்கும் வாயுரை வாழ்த்திற்கும் இலக்கணம் இயம்பியுள்ளது.

நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்

எண்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்

குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்

ஏது நுதலிய முதுமொழி என்ப (தொல், செய்; 177)

வாயுரை வாழ்த்தே வயங்க நாடின்

வேம்பும் கடுவும் போல வெஞ்சொல்

தாங்குதலின்றி வழிநனி வயங்குமென்(று)

ஓம்படைக்கிளவியின் வாயுறுத்தற்றே

(தொல்;பொருள்;424)

இது மட்டுமன்றி சங்க இலக்கியங்களிலும் பழமொழி, முதுமொழி, பற்றிய குறிப்புகள் உள்ளன. இவற்றிலிருந்து அவை தோன்றிய காலத்திற்கு முந்தைய அறங்களைச் சுட்ட முதுமொழி, பழமொழி முதலியன பயன்படுகின்றன.

தனி மனித அறங்கள்:-

சங்க இலக்கியங்கள் அகத்திணை, புறத்திணை ஆகிய திணை வாழ்வில் குறிப்பாக ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிய அறங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. ‘பெருமையும் உரனும் ஆடூஉ மேன’ என்கிறது தொல்காப்பியம். அதே நேரம் பெண்ணுக்குக்கற்பை முன்னிறுத்திப் பேசுகிறது.

“உயிரினும் சிறந்தன்று நாணே; நாணினும்

செயிர்தீர்காட்சிக் கற்புச் சிறந்தன்று எனத்

தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு”

(தொல்; களவு; 22)

“அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த

நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப” (தொல்; கள; 8)

ஆகிய நூற்பாக்கள் பெண்களுக்குரிய இயல்புகளாகக் கற்பு, அச்சம், மடம் நாணம், பயிர்ப்பு ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. ‘தோழி அறத்தொடு நிற்பாள்’ என்பது தலைவி திருமணத்திற்கு உதவுவாள் என அறம் என்பது திருமணம் என்று பொருள்படுத்தப்பட்டுள்ளது. தொல்காப்பியர் புறத்திணைகளில் வாகை, காஞ்சி, பாடாண் முதலியன அறத்திணைகளாகவும் ஏனைய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை முதலியன புறத்திணைகளாகவும் வகுத்துள்ளார்.

அகத்திணையில் அறம்:-

சங்க இலக்கியங்கள் அகவாழ்வில் பின்பற்றக் கூடிய ஒழுகலாறுகளில் திருமணம் என்பதை முதன்மையான அறமாக வலி யுறுத்துகின்றன. புணர்ந்த தலைவன் தலைவியைக் கைவிடா திருத்தல் அறம் என்று அகத்திணைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

“அறங்கடைப்படாஅ வாழ்க்கையும் என்றும்

பிறன்கடைச்செலாஅச் செல்வமும் இரண்டும்

பொருளின் ஆகும்’ (155)

‘அறந்தலைப் பிரியாது ஒழுகலும் சிறந்த

கேளிற் கேடுபல ஊன்றலும் நாளும்

வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கில்லை (173)

ஆகிய அகநானூற்று வரிகள் மேற்கண்ட செய்தியை வலியுறுத்துகின்றன. தலைவியைக் கைவிடு பவனை ‘உள்ளது சிதைப்போர் உளரெனப் படார் (குறுந்; 283) எனக் கண்டிக்கிறது. அப்படிச் சிதையா வாழ்வுவாழ்பவன் அறவோன் (நற்;136), அறநிலைபெறுவோர் (நற்றி;166) எனப்பட்டான். பொருள் திரட்டித் திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறிச் சென்ற தலைவன் குறித்த பருவம் வந்த பின்னும் வராதவன் அறனிலான் (நற்;275), அறனிலார்; அறனிலோய் (நற்;277) எனக்குறிக்கப் படுகின்றான். சங்க இலக்கியங்களில் பிற்காலத்ததாகக் கருதப்படும் கலித்தொகையில் சில அறநெறிகளைப் பட்டியலிடுகிறது.

“ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்

அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை

அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்

செறிவெனப்படுவது கூறியது மறாஅமை

நிறையெனப்படுவது மறைபிறர் அறியாமை

முறையெனப்படுவது கண்ணோடாது                                    உயிர்வெளவல்

பொறையெனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்”

(கலித்:133)

என அகத்திணையை மீறிப் பொதுவான அறங்களை வலியுறுத்துகிறது. அகப்பாடல்கள் அன்றைய அரசர்கள் அறநெறியில் ஆட்சி செய்தனர் எனப்புறத்திணை அறங்களையும் சேர்த்துக் குறிப் பிடுகின்றன.

“அறங்கடைப் பிடித்த செங்கோல்” (அகம்; 338)

“அறனெறி பிழையாத் திறனறி மன்னர்” (அகம்; 188)

“அறனில் வேந்தன்” (அகம்; 109)

போர், ஆட்சி ஆகியவற்றில் அறம் நிலைப்பட வேண்டும் என்பதை மேற்கண்ட தொடர்கள் சுட்டு கின்றன. தனிமனிதனின் சமூக வாழ்வை உணர நட்பு என்ற அறம் முதன்மையானது.

“முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்

நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்” (நற்; 355)

என்ற வரி நட்பின் இடத்தை விளக்குகிறது. அக வாழ்வில் அறம் என்பது பெண்ணுக்குக் கற்பும் ஆணுக்கு ஒழுக்கமும் வலியுறுத்துகிறது. பொதுவாக, அகவாழ்வில் அறம் என்பது திருமணம் என்ற ஒரே ஒரு செய்கையை வலியுறுத்துவதன் வாயிலாக மேற்கண்ட இரண்டினையும் நிறை வேற்றுகிறது.

புறத்திணையில் அறம்:- புறத்திணை என்பது அக வாழ்வு தவிர்த்த ஏனைய எல்லாச் செய்கை களையும் உள்ளடக்கியது. சங்க இலக்கியங்களில் புறநானூறும், பதிற்றுப்பத்தும் புறச்செய்திகளை விளக்குகின்றன. அறத்தின் இயல்பு, சிறப்பு, ஆற்றல் பற்றிப் புறநானூற்றில் 35 பாடல்கள் கூறுகின்றன. நிலையாமையை 40 பாடல்கள் உணர்த்துகின்றன.

‘அறநெறி முதற்றே அரசின்கொற்றம்’ (புறம்:55) என்ற தொடரின் மூலம் புறவாழ்க்கையாகிய மறவாழ்வில் அறநெறி முதன்மையானது என்பதையும் அறியலாம். இதில் அறம் என்பது ஆட்சி, நீதி, கொடை, மக்கள் நலம் முதலியவற்றை விளக்கும் ஒரு சொல்லாக இருப்பதை அறியலாம்.

“ஆன்முலை அறுத்த அறனிலோர்க்கும்

மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்

குரவர்த்தப்பிய கொடுமையோர்க்கும்

வருவாய் மருங்கில் கழுவாயும் உளஎன

நிலம்புடைபெயர்வதாயினும் ஒருவன்

செய்தி கொன்றோர்க்கு உய்திஇல் என

அறம் பாடிற்றே ஆயிழை கணவ!” (புறம்:34)

எனக்கிள்ளி வளவனை ஆலத்தூர்கிழார் குறிப்பிடுகிறார். இது அரச அறத்தைக் குறிப்பிடுகிறது. “சங்க இலக்கியங்களுக்கு முன்னர் தமிழ் மக்களிடையே தோன்றி வளர்ந்த ஓர் அறநூல் இருந்து அது பற்றி அறிவதற்குப் போதிய சான்றுகள் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் ஆலத்தூர்கிழார் காலத்தும், திருவள்ளுவர் காலத்தும் அவையிருந்தன. அக்கால அரசர்கள் அறங் கூறவை யங்களில் அவற்றைப் பேணிக்காத்தனர். அவையே அறங்கூறுவோர்க்கும் பிறர்க்கும் வழி காட்டுவன வாயின” (கொ-இலட்சுமணசாமி (1979); திருக்குறளும், சங்க இலக்கியங்களும்  கட்டுரை) என்ற குறிப்பும் நோக்கத்தக்கது. ஆயினும் அறக் கருத்தாக்கங்கள் தோன்றுவதற்கு சமூகப் பொருளாதார அரசியல் போக்குகள்தான் காரணமாகின்றன. புறநானூற்றில் மட்டும் 35 பாடல்களில் கூறப்படும் அறங்கள் போர் அறம், ஆட்சி அறம், சமூக அறம் என்ற மூன்றாகப் பகுத்துக்காணலாம்.

போர் அறம்:-

போர் செய்யப் புறப்படும் அரசன் அற எண்ணத்துடன் தன் மக்களில் சிலரைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு குறிப்பிடுகிறான்.

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்

பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்

தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போல் புதல்வர்ப் பெறாஅதீரும்

எம்மம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின் (புறம்;9)

என்ற ஓர் அறநெறி அக்காலத்தில் இருந்துள்ளது.

“அறநிலை திரியா அன்பின் அவையத்து

திறனில் ஒருபனை நாட்டிமுறை திரிந்து

மெலிகோல் செய்தேன் ஆகுக” (புறம்; 71)

“என்நிழல் வாழ்நர் செல்நிழல் காணாது

கொடியன் எம் இறையெனக் கண்ணீர் பரப்பிக்

குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக” (புறம்:72)

“புறப்போர் புன்கண் கூர

இரப்போர்க்கு ஈயா இன்மையான் உறவே” (புறம்: 73)

என வஞ்சினம் கூறும்போதும் மக்களைக் காத்தல் ஒன்றே அறம் என்று உணர்ந்திருந்தனர். உள் ளார்த்தமாக இவர்கள் போர் செய்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதே நோக்கமாயினும் வஞ்சினம் கூறும்போது மக்களைப் பாதுகாப்பதே நோக்கம் என்று கூறிக்கொள்கின்றனர்.

ஆட்சி அறம்:-

அரசன் வரிவிதிப்பில் கவனமாக இருக்கவேண்டும். ஆட்சி அறத்தொடு நடந்தால் செங்கோலாட்சி என்றும் அறம் பிறழ்ந்த ஆட்சியாக இருந்தால் கொடுங்கோலாட்சி என்றும் வருணித்தனர். வேண்டியவர், வேண்டாதவர் என்றெல்லாம் நீதி சொல்லும்போது கவனிக்கக் கூடாது. விசாரியாமல் தீர்ப்புக்கூறக் கூடாது என்றெல்லாம் அறம் வகுத்து அதன் வழியில் ஆட்சி செய்தல் வேண்டும். அதே நேரம் பாண்டியன் அறிவுடைநம்பிக்கு அறிவுரைகூறும் பிசிராந்தை யார், “உனக்கு இருக்கும் அதிகாரத்தினை உன் சுற்றத்தினரும் பயன்படுத்திக் கொண்டு ஆளாளுக்கு வரிவிதித்து மக்களைத் தொல்லை செய்கின்றனர். ஆகவே எதிலும் ஒரு நியதி வேண்டும்” என்ற குறிப்பு (புறம்: 184) வைத்துப்பாடியுள்ளார். அவ்வாறே அறவழிப்பட்ட ஆட்சியினால் பொருளும் இன்பமும் பெறலாம் என்பதை,

“சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்

அறத்துவழிப் படூஉம் தோற்றம் போல” (புறம்:31)

என்ற பாடலடி விளக்குகிறது.

சமூக அறம்:-

அகவாழ்க்கைக்கும், புறவாழ்க்கைக்கும் பொதுவானது ‘சமூக அறம்’ ஆகும். ஆயினும் அகப்பாடல்களைக் காட்டிலும் புறப்பாடல்களில் தான் சமூக அறம் பற்றிய சிந்தனைகள் பெருமளவு பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆற்றுப் படைகளில் பதிவாகியுள்ளபடி விருந்தோம்பல் வேறுசில வேந்தர்களிடம் காணப்பட்டாலும் இதன் ஊற்றுக்கண் சீறூர் மன்னர்களிடம் பரவலாக இருந்த பண்பாகும். விருந்து வரவேண்டும் என்று நடுகல்லை வழிபட்டசீறூர்த்தலைவியின் பண்பு குறிப்பிடத்தக்கது. ஆகவே இனக்குழுச் சமூகத்தின் பழக்கம் சீறூர் மன்னர் காலத்தில் சமூகப் பண்பாடாக உயர்ந்தது. சங்ககாலத்தில் விருந்தோம்பலும் கொடையும் அறமாக மலர்ந்தது.

கொடைப்பண்பைப் பொருத்தவரை கொடை ஒரு பழக்கமாக இனக்குழுச் சமூகத்தில் இருந்தாலும் கடையெழு வள்ளல்களிடையே கொடைமடமாக வளர்ந்திருந்தது. அதியமானைப் பற்றி ஒளவை அவன் இறந்தபோது”, இனிப்பாடு நரும் இல்லை, பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை” (புறம்;235) என்று குறிப்பிடுகிறார். குமணனைப்பாடும் பெருஞ்சித்திரனார் கடையேழு வள்ளல்களுக்குப் பிறகு “பாடுநரைப் புரக்கும் புரவலன் நீ” என்று வந்தேன் (புறம் :158) என்று பாடுவதிலிருந்து கொடைப்பண்பின் தொடர்ச்சியைக் காணமுடிகிறது. அவர்கள் காலத்திலேயே மறுமைக்குப் பயன்படும் என்ற அறவிலையாக வடிவம் கொண்டுவிட்டது. ஆக வரிசையறிந்து பாணர்க்கும், பொருநர்க்கும் கூத்தர்க்கும் விறலியருக்கும், கோடியருக்கும், வயிற்றியருக்கும் பொருள் வழங்கி அறம் செய்துள்ளனர். பிற்கால வேந்தர்காலத்தில்,

“ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்

ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று” (புறம்: 204)

எனப்பொருள் கேட்டும் கொடா மன்னர்களை, அறம்காவாத மன்னர்களைப் புலவர்கள் கண்டித்துள்ளனர்.

வேந்தர்கள் காலத்தில் கொடைப்பண்பு சமூக அற நிறுவனமாகி வேளாண்மை உற்பத்திப் பெருக்கத்திற்கு வழிவகை செய்தது. இதனால் பரிசில் கொடுப்பதற்குக் காலத் தாழ்ச்சி, பரிசில் தராமல் போதல், இன்னது வேண்டும் என விருப்பம் தெரிவித்தும் அதற்கு முகம் கொடாநிலை, எனப் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகிப் பரிசில் பெற்றனர் புலவர்கள்.

பாடாண்திணை, உடைமைச் சமுதாயத் தோற்றத்தில் நிகழ்ந்த பல்வேறு சமுதாய மாற்றங் களைப் பதிவு செய்துள்ளது. இத்திணையில் உள்ள துறைகளாக ஆற்றுப்படை, பரிசில் கடா நிலை, பரிசில்துறை, கொடுப்போர் ஏத்திக் கொடா அர்ப்பழித்தல், சேய்வரல் வருத்தம் வீட வாயில் காவற்கு உரைத்த கடைநிலை, செவியறிவுறூஉ, பரிசில் கடைஇய கடைகூட்டு நிலை, இருவகை விடை எனப் பல்வேறு துறைகளைப் பாடாண் திணை அக்காலச் சமூக சூழலைப் பதிவு செய்துள் ளது. இத்தகைய சூழலைப் பதிவு செய்ததாகத் தான் புறநானூற்றுப் (197) பாடல் அமைந்துள்ளது.

செவியறிவுறூஉப்பாடல்கள் புறநானூற்றில் 8 பாடல்கள் உள்ளன. அவற்றில் பெருஞ்செல்வம் உடைய வேந்தர்கள் குறிப்பிட்ட சில புலவர்களோடு மட்டும் தொடர்பு கொண்டுள்ளனர். புலவர்கள் சிலர் அவர்களுக்கு அறிவுரை கூறுகின்றனர். இதில் சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும், ஆட்சி அறநெறியுடன் இருத்தல் வேண்டும், கொடைத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும், செல்வம் அறவழியில் வந்ததாக இருத்தல் வேண்டும் போன்ற அறிவுரைகள் மிகுதி.

பொருண்மொழிக்காஞ்சித்துறையில் உள்ள பாடல்களும் வேந்தனுக்கு அறிவுறுத்தும் பாங்கில் அமைந்துள்ளன. கடலுள் மாய்ந்த இளம் பெரு வழுதி (புறம்: 182) பாடும்போது, இவ்வுலகம் நிலைபெற்று வாழ்தல் என்பது சுயநலப்போக்கு விஞ்சிப்போன சமுதாயத்தில் கூட சிலரேனும் “தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கு என முயலுநர் இருப்பதனால்தான்’ என்று கூறுவதும், மோசிகீரனார் பாடியபாடலில் மன்னன் மக்களுக்கு உயிராக மதிக்கப்படும்போது இத்தனை மக்களுக்கும் தான்உயிர் என்று நினைத்து அற வழியில் ஆட்சி செய்ய வேண்டும் (புறம்: 186) என்று கூறப்படும் செய்தி அறியத்தக்கது.

எவ்வளவு செல்வம் சேர்த்தும், அதிகாரம் இருந்தும், நாடுகளையெல்லாம் தன் ஒரு குடைக் கீழ்க்கொண்டுவந்துள்ள வேந்தனுக்கும் அத்தகைய தன்மையன்றி ஒவ்வொருநாள் உணவிற்காகக் காட்டில் இரவும்பகலும் ஓடித்திரியும் ஒருவனுக்கும்,

“உண்பது நாழி, உடுப்பவை இரண்டே

பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே

செல்வத்துப்பயனே ஈதல்

துய்ப்பேம் எனினே தப்புநபலவே”

என்ற நக்கீரரின் கூற்றும் அறநெறியை அடிப்படையாகக் கொண்டதாகும்.

சமூகத்தில் பிறப்பும் இறப்பும், புணர்தலும் பிரிதலும் என இருவகைப்பட்ட முரண்காட்சிகள் நடந்த வண்ணம் இருக்கும். ஆயினும் வாழ்க்கையைப் பற்றற்ற நிலையில் வெளியிலிருந்து அதன் போக்குகளைக் கவனிக்கத் தெரிந்தவர்களுக்கு அது அச்சுறுத்தாததாக இருக்கும் எனப் பக்குடுக்கை நன்கணியார் குறிப்பிடுகிறார்.

முடிவுரை:-

தமிழ்ச் சமூகம் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த தன்மையையும் நால்வகை நிலப்பரப்பில் இனக்குழுவாக வாழ்ந்த சூழலையும் தொடக்ககால இலக்கியங்களான சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இனக்குழுச்சமூக எச்சங்களையும் சீறூர், குறுநில, அரச, மன்னர், வேந்தர்களின் ஆளுகைக்கு உட்பட்ட சூழலில் இருந்த மக்களின் வாழ்க்கை நெறிமுறைகளையும் தமது அனுபவ வெளிப்பாடுகளையும் அறம் என்ற பெயரால் பதிந்துள்ளனர். இதன் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு உற்பத்தி உறவுகளை நெறிப்படுத்திக்கொண்டு அமைதி யான வாழ்க்கை வாழ்ந்தனர். இதில் பகிர்ந்துண்ணல் எனப்படும் கூட்டுண்ணுதல், விருந்தோம்பல், கொடை, கண்ணோட்டம் (கருணை) போன்ற செயல்பாடுகள் தமிழர்தம் அறம் என்ற கருத்தாக்கம் உருவாக அடிப்படையாக இருந்தன. ஆளும் வர்க்கம் உருவான காலத்தில் அறக் கருத்தாக்கங்கள் ஆளுவோரையும் ஆளப்படுவோரையும் நெறிப்படுத்தின. வரம்பு மீறிய அதிகாரம் செலுத்தும்போது எச்சரிக்கை செய்ய அறங்கள் துணைநின்றன. எப்போதுமே அதிகாரத்தின் பிரதிநிதியாக அறம் இருக்கும் என்பதற்கு மாற்றாக அறத்தின் அடிப்படையில் அதிகாரம் அமைதல் வேண்டும் என்ற நிலைப்பாடு இருந்தது. ஆகவே தான் தமிழ்ச்சமூகம் அறவழியில் இன்றும் நிலைபெற்றுள்ளது என்றால் அதற்கான அடிப்படையைச் சங்க இலக்கியங்கள் ஆழமாகப் பதிவு செய்துள்ளன என்பதை அறிய முடிகிறது. அவற்றுக்கு முன்னர் அனுபவ மொழிதலாக, மூதுரை, பழமொழி, முதுமொழி, வாயுரை வாழ்த்து, செவியறிவுறூஉ முதலியன இடம் பெற்றுள்ளன. இதன் அமைப்பை இக்கட்டுரை வெளிப்படுத்த முயன்றுள்ளது.

துணை நூற்பட்டியல்

1.    அம்மன்கிளி முருகதாஸ்: சங்கக் கவிதையாக்கம் மரபும் மாற்றமும். குமரன், 2006, சென்னை.

2.    செல்வராசு. சிலம்பு நா. சங்க இலக்கிய மறு வாசிப்பு காவ்யா; 2005; சென்னை

3.    திருநாவுக்கரசு.க.த: திருக்குறள் நீதிஇலக்கியம்; சென்னைப்பல்கலைக்கழகம், 1977, சென்னை.

4.    மாதையன்.பெ; சங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும்; பாவை; 2004; சென்னை.

5.    மாதையன்.பெ; தமிழ்ச்செவ்வியல் படைப்புகள்; NCBH; 2009; சென்னை;

6.    வானமாமலை.நா.தமிழர் பண்பாடும் தத்துவமும்; அலைகள்; 2008; சென்னை.

7.    வித்தியானந்தன். சு; தமிழர்சால்பு; பாரி; 1971; சென்னை

8.    ராஜ்கௌதமன்; பாட்டும் தொகையும், தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும்; தமிழினி; 2006; சென்னை

9.    Sarangapani.R. A Critical study of Ethical Literature in Tamil; Annamalai University 1982; Chithambaram..

10.   செ.இலக்குமணசாமி; திருக்குறளும் சங்க இலக்கியங்களும் (கட்டுரை)

11. திருக்குறட்சிந்தனைகள், தமிழ்த்துறை ஆசிரியர்கள் (தொகுப்பு), அண்ணாமலைப் பல்கலைக்கழகம்; 1979; சிதம்பரம்.

Pin It