தமிழ்நாட்டின் பதிப்புத் துறையில் ஈரோட்டிற்கென்று ஒரு தனியிடம் உண்டு. ஆம், தமிழர்களின் - தமிழ்நாட்டின் சமூக அரசியல் தளங்களில் ஆழமாகவும், அகலமாகவும் உழுது பதிந்த ‘குடி அரசு’ தந்தை பெரியாரால் ஈரோட்டில் தான் விதைக்கப்பட்டது. ‘குடிஅரசை’ ஒழிக்கச் செய்த முயற்சியால் ‘புரட்சி’யும், ‘ரிவோல்ட்’ம் அங்கிருந்துதான் புறப்பட்டது.

பெரியாரின் பேச்சுக்களையும், எழுத்துக்களையும் பல்வேறு பதிப்பகங்கள் பதிவு செய்திருப்பினும் அவற்றுள் திராவிடன் பதிப்பகம், பகுத்தறிவு வெளியீடு, உண்மை விளக்கப் பதிப்பகம், பெரியார் தன்மானப் பிரச்சார நிலையத்தார், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் போன்றவைகள் சென்னையிலிருந்தும், திருச்சியிலிருந்தும் வெளியிட்டிருப்பினும் ஈரோட்டிலிருந்து குடிஅரசு பதிப்பகம், தமிழன் அச்சகம், பகுத்தறிவு நூற் பதிப்புக் கழகம் லிமிட்டெட் ஆகியவற்றை முதன்மையானதாகச் சொல்லலாம்.

rational_book_publishing

அதிலும் குறிப்பாக ஈரோடு, பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட் சிறப்பிற்குரியது. இந்தியத் துணைக் கண்டத்தில் ‘முதன்முறையாக’ என்றுகூடச் சொல்லலாம். ஆம், 1933 களில் பொதுமக்களிடமிருந்து பங்குத்தொகை பெறப்பட்டு அவர்களைப் பங்குதாரர்களாக்கி நடத்தப் பட்ட நிறுவனம் இதுதான். (வேறு இருப்பின் தோழர்கள் பதிவு செய்யலாம்.) இந்திய விடுதலைக்குப் பின் கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் இவ்வாறான பதிப்பகங்கள் செயல் பட்ட பதிவுகள் உண்டு. ஆனால் இதற்கும் தந்தை பெரியார் தான் முன்னோடி.

சாத்தான்குளம் அ.இராகவன் அவர்களை காரிய தரிசியாகக்கொண்டு, “குடிஅரசில் ஏற்கனவே அறிவித் திருந்தபடி நாடெங்கும் மூடநம்பிக்கையையோட்டிப் பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பும் நோக்கத்துடன் ஆங்கிலம், தமிழ் முதலிய பலமொழிகளின் மூலமாய்ப் பத்திரிகைகள், நூற்கள் முதலியன வெளிப்படுத்தியும், மொழிபெயர்ப்பு நூற்கள் பல வெளியிட விரும்பியும் பகுத்தறிவு இயக்கத்தை ஆதரிக்கும் தோழர்களை டைரக்டர்களாகக்கொண்டு பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் 13-12-1931-இல் லிமிட்டெட் கம்பெனியாக ரிஜிஸ்டர் செய்யப்பட்டு...” (குடிஅரசு 08-01-1933).

20-1-1933, தோழர் வி.வி.சி.ஆர்.முருகேசமுதலியார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற, பகுத்தறிவு நூற் பதிப்புக் கழகம் லிமிட்டெட் திறப்பு விழாவில் தோழர்கள் டி.எம்.நரசிம்மாச்சாரி, பி.ஏ.பி.எல்; எஸ்.மீனாட்சிசுந்தரம் பி.ஏ.எல்.டி; கேசவலால்; ஈ.வெ.ராமசாமி ஆகியோர்கள் ‘பகுத்தறிவு’ என்பது பற்றிப் பேசினார்கள். (குடி அரசு 22-1-1933). இது ஏன் துவக்கப்பட்டது என்பது குறித்து ‘சந்தேக நிவர்த்தி’ என்று 12-2-1933 குடிஅரசில் எழுதுகின்றார்.

periyar_book_837

“பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் என்பதாக ஒரு கம்பெனியை பங்கு ஒன்றுக்கு 10ரூ வீதம் 3000 பங்குகள் கொண்ட 30000ரூ மூலதனத்துடன் லிமிட்டெட் கம்பெனி யாக நடத்த ஏற்பாடு செய்து துவக்கவிழாவும் செய்தாகி விட்டது. இதுவரை 250 பங்குதாரர்கள் வரை சேர்ந்து இருக்கிறார்கள். இக்கழகத்திற்கு தோழர் அ.ராகவன் அவர்கள் நிரந்தர அதாவது ஆயுள் காரியதரிசியாய் இருக்கிறார். கழகத்தின் முக்கிய நோக்கம் பகுத்தறிவு வளர்ச்சியை ஆதாரமாகக் கொண்ட ஆதாரங்கள், புத்தகங்கள் வெளியிடுவதே ஆகும். இந்தப் படியாக ஒரு தனி ஸ்தாபனமாய் அதாவது சுயமரியாதை இயக்கத்துடன் பிணைந்ததாய் இல்லாமல் தனித்து நின்று நடைபெறத் தக்கதாய் நடத்தப்பட என்ன அவசியம் என்று வினவலாம். இவ்வினாவுக்கு விடை தோழர் அ.ராகவனால் சுமார் 4, 5 மாதங்களுக்கு முன்னதாகவே குடிஅரசு பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கின்றது. என்றாலும், இப்போதும் சில தோழர்களுக்கு இது விஷயத்தை அறிய ஆவல் இருப்ப தாய்க் காணப்படுகிறது........ .......அதாவது சுயமரியாதை இயக்கமும், அது சம்பந்தமாய் நடைபெறும் பிரச்சாரமும், வெளியிடப்படும் பிரசுரங்களும் இது சமயம் பலருக்கு அரசியல் சம்பந்தமுடையதாகக் காணப்படுகின்றதுடன், அரசியல் அடக்குமுறைக்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆதலால் அவ்வித சந்தேகமும் பயமும் இல்லாமல் இருப்பதற்கு அதாவது பகுத்தறிவு விளக்கம் என்பது யாவருக்கும் பொதுவானது என்பதோடு, மக்களுக்குப் பகுத்தறிவை ஏற்படுத்த யாவரும் பிரவேசித்துத் தங்களால் கூடிய உதவி செய்வதற்குத் தகுதியுடையதாயும், அரசாங்க அதிருப்திக்கு ஆளாகாததாயும் இருக்கக்கூடியதான ஒரு தனிப்பட்ட ஸ்தாபனம் இருக்குமானால் அது என்றும் நிலைத்திருக்கக் கூடும் என்கிற எண்ணத்தின் மீதும்...

................அரசியல் சம்பந்தத்திலிருந்து பூரணமாய்ப் பிரிந்து நிற்பதற்கும், லாப, நஷ்டப் பொறுப்பு வரையறுப்பதற்கும் ஆகவே இக்கழகம் ஏற்பாடு செய்யப்பட்டு ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கின்றது என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம் என்ற விளக்கத்துடன் துவக்கப்பட்ட இக்கழகத்தின் முதல் வெளியீடுதான், தந்தை பெரியார் அவர்களின் அரிய படைப்பான, “பெண் ஏன் அடிமையானாள்?” ஆகும். தோழர் அ.இராகவன் அவர்கள் உள் நாட்டிலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் பயணம் மேற்கொண்டு பங்குதாரர் களைச் சேர்ப்பதுடன், லண்டன் பகுத்தறிவுக் கழகத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு ரஸ்ஸல், இங்கர்சால், லெனின், ஜின் மெஸ்லியர், வால்டையர் போன்றவர்களின் படைப்பு களை, தந்தை ஈ.வெ.ரா, தோழர்கள் எஸ்.இராமநாதன், ப.ஜீவானந்தம், மா.சிங்காரவேலு, குத்தூசி குருசாமி போன்ற பலரின் மொழிபெயர்ப்பில் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கியுள்ளார்.

தோழர் மா.சிங்காரவேலரின், “மெய்ஞ்ஞான முறையும் - மூடநம்பிக்கையும்” போன்ற படைப்புகளையும் பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது. எண்ணற்ற அரிய மொழிபெயர்ப்பு நூல்களைப் பதிப்பித்த இக்கழகம் தொடர்ந்து செயல்படவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

Pin It