“பிறப்பும் இறப்பும் இயற்கையே; மனிதன் ஏன் பிறக்கிறான் என்று யாராவது கூற முடியுமா? பிறந்து எதற்காக வாழ்கிறான்; எதற்காக இறந்து போகிறான் என்று யார் கூற முடியும்? இதைக் கேட்டால் அது கடவுள் செயல்; கடவுள் பிறப்பிக்கிறார்; கடவுள் காப்பாற்றுகிறார்; சாகடிக்கிறார் என்று தான் கூற முடியுமே தவிர வேறு சரியான காரணம் கூற முடியுமா? அவன் எந்தக் குறிப்பிட்ட இலட்சியத்தின் மீது தனக்குப் பிள்ளை வேண்டுமென்று பிள்ளையைப் பெறுகிறான் என்றால், எதற்காகப் பிள்ளை வேண்டும் என்பதைக் கூற முடியுமா?
அவனைக் கேட்டால் கூடத் தெரியாது. குழந்தையை அடைந்ததும் அதை ஏன் காப்பாற்ற வேண்டும்; அதற்கு ஏன் கல்வி புகட்ட வேண்டும் என்ற இலட்சியத்தைக் கூற முடியாது. ஏதோ தம் பிள்ளை படிக்க வேண்டும் என்பார்களே தவிர, எதற்காகக் கல்வி கற்க வேண்டும் என்றே தெரியாது... இவ்விதமே எல்லாம் ஒரு இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டிராமல் இருக்கின்றன.
வாழ்க்கை என்ற ஏணிப்படியில் கால் வைக்கும்போது நாம் எங்கே ஏறுகிறோம்; கடைசியாக எங்கே போவோம் என அறியக்கூடவில்லை. நாம் ஏறி முடிந்தால் போதும் என்பதைக் கொண்டிராமல், ஒவ்வொரு படியாக ஏறிக் கொண்டே போக வேண்டும்; அதைப் பிடித்தவுடன் அதற்கு மேல் என்ன தெரிகிறதோ, அதைப் பிடிக்க வேண்டும் என்று எல்லையே இல்லாமல் இலட்சியமற்ற முறையிலேயே காலத்தைக் கடத்துகிறோம். இறுதியில் காலம் முடிவடைந்து இறந்து போகிறோம். இப்பேர்ப்பட்ட வாழ்க்கையில் ஒருவிதப் பலனும் கிடையாது.”
- பெரியார்