“சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே

சாத்திரச் சந்தடிகளிலே

கோத்திரச் சண்டையிலே ஆதியிலே

அபிமானித்தலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணே நீர்

அழிதல் அழகலவே"

ஜாதி,மத,சமய,சாஸ்திர,கோத்திர சண்டையில் ஈடுபட்டு அலைந்து வீணாக அழிவது அழகல்ல என்றார் வள்ளலார்.

“நால் வருணம் ஆசிரமம்

ஆசாரம் முதலாநவின்ற

கலைச்சரிதம் எலாம் பிள்ளை விளையாட்டே."

வருணம், ஆசிரமம், ஆச்சாரம் இவைகள் சொல்லுவது சிறுபிள்ளைத்தனமானது என்று சாடினார் வள்ளலார்.

“வேதநெறி ஆகமத்தின் நெறி

புராணங்கள் விளம்புநெறி

இதிகாசம் விதித்தநெறி முழுவதும்

ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி

உள்ளதனை உள்ளபடி உணர உணர்த்தினையே!”

வேதம், ஆகமம், புராண, இதிகாசம் இவைகள் சொல்கிற நெறிகள் அனைத்தும் சூது என உணர வைத்தாயே! எனப் பாடினார்

சங்கராச்சாரியார் “சமற்கிருதம் மாத்ரு பாஷா’’ (தாய் மொழி)எனக் குறிப்பிட்ட போது “தமிழ் பித்ரு பாஷா’’ (தந்தை மொழி) என்றுரைத்தவர் வள்ளலார்.

“நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அந்த லட்சியம் எப்படிப் போய்விட்டது பார்த்தீர்களா! அப்படி லட்சியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் பாடியிருக்கிற திருவருட்பாவில் அடங்கியிருந்த பாடலையும், மற்றவர்கள் பாடலையும் சபைக்குக் கொண்டு வந்தால் அவைகளே சாட்சி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது" என்று பின்னாளில் குறிப்பிட்டவர் வள்ளலார்.

பெண்களுக்குக் கல்வி கொடுக்க வேண்டும் என்றார். கணவர் இறந்தால் பெண்கள் தாலி அறுக்க வேண்டும் என்ற சடங்கை எதிர்த்தவர் வள்ளலார். விதவை மறுமணத்தை ஆதரித்தார். தாழ்த்தப்பட்டவர்களைக் கோயில்களில் அனுமதிக்க மறுத்தபோது அனைவரும் கடவுளை வழிபடும் வகையில் சத்ய ஞான சபைகளை உருவாக்கியவர் வள்ளலார்.

இப்படி பல சீர்திருத்தக் கருத்துகளை வெளிப்படுத்தியவர் என்பதால்தான் பெரியாருக்கு வள்ளலார் மீது ஒரு மரியாதை ஏற்பட்டது. வள்ளலாரின் ஆறாம் திருமுறையைத் தனது குடிஅரசு பதிப்பகத்திலேயே வெளியிட்டு குறைந்த விலையில் மக்களிடம் கொண்டு சேர்த்தார் பெரியார்!

- கி.தளபதிராஜ்

Pin It