முனைவர் வே கட்டளை கைலாசம் அவர்கள் தமிழர் எழுத்துக்கள் குறித்த அரிய செய்திகளை கதைசொல்லி மூலமாகத் தெரிவித்திருந்தார். மிக அருமையான அந்தக் கட்டுரையைப் படித்தபோது நான் படித்த வேறு சில தகவல்கள் நினைவிற்கு வந்தது. எழுத்து மொழி குறித்த அந்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இக்கட்டுரையை எழுதி இருக்கிறேன்.

குகைகளில் வாழ்ந்த மனிதன் தான் பார்த்து பயந்த, அல்லது தான் பார்த்து ரசித்த சில காட்சிகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்பினான். அதற்கு உண்டான மொழி அவனிடம் இல்லை. எனவே அவன்; வசித்த குகையின் சுவர்களில் வெண்மை, சிவப்பு நிறமுடைய கற்களைக்கொண்டு தான் நினைத்ததை ஏதோ ஒரு வகையில் ஓவியமாக வரைந்தான்.

இவ்வாறு தனது உள்ளக் கருத்தை வெளிப்படுத்தியதில் அவனுக்கு மகிழ்ச்சியும், மனநிறைவும் ஏற்பட்டன. இதேநேரத்தில் அவை பிறருக்கு செய்திகளையும் அறிவித்தன. ஒரு வட்டம் வரைந்து அதில் இருந்து கீழே ஒரு கோடு இழுத்து, கைகளையும் கால்களையும் வரைந்தபோது மனிதனின் உருவம் கிடைத்தது. அதற்கு அருகில் தான் பார்த்து பயந்த விலங்கின் உருவத்தையும் வரைந்தபோது, அதுவே எச்சரிக்கை விடுக்கும் அபாய அறிவிப்பாக மாறியது.

இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் தான் செய்த போரினையும், விலங்கினைக் கொன்ற தீரத்தையும் வெண்மை, பழுப்பு நிற )ங்கற்களால் குகைச்சுவர்களில் ஈட்டி , மிருகங்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் நெருக்கமாக வரைவதன் மூலமாக வெளிப்படுத்தினான். தனது வேட்டையாடும் திறத்தை, அதில் பெற்ற வெற்றியை சித்;திரங்களாக எழுதினான்.

பண்டைய எகிப்து மன்னர்கள் தங்கள் பட எழுத்துக்களை கல்லறைகளில் செதுக்கி வைத்தனர். மொகஞ்சோதாராவில் தமிழர்களின் பட எழுத்து வடிவங்கள் கிடைத்துள்ளன. யாப்பருங்கல விருத்தி என்ற நூலில் தமிழுக்குப் பட எழுத்துக்கள் இருந்தது என்பது குறிககப்பட்டுள்ளது. சீனர்களுக்கும், அமெரிக்காவில் அஸ்டெக் இன மக்களுக்கும் இவ்வகையான பட எழுத்துக்கள் இருந்தன.

கேட்பது என்ற செயலை விளக்க ஒரு கதவும் அதில் ஒரு காதும் வரையப்பட்டது. இருகை கோத்த படம் நட்பினை உணர்த்தும். அமெரிக்காவின் பழங்குடி மக்கள் சிவப்பிந்தியர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் வேட்டையாடிய விலங்குகளையும், மீன்களையும் மரத்துண்டுகளில் கூர்மையான ஆயுதங்களினால் செதுக்கி வைத்து, பிறருக்கு அறிவித்துள்ளனர். இவைகள் குகைச் சித்திரங்கள் , குகை ஓவியங்கள் என்றும் குறிக்கப்பட்டன.

இதுபோன்ற குகைச் சித்திரங்கள் தமிழ்நாட்டில் செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள மலையிலும், மதுரை மாவட்ட சிறுமலையிலும் கிடைத்துள்ளன. குகைச் சித்திரங்களை எழுதி வைத்த மக்களின் காலம் மறைந்த பிறகு, அடுத்து வந்த பரம்பரைக்கு அந்த சித்திரங்கள் உணர்த்தும் தகவல்களை அறிந்து கொள்ள முடியாதநிலை ஏற்பட்டது. ஆனாலும் அவர்கள் அந்த சித்திரங்களை அடிப்படையாக வைத்து அடையாள வடிவங்களை ஏற்டுத்திக் கொண்டனர். இப்படி உருவானவை தான் சித்திர எழுத்துக்கள். அந்த மக்கள் தாங்கள் பேசிவந்த மொழிக்குறிய அடையாளங்களை சித்திரங்களின் மூலமாக உருவாக்கிக் கொண்டனர். வட இந்தியாவில் சிந்து நதிப்பள்ளத்தாக்கின் நெடுகிலும், புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் அகழ்ந்து கண்டுபிடித்தவை மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகங்கள். அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் பழங்காலப் பாண்டங்களோடு, சித்திர எழுத்துக்களோடு கூடிய முத்திரைகளும், பிற சின்னங்களும் கிடைத்திருக்கின்றன. அவைகள் அந்தக் காலத்தில் அங்கு வாழ்ந்த திராவிட மக்களின் பட எழுத்துக்களே என்று கூறப்படுகின்றன.

பழந்தமிழ் நாடு தற்போதைய குமரி முனையுடன் முடிந்துவிடவில்லை. அது இந்தியப்பெருங்கடலில் நீண்டு சென்று நிலப்பகுதியாக இருந்தது. அதை குமரிநாடு என்றும் குமரிக்கண்டம் என்றும் லெமுரியா என்றும் அழைத்தனர். இந்த நாட்டிற்கு தெற்கு எல்லையாக பஃறுளி ஆறும், வடக்கே குமரி மலையும், குமரி ஆறும் இருந்தன. ஒரு காலத்தில் தோன்றிய கடல்கோளினால் இந்த நிலப்;பகுதி அழிந்தது. பஃறுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள என்று இந்த நிகழ்ச்சியை சிலப்பதிகாரம் குறித்து வைத்துள்ளது. இந்தக் கடல்கோள் ஏற்பட்டு அந்த நிலப்பகுதி அழிவதற்கு முன்னால் அங்கு வாழ்ந்த மக்கள் தமிழ் மொழியில் புலமை பெற்று திருத்தமான மொழியை பேசியுள்ளனர். பல புலவர்கள் அருந்தமிழ்பாடல்களை பாடியுள்ளனர். இந்தப் பாடல்கள் தமிழ்நாட்டில் அக்காலத்தில் வழக்கத்தில் இருந்த வரிவடிவ தமிழ் எழுத்துக்களைக் கொண்டு பனையோலைகளில் இலக்கண அமைதிபெற்ற சொற்களால் எழுதப்பட்டுள்ளன. சங்கங்கள் நிறுவி தமிழ் மொழியில் சிறந்த புலவர்களைக் கொண்டு பல நூல்களை இயற்றி தமிழை வளர்த்துள்ளனர்.

கடைச்சங்கம் என்பது வையை ஆற்றங்கரையில் மதுரையில் நிகழ்ந்துள்ளது. சங்கப்புலவர்கள் பல நூல்களை எழுதியுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய எழுத்து, தமது முன்னோர் குமரிக்கண்டத்தில் பயன்படுத்திய எழுத்தாகத்தானே இருக்க வேண்டும். தமிழ்மொழியின் தொன்மையான எழுத்து வட்டெழுத்து என்று அழைக்கப்படுகிறது. வளைந்த கோடுகளால் அதன் எழுத்துக்கள் அமைந்திருப்பதால் அவை வட்டெழுத்துக்கள் எனப்பட்டன. இந்த எழுத்துக்களை கி பி இரண்டாம் நூற்றாண்டில் கண்ணெழுத்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

வட்டெழுத்து கி பி இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டில் தென்னிந்திய பிராமி எழுத்துக்களோடு கலந்த நிலையில் தர்மபுரி மாவட்ட நடுகற்களில் கிடைத்துள்ளன. தருமபுரி செப்பேடுகள், பாண்டியநாட்டு கல்வெட்டுக்கள், செப்பேட்டு சாசனங்கள், ஆகியவற்றில் தமிழ் வட்டெழுத்துக்கள் வரிகள்இட்டு வரிசை முறையில் மிக அழகாக வெட்டப்பட்டுள்ளன. சேரநாட்டின் தொன்மையான எழுத்துமுறை வட்டெழுத்து முறையாகவே இருந்திருக்கிறது.

வட்டெழுத்து கல்வெட்டுக்கள் இமயலைச் சாரலில் உள்ள குகையிலும் கிடைத்துள்ளன. தொல்காப்பியம், மதுரைக்காஞ்சி, திருக்குறள், போன்ற சங்க நூல்களும், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களும் தமிழ் வட்டெழுத்தில் தான் எழுதப்பட்டன. கி மு மூன்றாம் நூற்றாண்டில் அசோக சக்கரவர்த்தி பௌத்த மதத்தை பரப்ப புத்த பிக்குகளை நாடெங்கும் அனுப்பி வைத்தார். இவரது பாட்டனான சந்திர குப்த மௌரியரின் ஆட்சி காலத்தில் சமண சமயம் தென்னிந்தியாவிலும், தமிழகத்திலும் பரவியது. இந்த இரு மதங்களையும் பரப்பியவர்கள் அந்த மதத்தின் துறவிகளே.

பௌத்த மதத்தின் தேரர்களும், சமண சமய முனிவர்களும் ஊர்களிலும், நகரங்களிலும் போய் தங்கள் மதங்களை பரப்பினர். தென்னிந்தியாவிலும், தமிழகத்திலும் தங்கள் மதத்தைப் பரப்பவந்த பௌத்த பிக்குகள் பிராமி எழுத்தையும் பரப்பினர். இதற்கு காரணம் அவர்கள் கொண்டு வந்த புத்தமத நூல்கள் பிராகிருத மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் அவைகள் பிராமி எழுத்துக்களினால் எழுதப்பட்டிருந்தன. இக்காலத்தில் நாம் வெங்கடேச சுப்ரபாதத்தை படிக்கிறோம். அது சமஸ்கிருத ஸ்லோகம் ஆனால் அதை தமிழில் அச்சடித்து அல்லவா நாம் படித்து வருகிறோம். அதைப்போலவே பிராகிருத மொழி இலக்கியங்களை அவர்கள் பிராமி எழுத்துக்களின் உதவியோடு எழுதிப் படித்தனர். இவ்வாறு பௌத்த சமண சமயங்களின் ஊடுருவலின் காரணமாக பிராமி எழுத்தும் தமிழகத்தில் காலூன்றியது.

அவர்கள் வருவதற்கு முன்னால் தமிழகத்தில் ஒருவகையான எழுத்து பழக்கத்தில் இருந்தது. புதிதாக வந்த பிராமி எழுத்து பரவுவதற்கு சில காலம் பிடித்தது. காலப்போக்கில் தமிழ் எழுத்துக்கள் மறைந்து போக பிராமி எழுத்துக்கள் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டன என்கிறார் மயிலை சீனி வேங்கடசாமி நாட்டார். இதற்கு மறுப்புக்கருத்துக்கள் உண்டு.

தமிழகத்தின் தொன்மையான எழுத்துக்கள் என்று கல்வெட்டுத் துறையினாரால் குறிக்கப்படும் எழுத்துக்கள் அசோகமன்னரின் காலத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு எழுத்துக்களே ஆகும். இந்த எழுத்துக்கள் அசோகர் காலத்து பிராமி எழுத்துக்களில் இருந்து தமிழ் மொழி வழக்கத்திற்கு ஏற்றவாறு சிலமாறுதல்களை கொண்டு தோன்றிய பிராமி எழுத்துக்களே ஆகும். இவற்றை சில அறிஞர்கள் தென்னகத்தின் பிராமி எழுத்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். இவை தமிழி எழுத்துக்கள் என்றும் அழைக்கப்பட்டன. இவையே தமிழின் பழங்கால வரிவடிவம் ஆகும் என்பது சில அறிஞர்களின் கருத்து, ஆனால் இந்தக் கருத்தை டாக்டர் முவ அவர்கள் மறுக்கிறார்.

பழங்காலத்தில் இந்தியாவில் பற்பல எழுத்து முறைகள் வழக்கத்தில் இருந்தன. பண்ணாவணா சூத்ரம் என்ற நூல் கி மு 168 ஆம் ஆண்டில் எழுதப்பட்டதாக தெரிகிறது. அக்காலத்தில் பதினெட்டு வகையான லிபிகள் வழங்கியதை இந்த ஜைன நூல்; குறிப்பிடுகிறது. பழந்தமிழரின் எழுத்து முறை, வடநாட்டு எழுத்துக்களை ஒட்டி அமைக்கப்பட்டதாகவும், அங்கிருந்து கடன் வாங்கப்பட்டதாகவும் சில மொழிநூல் அறிஞர்கள் கருதுகின்றனர். இவ்வாறு இருந்தால் அந்த மொழிகளை அவர்கள் கணக்கிலேயே சேர்த்திருக்கமாட்டார்கள். ஆனால் பிராமி, சுரோஷ்டி, யவனானி முதலிய எழுத்துக்களைப்போல த்ராவிடி என்ற தனியான எழுத்துமுறை ஒன்று இருந்ததாக அந்த நூல்கள் தெரிவிக்கின்றன. அந்த திராவிடி எழுத்து முறைக்கு டாமிலி என்ற பெயர் இருந்ததாகவும் அறியமுடிகிறது. பழந்தமிழ் எழுத்து முறையையே இவ்வாறு தமிழ் என்பதன் திரிந்த வடிவங்களாகிய டாமிலி, த்ராவிடி என்ற சொற்களால் உணர்த்தி இருக்கின்றனர் என்று டாக்டர் மு வ கருதுகிறார். வட்டெழுத்துக்கள் தமிழரே தமது முயற்சியினால் கண்டெடுத்த எழுத்து முறையாகும் என்று கல்வெட்டு அறிஞர் டாக்டர் இராசமாணிக்கனார் என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

இதன் பிறகு தமிழ் நூல்கள் பிராமி எழுத்தில் எழுதப்பட்டன. இந்த எழுத்து கி மு மூன்றாம் நூற்றாண்டு முதல்,; கி பி மூன்றாம் நூற்றாண்டு வரையில் வழங்கி வந்ததாகத் தெரிகிறது. இதன் பிறகு தான் பிராமி எழுத்து வரிவடிவத்தில் மாறுதல் ஏற்படத் தொடங்கியது. இது வே பிற்காலத்தில் வட்டெழுத்து முறையாக மாற்றம் கண்டது. கி பி இரண்டாம் நூற்றாண்டு முதல், கி பி பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையில் வட்டெழுத்து முறையே தமிழகத்தில் ஆட்சி செய்துள்ளது என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்.

வட்டெழுத்துக்கள் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு மாறுதல் பெற்று தெளிதமிழ் எழுத்துக்களாக வளர்ச்சி பெற்றது. வட்டெழுத்துக்கள் பிராமி எழுத்தில் இருந்து வந்தவை அல்ல என்றும் இந்தியாவில் ஆரியர்கள் குடியேறி தங்கள் நாகரிகத்தைப் பரப்புவதற்கு முன்னரே வட்டெழுத்துக்கள் வழக்கத்தில் இருந்தன என்றும் டாக்டர் பர்னெல் என்பவர் கருதுகிறார். பிராமி எழுத்துக்களினால் எழுதப்பட்ட அசோகர் காலத்து கல்வெட்டுக்கள் தோன்றுவதற்கு முன்னாலேயே வட்டெழுத்துக்கள் வழங்கப்பட்டன என்று வரலாற்று அறிஞர் இராமச்சந்திர தீட்சதர் தெரிவித்துள்ளார். தொடக்க காலத்தில் இருந்து இன்று வரையில் தமழிர்கள் நான்கு வகையான எழுத்துக்களை எழுதி வந்துள்ளனர். சங்க காலத்தில் வழங்கி வந்த பழந்தமிழ் எழுத்து, பிறகு வந்த பிராமி எழுத்து, பிராமியில் இருந்து மாற்றம் அடைந்து வளர்ந்த வட்டெழுத்து, தற்காலச் சோழர் எழுத்தான தெளிதமிழ் எழுத்து என்பன அந்த நான்கு வகை எழுத்துக்கள்.

சோழநாட்டில் வட்டெழுத்து கல்வெட்டுக்கள் கிடைக்கவில்லை. தென்னிந்திய பிராமி எழுத்துக்களான தமிழ்க் கல்வெட்டுக்களும் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் என்ன ? சோழநாட்டில் சங்ககாலம் முதலாக தமிழ் எழுத்தின் ஒரு பிரிவான எழுத்துமுறை ஒன்று வழக்கத்தில் இருந்து வந்திருக்க வேண்டும். இதன் காரணமாக அவர்களுக்கு பாண்டிய நாட்டில் வளர்ச்சி அடைந்த வட்டெழுத்து முறையோ அல்லது வேறு எழுத்துக்களோ தேவைப்படவில்லை என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே பாண்டிய நாட்டில் திருத்தமான எழுத்துகள் வழங்கி வந்தன. எனவே பாண்டியரின் மிகப் பழமையான கல்வெட்டுச் செய்திகள்; அனைத்தும் வட்டெழுத்துக்களிலேயே பொறிக்கப்பட்டுள்ளன. கி பி மூன்று முதல் ஆறாம் நூற்றாண்டு வரையில் களப்பிரர் ஆட்சியில் பாண்டிய நாடு சிக்கியது. இதன் காரணமாக மொழியின் சிறப்பு சீர்குலைந்தது. சமண மதத்தின் தாக்கத்தினால் அவர்கள் கொண்டு வந்த பிராமி எழுத்துக்களும், சமஸ்கிருதமும் பெருமளவில் பரவியது. எனவே சமணர் வழியில் பிராமிக் கல்வெட்டுக்கள் தோன்றின.

பத்தாம் நூற்றாண்டில் இருந்து சோழநாட்டில் உண்டான கல்வெட்டுக்களில் முதல் ராசராசனுடைய கல்வெட்டுக்களிலேயே தமிழ் எழுத்துக்கள் தெளிவான வடிவங்களில் அமைந்திருக்கின்றன. இவ்வகை எழுத்துக்களை நாம் 12 ஆம் நூற்றாண்டு வரையில் காணமுடிகிறது. 12 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரையில் தமிழ் எழுத்துக் கல்வெட்டுக்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எழுத்துச் சீர்திருத்தம் உருவானதை அறிய முடிகிறது.

பொதுவாக கல்வெட்டு எழுத்துக்களில் மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளியிடுகின்ற வழக்கம் குறைவாகவே காணப்படுகிறது. புள்ளிகளை செதுக்கும் போது கற்கள் சேதமடைந்துவிடும் என்பதே அதற்குக் காரணம். இதனால் புள்ளி இல்லாமலேயே மெய்யெழுத்துக்கள் வெட்டப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு தச்சன் என்ற வார்த்தையை கல்வெட்டில் தசசன என்றே பொறிப்பது வழக்கம.; இடத்திற்கும், வாக்கியத்தின் பொருளுக்கும் ஏற்ப புள்ளியிட்டு நாம் அந்த வார்த்தைகளை படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் சில கல்வெட்டுக்களில் மெய்யெழுத்துக்களின் மேல் புள்ளிகளுக்குப் பதிலாக சிறு வட்டங்களை வெட்டியுள்ளனர்.

பாண்டிய நாட்டில் உள்ள குகை பிராமி எழுத்துக்கள் பிழையாகவும் முறையற்றும் காணப்படுகின்றன. ஆனால் வட்டெழுத்து தமிழ்கல்வெட்டுக்கள் நீண்ட வரிகளை உடையனவாகவும், அழகான எழுத்துக்களைக் கொண்டதாகவும் காணப்படுகின்றன. இந்த வரிகளில் சொற்பிழை, எழுத்துப்பிழை ஆகியன காணப்படவி;ல்லை. ஆகவே இந்த வட்டெழுத்துக்கள் நீண்ட நெடுங்காலமாகவே வழக்கத்தில் இருந்திப்பதை அறியமுடிகிறது. இராசராசன் காலத்தில் தமிழ் எழுத்துக்கள் நல்ல வரிவடிவத்தில் காணப்படுகின்றன. இந்த வகை எழுத்துக்கள் தொடர்ந்து வந்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏடுகளில் சிறிது திருத்தங்களோடு இடம் பெற்று இருக்கின்றன.

இவ்வாறு எழுத்துக்களின் வளர்ச்சி இடம் பெற்று இருப்பதை கல்வெட்டுக்களின் துணையோடு அறிந்து கொள்ள முடிகிறது. அச்சு இயந்திரம் ஏற்பட்ட பிறகு எழுத்துக்கள் மாற்றம் அடைவது, நின்று விட்டது. தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் ஒரே மாதிரியான எழுத்து வடிவங்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. இதன் காரணமாக பேச்சு வழக்கு அந்தப் பகுதிகளில் எப்படி இருந்தபோதிலும் எழுத்துக்கள் மாறுதல் அடையாமல் இருக்கின்றன. இனிமேல் தமிழ் எழுத்துக்களில் மாற்றம் ஏற்பட வழிஇல்லை என்றே நம்பத் தோன்றுகிறது.

- வேணு சீனிவாசன்

Pin It