உறவு

காற்றின் நடமாட்டத்தில் விழித்த போது, சுவரில் நிர்வாணத்தின் நிழல் படிந்திருந்தது. விரிந்த தலை மயிர், சரிந்த மார்பகங்கள், கவிழ்த்த குண்டான் போன்ற அடிவயிறு...... சன்னலின் வழி பாய்ந்திருந்த இயற்கை ஒளியில் பிரித்த கையை பரிசோதித்தவாறிருந்தாள் தாய். எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள், இந்த ராத்திரியில்?

அறையில் சில்லறைக் காசுகளைப் போல் இறைந்து கிடந்தோம் குழந்தைகளாகிய நாங்கள். எனக்கு பதினோரு வயது. நடு இரவில் விழிப்பது வழக்கமல்ல. எனது தம்பிகளும் அப்படியே. ஆனால் அம்மா ஏன் நடு இரவில் விழிக்கிறாள்?

படுக்கப் பாயில்லாததோ, தலைக்கு வைத்துக் கொள்ள கந்தல் மூட்டையில்லாததோ எங்கள் தூக்கம் கெட்டுப் போக எப்போதும் காரணமாக இருந்ததில்லை. சாப்பிடும்போது சாமியாடுவான் எனது கடைசித் தம்பி. காலையில் எழுந்து நான் சாப்பிடவேயில்லை என்று வாதிட்டு, பல் விளக்காமலேயே சாப்பாட்டுத் தட்டை ஏந்திவிடுவான். அவனா இரவில் விழிக்கப் போகிறான்? அவன் நாள் முழுவதும் ஏறாத மரங்களே இல்லை. நரம்பு போலிருந்த அவன் சிறுகிளையில் கூட அணிற்பிள்ளைபோல் தொற்றிக் கொள்வான். அவன் பல்லில் வைத்து பரிசோதிக்காத எந்தப் புல் பூண்டும் அந்தப் பிரதேசத்திலேயே இல்லை. கணுக்கால்களில் தாவர மிளார்களின் வெள்ளைச் சித்திரங்கள் நூலிழைகள் தொங்கும் பழைய அரைக்கால் டவுசரில் புதிதாகப் பிறந்த விஞ்ஞானியைப் போல் சேற்று நிலங்களில் புரண்டு வரும் அவன் அழகும், இறுமாப்பும், அம்மா இழுத்து வைத்து கொஞ்சும் போது வெட்கமாக குழைந்து விடும்.

புதிய பூக்களை அக்காவாகிய எனக்கு அளிப்பதில் எப்போதும் பெருமை கொள்வான். ருசித்துப் பார் என எனக்களித்த புற்கனிகள் பலவற்றை கடிக்காமலே வீசிவிட்டேன் எனப் பாய்வான். நாள் முழுதும் விளையாடும் அவனை காலையில் அடித்துத் துவைத்துத்தான் எழுப்ப வேண்டும். அவனா இரவில் விழிப்பவன்?

ஆட்டுக் காலில் அலைபவன் மற்றொருவன். வெள்ளாடுகள் சூது நிரம்பியவை. சிறு குழந்தைகளை அவை ஏய்த்து விட்டு பங்கும் பங்காளி காட்டில் நுழைந்து அவர்களுக்குள் சண்டை மூட்டிவிடும். அப்போது அந்தக் காடே உற்சாகம் கொள்ளுமளவு உறவுகளைச் சொல்லி வசவுகள் பெருகி நிறையும். சிறுகுழந்தைகளுக்கு சிரிப்பு வரும். சிரிப்புக்கான வசவுகள், கோபம் கொள்ளும்போதும் அவர்கள் வாயிலும் வந்து தொலைக்கின்றன; வசவு வாங்காமல் வெள்ளாடுகளை பத்திரமாக ஒட்டி வருவது ஒரு கலை. என் தம்பி அந்தக் கலையைக் கற்றிருந்தான். ஆடுகளின் பின்னாலேயே அலைவான். சடசடக்கும் சிறு பனைகளிலும், கிளுவைப் புதர்களிலும், நுழைந்து அவற்றை தாட்டி வருவான். ஆச்சா மரங்களின் நிழல்களில் நின்று மயங்குவது அவனுக்குத் தெரியாதது. கடும் வெய்யிலிலும் கருத்த மீன் கெண்டையைப் போல கதிர்வீச்சின் ஒளிவெள்ளத்தில் நீந்திக் கொண்டிருப்பான். வீரன் அவன் என்று அய்யா அவனைப் புகழ்வார்.

எப்போதவது அக்காவாகிய நான் அழும்போது, உன்னை மாதிரி நானும் மரம் ஏறுவேன்னு அடம்புடிச்சே இப்பவாவது ஒத்துக்குறியா நீ பொம்பளப்புள்ளதான்னு என்று என்னைக் கேலி செய்வான். காரமுள் குத்தி பாதம் வீங்கி, எண்ணெயில் பொரித்த உப்பு ஒத்தடம் கொடுக்கும்போது கூட வாய்திறந்து கத்த மாட்டானே; வலிக்கலையாடா என்றால், வலிக்குது, அதுக்குன்னு அழுதா வலி போயிடுமா என்றான். கற்றாழைச் சோற்றை பனைவெல்லத்தில் கலந்து கொடுக்கும்போது குமட்டல் செய்யும் என்னிடம் அல்வா மாதிரி இருக்கு என்று வெடுக் வெடுக்கென்று விழுங்கிக் காண்பிப்பானே அவன்ஙு ஓய்வெடுக்கும் சாரைப் பாம்பு போல அலுங்காது உறங்குகிறான் அவன். அவனா இரவில் விழிப்பது?

என்னைத்தான் படிக்கப் போட்டார்கள். அய்யா, நாள் முழுவதும் உட்கார்ந்த இடத்திலே உட்கார்ந்து அதும் சம்மணங்கோலி உட்கார்ந்து ஆடாது அசையாது ராகம் போடாது மௌனமாக பாடப் புத்தகங்கள் படிப்பதுதான் என்னை இரவில் எழுப்பி விடுகிறதோ? புரியாத வரைபடங்கள் கனவுகளை சிக்கலான பின்னங்களாக்கி தூக்க வலையை அறுக்கிறதோ? அல்லது இந்த நிர்வாணச் சித்திரம் என் கனவுதானோ?

ஆனாலும் கையில் எதையோ வைத்து நெருடிப் பார்க்கும் அவள் என் தாயல்லவா? அம்மா நடந்து வந்து திருவையைச் சுற்றி கையை விட்டுத் துழாவினாள். கதவில்லாத அலமாரிகளில் உள்ள அழுக்குத் துணிகளை எடுத்து ஒவ்வொன்றாக உதறினாள். அங்கிருந்து நடந்து மற்றொரு மூலைக்கு நகர்ந்தாள்.

அய்யா ஏன் அம்மாவோடு உறங்குவதில்லை? பகலெல்லாம் இருவரும் எரிபுரி எரிபுரி என குதறிக் கொள்கிறார்கள் ஏன்? பழைய சோறும் ஊறுகாயும் எடுத்து வைத்தவளை உன் கையால் நான் சாப்பிட மாட்டேன் என்று நைத்து விட்டு ஏன் எழுந்து சென்றார்? திண்ணையில் அய்யா படுத்திருக்கிறாரா? ஆட்டுக்கு காவலாக அய்யா எப்போதும் திண்ணையில்தான் உறங்க வேண்டுமா? அம்மாவின் அடிவயிற்றை வருடிக் கொண்டே படுத்திருப்பது போல் ஏன் அய்யாவை நெருங்க முடிவதில்லை? தம்பியைக் கூட அவர் பக்கத்தில் அண்ட விடுவதில்லை. தனியாகப் படுத்திருக்கும் அய்யாவுக்கு இரவில் விழிப்பு வருமா? வந்தால் என்ன யோசிப்பார்?
அம்மா ஒரு நாள் இரவு கதவைத் தட்டிய போது அது வெளிக் கொண்டியிடப்பட்டிருந்தது. இதெல்லாம் என்ன?
அம்மா என்று கூப்பிட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது

ஆனாலும் என் தாய் என்னதான் என்று அறியும் ஆவலில் நான் அமைதியாக இருந்தேன். ஒரு நாள் இலைகளைப் பறித்து கசக்கி இரண்டு சிறு உருண்டைகளாக்கி எனது மேற்சட்டைக்குள் திணித்ததை அம்மா பார்த்துவிட்டு சிரித்தாள். எனக்கு வெட்கமாகிவிட்டது. ஆகையால் நான் பயத்துடன் மௌனமாகப் பார்த்தவாறிருந்தேன். அவளது வெளுத்த தேகம்இருளைப் பிளந்த ஒளிக்கற்றைகளில் பளபளத்தது. அம்மாவோடு கிணற்றுக்குக் குளிக்கப் போவேன். குதித்து உளைந்து ஆசை தீர நீந்தியதும் அம்மா என்னைச் சீயக்காய் போட்டு குளிப்பாட்டி மேடேற்றி விடுவாள். யாராவது வந்தால் சொல்லும்படி எனக்கு உத்தரவிட்டு கட்டிக்கொண்டு குளித்த துணியைக் கழற்றி கல்லில் கும்முவாள் அப்போதெல்லாம் அம்மாவை நிர்வாணமாகப் பார்த்திருக்கிறேன். நிர்வாணம் மிரட்சி கொள்ள வைப்பதில்லை என்னை.

என் தாய் கடுமையாக உழைப்பாள். கல வரகு எடுத்து நிறுத்தாமல் திருகில் மண்ணும் சாம்பலும் பூசி அரைத்து வீட்டையே உமிக்காடாக்கி விடுவாள். அரைத்த களைப்பு நீங்கு முன்னே மக்கட்டை சோளம் உரலில் குதியாளம் போடும். அவள் கையில் பிடித்த உலக்கையால், வியர்வை பொசிய, தணலில் மேலுள்ள பானையில் இரு கட்டைகளைக் கொண்டு மாவைக் கொட்டி மசிக்கும் போது, அதன் லயம் ஏற்படுத்திய அழகு அவள் உடலில் மலரும். பால் கறப்பது புல்லறுப்பது எல்லாமே நறுவிசாக பதறாது பொறுமையாக செய்வாள். அவள் பாட்டி கொடுத்த அடுக்குப் பானையொன்றை இன்னமும் உடையாது வைத்திருக்கிறாள். சிறு தானிய விதைகள் முடிச்சுக்களாக அந்தப் பானையில் உறங்குகின்றன. அம்மா ஒருமுறை பெரியம்மா பெண் திருவிழாவிற்கு அழைத்தாளென்று பிறந்த ஊருக்குச் சென்றாள். அங்கே அம்மா ஓய்வாக இருக்கட்டும் என்று எந்த வேலையும் செய்யக்கூடாது என்று விட்டாளாம், அம்மாவின் அக்காக்காரி அடுப்புத் தள்ளிவிடுகிறேன் என்று சொன்னதற்குக் கூட முடியாது என்று சொல்லிவிட்டாளாம். ரெண்டு குடம் தண்ணியாவது எடுத்துக்கிட்டு வர்றேன் என்று சொன்னவளை முடியவே முடியாது என்று தடுத்து விட்டாளாம். திருவிழாவை நீயே கொண்டாடு என்று சண்டை பிடித்துக் கொண்டு போன லெக்கில் திரும்பி விட்டாள் அம்மா.

ஆறுமுகம் மாமா ஒரு முறை அம்மாவிடம் நின்று பேசிக் கொண்டிருந்தார். அம்மா மாட்டைப் பிடித்துக் கட்டவும் தொட்டி நீரை கலக்கி விடவும் சாணம் எடுக்கவும் என வேலை செய்து கொண்டே பேசினாளாம். என்ன புள்ள, நின்னு பேசமாட்டங்குற என்ற கேட்ட கொடுமைக்கு நின்னுக்கிட்டு பேசுற நோனிப் பேச்சுல்லாம் வேணாமுன்னுட்டாளாம். ஏம்புள்ள மாமனை அப்படித்தான் பேசுறதான்னு பாட்டியா கேட்டதும் பின்ன என்ன வேலை தலை மேல இருக்கு ஒண்ணுக்கும் உதவாத பேச்சினால் என்ன புரயோசனம் என்றாளாம். பாட்டியா பாத்தியாடி உங்கம்மாவை என்று என்னிடம் சொல்லித் தீர்த்தாள்.

காலை மாலை கசங்கி வேலை செய்யும் அவள் எதற்காக இரவில் இப்படி நடந்து கொள்கிறாள். என் கற்பனை எங்கெங்கோ சென்றது. மை வைக்கும் கிழவிகள். தலைச்சன் பிள்ளைரோமக் கற்றையையும், பெண் பிள்ளையின் சுண்டுவிரல் நகத்தையும் கிள்ளி செய்யும் மந்திரங்களும். அவற்றைத் தேடியெடுத்து கழிப்புக் கழித்த கன்னிகளின் கதைகளும் மண்டை நரம்புகளில் தெறித்து சிதறின. அம்மா இப்படி இரவில் அலையும் ரகசியம் தெரியவேண்டி என் இதயம் படபடத்துக் கொண்டிருந்தது.

அம்மா நிலைகுலைந்தவளாகத் தெரியவில்லை. அவளுடைய நடையில் பதற்றமில்லை. நின்று அவள் நிழலையே சுவரில் பார்த்த வண்ணமிருக்கிறாளோ எனும்படி நின்றிருந்தாள். சிறிது நேரம் முகத்தில் விழுந்த முடியை ஒதுக்கிக் கொடுத்தாள் அம்மா. துயரடைகிறாளா?

இவ்விரவில் அவள் மௌனமாக அழுது கொண்டிருக்கிறாளோ? வேலைகளால் நிரப்பப்பட்டிருக்கும் அவளது வாழ்க்கையில் அழுவதற்கு நேரமிருக்கிறதா?

சில சமயங்களில் அவள் ஒப்பாரி வைப்பதுண்டு. ஒப்பாரியின் வார்த்தைகளில் கண்களில் நீர் திரண்டு வருவதும் அந்த ராகமோ அல்லது வார்த்தைகளோ பிடிபடாத போது கண்ணீர் வற்றிப் போவதும், சில சமயங்களில் ஒப்பாரி நின்றும் கண்களில் நீர் வழிவதுமுண்டு. விம்மி கதறி பதற்றமடைந்து அழாமல் ஆழத்தில் சுரக்கும் துக்கக் கரைசலை வெளியேற்றும் விதமாக இருக்கும் அவளது செய்கை.

அம்மா தேடி சுருக்குப்பை ஒன்றை எடுத்து கைவிட்டுத் துழாவினாள். அதில் தங்கக் காசுகள் சேர்த்து வைத்திருக்கிறாளோ? அம்மாவிடம் ஏது தங்கம்? இது குழந்தையான என்னுடைய ஆசையைத்தான் வெளிப்படுத்தியது. அம்மாவின் சுருக்குப் பையில் பணம் உண்டு. இரவில் எண்ணிப் பார்க்கும் அளவிற்கு பெரிதான தொகையல்ல அது என்று நம்பினேன்.

நான் திருடியைப் போல் அம்மாவைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அம்மா சன்னல் ஒளியிலிருந்து மீண்டு கறுப்புருவமாக இருளில் கீழே கிடந்த பாயில் கால் நீட்டி அமர்ந்தாள். ஒரு கால் மீது இன்னொரு கால் போட்டுக் கொண்டாள். முதலில் எதையோ உள்ளங்கையில் எடுத்துத் துடைத்தாள். பிறகு அதில் எதையோ போட்டு மடித்தாள் வாய்க்குள் வைத்தவாறு ஒரு டப்பியைத் திறந்தாள். அது சுண்ணாம்பு.

அதற்குள் என்னைத் தூக்கம் இழுத்துக் கொண்டு போய்விட்டது.

Pin It