“Watching ones own disease is very interesting” - நித்ய சைதன்ய யதி

ஆண்டுகள் சிலவற்றிற்கு முன்னால் ஒரு மதியம் கண் முன்னே வெறிச்சோடிக் கிடந்த தெருவைப் பார்த்தபடி எதற்காகவென்று நினைவில்லையாதாலால் அது முக்கியமில்லை - அமைதியாக நின்று கொண்டிருந்தேன். தூரத்திலிருந்து ஒரு பெண் வந்துகொண்டிருந்தாள். அதைப் பார்த்து என் சப்தநாடிகளும் ஒடுங்கினவோ அல்லது கூர்மையாயினவோ அறியேன். அத்தனை அழகு; கண்கொட்டாமல், அவள் என் அருகே நெருங்கி வந்து விலகிச் செல்லும்வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதுவல்ல விஷயம். என்னை அத்தனை நேரமும் அதிரவைத்தபடி நிகழ்ந்து கொண்டிருந்த நம்ப முடியாத ஒரு அதிசய நிகழ்வுதான். இன்று இங்கே நான் அதை எழுதுவதற்குக் காரணம்.

வடிவத்தைப் பொறுத்தவரை அந்தப்பெண் இயற்கையின் செவ்வியல் தன்மைகளையெல்லாம் கொண்டவளான ஒரு பேரழகி. அந்தப் பூரண அழகில் அவள் பதின் வயதும் அதற்குரிய உடற்பொலிவுடனும் தோன்றினாள். முதற்கண் பார்த்த தூரத்திலிருந்து இரண்டொரு எட்டுக்கள் முன்னேறிய பின் தெரியவந்த போது அவள் அத்தனைச் சிறுமியாகத் தெரியவில்லை என்றாலும், உத்தேசித்ததற்கு இரண்டு மூன்று ஆண்டுகள் முதிய பெண்ணாகத் தெரிந்தாள் வடிவிலோ ஒரு சிறு மாறுபாடும் இல்லை. அப்போது நானே என் முந்தைய பார்வையின் பிரமைக்குச் சற்று வெட்கியிருக்க வேண்டும் ஆனால் அடுத்த அடுத்த கணமே அதற்கெல்லாம் பலத்த அடி, அதுவும் தொடர்ந்து அவ்வாறு கிடைத்துக் கொண்டே போயிற்று. அந்தப் பெண்ணுருவில் தொடர்ந்த ஒரு வளர்சிதை மாற்றத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். எனது அருகே வந்து அவள் என்னைக் கடந்து போகையில் அவள் தனது முதுமைப் பருவத்தை அடைந்து விட்டிருந்தாள். ஆனால் அப்போதும் அந்த முதற் பார்வையில் தென்பட்ட அந்தப் பேரெழில் மாறாமலேயேதான் இருந்தது.

இங்கே இந்த நகரில் பெண்களுக்கான ஒரு சேவை அமைப்பை நிறுவி முடித்த கையோடு மூன்று துடிப்பான பெண்ணியவாதப் பெண்கள், வெளியூர்க்காரர்கள், ஒருநாள் என்னைப் பார்க்க வந்தவர்கள் தொடர்ந்து எங்கள் குடும்பத்தோடு நெருங்கிப் பழகிவிட ஒருநாள் நாங்களும் ஒரு ஞாயிறன்று அவர்களுடைய இல்லத்திற்குச் சென்று அவர்கள் அன்பை ஏற்றுக் கொள்ள வேண்டிய கடப்பாட்டிற்குக் கட்டுப்பட வேண்டியதாயிற்று.

ஊருக்குவெளியே ரயில்வே தண்டவாளம் தாண்டி புறநகர்ப் பகுதியில் புதிதாயமைந்த இன்னும் மரங்கள் ஓங்கி வளர்ந்திராத குடியிருப்புப் பகுதி ஒன்றிற்கு, ஒரு பஸ் நிறுத்தித்திலிருந்து இறங்கி காலை வெயில் ஏறத் தொடங்கியிருந்த சாலையில் சற்றே வியர்த்தபடி நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். கைக் குழந்தையை நான் தூக்கிக்கொண்டேன். அம்முவும் எனது துணைவியாரும் இடத்திற்கே வந்து விட்டது போல் உற்சாகமாயிருந்தவர்கள் தெரு வீடு பற்றி சொல்லப்பட்ட அடையாளங்களை வைத்துக் கொண்டு தேடத்தொடங்க வேண்டிய சிறு பரபரப்பை மனம் அடைந்திருந்த வேளை.

அப்போது எதிரே கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல, எங்கள் விருந்தோம்புகளில் ஒருவராகிய அந்த மூன்று பெண்களில் இளையவரான தீபாவே வந்துவிட்டார் என்று முகம் மலர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தேன். அவளும் என்னைக் கண்டு கொண்டதை வெளிக்காட்டும் சிரிப்புடன் வாய்திறக்கப் போவது போலிருக்கையிலேயே நான் நிச்சயம் செய்து கொண்டேன், அது தீபா அவர்கள் அல்ல, அவர்களில் இன்னொருத்தரான ராஜலட்சுமி என்பதை. அதே போலவே மேலும் சில நொடிகளுக்குள் அது ராஜலட்சுமி அவர்கள் அல்ல மற்றொருவரான அமலா வில்சன்தான் என்பதை. அதுவும் மேற்படி அனுபவத்தைப் போலவே பிம்பம் கலைந்து யாரோ அந்நியர் ஆனார்கள். எனது உடன் வந்து கொண்டிருந்த துணைவியாருக்கும் எதிரே வந்த அந்தப் பெண்மணிக்கும் எனது பார்வை விசித்திரமாகப் பட்டிருக்க வேண்டும்.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயங்கள் என்னவென்றால் தீபா சுமார் இருபது வயதும் ஐந்தடி உயரமும் வட்ட முகமும், கல்லூரி மாணவி போன்ற தோற்றமும் உடையவர் ராஜலட்சுமி ஓங்குதாங்கான உயரமும் உடலமைப்பும் உடையவர். முட்டை வடிவ முகமும் முப்பது வயது மதிக்கத் தக்க பொறுப்புள்ள குடும்பத் தலைவி போன்ற தோற்றமும் கூட அமலா வில்சன் சற்று உயரம் குறைந்தவரானாலும் அக்குறை தெரியாதபடிக்கான வற்றலான சித்து உருவம். திருமணத்தை விலக்கியதனாலே என்னவோ, வயதாகியும் குழந்தையின் குதூகலமான பசுமையும் சிரிப்புமாக எப்போதும் காட்சியளிப்பவர். மூவரும் ஒருவரை இன்னொருவராய்க் காட்சிமயக்கம் கொள்வதற்கு அனுசரணையேயில்லாத உருவை உடையவர்கள் மேலும் அந்த நாற்பது வயதில் இன்னும் நான் வெள்ளெழுத்துக் கண்ணாடி அணியத் துவங்கியிருக்கவில்லை என்பதும் கண்கள் உள்ளிட்ட மூளை மற்றும் நரம்புகளைப் பாதிக்கும் எந்தப் பழக்கமும் இல்லாதவன் என்பதும்தான்.

Pin It