அவர்கள் வசிக்கும் இடம் மும்பையில் உள்ள ஒரு கட்டிடமா அல்லது ஒரு கோட்டையா என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது அந்தச் சில வாரங்களில். முகப்பில் இருந்த பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்டுவிட்டன. மொட்டை மாடியில் உலாத்தப் போனபோது, அங்கு “சாடா புட்டிகளும் உள்ளங்கையில் அடங்கக்கூடிய கூர்முனைக் கற்களும் இருந்தன. தற்காப்புக்காக என்றார்கள். கடந்த வாரம் ஓர் இரவு, கூச்சலும் முழக்கமுமாய் ஒரு கும்பல் கட்டிடத்தினுள் நுழைய முற்பட்டது. கையில் கம்பு, திரிசூலம், ஆரஞ்சுவண்ணக் கொடி இத்யாதி, கட்டிடத்திலுள்ள முஸ்லிம் குடும்பத்தினரைப் பெயரிட்டுக் கூப்பிட்டு, கீழே வரும்படிக் கூறினர். அவர்கள் கையில் ஒரு பட்டியல் இருந்தது.

கட்டிடத்தின் நேபாளக் காவலாளிகள் நுழைகதவை மூட முயற்சி செய்தனர், போலிஸ் வாகனத்தின் ஒலி தூரத்தே கேட்டதும் கும்பல் பக்கத்துச் சந்தில் நுழைந்து ஓடியது. சோடாபுட்டிகளும், கற்களும் அந்த நிகழ்வின் விளைவுதான்.

கடல் பார்த்த கட்டிடத்தின் மதில்சுவற்றின் மேல் முள்கம்பிகள் எழுந்தன எல்லையை நிர்ணயிப்பதுபோல். முள்கம்பிகளின் கீறல்களை முகத்தில் தாங்கியபடி நிதமும் சூரிய அஸ்தமனம். எப்போதாவது கட்டிடத்தின் எந்தக் குழந்தை எறிந்தது என்று நிர்ணயிக்க முடியாத ஒரு ரப்பர் பந்து முள்வேலிகளைத் தாண்டி அடுத்து இருந்த கடற்கரை மணலில் விழுந்தது. சில வேகமான பந்துகள் உருண்டோடி கடலில் புகுந்தன. கடற்கரையில் அங்கும் இங்குமாய் மணலைப் பூசிக்கொண்டு சிவப்பும், பச்சையும், நீலமுமாய்ப் பந்துகள். சில நீரில் அளைந்தபடி. பந்துகளைத் தேடி எந்தக் குழந்தையும் கீழே வரவில்லை. இந்தப் பந்து என்னுடையது என்று உரிமை கொண்டாடவில்லை. அனாதைப் பந்துகள்.

அந்தக் கொதிநிலை நாட்களில்தான் மும்தாஜ் கூப்பிட்டாள். அஸ்லம்கான் ஸீஹேபை வேறு இடத்துக்குக் கூட்டிச் செல்லவேண்டும் என்றாள். குடியரசு தினத்தன்று அமைதிக்காகவும் மதநல்லிணக்கத்துக்காகவும் ஊர்வலம் போன பிறகு உடம்பு சுகமில்லை என்றாள். என்ன உடம்புக்கு என்று கேட்டபோது தளர்ச்சி என்றாள். மீண்டும் கேமோதெரபி செய்துகொள்ளவேண்டும் என்றாள். அன்று அவர் பேசியபோதும் தளர்ச்சி தெரியத்தான் செய்தது. கரிந்துபோன வீடுகளையும், கத்தரிக்காய் சுட்டாற்போல் நெருப்பில் எரிந்த நின்ற கார்களையும், நடுங்கும் கைகளால் அவரைத் தொட்டுப் பேச முயன்ற நபர்களையும் தாண்டி முச்சந்தில் வந்து நின்று, அவர் பேசுவார் என்று எதிர்பார்த்து நின்ற அவர்களை நோக்கியபோது அந்தத் தளர்ச்சி தெரிந்தது.

“ நான் என்ன பேச?” என்றார் ஹிந்தியில் “சொல்லுங்கள், நான் என்ன பேச?” என்றார் மீண்டும். “பலமுறை பேசிவிட்டேன். பலவாறு பேசிவிட்டேன். யார் காதிலும் விழவில்லை. இரண்டு கடிதங்கள் வந்தன நேற்று எனக்கு. ‘குரான் அறியாத மதத் துரோகி நீ. உன் உடல் புழுத்து நீ சாவாய்’ என்கிறது ஒரு கடிதம். ‘இந்துக்களின் எதிரி நீ. ஒரு புல்லுருவி நீ உடல் வெந்து நீ சாக வேண்டும் நாங்கள் பார்த்துக் களிக்க வேண்டும்’ என்கிறது இன்னொரு கடிதம். யார் விருப்பம் நிறைவேறும் என்று தெரியவில்லை. யார் விரும்பி இவையெல்லாம் நடக்கின்றன என்று தெரியவில்லை. மூன்று நபர்களுடன் ஒரு கார் நெருப்பில் கருக வேண்டும் என்பது யார் விருப்பம்? பெற்றோர்கள் கொல்லப்படுவதைக் குழந்தைகள் பார்க்கவேண்டும் என்பது யார் விருப்பம்? பெண் குலைவதைப் பெற்றோர்கள் காணவேண்டும் என்பது யார் விருப்பம்? சொல்லுங்கள் நண்பர்களே. எந்த இழையை நாம் பற்றிக் கொள்ளத் தவறிவிட்டோம்?...”
ஒரு மணி நேரம் இவ்வாறு பேசினார். கட்டுண்டு கிடந்தது கூட்டம்.

ஆஸ்பத்திரி சிவாஜி பார்க் அருகில் இருந்ததால் அதன் அருகில் இருக்கும் நண்பர் வீட்டுக்குப் போய் ஒரு மாதம் போல் இருப்பார்களாம். நண்பருக்குப் பெரிய பங்களா. பின் தோட்டத்தில் ஒரு சின்ன அவுட் ஹவுஸ். கட்டாயம் வரவேண்டும் என்று வற்புறுத்து கிறாராம். மத்தியானம் இரண்டு மணிக்கு நண்பர் கார் அனுப்பு வாராம். அவள் உடன் வரவேண்டும் என்று கான்ஸீஹேப் விரும்புகிறார் என்றாள். அவளைப் பார்க்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாராம். உடனே வர ஒப்புக்கொண்டதும் இன்னும் முக்கால் மணி நேரத்தில் ஜோகேஷ்வரி ரயிலடிக்கு வெளியே பக்கத்து வீட்டுப் பையன் அப்துல் காத்திருப்பான், அவனுடன் ஸ்கூட்டரில் வந்து விடலாம் என்றாள். பஸ் ஆட்டோ எதிலும் வரக்கூடாது என்று விட்டாள்.

ஜோகேஷ்வரி ரயிலடிக்கு வெளியே அப்துல் காத்திருந்தாள். அவளை ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றாள். அஸ்லம்கான் ஸீஹேபை மும்தாஜீம் அவளுமாய்க் கைத்தாங்கலாய்க் காரில் உட்கார்த்தி காரை மிக மெதுவாக ஓட்டும்படி டிரைவரைப் பணித்தனர். அவர் கார் சன்னல் வெளியே பார்த்தபடியே வந்தார். அவர் கார் சன்னல் வெளியே பார்த்தபடியே வந்தார். பேசவில்லை மும்தாஜின் கையை இறுகப் பற்றியிருந்தார். இவள் அவரது இன்னொரு கையைத் தன் கைகளால் பற்றிக் கொண்டதும் அவளைக் கனிவுடன் நோக்கினார். அவளுக்கு வீண் தொல்லை தருவதாய்க் கூறினார். இவ்வளவு ஆண்டுகள் பழகியும் அவர் சம்பிரதாயமாக நடந்து கொள்வதாக அவள் கோபித்துக் கொண்டதும், சிரித்தார். சிவாஜி பார்க் வீட்டில் அவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துவிட்டு தாதர் ரயிலடிக்கு விடுவிடுவென்று நடந்து வண்டி பிடிக்கும்போது ஐந்து மணி ஆகிவிட்டிருந்தது. வழக்கமாக அந்த நேரத்தில் ரயிலடியில் நெரிசல் தாங்காது. அதனால்தான் மும்தாஜ் ரயிலில் வரும்படி வற்புறுத்தியது. கூட்டம் நெருக்கும் அணைத்துக் கொள்ளும் தள்ளும் காப்பாற்றும். கூட்டத்தைக் கம்பளி மாதிரி இதமாகப் போர்த்திக் கொள்ளலாம். அன்று அந்தக் கவசம் இல்லை. சனங்கள் இருந்தனர். ஆனால் ரயிலடி நிறைந்து வழியும் சனங்கள் இல்லை. வண்டி வந்ததும் பெண்கள் பெட்டியில் ஏறினாள். விரைவு வண்டி இரண்டாவது பிளாட்பாரத்தில்தான் நிற்கும். அங்கே கூட்டம் இருக்கும். வெளியே போகும் வழியை ஒட்டியிருந்த இருக்கையில் இடம் கிடைத்தது.

அந்தேரி ரயிலடியில் இறங்கி படிகளில் வேகமாக ஏறி, பாலத்தை எட்டியபோதுதான் கூச்சல் எழும்ப ஆரம்பித்தது. பாலத்தின் மேல் இங்கும் அங்கும்ஓடிக் கொண்டிருந்தனர் சனங்கள்.
“மேற்கே மசூதிப் பக்கம் போக வேண்டாம்” என்று கூவியது ஒரு குரல்.

“கிழக்கே பஸ் ஸ்டாண்டு பக்கம் போகாதே” என்று அலறியது ஒரு குரல்.

தடதடவென்று காலடிச் சத்தம் கூட்டம் அங்கும் இங்கும் அலைக்கழித்தது. ஒன்றாம் பிளாட்பாரத்தின் பக்கம் தள்ளப்பட்டாள் அவள். பாலத்தின் மேலிருந்து கீழே ஒன்றாம் பிளாட்பாரம் தெரிந்தது. உடைந்த சோடா புட்டிகள் எங்கும் சிதறி இருந்தன. கற்களும் ஓரிடத்தில் உடைந்த சோடா புட்டி ஒன்று உருளாமல் நேரே நின்றது. அதன் உடைந்த முனையில் சிவப்பு தெரிந்தது. அதைச் சுற்றி மென் சிவப்பில் ரத்தம் சிந்தி இருந்தது.
நகரா பொருட்களின் ஓவியம்போல் அது கண்ணை முட்டியது.

திடீரென்று ஒரு கூச்சல். ஒன்றாம் பிளாட்பாரத் தண்டவாளத்தின் இடையே லுங்கி அணிந்த ஒரு தாடிக்காரப் பெரியவர் ஓடிக்கொண்டிருந்தார். அவரைப் பின் தொடர்ந்து நாலைந்து இளைஞர்கள் அவரை எட்டிப் பிடித்து அவர் லுங்கியை அவர் கெஞ்சலையும் மீறி இழுத்தனர். இடையின் கீழே நிர்வாணமாக நின்றவர் உடனே குந்தி அமர்ந்து கொண்டார். அவரைக் கீழே உருட்டித் தள்ளினர். கம்பு, சோடா புட்டி, சைக்கிள் செயின் பிடித்த கைகள் ஓங்கின.

பக்கத்தில் விம்மல் போல் ஒலி கேட்டுத் திரும்பியதும் ஐந்து வயதுச் சிறுவன் கண்ணில் பட்டான்.

அவர்கள் கைகள் கீழேஇறங்கும் முன், சிறுவனைத் தன் மேல் சாய்த்துக் கொண்டு, அவன் கண்களைக் கையால் பொத்தினாள்.
“பசாவ், பசாவ்” என்ற முதியவரின் குரல் வீரிட்டுக் கிளம்பி, நீண்ட ஓலமாய் ஒலித்த வண்ணம் இருந்தது.

சிறுவனின் செவிகளைப் பொத்த முடியவில்லை.

Pin It