(விதர்பாவைத் தொடர்ந்து நடுவணரசு, மாநில அரசுகளின் துரோகங்களினால் தமிழகத்திலும் விவசாயிகள் தற்கொலை தொடர்கிறது. ஊடகங்களும் அரசும் இத்தற்கொலைகளை மறைக்கின்றன. தற்கொலைகளைத் தூண்டும் தண்ணீர் எல்லோருக்கும் உரியதாய் மாறவேண்டும்.)

அது தன் நாட்களை
ஒருபோதும் சோம்பலில் கழித்ததில்லை
ஒரு நாளைக்கூட பொழுதுபோக்கு போன்ற
புலன் துய்த்தல்களில் செலவிட்டதில்லை
பொருள் புகழ் அதிகாரங்களை நோக்கிய
வேட்கை உந்தல்களை அது அறியாது
எப்போதாவது தன் துணையுடன்
அன்றி எப்போதும் தன் தன்மையையே
அது பாதுகாத்தபடி அலைந்த்து
அதன் உயிர்ப்பும் சிறகடிப்பும்
இயற்கையின் மர்மங்கனைத்தையும் உணர்ந்த வியப்பும்
அதை விளக்க இயலாத படபடப்புமேயாம்

ஒரு நாள் என் தோட்டத்தின் ஈரத்தரையில்
உதிர்ந்த ஒரு மலர்போல் அது கிடந்தது
நல்லடக்கம் செய்யும் சுற்றமோ
மறைவுக்குக் கண்கலங்கும் உறவுகளோ
சமூகமோ தேசமோ இன்றி
அது அனாதையாய் மரித்திருந்தது
நெஞ்சுருகும் பார்வையின் முத்தம்
ஒரு கவிதை
இவைதானோ அதன் மொத்த வாழ்க்கையின்
மர்மமான இலட்சியம்?
இன்று அது நிறைவேறியதையோ
எளிய உயிர்கள் நூறுகள் கூடி
ஊர்வலமாய் அதை எடுத்துச் செல்ல முயல்வதையோ
கண்களில்லாத கால்கள்
அதை மிதித்தபடி செல்வதையோ
ஒரு பெருக்குமாறு அதை குப்பைகளோடு குப்பையாய்
ஒரு மூலைக்கு ஒதுக்கிவிடுவதையோ
எதைப்பற்றிய கவலையுமில்லாமல்
எல்லாவற்றையும் அதுவே ஒதுக்கிவிட்டதாய்
ஈரமான என் தோட்ட நிலத்தில்
மரித்துக் கிடந்தது அது

- தேவதேவன்

Pin It