அதே மாணவர் விடுதி. ஏதோ ஒரு தேர்வு முடிந்த விடுமுறையில் விடுதிக் காப்பாளரின் கண்காணிப்பு, படிப்பு முதலான அன்றாட ஒழுங்கு முறை இல்லாத முழு ஓய்வு நாட்களின்போது, அறைகளை விட்டு விலகி வெறுமையாய்க் கிடந்த வகுப்பறை. ஒரு காந்தியப் பள்ளி ஆதலால் மேஜை நாற்காலி பெஞ்சுகள் இல்லாது, வெளிக்காற்று நன்றாய்ச் சுழன்று வீசக் கூடிய மடம் போன்ற பெரிய கூடம். அதை நாங்கள் கையகப்படுத்தியிருந்தோம். அங்கே மாலை ஆரம்பித்து விடிய விடியச் சீட்டாடிக் கொண்டிருந்த ஒரு குழுவோடு நானும் இணைந்து கொண்டிருந்தேன். அந்த நாளின் முன்பும் ஒரு நாள் அவ்வாறு விளையாடியிருப்பேன் என்று நினைக்கிறேன். பகலெல்லாம், உண்ணும் நேரம் தவிர, இரவெல்லாம் கண் விழித்திருந்த அசதியைச் சரி செய்ய தூங்கிக் கழித்துவிட்டு மீண்டும் மீண்டும் இரவெல்லாம் சீட்டாட்டமாய் இயங்கிக் கொண்டிருந்தோம்.

அது ஒரு விடிந்தும் விடியாப் பொழுது, விடியலின் அரவத்தாலோ ஆள் நடமாட்டத்தாலோ எனக்கு முழிப்பு தட்டியது போலிருந்தது. நாங்கள் எல்லோரும் அலங்கோலமாக, கூர்ந்துபார்த்தால் ஒரு வட்டம் தான் சற்றே கலைக்கப்பட்டுச் சிதறடிக்கப்பட்டுள்ளது போன்ற ஒரு வித்தியாசமான ஜியோமிதிக் கோலத்தில் அந்தந்த இடத்திலேயே விரிந்த ஜமுக்காளத்திலேயும் ஓர் ஓழுங்கின்றி தூக்கத்தில் விழுந்துகிடக்கிறோம். சீட்டாட்ட விரிப்பு மையத்தின் முழுமையையும் பற்றிக் கொண்டு சீட்டுக்களும் சிதறிக் கிடக்கின்றன.

அப்போது தான் நான் அங்கே அதைப் பார்த்தேன். அதை ஒரு பேரனுபவம் என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் தானே அதை இப்பொழுதும் நினைவில் கொண்டு உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அப்போது உறக்கம் கலையாதவனாய் என் கனவில் அதைக் கண்டுகொண்டிருக்கின்றேனோ என்று நான் யோசித்துக் கொண்டே அது கனவு இல்லை என்று தெளிந்து கொண்டவனாகவும் இருக்கிறேன்.
ஆனால் அது விழிப்பு என்றால் அப்படி ஒரு காட்சி, தரிசனம் சாத்தியம் தானா என்ற படியும் இருந்தது அது. அதைச் சொல்வதற்குத்தான் வந்தேன். ஆனால் அதைச் சொல்வதற்கு முன் இந்த சீட்டாட்டத்தையும் அதை ஒட்டியுமாய் என் நினைவிலுள்ள எல்லாவற்றையும் எனது வாசகர்களாகிய உங்கள் முன் சொல்லி விடுவதுதானே முறை?

குடிசைகளும் மண் சுவர்களிலான ஓட்டு வீடுகளும் ஒன்றிரண்டு பெரிய காரை வீடுகளுமான தெரு. ஞாயிற்றுக் கிழமைகள் ஒரு சிறப்பான பொலிவுடன் காணப்படும். பெரும்பாலும் தொகுப்பு வீடுகளே அதிகமிருக்கும். ஏதாவது ஒரு வீட்டின் அகன்ற திண்ணையிலோ, அப்போதைக்கு ஆடு விற்கப்பட்டு வெற்றிடம் ஏற்பட்டிருக்கும் ஒரு ஓலைச் சார்ப்புப் பந்தலிலோ காலையில் தொடங்குகிற சீட்டாட்டம், பொழுது சாயும் வரை நடக்கும். அதில் அப்பாவும் ஒருவர். எல்லோருக்குமே அந்தந்த வீட்டுக் பெண்கள் ‘தங்கமானவர்’ என்ற உருக்கமான புகழுரைக்கு ஏற்றவர்களாகவே இருப்பர். இல்லாவிட்டால் அங்கு குழுமிச் சீட்டாட முடியுமா? அல்லது சீட்டாட்டக் குழு ஒரு வீட்டைத் தேர்ந்தெடுத்து அமர்ந்துவிட்டாலே அந்த வீட்டம்மாவிடம் அத்தகைய ஒரு கனிவும் நேசமும் உண்டாகிவிடுகிறதோ என்னவோ. எவ்வாறோ அந்தச் சீட்டாட்டக் களம் சுற்றி ஒரு பெரு நிறைவொன்றின் ஒளியின்பம் பளிச்சிட்டபடி இருக்கும். திடீரென்று வீட்டிற்கு வந்த விருந்தினரை அறிவிக்கவோ, காலதாமதமாகும் நண்பகல் உணவு வேளையை நினைவூட்டவோ, பாப்பாவுக்கு சுகமில்லை என்பது போன்ற ஏதாவது ஒரு அவசரச் செய்தியுடனோ நான் அங்கே அடிக்கடி செல்ல வேண்டியிருக்கும். எல்லோரும் அன்றுதான் தவறாது சலவை செய்த வெண்ணிற ஆடைகளை விரும்பி அணிந்தவர்களாய்க் காட்சியளிப்பார்கள். அன்றுதான் ஒவ்வொரு வீடும் பலகாரமும் பானமும் பகலுணவு இறைச்சியுமாய் ஒரு களிப்புடன் இருக்கும். கடுமையான உழைப்பிலும் இயந்திரகதியிலுமாய்ச் சென்ற ஆறு நாட்களிலுமில்லாத ஒரு பொலிவு அது. தெருவெங்கிலும் கூட அது விரிந்திருக்கும்.

ஒருநாள் முனியசாமி கோவில் எனும் அரசமரத்தடியில் சீட்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்பாவும் அதில். நான் எதற்காக வேண்டியோ சிணுங்கியபடி அப்பா விரட்ட விரட்ட சுற்றிச் சுற்றி வருகிறேன். அப்போது அங்கிருந்த எனக்குச் சித்தப்பா எனும் உறவுடைய ஒரு கம்பீரமான ஆளுமை-கட்டையான உருவம், கடா மீசை, வெளேரென்ற ஜிப்பா, ஒரு போதும் தழுதழுப்போ தயக்கமோ கண்டிராத தீர்க்கமான குரல், சிலம்பு வாத்திமையால் முறுக்கேறிய உடல்-என் கையைப் பிடித்து என் உள்ளங்கையில் ஒரு நாணயத்தை வைத்து எனக்காகவே என்றுதான் ஏதோ சொன்னார். ஆனால் அதற்காக அங்கே நான் மோதிக் கொண்டிருக்கவில்லையே. நான் ஒரே சமயம் ரொம்பவும் மனம் நெகிழ வைத்துவிடும் ஒரு பேரன்பையும் துரதிஷ்டவசமான அனுபவங்களின் அதிர்ச்சியையும் கண்டவன் போன்ற குழப்பமான உணர்வுகளை அடைந்தேன்.
திருமண வீட்டின் அலங்காரப் பந்தல் வாழைத் தோரணங்கள் ஒலிபெருக்கி அனைத்தும் துயின்று கொண்டிருக்கும் முந்திய இரவுகளிலும் குளிர்ந்த புதுமணல் விரிப்பில் சீட்டாட்டம் நடக்கும். சமயங்களில் போலீஸ்காரர்கள் நடுராத்திரியில் வந்து பிடித்துப் போவார்கள்.
மணப்பெண்ணின் அல்லது மணமகனின் அப்பாவும் அதில் இருப்பார். வார்டு கவுன்சிலரிடம் போய் சொல்லி ஒருவாறு விடியக்காலம் வந்து சேர்ந்துவிடுவார்கள் மணவிழா தொடங்குவதற்கு முன் ரொம்ப சாதாரணமாக.

எப்போதும் கொஞ்சம் காசு வைத்துத்தான் விளையாடுவார்கள். தொடர்ந்து நடக்கும் அந்த ஆட்டம் சமயங்களில் வீட்டுக் கடமைகள்மீது அக்கறை கொள்ளவிடாத ஒரு வெறிபோல தோன்றியிருக்கும். அத்துடன் போலீஸ் சம்பந்தப்பட்டதால் அது தவறானது என்பதும், ஒரு அத்துமீறலான செயல் என்பதும் எனது மனப்பதிவாகியிருக்கும். பாண்டவர்கள் சூதாடிக் கீழிறக்கம் கொண்ட கதையும் சற்றுப் பின்னால் அறிமுகமாகி அப்படிமத்தை வளப்படுத்தியுமிருக்கலாம். ஆனாலும் நான் எதற்கும் அவசரப்படாமல் நிதானமாகவே இருந்திருக்கிறேன்.

ஒரு நட்பும் எங்கள் வீட்டு எதிர்சாரியிலுள்ள அந்த நண்பனின் வீட்டிற்குச் செல்லும் வாய்ப்பும் கூடி ஓய்வுநாள் ஒன்றில் அவனது அழகிய அம்மாவும் நாங்களும் சிமெண்டுத் தளமிட்ட அவர்களது தாழ்ந்த ஓட்டுவீட்டு தார்சாவில் சீட்டு விளையாடினோம். அதுதான் முதன்முதலாய் எனது பிஞ்சுக் கரங்கள் கொண்டு நான் சீட்டு விளையாடியது; ஒரு மண்சுவர் ஓட்டுவீட்டுச் சிமெண்டுத் தரையையும் தொட்டுணர்ந்ததும். சீட்டாடுவது எப்படி ஒரு பாவச் செயலாகும்? ஆளுக்கு ஆறு சீட்டுகள் பிரித்துப் போட்டு ஜோடி சேர்த்து விளையாடினோம்.

அவர்கள் வீட்டின் அந்தத் தார்சாவில் ஒரு கூண்டுக் கிளியுண்டு. நானும் என் நண்பனும் புல் படுக்கைகள் மீது முழங்கால்களை இழுத்தபடி விழுந்து விழுந்து அதற்கு வேண்டிய விட்டில்கள் பிடித்து ஒரு தீப்பெட்டிக்குள் சேகரித்துக் கொண்டு வருவோம்.

அப்புறம் சித்திரை விஜயன் என்னும் ஒரு சேக்காளி கிடைத்தான். எல்லாம் ஒரே தெருவில்தான். அவர்கள் வீட்டில் இரண்டு சகோதரிகள். தாய் தாய் என்று அவர்கள் பெயர்கள் முடியும். தாவணியணிந்த அந்த அக்காக்கள் தேவதைகள் போல் ஒளிர்ந்தார்கள். நாங்கள் நால்வர், சமயங்களில் அவர்கள் அம்மாவும் சேர்ந்து சீட்டு விளையாடுவோம்.

நாங்களெல்லாம் காசு வைத்து விளையாடவில்லை.

இந்த விஷயத்தை, மேலும் ஒன்றைச் சொல்லிவிட்டுத் தொடர்கிறேன்.

ஞாயிறின் சிறப்பு நிகழ்வுகளுள் ஒன்று, ஏதாவது ஒரு ஞாயிறில் நாங்கள் எங்கள் அத்தை வீட்டிற்குச் செல்வதாகும். நானும் என் அக்காவும் தங்கையும் ஒருவரை ஒருவர் தொலைத்து விடாதவாறு கைகளைப் பற்றிக் கொண்டு பெரிய சாலையைக் குறுக்காய்க் கடந்து (எத்தனை குறுகுறுப்பாய் இருக்கும் அது) புத்தம் புதிய தெருக்களிலும் சந்துகளிலும் புகுந்து புகுந்து செல்வோம். அந்த நீண்ட நடையிலுள்ள அழகும் பிரியமும்தான் எத்தகையவை?

புறாக் கூடுகள் போன்ற சின்னச் சின்னதான வீடுகளாய் உள்ள தொகுப்பு இல்லம் அது. அந்த வீட்டின் முகப்பில் ஏராளமாய், வண்ண மடிக்கப்பட்ட தகரத்தாலான விதவிதமான பொம்மைகள் காற்றாடிகள் இருக்கும். அந்த பொம்மைகள் உரலிடிக்கும், சுளகு புடைக்கும். இன்னும் என்னென்ன வேடிக்கையெல்லாம் உண்டு அதிலே. காற்றில் இயங்கக் கூடியவையாய் அமைக்கப்பட்ட பொம்மைகள் அவை.

அங்கேயும் ஒரு சிறிய தளத்தில் நெருக்கமாய் நிற்பவர்கள் போல இருந்த தாவணியணிந்த நான்கு அழகுப் பெண்கள் ஓடோடியும் வந்து என்னைப் பற்றிக் கொள்வார்கள்.

திருமணமாகி ஒரு அவலமான வாழ்க்கையின் மத்தியில் நின்று கொண்டு அப்போதும் குழந்தையாயிருந்த என்னை தன் வாஞ்சையாய் கட்டிப் பிடித்துக்கொண்டு, ‘நீயாவது அப்போது பெரிய பையனாக இருந்து உன்னை நான் கட்டிக் கொண்டிருக்கக் கூடாதா?’ என அழுதார் பெரிய மதினி.
அப்போது நான் என்ன நினைத்தேன்? சரி விஷயத்தை எங்கே நிறுத்தினேன்? ஆமாம் நாங்களெல்லாம் காசு வைத்து விளையாடுவதில்லை.

ஆகவே, இந்த விளையாட்டில் தீதின் கூறுகள் இல்லையென்று கூறமுடியுமா? எல்லாவற்றிற்கும் பதில் சொல்வது போலவே நிகழ்ந்தது அது. பாலியல் மற்றும பாலியல் ஒழுக்கம் குறித்து அரசல்புரசலான ஓர் அறிவு ஏற்பட்டிருந்த பருவம் போலும். ஒரு நாள், ஆட்கள் நடமாட்டம் மிகுந்த வேளையில்தான் எங்கள் தெருவின் அந்த அரசமரத்து நிழலில் ஒரு ஆணும் பெண்ணும் நின்று கொண்டிருந்தனர். வெளியே நோட்டமிட்டவளாய் அந்த ஆணிடம் ‘‘நம்ம பேசுறத சூதாய் நினைக்கிறாங்க’’ என்று அந்தப் பெண் கவன்றது என் செவியில் விழுந்து ஒரு துயராய் என் நெஞ்சைத் தைத்தது. அதே வேளை சூது என்ற சொல்லின் பொருள் மட்டுமின்றி வாழ்வில் அதன் துர்ப்பாக்கியமான செயல்பாடுகளும் புரிந்தது போலிருந்தன. காமம் என்பதே ஒரு மூளைச் செயல்பாடுதானா? மூளைச் செயல்பாடுகள் அனைத்துமே தீயபயப்பவைதானா? மூளைக்கும் அதற்கென்று ஓரிடம் இருக்கத்தானே செய்கிறது? குழந்தைகளை அறிவில்லாதவர்கள் என்ற கருத்தில் தானே சிறியவர்களாகக் கருதுகிறார்கள் பெரியவர்கள்? ஆனால் மூளைச் செயல்பாடென்றில்லா ஒன்று ஒருவனிடம் செயல்படுகிறதே அது என்ன? சீட்டாட்டத்தில் எப்போதுமே ரொம்ப ஆர்வமாய் அது இயங்குவதில்லையே, ஏன்?

குழந்தைப் பருவத்தில் அப்பருவத்தின் இயல்பான விளையாட்டுக்களில் நானும் தன்னை மறந்து விளையாடியவன்தான். ஆனால் பெரியவர்களின் விளையாட்டு முற்றிலும் மாறுபட்டுள்ளது. வெறிகொண்டு காலம் போக்குவதையே கண்ணாகக் கொண்ட சீட்டாட்டம் போன்ற மூளை விளையாட்டுக்கள் ஒரு அபத்தம். அதற்குப் பதில், சும்மா, தன்னமாயின் புல்வெளியில் மல்லாந்து வானத்தை வெறித்துக் கொண்டு கிடக்கலாம். இயற்கை வெளியூடே ஒரு நடை போகலாம். அழகான ஒரு ஆற்றங்கரை மர நிழற்பாறையிலமர்ந்து கொண்டு நீரோட்டத்தின் வேகத்தைப் பார்த்தபடி சற்று இளைப்பாறிக் கொள்ளலாம். அல்லது இது போல நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கலாம்.

ஆனாலும் அபூர்வமாக உற்றார் உறவினர்களோடு இரவையும் பகலையும் கழிக்க நேரும் தருணங்களில் அவ்வாறு சீட்டாடுவது நட்பாடலின் ஒரு வகை உரையாடல் என்றே வைத்துக் கொள்வோம். ஒருவரோடு ஒருவர் நெருக்கமாய் அமர்ந்து வெகுநேரம் கழிக்கையில் அதிலும் உன்னதத்திற்கான ஒரு சடங்குத் தன்மை இருக்கலாம். எதில்தான் இருக்காது? ஆனால் மற்றவர்களையும் தருணங்களில் நீங்கள் மதித்தாக வேண்டுமல்லவா? அப்படி நானும் விளையாடியிருக்கிறேன், கல்யாணமான புதிதில், சகலர்களும், மைத்துனர்களும் அண்ணியார்களுமான உலகத்திலே. சீட்டாடுவதிலே ஆக மட்டமான ஒரு பேர்வழிக்கு பரிசு என்றால் அது எனக்குத்தான் கண்டிப்பாய் கிடைக்கும். எவ்வளவு அசிரத்தையாக விளையாடினாலும் வீட்டு மருமகன் என்பதால் என் கட்சிக்காரரும் என்மீது கோபத்தை காட்டிக் கொள்ள மாட்டார்.
என் அறிவின்மையை நானே ரசித்தபடி யோசித்தபடியே விளையாடுவேன். அப்படி விளையாடும்போதும் அவ்விளையாட்டு நல்கும் ஓர் இன்பத்தை அடைந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் மிகத் தேர்ந்த ஒரு ஆட்டக்காரருக்கு அவ்வின்பம் கிட்டவே கிட்டாது. இரண்டு திறமையானவர்கள் ஆடுகையில் அதில் எந்த ஒரு நல்லின்பமும் இல்லை என்றே பட்டது. முன்னறிவும் திட்டமிடலும் கூடிய அறிவால் முன்னறிவும் திட்டமிடலும் கூடிய அறிவை வெற்றி கொள்ளும் மூளையின் ஆனந்தம்தான் என்னே. வேண்டுபவர்களுக்கு அது வேண்டியதுதான்.

ருசிபார்த்தல் என்ற அளவிலாவது இந்த ஆட்டத்தை வாழ்வில் நானும் ஆடியிருக்கிறேன். நம்மைப் பார்க்கவரும் நண்பர், நம்மைப் பற்றி வாசிப்பு மூலமோ, கேள்வி மூலமோ என்னென்ன அறிந்திருப்பார் அல்லது அறிந்திருக்க முடியும் என்ற நமது அறிவைக் கொண்டே நம் முன் நிற்கும் அவரது எண்ண ஓட்டங்களை யூகித்து அதற்குத் தகுந்தாற் போலப் பேசி அவரை அசத்தி விடுவது...எல்லாம் ச்சைய் என்றிருக்கிறது.
சீட்டாத்தையே முதன்மையான பொழுதுபோக்கு வினையாகக் கொண்டு தன் வாணாளின் பெரும்பகுதியைக் கழித்துக் கொண்டிருப்பவர்கள் மீது எனக்கு ஒரு சந்தேகம் உண்டாவதை (சந்தேகம்தான், முடிவு அல்ல) ஒரு நண்பரிடம் பகிர்ந்து கொண்டிருந்த போது அந் நண்பர் கண்கள் கலங்கிவிட்டன.

இத்தனை அனுபவங்களின், அறிவின், ஞாபகங்களின் உணர்வோடுதானா அன்றும் மாணவர் விடுதியின் எனது இனிய நண்பர்களோடு இரவெல்லாம் சீட்டாட அமர்ந்தேன்? ரம்மி ஆட்டம் என்று நினைக்கிறேன். ஆடி ஆடி அதன் அநேக நுணுக்கங்களும் ஆட்டப் போக்குகளும் கொஞ்சம் கைவரப் பெற்றவன் போலும் அதே சமயம் அவற்றின்மீது ஆர்வமற்ற ஒரு அலட்சியம் கொண்டவன் போலும்தான் ஆடிக்கொண்டிருந்தேன்.

விடியற்காலை அது நிகழ்ந்தது.

இந்த ஆட்டத்தை இத்தனை பேரும் இத்தனை இத்தனை விதமாக, இத்தனை ஆட்டங்கள் இப்படி இப்படித்தான் ஆட முடியும் என்ற முற்று முடிவான தெளிவான ஒரு முழுக் கணக்குச் சித்திரத்தை-அது,ஒருவர் அல்லது கொஞ்சம் பேர் சேர்ந்து வெகுகாலம் மூச்சைப் பிடித்து ஆடி ஆடிக் கண்டுபிடித்து (இப்போதென்றால் கணினியின் உதவியும் உண்டு) அனைத்து ஆட்டத்தையும் ஒரே பார்வைக்குப் படும்படி எழுதி வைத்துவிட்ட ஒரு பெரிய விளக்கப்படம் போன்றிருந்ததை-அப்போது அந்தச் சீட்டுக்களின் சிதறலில் கண்டேன். ஒரு பிரம்மாண்டமான இயந்திரத்தைக் கழற்றி மாட்டத் தெரிந்த ஒரு தேர்ந்த பொறியியல் வல்லுநன் அதை அக்கு வேறு ஆணி வேறாகக் கழற்றிப் பரப்பி வைத்தது போல அத்தனைத் தெளிவுடனும் அத்தனைப் பின்னத்துடனும் இருந்தது அது. இத் தரிசனம் ஒரு மாயை அல்ல. பேருண்மை என்பதற்கான சாட்சியங்கள் என்னிடம் விளக்க முடியாதபடி உண்டு. வாழ்வைக் குறித்து எளிதில் விளக்கமுடியாத எனது புரிதல்களையும் இதேபோலவே கண்கூடாகக் கண்டிருக்கிறேன் என்பதே அது.

Pin It