சந்திப்பு : நெல்சன், இளங்கோ

balaji_sambath
‘கண்டம் விட்டு கண்டம் பாயும் ஒரு ஏவுகணை தயாரிக்கிற செலவில் ஒரு மாநிலத்துக்கான அடிப்படைக் கல்வியை முழுமையாகக் கொடுத்து விடலாம்’ என்றார் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி.

2007_ன் இலாபம் தரக்கூடிய மிகச்சிறந்த தொழில்துறையாகக் கல்வித்துறை மாறியிருக்கிறது. மாற்றுக்கல்வி குறித்து இங்கு அதிகம் பேச ஆட்கள் இல்லை. ஊடகக் கண்களில் படாமல் மாற்றுக்கல்வி குறித்த ஆய்வுகளையும், பணிகளையும் சமுதாய நோக்கோடு செய்து வருகிற கல்வியாளர், சமூக ஆர்வலர் திருமிகு. பாலாஜி சம்பத் அவர்களுடன்...

உங்களுடைய ASER திட்டம் பற்றி....

இந்த ASER திட்டத்தினுடைய அடிப்படை நோக்கம் குழந்தைகளின் கற்றல் நிலையை மதிப்பிட்டுப் பார்ப்பதும், கற்றல் நிலையை முன்னேற்றுவதும் தான். நாம் எந்த விசயத்தைச் சீர்தூக்கிப் பார்க்கலையோ அது மாறியிருக்கிறதா அல்லது அதிகமாகி இருக்கிறதா என்றும் தெரியவில்லை. எனவே அதை மதிப்பீடு செய்து பார்ப்பது அவசியம். அதற்காகத்தான் இந்த மாதிரியான பணிகளை நாங்கள் செய்துகொண்டு இருக்கிறோம்.

இந்த மாதிரித் திட்டங்களைக் கிராமத்து மக்களை வைத்துக்கொண்டு இரண்டு வகையில் செயல்படுத்தலாம். ஒன்று குறைந்த எண்ணிக்கையிலான நிபுணர்களை வைத்துக்கொண்டு ஆழமாகத் தயாரிப்பது. இதில் ஆழமான கருத்துகளும், தகவல்களும் கிடைக்கலாம். ஆனால் இது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துமா என்பது சந்தேகம்தான். இரண்டாவது வகை மிகவும் எளிதாக அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் யார் வேண்டுமானாலும் செய்யலாம். இதை ஒரு சமூக ஆர்வலரோ, ஆசிரியரோ கிராமத்துப் பெற்றோரோ யார் வேண்டுமானாலும் எளிதாக அணுகலாம்.

உலக நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவின் கல்விநிலை குறித்தான விழுக்காடு எந்த அளவுக்கு நம்பகத்தன்மையானதாக இருக்கு?

இதில் மூன்று முக்கிய பிரிவுகள் இருக்கின்றன. எழுத்தறிவு என்பது அவரவர்களுடைய தாய் மொழியில் எழுதவும், படிக்கவும் தெரிஞ்சிருந்தால் மட்டுமே போதும் என்பதுதான். இந்த விசயத்தில் அரசாங்கம் தருகிற புள்ளி விவரங்கள் ஓரளவிற்கு நம்பகத்தன்மை உடையதுதான். உதாரணமாக ஒரு பகுதியில் பெண்களுடைய எழுத்தறிவு 60 சதவிகிதமாக இருந்தால், தொடர்ந்து புத்தகங்கள் வாசிக்கிறவர்களின் எண்ணிக்கை பதினைந்து சதவிகிதத்திலிருந்து முப்பது சதவிகிதம்வரை இருக்கலாம். ஏனைய விழுக்காடு மக்களுக்கு எழுத்துக் கூட்டியாவது படிக்கவும், ஓரளவுக்கு எழுதவும் தெரியும் என்பதே அர்த்தம்.

அடுத்து எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட சில முடிவுகள் பள்ளி, கல்லூரிகளில் அனுமதிக்கப்படுகிற மாணவர்களின் எண்ணிக்கையிலான விசயங்கள் இதில் அடங்கும். இதில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆரம்பப் பள்ளிகளில் இருக்கின்ற குழந்தைகளின் விழுக்காடு 97 சதவிகிதம் என்று சொல்கிறார்கள். அதில் ஒன்றும் பெரிய மாற்றம் இல்லை.

தேர்ச்சி விழுக்காடு என்பதில் சில பிரச்சினைகள் இருக்கின்றன. தேர்ச்சி விழுக்காட்டைப் பொறுத்தவரை தமிழக அளவில் ஆரம்பப் பள்ளிகளில் 97 சதவிகிதம் இருக்கின்றன. ஆனால் இதில் வாசிப்புநிலை 35 சதவிகிதம் பேர் மட்டுமே. இந்த 35 சதவிகிதம் பேர் மட்டுமே வாசிக்கிறார்கள் என்றால் 97 சதவிகிதம் பேர் எப்படித் தேர்ச்சி அடைகிறார்கள்?

இங்கு என்ன பிரச்சினை என்றால் அரசாங்கம் தேர்ச்சி விழுக்காட்டை மட்டுமே மையப்படுத்துவதால் ஆசிரியர்கள் அதை நோக்கியே கவனம் செலுத்துகிறார்கள். வாசிப்பு என்பது இங்கு இரண்டாம் பட்சமான ஒரு விசயமாகி விட்டது. இதில் அமைப்பு ரீதியிலான பிரச்சினைகள் இருக்கின்றன. அரசாங்கம் வாசிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தால் ஆசிரியர்கள் அதைச் செய்வதற்குத் தயாராகத்தான் இருக்கிறார்கள்.

நம்ம கல்வித்துறையைப் பொறுத்தவரைக்கும் அரசாங்கம் சில விசயங்களை நினைத்துக் கொண்டு, எதிர்பார்ப்புடன் அதைச் செய்யச் சொல்கிறார்கள். ஆனால் இதில் செய்யச் சொன்ன விசயம் நடக்கிறதே தவிர, அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அது நடக்கவில்லை. உதாரணமாக அறிவியல் பரிசோதனைகள் நம் பாட புத்தகங்களில் இருக்கின்றன. ஆனால் அது பாடமாக மட்டுமே நடத்தப்படுகிறதே தவிரப் பரிசோதனைகள் நடத்தப்படுவதில்லை.

தமிழ்நாட்டின் பள்ளிகளில் பாடத் திட்டம் குறித்து ?

தமிழ்நாட்டு மாணவர்கள் நம்ம பாடத்திட்டப்படி நிறைய படிக்கிறார்கள். ஆனால் எதையுமே ஆழமாகக் கற்றுக்கொள்வதில்லை. உதாரணமாக ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர் களின் அறிவியல் பாடத்திட்டத்தில் Nuclear Physics தவிர இயற்பியல், வேதியியல், உயிரியல் என ஏறக்குறைய எல்லா அறிவியல் பகுதிகளும் இருக்கின்றன.

இதில் நிறைய விசயங்கள் இருந்தாலும் அதில் இருந்து ஒன்றை மட்டும் எடுத்து என்ன புரிந்திருக்கிறது என்று கேட்டால் மாணவர்களுக்குத் தெரிவதில்லை. பாடப் புத்தகங்களில் இருக்கின்ற அதே கணக்குகளை எண்களை மட்டும் மாற்றிக் கொடுத்தால்கூடத் தீர்க்க முடியாமல் மாணவர்கள் தவிக்கின்ற அளவிற்கு ஆழமே இல்லாத அகலமான பாடத் திட்டம் நம் கல்வி முறையில் இருக்கின்றது.

என்னுடைய நேரடி அனுபவத்தைப் பொறுத்த வரைக்கும் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புவரை நிறைய அறிவியல் பாடங்களைப் படிக்கிறார்கள். நான் சந்தித்த மாணவர்களைப் பொறுத்தவரை என்ன தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்றால் உயிர்ப் பொருள்கள் செல்களாலும், உயிரில்லாப் பொருள்கள் அணுக்களாலும் உருவாகியிருக்கின்றன என்று சொல்கிறார்கள். ஆனால் செல்கள் அணுக்களால் உருவாகியிருக்கின்றன என்கின்ற விசயம் அவர்களைச் சென்றடையவில்லை.

இது போன்ற மாணவர்கள் பிற்காலத்தில் ஆசிரியர் பணிக்கு வரும்பொழுது மாணவர்கள் மத்தியில் விவாதம் நடத்துவது மாணவர்களைக் கேள்வி கேட்கவைப்பது போன்ற கற்பித்தல் முறைகள் இவர்களுக்கு எப்படிச் சாத்தியமாகும்? இவர்களே கேள்வி கேட்காத பொழுது மாணவர்களை எப்படிக் கேள்வி கேட்க வைப்பார்கள்?

அடுத்த தலைமுறையும் இதே சுழற்சியில் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை. எதையுமே சரியாகப் புரிந்துகொள்ளவும் இல்லை. இது ஒட்டு மொத்தக் கல்வி அமைப்பிலும் பரவியிருக்கிறது. இதை நாம் தகர்க்க வேண்டும். குறைந்த அளவு கற்றாலும் அதை ஆழமாகக் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு ஏற்றாற்போல் நம் கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும்.

இன்றைய மாணவர்களின் நிலை பற்றி உங்கள் கருத்து?

இன்றைய மாணவச் சமுதாயத்திற்கு என்ன தேவை என்றால் நிறைய வாசிக்க வேண்டும். மற்ற உலக நாடுகளோடு ஒப்பிடும்பொழுது சின்னச் சின்ன அறிவுபூர்வமான விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள். பிறகு அதுவே ஆராய்ச்சியாகவும் தொடர்கின்றன. ஆனால் இங்கு அதற்கான வாய்ப்புகள் அதிகமாக இல்லை. நீங்கள் பால்வாடிக் குழந்தைகளிடம் கவனித்தால் தெரியும், அவர்கள் தன்னிடம் உள்ள சின்னச்சின்னப் பொருள்களை வைத்துக்கொண்டு விளையாட்டுத்தனமாக ஏதாவது சோதனைகள் செய்துகொண்டு இருப்பார்கள்.

ஆனால் இவர்கள் வளர்கின்ற போது இது மாதிரியான சின்னச் சோதனைகளில்கூட ஈடுபடுவதில்லை. இதற்கு நம் கல்வி அமைப்பு காரணமா? அல்லது கலாச்சாரம் காரணமா? என்பது தெரியவில்லை. இந்த மாதிரியான விசயங்கள் தொடராததனால்தான் படிக்க வேண்டும் என்கிற மனோநிலை மாறி தேர்வுக்காக மட்டுமே படிக்க வேண்டும் என்கிற நிலைக்குச் சென்று இருக்கிறோம்.

சிறு குழந்தைகளுக்குக் கல்வி பயமுறுத்துகிற பொருளாகவும் வெறுப்பை ஏற்படுத்துகிற விசயமாகவும் மாறியிருக்கிறது ஏன்?

ஏன் என்று என்னால் சொல்ல முடியாது. எப்படி என்று வேண்டுமானால் சொல்கிறேன். இது உலகம் முழுக்க நடந்த விசயம். இந்தியாவில் குறிப்பாகத் தமிழநாட்டில் வெறுப்பைக் காட்டிலும் பயமே அதிகாமாகி இருக்கிறது. வகுப்புகளில் குச்சியால் அடிப்பது, கட்டையால் அடிப்பது, அவமானப்படுத்துவது போன்ற காரணங்களினால் பயம் அதிகமாகி இருக்கின்றன.

இரண்டாவது, நம் தேர்வு முறை. மதிப்பெண்கள் குறைவாக எடுப்பதினாலும் தேர்வில் தோல்வி அடைவதனாலும் சக மாணவர்கள் மத்தியில் தன்னைத் தாழ்வாக எண்ணும் மனப்பான்மை மாணவர்களிடம் அதிகரிக்கின்றது. மூன்றாவது, பள்ளி அமைப்பிலேயே சில பிரச்சினைகள் இருக்கின்றன. சில விதிகளை விதித்து மாணவர்களைக் கட்டுப்படுத்தி வைக்கின்ற இடமாக பள்ளிகள் இருக்கின்றன.

ஓடிவிளையாட வேண்டிய வயதில் காலையில் இருந்து மாலைவரை ஒரே இடத்தில் அமர்ந்து ஆசிரியர் சொல்வதை மட்டுமே கேட்டுக்கொண்டு இருப்பது மாணவர் களுக்குக் கல்வி மீது வெறுப்பையும், சலிப்பையும் ஏற்படுத்துகின்றது. கேள்வி கேட்காமல் ஆசிரியர் சொல்வதை மட்டும் கேட்கிற இந்த மனப்பாங்கு தான் பிற்காலத்தில் அலுவலகத்தில் கேள்வி கேட்க மறக்கிற சூழ்நிலையை உருவாக்குகிறது.

தங்களுடைய சுதந்திரம் பறிபோகும் இடமாக மாணவர்கள் பள்ளிக் கூடத்தை நினைக்கின்றார்கள். இந்த நிலைமை மாற வேண்டும். அதற்கேற்ற சூழ்நிலையைக் கல்வியாளர்கள் உருவாக்க முன்வர வேண்டும்.

இப்போ அதிகம் பேசப்படுகிற சமச்சீர்க் கல்வி மற்றும் தாய்மொழி வழிக் கல்வி குறித்து....

சமச்சீர்க் கல்வி என்பது வரவேற்கப்பட வேண்டிய விசயம்தான். தாய் மொழி வழிக் கல்வியில் சில சந்தேகங்கள் எனக்கு இருக்கின்றன. மேல்தரவர்க்கம் ஆங்கில வழிக் கல்வியைத்தான் விரும்புகிறார்கள். அவர்கள் தாய்மொழி வழிக் கல்விப் பக்கம் செல்வதாகத் தெரியவில்லை. பிறகு யாரை மையப்படுத்தி இந்தக் கல்விமுறை? எல்லோருக்குமான கல்விமுறை என்கிற விதத்தில் தாய்மொழி என்கிற அடிப்படையில் தமிழும் உலகளாவிய போட்டிக்காக ஆங்கிலமும் கற்பிப்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. மற்ற பாடங்களைத் தாய்மொழி வாயிலாக கற்பிப்பது வரவேற்கக்கூடியது. ஆங்கில எதிர்ப்புக்காகத் தமிழைக் கட்டாயப்படுத்துவது ஆரோக்கியமானது அல்ல. சமச்சீர்க் கல்வி சமூக ஏற்றத் தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கான கருவிகளுள் ஒன்றாக இருக்கும் என்று நம்புவோம்.

இன்றைய மாணவர்களிடம் ஆங்கிலம் பற்றிய பயமும் தாழ்வு மனப்பான்மையும் உள்ளது பற்றி....

இன்றைய கல்வி அர்த்தத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இல்லை. ஆங்கிலத்தை பொறுத்தவரை இலக்கணத்துக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தைப் பள்ளி அளவில் நாம் பேசுவதற்குக் கொடுக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் அதிகம் பேச வாய்ப்புக் கொடுத்தாலே போதும். அவர்கள் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்து விடுவார்கள். கிராமங்களிலிருந்து படிக்க வருகிற மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச அதிகமாகவே ஆர்வமாயிருக்கிறார்கள். மொழி என்பது முக்கியமான விஷயம். ஆனால் இங்கு ஆங்கிலம் என்பது மொழி என்பதைக் கடந்து தேர்வுகளுக்கும் மதிப்பெண்களுக்கும் மட்டுமே அளவுகோலாய் மாறியிருப்பது வருந்தத்தக்கது.

தவறுதலாய்ப் பேச ஆரம்பித்தால்தான் மொழியைச் சரியாகப் பேசமுடியும் என்கிற கருத்து நமக்குள் வர வேண்டும். ஆங்கில வகுப்புகளில் தேர்வு, மதிப்பெண் போன்ற கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து ஆங்கிலத்தில் பேசினால் போதும் என்ற நிலைமையை உருவாக்கினால் கண்டிப்பாய் ஆங்கிலம் பற்றிய தாழ்வு மனப்பான்மை மறைஞ்சிடும்.

ஒரு நாட்டின் தலையெழுத்து அரசாங்கத்தாலோ, சட்டங்களாலோ நிர்ணயிக்கப்படுகிற விசயமில்லை. அது மக்களைப் பொறுத்து நிர்ணயிக்கப்பட வேண்டும். மக்களை நிர்ணயிக்கிற கல்வி சரியானதாய், தெளிவானதாய், முறையானதாய், காலத்திற்கு ஏற்றதாய் இருக்கும் பட்சத்தில் சமுதாயம் பயணிக்கத் தொடங்கும்.
Pin It