இந்நூல் சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ள நான்காவது சிறுகதைத் தொகுப்பாகும். அ.சிதம்பரநாதன் செட்டியார் முதல் தொகுப்பையும், எழுத்தாளர் அகிலன் இரண்டாம் தொகுப்பையும், எழுத்தாளர் சா. கந்தசாமி மூன்றாவது தொகுப்பையும் செய்துள்ளனர். பெண் பிரச்சினைகளை மையமிட்டு, பெண்ணிய நோக்கோடு தொகுக்கப்பட்ட இந்நூல் நான்காவது தொகுப்பாக வெளிவந்துள்ளது. இஃது ஒரு நூற்றாண்டுக் கதைகளின் தொகுப்பாகும். ஒரு பெண்ணே இத்தொகுப்பைச் செய்துள்ளது பொருத்தமானதாகவும், பாராட்டுக்குரியதாகவும் அமைந்துள்ளது.

இத்தொகுப்பின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், ஆண், பெண் என்ற வேறுபாடின்றி இருபால் எழுத்தாளர்களும் ஒத்து நோக்கப்பட்டுள்ளனர். பெண்ணியம் என்ற பெயரில் ஆண் எழுத்தாளர்கள் ஒதுக்கப்படவில்லை. மேலும், இத்தொகுப்பின் வழி, தமிழ் இலக்கிய உலகில் பெண்ணிய எழுச்சியைத் தொடங்கி வைத்தவர்களே ஆண்கள்தான் என்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. தொகுப்பாசிரியர் முனைவர்.இரா. பிரேமா அவர்களே இத்தொகுப்பில் உள்ள கதைகளை ஆய்வுக்குட்படுத்திச் சில முடிவுகளுக்கு வந்துள்ளார். அம்முடிவுகள் முன்னுரையாக நின்று இந்நூலுக்கு அணி சேர்க்கின்றன.

பெண்களின் பிரச்சினைகளை எழுத்தாளர்களில் சிலர் ஆழமாகப் பார்த்துள்ளனர். சிலர் போராட்ட முனைப்புடன் பார்த்துள்ளனர். சிலர் தனக்கான பிரச்சினையாகப் பார்த்துள்ளனர். சிலர் தள்ளி நின்று சமூகப் பிரச்சினையாக மட்டும் பார்த்துள்ளனர். சிலர் பிரச்சினைகளுக்கான காரணங்களை இனங்காண முற்பட்டுள்ளனர். வேதனை, ஆவேசம், எதிர்ப்பு, முடிவெடுத்தல் என்று பன்முனைத்தாக்குதல்கள் இக்கதைகளின் வழி ஆணாதிக்கத்திற்கு எதிராக நடந்தேறியுள்ளன.

இக்கதைகள் மூலம், ஆண்கள் எழுத்து, பெண்கள் எழுத்து இரண்டையும் தனித்தனியாக அளவிட முடிகிறது. ஆண்களின் எழுத்தில் பெண் சமூகம் பற்றிய தார்மீக அக்கறையும் அடிபட்டுத் துவண்டு அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் பெண்களைத் தோள் கொடுத்துத் தூக்கிவிட வேண்டும் என்ற நோக்கமும் வெளிப்பட்டுள்ளன. பெண்கள் மீதான அக்கறை பெரும்பான்மையான எழுத்தாளர்களிடம் மிதமாகவும் ஒரு சில எழுத்தாளர்களிடம் வீரியம் மிக்கவையாகவும் வெளிப்பட்டுள்ளன. கைம்மைக் கொடுமை, குழந்தை மணம், காதல் மணம், கலப்பு மணம், விதவை மறுமணம், பாலியல் பலாத்காரம், பெண் கல்வி, பெண்கள்மீது பலவந்தமாகத் திணிக்கப்படும் ‘கற்பு’ கருத்தாக்கம், பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஆணாதிக்க வன்முறைகள் என்பன அவர்கள் எழுத்தில் கருப்பொருள்களாக அமைந்துள்ளன.

விந்தன், அசோகமித்திரன், பிரபஞ்சன் ஆகியோர் இல்லத்திற்குள் பெண்ணுக்கு இழைக்கப்படும் வன்முறைகளைக் கதைப்படுத்தியுள்ளனர். மாதவையா, பாரதி, சிட்டி ஆகியோர் தங்கள் கதைகளில் குழந்தை மணக்கொடுமையைப் பேசியுள்ளனர். மாதவையாவும் பாரதியும் அத்துடன் கைம்மைக் கொடுமையையும் இணைத்துப் பேசுகின்றனர். கு.ப.ரா.பெண்களுக்கான பாலியல் உரிமை பற்றிப் பேசியுள்ளார். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், நா. பார்த்தசாரதி, அய்க்கண் போன்றோர் வெவ்வேறு தளங்களில் பாலியல் பலாத்காரம் பற்றிப் பேசியுள்ளனர். அப்பிரச்சினைக்கு அவரவர் பாணியில் தீர்வுகளை முன் வைத்துள்ளனர். கல்வி, வண்ண நிலவன் இருவரும் கைம்மைப் பிரச்சினைக்குக் கல்விதான் தீர்வு என்கின்றனர்.

அகிலன் சுய சிந்தனை உடைய பெண்ணையும், பா.ஜெயப்பிரகாசம் நவீன விடுதலைப் பெண்ணையும், சமுத்திரம் வரலாற்றில் முகமற்றுப் போன போராளிப் பெண்ணையும், கலைஞர் மாறுபட்ட கோணத்தில் புராண நளாயினியையும் படைத்துக் காட்டியுள்ளனர். பெண் எழுத்தாளர்கள் எழுதிய கதைகளில் வரதட்சணை எதிர்ப்பு, மணவிலக்கு, மறுமணம், கணவனின் ஆதிக்கத்தை எதிர்த்தல், வேலை பார்க்கும் பெண்களின் இரட்டை வேலைச் சுமை, திறமையை முடக்கும் சமையலில் இருந்து விடுதலை, ஆண் / பெண் நட்பு, ஆணாதிக்க வன்முறைகளுக்கு எதிர்ப்புக்குரல், சுயகௌரவம், சுயகாலில் நிற்றல், ஜாதத்திற்கு எதிரான போர்க்கொடி, சமூக விழிப்புணர்வைப் பிற பெண்களிடத்துப் பரப்புதல் என்பனக் கருப்பொருள்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஆண்கள் எழுத்தைவிடப் பெண்கள் எழுத்தில் தீவிரக்குரல் ஒலிக்கிறது.

காலம் காலமாக அடக்கப்பட்டு முடக்கப்பட்டுவிட்டோம் என்ற ஆவேசம் வெளிப்பட்டுள்ளது. அவர்கள், ஆண்களின் அடக்குமுறைக் கோட்டையைச் சொற்கள் என்ற உளிகொண்டு பிளந்துள்ளார்கள். எனவே, பெண் எழுத்துகளில் வேகமும், தாக்குதலும் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆண் எழுத்தில், பெண்களை அடிமைப்படுத்திய ஆண்கள் மீதான கோபம் வெளிப்படவில்லை. அடங்கிப் போன பெண்கள் மீதான அக்கறை மட்டுமே வெளிப்பட்டுள்ளது. எழுத்தின் நோக்கம் இரு பாலாருக்கும் ஒன்றுதான் என்றாலும், சுய அனுபவம் பெண்களை அதிரடியாக முடிவெடுக்க வைத்துள்ளது என்பதையும் இத்தொகுப்பின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

மேலும் இத்தொகுப்பின் வழி, விடுதலைப் பெண்களின் பல்வேறு முகங்களை அறிந்துகொள்ள முடிகிறது. சுய உணர்வை மதிப்பவளாக, மரபுத்தளையை உடைத்தெறிந்து வெளி வருபவளாக, படித்துத் தன் காலில் நிற்பவளாக, ஆணாதிக்கத்தை எதிர்த்து விசுவரூபம் எடுப்பவளாக, நியாயத்திற்காகப் போராடுபவளாக, போலியான பெண்மையைக் கட்டுடைப்பவளாக, தன்மீது திணிக்கப்படும் வன்முறைக்கு ஆட்படாமல் அதை எதிர்த்துப் போராடுபவளாக, போராடி மீட்சி பெறுபவளாக என்று சூழலுக்கு ஏற்ப அவர்கள் அவதாரங்கள் எடுத்துள்ளனர்.

இந்நூல், எழுத்தாளர்களின் காலத்தை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளதால், காலந்தோறும் பெண்களின் பிரச்சினைகள் மாறுபட்டுள்ள விதத்தை அறிந்து கொள்ள முடிகிறது. 1960 கள் வரை ஆண்கள் பெண் விடுதலையைப் பற்றி அதிகம் பேசியுள்ளனர். அக்காலக் கட்டத்தில் எழுதிய பெண் எழுத்தாளர்கள் மிகக் குறைவு. அவர்களும் காதல், திருமணம், குடும்ப பந்தம், பாசம் இவற்றிலிருந்து மீறி வந்து தங்களுக்கான பிரச்சினைகளைப் பேசியுள்ளது மிகக் குறைவு. அறுபதுக்குப் பின், பெண் எழுத்தாளர்கள் தங்களுக்கான பிரச்சினைகளை அதிகம் பேசியுள்ளனர். இக்காலக்கட்டத்தில் ஆண் எழுத்தாளர்கள் பெண் பிரச்சினைகளில் அதிகம் ஈடுபாடு காட்டவில்லை.

இவ்வாறாக, இத்தொகுப்பு, தமிழினப் பெண்களின் சமூக வரலாற்றை அறியத் துணைபோவதாகவும், ஆண் பெண் எழுத்தாளர்கள், பெண்களின் பிரச்சினைகளை அணுகும் பாங்கினை அடையாளம் காட்டுவதாகவும் அமைந்து, தமிழ் வாசகர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் ஒருசேர பயன் சேர்க்க விழைகின்றது. மொத்தத்தில் இத்தொகுப்பு, காலத்திற்கு ஏற்ற புது வரவாகும். முனைவர். இரா.பிரேமா பாராட்டிற்குரியவர்.

நூல் : பெண் மையச் சிறுகதைகள்
தொகுப்பு : இரா.பிரேமா
வெளியீடு : சாகித்யஅகாதமி
பக்கங்கள் : 361
விலை : 175
Pin It