ஊர்,சேரி என்பதைப் போல் வருணம் இந்தியாவை இரண்டு கூறாய்க் கிழித்துப் போட்டிருக்கிறது. கல்வி அதற்கு விதிவிலக்கல்ல. எனவே தான் ஒரே தேசத்துக் குழந்தைகளுக்கு நான்கு விதமான ‘தரங்களில்’ பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கான காரணம் பணக்காரன்-ஏழை என்ற வர்க்கப் பார்வை மட்டுமல்ல பயனாளிகள் யார் என்பதைப் பொறுத்தே இந்தியாவில் எதுவும் தீர்மானிக்கப்படுகிறது. இந்தியாவின் 110 கோடி மக்களில் ஏறக்குறைய 30% பேர் தலித்துகள் என்பது மறைக்க முடியாத அழுத்தமான உண்மை.

அய்.ஏ.எஸ் உள்ளிட்ட பதவி வகிக்கும் ‘முதல்நிலை வகுப்பினர்’ வீட்டுப்பிள்ளைகள் அடுத்த தலைமுறையிலும் அரசாளும் நோக்கத்துடன் ‘சி.பி.எஸ்.சி’ பள்ளியில் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். இது வேடிக்கையோ அல்லது விந்தையோ அல்ல. ஏனெனில் இந்தியாவில் ‘அதிகாரம் கைமாற’ ஒரு போதும் அனுமதிக்கப்பட்டதில்லை.

மேலே இருப்பதைப் பார்த்து ஏங்கும் குழந்தை மனோபாவம் கொண்டது மாதச் சம்பளம் பெறும் மத்தியதர வர்க்கம். தான் எட்ட முடியாத உயரத்தை மெட்ரிகுலேஷன் அட்மிஷன்களால் சாதிக்க முடியும் என நம்பித் தொலைக்கிறார்கள். எனவேதான் சோற்றுப் பானையில் பருக்கை இல்லாவிட்டாலும் மம்மி, டாடி என்று கேட்டுக் கொண்டே வயிற்றை நிரப்பிக் கொள்கிறார்கள்.

அரசு அதிகாரிகளைக் ‘கண் கண்ட தெய்வங்களாய்’ கருதும் ஏழை விவசாயக் கூலிகளின் பிள்ளைகளுக்கு அடிப்படை வசதிகளற்ற அரசுப் பள்ளிகளில்தான் ‘அறிவுக்கண்’ திறக்கப்படுகிறது. ‘கல்விக்கண்’ திறக்கும் அங்கோ கரும்பலகையோ கட்டடங்களோ இல்லை என்பதும் ஆசிரியர்களோ இன்ன பிற வசதிகளோ இல்லை என்பதையும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக அரசு கருதுவதில்லை. எனவேதான் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓர் ஆசிரியர்கூட இல்லாமல் இரண்டு ஆண்டுகள் தொடக்கப்பள்ளி இயங்க முடிகிறது என்பதைப் பத்திரிகைகள்தான்; பரபரப்பாகப் பேசின.

வர்க்க வேறுபாடுகள் கடந்து விற்பனைப் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரி எல்லோருக்கும் பொதுவானதுதான். வசூலிக்கப்பட்ட வரியைக் கல்விக்கு அரசு செலவிடுகிற போதுதான் மாற்றாந்தாய் மனப்பான்மை தலைதூக்குகிறது. அய்.ஏ.எஸ் அதிகாரி வீட்டுப்பிள்ளைகள் படிக்க சி.பி.எஸ்.சி பள்ளியையும் ஏழைக் கூலித்தொழிலாளிகளின்; பிள்ளைகள் படிக்க அரசுப் பள்ளியையும் அரசு அடையாளப்படுத்துகிறது. சாமானிய மனிதனின் பிள்ளைகள் படிக்கும் ‘சவளைப்பிள்ளை’யான அரசுப்பள்ளிகள் அல்லது மாநகராட்சிப் பள்ளிகள் எத்தனை மேதைகளை உருவாக்கித்தரும் என்பது அரசு மட்டுமே அறிந்த பரம இரகசியம். சூட்சுமம் அந்த சூத்திரதாரிகளுக்கு மட்டுமே புரியும்!

எதுவுமற்ற ஏழைகளுக்கு அரசுப் பள்ளிகள் ‘அறிவுச்சுரங்கம்’ என்றாக்கிவிட்டு யாரோ ஒரு மனிதன் தன்னந்தனியாய்ப்; படித்து உயர்ந்து சமூகத்தின் கவனத்தை ஈர்க்கிற போது ‘அவரும் அரசுப் பள்ளியில் படித்தவர்தான்’ என்று அடையாளப்படுத்திவிட்டு தங்கள் தவறுகளை மூடி மறைக்கிறது அதிகாரவர்க்கம். ஆனால் அந்த அறிவுச் சுரங்கத்தில் பயிலும் மாணவர்கள் தான் பெரும்பாலும் ‘இடைநிற்றலுக்கு’(Drop outs) ஆளாகி சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். வறுமை அப்பிள்ளைகளின் வாழ்வுரிமையில் கை வைக்கிறது. டாலர் கொடுக்கும் ‘ எசமானுக்குக்’ காட்டும் விசுவாசத்தில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட வரிகொடுக்கும் குடிமகனின் மீது காட்டாத அரசை?

கறைபடிந்த கல்விமான்கள் உருவாக்கிய வரலாற்றுப் பாடங்களில் ‘கறை’ படிந்துகிடக்கிறது. இரண்டு விதமான வரலாறு இந்தியாவில் மட்டும்தான் சொல்லித் தரப்படுகின்றது. ஆரியர்கள் ஆடுமாடுகளை மேய்ப்பதற்கு இந்தியாவிற்கு வந்து குடியேறினார்கள் என்ற உண்மை அரசுப் பள்ளியிலும் இந்தியாவின் பூர்வீகக் குடிகள் ஆரியர்களே என்று அதிகாரவர்க்கத்துப் பிள்ளைகள் படிக்கும் ‘சி.பி.எஸ்.சி’ பள்ளியிலும் சொல்லித்தரப்படுகின்றன. இந்துத்துவக் கருத்தியல்களை இப்படிக் கற்றுத் தேறுகிறவர்கள்தான் ஆளும் அதிகார வர்க்கமாக உருவெடுக்கிறார்கள்.

இப்படித்தான் இந்தியாவின் வரலாற்றில் ‘வன்மம்’ வழிந்து கொண்டு இருக்கிறது. இத்தகைய வகுப்பு வெறியைத் தூண்டும் ‘சிபிஎஸ்சி’ பள்ளிகள் ஆக்கிரமித்திருக்கும் வட இந்தியப் பகுதிகளில் அடிக்கடி பரவும் மதக்கலவரங்களும் இடஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டங்களும் வன்மம் நிறைந்த படிப்பித்தலின் வடிகால்கள். எனவே அதிகாரக் குவியல் பரவலாக்கப்பட்டு கல்வி கைமாறி மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் வந்தால் மட்டுமே இந்த வக்கிரங்களைத் தடுக்க முடியும். இத்தகு ஆபத்தான கல்வி கற்பித்தலில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டியது அவசரத் தேவையாகும்.

மனப்பாடம் செய்யவும் மறுபடியும் நினைவூட்டி எழுதவும் மட்டுமே கற்பிக்கப்படும் கல்வி மனித எந்திரங்களைத்தான் உற்பத்தி செய்யுமே தவிர மானுடம் நேசிக்கும் மகத்தானவர்களை உருவாக்காது. ஆளாய்ப்பறக்கும் அய்.டி துறையில் நுழைய இளைஞர்களுக்கு இருக்கும் ஆர்வமும் அக்கறையும் ஏற்றத் தாழ்வுள்ள சமூகத்தில் ஊழலும் ஏழைகளின் நிலைமாற்ற வேண்டும் என்பதில் இல்லை. சமூக முரணைச் சட்டைசெய்யாத ‘சதைப்பிண்டங்களை’ வளர்த்தெடுப்பது நல்ல கல்வியாக இருக்க முடியாது. உயிருள்ள அடிமைகளைக் காட்டிலும் உணர்வற்ற எந்திரங்களே மேல்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட தருணத்தில் பத்து ஆண்டுகளுக்குள் பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கல்வியளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அறுபது ஆண்டு களைக் கடந்த பின்னும் அந்த இலக்கை அடையமுடியாமல் இருப்பது அரசின் அவலம். சட்டத்தைக் காட்டிலும் ‘சனாதனம்’ உயர்வாக மதிக்கப்படுவதாலும் ஏழைகளுக்கு நீதி எப்படிக் கிடைக்கும்? ஏனெனில் அனைவருக்கும் சமமாகக் கல்வி கொடுங்கள் எனக் கேட்க அறிவாளிகளுக்கே அறுபதாண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

ஏழ்மைதான் இந்தியக் குழந்தைகளின் கல்விக்குத் தடையெனில் அதன் மூலவேரைக் கண்டறிய வேண்டும். ஏழ்மைக்குக் காரணமே இந்தியாவின் தேச வளங்கள் எல்லோருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படாததுதான். முதலாளி ஆலை தொடங்க விவசாயத் தொழிலாளிகளின் நிலங்கள் பறிக்கப்படுகின்றன. மறுத்தால் ‘காம்ரேட்களே’ கூட உயிரைக்காலி செய்யத் தயங்க மாட்டார்கள். சுரண்டல் நிலவும் சமூகத்தில் ஏதாவது ஒருவடிவில் ஏற்றத்தாழ்வு இருந்து கொண்டேதான் இருக்கும்.

எனினும் வறுமையான வாழ்க்கைச் சூழுலுக்கு ‘வாழப் பிறந்த குழந்தைகள்’ பொறுப்பாளிகள் அல்ல. என்றாலும் தண்டனை அனுபவிக்கிறார்கள். பிரிவினைவாதம் என்பது நாட்டைப் பிரிப்பது மட்டுமல்ல நடமாடும் மனிதனைப்; பிரித்து வைப்பதும்தான்.

உயர்தரக் கல்வியைப் பெறுவது ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமை! எந்தக் காரணத்தைச் சொல்லி அதனைத் தடுத்தாலும் அதுவும் ஒடுக்கு முறையே! கடந்த அறுபது ஆண்டுகளில் அரசே குழந்தைகளுக்கான கல்வி உரிமையை மறுத்து ஒதுக்கியதால் அல்லது ஒடுக்கியதால் எத்தனையோ மேதைகளை நாடு இழந்திருக்கிறது! ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்! குழந்தைகளை ஒடுக்கும் சமூகம் எதிர்காலத்தைப் புதைத்துக் கொண்டிருக்கிறது.!!

அடிமைகள் அடங்கினால் அதிகாரம் கோலோச்சும்!

அவர்களே திமிறினால்?
Pin It