நுரைதள்ளி கால் மடிந்து நிலம் பதியும்
புரவி போலவும்
மண்ணில் தலை அறைந்து
ரத்தினம் கக்கிச் சாகும்
நாகம் போலவும்
பொங்கி எழுந்து நுரை வழிய
கரையில் இளைப்பாறிப் போகும்
அலை போலவும்
விழுந்தெழுந்து விழுந்தெழுந்து
மீண்டும் விழுந்தெழும்
இரவி போலவும்
தினந்தோறும் இயங்கி
வெற்றிடத்தில் வெடித்துச் சிதறி
அண்டமாகும்
காமத்துக்கப்பால்
வசிக்கிறது
காமத்தை எளிமையாக்கும்
தேனு.

தேவியின் கருணை

களைத்துப்போய்
ஆயுதமிழந்து நின்றேன்
கனிந்து
“இன்று போய் நாளை வா”
என்றாள் !

Letch me என்பது வினைத்தொகை

அவளுக்கு பல பெயர்கள்
மொழி என்பதும் இலக்குமி என்பதும்
அவற்றில் இரண்டு

உடல் முழுதும் இசை நரம்புகளால்
பின்னி இறுக்கப்பட்ட ஒருவனை அவள்
தேடிக்கொண்டிருந்தாள்

தொட்ட அரை மாத்திரையில் ‘ஜி’ ஸ்ட்ரிங்காய்
நுனியளவு அதிரச்செய்யும்
நரம்புகள் கொண்டவன்

அசைகளை மொழியின் ஆழங்களில்
அசைப்பவன்

குறிஞ்சியையும் முல்லையையும்
விரல்களால் உயிர்பிப்பவன்

மணலாரண்யங்களில் குழிபறித்து
பழங்காலரசங்களைத் தேடுபவன்

பார்க்குமிடங்களிலெல்லாம்
அவனைத் தேடிக்கொண்டிருந்தவள்
நீலகிரிவிரைவுவண்டியின்
குளிர்ப்பெட்டியில்
ஒருநாள் அதிகாலை
உறக்கத்திலிருந்து அதிர்ந்தெழுந்தாள்

அவள் ஏங்கிக்கொண்டிருந்த
மீட்டல் அவளுக்குக் கேட்கத் துவங்கியது

அதிசயித்த அவள் அறிந்திருக்கவில்லை
இருகூரின் தண்டவாளங்கள்
இரும்பால் செய்யப்பட்டவை அல்ல
இசையால் செய்யப்பட்டவை என்று.

(அன்புக்கவிஞன் ‘இசை’க்கு)

Pin It