பெருமாள் சாக்கை விரித்துப் போட்டு வாசலுக்கு அருகில் படுத்திருந்தான். பறவைகளின் நிழல் அவன் மார்பை கடந்து போனதும் கண் விழித்துப் பார்த்தான். மஞ்சள் மூக்கு மைனாகள் பறந்து செல்கிற பொழுது இது. வாசல் முன் நாய்கள் ஊளையிட்டுத் திரிந்தது. வீட்டினுள் படுத்திருந்த குழந்தைகள் மேல் வெளிச்சம் உடையை போல படர்ந்து நின்றது. பெரிய பிள்ளையின் தொடையில் கொப்புளம் கிளம்பியிருந்தது. ஏற்கனவே இருந்த கொப்புளம் உடைந்து புண்ணாகி விட்டது. சின்னதாயி ஈ மொய்த்துவிடாமல் இருக்க வேண்டுமென்பதற்காக பச்சிலையை புண்ணின் மேல் அப்பி வைத்திருந்தாள். அவளது கால்விரல்களில் சேற்றுப்புண் வந்து ஆறாமலே இருக்கிறது. வைத்தியரிடம் காட்டி அசந்து விட்டவள் இருக்கட்டுமென்று விட்டுவிட்டாள். வீட்டினுள் ஈக்கள் ‘கொய்ங’; என்று சுற்றிக்கொண்டிருக்கிறது.

பெருமாள் எதிரேயிருந்த பொன்ராஜின் வீட்டைப் பார்த்தான். சுண்ணாம்பு மதிலின் மேல் காகங்கள் அமர்ந்திருந்தன. மசங்கிய நேரத்தில் இரண்டு காகங்கள் தங்கள் அலகைத் திறந்து ஒன்றுக்குள் ஒன்று வைத்து விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் அவனுக்கு உயிர் நின்று விடுவது போலிருந்தது. தான் இறந்த பிறகு பிள்ளைகளும் மனைவியும் என்ன செய்யப் போகிறார்கள் என்ற கவலையில் எழுந்து உட்கார்ந்து கொண்டான். அவனது வீட்டிற்கு முன் விடாது நாய்கள் ஊளையிட்டுக் கொண்டிருந்தது.

பொன்ராஜ் தெருவில் கிடந்த கல்லை எடுத்து வீசிவிட்டு தன் வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டான். நாய்கள் தெருவைத் தாண்டி வேறு பக்கமாக ஓடத்தொடங்கின. பொன்ராஜ் எதிரேயிருந்த பெருமாள் வீட்டிற்குச் சென்றான். திண்ணையில் படுத்திருந்தவன் அவனைப் பார்த்ததும் எழுந்து உட்கார்ந்து கொண்டான். திண்ணையின் தளம் பெயர்ந்து கூரை ஊனுகம்பு ஆடிக்கொண்டிருந்தது. இந்த வீட்டிற்கு பெருமாளும் அவனது மனைவியும் குடிவந்த போது பொன்ராஜ் தான் கூரை மேய்வதற்கென வெட்டுக்கை மரங்களை தயார் செய்து போட்டது. குடி வந்தவுடனே கைமரத்தில் கொட்டாளாம் கிளவி வந்து கூடி கட்டி விட்டது. கொட்டாளாம்கிளவி பூச்சி வந்து கூடு கட்டினால் நல்லது என்று முத்தமக்கா சொல்லியிருக்கிறாள். வீட்டிற்கு குடிவந்த புதிதில் சிரிப்பும் காசுமாக இருந்தவர்கள் தான். வாசலிலிருந்தபடி பிள்ளைகளின் முகங்களை பொன்ராஜ் பார்த்தான். “டவுனுக்குப் போனவங்க யாராச்சும் வந்து வேலையிருக்கிறதைப் பத்திச் சொன்னாங்களா அண்ணே”

பெருமாள் ஒன்றும் பேசவில்லை. அமைதியாக உட்கார்ந்திருந்தான். அவன் பேசக்கூடாது என்று முடிவு செய்திருந்தான். பேசினால் தான் ஏதாவது உளறி வைத்துவிடுவோம் என்று நினைத்தான். பொன்ராஜ் அவனது முகத்தை பார்த்துவிட்டு “ஏன் உடம்புக்கு சுகமில்லையா” என்று கேட்டான். இல்லையென்பது போல தலையாட்டினான். பொன்ராஜ் எழுந்து வீட்டிற்குள் சென்று பார்த்தான். அடுப்பில் ஒன்றுமில்லை. சின்னத்தாயை எழுப்பி விட்டான். பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்குப் போகவில்லை. பள்ளிக்கூடத்திற்குப் போயிருந்தால் சோறு சாப்பிட்டிருப்பார்கள். கொப்புளம் எல்லாத்திற்கும் பரவிவிடும் என்று டீச்சரம்மா வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.

சின்னத்தாய் எழுந்தவள் சேலையை இழுத்து விட்டுக் கொண்டாள். பிள்ளைகள் உறக்கம் வராமல்தான் கிடந்தனர். அவனது சத்தத்தைக் கேட்டும் எழுந்திருக்க முடியாமல் கிடந்தனர்.

ரேஷன் கடையில் வாங்கிய அரிசி தீர்ந்துபோயிருந்தது. பொன்ராஜ் என்ன செய்வது என்று புரியாதவனாக வீட்டிற்கு வந்தான். பாக்கியம் அழுது கொண்டிருந்த பிள்ளைக்குப் பால் தந்தபடி செவ்வானம் மறைந்து வருவதை பார்த்தாள். அடுப்பில் இன்னமும் உலை வைத்திருக்கவில்லை. வீட்டில் அரிசி இல்லை. கேப்பை மாவுதான் சட்டியில் கிடக்கிறது. ரேஷனில் போன வாரத்திற்கு போட வேண்டிய அரிசி இன்னமும் போடவில்லை.

அரிசி வரவில்லை என்று கடையை மூடியே வைத்திருக்கிறார்கள். அவளுடன் அன்னலெட்சுமியும் சின்னத்தாயும் கடைக்குத் தினமும் நடந்து போய் அசந்து போனார்கள். அரைக்கீரையை தோட்டத்திலிருந்து அறுத்துக் கொண்டு வந்து கடைந்து கேப்பைக்கழியை கிண்டி பிள்ளைகளுக்குப் போட்டார்கள். பிள்ளைகளின் திரேகம் உஷ்ணமாகி உட்காருகின்ற இடத்திலும் கட்கத்திலும் கொப்புளங்கள் வந்து விட்டது. பச்சிலைகளை வைத்து அமுக்கிக் கட்டி விட்டார்கள். சின்னப் பிள்ளைகளுக்கு இப்படியென்றால் பெரியவர்களுக்கு வயிறு நிறையாத வேதனை. கண்கள் குழிவிழுந்து முகம் களையிழந்துவிட்டது.

பொன்ராஜ் எழுந்து வீட்டிற்குள் சென்றான். மலைவாய் பொழுதும் கடந்துவிட்டது. பாக்கியம் அவனது முகத்தைப் பார்த்தவளாக எழுந்து கொண்டாள். அரிக்கேன் விளக்கை எடுத்துத் துடைத்து மண்ணெண்ணெய் இருக்கிறதா என்று ஆட்டிப் பார்த்தான். எண்ணெய் இருந்தது. திரியைத் தூண்டிவிட்டு பொருத்தி விட்டான். அவள் உட்கார்ந்திருந்த சாணி மொழுகிய தரையைச் சுற்றி விளக்கின் வெளிச்சம் விழுந்து பரவியது. செம்மஞ்சள் ஒளியும் மண் மதிலுமாக கிடந்த இருட்டில் அவளது முகத்தைப் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. பொன்ராஜ் கடைவீதிப் பக்கம் போய் ஏதாவது வாங்கிக்கொண்டு வருவதாகச் சொன்னான்.

பாக்கியம் அவனிடம் “மாமா அப்புகு யெத்தானும் எதினும் தீசியினி ராஒத்தோ. எவுறுத்தாவனும் அப்பூத்தீய ஒத்தோ” என்று சொன்னாள். அவன் பதில் பேசாமல் வாசலைக் கடந்து வெளியேறினான். இரண்டு மூன்று தினங்களுக்கு முன் பெருமாளிற்கு கடனுக்குப் பணம் தந்தவன் கூடுதலாக நாலுவார்த்தை பேசி தேயிலைகடையில் தலைகுனிய வைத்துவிட்டான். பிள்ளைகளுக்கு சுய்யமும் சின்னதாயிக்கு டீயும் வாங்கிக்கொண்டு வரப்போனவர் ஒன்றும் வாங்காமல் திரும்பி வந்தார். அன்றிலிருந்து அவர் யாருடனும் பேசுவதில்லை. வீட்டிலேயே தான் இருந்தார். வேலையில்லாமல் இருக்கிற ஆசாரிகள் காட்டு வேலைக்கென சென்று பழகிவிட்டனர். பெருமாளிற்கு டவுனில் வேலைக்கு ஏற்பாடு செய்துதருவதாக சொன்னார்கள்.

பெருமாளிற்கு எதிலும் விருப்பமேயில்லை. எங்கேயோ போய் ‘சைனட்டை’ வாங்கி வைத்திருந்தார். பிள்ளைகள் தினமும் ஆசையோடு தான் சுய்யத்திற்கும் ஆமைவடைக்கும் ஏங்கியவர்களாக படுத்துக் கிடந்தனர். கடைவீதி பக்கம் போய் திரும்பி வந்த பொன்ராஜ் அரிசி வாங்கித் தந்தான். பாக்கியம் எல்லாரும் பொதுவாக கஞ்சி காய்ச்சினாள். சுடுகஞ்சியும் பட்ட வத்தல் புளித்துவையலும் காதடைப்புக்கு தோதாகயிருந்தது. பெருமாளுக்கு கரைத்துத் தந்த கஞ்சியில் தான் யாருக்கும் தெரியாமல் மருந்தைப் போட்டு கலக்கிக் குடித்தார். மருந்தின் வாசம் முகத்தில் அடித்தது. பெருமாள் முழுதாக ஒரு கிண்ணம் கஞ்சிக் குடித்தார். சின்னத்தாய் கண்டுபிடித்தாள். அவள் ஒன்றும் பேசவில்லை. அவளுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது. பிள்ளைகளின் முன்னால் ஒன்றும் காட்டிக் கொள்ளாமல் அவளும் தனக்கும் பிள்ளைகளுக்குமாக அரளி விதைகளை தட்டி கஞ்சியில் கலந்து குடிக்கத் தயாரானாள். பெருமாள் குடிக்க வேண்டாம் என்று எவ்வளவு சொல்லியும் அவள் கேட்டுக் கொள்ளவே இல்லை. பிள்ளைகள் தன் முன்னால் துடித்து இறப்பதைக் காணயியலாதவராக கண்களை இறுக்கமாக மூடியபடி இறந்து போனார். பிள்ளைகள் இறந்து போனதும் அவர்களைத் தூக்கி மடியில் போட்டு ஆசை தீர கொஞ்சி முத்தமிட்டுக் கொண்டாள். அதற்குப் பிறகு அவளும் எஞ்சிய கஞ்சியை குடித்து இறந்து போனாள்.

பாக்கியம் குமரி இருட்டில் எழுந்து வாசலைத் தெளித்துக் கோலம் போடும் போதுதான் கவனித்தாள். இன்னமும் அவர்களது வீட்டின் கதவு திறக்கவில்லை என்றதும் பொன்ராஜை எழுப்பி விட்டாள். இருட்டில் தீப்பெட்டியை எடுத்துக் கொண்டு பெருமாளின் வீட்டின் கதவைத் தட்டும் போது அவனுக்குத் தெரிந்து விட்டது. ஏதோ மருந்தின் வாடை பூட்டியக் கதவையும் தாண்டி வந்து முகத்தை அறைந்தது. மூக்கைப் பொத்திக் கொண்டு; கதவைத் தட்டினான். கதவு திறக்கவில்லை. சந்தேகத்தோடு ஊர் நாட்டாமையை அழைத்து வரச்சென்றான்.

நாட்டாமையை அழைத்து வருவதற்குள் தெருவில் ஆட்கள் கூடிவிட்டனர். ஆசாரிமார் தெருவில் சாவு விழுந்து விட்டது என்று ஊரே பேசியது. பெருமாள் பிள்ளைகளுடன் மருந்து குடித்து இறந்து கிடந்தான். அவனது வீட்டின் மூலையில் அடுக்கி வைத்திருந்த தொத்திகளில் பொருட்கள் எதுமில்லை. பெருமாளின் மனைவி தன் சேலைகளை மடித்து அடுக்கிவைத்திருந்தது எதற்கு என்று தெரியவில்லை.

பொன்ராஜ் அதற்குப் பிறகு ஊரை விட்டுப் போய் விடுவதென முடிவு செய்தான். தான் பிறந்த ஊர் தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைத்தான். பெருமாளும் அவனும் ஒன்றாக வேலைக்குப் போய் வந்தவர்கள். தச்சாசாரிகள் இருவரின் வேலையும் கண்ணாடி மாதிரி. இப்போது அவர்களுக்கு வேலையில்லை. கடனுக்கு உப்பு புளி மிளகாய் வாங்க வேண்டியதாகயிருந்தது. செட்டிமார்கள் ஊரிலிருந்த தச்சாசாரிகளுக்கு கடன் கொடுத்துப் பழக்கிவிட்டார்கள். கடன் வாங்காதவர்களே இல்லை. கடனைத் திருப்பித் தந்து விடுவதற்காவது வேலை வந்துவிட வேண்டுமென்றுதான் ஆளாய் அலைந்து தவித்துக் கிடக்கிறார்கள். பொன்ராஜ் வெளியூர் கான்ட்ராக்டார்காரர்களுடன் சேர்ந்து வேலைக்கு ஈரோடு பக்கம் போவதென முடிவு செய்தான். அவனுக்கு ஊரில் இருக்கவே பிடிக்கவேயில்லை. அன்னலெட்சுமியைப் பார்க்கும் போதெல்லாம் மனதில் அழுகை கூடிவிடும். பொன்ராஜிக்கும் அன்னலெட்சுமிக்கும் தான் முதலில் கல்யாணம் நடப்பதாக இருந்தது. மாரியம்மன் கோவில் ஊர் பொது பொங்கலின் போது அப்படித்தான் இரண்டு வீட்டுக்காரர்களும் பேசி வைத்திருந்தனர். யாருக்கும் நினைக்கிறபடியெல்லாம் நடந்து விடவேண்டுமென தலையில் எழுதியிருக்கவில்லை. பொன்ராஜிற்கு கிருட்டினப்பட்டியிலிருந்தும், அன்னலெட்சுமிக்கு வெங்கிடசாமியையும் பேசி முடித்தார்கள்.

பொன்ராஜிற்க்கு ‘டிவிக்’ ‘டிவிக்’ மஞ்சள் மூக்கு மைனாவின் சப்தத்தை கேட்கிற போது அழுகையே வந்துவிடும். எதற்கென்றே தெரியாத அழுகையும் வேதனையும் அவளது கல்யாண புதிதில் மனதில் இருந்தது. ஊரில் மழையும் பருத்தி எடுப்பும் நின்று போனது. அவன் பிறப்பதற்கு முன்பு இதே போல பஞ்சகாலம் ஒன்று வந்ததாக அவனது வீட்டில் சொல்லி யிருக்கிறார்கள். ஒரு மழை போதும் என்று ஏக்கமும் கனவுமாக இருந்தவர்களின் ஆசை, மண்ணோடு மண்ணாகிப் போய் நெடுநாட்களாகி விட்டது. ஆசாரி தெரு பெண்கள் வீட்டைவிட்டு தோட்டத்து வேலைக்குச் சென்று வர ஆரம்பித்ததும் இனி இந்த ஊரில் இருக்கக்கூடாதென்று தச்சாசாரிமார்கள் பலரும் பிழைப்பு தேடி சென்றுவிட்டனர். சென்றாயல் தான் முதலில் ஊரை விட்டு டவுனுக்குப் போனது. அவனுக்கு வெளியூரில் பழக்கமிருந்தது. டவுனில் சம்பளம் கொடுத்து சோறும் போடுவதாக கேள்விப்பட்டு வீட்டுச்சாமான்களை எடுத்துக் கொண்டு போனான். அவனது பங்காளிகளும் குடும்பத்துடன் ஊரைவிட்டு செல்வதென்ற முடிவுக்கு வந்த பிறகு தலைமலை ஆசையாக வளர்த்த கருப்புநாயைத் தனியாக விட்டுவிட்டு டவுனில் வேலைக்கு சென்று விட்டான். ஊரில் இரவு நேரத்தில் நாய்களும் பூனைகளும் தெருவில் பசிக்கு சத்தமிட்டு அலைவது துக்கமானதாக இருக்கிறது.

தலைமலை ஆசாரியின் தம்பி வீட்டில் ஒரு வெள்ளாட்டம் குட்டி இருந்தது. அவனுக்கு கடனுக்குப் பணம் தந்த செட்டிமார்கள் திரும்பவும் வாங்கமுடியாது என்று நினைத்து குட்டியைத் தூக்கிக் கொண்டு போய்விட்டனர். ஆசாரிவீட்டு ஆட்டுக்குட்டியின் கண்களும் முகமும் அழகாகயிருக்கும். ஆட்டுக்குட்டியின் கொம்புகளுக்கு பெயின்ட் அடித்து வீட்டின் முன்னால் கட்டிப் போட்டிருக்கிற அழகே அளாதியானது தான். தலைமலை சென்ற பிறகு ஆசாரித் தெருவில் வெங்கிட்டோடு சேர்த்து இரண்டு மூன்று குடும்பம் மட்டும் தான் இருந்தன. தெருவிற்கு மூன்று நான்கு வீடுகள் பூட்டியே இருக்கிறது. தச்சாசாரிமார்கள் பாதி பேர் வெளியூரில் வேலைக்குச் சென்று நடுஇரவில் வருகிறார்கள். மீதி பேர் வெளியூரிலேயே தங்கி வேலை செய்கிறார்கள். ஊரின் முகம் இருட்டடைந்து கிடக்கிறது.

தோட்டத்திற்குச் செல்லும் பெண்களோடு அன்னலெட்சுமியும் கூலி வேலைக்குச் சென்று வந்தாள். வெங்கிட்டு வேலையில்லாமல் வீட்டிலேயே இருப்பதும்; தனது முன்னோர்களை நினைத்துக்கொண்டு கனவுகளில் உறங்குவதுமாக இருந்தார். தான் படுத்துக் கிடக்க, பெண் பிள்ளை தோட்டத்திற்குப்போய் கொண்டுவரும் சம்பாத்தியத்தில் சாப்பிட வேண்டியதாகப் போய்விட்டது என்று யாருமில்லாத வேளையில் அழுதார். அந்த அழுகையை அவரது முன்னோர்கள் யாரும் பார்த்து ஏதும் வழிசெய்ய தரையிறங்கி வரவில்லை. அவரது தாத்தா பாட்டிமார்களின் கண்ணீரும் வேதனையும் ஏற்கனவே அந்த வீட்டின் கன்னி மூலையில் சேகரமாயிருந்தது. அதோடு தான் வெங்கிட்டுவின் நொம்பலமும் சோர்ந்து கொண்டது.

வெங்கிட்டசாமியும் வெளியூருக்கு பிழைப்புக்கென சென்று வருவதாக அன்னத்திடம் சொன்னார். எந்த ஊருக்குப் போவதென்றுதான் அவருக்குத் தெரியவில்லை. ஊரில் யாரிடமும் எதற்கும் யோசனை கேட்காமல் வாழ்ந்த நாட்டாமை வீட்டுப்பிள்ளையே ஊரை விட்டுப் போய் பிழைக்க வழி தேடும் போதும் மற்றவர்கள் என்ன செய்திடமுடியும் ? யார் தங்களை வேலைக்கென அழைப்பார்கள் என்று எஞ்சியிருந்த தச்சாசாரிகளுக்கு வேதனையாக இருந்தது. வெங்கிட்டு ஆசாரி புளியமரத்தை ஒத்த ஆளாக பல்லு ரம்பத்தில் அறுத்துக் கொண்டு வீட்டில் சேர்த்தவர்தான். அவரது வேலை சுற்றுப்பட்டியில் கண் வைத்து கண் எடுப்பது மாதிரியிருக்கிறதென பேசுவார்கள்.

எத்தனையோ காலங்களுக்கு முன்பு ஓடிக்கொண்டிருந்ததாகச் சொல்லப்பட்ட வெள்ளாற்றை கடந்துதான் வெளியூருக்குச் செல்லவேண்டும். கூழாங்கற்களும் பாறைகளுமாக கிடந்தது ஆற்றுப்பாதை. ஊருக்குள் வெள்ளம் வந்த காலத்தில் பெரிய கரட்டுப்பக்கம் ஓடி வாழ்ந்தவர்கள் சொல்லிக் கேட்ட ஆற்றின் கதைகள் இந்த மணலுக்குக் கீழே தான் மறைந்து இருக்கிறது. ஆறு ஓடிக்கிடந்த இடத்தில் கண் விட்டிருந்த ஊற்று கூட இப்போது மூடிக்கொண்டது. வெங்கிட்டும், பொன்ராஜும் வேலையில்லாமல் ஊரில் என்ன செய்ய என யோசித்தனர். யாரிடமும் நயா பைசா இல்லை. வெளியூரிலிருந்து வேலை செய்து வருபவர்கள் கொண்டு வரும் பணம் அவர்களது குடும்பத்திற்குச் சரியாகப் போய்விடுகிறது. “பஸ்காரனும் காப்பிக் கடைக்காரனும் உழச்சக் காசைப் பிடுங்கிக்காரனுங்க. காலக்கொடுமைக்கு கரட்டான் காவடி எடுத்து ஆடிச்சாம். அதுக்கு வேலுமயிலுன்னு சொல்லமுடியாம வேலி மேலத்தூக்கிப்போட்டுப் போச்சாம்” என்று புலம்பிக்கொண்டு தான் சம்பளத்தில் மீதமான பணத்தைத் தந்தார்கள். கூழாங்கற்களும் பாறைகளுமாக கிடந்த ஆற்றின் மணலில் உட்கார்ந்து கொண்டு ஆசாரிமார்கள் வேலைக்கு சென்றுவந்த கூத்தை பேசி தவிப்பாறினார்கள்.

“வேலையே இல்லாம எத்தனை நாளைக்கு சும்மாயிருக்கிறது. அதுக்கு டவுனுக்குப்போயி ஏதாவது செஞ்சுட்டு வந்தா இப்படி”

“ஊரிலிருந்த நிலத்தையெல்லாம் பயபுள்ளைகள் வித்துப்போட்டு எங்கப்போயீ பொழைக்கப் போறாங்கன்னு தெரியலை”

“சம்சாரிகள் எல்லாம் கரையேறிட்டாங்கப்பா. நாம தான் மரத்தையும் மனுசனையும் நம்பி ஏமாந்துட்டோம்”

“அவங்கள் பிள்ளைகளுக்கு வெளிநாட்டிலையும் வெளியூரிலையும் வேலை கிடைச்சிருச்சு. நிலத்தைச் சும்மா கொடுத்துட்டு போன என்னா. வித்துட்டுப்போன என்னா. எவனுக்கு வயிறு வலிக்குது”

“வெளியூர்காரங்க யாரோ வந்து பெரிய பள்ளிக் கூடம் கட்டுறதுக்கு நிலத்தையெல்லாம் கிரயம் பேசிட்டானாமே. பள்ளிக்கூடம் வந்தா நமக்கெல்லாம் வேலை தருவாங்களா மாமா”

“மயித்தை செரைப்பான். நீ கனா கண்டுட்டுருப்பே. ஒன்னும் தரமாட்டான். வெளியூரிலிருந்து ஆளை இறக்கிருவான். பல சாதிக்காரங்களும் வரிசையா தட்டுமுட்டோட வந்து டேராப்போட்டு உட்கார்ந்துட்டு காசை பாத்துட்டுப் போயிருவாங்கே. நீயும் நானும் அவன் மூஞ்சியைத் தான் பாக்கனும். ஆமா”

வெங்கிட்டு கோயமுத்தூருக்குப் போவதென்று முடிவு செய்தார். அவருக்கு குத்தாலத்தின் ஞாபகம் வந்தது. அவன் ஊரை விட்டுப்போய் நாண்கு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. கோயமுத்தூரில் நல்ல வேலை செய்து வருகிறான் என்று அவனை பார்த்துவிட்டு வந்தவர்கள் சொல்லிக்கேட்டிருக்கிறார். அவனிடமே வேலைக்கு சேர்ந்து அவனது வீட்டிலேயே இருந்துவிடுவதெனப் புறப்பட்டார்.

(2)

பாக்கியம் வயிறு நிறைய தண்ணீர் குடித்துவிட்டு வாசலில் உட்கார்ந்திருந்தாள். ரேஷனில் அரிசி வாங்கிவருவதற்குள் அவளுக்கு பாதி உயிர் போய் திரும்பியிருந்தது. நான்கு கிராமங்களுக்கும் ஒரே நாளில் அரிசி போட்டு வேலையை சுருக்கி கொள்கிறார்கள். நடவு பொழுதிற்கு முன்பாக போய் வரிசையில் நின்ற பெண்களுக்கு மயக்கம் வந்து விழுந்து விட்டார்கள். அவர்களை தூக்கி விடுவதற்குக்கூட ஆளில்லாமல் ஜனங்கள் தள்ளிக்கொண்டு அரிசியை வாங்கினார்கள். பாக்கியம் அரிசியை வாங்கிக்கொண்டு வந்த பிறகு தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது. இந்த அரிசியை வைத்து ஒரு மாதத்திற்கும் மேலாக ஓட்டிவிடலாம். பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டதில் மதிய நேரத்திற்கு அங்கேயே சோறு போட்டுவிடுகிறார்கள். அந்த சோற்றையும் வரிசையில் நின்று வாங்கித் திங்க வேண்டியதாயிருக்கிறது. தன் பிள்ளைகள் பட்டினியோடு கிடப்பதை பார்க்கமுடியாமல் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவிட்டாள். ஈயத்தட்டு வாங்கிக்கொண்டு வருபவர்களுக்கு தான் முதலில் பள்ளிக்கூடத்தில் இடம் தந்தார்கள். தட்டுகள் வாங்குவதற்கு அவளிடம் காசில்லை.

செட்டியாரம்மாவிடம் கேட்டதற்கு கடனுக்கு இனி பணம் தரமுடியாது என்று சொல்லிவிட்டாள். களத்தில் வேலையில்லை. தோட்டத்து வேலை கூலியில் கழித்துக் கொள்ளலாமென கெஞ்சினாள். செட்டியாரம்மா தன் வீட்டிலிருந்த பழைய ஈயத்தட்டை எடுத்து கொடுத்து விட்டாள். அந்த தட்டில்தான் அவளது பிள்ளைகள் சோறு வாங்கித் தின்பதற்கு பள்ளிக்கூடம் போய்வந்தார்கள். சோற்றில் புழுவும் சின்னச்சின்னப்பூச்சியும் இருக்கிறதென அழுது கொண்டே பிள்ளைகள் சொன்னதும் அவளுக்கு வாந்தி வந்துவிட்டது. தன் பிள்ளைகளையும் தன்னையும் இப்படித் தவிக்க விட்டுவிட்டு வேலைக்குப் போன மனுஷன் என்னவானானோ என்று அழுதாள். தன் பிறந்த வீட்டுத் தரித்திரியம் இங்கேயும் வந்து சேர்ந்துவிட்டதை நினைக்கும் போது அவளுக்கு மருந்து குடித்து இறந்து போன சின்னதாயின் முகமும் அவளது பிள்ளைகளுமே ஞாபகத்திற்கு வந்தனர். அவளது பிள்ளைகளும் ஈயத்தட்டுகளுடன் தான் பள்ளிக்கூடத்திற்குப் போய் வந்தார்கள். சின்னதாயி இறந்த பிறகு அவளுக்கு துணைக்கென இருந்த அன்னமும் ஊரைவிட்டுப் போய்விட்டாள். பாக்கியம் தனியாகத் தான் செட்டியார் தோட்டத்திற்கு நடவுக்கும் அறுப்புக்கும் போய் வந்தாள். செவ்வாணத்தையும் மஞ்சள் வெயிலையும் தனது பிள்ளைகளையுமாகப் பார்த்து நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தாள்.

இன்றும் நாளைக்கும் வேலையில்லை. களத்தில் தட்டைப்பயிர் அடித்துத் தூற்றப் போக வேண்டும். அதற்குப்பிறகு தலையில் என்ன எழுதியிருக்கிறது என்று அவளுக்குத் தெரியவில்லை. பொன்ராஜ் இருக்கும் விலாசத்தை பலரிடமும் கேட்டாள். யாருக்கும் தெரியவில்லை. அவனை அழைத்துச் சென்றவர்கள் என்ன சொல்லி அழைத்துச் சென்றார்களோ. காண்ட்ராக்டர்கள் எல்லா வேலையும் முடிந்த பிறகுதான் அனுப்புவார்கள். சாப்பாடு போட்டு தூங்குவதற்கு இடத்தை தந்து பூட்டி வைத்து விடுவார்கள் என்று ஊரில் பேசிக்கொண்டனர். அவளுக்குக் கேட்கக் கேட்கப் பயமாக இருந்தது. ஊரின் வடக்கில் இருந்த காமாட்சியம்மாளையும் பொது தெய்வமான நொண்டி கருப்பனையும், சௌடம்மாளையும் வேண்டிக்கொண்டாள். விளக்குப்போடுவதில் துவங்கி, சூடம் பொருத்திப் பிறகு வெறும் கையில் கையெடுத்து கும்பிட்டு, அழுத கண்களோடு வீடு திரும்பினாள். பிள்ளைகள் கேட்பதற்குத் தான் அவளால் பதில் சொல்ல முடியவில்லை. அவர்கள் நைனா நைனா என்று இரவில் அழுது பிறகு நைனா பொன்ராஜ் இல்லாமலேயே தூங்கி எழப்பழகி விட்டனர்.

பாக்கியத்தின் கையில் இரண்டு ரூபாய் தான் இருந்தது. பிள்ளைகள் பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பியதும் பலசரக்குக்கடையில் எண்ணெய் வாங்கி இருவரின் தலையிலும் தேய்த்துவிட வேண்டுமென்று நினைத்தாள். பிள்ளைகள் வரும் நேரம்தான். அவள் வாசலில் உட்கார்ந்திருந்தாள். முதலில் தெருப்பிள்ளைகள் வரிசையாக வரத்தொடங்கின. அவர்களது கையில் ஈய தட்டுகளில் மீதமான சாதமும் குழம்பும் இருந்தது. பிள்ளைகள் சாப்பாட்டை பத்திரப்படுத்திக் கொண்டு வருவதற்குப் பழகி விட்டிருந்தனர். பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளுக்கென காத்திருக்கும் கைக்குழந்தைகளும் சத்தம் கேட்டு வாசலுக்கு வந்து நின்று கொண்டனர்.

பாக்கியம் எழுந்து வீட்டிற்குள் சென்றாள். தேங்காய் எண்ணெய் வாங்குவதற்கு வைத்திருந்த ரூபாயையும் பாட்டிலையும் எடுத்துக் கொண்டு வந்தாள். பிள்ளைகள் சாயங்கால வெயிலுக்குள் நடந்து போவது போல இருந்தது. வெயிலும் நிழலுமாக கிடந்தத் தெருவின் நிறம் பிள்ளைகளின் சத்தத்தால் மாறிப்போனது. பாக்கியம் பாட்டிலில் தூறில் ஒட்டியிருந்த கசடான எண்ணெய்யை உள்ளங்கையில் தட்டித் தட்டி கால்களிலும் கைகளிலுமாகத் தேய்த்துக் கொண்டாள். கருப்பும் மஞ்சளுமாக இருந்த தேங்காய் எண்ணெய் கெட்டவாடை அடித்தது. கழுவி வைக்காலாமா என யோசித்தவள் பிறகு பழையத் துணியை வைத்து துடைத்து வைத்தாள். தெருவின் முக்கு வரை பார்த்தாள். பிள்ளைகள் இன்னமும் வரவில்லை. பள்ளிக்கூடம் விட்டதும் வந்து விடுபவர்கள் ஏன் இன்று தாமதமாகிறது என்று எழுந்து நின்று கொண்டாள். வழக்கமாக அவர்களுடன் வரும் பிள்ளைகள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் தன் பிள்ளைகளும் வருகிறார்களா என எட்டிப்பார்த்தாள். வரவில்லை. அவளுக்கு பயம் வந்துவிட்டது. அந்த பிள்ளைகளிடம் விசாரித்தாள். அவர்கள் “தட்டைத் தொலைச்சுட்டுத் தேடிக்கிட்டு இருக்குறாங்க” என்றார்கள். பாக்கியத்திற்குத் திக்கென்றானது.

“எப்போடீ தொலைச்சாங்க”

“தெரியலையக்கா. காலையில ரீஸஸ் பீரியடு முடிஞ்சதிலிருந்துதான் காணலை”

பாக்கியம் வீட்டின் கதவை சாத்திவிட்டு தெருவில் இறங்கி நடந்தாள். முக்கைத் தாண்டியதும் அவளுக்கு அழுகை வந்துவிட்டது. ஈயத்தட்டு வாங்கவேண்டுமென்றால் காசு வேண்டும். ஈயத்தட்டு இருந்தால் தான் பள்ளிக்கூடத்திற்குள் விடுவார்கள். கையில் காசில்லாத நேரத்தில் இப்படிப் பிள்ளைகள் செய்துவிட்டதே என்று நடையை எட்டிப்போட்டாள். தூரத்தில் பிள்ளைகள் வருவது தெரிந்தது. அவளுக்கு ஆத்திரம் ஒரு பக்கம் இருந்தாலும் பிள்ளைகள் அழுவதைப் பார்த்ததும் அவளுக்கும் அழுகை கூடியது. பிள்ளைகள் இருவரும் அவளை நெருங்கியதும் ஆத்திரத்தில் ஓங்கி அடித்துவிட்டாள். ஏற்கனவே அழுது கொண்டிருந்த பிள்ளைகள் அவள் அடித்ததும் சத்தமாக அழத்தொடங்கின. பிள்ளைகள் நடுரோட்டில் அழுவதை நடந்து செல்பவர்கள் வேடிக்கையாகப் பார்த்து “யோஐசுருமணை கெண்டித்தீயீ ஆங்காரண நோடுணே” என்று சொல்லியபடி கடந்தனர்.

பாக்கியம் “நோருன முயீ கேடீதி. நோருன முயீ எனுமு” என்று மேலும் அடித்தாள். பிள்ளைகள் அவளுடன் நடந்து வர பயந்தவர்களாக தெருவில் விழுந்து புரண்டனர். அவளுக்கு ஆத்திரம் அதிகமாயி பிள்ளைகளை இழுத்தாள். பிள்ளைகளின் அழுகை தெரு முழுக்க கேட்டது.

பாக்கியம் பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்த போது செட்டிமார் வீடுகளில் உலைவைத்து சோறாக்கும் பொழுதாக இருந்தது. வீட்டின் முன்னால் உட்கார்ந்து கொண்டு அழுதவளை பக்கத்துவீட்டுப் பெண்கள் விசாரித்துவிட்டு சென்றனர். “ஈயத்தட்டு காணமல்போனதிற்கா இப்படிப்போட்டு பிள்ளைகளை அடிப்போ போ நல்லாயிருக்கா. இப்படி ஆங்காரமா இருக்காதடீ” என்று திட்டி விட்டுச்சென்றனர். அவள் அழுத பிள்ளைகளைப் பார்த்தாள். பயந்துபோய் படுத்துக் கிடந்தனர். தன் பிள்ளைகளை இப்படி ஒரு நாளும் அடித்தது இல்லையே என்று வருந்தியவளாக அவர்களை அழைத்து மடியில் படுக்க வைத்துக் கொண்டாள்.
பிள்ளைகள் இருவரும் சமாதானமானவர்களாக அழுகையை விட்டனர்.

பெரிய பிள்ளை தான் “அம்மா மதியம் நாங்க ஒன்னும் சாப்பிடலை” என்றாள். பாக்கியத்திற்கு நெஞ்சு அடைத்துக் கொண்டு வந்தது. காலையில் ஈயத்தட்டுத் தொலைந்து போனதால் டீச்சர் அவர்களுக்கு சாப்பாடு போடவில்லை. நாளைக்கும் தட்டு இல்லாமல் வந்தால் வகுப்பிற்குள் நுழைய விடமாட்டேன் என்று திட்டி அனுப்பிவிட்டதாகச் சொன்னார்கள். பாக்கியம் தன் பிள்ளைகளை கட்டிக்கொண்டு ஹோவென்று அழுதாள். பாக்கியத்திற்கு செட்டியாரம்மாளை விட்டுவிட்டு வேறு யாரிடமும் கடன் கேட்க மனமில்லை. ரேஷன் அரிசியை உலையில் போட்டுவிட்டு பிள்ளைகளின் அருகாமையில் உட்கார்ந்து கொண்டாள். தெருவில் விளையாடிய பிள்ளைகள் தங்களுடன் அவர்களையும் விளையாடுவதற்கு அழைத்தார்கள். பிள்ளைகள் பாக்கியத்தின் அருகிலேயே உட்கார்ந்து கொண்டார்கள். தன் பிள்ளைகள் விளையாடக் கூடச் செல்லாமல் கவலையாகக் கிடக்கிறதே என நினைத்தவள் வடிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

மூத்தவள் தான் பள்ளிக்கூடத்திற்குப் போவது பற்றி கவலை கொண்டவளாக தன் தாயின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தாள். டீச்சர் அவளிடம் காதைத்திருகி ‘தட்டோடு தான் பள்ளிக்கூடத்திற்கு வரவேண்டும், இல்லையின்னா படியேறாதே’ என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார்கள். அதை அப்படியே தன் அம்மாவிடம் சொன்னதும் பாக்கியத்திற்கு கவலை அதிகமானது. ரேஷனில் வாங்கிய அரிசியை விலைக்குப் போட்டு விடலாமெனப் பக்கத்துத் தெருவிற்குப் போனாள்.

“ரேஷன்கார்டை வேணுமினா கொடுத்து கடனுக்கு ரூபாய் வாங்கிக்கோ. பிறகு வட்டி கொடுத்து மீட்டுக்கோ” என்று அவர்கள் சொன்னார்கள்.

“ரேஷன் அரிசி யாரும் வாங்கலையா”

“வேற தெருவிலை வேணா கேட்டுப்பாரு பாக்கியம்”

அவள் பதில் பேசாமல் நின்றாள். ரேஷன் அரிசியை அவர்கள் வாங்குவதில்லை என்று சொல்லி அனுப்பி விட்டனர். அவளுக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் அரிசி வேண்டுமா என்று கேட்டுப்பார்த்தாள். ஆசாரியின் தரித்திரியம் தங்களுக்கு வந்துவிடுமென்று யாரும் வாங்கவில்லை போலும். அன்னமும் சின்னத்தாயும் தன்னுடன் இருந்திருந்தால் தன் கவலையையாவது சொல்லி ஆசை தீர அழுதிருக்கலாமே என்று அரிசியை கொண்டு வந்து வீட்டில் போட்டாள். தொத்தியில் அரிசியைப் போடுவதும் பிறகு அதை வாரி எடுப்பதும் அவளுக்கும் எரிச்சலாகயிருந்தது.

(3)

காய்ச்சல் வந்து மூன்று நாட்களுக்கும் மேலாகப்படுத்திருந்த முத்தமக்கா நடுஜாமத்தில் சத்தமும் அழுகையுமாக ஊரை எழுப்பிவிட்டு கண் மூடிக் கொண்டாள். முத்தமக்கா இறந்ததற்கு எப்படியும் பொன்ராஐ_ம், அன்னமும் வந்து விடுவார்கள் என்று நம்பினார்கள். முத்தமக்கா இறந்தன்றே எடுத்துவிட வேண்டும் என்று ஊரில் பேசிவிட்டனர். மூன்று மாதம் படுத்திருந்து இறந்தவள். இரவு நேரத்தில் மயானக் கரைக்கு எடுத்து சென்றார்கள். பெட்ரமாக்ஸ் வெளிச்சத்தில் செவ்வந்திப்பூக்களும் மல்லிகைப்பூவுமாக ஜோடித்து வைத்திருந்த முத்தமக்காவை தூக்கிச் செல்லவே மனமேயில்லை. மஞ்சள் பூசிய முகத்திற்கும் முத்தமக்காவுக்கும் என்ன ஒத்துமையிருக்கிறதோ. “பெத்தப்பிள்ளையை கூட பார்க்கமுடியாமல் போயிருச்சே.. பாவம் முத்தமக்கா”

“அன்னலெட்சுமிக்கு தாக்கல் போயிருச்சா செல்லக்கண்ணு”

“அவ்வூ சாமி ஆ அம்மாகாரு எக்கடப்போயீ வுண்டேருன்னு தெலுசுன்னு செப்புத்துரு”

ஊருக்குத் தகவல் சொல்லும் செல்லக்கண்ணு சுத்து கிராமங்களுக்கும் டவுனுக்கும் போயி சொல்லிவிட்டுத்தான் வந்தான். தகவல் தெரிந்து பாதி பேருக்கும் மேல் வந்து சேர்ந்து விட்டார்கள். கடைசி நேரத்தில் டவுனிலிருந்து வந்தவர்கள் தந்த விலாசத்திற்கு தந்தி கொடுத்து பொன்ராஜிற்கு தகவல் தெரியப்படுத்தினார்கள். பிறகு பொன்ராஜ் வந்து அன்னத்திற்கு தந்தி தந்தான். அவள் இருக்கும் இடம் எப்படியோ அவனுக்குத் தெரிந்திருந்தது. அவனும் பால் தெளிப்பு முடிந்து தான் ஊருக்கு வந்தான். கேத வீட்டில் அவனைச் சுற்றித்தான் கூடிஅழுதனர். அழாத பெண்கள் பாவம் செய்தவர்கள்தான்.

தன் அக்கா முத்தம்மாவை நினைத்து நினைத்து அழுதவனாக வீட்டிற்குள் சென்றான். அவளிருந்த வீட்டின் கூரைகள் இற்றுப்போயிருந்தது. ஓட்டைவிழுந்த இடத்தில் பழைய காகிதங்களை வைத்து அடைத்து வைத்திருந்தாள். தன் அக்காவின் வீட்டின் கூரையைப் பார்த்ததும் உடலிருந்த வேதனைகள் கூடி அழுகத் தொடங்கிவிட்டான். அவனது அழுகை ஊரிலிருந்த தெருக்களின் வழியாகக் காற்றைப் போல நகர்ந்து சென்றது. தான் கொண்டு வந்த புதிய சேலையை விரித்துப்போட்டு நடுவீட்டில் புரண்டு அழுதான். அவனை பாக்கியத்தினால் சமாதானம் செய்ய முடியவில்லை. யாவரையும் பிரிந்திருக்கும் வேதனையும் ஏக்கமும் அவனை வலிமையிழக்க செய்திருந்தது. தெருக்காரர்கள் உறங்கட்டுமென விட்டுவிட்டு சென்றனர்.

(4)

அன்னலெட்சுமிக்கு அவளது அம்மா இறந்ததை சொல்லுவதற்கென்று யாரும் வரவில்லை. அவள் இறந்து போன சேதி ஒவ்வொரு ஊராக பிழைக்கப்போன தச்சாசாரிகளின் வழியாக கடந்து கொண்டிருந்தது. வெங்கிட்டுவுடன் வேலை செய்பவர்கள் முத்தமக்கா இறந்து போனதை மூன்று தினங்கள் கழித்துச் சொல்லியிருக்கிறார்கள். தகவல் கிடைத்த இரவு அவர்கள் இருவருக்கும் உறக்கம் வரவில்லை. வெங்கிட்டுவுடன் தான் ஊருக்குச் செல்வதாக சொன்னாள். அன்னத்தினால் இனி இங்கு இருக்க முடியாது என்பதை அவர் புரிந்து கொண்டார். குத்தாலத்திடம் தானும் அன்னமும் ஊருக்குப் போய் வருவதாகச் சொன்னதும் குத்தாலத்திற்கு கோபம் வந்துவிட்டது. “உனக்கு அட்வான்ஸ் வாங்கிட்டேன். பணத்தை வாங்கினப் பிறகு எங்கையும் அனுப்பமாட்டாங்க. நீ பாட்டுக்கு ஊருக்குப்போய் இருந்துட்டேன்னா பணத்தை நானா தரமுடியும். அந்த பிள்ளையை மட்டும் பஸ் ஏத்தி அனுப்பிவைப்போம்” என்றான். வெங்கிட்டு பயந்து போய் சரி என்றார். அவருக்கு இதெல்லாம் புதிதாக இருந்தது. பெற்ற தாய் இறந்து போனதைப் பார்க்க முடியாதபடி தனது பிழைப்பும் தலைவிதியும் இருக்கும் போது யாரை என்ன சொல்வதென்று விட்டுவிட்டார். அவளை தனியாக ஊருக்கு அனுப்ப மனமில்லாமல் தான் பஸ் ஏற்றிவிட்டார். அன்னலெட்சுமி மட்டும் உட்கார்ந்திருப்பதை பார்த்ததும் அவருக்கு அழுகை வந்துவிட்டது.

பாவிகளா ஒத்தை ஆளா போகவிட்டுட்டீங்களேடா என்று தவித்தார். “சூசிப்போம்மா அன்னம். சூசீப்போம்மா தாயீ” என்று பஸ் நகரும் வரை சொல்லிக்கொண்டிருந்தார்.

அன்னம் ஊரிலிருந்து வரும் போது தன் அம்மாவைப் பார்த்துக்கொள்ளும்படி பாக்கியத்திடம் சொல்லிவிட்டுத்தான் வந்தாள். பாக்கியமும் அவளும் ஒன்றாகத்தான் தோட்டத்து வேலைக்கு சென்று வருவார்கள். கடைசியாக பாக்கியத்தை பார்த்த போது களத்தில் தட்டாம்பயிரை காயப்போட்டுக் கொண்டிருந்தாள். பத்து மூடை தட்டாம்பயிறு மட்டும் தான் தோட்டத்தில் எடுத்திருந்தார்கள். மீதி தோட்டத்தில் ஒன்றும் போடாமல் வெறுமனே விட்டு விட்டிருந்தனர். செடியிலிருந்து பிடுங்கிய காய்களை ரோட்டில் போட்டு காய வைப்பதற்கு முந்தியெல்லாம் பத்து இருபது பேர் வேலைக்கு வரச்சொல்லி கூப்பிட்டுவிடுவார்கள். ரோட்டில் காயப்போட்டு, வெயிலுக்கென்று ஐஸ் வாங்கி தின்றதை அவள் மறக்கவேயில்லை. எழுபது எண்பது மூடைகாய்களை பிடுங்கிய தோட்டத்தில் வெறும் பத்து மூடைகாய்கள் மட்டும் தான் பிடுங்கிக்கொண்டு ரோட்டில் போட்டிருக்கின்றனர்.

பாக்கியத்திற்கும் சக்கிலியத்தெரு வீருசின்னுவிற்கும் மட்டும் தான் வேலை. ஊருக்குப்போகும் போது அன்னத்தை பார்த்து பாக்கியம் அழுதே விட்டாள். அவள் “நீ இருடீ. அவங்க வேணாப்போகட்டும்” என்று சொன்னாள். அன்னத்தினால் பதில் பேச முடியவில்லை. இனி ஊரில் இருந்து என்ன செய்வது என்ற வேதனை தான் அவளை பேசவிடாது செய்தது. பொன்ராஜின் ஞாபகமும் வேலையில்லாமல் பாதி வயிற்று பட்டினியும் அவளது மனதை மாற்றியிருந்தது. ஒன்றும் பதில் சொல்லாமல் வந்துவிட்டாள். பாக்கியம் அழுது கொண்டே “நீ போயிட்டேனா எனக்கு யாருடீ இருக்கா. எனக்கு யாருடீ இருக்கா” என்று ரோட்டைத் தாண்டி வரும் வரை அழுதது அவளுக்கு கேட்கத்தான் செய்தது.

பல்லைக் கடித்துக்கொண்டு வந்து விட்டாள். அன்னத்திற்கு தன் அம்மாவை இனி தன்னால் என்றும் பார்க்க முடியாது என்று நினைக்கும் போது தான் அழுகை அவளையும் மீறி கிளம்பியது. பஸ்ஸில் வாயைப் பொத்திக்கொண்டு அழுதாள். அப்படியும் சத்தம் பக்கத்திலிருப்பவர்களுக்குக் கேட்கத்தான் செய்தது. முத்தமக்காவிற்கு தன் தம்பி பொன்ராஜை மருமகனாக்கிக்கொள்ள வேண்டுமென்று அவள் பிறந்ததிலிருந்து ஆசையாக இருந்தது. யாருடைய ஆசையையும் நடந்தேறச் செய்யவிடாத ஊர் போல இது.

அன்னலெட்சுமி ஊருக்குள் நுழைந்ததும் பூட்டிக்கிடக்கும் ஆசாரிமார் வீடுகளையும் அதன் வாசலில் உறங்கிக் கிடக்கும் நாய்களையும் தான் பார்த்தாள். தெவின் இருட்டும் விளக்குகள் எரியாத வாசலுமாக ஆசாரிமார் வீதி கிடந்தது. அவள் நடந்து போகும் சப்தம் கேட்டு விழித்துக்கொண்ட நாய்கள் யாரோ வேற்றாள் என்று குலைக்கத் தொடங்கியது. வாசலில் வந்து எட்டிப்பார்த்த செட்டிமார்களும் தெருவுக்குள் அலைந்து கொண்டிருந்த ஏகாலி வீட்டுப்பெண்களும் அன்னத்தைப் பார்த்து பேசினார்கள். ஊரில் புதிதாக டெலிபோன் பூத்துகள் மஞ்சள் நிறபிசாசு போல அந்த இரவில் நின்றிருந்தது. வேலைக்குப் போன சம்சாரிகளின் பிள்ளைகளோடு பேசுவதற்கும் டவுனிலிருப்பவர்களுடன் பேசுவதற்கும் மிட்டாய்கடைக்காரர்கள் கூட பூத் கடைகள் வைத்து விட்டார்கள். மஞ்சள் பிசாசு தன் கண்களை திறந்து அவளை வா வா என்று அழைத்துக் கொண்டிருந்தது. தெருவுக்கு ஒரு பிசாசு நின்றிருந்தது.

அன்னம் முதலில் பாக்கியத்தின் வீட்டுக்குத்தான் சென்றாள். அவளுக்கு பொன்ராஜைப் பார்த்து அழவேண்டும் போலிருந்தது. அவனது ஞாபகம் இன்னும் தனது மனதில் இருப்பதை நினைக்கும் போது அவளால் அழாமல் இருக்கமுடியவில்லை. பாக்கியம் அவளைக் கண்டதும் ஓடிவந்து கட்டிக்கொண்டாள். “ஒரியே ஒரியே” என்று மட்டும் தான் அவளால் பேச முடிந்தது. மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லை. இருவரும் அழுவதைப் பார்த்து பிள்ளைகள் விழித்துக் கொண்டன. பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் கூடிவிட்டனர். பாக்கியமும் அன்னமும் அந்த இரவு நேரத்தில் முத்தக்காவின் வீட்டிற்கு சென்றனர். முத்தக்கா வீட்டில் பொன்ராஜ் படுத்திருந்தான்.

அன்னலெட்சுமி தன் அம்மாவின் வீட்டிற்குள் சென்றாள். வீட்டினுள் செல்வதற்கு அவளுக்கு மனமேயில்லை. தான் வளர்ந்த வீட்டின் வாசல் படியையும் தான் பிறந்த வீட்டின் சுவர்களையும் தன் அம்மாவின் நினைவுகளுடன் பார்ப்பதற்கு அவளுக்கு வேதனையாக இருந்தது. வீடு முழுக்க தூசியும் குப்பையுமாக இருந்தது. மூலையில் உட்கார்ந்து கொண்டு அழுதாள். நின்றிருந்தவர்கள் அவளை சமாதானப்படுத்தினார்கள். அவளால் அழுவதை நிறுத்த முடியவில்லை. பாக்கியத்தின் பிள்ளைகள் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு சின்னம்மா சின்னம்மா என்று கண்ணீர் விடத்தொடங்கினர். அவள் மூத்தவளைப் பார்த்ததும் இழுத்துக் கட்டிக்கொண்டாள். மூத்தவள் அப்படியே பொன்ராஜின் சாயலில் இருப்பாள்.

கைநழுவிப்போன காலத்தின் ஞாபகம் யாருடைய சாயலில் இருந்தால் என்ன என்று அழுவதை நிறுத்திக்கொண்டாள். அரிக்கேன் விளக்கை எடுத்துக்கொண்டு உள்ளறையிலிருந்து பொன்ராஜ் வந்தான். அவளுக்கு மனதிலிருந்த ரணமெல்லாம் குறைந்து விட்டது போலானது. அவள் அழுகையை நிறுத்திக்கொண்டாள்.

“மாமாவும் இங்கதான் இருக்காங்களா பாக்கி”

பாக்கியம் ஒன்றும் பேசவில்லை. தான் சென்று சாப்பாட்டிற்கு ஏதாவது செய்து கொண்டு வருவதாகச் சொல்லி சென்றாள். பிள்ளைகள் பொன்ராஜ் கொண்டு வந்த விளக்கு வெளிச்சத்தில் விரல்களை வைத்து விளையாடத்தொடங்கின. அன்னம் தலைகவிழ்ந்தவளாக “எங்கம்மாவை பார்க்கமுடியாமலேயே போயிருச்சு மாமா” என்று திரும்பவும் அழுதாள். அவன் கூட்டிவைத்திருந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டான். “வேலையெல்லாம் அந்தப்பக்கம் பரவாயில்லையா” பேச்சை மாற்றி விட்டான்.

அவளும் கண்களைத் துடைத்துக்கொண்டு பதில் சொன்னாள்.

“ஜவுளிக்கடை வேலைக்குப் போனாங்க. கண்ணாடியை அறுக்கிறேன்னு உள்ளங்கையில் இழுத்துவிட்டுருச்சு. ஆஸ்பத்திரிக்கு இரண்டு நாளா அலைஞ்சோம். காய்ச்சவந்துருச்சு. சம்பாதிக்கிறதை டாக்டருக்கும் மாத்திரைக்கும் தந்திட வேண்டியதாயிருக்கு. குத்தாலம் அவங்க வீட்டை காலி செய்ய சொல்லிட்டாரு. வேலைக்கு போறதாயிருந்தா வீடு பாக்கணும். இல்லை ஊரை பாத்துத்திரும்பி வரனும்.”

“வெங்கிட்டு என்ன யோசனை செஞ்சு வைச்சுருக்காரு”

“என்னைய ஊருக்கு அனுப்புச்சுட்டு உங்ககூட வந்திருக்கலாமான்னு அவருக்கு ஒரு யோசனையிருக்கு மாமா”

“என் பொழப்பு நாறிப்போயிருக்கு. நீ வெளியிலச் சொல்லிட்டே. நான் சொல்லாமல் இருக்கேன்”

பிள்ளைகள் மதிலில் நாய் முகத்தை விரலில் காட்டி விளையாடினார்கள். இருவரும் பேசுவதை விட்டுவிட்டுப் பார்த்தனர். பாக்கியம் சோறாக்கி ரசம் வைத்து கொண்டுவந்து தந்தாள். ரசத்தின் புளிப்பும் காரமும் அவளது காதடைப்பிற்கும் அழுதழுது வறண்டிருந்த நாக்கிற்கும் சுகமாகயிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது ஊரின் தண்ணீரையும் சாப்பாட்டையும் சாப்பிட்டு முடித்தவள் பாக்கியத்தோடும் பிள்ளைகளோடும் படுத்துக்கொண்டாள்.
 
மேலத்தெருவில் அதிகாலையில் வாசல் தெளித்துக் கூட்டும் போது செட்டிமார் வீட்டுப்பெண் தன் எதிர்வீட்டு ஆசாரிப்பெண் இன்னமும் வாசல் தெளிக்காமல் இருக்கிறாளே என கதவை தட்டினாள். தச்சாசாரியின் மனைவி தூக்குப் போட்டுக் கொண்டு இறந்து கிடந்தாள். நடு இரவுக்கு மேல் தான் அவள் தூக்கு மாட்டியிருக்க வேண்டுமென பேசிக்கொண்டனர். முத்தமக்கா இறந்ததற்கு அவள்தான் முன்னின்று எல்லா வேலைகளும் செய்தாள். அவள் அழுகாமல் பிணத்தை குளிக்கச் செய்ததும் மாற்று உடை கட்டிவிட்டதும் இதற்க்குத்தானா என்று யாரோ இறக்கிப் போட்ட போது சொல்லி அழுதார்கள். ஊரில் இரண்டாவது சாவு விழுந்து விட்டதும் ஏகாலி குடும்பமும், அம்பட்டையனும் அழுது கொண்டே ‘அப்பச்சிமார்கள் வீட்டிலே இப்படியா’ என்று குத்தவைத்து உட்கார்ந்து கொண்டார்கள்.

தூக்குப் போட்டுக் கொண்டவளின் கணவன் எந்த ஊருக்கு வேலைக்குப் போயிருக்கிறான் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆள் விட்டுத்தேடியும் கிடைக்க வில்லை. எந்த ஊரில் போய் எப்படி தேடுவது என்று வரும் போது வரட்டும் என்று விட்டுவிட்டனர். அவளை அடக்கம் செய்து விட்டுவந்த போது ஊரே தனது பயந்த முகத்தை மறைத்து வைத்துக்கொள்ள முயன்று கொண்டிருந்தது. யாரும் யாரிடமும் பேசிக்கொள்ளவில்லை. பேசுவதற்கு ஒன்றும் இல்லையென்பது போல அமைதியாக கிடந்தனர். யார் இனி சாகப் போகிறார்கள் என்பது போல காற்று மரங்களின் ஊடே கடந்து கொண்டிருந்தது. உதிர்ந்த இலைகளும் வீடுகளில் எரியும் விளக்குச்சுடரும் இரவில் யார் கண்ணிலும் படாமல் அசைந்து கொண்டிருந்தது. நாய்கள் தங்களுக்குப் பழக்கமான இடத்தில் உறங்கிக் கொண்டிருந்தது. தூக்குமாட்டிக்கொண்டவளின் வீட்டை பூனைகள் சுற்றிவரத் தொடங்கின.

- எஸ்.செந்தில்குமார்

Pin It