பல்வேறான முடிச்சுக்களால் பிணைக்கப்படும் உறவுகளின் உணர்வுகளை அழுத்தமாய்ச் சொல்லும் வெவ்வேறு மூன்று கதைகளை உள்ளடக்கமாய்க் கொண்ட Magonia என்ற இந்த டச்சுத்திரைப்படம் 2001ஆம் ஆண்டில் வெளிவந்தது. அன்பை, நெகிழ்வைப் பேசும் படைப்புகள் அனைவருக்குமே மிக நெருக்கமானவையாகத்தான் இருக்க முடியும்.

மூன்று கதைகளுமே மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்து கொண்டு வரும் ஒரு தந்தை, ஒவ்வொரு வாரமும் தன்னைச் சந்திக்க வரும் மகனிடம் கூறுவதாக அமைந்திருக்கிறது. ஒன்றிற்கொன்று தொடர்பில்லாத கதைகள் எனினும் அவை மூன்றுமே மனம் நெகிழச்செய்யும் உணர்வுகளைக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளது.

01. தினமும் பள்ளிவாசலில் ஓதுவதற்கு ஒரு முதியவரை முதுகில் சுமந்துச் செல்கிறான், அவ்வீட்டில் இருக்கும் பெண்ணை காதலிக்கும் ஒர் இளைஞன். ஓதும் வரை அவரை தாங்கிப் பிடித்து நிறுத்தி பின் மீண்டும் அவரை வீட்டிற்கு சுமந்து செல்கிறான். வயதாகிவிட்டதால் ஓதும்போது குரல் கரகரத்து இடையில் இருமலுடனும் மிகுந்த சிரமங்களுடனேயே அவர் இப்பணியை விடாது மேற்கொண்டு வருகிறார். மக்கள் அவர் ஓதத் துவங்கிய உடனேயே காதுகளை அடைத்துக் கொண்டு வீட்டினுள் சென்று கதவுகளை அடைக்கின்றனர்.

பல ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொண்டு வரும் இறைபணியை, தனதான கடமையாக்கிக் கொண்ட வேலைகளை செய்ய உடல் ஒத்துழைக்காமல் போகும்போது ஏற்படும் வேதனையை அம்முதியவர் தன் கண்களில் தேக்கி வைத்திருக்கிறார். இப்பணியை அவர் தொடர்ந்து செய்ய வேண்டாம் எனச்சொல்லவோ அவரை தடுத்து நிறுத்தவோ இயலாமல் தவிக்கும் அப்பெண்ணின் சங்கடங்களும், முதியவரிடம் பேசி அவருக்கு விளங்க வைக்கவும், நமக்கு பிடித்தமானவற்றை சமயங்களில் விட்டு விலகவேண்டிய கட்டாயத்தையும் உணர்த்த முயற்சிக்கும் இளைஞனின் தெளிவும், இருவரும் முதியவர் மேல் வைத்திருக்கும் அன்பும் மரியாதையும் அருமையான வசனங்களால் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

ஒருகட்டத்தில் தன் வீட்டில் இருக்கும் பெண்ணே அவர் ஓதும் சப்தம் தாளாமல் காதை பொத்திக்கொண்டதை கண்டு ஓதுவதை முதியவர் நிறுத்த, இளைஞன் ஓதத்துவங்குகிறான். பின் நிகழும் சம்பவங்களெல்லாம் உடையப்போகும் மனங்களில் அடுக்கடுக்காக ஏற்றிவைக்கப்படும் பாரமாக அதிகரித்துக்கொண்டுவந்து காதலர்களின் பிரிவில் முடிவடைகின்றது.

02. மலைப்பிரதேசத்தில் இயற்கை எழிலை காண சுற்றுலா மேற்கொள்ளும் மத்திய வயதை கடந்த தம்பதியர்களின் வாகனம் பழுதுபடவே அவர்கள் பயணம் தடைபடுகின்றது. கணவன் வாகனத்தை பழுதுபார்த்துக்கொண்டிருக்க, தற்செயலாக வந்தடைந்து விட்ட இடத்தை சுற்றிப்பார்த்து அதன் அழகை ரசிக்கிறாள் மனைவி. சற்று தள்ளி உயரமான இடத்தில் ஒரு வீடு தென்படவே அங்கு செல்கின்றனர்.

ரம்மியமான சூழல், எளிமையான வீடு, ஆடம்பரமற்ற நகர்வு, அங்கு வசிக்கும் இளைஞன் மற்றும் வயதானவரின் வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கண்டு லயித்துப் போகிறாள்.

இவர்கள் தான் உண்மையான வாழ்கையை வாழ்கிறார்களோ என்று எண்ணுகிறாள். அவ்விடத்தில் அடுப்பை பற்ற வைக்கக்கூட புராதன முறையில் நெருப்பை உண்டாக்குவதை கண்டு வியக்கிறாள். வேறு எதையோ தேடிப்போக எதிர்ப்பாராத ஆசுவாசம் கிடைக்கப்பட்டவளாய் நிம்மதி அடைகிறாள். உறக்கம் வராத நிசப்தமான இரவில் அங்கிருக்கும் இளைஞன் பாடத்துவங்க அவன் நெஞ்சில் புதைந்து அவள் அழும் காட்சி ஓர் அற்புத கவிதையெனலாம். பாடலின் மொழி புரியாவிட்டாலும் நம்மையும் நெகிழ்த்துகின்றது அப்பாடல்.
இக்கதையும் உறவுகள் என்றுமே சந்திக்க விரும்பாத எதிர்பாராத பிரிவைக் கொண்டே முடிக்கப் பட்டிருக்கின்றது.

03. ஆறாண்டுகளுக்கு முன் வந்து சென்ற ஒரு மாலுமிக்காக காத்திருக்கும் காதலியின் இக்கதை, உண்மையான அன்பிற்கு ஏங்கித் தவிக்கும் மனோபாவத்தையும், வாழ்க்கையில் வாய்க்கும் பொய்யான நம்பிக்கைகளின் மீதான எதிர் பார்ப்புகளையும் ஏமாற்றத்தையும் கூறுகிறது. காதலன் திரும்பி வருவதற்கான எந்த நிச்சயமும் இல்லாமல் போனாலும் நிச்சயம் திரும்பி வருவான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் தன் மகனோடு வாழ்தலும், அவனுக்கான காத்திருப்பு தரும் வேதனை, பிறரின் பரிகாசங்கள் தரும் வலி, தான் விரும்பி நேசிக்கும் ஒருத்தி இன்னொருவனுக்காக ஏங்கி காத்திருக்கும் சோகம், அவளை விட்டு விலக நேரும் அதிர்ஷ்ட்டமின்மை என பல சங்கடங்களை கொண்டு நகர்கின்றது இக்கதை.

ஒருவனுக்காக காத்திருத்தல் என்பதை அப்பெண் தனக்கான பாதுகாப்பு கவசமாக அணிந்துக்கொள்கின்றாளோவெனத் தோன்றியது. ஆறாண்டுகள் இல்லாமல் போனவனை மறந்து இன்று பிரிந்துப்போனவனுக்காகக் காத்திருக்கத் துவங்குவதாக முடிக்கப்பட்ட இக்கதையும மென்மையான நெகிழ்வுகளைக் கொண்டு சொல்லப்பட்டிருக்கின்றது.

**

தந்தை மகனுக்கு சொல்வதாக அமைந்த இம்மூன்று கதையில் வரும் தந்தை, மகன் உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் இறுதியில் சந்திப்பது பிரிவையே. அதுவும் இக்கதையின் இறுதி காட்சிகள் சற்றும் எதிர்ப்பார்க்காதவை. சட்டென படம் முடிவடைந்து விட்டதும், திரையை சிலகணங்கள் வெறித்து அமரச்செய்துவிட்டது. கதையாக சொல்லப்படாது நிகழ்வாக நகரும் தந்தை மகன் பற்றிய கதை மற்ற மூன்றை விடவும் அதிரச்செய்தது. அழுத்தமான, அடர்த்தியான வசனங்கள், அருமையான காட்சிப் பதிவு, மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல், அன்பான உள்ளங்கள் என நிறைவைத்தரும் அனைத்தையும் கொண்டுள்ள இப்படம் ‘வாழ்வின் நிலையான பாசங்கள் எல்லாம் அவற்றை விட்டுப்பிரிந்து செல்லும் போதே அவற்றின் நெருக்கமும் உறவும் பலப்படும்படி இருக்கும்’ என்ற நா. பார்த்தசாரதியின் வரிகளை நினைவூட்டியது.

படம் : Magonia இயக்குனர் : Ineke Smits
மொழி : Dutch வெளியான வருடம் : 2001
விருதுகள் - மூன்று

Pin It