கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

சென்ற ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி இரவு, 500. 1000 ரூபாய்த் தாள்கள் செல்லாது என்னும் அதிரடி அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. கறுப்புப் பணத்தை ஒழிக்க அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.  

மறுநாள் காலை  தொடங்கி மக்கள் வரிசை வரிசையாய்த் தங்களிடம் உள்ள வெள்ளைப் பணத்தை மாற்றுவதற்கு வங்கிகளின் வாசலில் நின்றனர். "மக்களே கவலைப்படாதீர்கள், கடைசி முறையாய் நீங்கள் வரிசையில் நிற்கின்றீர்கள். இதோ கறுப்புப்பணம் முழுவதையும் ஒழிக்கப் போகிறோம். இனிமேல் நீங்கள் ரேஷன் கடை வாசலில் கூட வரிசையில் நிற்க வேண்டியிருக்காது" என்றார் பிரதமர். அது மட்டுமின்றி, வரும் மார்ச் மாதத்தில் புதிய இந்தியா  பிறந்துவிடும் என்றார்.

மக்கள் நம்பினார்கள்! வெளிநாட்டுக் கருப்புப்பணத்தை ஒழித்து, அந்தப் பணத்தை எல்லாம் இங்கு கொண்டுவந்து, ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வங்கியில் போடுவதாக வேறு, பாஜக தன் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. இப்போது இங்குள்ள கருப்புப்பணத்தையும் ஒழித்துவிட்டால், இன்னும் பல லட்சம் கிடைக்கும் என்று ஏழை இந்தியர்கள் நம்பிக் காத்திருந்தனர்.

1000, 500 ரூ தாள்களைச் செல்லாது என்று அறிவித்ததன் மூலம்  புழக்கத்திலிருந்த 15.44 லட்சம் கோடி ரூபாய் முடங்கியது. அதில் 3 அல்லது 4 லட்சம் கோடி ரூபாய் கள்ளப்பணமாக இருக்கும் என்று அரசு நினைப்பதாகச் செய்திகள் வந்தன. அடடா, அத்தனை லட்சம் கறுப்புப்பணம் பிடிபடுவது நாட்டிற்கு நல்லதுதானே என்று அப்பாவி மக்கள் ஆசையோடு  காத்திருந்தனர்.

இப்போது ரிசர்வ் வாங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. 15.44 லட்சம் கோடியில் 15.28 கோடி திரும்ப வந்துவிட்டதாம். அதாவது 99% பணம் வெள்ளைப்பணமாக வந்து சேர்ந்துவிட்டது. இன்னும் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள கூட்டுறவு வங்கியில் செலுத்தப்பட்ட பணம் இதில் சேர்க்கப்படவில்லையாம். அதையும் சேர்த்தால், 99.5% சதவீதம்  பணம் வந்திருக்கக்கூடும். அப்படியானால் கறுப்புப்பணம்  எங்கே?

யாருக்கும் தெரியவில்லை. ஒன்று மட்டும் தெரிகிறது. இப்படியெல்லாம் கருப்புப்பணத்தை ஒழிக்க முடியாது என்பது. இதனால் துயரப்பட்டவர்கள், ஏழை, எளிய மக்களும், நடுத்தட்டு மக்களும்தான்! கோடிக்கணக்கில் பணம் வைத்திருந்தவர்கள், வங்கிகளின் வாசல்களில் நிற்காமலே எல்லாவற்றையும் மாற்றிவிட்டார்கள்.

இதனால் ஏற்பட்டுள்ள சோகங்கள் இன்னும் உள்ளன. மீண்டும் தாள்களை அச்சடிப்பதற்கு இரண்டு மடங்கு செலவு ஆகியுள்ளதாக, டைம்ஸ் ஆப் இந்தியா ஏடு ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. பலர் வேலை வாய்ப்பை இழந்தனர். நில விற்பனை (ரியல் எஸ்டேட்) பெரும் சரிவுக்கு உள்ளானது. விலைவாசி ஏறி  விட்டது.  மக்கள் மேலும் மேலும் துன்பத்திற்கு ஆளானதுதான் மிச்சம்!

பிரதமர் சொன்னதில் ஒன்றே ஒன்று மட்டும் உண்மையாகிவிடும் போலிருக்கிறது.....இனிமேல் ரேஷன் கடை வாசலில் யாரும் நிற்க வேண்டி வராது. ரேஷன் கடையையே ஒழித்து விட்டால், அந்தக் கடை வாசலில் யார் போய்  நிற்பார்கள்?