kamarasan 350(1965ஆம் ஆண்டு தமிழகமெங்கும் மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போர், கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அப்போராட்டம் நடைபெற்று 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அன்று அப்போராட்டத்தில் முன்னணி வகித்தவர்களில் ஒருவரான, கவிஞர் நா.காமராசன் தன் கருத்துகளை இங்கு நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்).

1) 50 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களாக இருந்த நீங்கள் தமிழகத்தில் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்த உங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

 மாணவர்கள் நடத்திய மொழிப்போராட்டம்தான் தமிழகத்தில் நடைபெற்ற ஒரே ஒரு சரியான போராட்டம் என்று பழ. நெடுமாறன் ஒருமுறை கூறினார். அடிப்படையான சில லட்சியங்களை வைத்துக் கொண்டு அன்று நாங்கள் அந்தப் போராட்டத்தைத் தொடங்கினோம். எங்களுக்கான தூண்டுதல் தன்னையே எரித்துக் கொண்டு மாய்ந்து போன, (கீழப்பழுவூர்) சின்னச்சாமிதான். அவனுடைய தியாகம் எங்கள் உள்ளத்தை உருக்கியது.

அந்த தியாகியை எங்களின் நினைவுத் தலைவனாக ஏற்றுக்கொண்டு போராட்டத்தில் நாங்கள் இறங்கினோம். அவனுடைய தியாகத்தை நாங்கள் உணர்வுப் பூர்வமாக உள்வாங்கிக் கொண்டோம். அதனை அடிப்படையாகக் கொண்டுதான் போராட்டம் தொடங்கியது.

2) நீங்களும், மறைந்த காளிமுத்து அவர்களும் அப்போராட்டத்தின் தொடக்கமாகத் தீக்குளிக்க எண்ணியிருந்ததாகச் சொல்லப்படும் செய்தி உண்மைதானா?

உண்மைதான். நாங்கள் மதுரை தியாகராயர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதுதான், இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியது. அப்போது, என்னுடைய நண்பர் காளிமுத்துவும் நானும் சேர்ந்து ஏதேனும் உணர்வூட்டும் வகையில் செய்ய வேண்டும் என்று கருதினோம். இரண்டு பேரும் சின்னச்சாமியைப் போல, இந்தித் திணிப்பை எதிர்த்துத் தீக்குளித்து விடலாம் என்று நான் கூறினேன்.

அதற்கு அவரும் முதலில் உடன்பட்டார். ஆனாலும், வாழ்ந்துதான் போராட வேண்டும் என்னும் ஓர் எண்ணம் தோன்றிற்று. அதனால் அதைக் கைவிட்டுவிட்டு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அந்தக் குறிப்பிட்ட பிரிவைக் கொளுத்தலாம் என்று முடிவு செய்தோம்.

நண்பர் காளிமுத்து தமிழ் உணர்வுடையவர். திராவிட இயக்க உணர்வுகளோடு உறுதியாக வளர்ந்தவர் அவர். நல்ல பேச்சாளர். பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்கள் அவரை ‘மேடை மணி’ என்று அழைத்தார்.

பிறகு இங்கே வந்தார். கலைஞரினுடைய ஆதரவில் மேலும் வீரியமிக்க உணர்வுகளை அவர் பெற்றார். அவரை உருவாக்கிய ஒருசிலரில் நானும் ஒருவன் என்பதைப் பணிவுடன் தெரிவிக்கிறேன். முதலில் அவர், மதுரை செந்தமிழ்க் கல்லூரியில்தான் படித்துக் கொண்டிருந்தார். நான்தான் அவரை பி.யு.சி. படிக்கச் சொல்லி, பிறகு தியாகராயர் கல்லூரிக்கு அழைத்து வந்தேன். எனக்கு ஓரிரு ஆண்டுகள் பின்னால் படித்தவர் அவர்.

3) உங்களோடு அன்று போராடிய மாணவ நண்பர்களைப் பற்றி?

கவிஞர் இன்குலாபைப் பற்றிக் குறிப்பாகச் சொல்ல வேண்டும். அவர் அப்போதிருந்தே தீவிரமான போக்குடையவர். ஒரத்தநாடு கணேசன் (எல்.ஜி) அன்றைய போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர். மு.மேத்தா, பா.செயப்பிரகாசம் எல்லோரும் அதே காலகட்டத்தில் படித்தவர்கள்தான்.

4) மாணவர்களின் போராட்டத்திற்குப் பின்னால், பேராசிரியர்களின் ஆதரவு இருந்ததா?

எங்களின் போராட்ட உணர்வுகளுக்கு உந்துதலாக இருந்தவர் எங்களின் பேராசிரியர் இலக்குவனார். அவருடைய உணர்ச்சி மிகு வழிகாட்டல் எங்களுக்கு இருந்தது. ஒரு உண்மையைச் சொல்ல வேண்டுமானால், நாங்கள் சட்டத்தைக் கொளுத்துவதற்கு முன்பு, அந்தச் செய்தியை அவர் ஒருவரிடம் மட்டும்தான் சொல்லியிருந்தோம். அவரைச் சந்தித்து, அவருடைய வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டுதான் நாங்கள் காரியமாற்றத் தொடங்கினோம்.

5) இன்றைய மாணவர்களிடம் மொழி உணர்வு எவ்வாறு இருக்கிறது?

 இன்றைய மாணவர்களின் நிலையை நினைக்கும்போது, அவலமாகத்தான் உள்ளது. பொழுதுபோக்கில்தான் அவர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். சமூக வரலாற்றுப் போக்கில் அவர்கள் நாட்டம் பதியவில்லை என்றுதான் தோன்றுகிறது.

6) இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால், தமிழ் முதன்மை பெறாமல், ஆங்கிலம் முன்னுக்கு வந்துவிட்டது என்று சிலர் கூறும் குற்றச்சாட்டு உண்மையா?

உண்மையில்லை. ஆங்கிலம் ஒரு உலக மொழி. அறிவைப் பெற ஓரளவுக்கு அது படிக்க வேண்டிய மொழிதான். ஆனால் தமிழுக்குச் சேதாரம் ஏற்படுத்துகிற வகையில் மாணவர்களின் பார்வை உள்ளது. அதுதான் உண்மை. ஆங்கில மோகம் ஒரு கட்டம் வரையில் இருந்தது. அது போலித்தனமான போக்குதான்.

7) இப்போதும் இந்தித் திணிப்பு இருந்து கொண்டுதானே இருக்கிறது?

இந்தித் திணிப்பு நிச்சயமாக இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழ்நாடு தனிநாடாவது ஒன்றுதான் இந்தப் பிரச்சினைக்கான ஒரே தீர்வு. அதுவரையில் இந்தித் திணிப்பு இங்கே இருந்துகொண்டுதான் இருக்கும். தனிநாடு கோரிக்கையும் போராட்டமும், சாத்தியமானவைகள்தானா என்பது இங்கு கேள்வி இல்லை. அந்தப் போராட்டம் உண்மையானதுதானா என்று மட்டும்தான் பார்க்க வேண்டும். இந்தியா ஒரு நாடு என்று எப்போதும் நான் எண்ணிப்பார்த்ததில்லை. பல்வேறுவிதமான தன்மைகளையும் கலாச்சாரங்களையும் கொண்ட கூட்டமைப்புதான் இந்தியா.

நேர்காணல்: இனியன்

Pin It