சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டோருக்கான ஒரு உறவு வெளியை உருவாக்குவதையும், சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ள இருப்போருக்கு, ‘உங்களுக்கு உறவுகளாக இத்தனை பேர் இருக்கிறோம்’ என்னும் நம்பிக்கையைத் தருவதையும், சமூக நீதிக்கான முக்கிய பங்களிப்பாகக் கருதிச் செய்து வருகிறது ஓர் அமைப்பு. ‘புதியகுரல்’ என்பது அந்த அமைப்பின் பெயர்.

“சாதியற்ற, பாலின சமத்துவமுள்ள தமிழ்ச்சமூகம் & அதுவே இலக்கு” என்னும் முழக்கத்தை முன்வைத்து, ‘புதியகுரல்’ என்ற அமைப்பு கடந்த ஐந்தாண்டுகளாக, சமூகநீதிக் களத்தில் செயல்பட்டு வருகிறது. தோழர் ஓவியாவின் ஒருங்கிணைப்பின் கீழ் இயங்கிவரும் இந்த அமைப்பில் சேருவதற்கான அடிப்படைத் தகுதி, அனைத்து வகைகளிலும் ‘சாதி மறுப்பாளராக & பாலின சமத்தும் பேணுபவராக இருக்க வேண்டும்’ என்பது மட்டுமே.

pudhiyakural 600

சாதிக்கு எதிராகக் குரல் கொடுப்பதோடு, சாதிக்கு ஆதரவான எந்தவொரு குரலையும், அமைப்பையும் எதிர்ப்பதும் புதியகுரல் உறுப்பினர்களின் தீர்மானிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது.

அன்று குடும்பம் குடும்பமாகத் திராவிட இயக்க மாநாடுகளில் கலந்து கொண்டதை, அவ்வியக்க வரலாற்றில் காணலாம். அதேபோன்றதொரு சூழலை புதியகுரல் அமைப்பு இன்று உருவாக்கி இருக்கிறது. தனி மனிதர்களாக இல்லாமல், குடும்பம் குடும்பமாக இந்த அமைப்பில் உறுப்பினர்களாகச் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, டிசம்பர், மே மாதங்களில் ஏதேனும் ஒரு சுற்றுலாத் தலத்தில் கூடி, சமூக, அரசியல் தொடர்பாக பல்வேறு தலைப்புகளில், குடும்ப ஒன்றுகூடல் மற்றும் கலந்தாய்வுக் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. ஏற்கனவே நான்கு முறை, முறையே, குற்றாலம், குன்னூர், திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் புதியகுரல் ஒன்றுகூடல்கள் சிறப்பாக நடைபெற்றுள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் 27, 28 ஆகிய இரண்டு நாள்கள் கோவையில் புதியகுரல் ஒன்றுகூடல் நடந்தது. இந்த முறை, ‘தமிழகத்தின் ஆட்சிக் கட்டங்கள்’ என்னும் தலைப்பின் கீழ், நீதிக்கட்சி, காங்கிரஸ், தி.மு.கழகம், அ.தி.மு.க., ஆகிய கட்சிகளின் ஆட்சிக் காலங்களைப் பற்றிய கலந்தாய்வு நடைபெற்றது.  முதல் நாள் கலந்தாய்வு அமர்வுகள், இரண்டாம் நாள் சுற்றுலா என நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது.

முதல் நாள் நடைபெற்ற கலந்தாய்வு அமர்வுகளில், புதியகுரல் உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்று,  தாங்கள் திரட்டி வந்த தரவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவற்றின் மீதான கருத்துகளும் வரவேற்கப்பட்டு, விவாதிக்கப்பட்டன. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட, திரு செந்தலை ந.கவுதமன், அன்றைய அமர்வுகளின் தொகுப்பாக மிகச் சிறந்ததொரு நிறைவுரையை வழங்கினார்.

தமிழகத்தின் இசை வரலாற்றை, பாட்டும், உரையும் கலந்த வடிவில் தந்து, இசை ஆய்வரங்கமாகவே ரமணி சிறப்பாக நடத்தினார். பாம்புகளைக் காப்போம் அமைப்பின் தோழர்கள், பாம்புகளைப் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்திக் காட்டினர். அவர்கள் கொண்டு வந்த சாரைப் பாம்பை, சிறியவர் பெரியவர் என அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு கைகளில் பிடித்து, அச்சம் தவிர்த்து நின்றனர்.

இரவு, தோழர் கீதா இயக்கிய, ‘மாதவிடாய்’ ஆவணப்படம் திரையிடப்பட்டது. அவருக்கு ‘சாதனைத் தமிழர்’ என்னும் பட்டம் புதியகுரல் அமைப்பின் சார்பில் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

இரண்டாம் நாள், ஆழியார் அணைக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டது. அங்கு குழந்தைகளின் நாடகம் நடத்தி, அவர்களுக்குப் பரிசளிக்கப்பட்டது. இரண்டு நாள் நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், கோவை சாந்தகுமாரும், அவருடைய துணைவியார் லதா, மகள்கள் தமிழ்ஈழம், ஓவியா ஆகியோர் சிறப்பாகச் செய்தனர். மொத்த செலவுகளை, புதியகுரல் உறுப்பினர்கள் அனைவரும் பகிர்ந்து ஏற்றுக்கொண்டனர்.

இன்றைய சமூக, அரசியல் சூழலில், சாதியைக் கடந்த, பாலின சமத்துவமுள்ள இது போன்ற அமைப்பு  எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து, காலத்தின் தேவை கருதி செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதியகுரல் அமைப்பில் உறுப்பினராகி, சமூகப் பங்களிப்பாற்ற அனைவரும் முன்வரவேண்டும். www.puthiyakural.in  என்ற இணையத்தள முகவரியில் சென்று உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ளலாம்.

 

Pin It