kaadavul book350

பார்ப்பனியம் - அதன் தோற்றம், இருப்பு, தந்திரம், சூழ்ச்சி, எழுச்சி, சமரசம் அதன் செயல்பாடு, இயங்குநிலை ஆகியவற்றைச் சொல்வதற்கு முனைந்த பேராசிரியர் அருணன், அவற்றோடு இந்திய வரலாற்றையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார் தன் “காலந்தோறும் பிராமணியம்” என்ற நூலில்.

இப்பொழுது, “கடவுளின் கதை” நான்கு பாகங்கள் எழுதி வெளியிட்ட அவர், ஐந்தாம் பாகமும் வெளிவர இருக்கிறது என்று ஆவலைத் தூண்டியிருக்கிறார்.

இந்த நூலில் வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள், வேத இதிகாசங்களை வைத்துக் கடவுளின் முழுக் கதையையும் சொல்லப் போகிறார் அல்லது தோலுரிக்கப் போகிறார் என்று நூலைப் புரட்டினால் & கதை வேறு மாதிரியாகப் போகிறது.

“கடவுளின் கதையைத்தான் இப்போது சொல்லப் போகிறேன். கதை என்றால், ‘ஒரேயரு ஊரிலே ஒரேயரு ராஜா’ என்று ஆரம்பிப்பது நமது பாரம்பரியம். அதாவது கதைக்கும் கதைப் பொருளுக்கும் ஒரு துவக்கம் இருக்கும். கடவுளோ துவக்கம் முடிவு இல்லாதவர். ஆதி அந்தம் இல்லாதவர். நித்திய வஸ்து என்றெல்லாம் அடுக்கப்படுகிறது’ & நூலின் தொடக்கத்திலேயே இப்படிக் கடவுள் குறித்துச் சொல்லும் அருணன், அதை அறிவதற்கு மனிதனின் ஆறாம் அறிவைச் சுட்டிக் காட்டுகிறார்.

இதோ அவரின் வரிகள். “மனிதனுக்கு அது தோன்றி வளருகின்ற ஒன்றாக இருப்பதால் முழுமையானதாக இல்லை. அது இரண்டும் கெட்டானாக இருக்கிறது. அது கறாரான பகுத்தறிவு இல்லை. அது பகுத்தும் அறியும் ; பகுத்தும் அறியாது. எதையும் சட்டென்று ஏற்காது, எதையும் சட்டென்று ஏற்கும். இந்த வினோத நிலைதான் கடவுள் எனப்பட்டதன் தோற்றம் மாற்றம் என்பதற்கு அடிப்படைக் காரணம். கடவுளின் கதை என்பது மனிதனின் கதையே.”

கடவுளை முன்னால் நிறுத்தி, மனிதனை விரல்நீட்டிக் காட்டி, யுகங்களை எல்லாம் கொண்டுவந்து இழுத்துப் போட்டு, ஏறத்தாழ உலக வரலாற்றைக் கொண்டுவந்து நிறுத்துகிறார் & கடவுளின் கதையில்.

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பிறப்பையும் மரணத்தையும் இணையில்லாத, புரிந்து கொள்ள முடியாத, புதிரான ஒரு சக்தியாகப் பார்த்தான் மனிதன்.

மரணத்தைப் பார்த்து பயந்தான். பிறப்பைப் பார்த்து வியந்தான். உடல் அழிந்தாலும் உயிர் பிறக்கும் என்று எண்ணினான். அந்த நம்பிக்கையில் தோன்றியது இறந்தோரைப் போற்றுதல், இனப்பெருக்கத்தை நாடுதல் என்ற வழிபாட்டு முறை.

தொடர்ந்து வேட்டைச் சமூகமாக இருந்ததால், விலங்கு வழிபாடும், அச்சமூகத்திற்குத் தலைமை தாங்கியவர் பெண் என்பதால், தாய் வழிபாடும் பிறந்தன. இது ஆதிமனித யுகம்.

கற்களால் வேட்டையாடிய மனிதன் செம்பை அறிந்தான். அதனுடன் தகரம் கலந்து வெண்கலத்தை அறிந்தான். உழுதான், விவசாயத்தைத் தெரிந்து கொண்டான். பிறந்தது நாகரிகம் நதிகளின் ஓரங்களில்.

யூப்ரடீஸ் & டைகரீஸ் நதிகளுக்கு இடையிலான சுமேரிய நகர அரசுகளின் விவசாய வணிக வளர்ச்சிகளோடு உருவான கடவுள்கள் சபையில், அணு என்னும் தலைமைக் கடவுள் மற்றும் துணைக் கடவுள்களைக் காண்கிறோம். சுமேரிய சொர்க்கக் கடவுளின் சபையை இந்தியாவின் பார்ப்பனிய இந்திர சபையுடன் ஒப்பிட்டுச் சொல்லும் நூலாசிரியர், இதன் வழித் தோன்றும் ஆண்டான் யுகத்தை விவரிக்கிறார்.

யுகப்புரட்சி மீண்டும் பழைய யுகத்திற்குத் திரும்பாது. அது அடிப்படையான சமூக மாற்றத்தை நிலைநிறுத்தும். சமூக மாற்றத்திற்கான அச்சாணியாக, பொருளாதார வாழ்வில் மட்டுமின்றி அனைத்து வாழ்வியல் கூறுகளிலும் அதற்கான மாற்றங்களை நிலைநிறுத்தும். இப்படித்தான் ஆதிமனிதன் யுகத்திலிருந்து, நிலப்பிரபு யுகம் பிறந்தது என்று விளக்கம் தரும் நூலாசிரியர், படுவேகமாக யுகங்களைக் கடந்து செல்கிறார்.

பண்டைய கிரேக்க சுமேரியா, எகிப்து தொடங்கி இஸ்லாமிய அல்லா வரை, பல கடவுள் முறை,  ஏக கடவுள் நிலை, சிந்துவெளி லிங்க வழிபாடு, சீனர்களின் ஆமைஓடு, ஹோமரின் மனிதக் கடவுள், ரோமாபுரியின் ஆவிகள் மற்றும் கடவுள் ஆகியனவற்றையும், அக்கால நாடுகள், அரசியல், போராட்டங்கள், ஒடுக்குமுறை, அரசு மற்றும் மத ஆதிக்க வரலாறுகளையும் தேர்ந்து, தெளிந்து அறியத் தருகிறார் அருணன். குறிப்பாக பவுத்த, சமண, வேத மதங்களின் வரலாறுகளையும், தொடக்க கால நாத்திகச் சிந்தனைகளையும் விடுபடாமல் தருவது நூலின் சிறப்பு.

சிலுவைப் போர்கள் என்ற பெயரில் கிறித்துவத்திற்கும், இஸ்லாமுக்கும் இடையே நடைபெற்ற கொடுமைகள் & பவுத்த சமணத்திற்கு எதிராக நடத்தப்பட்ட ஒடுக்குமுறைகள், வன்முறைகள் - கடவுள் முறையில் இருந்து, ஏகக் கடவுள் வணக்கத்தை நோக்கிப் புறப்பட்ட விபரீதங்கள், அதன் முரண்கள் - யார் ஏக கடவுள் என்பதில் எழுந்த பகைமையும், மோதல்களும் - கிறித்துவத்தில் எழுந்த புரோட்டஸ்டன்ட் என்ற எதிர்ப்பியக்கம், அதை ஒடுக்கக் கத்தோலிக்கத் திருச்சபை நடவடிக்கை - உருவ வழிபாட்டில் இருந்து, பின்னர் அதை மறுத்து உருவான இஸ்லாமை, சூபியம் நெகிழச் செய்வதாகச் சொல்லி நீர்த்துப் போகச் செய்த வேலை & இப்படி விரிவான வரலாறுகளை சமூகப் பொருளியல் அடிப்படையில் விரிவாகப் பேசுகிறது கடவுளின் கதை & நிலப்பிரபு யுகத்தில்.

அடுத்த பாய்ச்சலில் இந்தக் கதை முதலாளி யுகத்திற்குள் நுழைகிறது. யுக மாறுதலுக்கு அடிப்படை, பொருளியல் வாழ்வின் அடிப்படை மாற்றம். அதற்கு வழி, புதிய கண்டுபிடிப்புகளும் தேவையும். அவை பொருள் உற்பத்தித் துறையிலும், விநியோகம், அரசியல், மதக் கட்டமைப்புத் துறைகளிலும் வந்தன. அத்துடன், புதிய சிந்தனைகளும், அறிஞர்களின் சித்தாந்தங்களும் முன்னுரிமை பெற்றன.

இங்கிலாந்தில் நடந்த தொழிற்புரட்சி பெரும் மாற்றத்தைத் தந்தது. முடியரசு, குடியரசாக இதுவும் ஒரு காரணம். எழுச்சி பெற்ற கத்தோலிக்கம் மட்டுப்படுத்தப்பட்டு, புரோட்டஸ்டன்ட் பிரிவான ஆங்கிலிகன் நிலை நிறுத்தப்பட்டது. பொருளாதாரம், அரசியல், மதம் இவை ஒருங்கிணைக்கப்பட்டன.

புரூனோ கொடுமையாகக் கொல்லப்பட்டது, கலிலியோ சிறையில் தள்ளப்பட்டது, கிளப்பிவிடப்பட்ட மதக் கலவரங்கள், எழுத்துரிமை, பேச்சுரிமைகளுக்கு ஏற்பட்ட ஆபத்து போன்ற அவலங்கள், இந்த இடைக்காலத்திற்குரியதாக இருந்ததை நூலில்  விரிவாகப் பார்க்க முடிகிறது.

சிலுவைப் போர்கள், தேசங்களின் போராக மாறுகிற மாற்றம், மனிதனின் தோற்றம், அவனுக்கு முந்தைய உயிரினத்தின் மாற்றம் என்ற டார்வினின் பரிணாமக் கோட்பாடு ஆகியனவும், கடவுள் ஆட்டம் கண்ட விதம், விஞ்ஞானம், பொருளியல், தத்துவ விரிவுகள், ஹெகல், ஃபாயர்பாக் முன்வைத்த சமூகத் தத்துவம், இவ்விருவரையும் இணைத்தும், மறுத்தும் மேதை கார்ல் மார்க்ஸ் சொன்ன மார்க்சியத் தத்துவம் ஆகிய அனைத்தையும் கடவுளின் கதையாகக் கொடுத்திருக்கிறார் அருணன்.

“கடவுளின் கதை” படிப்பதன் மூலம்தான் மனிதன், நாடுகள், அதன் வரலாறுகள், சமூக மாற்றங்கள், பொருளியல் மாற்றங்கள், தத்துவங்கள் என ஒரு விரிந்த அறிவுலகத்தை நோக்கிச் செல்ல முடியும்.

படியுங்கள் அருணனின் கடவுளின் கதை. அது கலை, இலக்கிய, சமூக, தத்துவ வரலாறு

கடவுளின் கதை (4 பாகங்கள்)

ஆசிரியர்        : அருணன்

வெளியீடு     : வசந்தம் வெளியீட்டகம்,

69-24அனுமார் கோயில் படித்துறை,

சிம்மக்கல்மதுரை - 1

தொலைபேசி : 0452-2625555, 94422 61555

Pin It