புரட்சித் தலைவர் மாண்புமிகு எம்.ஜி.ஆர். அவர்கள் தலைமையில் அமைந்த தமிழக அரசு பெரியார் அவர்களின் நூற்றாண்டையொட்டி (1879- 1979) 1979 இல் ஒரு குழு அமைத்தது. இக்குழுவிற்கு டாக்டர் நாவலர் இரா. நெடுஞ் செழியன் தலைவராகவும், சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பத்மஸ்ரீ டாக்டர் நெ.து.சுந்தர வடிவேலு துணைத் தலைவராகவும் மற்றும் அறுவரை உறுப்பினர்களாகவும் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் பணிகளாக (1) பெரியார் வரலாற்றை உருவாக்குவது. (2) பொன்மொழிகளைத் திரட்டி நூலாக வெளியிடுவது, (3) சிறுவர்களுக்கான வரைபட வரலாற்றை உருவாக்குவது. (4) கல்வெட்டுப் பணியைச் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
இப்பணிகள் 1979 மே திங்களில் தொடங்கப் பெற்றன. ‘பெரியார் வரலாறு’ தவிர மற்ற பணிகள் செய்து முடிக்கப்பட்டன. இப்பணி மேற்கொள்ளப்பட்ட காலத்தில், பெரியார் வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டதை அறிந்திருந்த குரூர் நீலகண்டன் நம்பூதிரி, பெரியாரின் நெருங்கிய நண்பர் ஈரோடு அங்கப்பன் செட்டியார், பெரியாரை முற்றிலும் அறிந்திருந்த சுயமரியாதை வீரரும், ‘தேசபக்தன்’ ஆசிரியருமான சிதம்பரம் தண்டபாணிப் பிள்ளை முதலியோர் உயிருடன் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மூலம் உண்மைச் செய்திகளை அறியவும் திட்டமிடப்பட்டது.
நவசக்தி, மெட்ராஸ் மெயில், இந்து, சுதேசமித்திரன் முதலிய இதழ்களிலேயிருந்தும். தமிழ்நாடு தவிர்த்த இந்தியாவின் வெளி மாநிலங்கள் மட்டுமின்றி மலேயா, இலங்கை, சிங்கப்பூர், இலண்டன், ரஷ்யா போன்ற வெளி நாடுகளிலிருந்தும் தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலங்களின் ஆவணக் காப்பகங்களிலிருந்தும் அக்கால வார-மாத இதழ்கள் மற்றும் புத்தகங்களிலிருந்தும் பம்பாய், தில்லி, கல்கத்தா, மற்றும் வெளிநாட்டு நூலகங்களிலிருந்தும் பெரியார் பற்றிச் செய்திகளைத் திரட்டவும் தீர்மானிக்கப்பட்டது. இப்பணிக்குரிய எம்.ஏ., எம்.பில்., படித்த ஆறு பட்டதாரிகள் நல்ல ஊதியத்துடன் அமர்த்தப்பட்டனர். இதற்காகத் தமிழக அரசு இலட்சக்கணக்கில் பணத்தைச் செலவிட்டது.
முதலில் நெ.து. சுந்தரவடிவேலு அவர் களிடம் சிறுவர்களுக்கான பட வரலாற்றை ஒப்படைத்த இக்குழு, பின்னர் மாற்றம் செய்து, பெரியார் வாழ்க்கை வரலாற்றை எழுதும் பொறுப்பினை அவரிடம் ஒப்படைத்தது. இப்பணி நிறைவு பெறச் சில ஆண்டுகள் ஆயின. இவ்வரலாறு, பெரியாரின் இளமைக்காலம் முதல் காங்கிரசிலிருந்து வெளியேறும் வரை உள்ள பகுதி 300 பக்கங்களில் முதல் தொகுதியாக எழுதப்பட்டு குழுவால் ஏற்கப்பட்டது. பின்னர் இப்பகுதி அச்சிடுவதற்காக அச்சகம் ஒன்றிடம் அப்போதே ஒப்படைக்கப்பட்டது. இரண்டாவது தொகுதி இந்தி எதிப்புப் போராட்டம் ‘திராவிடர் கழகம்’ பிறந்த வரலாறு - கருஞ்சட்டை மாநாடு முதலிய விவரங் களுடன் 1948 வரை எழுதப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப் பட்டது. எஞ்சிய வரலாற்றுப் பகுதி, மூன்றாவது தொகுதி யாக எழுதப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
பத்மஸ்ரீ டாக்டர் நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் தலைசிறந்த நிர்வாகி என்பதைத் தமிழகம் நன் குணர்ந்திருப்பது போலவே, அவர் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர் என்பதையும் தமிழகம் உணர்ந்திருக்கிறது. இவர் பெரியவர்களுக்காக 30 நூல்களையும், ‘வள்ளுவர் வரிசை’ என்னும் தலைப்பில், சிறுவர்களுக்காக 13 நூல்களையும் எழுதி உள்ளார். இவர் படைத்த பெரியார் பற்றிய அரிய நூலொன்றும் வெளி வந்துள்ளது. இவர் தம்முடைய வாழ்க்கை வரலாற்றை 2300 பக்கங்களில் மூன்று பகுதிகளாக எழுதி வெளியிட்டுள்ளார். இந்நூல் இவருடைய பத்தாண்டு காலப் பணியின் விளைவால் உருவானதாகும். இந்நூல் தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டு காலக்கல்வி வளர்ச்சி யையும், சமுதாய அரசியல் சூழ்நிலைகளையும் விளக்குவதாகும். இந்நூலைத் தமிழ்நாட்டின், புகழ் வாய்ந்த புத்தக வெளியீட்டு நிறுவனமான வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவர் இந்நூலை எழுதி, நூல் வடிவில் வெளிவர, இவர் என்னை அன்புடன் கேட்டுக் கொண்டதின் பேரில், இவருக்கு நான் உதவி செய்தேன். இப்பணி ஏழு ஆண்டு காலம் நீடித்தது.
இந்தப் பெரியவருக்குத் தம் வாழ்நாளின் இறுதிக் காலத்தில் ஒரு பெருங் கவலை நெஞ்சை வாட்டி வதைத்தது. தாம் எழுதிய தம்முடைய வரலாறு 2300 பக்கங்களில் வெளி வந்தும் - தாம் தமிழக அரசுக்காக எழுதித் தயாரித்த - தம்மால் பெரிதும் மதிக்கப் பெற்ற - தந்தை பெரியார் அவர்களுடைய வரலாறு, இன்னும் நூல் வடிவில் வரவில்லையே என்பதே அக் கவலை யாகும். நான் அவருடைய இறுதிக் காலத்தில் அவரைச் சந்தித்தபோது, என்கைகளைப் பிடித்துக்கொண்டே, “என் வாழ்நாளில் நான் எழுதிய ‘தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை’ என் கண்களால் காண்பேனோ” என்று கூறிக் கண்aர் விட்டு அழுதார். இறுதி வரை காண முடியாமலேயே மறைந்து விட்டார்.
பெரியாருக்கு 125 ஆம் ஆண்டு நிறைவு விழாவும் நடந்து முடிந்துவிட்டது. சுந்தரவடிவேலு எழுதி அரசிடம் ஒப்படைத்த வரலாறு என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை. இதற்காக யாரும் கவலைப் படவில்லை. 95 வயது வரை வாழ்ந்த ஒரு சமுதாயச் சீர் திருத்தத் தலைவரின் வாழ்க்கையை எழுதுவ தென்பது சாதாரண விஷயமல்ல. பத்மஸ்ரீ நெ.து. சுந்தரவடிவேலு போன்று, தந்தை பெரியாருடன் அரை நூற்றாண்டுக் காலம் நெருங்கிப் பழகி - அவர் வழியில் வாய்மையுடன் நடைபோட்டு, பெரியாரை முற்றிலும் உணர்ந்த - இலக்கியம், சமுதாயம், அரசியல் அறிவுடன், முற் போக்குச் சிந்தனையையும் கொண்ட - இன்னொருவர் இனி பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதக் கிடைப்பாரா? இப்பொழுது உள்ளவர்களால் அவருக்கு இணையாக எழுத முடியுமா?
பத்மஸ்ரீ சுந்தரவடிவேலு தாம் எழுதிய பெரியார் வரலாற்றின் இறுதித் தொகுதியைக் கொடுக்கும் போதுதான் நான், அவருக்கு நெருக்கமானேன். அந்த நேரத்தில் ‘ஒரு பிரதியை நாம் வைத்துக் கொண்டு இன்னொரு பிரதியை அரசுக்குக் கொடுங்கள்’ என்று அவரிடம் சொல்ல எனக்குத் தைரியமில்லை. காரணம், அவரைப்பற்றி உணர்ந்தவர்களுக்குத் தெரியும், அவரிடம் பேசவே அஞ்சுவார்கள். இந்நிலையில் அவருக்கு நான் போய் ஆலோசனை கூற முடியுமா? பிற்காலத்தில் நெருக்கம் அதிகமான பிறகு எவ்வளவோ விஷயங்கள் பேசி இருக்கிறோம் என்பது வேறு விஷயம். பிரிட்டிஷ் அரசாங்கத்தில் வேலை பார்த்தவர் நெ.து. சுந்தரவடிவேலு, உயர்ந்த நெறிமுறைகளைக் கடைப்பிடித்தவர். எனவே, பெரியார் வாழ்க்கை வரலாறு, அது பற்றிய குறிப்புகள், திரட்டிய விவரங்கள், துண்டுத் துμக்குகள், படங்கள் அனைத்தையும் கட்டி அரசிடம் ஒப்படைத்து விட்டார். அதை அரசின் சொத்து என்று அவர் கருதினார். அது சம்பந்தமாக பிரதியோ குறிப்போ அவர் வீட்டில் கிடையாது. தமிழக அரசு இதைப்பற்றி விசாரித்து, உரிய நடவடிக்கை எடுத்து பத்மஸ்ரீ சுந்தர வடிவேலு எழுதிய தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டுத் தமிழக மக்களுக்கு வழங்க வேண்டு மென்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
(நன்றி : “இளந்தமிழன் 2006, மார்ச்சு”)