அ.இ.அ.தி.மு.கவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்த பத்து நாள் கெடு முடிந்துள்ள நிலையில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் "அம்மையார் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆட்சிக்குப் பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டன. அதிலிருந்து ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்றித் தந்தது பா.ஜ.க தான். அந்த நன்றிக் கடனுக்காகத்தான் பா.ஜ.கவோடு தற்போது கூட்டணியில் இருக்கிறோம்" என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் அ.இ.அ.தி.மு.க தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. தன்னுடைய நிலைப்பாட்டுக்கு ஆதரவாக திருவள்ளுவரைத்துணைக்கு அழைத்திருக்கிறர். சேக்கிழார் எழுதிய கம்ப ராமாயணத்தை படித்துத் தேர்ந்த பழனிச்சாமிக்கு திருக்குறளும் தெரிந்திருக்கிறதே!
அ.இ.அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மறுநாளே ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான முக்கிய வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்க இருக்கிற தீர்ப்பு வெளியாகும் தேதி அறிவிக்கப்படுகிறது.. அதைத் தொடர்ந்து சசிகலாவை முதல்வராக ஏற்க மறுத்து அன்றைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அம்மையார் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்து தர்மயுத்தம் தொடங்குகிறார். கூவத்தூரில் அ.இ.அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்து விட்டு சிறை செல்கிறார் சசிகலா. அந்த நேரத்தில் தன் முட்டிதேய தவழ்ந்தே சென்று சசிகலாவுக்கு நன்றி தெரிவிக்கிறார் பழனிச்சாமி. அதன் பிறகு சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைத் தாக்கல் செய்த போது அவருக்கு எதிராகப் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்களிக்கிறார்கள். பின்னால் அதே பன்னீர்செல்வத்தோடு சமரசமாகி அவரைத் துணை முதல்வர் ஆக்குகிறார் பழனிசாமி.
நம்பிக்கை கோரிய தீர்மானத்தில் எதிர்த்து வாக்களித்த பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அன்றைய சபாநாயகர் தனபால், "பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை, வேறு முதல்வரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்" என்று ஆளுநருக்குக் கடிதம் எழுதிய தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்கிறார். இவ்வாறு மக்களாட்சியின் மாண்பைக் குலைத்து, ஜனநாயகத்தின் குரல் வளையை நெறித்துத்தான் நான் ஆட்சியில் அமர்ந்த பழனிச்சாமி அதற்கு "ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க அரசு உடந்தையாக இருந்தது" என்று இப்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். "பா.ஜ.கவின் தயவால் சட்டத்திற்கு விரோதமாகத் தான் பழனிச்சாமியின் ஆட்சி நீடித்துக் கொண்டிருக்கிறது" என்று மக்கள் மத்தியில் தொடர்ந்து அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டது முற்றிலும் சரி என்பதைப் பழனிச்சாமியின் இந்த உரை உறுதிப்படுத்தி இருக்கிறது.
ஆட்சியைக் காப்பாற்றிய பா.ஜ.கவுக்கு நன்றியோடு இருப்பதாகக் கூறும் பழனிச்சாமி, தன்னை முதல்வராக்கிய சசிகலாவுக்கு நன்றியோடு இல்லையே ஏன்? அதே போன்று கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவோடு கூட்டணி சேராமல் தனியாகப் போட்டியிட்டாரே அது ஏன்? "நன்றி மறப்பது நன்றன்று" என்று பேசும் பழனிச்சாமி அவ்வப்போது நன்றியை மறந்து விடுகிறாரே அதன் காரணம் என்ன? பாஜக மூத்த தலைவரான அத்வானிக்கு இருப்பதாக அம்மையார் ஜெயலலிதா குறிப்பிட்ட செலெக்ட்டிவ் அம்னிசீயா பழனிச்சாமிக்கும் இருக்கிறதோ? "பன்னீர்செல்வத்தை தர்மயுத்தத்தைத் தொடங்குமாறு நான் தான் கூறினேன்" என்று வெளிப்படையாகவே தெரிவித்தவர் பா.ஜ.கவின் இராஜகுரு ஆடிட்டர் குருமூர்த்தி. பழனிச்சாமிக்கு இன்னல்களைக் கொடுப்பதே பாஜக தான். ஆனால் அதை மறைத்துவிட்டு பா.ஜ.க தான் ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்றியது என்று சொல்லும் பழனிச்சாமி, இதற்குப் பதிலாக ஊழல் வழக்குகளில் இருந்து என்னையும், என் மகனையும், எனது சம்பந்தியையும் காப்பாற்றுவதற்காகவே நான் பா.ஜ.க கூட்டணியில் இருக்கிறேன் என்று வெளிப்படையாகவே சொல்லி இருக்கலாம்.
தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க ஏராளமான நன்மைகளைச் செய்திருக்கிறது என்று பேசுகிறார் பழனிச்சாமி. தமிழ்நாட்டு மாணவர்களின் உயிரைக் குடிக்கும் நீட் தேர்வு, ஆண்டுதோறும் மின் கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் உதய் மின் திட்டம், பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி தர மறுப்பது, மும்மொழிக் கொள்கை, தொகுதி மறு வரையறை போன்றவற்றில் எந்த நன்மையைச் சொல்கிறார் பழனிச்சாமி?
“ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை" என்ற அய்யன் திருவள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப, பழனிச்சாமிக்கு சரியான தீர்ப்பை வர இருக்கிற 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் வழங்குவார்கள்.
- வழக்கறிஞர் இராம. வைரமுத்து