அண்மைக் காலங்களில் இசைத் துறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகள், இந்தியாவில் தனி மனித சுதந்திரம் எந்த அளவுக்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்பதை நமக்கு உணர்த்துகின்றன. கர்நாடக இசைக் கலைஞர்கள் மிரட்டப்படுவது, அதனைத் தொடர்ந்து அவர்களது இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவது என்பதே அது.

tm krishnaகர்நாடக இசைக் கலைஞர் ஓ. எஸ். அருண் கலந்துகொள்ளவிருந்த “இயேசுவின் சங்கம சங்கீதம்” என்ற நிகழ்ச்சி இந்துத்துவவாதிகளால் தொடர்ந்து சமூக வலைத் தளங்களில் மோசமாக விமர்சிக்கப்பட்டது. ஓ. எஸ். அருண் ஓர் இந்து என்றும், அவர் இயேசுவைப் பற்றிய பாடல்களைப் பாடக் கூடாது என்றும், அவரது நிகழ்ச்சிகளை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பரப்புரை செய்யப்பட்டது. இதனையடுத்து சொந்தக் காரணங்களை முன்னிட்டு அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலவில்லை என்றார் அவர்.

இந்த சர்ச்சை ஓய்வதற்குள்ளாகவே, பாடகர் நித்யஸ்ரீ மகாதேவன், தியாகராஜ கீர்த்தனைகளில் இராமனுக்குப் பதிலாக இயேசுவைப் பற்றிப் பாடினார் என்ற பொய்யான குற்றச்சாட்டினைக் கூறி அவரை இந்துத்துவவாதிகள் சமூக வலைதளங்களில் கண்டிக்கத் தொடங்கினர். இவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாடகர் டி. எம். கிருஷ்ணா “இனி ஒவ்வொரு மாதமும் இஸ்லாமிய, கிறித்தவ பாடல்களைப் பாடுவேன்” என்று அறிவித்தார்.

தற்போது இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு எதிராக பெருமாள் முருகன், ரொமீலா தாப்பர், அருணா ராய் உள்ளிட்ட 175 குடிமைச் சமூக ஆர்வலர்கள் இணைந்து ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். “கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றைக் காப்பது என்ற பெயரில், ஒரு சிறு குழு மிரட்டுவது, அச்சுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை அனுமதிக்க இயலாது. ஜனநாயகத்தையும், கருத்து சுதந்திரத்தையும் பாதுகாக்கும் கடமை உடைய அரசோ, நீதிமன்றமோ இதைத் தடுக்க முன்வராதது அச்சமூட்டுவதாக உள்ளது. கருத்து சுதந்திரத்தை வழங்கும் அரசியல் சாசன உரிமையைப் பாதுகாக்க கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும்” என்பதே அவ்வறிவிப்பு.

மத்தியில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து கருத்து சுதந்திரத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டு வருவதை நாம் அறிவோம். ஒருவர் எதைப் பேச வேண்டும், எதை உண்ண வேண்டும் என்பதைச் சிலர் முடிவு செய்கின்றனர். ஒற்றைக் கலாச்சாரத்தை நோக்கி நாட்டை உந்தித் தள்ளுவதையே குறிக்கோளாகக் கொண்டு அரசு இயங்குகிறது. இது இந்தியா போன்ற பன்மைக் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள நாட்டிற்குப் பெருங்கேடாக முடியும். கடந்த வாரம் ஒரு நிகழ்ச்சியில் பேசிய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, “ஆங்கிலம் ஒரு நோய் என்றும், இந்தி இல்லாது இந்தியா முன்னேறுவது சாத்தியமில்லை என்றும் பேசியுள்ளார். கோல்வால்கரின் வாரிசுகளிடம் நாம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? எதிர்வரும் தேர்தலில் இந்தச் சர்வாதிகார அரசை வீட்டுக்கு அனுப்ப அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

Pin It