ஆழியில் புதைந்து கிடந்த தமிழரின் அடையாளங்களைக் கரைசேர்த்தவர். காரிருளில் மறைந்திருந்த தமிழரின் பாண்பாட்டை மீட்ட உதயசூரியன். ஆரியமாயையில் சிக்கிக்கிடந்த தமிழரின் அரசியலைப் பெரியாரின் தளபதியாய் பெரியாருக்கே காணிக்கையாக்கியவர் பேரறிஞர் அண்ணா.

பெரியாருடன் அண்ணாவிற்கான உறவை அவர் வாய்மொழியாகவே சொல்வதானால், “1935 இல் பெரியாரைச் சந்தித்தேன்,. அன்று முதல் அவரின் சுவீகாரப் புத்திரன் ஆனேன்” என்றார். பெரியாரின் நிழலாக உடன் இருந்தார். 1937 இல் நடைபெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் அண்ணாவை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது.

அரசியலாளர், எழுத்தாளர், பேச்சாளர், இலக்கியவாதி, கதையாசிரியர், வசனக்கர்த்தா, கவிஞர், நிர்வாகி, பகுத்தறிவாளர், போராளி எனப் பல கலைகளைக் கொண்டு தமிழரின் பண்பாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். அண்ணாவின் ‘வேலைக்காரி’ திரைப்படம் திரையுலகின் திருப்புமுனை. மன்னர்கள், புராணங்கள் போன்ற கதைகளை மட்டுமே படமாக்கிக் கொண்டிருந்த திரையுலகில் எளிய மக்களின் நடைமுறை வாழ்வியலைப் படமாக்கினார் அண்ணா. அதுபோல் அவர் தொட்ட அனைத்துத் துறைகளிலும் புதுமைகள் மிளிர்ந்தது, தமிழரின் பண்பாடு புதுவண்ணம் கொள்ளத் தொடங்கியது. அவரின் இளவல்கள் பலரும் அண்ணாவைப் போல அனைத்து ஊடகங்களையும் கையாண்டனர். அவர்களுக்கு அண்ணா, ஆலமரத்தின் அடிமரம் போல் விளங்கினார். இளவல்கள் அதன் விழுதுகள் ஆனார்கள்.subavee tributes to annaபெரியாருடன் இருந்த அந்தக் காலம் தன் வாழ்வின் வசந்தகாலம் என்றார் அண்ணா. இந்நிலையில் 1947 இல் இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறினர். இனி தமிழர் நலனிற்குத் தேர்தல் அரசியல் தவிர்க்க முடியாத ஒன்றாகக் கருதிய அண்ணா, பெரியாரிடம் இருந்து பிரிந்தார். தி.மு.க உதித்தது. திராவிட முன்னேற்றக் கழகம் உதயமாகி 2 ஆண்டிற்குள் 4000 கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தினார். ஓய்வில்லாமல் இரவெல்லாம் படிப்பு, எழுத்து என்று நேரத்தைச் செலவளித்தார் அண்ணா.

அவரால் மேடைப்பேச்சில் புதிய பல சொற்றொடர்கள் தமிழுக்குக் கிடைத்தன. ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு’ ‘வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது’ ‘கட்டித் தங்கம் பெட்டியில் வைத்தேன்’ ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ ‘உடைவாளை எடுத்து உருளைக்கிழங்கு வெட்டுவதா?’ ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’ என்பன போன்றவை. வடமொழிச் சொற்களுக்கு மாறாகப் புதிய தமிழ்ப்பதங்கள் உலாவரத் தொடங்கின. உறுப்பினர், ஊராட்சி ஒன்றியம், செயற்குழு, அமைச்சர், அவைத்தலைவர், சட்டப்பேரவை -இவைபோல் பல. எந்த மேடையும் நமஸ்காரம் சொல்லவில்லை. ‘வணக்கம்’ என்று முழங்கின. அண்ணாவால் தமிழினத்தின் பண்பாடு, வாழ்வியல் மாற்றம் பெற்றது. அண்ணாவின் வழி பழைமை என்னும் பாதாளத்திற்கு இட்டுச் செல்லும் வழி அல்ல. தன்னம்பிக்கையுடன் நவீனத்திற்கு இட்டுச் செல்லும் பாதையது.

இந்நிலையில் 1963 இல் திமுகவைக் குறிவைத்துக் கொண்டுவரப்பட்ட பிரிவினைத் தடைச் சட்டம் மூலம் பிரிவினை கோரும் கட்சிகளைத் தேர்தலில் பங்கேற்கத் தடை செய்ய முடியும். இந்த இக்கட்டான சூழலில் அண்ணா சாதுர்யமாக பிரிவினையைக் கைவிட்டு மாநில சுயாட்சியைக் கையில் எடுத்தார். 1965 இல் ஏற்பட்ட மொழிப்போரால் திமுக ஆட்சிக் கட்டிலை எட்டிப் பிடிப்பதை யாராலும் தடுக்க முடியவில்லை. முதல் மொழிப்போருக்கு ஊரூராய் சென்று முழங்கி போராட்டக் களத்தை உருவாக்க அரும்பாடு பட்ட அண்ணா, 1965 இல் ஏற்பட்ட மொழிப் போரைச் சாதுர்யமாகக் கையாண்டார். கழகத் தொண்டர்கள், மாணவர்கள், பொதுமக்கள், தமிழரின் தனித்துவத்திற்காக உயிரைத்தரத் தயாராக இருந்தவர்கள், ஆன்மீகவாதிகள், நாத்திகர்கள் என்று அண்ணா அனைவர் உள்ளங்களையும் வென்றார்.

1967 இல் நடைபெற்ற தேர்தலில் அண்ணா அரசியல் உலகில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தினார். தேர்தலில் தனித் தனியாகப் போட்டியிடுவதே அந்தக் காலத்தில் வழக்கம். அவற்றை ஒருங்கிணைக்க கூட்டணி என்ற புதிய ஆயுதத்தை உருவாக்கினார் அண்ணா.

ஆட்சிப் பொறுப்பேற்ற அண்ணா, அன்றைய பெருஞ்சிக்கலாக இருந்த பஞ்சத்தைப் போக்க ரூபாய்க்கு ஒரு படி அரிசி வழங்கினார். எளிமைக்கு எடுத்துக்காட்டாக, அமைச்சரின் ஊதியங்கள் பாதியாகக் குறைக்கப்பட்டது. சென்னை மாகாணம் ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்து தமிழ்மக்களின் உணர்வு பூர்வமான கோரிக்கையை நிறைவேற்றினார். பகுத்தறிவுப் பாதையில் சுயமரியாதைத் திருமணச் சட்டம் கொண்டு வரப்பட்டது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இருமொழிக் கொள்கை உருவாக்கப்பட்டது

 நூற்றாண்டுகளாகத் தமிழர்கள் ஆளப்பட்டுக் கொண்டு இருந்தார்களே ஒழிய, தமிழருக்காக ஆண்டார்களா? அதைச் செய்த ஆட்சி அண்ணாவின் ஆட்சியாக இருந்த நேரத்தில் அண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் என்ற செய்தி தேளாய்க் கொட்டியது.

அண்ணா மரணப்படுக்கையில் இருந்தபோது நிலவுடமையாளர்கள், கூலிவுயர்வு கேட்ட பட்டியலினத்தவர்களைக் கீழ்வெண்மணியில் படுகொலை செய்தது பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியது. நிலைமையை நேரில் ஆராய அமைச்சர்களை அண்ணா அனுப்பினார். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். போதிய சாட்சியங்கள் இருந்தும் நீதிமன்றங்கள், மேல்நீதிமன்ற முறையீட்டில் விடுதலையடைந்தனர். ஆனால் இந்த நிகழ்வின் ஊற்றுக்கண் என்பது நிலவுடைமை சமூக அதிகாரம். இதனை சரிசெய்வதற்கு நிலங்களைப் பகிர்ந்தளிப்பது என்றும், 30 ஸ்டாண்டாக நில உச்ச வரம்பாக இருந்ததை 15 ஸ்டாண்டாகக் குறைக்க எண்ணினார் அண்ணா. ஆனால் அவர் வாழ்நாள் அதற்கு இடம் கொடுக்கவில்லை. என்றாலும் அவருக்கு பின் பொறுப்பிற்கு வந்த கலைஞர் அதனை நிறைவேற்றினார் அண்ணா வழியில்.

1969 பிப்ரவரி மாதம் 3 ஆம் நாள் அதிகாலை அண்ணா இறுதியாக விடைபெற்றார்.

அண்ணா என்றும் பெரியாரின் பிள்ளைதான்!

- மதிவாணன்

Pin It