விடியற்காலை நேரம், பெருஞ் சத்தம் கேட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். சற்று நேரத்திற் கெல்லாம் சேற்றுமண் தங்கள் வீடுகளை சூழ்வதை உணர்ந்து உயிரைக் காத்துக்கொள்ள வெளியேற முயன்றனர். ஆனால் வெளியேற முடியாமல் மண்சரிவில் மாட்டி அம்மண்ணில் மூழ்கிப் போனார்கள். கேட்கும்போதே நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் இந்த நிகழ்வு கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்டுள்ளது.

இந்த மண்சரிவில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும், 191 பேர்கள் பற்றிய தகவல் இதுவரை இல்லை என்றும் கூறப்படுகின்றது. இறந்தவர்களில் 10 பேர் தமிழர்கள். முழு இழப்புகள் குறித்து, இனிவரும் நாள்களில் கணக்கிடும் போது, இது 2018 இல் நடைபெற்றதை விடவும் மோசமான நிகழ்வாகக் கணக்கிடப்படக் கூடும். கேரள முதலமைச்சர் ஊடகங்களுக்கு விளக்கம் கொடுக்கும் போது, முழுப் பகுதியும் மண்சரிவில் மூழ்கி விட்டதைத் தெரிவித்துள்ளார்.

wayanad landslideசில நாள்களாகப் பெய்து வந்த கனமழையின் விளைவாக வயநாடு மாவட்டத்தைச் சார்ந்த முண்டக்கை, சூரல் மலை, அட்டமலை பகுதிகளில் இம்மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் 1 மணியளவில் ஏற்படத் தொடங்கிய மண்சரிவு அடுத்தடுத்து 3 முறை நிகழ்ந்துள்ளது. மக்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில், விடியற்காலை 4 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவு மிகவும் மோசமான நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், உடனடியாகக் கேரள முதல்வரைத் தொடர்பு கொண்டு இந்தத் துயர நிகழ்வு குறித்துக் கேட்டறிந்து அத்துடன் உடனடியாக 5 கோடி ரூபாய் பேரிடருக்கு உதவித்தொகையாக கொடுத்துள்ளார். மேலும் 20 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழு, 20 தீயணைப்புத் துறையினர், 10 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோரை 2 ஐ.ஏ.ஸ் பொறுப்பாளர்கள் கே.கே. சமீரன், ஜான் டாம் வர்கீஸ் இராமநாதபுர மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனுப்பியுள்ளார்.

ஒரு மாநில அரசு அண்டை மாநிலத்தில் ஏற்பட்ட பேரிடரில், அந்த மாநில அரசுடன் தோளோடு தோள் நிற்கும் இத்தகைய தோழமை நிகழ்வு இதற்குமுன் நடந்ததாக இல்லை என்றே சொல்லலாம். தனக்குத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு இல்லாத மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு, பேரிடர் தொகை ஆகியவற்றை வழங்காமல் வஞ்சிக்கிறது ஒன்றிய அரசு. ஆனால் எந்தத் தாமதமும் இல்லாமல், உடனடியாக, அதுவும் தாமே முன்வந்து நிதியளித்த தமிழ்நாடு முதலமைச்சரைப் பார்த்துப் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் ஒன்றிய அரசு.

கேரள மாநில முதலமைச்சர் கூறுகையில் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து இதுவரை 1,600 பேர் மீட்கப் பட்டுள்ளனர். 8000 பேர் வேறு இடங்களுக்கு மாற்றப் பட்டுள்ளனர். 82 முகாம்கள் மக்கள் தங்குவதற்கு ஏதுவாக அமைப்பட்டுள்ளன. 1,167 மீட்புப் பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். 99 மருத்துவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் 166 உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்படுள்ளது. 96 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று நிலைமையை விளக்கிக் கூறியிருக்கிறார்.

நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவரும் வயநாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி மக்களவையில் தன் ஆழ்ந்த இரங்கலையும், வலியையும் பதிவு செய்ததோடு, வயநாடுக்கு நேரில் சென்றுள்ளார் ராகுல்காந்தி, சகோதரி பிரியங்காவுடன். மேலும் ஒன்றிய அரசு உடனடியாக அனைத்து உதவிகளையும் வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வயநாட்டின் வலி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நம் முதல்வர் கரம் நீட்டி உள்ளார். நாம் துணையாக நிற்போம், ஆறுதல் கூறி.

- மதிவாணன்