திராவிடம் என்ற சொல் எதைக் குறிக்கிறது எனப் பலபேருக்குப் பல புரிதல்கள்... அறிவியல், வரலாறு, தர்க்க ரீதியான புரிதல் என்ன?

திராவிடம் என்பதை இடப்பெயராகக் கொண்டால் அது முக்கால் பகுதி இந்தியப் பெரும்பகுதியை குறிக்கும். சிந்து சமவெளி மக்களும் திராவிடர்களே என்பது தொல்லியல் சொல்லும் அறிவியல் உண்மை. கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிட் ஒரு பிராமண சமுகத்தைச் சேர்ந்தவர். அவர் பெயரில் இருக்கிற ‘ட்ராவிட்’ இடத்தை குறிக்கிறது. அதாவது திராவிடப் பகுதியைச் சேர்ந்தவர் எனப் பொருள். அவர் சமூகம் இதை திராவிடப் பகுதியைச் சேர்ந்த பிராமணன் எனப் பொருள் சொல்லும். நம்மூரில் சைவத் திருத்தொண்டர் ஞானசம்பந்தர் அவர்கள் ‘திராவிட சிசு’ என அழைக்கப்படுவதுண்டு. அவரோ பார்ப்பனர். ஆனால் எப்படித் திராவிடம் வந்து பெயருடன் சேர்ந்தது எனில் இங்கே ‘திராவிடப் பகுதியை சேர்ந்த சிசு’ என இது குறிக்கப்படுகிறது. ஆக இடத்தால் குறிக்கப்படுகிற திராவிடம் வேறு.

திராவிடம் என்பதைக் கருத்தியலாகக் கொண்டால் அதில் மேற்படி பார்ப்பனீயத்துக்கோ, பாப்பனர்களுக்கோ இடமேயில்லை. அவர்களைத் தவிர்த்துப் பார்ப்பனரல்லாதோர் இயக்கம் என்பதுதான் மூலம். கருத்தியல் நோக்கில் அது சமத்துவம், சமூகநீதிக் கொள்கை பின்பற்றுகிற, அக்கொள்கையை உள்ளடக்கிய, உள்வாங்கிய, மக்கள் சிந்தனையைக் குறிக்கிற சொல். இந்த கருத்தியல்படி ஏற்றத்தாழ்வற்ற சமூகக் கட்டமைப்புக் காண்பதே நோக்கம்.

பேரியக்கமான ‘திராவிடர்’ கழகத்தில் பார்ப்பனர் ஒருவர் உறுப்பினராக முடியாது. ஏனெனில் பார்ப்பனர் ஒருவர் கருத்தியல் படி திராவிடர் இல்லை. பெரும் அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தில் பார்ப்பனர் உறுப்பினராகலாம். ஏனெனில் இது ’திராவிட’ என ‘ர்’ விகுதி அற்றுப்போய் இடத்தை உள்ளடக்கியது. ஜனநாயகத்தில் வெற்றி பெற வாக்குகளை உள்ளடக்கிய தேர்தல் அரசியலில் பார்ப்பனர்களையும் உள்ளடக்கியது திராவிட முன்னேற்றக் கழகம். ஆனாலும் கொள்கை அளவில் அது பார்ப்பனரைத் தலைமைப் பதவியிலோ, முக்கிய முடிவெடுக்கும் அதிகார மையத்திலோ அமர்த்துவதில்லை. ‘இவ்விரு இயக்கங்களும் இரட்டைக் குழல் துப்பாக்கி போன்றது’ என நாம் சொல்லக் கேட்டிருக்கிறோம். இரட்டைக் குழல் துப்பாக்கியில் குழல்கள் நீள அகலமாய் இருப்பினும் குண்டுகள் ஒன்றுதான்! எதிர் இலக்கும் ஒன்றுதான்.

திராவிடம் என்பதை மொழியெனச் சொன்னால் அதில் தாய்மொழி (மூலம் எனக்கொள்க) தமிழ், அதிலிருந்து பிரிந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு உட்பட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட ஒரு பெரிய மொழிக்குடும்பமும், அதில் கிளை பிரிந்த மொழிகள் பலவும் சேர்த்துக் குறிப்பிடப்படுவது ஆகும். இவை அனைத்தையும் குறிக்கத் ‘திராவிட மொழிகள்’ என்ற முழுப் பதத்தை உபயோகிப்பதே சரி..ஆக மொழியைக் குறிக்கிற திராவிடம் வேறு.

மேற்குறிப்பிட்ட அனைத்தையும் குழப்பிப் புரிந்து கொள்பவர்கள், அல்லது வேண்டுமென்றே குழப்பிப் பரப்புபவர்கள் வலதுசாரித் தமிழ்தேசியம் பேசுபவர்கள். இன்று கொச்சைப்படுத்தப்படுவது, விமர்சிக்கப்படுவது திராவிடக் கருத்தியல் தான். அதில் மொழி, இடம் ஆகிய அனைத்தையும் குழப்பி ‘வந்தேறி’, ‘முந்தேறி’ என்றெல்லாம் வீரியம் பேசுவது அவர்கள் பாணி. உணர்ச்சிப் பெருக்கில் கேட்டுக்கொண்டு இருப்பது நம்மவர்கள். பலிகடாவும் நம்மவர்கள்தான்.

சாதிவெறி, மொழி வெறி உள்ளவன் தான் அதிகம் திராவிடத்தை விமர்சிக்கிறான். திராவிடம் எதிர்ப்பவன் சாதியை வெறுக்கிறானா என உற்று நோக்குங்கள்.. செய்ய மாட்டான்.. கூசாமல் ‘வந்தேறி’ என்ற பதத்தை உபயோகிப்பான். மும்பையில் தமிழர் வாழும் பகுதியான அந்தேரிக்குப் பிழைக்கப் போன நம்மவரிடத்தில் போய் இந்த வார்த்தையை உபயோகிப்பனா இவன்.? மாட்டான். எங்கு உணர்ச்சி கிளர்ந்தெழுமோ? அது அவனுக்குப் பயன்படுகிற இடத்தில் பேசுவதுதான் அவன் பணி.

அந்தந்த மாநிலத்தில் வாழும் ஒரு தெலுங்கனோ, மலையாளியோ, கன்னடனோ தன் மொழிக்குத் தாயெனப்படும் இன்னொரு மொழி உள்ளது எனச் சொல்ல எப்படித் தலைப்படுவான். அதையும் மீறித் தமிழ்நாட்டில் வாழ்கிற ஒரு தெலுங்குக் குடும்பத்திலோ, மலையாள வீட்டிலோ தன்னைத் தமிழனென மார்தட்டிப் பற்றுதலோடு யாரேனும் சொன்னால் அது என்ன பெரும் குற்றமா? அவன் உணர்வு கேவலமானதா?

இன்றைக்குத் தமிழ்நாட்டில் வாழ்கிற நிறையத் தெலுங்கு வம்சாவழியினருக்குத் தெலுங்கே தெரியாது என்பதே உண்மை. சொந்த மொழியைக் கற்றுக்கொள்கிற ஆர்வத்திலும் அவர்கள் இல்லை. தமிழில் நன்கு எழுதப் படிக்கத் தெரிந்த விற்பன்னர்கள் கூட, தெலுங்கில் எழுதத் தெரியாத தமிழ்நாடு வாழ் தெலுங்கர்களாக அவர்கள் இருப்பார்கள், இருக்கிறார்கள். சான்றிதழ்களில் தமிழைத் தாய்மொழியாகப் பதிவு செய்து கொள்கிற தமிழ்ப் பற்றாளர்கள் கூட இங்கு வாழ்கிற தெலுங்கர்களில் உண்டு.

மொழிவெறி கொள்ளாது, தாய்மொழிப் பற்றுடன் அன்புசால் அனைவரையும் அரவணைப்பது நம் பண்பு. ’யாவரும் கேளிர்’ எனப் பிரகடனம் செய்தவன் தமிழன். உலகமனைத்தும் தன்னைக் கொண்டு சேர்த்தவன் தமிழன். யாவருக்கும் நலம் பயப்பதும், யாவர் நலம் செயினும் நன்றி பகிர்வதும் நம் பண்பு. நற்பண்பும் கூட.

மைய நோக்கில் ‘திராவிடம்’ என்பது ஆதிக்கத்தை எதிர்க்கிற ஒரு குறியீட்டுச் சொல்... ஆதிக்கச் சாதியினருக்கு எதிரான ஒரு பிரகடனம்.. ஆதிக்கம் செய்யும் பார்ப்பனீயப் பூணூலுக்கு எதிராக அனைவரையும் கட்டமைக்கிற ஒரு அன்புக்கயிறு. அதை இறுகப் பற்றுவோம். இன்ப திராவிடம் சமைப்போம். 

அறுந்த பூணூலும் உடைந்த விலங்கும்

கடந்த ஏப்ரல் மாதம், சிலரின் பூணூலை அறுத்துவிட்டார்கள் என்று கூறித் திராவிடர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த ஆறு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்டனர். அதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம், அச்சட்டத்தின் கீழ்க் கைது செய்தது செல்லாது என்று அவர்களை விடுவித்துள்ளது. நியாயமாக வழங்கப்பட்டுள்ள அத்தீர்ப்பு வரவேற்கத் தக்கது. அதே நேரம், தந்தை பெரியாரையும், தங்கள் தாலியைத் தாங்களே கழற்றிய பெண்களையும் குறித்துக் கீழ்த்தரமாகப் பேசிய ஹெச். ராஜா மீது, தமிழக அரசு, இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

வரும் சட்டமன்றத் தேர்தலில், ஹெச்.ராஜா போட்டியிட்டால், அந்தத் தொகுதியில் கருஞ்சட்டைகள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி, அவரது கட்டுத் தொகையையும் இழக்கச் செய்திட வேண்டும்!

Pin It