சில நாள்களுக்கு முன்பு, காட்டுமன்னார்குடிக்கு அருகில், ஆண்டிப்பாளையம் என்னும் ஊரில், வீராசாமி என்பவர் தன் சொந்தப் பேத்தியைக் கொலை செய்திருக்கிறார். அவருடைய பேத்தி ரமணி, கல்லூரியில் தன் உடன் படிக்கும், வேறு சாதியைச் சேர்ந்த ஓர் இளைஞனைக் காதலித்ததற்காக, பெற்றோர்கள் தடுத்தும் கேளாமல், கழுத்தை அறுத்துக் கதறக் கதறக் கொலை செய்திருக்கிறார். காவல் நிலையத்தில் சரண் அடைந்த அவர், 'நான் இந்த ஊரின் நாட்டாண்மை, என் பேத்தியே வேறு சாதியில் ஒருவனைக் காதலிப்பதை என்னால் எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும், இந்தக் கொலை எல்லோருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்' என்று ஆணவத்தோடு கூறியிருக்கிறார்.

சாதி என்பது வெறும் ரத்த உறவுதான் என்கின்றனர். உறவுகளையே கொல்லும் சாதி, யாரைக் காப்பாற்றப் போகிறது? சாதி வெறி பாறையை விடக் கடியது, ராஜபக்ஷேவை விடக் கொடியது!

-------------

sarathkumar vishal

நடிகர் சங்கத் தேர்தலில், நீங்கள் எந்தப் பக்கம்?

- பூவிழியன், சென்னை-10

சுபவீ: அது அவர்களின் தேர்தல். நமக்கு நேரடித் தொடர்பு ஏதுமில்லை. எனினும் நம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதில் பிழையில்லை. நடப்புகளைக் கொண்டு பார்க்கும்போது, சரத்குமார், ராதாரவி பக்கம் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. நாசர், விஷால் அணியினர் வெல்வதே நடிகர் சங்கத்திற்கு எதிர்காலத்தில் நன்மை பயக்கும் என்று தோன்றுகிறது. 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' அங்கு இன்றையத் தேவையாகக் காணப்படுகிறது.

அது 'விஷால் ரெட்டி அணி' என்கிறார் ராதிகா, அருகில் ஊர்வசி சேச்சியை வைத்துக்கொண்டு!

பாண்டவர் அணி

ஐந்து பேர் ஒன்றாகச் சேர்ந்தால், அவர்களைப் 'பாண்டவர் அணி' என்று அழைக்கும் பழக்கம் நம்மிடையே உள்ளது. என்ன வேடிக்கை என்றால், மகா பாரதத்திலேயே அந்தப் பெயர் எவருக்கும் பொருந்தவில்லை என்பதுதான். 'பஞ்ச' என்றால் (பாஞ்ச்) ஐந்து என்று பொருள். பாண்டவர் என்றால், பாண்டுவிற்குப் பிறந்தவர்கள் என்று பொருள். ஆனால் தருமரோடு பிறந்தவர்கள் ஐவரல்லர், கர்ணனையும் சேர்த்து அறுவர். எனவே பஞ்ச என்பது பொருந்தாது. அந்த அறுவரில் ஒருவர் கூடப் பாண்டுவிற்குப் பிறக்கவில்லை. பாண்டுவிற்கு இரண்டு மனைவியர் இருந்தபோதும், மனைவியரைத் தீண்டக்கூடாது என்று அவருக்குச் சாபம் இருந்ததால், சூரியன், எமன், வாயு, இந்திரன், இரட்டைத் தேவர்கள் ஆகியோர் மூலமே அறுவரும் பிறந்தனர் என்று மகா பாரதத்தின் ஆதி பருவம் சொல்கிறது. ஆகவே அவர்கள் ஐவரும் இல்லை, பாண்டவர்களும் இல்லை. பஞ்ச பாண்டவர் என்னும் பெயர் அவர்களுக்கே பொருந்தாது. அவர்களுக்கே பொருந்தாத பெயர் மற்றவர்களுக்கு எப்படிப் பொருந்தும்?

Pin It