குஜராத்தைச் சேர்ந்த மோடி - அமித்ஷா ஆகியோரின் ஜனநாயகப் படுகொலைச் சித்துவிளையாட்டுகளில் ஒன்றாக ஆர்.கே.நகர் இடைத் தேர்தலைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

குஜராத் தேர்தல் தேதியை முன்கூட்டியே அறிவிக்க வேண்டிய தேர்தல் ஆனையம், அம்மாநிலத்தில் சலுகைகள் எல்லாம் அறிவித்த பின்னர் டிசம்பரில் தேர்தல் என்று அறிவிக்கிறது.

இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை.

குஜராத் தேர்தல் தேதி அறிவித்த போதே, சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை அறிவித்திருக்க வேண்டும். அறிவிக்கவில்லை தேர்தல் ஆணையம்.

இன்றைய சூழலில் மக்களின் மனமாற்றத்தால் தேர்தலை எதிர்கொள்ளத் தயங்கும் அ.தி.மு.க., இரட்டை இலைச் சின்னத்தின் மூலமாவது தற்காத்துக்கொள்ள நினைக்கிறது.

தன் கைப்பாவைக்கு இலையை ஒதுக்கித் தேர்தலை நடத்த மத்திய அரசு நினைக்கிறது. அதனால் தேர்தலைத் தள்ளிப்போடுகிறது தேர்தல் ஆணையம் என்பது மக்களின் எண்ணம்.

இது ஒரு புறம் இருக்க, ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களில் 6ல் ஒரு பகுதியினர் போலி வாக்காளர்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது தி.மு.க.

ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 192, 193, 195, 198, 201 பகுதிகளின் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் தவறாக அச்சிடப்பட்டுள்ளன என்றும் -

அதில் 1,700 வாக்காளர்கள் பெயர்கள், இணையத்தில் பதிவாகியுள்ள பெயர்களுக்கு முரணாக உள்ளன என்றும் -

இல்லாத ஆள்களின் பெயர்கள், இடம் மாறியுள்ளவர்கள் பெயர்கள், இறந்தவர்களின் பெயர்கள் என்று 43,861 பெயர்கள் போலி வாக்காளர்களாகப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்றும்  தேர்தல் ஆணையத்தில் சுட்டிக் காட்டியது தி.மு.க.

ஆணையம் நடவடிக்கை எடுக்காததால் நீதி மன்றத்தை தி.மு.க. நாடியுள்ளது.

போலி வாக்காளர் பட்டியலுடன் தேர்தல் நடத்தக் கூடாது. தேர்தல் தேதி அறிவித்தால் அதற்குப் பின் இப்போலி வாக்காளர் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்குவது சாத்தியமற்றுப் போய்விடும் என்பது தி.மு.க.வின் நியாயமான வாதம்.

இன்னொரு புறம்...

ஏற்கனவே நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்களர்களுக்கு அப்பட்டமாகப் பணம் கொடுத்துத் தொப்பி போட்டவர் டி.டி.வி.தினகரன்.

அதுமட்டுமன்று!

இரட்டை இலைச் சின்னம் பெறுவதற்காக இலஞ்சம் கொடுத்ததாக டி.டி.வி.தினகரன் மீது எழுந்த குற்றச்சாட்டும் அப்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இ.பி.எஸ். அணியினர் கையில் அதிகாரம் இருந்தது. பணப்பட்டுவாடாவில் அவர்கள் பங்கும் வெளிச்சம் ஆனது.

அதனால் நிறுத்தப்பட்ட இடைத்தேர்தலை இப்பொழுது எதிர்பாத்துக் கொண்டிருக்கின்றனர் அந்த தொகுதி மக்கள்.

பணம், அதிகாரம், மத்திய அரசின் பின்பலம், தேர்தல் ஆணையத்தின் தள்ளாட்டம் இப்படித்தான் தொகுதி மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது இடைத்தேர்தலை.

நேர்மை என்றும் வீழாது. அநியாயம் என்றும் வெல்லாது.

சூரியனின் வெப்பத்தை; இனி, இலையோடு இருக்கும் தாமரைத் தாங்காது என்பதை உறுதி செய்ய ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.