மழை - இயற்கையின் கொடை! ஆனால் அதே நேரத்தில், அளவு கடந்து பெய்யும் மழை, இயற்கைப் பேரழிவாக ஆகிவிடுகிறது!

நான்கு ஐந்து நாள்களுக்கு முன்பிருந்தே, வானிலை மையம் திரும்பத் திரும்ப எச்சரித்துக் கொண்டிருக்கிறது! இந்த வார இறுதியில் டித்வா புயல் காரணமாக, மிகக் கனமழை பெய்திட இருக்கிறதாம்! தமிழ்நாடு அரசின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் வியாழன் மாலையே அரசு அதிகாரிகள் அனைவரையும் கூட்டி, தேவையான நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லியிருக்கிறார்.flood 693மாவட்டம் தொடங்கி, ஒன்றியம், ஊராட்சி வரை உள்ள திமுகவினருக்கும் மக்களுக்கு உதவ அணியமாக இருங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்!

 ஏற்கனவே இலங்கை - குறிப்பாகக் கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அங்கே மனிதர்கள் இறந்து கொண்டிருப்பதாகவும், விலங்குகள், பறவைகள் பெரும் துயருக்கு உள்ளாகி இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. எந்த நாடு, எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் எல்லோரும் மனிதர்கள், உயிரினங்கள் என்னும் அடிப்படையில், அவர்களைக் கருத்தில் கொண்டும் கவலை ஏற்படுகிறது.

இலங்கை ஒரு சின்னஞ் சிறிய நாடு. போராலும், இன அழிப்பினாலும் ஏற்கனவே அந்த நாடு பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இப்போது இயற்கையின் சீற்றமும் அவர்களை அல்லலுக்கு உள்ளாக்கி இருக்கிறது!

இன்னும் இரண்டு நாள்களில், தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் கரையோரப் பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாக இருக்கின்றனவோ என்கிற அச்சமும் ஏற்படுகிறது.

2000 ஆண்டுகளுக்கு முன்பே, நம் வள்ளுவன் மிகச்சரியாகச் சொல்லி இருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டி உள்ளது!

"கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்பாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை"

என்பது எவ்வளவு பெரிய உண்மை!

"மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்" என்பதும் நம் சிலம்பின் வரி. மழையைப் போற்றுவோம், வெள்ளம் வரும்போது அரசோடு சேர்ந்து நின்று, நாமும் நம்மால் இயன்றதைச் செய்வோம்!

ஆம், எப்போதும் இயன்றதைச் செய்வோம், இடைவிடாது செய்வோம்!

- சுப. வீரபாண்டியன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.