ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழை நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும். இந்த ஆண்டு மழையின் அளவு கூடுதலாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்தது. பெருமழை, வெள்ளப்பெருக்கால் ஏற்படும் அழிவுகளையும், சேதங்களையும் தவிர்க்க தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவுகளைக் கருத்தில் கொண்டு அவை தொடரா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

mk stalin during chennai floodஅதன் அடிப்படையில் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள் கூட்டங்கள் நடத்தி நகர்ப்புற வளர்ச்சி, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறைகளின் சார்பில் 20-9-2021 முதல் 25-9-2021 வரை மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாமாக அறிவித்து அனைத்து, மழைநீர் வடிகால்களையும் தூர்வாரித் தூய்மைப்படுத்தச் சிறப்பு இயக்கம் நடத்த ஆவன செய்தார்.

வடகிழக்குப் பருவமழை தொடங்க 10 நாள்களுக்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டது. நவம்பர் எட்டாம் தேதி பெய்த மழையில் தியாகராயநகர், எழும்பூர், பெரம்பூர் போன்ற பகுதிகளில் மழை வெள்ளம் சூழத் தொடங்கியதும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்கள் அந்தந்தப் பகுதிகளுக்குச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பான இருப்பிடங்கள், பசிப்பிணி தீர்க்க உணவு ஏற்பாடுகள், தேங்கிய மழை நீரை வெளியேற்ற பம்பு செட்டுகள் என அனைத்து ஏற்பாடுகளையும் முன்களப்பணியாளராக நின்று செயல்பட்டார். அன்றைய தினம் சற்றேறக் குறைய ஒன்பது மணி நேரம் மக்களோடு மக்களாக மழை வெள்ளத்தில் நின்று பணியாற்றினார்.

அத்தோடு நில்லாமல் மறுநாள் நவம்பர் 9ஆம் நாளில் சைதாப்பேட்டை, வேளச்சேரி, கொளத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். செம்பரம்பாக்கம், புழல், பூண்டி நீர்த்தேக்கங்களில் நீர்வரத்துக்கு ஏற்ப நீரை வெளியேற்ற உரிய ஆணைகளைப் பிறப்பிக்கிறார். ஏரிகளில் இருந்து நீரை வெளியேற்றும் போது நீர்வழிப் பாதையில் கரையோரம் வாழும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார்.

மறுநாள் 10-11-2021 அன்று எழிலகத்தில் அமைந்துள்ள பேரிடர் மேலாண்மை மையத்திற்குச் சென்று, அங்கு நடைபெறும் பணிகளைப் பார்வையிட்டு அலுவலர்களையும் பணியாளர்களையும் ஊக்கப்படுத்துகிறார். அன்றும் கொளத்தூர் உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்குச் சென்று உரிய நிவாரணப் பணிகளை விரைவு படுத்துகிறார். சென்னை முழுவதும் ஆங்காங்கே பெருமளவில் உணவு தயாரிக்கப்பட்டுப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க உத்தரவிட்டதோடு, அம்மா உணவகங்களில் அனைத்து மக்களுக்கும் இலவச உணவு வழங்க ஆணையிட்டார்.

சென்னை முழுவதும் எங்கெல்லாம் மரங்கள் விழுந்து சாலைப் பயணத்திற்குத் தடையை ஏற்படுத்துகின்றனவோ அங்கெல்லாம் அரை மணி நேரத்தில் அவை வெட்டி அகற்றப்படுகின்றன.

பொதுப்பணித்துறை, மாநகராட்சி, சுகாதாரத்துறை, மின் வாரியப் பணியாளர்கள், காவல்துறையினர் என சம்பந்தப்பட்ட அனைத்துத் துறையினரையும் உடனிருந்து ஊக்குவித்துப் பணியாற்றச் செய்வதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைத்து அரும்பணி ஆற்றி வருகின்றார்.

முதலமைச்சரின் இடைவிடாத மக்கள் பணியைக் கண்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கான மயிலாட கண்டிருந்த வான்கோழியாய் தன்னுடைய இருப்பினை காட்டிக்கொள்ள தமிழக அரசின் பணிகளை முதல்வரின் பணிகளைக் குறை கூறினார். அதைவிட வேடிக்கை, கடந்த காலத்தில் அதிமுக அரசு செயல்பட்டதுபோல் செயல்பட வேண்டும் என அறிவுரை வேறு கூறுகிறார்.

2015 ஆம் ஆண்டுப் பெருமழையின் போது செம்பரம்பாக்கம் ஏரி நீர் நிரம்பி அதனைத் திறந்து விடுவதற்கு அன்றைய முதல்வரின் உரிய ஆணை கிடைக்காமல் அதிகாரிகள் ஐந்து நாள் காத்திருந்து, ஒருவழியாக ஆறாவது நாள் ஆணை கிடைத்து நீரைத் திறந்து விட்ட போது ஏற்பட்ட பேரழிவுகளையும், உயிரிழப்புகளையும், பெரும் சேதத்தையும் இன்னமும் மக்கள் மறக்கவில்லை.

அப்பெரும் அழிவுகளுக்கும், சேதத்திற்கும், உயிரிழப்புகளுக்கும் பிறகு கொற்றலை ஆற்றின் வடிகால் திட்டத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூபாய் 2800 கோடி வழங்கியது. இந்தப் பெரும் தொகையை முறையாகவும் சரியாகவும் பயன்படுத்தியிருந்தால் வடசென்னை இன்று வெள்ளத்தில் தத்தளித்து இருக்காது.

அதுபோலவே கோவளம் நிலப்பகுதியில் வடிகால் வசதி செய்ய ஜெர்மன் வளர்ச்சி வங்கி ரூபாய் 3500 கோடி ஒதுக்கியது. அத்தொகையையும் முறையாகச் சரியாகத் திட்டத்திற்குச் செலவிட்டு இருந்தால் தென்சென்னை வெள்ள பாதிப்புக்கு ஆளாகி இருக்காது. இதுபோக உலக வங்கி ரூபாய் 100 கோடியை மழைநீர் வடிகால் திட்டத்திற்குக் கொடுத்தது. இந்தத் தொகைகள் எல்லாம் அமைச்சர்களுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் அவர்களின் கல்லாப் பெட்டிகளை நிரப்பப் பயன்பட்டதே தவிர மக்கள் நலத் திட்டங்களுக்குச் செலவிடப்படவில்லை. அப்படி முறையாக செலவிட்டு இருந்தால் இன்றைக்கு சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்காது.

ஸ்மார்ட் சிட்டி என்கின்ற பெயரில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி போக்குவரத்துக்குச் சீராக வழிவிட்டு, அகன்று இருந்த தியாகராய நகர் பாண்டியனார் பேரங்காடித் தெருக்களைக் குறுக்கி, நடைபாதைகளை அகலப்படுத்தி இன்றைக்குப் போக்குவரத்துக்கு பெரும் சிரமத்தை உருவாக்கியுள்ளார். இவை போன்ற திட்டங்களால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் அவர்களின் பணப்பெட்டியை நிரப்பவே பயன்பட்டன. திறனற்ற ஆட்சியாளர்களின் தேவையற்றத் திட்டங்களால் மக்கள் துயர் தெரிகின்றதே தவிர, அவர்களுக்கு ஒரு துளியும் பயன்படுவதாக இல்லை. சொன்னாலும் புரியாது மண்ணாளும் வித்தை.

கொட்டிய மழையால், வெள்ளம் சூழ்ந்த சென்னையில் முதலமைச்சர் ஆற்றிய மக்கள் நிவாரணப் பணிகளால், ஒரு முதலமைச்சர் எப்படி இருக்க வேண்டும், எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார், நம் முதல்வர்.

- பொள்ளாச்சி மா.உமாபதி

Pin It