கடந்த 11 ஆண்டுகளாக ஒன்றியத்தை ஆட்சி செய்துவரும் பாஜகவின் பிரதமர் மோடி தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்தும், தமிழர்களைக் கேவலப்படுத்தியும் வருகிறார். வடநாட்டை வாழவைத்து, தமிழ்நாட்டைத் தேயவைக்கும் அவரின் போக்கு குறித்து தமிழ்நாட்டில் தலைவர்களும், மக்களும் கண்டனங்களை வீசி வருகிறார்கள்.go back modi 720ஆனால் தமிழ்நாட்டைத் 'தலைகுனிய விடமாட்டேன்' என்று கல்வி, மருத்துவம், தொழில், வேலைவாய்ப்பு, மக்களின் வாழ்க்கைத்தரம் உள்ளிட்டவைகளைத் தமிழ்நாட்டில் உயர்த்திக் கொண்டு வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள். இன்று இந்திய ஒன்றியத்தில் மிக முன்னேறிய மாநிலமாக இருக்கிறது தமிழ்நாடு.

இருந்தாலும் வழக்கம் போல இப்போதும் வஞ்சித்திருக்கிறது ஒன்றியம், கோவை-மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரிப்பதன் மூலம்.

மதுரையில், 11,360 கோடி ரூபாயிலும், கோவையில், 10,740 கோடி ரூபாயிலும், மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை, மாநில அரசு மூலமாக, மத்திய அரசிடம், 2024 பிப்ரவரியில் கொடுக்கப்பட்டது. பின்னர், மத்திய அரசு கேட்ட கூடுதல் ஆவணங்களுடன் திருத்தப்பட்ட அறிக்கை, 10 மாதங்களுக்கு முன்னர் வழங்கப் பட்டுள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியும் தொடங்கப்பட்டது. ஆனால், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பி உள்ளது. அதற்காக ஒரு புஸ்வாணக் கதையை வேறு சொல்கிறது ஒன்றியம்.

மெட்ரோ இரயில் விடவேண்டுமானால் அங்கே 20 லட்சத்திற்குமேல் மக்கள் தொகை இருக்க வேண்டுமாம்.

அப்படியானால் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்ககெடுப்பின்படி, உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூர், ஆக்ரா, மஹாராஷ்டிராவில் நாக்பூர், பீகாரில் பாட்னா உள்ளிட்ட நகரங்களில், 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை இருந்த போதிலும், அங்கு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு எப்படி அனுமதி வழங்கியது? ஏன் தமிழ்நாட்டின் கோவை-மதுரை மெட்ரோ திட்டத்தை நிராகரித்தது ஒன்றியம்?

பிரதமர் என்பவர் ஒட்டு மொத்த இந்திய மாநிலங்களுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டுமே ஒழிய வடநாட்டுக்கு மட்டும் பிரதமராக இருக்க முடியாது, அப்படித்தான் அரசியல் சாசனம் சொல்கிறது.

வடநாடு இனிக்கிறது, தமிழ்நாடு கசக்கிறது என்பது பிரதமருக்கு அழகில்லை.

தமிழ்நாட்டிற்கு வரும்போது திருக்குறளைப் புகழ்ந்து தள்ளும் பிரதமர், அந்தத் திருக்குறளின் "நடுவு நிலைமை" யை படிக்கவாவது வேண்டும், அதற்குத் தமிழக பாஜக உதவ வேண்டும்.

 - எழில்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.