இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த மதமோதல்களில் சிறுபான்மையினரே அதிகமாக பாதிக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சரியாக விசாரிக்கப்படாததால், அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் அளிக்கப்படுவதில்லை என பல்வேறு அறிக்கைகள் கூறியதன் விளைவாக காங்கிரஸ் கட்சியானது தேர்தல் வாக்குறுதியாக மதக்கலவரத்தை ஒடுக்க கடுமையான சட்டத்தை கொண்டு வருவோம் என வாக்குறுதியளித்து. அதன் அடிப்படையில், மதம் சம்பந்தமாக இரு மதங்கள் மத்தியில் நிகழும் வன்முறைகளைத் தடுப்பதற்கும், வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்ட ஈட்டினை வழங்குவதற்கும் மத்திய அரசால் தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட உள்ள மசோதா, ''மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு (நீதி மற்றும் இழப்பீடுக்கான அணுகல்) மசோதா - 2011'' ஆகும். இது ஆங்கிலத்தில், Prevention of Communal and Targeted Violence (Access to Justice and Reparations) Bill - 2011 என அழைக்கப்படுகிறது.

      இம்மசோதா பெரும்பான்மை மக்களுக்கு விரோதமாகவும், மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடுவதாகவும், ஒன்றிணைந்த அரசியல் சமூகத்தை தகர்ப்பதாகவும், வெவ்வேறு மதத்தவரிடையே நிலவுகின்ற நட்புறவில் விரிசலை உருவாக்குவதாகவும் பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்த அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி, இம்மசோதா பெரும்பான்மையினருக்கு பாதகமாக இருக்கிறதாகச் சொல்லி இதனை கடுமையாக எதிர்க்கிறது. அதேநேரத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து எதுவும் சொல்லாமல் மொளனம் காக்கின்றனர். இம்மசோதாவை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் கட்சியானது அக்கறை இருப்பதுபோல் காட்டிக் கொள்வது சிறுபான்மையினரின் ஓட்டு வங்கியை கவருவதற்காகவே தவிர அவர்கள் இம்மசோதாவை சட்டமாக நிறைவேற்றமாட்டார்கள் என்கிற கருத்தும் நிலவுகிறது.

     ''இந்த மசோதாவுக்கு அ.தி.மு.க சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக்கூறிய ஜெயலலிதா, ''மிகத் தீவிரமாக மத உணர்வுகளை வெளிப்படுத்த அனுமதிக்க முடியாது என்றாலும், இந்தியா போன்ற பல்வேறு மத மற்றும் மொழி பேசும் மக்களைக் கொண்ட நாட்டில் மத மற்றும் திட்டமிட்ட வன்முறைக்கு இடமில்லை என்பதையும் மதச்சார்பற்றவர்கள் ஒப்புக் கொள்வார்கள்'' என்கிறார். மேலும், ''மாநில அரசின் உரிமைகளில் தலையிட்டு அதைக் கலைக்க வழிவகை செய்யும் இந்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டும்'' என்று மற்ற மாநில முதல்வர்களுக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கிறார். திட்டமிட்ட வன்முறைக்கு இடமில்லை என்றால் திட்டமிட்டு வன்முறை செய்பவர்களையும், செய்யத் தூண்டுபவர்களையும் தண்டிப்பது எப்படி என்கிற கேள்வி எழுகிறது. தீவிரமாக மத உணர்வுகளை வெளிப்படுத்த அனுமதிக்க முடியாது என்றால் விநாயகர் ஊர்வலங்களுக்கு பொதுச்சாலைகள் வழியாகவும், சிறுபான்மையினராகிய முஸ்லிம்களின் மசூதிகளுக்கும் கிறிஸ்தவர்களின் ஆலயங்களுக்கும் முன்பாக கோஷமிட்டுக் கொண்டுச் செல்வதற்கு அனுமதியளித்து எப்படி என்கிற கேள்வி எழுகிறது.

      ஜெயலலிதாவின் இக்கருத்தை ஆளும் கூட்டணியில் இருக்கும் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கடுமையாக எதிர்க்கிறார். அவர், ''அசாதாரண சூழல்களை எதிர்கொள்ள வழிசெய்யும் அசாதாரண சட்டம் இது. முதல்வர் தமது எதிர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என்கிறார். ''மனித உயிர்களை விட மாநில உரிமை பெரிதல்ல என்பதனை முதல்வர் உணர்ந்து கொள்ள வேண்டும்'' என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிறுவனர் ஜைனூல் ஆப்தின் கருத்து தெரிவித்ததுடம் மத்திய அரசுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.

      சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் இதுவரை 40,000 மக்கள் மதக்கலவரத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல கலவரங்கள் திட்டமிடப்பட்டு சிறுபான்மையினரை குறிவைத்து நடத்தப்பட்டிருக்கின்றன. 1982ஆம் வருடம் அசாம் மாநிலம் நெல்லி என்ற இடத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம், 1984இல் தில்லி மற்றும் பல வட மாநிலங்களில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம், 2002 இல் குஜராத் அரசே பின்னணியில் இருந்து இயக்கிய முஸ்லிம் படுகொலைகள், ஒரிஸ்ஸா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் மற்றும் அவ்வப்பொழுது ஆங்காங்கே நிகழும் மதக்கலவரங்கள் ஆகியவைகளுக்கு முடிவே இல்லை. இதுபோன்ற கலவரங்களை விசாரணை செய்தும், அறிக்கை கொடுத்தும் பலன் இல்லை; அதற்கான நடவடிக்கையும் இல்லை. மும்பை கலவரத்தில் ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் மிக நியாயமாக வெளியிட்ட விசாரணையில் கலவரத்தைத் தூண்டிவிட்ட சிவசேனா அரசியல் கட்சித் தலைவர் பால்தாக்கரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றது. இதுவரையும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதற்கு காரணம் அவர்கள் தங்களுக்கென ஒரு ஆதரவாளர் கூட்டத்தை வைத்துள்ளனர். அந்த ஆதரவாளர்கள் அவர்களுடைய தலைவர்கள் கைது செய்யப்படும்போது பொது இடங்களை சேதப்படுத்தவும், இன்னொரு கலவரத்தை உருவாக்கவும் தயங்கமாட்டார்கள்.

      மதத்தின் பெயரால் நடக்கும் கலவரங்களுக்கு முடிவு கட்டும் விதமாக கடுமையான தண்டனை வழங்கவும், கலவரத்தில் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வழிவகை செய்யவும் 2004இல் ஐக்கிய முன்னணி அரசு பதவி ஏற்றவுடன் ஒரு சட்ட முன்வடிவு உருவாக்கப்பட்டது. அது 2005இல் கிடப்பில் போடப்பட்டது. 2009இல் மனிதவுரிமை ஆர்வலர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு, அது பல்வேறு அமைப்புகளையும், அதிகாரிகளையும், மும்பை, குஜராத், கந்தமால் ஆகிய பகுதிகளில் மதக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களையும் கேட்டு, தங்களுக்குள் கலந்து ஆலோசித்து ஒரு சட்ட முன்வடிவை உருவாக்கினர். தற்பொழுது, இந்த சட்ட முன்வடிவானது மக்கள் விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டு, அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு வைக்க இருக்கிறது.

      ஒரு ஊரில் மதக்கலவரம் நடக்க இருக்குமானால், அதனை முன்கூட்டியே கண்டறியவும், அதனை கட்டுப்படுத்தவும் மாநில அரசால் முடியும். இருப்பினும் சில மாநில அரசுகள் அதனைக் கண்டு கொள்வதில்லை என்கிறார் ஐ.பி.எஸ் அதிகாரி விபூதி நாராயணன். இந்த சட்டத்தைக் கண்டு ஜெயலலிதா பயப்பட என்ன இருக்கிறது என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வி. பாராளுமன்றத்தில் இச்சட்டத்தைக் குறித்து விவாதத்திற்கு வரும்போது, எது ஏற்புடையதாக இல்லையோ, அதனை மாற்றியமைக்க சொல்லவோ அல்லது அதற்கு மாற்றாக புதிய ஷரத்துகளை உருவாக்க செய்யவதற்கோ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் இருக்கிறது. இச்சட்டம் தேவையில்லை என்று சொல்லும் ஜெயலலிதா, மதக்கலவரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான மாற்று வழிகளைச் சொல்ல தயாராக இல்லை. ''மிக தீவிரமாக மத உணர்வுகளை வெளிப்படுத்த அனுமதிக்க முடியாது'' என்கிற கருத்தை மட்டுமே பதிவு செய்துள்ளார்.

       'குழு'வில் இருப்பவர்கள்: மத வன்முறை தடுப்பு மசோதாவில், மதச் சிறுபான்மையினர், மொழிச் சிறுபான்மையினர், பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் ஆகியோர் இச்சட்டத்தில் சொல்லப்படுகின்ற, ''குழு'' சொற்பொருள் விளக்கத்தில் அடங்குவர். இது இந்திய அரசியல் சட்ட சாசனம் ஷரத் 366 பிரிவு 24 & 25 இன்கீழ் அர்த்தம் கொண்டதாக இருக்கும். இம்மசோதா அமலாக்கப்பட்டால் இது மூன்று முக்கிய பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வழிகோலும்.

      முதலாவதாக, மத சிறுபான்மையினருக்கு நேரும் பிரச்சனைகள்: இந்தியாவில் மத சிறுபான்மையினர் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இது சம்பந்தமாக உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமான தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில், 2008இல் மட்டும் 656 மதக்கலவரங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 123 பேர் பலியாகியுள்ளனர். 2009இல் 773 மதக்கலவாரங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 123 பேர் பலியாகியுள்ளனர். 2,417 பேர் காயமடைந்துள்ளனர். 2010இல் 651 மதக்கலவரங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 114 பேர் பலியாகியுள்ளனர். 2,115 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் 2080 பேர் மதவன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 360 பேர் பலியாகியுள்ளனர். 2011 சனவரி முதல் ஆகஸ்ட் வரை 338 மதக்கலவரங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 53 பேர் பலியாகியுள்ளனர். 2011 செப்டம்பர் 14ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் 10 பேரும், அக்டோபர் மாதம் 2ஆம் தேதி உத்தரகண்ட மாநிலம் உதாம்சிங் மாவட்டத்தில் 4 பேரும் பலியாகியுள்ளனர். ஒரு சனநாயக நாட்டில் தொடர்ந்து மதரீதியாக நடைபெறும் கலவரங்களுக்கு சமாதி கட்ட வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. இல்லையென்றால் இங்கு மக்கள் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என நாம் மார்தட்டிக் கொண்டிருக்க முடியாது.

       பெரும்பாலான மதக்கலவரங்களிலும் இந்து ஒருவர் கொலை செய்யப்பட்டதற்கு காவல்துறையினர் நூற்றுக்கணக்கான சிறுபான்மையினர் மீது பிணையில் வெளிவர முடியாத வழக்குகளில் கைது செய்துள்ளதையும் நூற்றுக்கணக்கான சிறுபான்மையினர் கொலை செய்யப்பட்டபோது ஒருசில இந்துக்களின் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்பததையும் இம்மசோதாவை தயாரித்தவர்கள் கண்டறிந்துள்ளார்கள். இதற்கு மேலும் நாட்டில் எங்கு குண்டு வெடித்தாலும், உடனடியாக முஸ்லிம்கள் மீது பழிசுமத்தி கைது செய்கிறார்கள். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் தற்போதைய இந்திய பத்திரிகைத்துறை தலைவருமான மார்க்கண்டே கட்ஜீ, ''நாட்டில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் உடனே முஸ்லிம்கள் மீது பழி சுமத்தும் போக்கை காவல்துறையும் ஊடகங்களும் கையாள்வது வெட்கக்கேடானது'' என கண்டனம் தெரிவிக்கிறார்.

        உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாததால் குண்டு வெடிப்பு நடந்த சில நிமிடங்களிலே வெளிவரும் மின்னஞ்சல்கள் மூலம் வரும் செய்திகளை வைத்து முஸ்லிம்களை கைது செய்து வழக்கின் போக்கினை காவல்துறையினர் திசைதிருப்பி விடுகிறார்கள். உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதே இல்லை. இதனால் குண்டு வைப்பவர்கள் தொடர்ந்து அப்பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒருசில காவல்துறையினர் தங்களது பதவி உயர்வுக்காகவும் இதுபோன்ற குண்டுகளை தாங்களே தயார் செய்து வைத்துவிட்டு, சில அப்பாவி முஸ்லிம்களை கைதுசெய்து, முஸ்லிம் தீவிரவாதிகளை கைது செய்து விட்டதாக பத்திரிகைக்கு பேட்டியும் கொடுத்து அரசிடமிருந்து பாராட்டுதலும் பதவி உயர்வும் பெற்றுச் சென்று விடுகின்றனர். இதனை தடுக்கும் விதமாக இம்மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்பொழுதே இம்மசோதா சட்டமாக்கப்பட்டிருந்தால், ஒரிசா மற்றும் கர்நாடகாவில் கிறிஸ்தவர்களும், குஜராத்தில் முஸ்லிம்களும் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டிருக்க மாட்டார்கள். ஆஸ்திரேலியா பாதிரியார் கிரகாம் ஸ்டுவர்ட் மற்றும் அவரது இரு குழந்தைகளும் உயிருடன் எரிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். இச்சட்டம் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட நீதியாகும்.

       இரண்டாவதாக, மொழி சிறுபான்மையினருக்கு நேரும் பிரச்சனைகள்: இந்திய அரசியல் சட்ட சாசனத்தின் இறுதி வடிவம் வரையப்படுவதற்கு முன்பாக மொழிவழி மாநிலங்களை அமைப்பதற்கான வாய்ப்புகளை ஆராய நிர்ணய சபையின் தலைவர் எஸ்.கே.தார் மற்றும் பாபு ராஜேந்திர பிரசாத் ஆகியோர் தலைமையில் ஒரு கமிஷனை 1948 சூன் மாதம் இந்திய அரசு நியமித்தது. இக்கமிஷன் தார் கமிஷன் என அழைக்கப்பட்டது. இக்கமிஷன் 1948 டிசம்பர் 10இல் தனது அறிக்கையை சமர்பித்தது. அதில், மொழிவழி மாநிலம் அமைப்பது விவேகமற்றது; ஆபத்தானது என வர்ணித்தது. இன்றைக்கு அந்த ஆபத்து பெரிய அளவில் தலை தூக்கி நிற்கிறது. மும்பை மராத்தியர்களுக்கே எனக்கூறி பிறமொழி பேசும் இந்தியர்கள் மும்பையில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். மாநில அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததுதான் மிச்சம். காவோ¢ நீர் கேட்டு தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்கள் போராடியபோது, கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் கன்னடியர்களால் தாக்கப்பட்டனர். கர்நாடக அரசும் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு கன்னடர்களுக்கு சாதகமாகவே செயல்பட்டது. இப்பிரச்சனைக்கு தமிழக அரசு சார்பில் ஒரு கண்டன அறிக்கை மட்டுமே பத்திரிகை வழியாக கொடுக்க முடியும். இம்மசோதா மொழி ரீதியான தாக்குதல்களுக்கு முடிவு கட்ட வழிவகுக்கிறது.

      மூன்றாவதாக தலித்துகள் மீது நடத்தப்படுகின்ற வன்முறை: ராஜ்ய சபையின் எதிர்கட்சி தலைவர் அருண் ஜெட்லி எழுப்புகின்ற கேள்வி என்னவென்றால், ''இம்மசோதாவின் கீழ் வரும் குற்றங்கள், பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்முறைத் தடுப்புச் சட்டம், 1989இன் கீழும் தண்டனைக்குரியதாகும் என்று ஷரத் 6 கூறும்போது ஒருவர் ஒரே குற்றத்திற்காக எப்படி இரண்டு முறை தண்டிக்கப்படலாம்?'' என்பதாகும். அருண் ஜெட்லியின் கேள்வி நியாயமானதே. இந்திய அரசியல் சட்ட சாசனம் ஷரத் 26(1) இன்படி, ஒரு குற்றத்திற்காக ஒருவரை இருமுறை தண்டிக்க முடியாது.

      ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனைக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்ற காரணமும் இதுதான். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே 20 வருட காலம் சிறைத்தண்டனையை அனுபவித்து விட்டார்கள். அவர்களுக்கு எப்படி இன்னொரு தண்டனையை கொடுக்க முடியும்? பாரதிய ஜனதா கட்சி இவ்விசயத்திற்கு பதில் சொல்ல விரும்பவில்லை, ஏன்? இதற்கான பதிலை நீதிமன்றம் வழங்க இருக்கும் சூழ்நிலையில், அருண் ஜெட்லியின் கேள்விக்கும் தேவைப்படும்போது நீதிமன்றம் பதில் வழங்கும். இந்த மசோதா விவாதத்திற்கு வரும்போது பாராளுமன்றத்தில் இக்கேள்வியை எழுப்பி விடை காணலாம், அதற்காக இம்மசோதா தேவையில்லை என்பது நியாயத்திற்கும் நீதிக்கும் புறம்பானது.

     தெய்வத் திருமகன் முத்துராமலிங்க தேவரா அல்லது தெய்வத் திருமகன் இம்மானுவேல் சேகரரா என்பதான பரமக்குடி கலவரத்தில் 6 தலித்துகள் கொல்லப்பட்டார்கள். பலியான குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு இலட்சம் இழப்பீட்டுத் தொகையாக அறிவித்தார். 5 இலட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென ஒவ்வொரு அரசியல் கட்சியும் குரல் எழுப்பியது. ஜெயலலிதா அதனை கண்டு கொள்ளவே இல்லை. இம்மசோதா சட்டமாக்கப்பட்டு நடைமுறையில் இருந்தால் சம்பவம் நடந்த 30 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவருக்கு அரசானது நிதியுதவி வழங்கியிருக்கும், உயிரிழப்பு சம்பவங்களில் நஷ்ட ஈடாக 15 இலட்சத்திற்கு குறையாமல் வழங்கியிருக்கும்.

      சிறுபான்மையினர் யார்? ஒரு குறிப்பிட்ட இடத்தில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்க, அங்கு பெரும்பான்மையினரை சிறுபான்மையினராக கொள்ளாதது இச்சட்டத்தின் மிகப்பெரிய மோசடி என இந்து மதவாதிகள் குரல் எழுப்புகின்றனர். இந்தியாவில் சிறுபான்மையினர் யார் என்பதுதான் கேள்வியே தவிர ஒரு ஊரில் கிறிஸ்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள், அங்கு இரண்டு வீடுகளில் மட்டுமே இந்து குடும்பத்தினர் உள்ளனர். எனவே இந்த இரண்டு குடும்பத்தினரும் சிறுபான்மையினர் என்றால் அது வேடிக்கையாகவே இருக்கும்.

       பெரும்பான்மையினரின் ஒரு வீடு தாக்குதலுக்கு உள்ளானால், பெரும்பான்மையினர் ஒன்று கூடி வருவது இயற்கையாகும். பாபர் மசூதி பகுதியில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருந்தும், போதாக்குறைக்கு பாபர் மசூதியை இடித்து இராமர் கோவில் கட்டுவதற்கு ஒவ்வொரு மாநிலத்திலிருந்து செங்கல் கொண்டு சென்றார்களே, இது எப்படி சாத்தியமானது? பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு தான் ஒரு பெரும்பான்மையினர் வகுப்பைச் சார்ந்தவர் என்கிற உணர்வு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். இதனை ஒருபோதும் மாற்ற முடியாது.  இந்தியாவில் முஸ்லிம்கள் 4%, கிறிஸ்தவர்கள் 2% இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட பகுதியில் சிறுபான்மையினர் அதிகமாக இருக்கிற காரணத்தால் அப்பகுதியில் வாழும் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்புவது நியதிக்கு ஒவ்வாதது.  

      சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் பெரும்பான்மையினர் சமூகத்தாருக்கும் அரசுக்கும் உண்டு. இவர்கள்தான் சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் ஆவர். அரசினால் சிறுபான்மையினர் பாதிப்புக்குள்ளாகும்போது அவர்களுக்கு குரல் கொடுக்கவும் அவர்களது உரிமைகளை நிலைநாட்ட பாடுபடுவதும் பெரும்பான்மையினரின் கடமையாகும். பெரும்பான்மையினரால் சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படும்போது அவர்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. இவ்வாறு இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு சிறுபான்மையினருக்கு உதவி செய்தால்தான் அவர்கள் அச்சமின்றி இந்திய திருநாட்டில் வாழ முடியும்.  

      சட்டப்பார்வை: சிறுபான்மையினருக்கு எதிராக பெரும்பான்மையினர் ஒருவர் வாய்சொற்கள் மூலமாகவோ, எழுத்துக்கள் மூலமாகவோ அல்லது கண்ணுக்கு புலப்படும் வகையிலோ, ஒரு குழுவிற்கு எதிராகவோ அல்லது குழுவைச் சார்ந்தவருக்கு எதிராகவோ துவேஷம் ஏற்படுமாறு நடந்து கொள்வது துவேஷப் பிரசாரம் எனும் குற்றத்தைச் செய்வதாகக் கருதப்படும் என ஷரத் 8 குறிப்பிடுகிறது. இது 1860ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம்153எ படியும், 2007 நோய் காப்பு குறைபாடு நுண்மம் மற்றும் எயிட்ஸ் மசோதா ஷரத் 5இன் படியும் இருக்கும்.

      ஒருவர் சிறுபான்மையினருக்கு எதிராகப் பேசினாலோ, எழுதினாலோ, படம் வரைந்தாலோ, சைகை காண்பித்தாலோ, தாக்கினாலோ அவர் மீது வழக்கு பதிவு செய்யலாம். அதேநேரத்தில் பெரும்பான்மையினர் சமூகத்தின் மீது சிறுபான்மையினர் ஒருவர் இவ்வாறாக நடந்தால் சிறுபான்மையினர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவும் தண்டனைகள் வழங்கவும் வழிவகைகள் உள்ளன.

      ஒருவர் தனியாகவோ, கூட்டாகவோ, ஒரு நிறுவனத்துடன் இணைந்தோ, நிறுவனத்திற்கு ஆதரவாகவோ ஒரு கூட்டத்திற்கு எதிராக சட்டத்திற்கு புறம்பான வகையில் தொடர்ந்து செயல்பட்டால், அச்சுறுத்தினால் அவர்கள் இச்சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியவர்களாவர் என ஷரத் 9 குறிப்பிடுகிறது.    

      ஒரு குழுவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் விதத்தில் ஒருவர் நிதியளித்தாலோ அல்லது செலவு செய்தாலோ 10 இன்படி குற்றமாகும். நிதியானது மத நிறுவனங்களுக்கு பெருமளவிற்கு வருகிறது. அதற்கு அவர்கள் வரி செலுத்துவதில்லை. அப்பணம் எதற்கு செலவிடப்பட்டது என அறிக்கையும் கொடுப்பதில்லை. மத நிறுவனங்கள் தங்களுக்கு கிடைக்கும் பணத்தை தவறான வழிகளில் பயன்படுத்தி வருகின்றது என்பது முற்றிலும் உண்மை. 1.5 கோடி அன்னிய முறைகேடு வழக்கில் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாவும் அவரது தோழர்களும் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருக்கிறார்கள். முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மீதும் இதுபோன்ற வழக்கு நிலுவையில் உள்ளது.

      இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் பணமும், இந்தியாவிலுள்ள செல்வந்தர்களால் வழங்கப்படுகின்ற பணமும் எதற்காக செலவிடப்படுகின்றன என்பதனை வெளிப்படையாக வைக்கும் அளவிற்கு அவர்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் வழங்க உட்படுத்தப்படுத்த வேண்டும். இந்து மதவாதிகளுக்கு வருகின்ற வெளிநாட்டுப் பணத்தை எப்படி செலவு செய்ததாக கணக்கு கேட்கும் அரசானது சிறுபான்மையினராகிய கிறிஸ்தவ, முஸ்லிம் மதவாதிகளுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் வெளிநாடுகளிலிருந்து வரும் பணத்திற்கு கணக்கு கேட்கும் வகையில் இன்னொரு சட்டத்தை கொண்டு வரவேண்டும்.

      குழுவைச் சேர்ந்தவருக்கு மனா£தியாகவோ, உடல் ரீதியாகவோ, வலியும் வேதனையும் ஏற்படுமாறு ஒரு பொது (அரசு) ஊழியர் நடந்து கொண்டால் அவர் சித்திரவதைக் குற்றத்தைப் புரிந்தவராவார் என ஷரத்து 12 குறிப்பிடுகிறது. அவ்வாறு இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் சம்பந்தமாக அரசு (போது) ஊழியர் கடமை தவறியதாகக் கருதப்பட்டு அவருக்கு 13வது ஷரத்து தண்டனை அளிக்கிறது.

      ராணுவத்தையோ, பாதுகாப்பு படைகளையோ கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசு அதிகாரி, அவர்கள் தங்களுடைய கடமைகளைச் சரியாகக் செய்யாவிட்டாலோ அல்லது தன்கிழ் இருக்கும் ஊழியர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்காமல் போனாலோ ஷரத் 14 அவரை தண்டிக்கிறது. மறைமுகப் பொறுப்பு எனும் கொள்கையை ஷரத் 15 விரிவாக்கம் செய்கிறது. தன் மேற்பார்வையில் பணியாற்றுபவர்கள் தவறு இழைக்கும்போது அவர்களைக் கட்டுப்படுத்த இயலாதவராகக் கருதப்படும் அதிகாரி மறைமுகப் பொறுப்பின்படி தவறிழைத்தவராகிறார். இந்த ஷரத்தின்படி குற்றம் இழைத்ததாக சொல்லப்பட்டுள்ளவர்கள் மேலதிகாரிகளின் ஆணைகளை தங்கள் மேல் எடுக்கப்படும் நடவடிக்கைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியாது என ஷரத் 16 குறிப்பிடுகிறது.

     அனுமதியின்றி உள்ளே நுழையும் மத்திய அரசு: மத தவறுகளால் இழைக்கப்படும் குற்றங்கள் சட்டம் சம்பந்தமான ஒழுங்குப் பிரச்சனைகள் ஆகும். சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசுகளின் அதிகார வரம்பில் வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளிடையே உள்ள அதிகாரப் பங்கீட்டின்படி, ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு விசயங்களில் நேராக தலையிடுவதற்கோ, நடவடிக்கை எடுப்பதற்கோ அல்லது அவை சம்பந்தமாக சட்டம் இயற்றவோ மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. அறிவுரைக் குறிப்புகள் அல்லது வழிகாட்டும் குறிப்புகள் அனுப்புவது, இறுதியாக அரசியல் அமைப்பு சட்டத்தின் ஷரத் 356இன் படி ஒரு மாநில அரசு மீது நடவடிக்கை எடுப்பது பற்றிய கருத்தை மேற்கொள்வது ஆகியவைதான் மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் வருகின்றன. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் மத்திய அரசு மாநில அரசுகளின் அதிகாரத்தைத தட்டிப் பறிப்பதோடு மட்டுமில்லாமல் அவைகளின் அதிகார வரம்பிற்குள் சட்டம் இயற்றியது போலாகும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

      2002 குஜராத் மதக்கலவரத்தின்போது நரேந்திரமோடி பெரும்பான்மையினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டது. அப்பொழுது மத்திய அரசுக்கு இருந்த ஒரே வழியானது இந்திய அரசியல் சட்ட சாசனம் 356இன்படி மோடியின் அரசை கலைப்பது ஆகும். இருப்பினும் அதனை மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு செய்யவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இதற்கான மாற்றுவழி என்ன என்பதனை ஆய்வு செய்து இந்த மசோதாவில் ஒரு முக்கிய ஷரத்தை சேர்த்துள்ளனர். ஒரு மாநிலத்தை ஆளும் ஆட்சியை கலைத்து விட்டு மத்திய அரசு உள்ளே நுழைவது சரியா அல்லது ஆட்சியை கலைக்காமலே மதக்கலவரம் நடைபெறுகிற இடத்தில் மத்திய அரசு செயல்படுவது முறையா என்பதுதான் கேள்வி. இதன்மூலம், ''மாநில அரசின் உரிமைகளில் தலையிட்டு அதைக் கலைக்க வழிவகை செய்யும் இந்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டும்'' என்று மற்ற மாநில முதல்வர்களுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. ஏனெனில் ஜெயலலிதா சட்டத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை.

      ஷரத் 20இன்படி மத மற்றும் திட்டமிட்ட வன்முறை ஒரு மாநிலத்தில் நிகழும்போது, அதனை உள் குழப்பமாகக் கருதி (internal disturbance) இந்திய அரசியல் சட்ட சாசனம் ஷரத் 355இன்படி சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அதற்கான நடவடிக்கைகளை கலவரம் நடக்கும் பகுதிகளில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அதிகாரம் பெற்ற மத அமைதி, நீதி மற்றும் ஒழுங்கமைப்பு எடுக்கும். மாநிலத்தின் முதலமைச்சராக நான் இருக்கும்போது, எப்படி என்னுடைய மாநிலத்திற்குள் நீ (மத்திய அரசு) புகுந்து நடவடிக்கை எடுப்பாய் என்பதுதான் ஜெயலலிதாவின் கேள்வி. ஒரு மாநில அரசு, அம்மாநிலத்தில் நிகழும் மதக்கலவரத்தை தடுக்க வழிமுறைகளை கையாளாதபோது அல்லது பெரும்பான்மையினருக்கு சாதகமாக செயல்படும்போது மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்பதனை ஜெயலலிதா சொன்னால் நன்றாக இருக்கும். அவருடைய பதிலை சிறுபான்மையினர் எதிர்பார்க்கின்றனர். பதில் சொல்வாரா?

      நமது நாட்டில் சில மதவாத கட்சிகள் உள்ளன. அவை அரசியலையும் மதத்தையும் ஒன்றாகப் பார்க்கிறது. எங்காவது மதக்கலவரம் ஏற்பட்டால், அங்கே மதவாதக் கட்சி தலைவர்கள் முன்னே நிற்கிறார்கள். போக்குவரத்திற்கு இடையூறாக புறம்போக்கு நிலத்தில் இருக்கும் கோவில்களை அரசு அதிகாரிகள் அகற்றச் சென்றால் அதற்கு மதவாதக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். அரசு அலுவலகங்களில் மதரீதியான படங்களோ சிலைகளோ இருக்கக்கூடாதென அரசு ஆணை இருக்கிற நிலையில், அதனை அகற்ற நடவடிக்கை எடுத்தால் போராட்டம் நடத்துகிறார்கள். மதவாத கட்சிகளினால் இந்து மதம் வளர்கிறதா என்றால் அதுவும் இல்லை.

      மதவாத கட்சிகள் மதவாதத்தைக் கைவிட்டு அரசியலுக்கும் மதவாதிகள் மதவாதத்தைக் கைவிட்டு ஆன்மீகத்திற்கும் திரும்ப வேண்டும்.  அந்நிலைக்கு திரும்பாததுவரை இம்மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டு உயிருடன் இருப்பது பொருத்தமானதே. இச்சட்டம் பெரும்பான்மையினருக்கு பாதகமானதாக இருக்கிறது என்பதனைவிட குறிப்பிட்ட மதரீதியான அரசியல் கட்சிகளுக்கும் மதவாதிகளுக்கும் வேதனையும் சோதனையும் தருவதாக இருக்கிறது என்பதுதான் முற்றிலும் உண்மை.

- வழக்கறிஞர் ஜோ.தமிழ்ச்செல்வன் எம்.ஏ.,எம்.எல்.

அலைபேசி: 9487187193

Pin It