தந்தை பெரியாரின் நினைவு நாள், அவர் மறைந்த ஆண்டுகளின் எண்ணிக்கையை மட்டும் நமக்கு நினைவுபடுத்துவதன்று. அவர் மறைந்து 50 ஆண்டுகள் ஆனபோதும் தன்னுடைய கொள்கைகள் மூலம் இன்றும் உயிர்ப்போடு வாழ்ந்து கொண்டிருப்பதையும் உணரச் செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தந்தை பெரியாரின் கொள்கைகளின் தேவை சமூகத்தில் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.

அத்தகைய வலிமையான கொள்கைகளைத் தன்னுடைய வாரிசாக தந்தை பெரியார் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்.

சுயமரியாதை எனும் கொள்கையின் அடிப்படையில் அவர் முன்னெடுத்த ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை, தமிழர் விடுதலை, பகுத்தறிவு, மானுட விடுதலை ஆகியவை இன்று உலகம் தழுவும் கொள்கைகளாக உருவெடுத்திருக்கின்றன.

periyar 312சமூக சீர்திருத்தத்திற்காகவும், விடுதலைக்காகவும் உலகெங்கும் போராடிய தலைவர்கள் யாரும், நாம் வரலாற்றில் அறிந்த வரையில், பார்ப்பனர்களைப் போன்ற நேர்மையற்ற எதிரிகளை எதிர்த்துப் போராடியிருக்க மாட்டார்கள். இந்த அளவிற்கு நேர்மையற்ற எதிரிகளை எதிர்த்துக் களம் கண்டபோதும் பெரியார் வெறுப்புணர்வையோ வன்முறையையோ எந்த இடத்திலும் விதைத்ததில்லை.

அதற்காக எந்த இடத்திலும் அவர் கொள்கையில் சமரசம் செய்ததில்லை. இன்றுவரையிலும் அந்தச் சமரசமற்ற நாத்திகமும், கடவுள் மறுப்பும், பகுத்தறிவும் பார்ப்பனரல்லாதார் இயக்கமுமே பெரியாரை எதிரிகளால் நெருங்க முடியாத நெருப்பாக வைத்திருக்கிறது.

இன்று அயோத்தியில் இராமர் கோவில் கட்டி மிகப் பெரிய அளவில் பார்ப்பனிய அரசியலை, இந்துத்துவ வெறியை நாடெங்கும் பார்ப்பனர்கள் பரப்பி வருகின்றனர். தமிழ்நாடு தவிர்த்த மற்ற மாநிலங்களில் அரசியல் ரீதியாக பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் கூட சனாதனம், இராமர் கோவில் ஆகியவற்றில் அவர்களை ஒத்த கருத்துகளையே கொண்டவர்களாக இருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

ஆனால் தமிழ்நாட்டில் இந்த அரசியல் எடுபடாததற்கு, தந்தை பெரியார் கண்ட சமூகப் புரட்சி இயக்கமே காரணம் என்பதை உறுதியாகக் கூற முடியும். சமூக இயக்கங்களின் பங்களிப்பில்லாமல் அரசியல் ரீதியாக மட்டுமே பா.ஜ.கவை எதிர்க்க நினைப்பவர்கள் பார்ப்பனிய வலைக்குள் சிக்கி விடுகிறார்கள்.

இந்தியாவின் மற்ற பகுதிகளில் ஜாதியை எதிர்த்துப் போராடிய சமூக சீர்திருத்தவாதிகள் தோன்றியிருந்த போதிலும், சனாதனத்தையும், இந்துத்துவத்தையும் தமிழ்நாட்டளவிற்கு எதிர்க்கும் மனநிலை அப்பகுதிகளில் உருவாகவில்லை.

தந்தை பெரியார் மட்டும் கடவுள் விசயத்திலோ, மத விசயத்திலோ கொஞ்சம் நெளிவு சுழிவுகளோடு இயக்கத்தை நடத்தி இருந்தாரெனில் இன்று இங்கேயும் இராமர் கோவில் அரசியல் புகுந்திருக்கும். தந்தை பெரியாரையும் பார்ப்பனியம் உள்வாங்கிச் செரித்திருக்கும்.

 அப்படிப்பட்ட பெரியாரின் கொள்கைகளைச் சிலர் முற்போக்கு முகமூடி அணிந்தே திரித்துப் பரப்பி வருகின்றனர். ஜாதியை ஒழிக்கப் போராடிய அவரை ஆதிக்க ஜாதி உணர்வுடையவர் என்று பரப்புரை செய்கிறார்கள். கடவுளையும் மதத்தையும் ஒழிக்கப் பாடுபட்டவரை மதமாற்றத்தையும், பகுத்தறிவு மதத்தையும் ஏற்றுக் கொண்டவராகவும் வியாக்கியானங்களைக் கொடுக்கிறார்கள். தனியுடைமைக் கொள்கைகளைத் தொடர்ந்து எதிர்த்து வந்தும், தனக்கென எந்த சொத்துகளையும் வைத்துக் கொள்ளாது வாழ்ந்தவரை நிலப்பிரபுத்துவ சீர்திருத்தவாதி என்று சொன்னார்கள். தமிழர் விடுதலைக்காக தன்னுடைய இறுதிப் பேருரை வரை குரல் கொடுத்தவரை, தமிழர்க்கு எதிரியாகச் சித்தரிக்கின்றனர். பெரியாரின் கொள்கைகளை எதிர்க்கவும் முடியாமல், ஊடுருவி அழிக்கவும் முடியாமல், இது போன்ற திரிபு வாதங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ பார்ப்பனியம் பின்னணியிலிருந்து இயக்கிக் கொண்டிருக்கிறது

தந்தை பெரியாரின் கொள்கை இது போன்ற திரிபுகளால் திசைமாறக் கூடியதன்று. அது உண்மையின் வழியில் விடுதலைக்கான திசையைக் காட்டுவதாகும்.

தமிழர் தலைவராவும், உலகத் தலைவராகவும் தந்தை பெரியார் என்றும் போற்றப்படுவார்!

(டிசம்பர் 24, பெரியார் நினைவுநாள்)

- மா.உதயகுமார்

Pin It