பல்லாயிரக்கணக்கான தங்கள் உறவுகளை இரண்டாம் உலகப்போரில் இழந்து நின்ற யூத இனம், தங்களுக் கான ஒரு கடைசி மிச்சமாய், யூதக் கண்காட்சியகத்தை பெர்லினில் (Berlin) உருவாக்கிக் கொண்டது.

இழப்பின் துயரங்களும், ஏற்படும் வலிகளும் தலைமுறைகளையும் தாண்டி நிற்கக்கூடியன. ஈழ மக்கள் பட்ட துயரும், எல்லையில்லாத இழப்பும் என்றென்றும் உலகத் தமிழ் மக்களின் உள்ளங்களிலும், உணர்வுகளிலும் அழியாத கறையாய்ப் படிந்தே கிடக்கும். அந்த இழப்புகளின் அடையா ளமாய், நினைவுகளின் கையிருப்பாய்ச் சில பதிவுகளை யேனும் ஒவ்வோர் இனமும் ஏற்படுத்திக் கொள்வதுண்டு. அவ்வாறுதான், 2009இல் நடந்தேறிய முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் கொடுமைகளையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்லும் வகையில், தஞ்சை மண்ணில், ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ உருவாகிக் கொண்டிருக்கும் செய்தி நம் நெஞ்சுக்கு நிறைவைத் தந்தது.

அதனை ஒரு கனவாய்க் கொண்டு, அந்த நினைவிலேயே இயங்கி, வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் முற்றத்தை வடித்துக்கொண்டிருக்கும் ஐயா நெடுமாறன், அவருக்கு உறுதுணையாக இருக்கும் நடராசன், ‘தமிழ்மண்’ பதிப்பக இளவழகன், தன் தூரிகையால் ஓவியங்களுக்கு உயிர் கொடுத்திருக்கும் வீர சந்தானம், கல்லிலே காவியம் படைத்திருக்கும் ஸ்தபதி முருகன் உள்ளிட்டு, அப்பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் நம் நன்றியறி தலுக்கும், பாராட்டுக்கும் உரிய வர்கள். முள்ளிவாய்க்கால் முற்றம் என்பது வெறும் சுற்றுலா மையம் அன்று. எங்கள் ஈழ உறவுகளின் எடுப்பு மிக்க வாழ்க்கை, இறுமாந் திருந்த காலம், பிறகு வந்த சோதனைகள், கவலை, கண்ணீர், கடைசி யுத்தம் என்று அனைத்தையும் படம் பிடிக்கும் அரியதோர் ஆவணம். மடிந்துபோன மக்களின் மடியாத வாழ்க்கைப் பதிவு. வருங்காலத் தலைமுறைக்கும் வரலாற்றைச் சொல்லும் கல் நூலகம்.

அந்த முள்ளிவாய்க்கால் முற்றத்தின் திறப்பு விழா, நவம்பர் 8, 9, 10 ஆகிய மூன்று நாள்களில், தஞ்சையில் நடை பெற உள்ள செய்தியை இணையத் தளங்களின் வழி அறிகின்றோம். ஆனந்த விகடன் தீபாவளிச் சிறப்பி தழிலும் (30.10.2013), அது குறித்த செய்திகளும், தொடர்புடையவர்களின் நேர்காணல்களும் வெளியாகியுள்ளன. நான்கு பக்கங்களில், பல வண்ணங் களில், முற்றம் தொடர்பான செய்திகளை விகடன் வழங்கியிருக் கிறது. அதில் ஐயா நெடுமாறன் கூறியதாகக் கீழ்க்காணும் சில வரிகள் இடம் பெற்றுள்ளன.

“ எந்த அரசியல் சார்பும் இல்லாமல், ஒட்டு மொத்தத் தமிழ் இனத்தின் விழாவாக இதை அரங் கேற்ற இருக்கிறோம். பார பட்சம் இல்லாமல் அனை வருக்கும் அழைப்பு அனுப்பு வோம். ஆனால் ஈழப் படுகொலைகளுக்குத் துணைபோன, துரோகிகளுக்கு நாங்கள் அழைப்பு அனுப்ப வில்லை.”

அரசியல் சார்பு ஏதுமின்றி, ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தையும் அழைப்போம் என்று கூறப்பட்டிருப் பதைப் படித்தபோது மகிழ்ச்சியாய் இருந்தது. ஆனால் அடுத்த வரியே அந்த மகிழ்வைக் குலைத்து விட்டது. ஒரு விழாவிற்கு யாரையெல்லாம் அழைக்கலாம், யாரையெல்லாம் அழைக்க வேண்டியதில்லை என்பதை முடிவு செய்யும் எல்லா உரிமைகளும் விழா ஏற்பாட்டாளர்களுக்கு உண்டு. எல்லா விழாவுக்கும், எல்லோரையும் அழைத்துவிட முடியாது. அது நடை முறைக்கு உரியதில்லை. ஆனாலும் ஏன் இவர்களை அழைக்கிறோம், ஏன் அவர்களை அழைக்கவில்லை என்கிற காரணங்களை யாரும் விளக்க வேண்டிய தேவையில்லை.

முள்ளிவாய்க்கால் முற்றத்தைப் பொறுத்தவரையில், அழைத்தாலும், அழைக்கவில்லை என்றாலும் உருவாக்கியவர்களைப் பாராட்டுவதும், அவர்களுக்கு நன்றி கூறுவதும் நம் கடமை என்றே நான் கருதுகிறேன். இதுபோன்ற விழாக்களில், யாரையும் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதும் மிக முதன்மையானது. ஏற்கனவே காயப்பட்ட நம் உறவுகளின் வலிகளை ஊருக்குச் சொல்லும் விதமாகத்தான் இம்முற்றம் அமைக்கப்படுகிறது. அந்த முற்றமே அடுத்தவர்களைக் காயப்படுத்துவதா என்று கவலைப்படாமல் இருக்க முடியவில்லை.

எந்த விழாவிற்கும் ஏழுகோடித் தமிழர்களுக்கு அழைப்பு அனுப்பிவிட முடியாது. அப்படி அனுப்பாத காரணத்தால், அவர்கள் எல்லோரும் துரோகிகள் ஆகிவிடவும் முடியாது. நெடுமாறன் அவர்களின் நேர்காணலில், அந்தக் கடைசி வரி இல்லாமல் இருந்திருந்தால், முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு அது மேலும் பெருமை கூட்டியிருக்குமே என்று எண்ணத்தோன்றுகிறது.

நல்ல செய்தியை நான்கு பக்கங்களில் தந்திருக்கிற விகடன் இதழும் கூட, ஏதேனும் இன்னொரு நல்ல வரியை அந்தப் பகுதிக்குத் தலைப்பாக்கி இருக்கலாம். மூன்றே முக்கால் பக்கங்களில் கூறப்பட்டுள்ள எத்தனையோ நல்ல செய்திகளில் எந்த ஒன்றையும் தலைப்பாக்காமல், கசப்பான கடைசி வரியை மட்டும் தலைப்பாக்கியுள்ள விகடனுக்கு, தமிழர்களின் ஒற்றுமையை விட, பரபரப்பான செய்திகளின் மூலம் இதழின் விற்பனையைக் கூட்டுவதுதான் நோக்கமாக உள்ளது.

போகட்டும்...! எப்படியிருந்தாலும் சரி, யார் நமக்கு எந்தப் பட்டம் தந்தாலும் சரி, நல்லவைகளை எப்போதும் நாம் பாராட்டுவோம். முள்ளிவாய்க்கால் முற்றத்தை வார்த்தெடுக்கும் முயற்சிகளுக்கு நம் வாழ்த்துகள்!!

Pin It