அகில இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் பலருக்கு ஈழத்தமிழர் பிரச்சினையின் அடிப்படையே புரியவில்லை. இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டுக்குப் பங்கம் வராத வகையில் இனப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை கூறுகிறார்கள். அதாவது இலங்கை ஒரு தேசம் என்னும் அடிப்படைக்கு ஊறு விளைந்து விடக்கூடாது என்பதில் அளவுகடந்த அக்கறை காட்டுகிறார்கள்.

சிங்களரும் தமிழரும் கூடி வாழும் ஒருநாடு இலங்கை என்பதைத் தகர்த்தவர்கள் சிங்கள வெறியரே என்ற உண்மையை இவர்கள் உணரவே இல்லை. இலங்கையில் உள்ள யதார்த்தமான நிலையை இவர்கள் உணர மறுக்கிறார்கள்.

இந்திய சூழ்நிலைகள் முற்றிலும் வேறானவை. இந்தியாவின் கூட்டாட்சி முறை குறித்தும், மத சார்ப்பற்ற தன்மை குறித்தும் கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனாலும் இந்தியாவில் குடியரசுத் தலைவர் பதவி முதல் அரசு ஊழியர் பதவிவரை எம்மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் எம்மொழி பேசுபவராக இருந்தாலும் அப்பதவிகளை வகிப்பதற்கு நமது அரசியல் அமைப்புச் சட்டம் வழிசெய்கிறது. தடை எதுவும் இல்லை.

இந்திய மக்கள் தொகையில் 2 சதவீதம் மட்டுமே இருக்கும் சீக்கிய மதத்தைச் சேர்ந்த கியானி ஜெயில்சிங் இந்தியக் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்துள்ளார். இந்தியாவின் பிரதமராக மற்றொரு சீக்கியர் மன்மோகன்சிங் பதவி வகித்து வருகிறார். இந்திய அமைச்சரவையிலும், அரசு உயர் அதிகாரப் பதவிகளிலும், இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றிலும் சீக்கியர்கள் மிக உயர் பதவிகள் வகித்தனர். வகித்தும் வருகின்றனர். அதைப்போல இந்திய மக்கள் தொகையில் 12 சதவீதம் மட்டுமே இருக்கும் முஸ்லீம்கள் உயர் பதவிகள் வகிக்கத் தடையேதும் இல்லை.

ஜாகீர்உசேன், பக்ரூதீன்அலி அகமது ஆகியோர் குடியரசுத் தலைவர்களாகப் பதவி வகித்துள்ளனர். தற்போது அபுல் கலாம் குடியரசுத் தலைவராக உள்ளார். மத்திய அரசிலும், மாநில அரசுகளிலும் முதலமைச்சர்களாக, அமைச்சர்களாக, உயர் அதிகாரிகளாக முஸ்லிம்கள் பதவி வகிக்கின்றனர். இராணுவம், விமானப்படை, கடற்படை போன்றவற்றிலும் பலர் உயர் பதவிகளில் உள்ளனர்.

அரசாங்கத்தில் மட்டுமல்ல அகில இந்தியக் கட்சிகளிலும் முஸ்லிம்களும், சீக்கியர்களும் உயர்ந்த பொறுப்புகள் வகிக்க எவ்விதத் தடையும் இல்லை. சுதந்திர போராட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக அபுல்கலாம் ஆசாத் போன்றவர்களும், சுதந்திரத்திற்குப் பின் பக்ருதுன் அலி அகமது போன்றவர்களும் பதவி வகித்துள்ளனர். இந்திய மார்க்சிய கம்யூனிஸ்டுக் கட்சியின் பொதுச் செயலாளராக சுர்ஜித்சிங் நீண்டகாலம் பதவி வகித்தார்.

பல்வேறு அரசியல் கட்சிகளிலும் முஸ்லீம்களும் சீக்கியர்களும் முக்கிய பொறுப்புகளுக்கு வரத் தடையேதும் இல்லை. ஆனால் இலங்கையின் நிலைமை என்ன? இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 26 சதவீதம் தமிழர்கள் உள்ளனர். ஈழத்தமிழர், இஸ்லாமியத்தமிழர், மலையகத் தமிழர் ஆகிய அனைவரும் மொழியாலும் இனத்தாலும் தமிழரே.

இலங்கை அரசு ஊழியர்களாக 9 இலட்சம் பேர் உள்ளனர். இவர்களின் 8.3 சதவீதம் மட்டுமே தமிழர்கள். காவல்துறையில் 36,031 பேர்கள் வேலை பார்க்கின்றனர் இவர்களில் 477 பேர்கள் மட்டுமே தமிழர்கள். சிங்கள இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் தமிழரைச் சேர்த்துக் கொள்வது இல்லை. முழுமையாக சிங்களர் மட்டுமே முப்படைகளிலும் உள்ளனர்.

கீழ்நிலைப் பதவிகளே தமிழருக்கு மறுக்கப்படும் நிலையில் உயர் பதவிகளைப் பற்றி தமிழர்கள் கனவுகூட காணமுடியாது. குடியரசுத் தலைவராகவோ, பிரதமராகவோ தமிழர் ஒருவர் வரமுடியாது. சிங்கள பெளத்தமதமே அரசு மதமாக அரசியல் சட்டம் அறிவித்துள்ளது. எனவேதான் ஜெயவர்த்தனே அந்நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்தபோது பின்வருமாறு கூறினார். ''இலங்கையில் இனப் பிரச்சினை தீர ஒருவழிதான் உள்ளது. தமிழர்கள் அனைவரும் பெளத்தர்களாகிவிட்டால் பிரச்னை தீர்ந்துவீடும்'' என்றார். சிங்கள அரசியல் தலைவர்களின் மனப்போக்கிற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு வேண்டியதில்லை.

1983ம் ஆண்டில் கொழும்பு நகரில் தமிழர்களுக்கு எதிராக மூண்ட இனக்கலவரத்தில் 3000க்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போதிருந்த சூழ்நிலையில் ஜெயவர்த்தனாவிற்கு ஏதேனும் நேர்ந்தால் என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. அந்நாட்டு அரசியல் சட்டப்படி குடியரசுத் துணைத் தலைவர் பதவி கிடையாது. புதிய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில் நாடாளுமன்ற அவைத்தலைவர் இடைக்காலக் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்பார். அப்போது நாடாளுமன்ற அவைத் தலைவராக எம்.ஏ.பக்கீர் மரைக்கார் என்ற தமிழ் முஸ்லிம் இருந்தார். ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்தவர் என்ற போதிலும் ஒரு தமிழன் இடைக்காலக் குடியரசுத் தலைவராக வருவதை சிங்களர் விரும்பவில்லை. எனவே பதவி விலகும்படி மரைக்கார் வற்புறுத்தப்பட்டு, சிங்களரான ஈ.எல். சேனநாயகா உடனடியாக அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இடைக்கால குடியரசுத் தலைவராகக்கூட ஒரு தமிழன் வருவதை சிங்களரால் சகிக்க முடியவில்லை. குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற உயர் பதவிகளில், தமிழர் ஒரு போதும் வரமுடியாது. முப்படைகளில் தமிழருக்கு இடமில்லை. அரசு நிர்வாகத்தில் தமிழர் பங்கு மிகமிகக் குறைவே.

ஆட்சி மொழிகளாக சிங்களம் தமிழ் இரண்டுமே ஏற்கப்பட்ட போதிலும் நடைமுறையில் சிங்களம் மட்டுமே கோலோச்சுகிறது. தமிழர்கள் வாழும் பகுதிகள் வளர்ச்சித் திட்டங்களில் அறவே புறக்கணிக்கப்படுகின்றன. தமிழர் பகுதியில் தொழில்கள் தொடங்கப்படுவதில்லை. உலக நாடுகள் அளிக்கும் உதவிகள் சிங்களப் பகுதிக்கு மட்டுமே செலவிடப்படுகின்றன.

ஆழிப்பேரலை அழிவினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள், ஆனால் சிங்களருக்கு மட்டுமே பதவிகள் அளிக்கப்பட்டன.

முக்கிய சிங்களக் கட்சிகளை லங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி, ஜே.வி.பி. போன்றவற்றில் முக்கிய பொறுப்புகள் எதிலும் தமிழர்கள் இருந்தது இல்லை. இருக்கவும் முடியாது. மொத்தத்தில் இரண்டாந்தர குடிமக்களாக அங்கு தமிழர்கள் நடத்தப்படுகின்றனர்.

இந்த உண்மைகளை உணராமல் இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டிற்குப் பங்கம் வராமல் இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் எனக் கூறுபவர்கள் கண்ணிருந்தும் பார்க்க மறுக்கும் குருடர்களே. செவிகள் இருந்தும் கேட்க மறுக்கும் செவிடர்களே, வாய் இருந்தும் பேச மறுக்கும் ஊமையர்களே.

(நன்றி: தென்செய்தி)

Pin It