இந்திய அரசே; ராஜபக்சேயின் போர்க் குற்றங்களை அய்.நா.வில் வலியுறுத்து என்று வலியுறுத்தியும், முள்ளிவாய்க்காலில் மரணத்தைத் தழுவிய மாவீரர்களுக்கும், பொது மக்களுக்கும் வீரவணக்கம் செலுத்திடவும் எழுச்சி மிகு பொதுக் கூட்டம் மே 18 அன்று பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற்றது. பொதுக் கூட்ட மேடையில் படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்களுக்கும், போராளிகளுக்கும் வீரவணக்கம் செலுத்திடும் வகையில், ‘தீச்சுடரை’ ம.தி.மு.க. பொதுச் செயலாளர் ஏற்றி வைத்தார். வீரவணக்கம் செலுத்தும் ஒலி முழக்கங்கள், விண்ணைப் பிளந்தன. மாலை 6 மணியிலிருந்தே மக்கள் கூட்டம் நிகழ்ச்சிக்கு வரத் தொடங் கியது. சுமார் 5000 தமிழர்கள் திரண்ட அந்த மாபெரும் கூட்டம் ஈழத் தமிழர் களுக்கு ஆதரவாக பெருகிவரும் மக்கள் பேராதரவை உணர்த்துவதாக இருந்தது. தொடக்கத்தில் சமர்பா, யோகராணி குழுவினர், ஈழத் தமிழின எழுச்சி இசை நிகழ்ச்சியை வழங் கினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த இசை நிகழ்ச்சி உணர்வாளர்களிடையே உணர்ச்சி யையும், எழுச்சியையும் ஊட்டியது.
பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். கரு. அண்ணாமலை வரவேற்புரையாற்றினார். வழக்கறிஞர்கள் அமர்நாத், குமாரதேவன், பொதுச்செயலாளர்கள் விடுதலை இராசேந்திரன், கோவை இராம கிருட்டிணன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையைத் தொடர்ந்து வைகோ நிறைவுரை யாற்றினார். அன்பு. தனசேகரன் தொகுத்து வழங்கினார்.
பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் - இந்திய அரசு இப்போது தமிழர்களுக்காக முன்மொழியும் 13-வது சட்டத் திருத்தத்தின் “உரிமைகள்” என்பவை. தமிழர்களை சட்ட ரீதியாக சிங்களர்களுக்கு அடிமைப்படுத்துவதேயாகும் என்பதை விளக்கமாக குறிப்பிட்டார். பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழர்கள் ஓரணியில் திரண்டு, வலிமையான குரலை எழுப்பும் நேரம் வந்துவிட்டது. இனியும் பிரிந்து கிடக்கக் கூடாது என்று வற்புறுத்தினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தமது உரையில், தமிழ்நாட்டிலிருந்து ஆண்டன் பாலசிங்கம், சத்தியேந்திரா, சந்திரகாசன் ஆகியோரை இந்திய அரசு வெளியேற்றியபோது தமிழகத்தில் தோன்றிய எழுச்சிக்குப் பயந்து வெளி யேற்றும் உத்தரவை இந்தியா ரத்து செய்ததை நினைவுகூர்ந்து, அதே எழுச்சியை மீண்டும் உருவாக்க வேண்டும் என்றார். அய்.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிராக சுவிட்சர் லாந்து உட்பட அய்ரோப்பிய நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தைத் தோற்கடித்து இலங்கை அரசைக் காப்பாற்றி, இந்தியா தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தை சுட்டிக் காட்டினார். வை.கோ. தமது நிறைவுரையில், ஈழத் தமிழினப் படுகொலையை திட்டமிட்டு நடத்தியது சோனியா தான் என்று குற்றம் சாட்டினார்.
“தமிழக மீனவர்கள் இனி சுட்டுக் கொல்லப்பட மாட்டார்கள் என்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத் துக்கு வந்த சோனியா உறுதி தந்தார்; என்ன நடந்தது?
தங்கச்சி மடத்தைச் nச்hந்த நான்கு மீனவ சகோதரிகள் தாலி அறுத்த சோகம் முடிந்து 16 நாள்கூட ஆகவில்லை. சோனியாவுக்கு என்ன தைரியம் வேண்டும் இப்படிச் சொல்வதற்கு? கொல்லப்பட்ட தங்கச்சிமடம் மீனவன் அந்தோணி ராஜ், கடைசியாக அவன் மனைவியிடம் விடை பெறும்போது, ‘நான் உயிரோடு திரும்ப வேண்டு மானால், இன்று நடக்கும் கிரிக்கெட் போட்டியில் இலங்கை ஜெயிக்க வேண்டும் என்று கர்த்தரிடம் வேண்டிக்கொள்’ எனச் சொல்லிவிட்டுப் போயிருக் கிறான். அந்த மீனவ சகோதரி இந்த வார்த்தைகளைச் சொன்ன போது, நான் ஆடிப்போனேன். சில பதவிகளுக்காக, முன்னாள் முதல்வர் நாடகம் ஆடினார். திட்டமிட்டே கருணாநிதிக்கு சில துண்டுகளைப் போட்டார்கள். சில மந்திரி பதவி களுக்காக தீராப் பழியை, தீராத துன்பத்தைத் தேடித் தந்து விட்டீர்கள். இதனால், அவமானப்பட்டு கூனிக் குறுகி நிற்கிறீர்கள். டெல்லி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சூளுரைத்த கருணாநிதியின் போர்க் குரல் எங்கே? ஜனநாயகத்தை நிலைநாட்ட முழங்கிய அந்த வீரம் எங்கே? தி.மு.க.வின் அந்த உணர்ச்சி எங்கே? சில பதவிகளுக்காக, நான் - என் குடும்பம் நல்லா இருந்தாப் போதும் என்று நினைத் தீர்களே! இன்று நடப்பது என்ன?
போயஸ் கார்டனுக்கு சோனியாவின் வாழ்த்துச் செய்தி உடனே போகிறது. முதலமைச்சருக்கு, பிரதமர் வாழ்த்துச் சொல்லலாம். சோனியா எதற்கு வாழ்த்து சொல்கிறார்? காரியம் முடிந்ததும் கருணாநிதியைப் பிடித்து வெளியே தள்ளுகிறார்கள். ஜெய லலிதாவை உள்ளே இழுக்கிறார்கள்” - என்றார் வைகோ.
நாடு போல் பொதுக் கூட்டத் துக்கு கழகத் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். கழகப் பொருளாளர் கரு. அண்ணாமலை தலைமையில் கழகத் தோழர்கள் பம்பரமாக சுற்றிச் சுழன்று இந்தப் பொதுக் கூட்டத்தை சிறப்பாக நடத்தி முடித்துள்ளனர். கூட்டத்தில் துண்டேந்தியதில் மக்கள் சிறு சிறு தொகையாக வழங்கிய நன்கொடை ரூ.15 ஆயிரம்.
கூட்டத்தின் வெற்றிக்கு உழைத்த தோழர்கள்: எம்.ஜி.ஆர். நகர் பகுதி தலைவர் செ. செயசீலன், செயலாளர் மு.வெங்கடேசன், பகுதி பொருளாளர் அ.குமரேசன் மற்றும் தஞ்சை தமிழன் சி.வ. வல்லரசு, மணிமொழியன், மாசில விநாயகமூர்த்தி, வி.பொற் கோவன், ஆட்டோ சங்கர் மதிவாணன், டெய்லர் கண்ணன், டைல்ஸ் குமார், ம. மூவேந்தன், தாமரைக் கண்ணன், ம. முரளி, செ.ராசா, செயராஜ் மற்றும் தோழர்கள் தொடர்ந்து பொதுக் கூட்டம் வெற்றி பெற 15 நாட்கள் இரவு பகல் பாராமல் உழைத்தார்கள். தஞ்சை தமிழன் நன்றி கூறிட 10.30 மணியளவில் கூட்டம் நிறைவடைந்தது