கலைஞரின் சுயசரிதை ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் பெயர் என்றால் - திருவள்ளுவரின் வரிதான் பொருத்தமாக இருக்கும்.அது ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’.

 udayanithi stalin in nenjukku neethiதலைப்பில் மட்டும் அல்ல, படத்தின் மூலை முடுக்கில் எல்லாம் பொருள் பொதிந்த குறியீடுகளும் வசனங்களும் நிரம்பி வழிகின்றன. எந்த இடத்திலும் நெருடல் இல்லாமல் இயல்பாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் அருண்ராஜா. அமைதியாகவும் கதாபாத்திரத்தின் கனத்தை ஏற்றும் நடித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

சுதந்திர தினம் அன்றும், சாதிக் கொடுமைக்கு விடுமுறையில்லை என்ற அழுத்தமான பதிவுடன் ஒரு பள்ளிக்கூட அங்கன்வாடியில் தொடங்குகிறது படம். மயானத்தில், நம்பள எரிக்கதான் விடுவாங்க, இங்க எரிய விடமாட்டாங்க என்ற வசனத்தில் சாதிக் கொடுமை செத்த பிறகும் தொடர்வதைக் காட்சிப்படுத்துகிறது.

வெளிநாட்டில் படித்தவராக, உள்ளூர் சாதியப் பிரச்சனைகள் குறித்து அறியாதவராக, நாயகன் வீரராகவன் IPS பொள்ளாச்சியின் இயற்கை அழகை இரசித்தப்படி, அதன் பின்னால் இருக்கும் சாதிக் கொடூரங்கள் அறியாமல் வரும் காவல்துறை ASP அதிகாரியாக அறிமுகமாகிறார் உதயநிதி ஸ்டாலின். ஊர் வந்துவிட்டது, பாரத ரத்னா அம்பேத்கர் சிலை தெரிகின்றது என்று அலைபேசியில் பேசும் நாயகனிடம், சிலை கூட்டுக்குள் இருக்கிறதா? வெளியே இருக்கிறதா? என்று கேட்கிறார் நாயகி தன்யா. வெளியே.. அப்படினா இன்னும் ஊர் வரவில்லை என்ற நாயகியின் பேச்சில் அழுத்தமான சமூகப் புரிதல் வெளிப்படுகின்றது.

இரண்டு பட்டியலின சிறுமிகள் கொலைப்பட்டு தூக்கில் தொங்கும் காட்சியில் இருந்து கதைக்களம் சூடுபிடிக்கிறது. மூன்றாவதாக ஒரு சிறுமியைக் காணவில்லை. மொத்த காவல்துறையும் வழக்கை ஆணவக்கொலை என்று முடிக்க எண்ணுகின்றது. சமூகத்தில் தேவையில்லாத பதட்டம் ஏற்படும் என்று நாயகனின் விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுகின்றது. உடற்கூறு ஆய்வில் பாலியல் குற்றத்தை மறைத்து மாற்றியமைத்தல், சிறுமியின் குடும்பத்தாரிடம் மிரட்டி வாக்குமூலம் வாங்கி, பிணத்தை எரியூட்டச் செய்தல் என மற்ற காவல்துறையினர் செய்கைக்கு நடுவே தனி ஆளாக வழக்கை முன்னோக்கி நகர்த்துகிறார் நாயகன்.

பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் அமைச்சரின் அக்கா மகன் தொடர்பு, அரசியல் பின்புலம், சாதிய சமூக கட்டமைப்பு ஆகியவற்றிக்கு எதிராகப் போராடும் நாயகன் உதயநிதி, சாதிய பேதம் கொண்டு சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கியதாகக் கூறி இடைநீக்கம் செய்யப்படுகிறார். அதன்பின் குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரத்தை திரட்டினாரா? மூன்றாவது சிறுமி சத்யாவை கண்டுபிடித்தாரா? என்பது தான் கதை.

பட்டியலின புரட்சிகர இளைஞனாக கருப்பு துண்டணிந்து பொங்கும் கோபத்துடன் வரும் ஆரி அர்ச்சுணன் பாத்திரம் என்றால், பட்டியலினத்தை சார்ந்த காவல்துறை அதிகாரி இளவரசனின் கையறு நிலை மறுபக்கம். ‘தீட்டு’ என்றால் என்ன என்று நாயகன் கேட்கும் காட்சி அருமை. நாய்களிடம் அன்புகாட்டும் காவல்துறை அதிகாரி, மனிதர்களை சாதி வெறியுடன் நடத்தும் காட்சி, காட்டுமிராண்டி சமூகத்திடம் இருந்து தப்பி ஓடிய சத்யா, ஊறும் பாம்பின் அருகே காட்டில் ஒரு மூலையில் மயங்கிக் கிடக்கும் காட்சி, சொல்லாமல் உணர்த்துவது சாதி வெறியர்களை விட இது பாதுகாப்பான இடம் தான் என்று.

அனிதா MBBS என்று உதயநிதி அழைக்கும் போதும், மருத்துவர் அனிதா வெள்ளை கோட்டுடன் வில்லன் முன் வரும் பொழுதும் அரங்கம் அதிர மக்கள் ஆரவாரம். வில்லன் சுரேஷ் அய்யரை பட்டியலின காவல் அதிகாரி அறைந்த காட்சியில் கைத்தட்டல் அள்ளுகிறது. தினமலரும், காயத்ரி ரகுராமும் ஏன் குமுறுகிறார்கள் என்று இதில் இருந்து புரியும்.

திபுனு தாம்ஸின் இசை மற்றும் தமிழரசனின் வசனம் கதைக்காகவே முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன என்று சொல்லலாம். எந்த இடத்திலும் நெருடலாக இல்லாமல் இயல்பாக அமைந்திருந்தது காட்சிகளும், கதையும். வசனங்கள் படத்திற்கு பெரும் பலமாக அமைந்ததுள்ளது. அவைகளுள் சில :-

“எங்க வலிகளையும் பிரச்சனைகளையும் தீர்க்கத்தான் ஜாதி கட்சி எல்லாம் ஆரம்பிச்சாங்கனு நினைச்சோம், ஆனா எங்க வலிகளையும் பிரச்சனைகளையும் வெச்சிதான் கட்சியே நடத்துறாங்கனு பின்னாடிதான் புரிஞ்சிது”

“அடிச்சா வலிக்கும்னு தெரிஞ்சவங்களுக்கு நம்ப வலி எப்படி இருக்கும்னு தெரியாதுல’’.

“இந்தி மொழி கத்துக்கிறது ஆர்வம், ஆனா அத கத்துக்கிட்டே ஆகணும்னு சொல்றது ஆணவம்”

சாதிய தாக்குதலுக்கு உள்ளாகும் அங்கன்வாடி பணிப்பெண்ணில் தொடங்கும் படம் அதே பெண் கொடியேற்றத்துடன் முடிகிறது. படம் முடிவடைந்து விட்டதாக நினைத்து மக்கள் வெளியேறும் நிலையில் நாயகன் பேசும் வசனம் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. “படிக்கும் குழந்தைங்க 2 மொழி படிக்கிறார்களா 3 மொழி படிக்கிறார்களா என்பதை விட அரசியலமைப்பு சட்டத்தைப் படிக்கனும். ஏன்னா, சட்டம் தான் நம் தேசிய மொழி. அது சரியானவங்க கையிலும் இருக்கணும்”.

இந்திய சட்டம் Article 15 - மதம், இனம், சாதி, பிறப்பிடம் தொடர்பான ஏற்றத்தாழ்வை மறுக்கிறது. (அதாவது சமமாக வாழும் உரிமையைத் தருகிறது)

நம்மை நாமே எடைபோட நெஞ்சுக்கு நீதி. ஒவ்வொருவரும் பார்ப்பது சமூகத்திற்கு நலன் பயக்கும்.

- மதிவாணன்

Pin It