தந்தை பெரியார் தனக்காக, தன் கொள்கைக்காகப் போராடும் மாணவர்களிடம் “போராட்டத்தை நான் பார்த்துக் கொள்கிறேன், நீ போய் படி” என்று அனுப்பிடுவார்.

திண்டுக்கல்லில் நடைபெற்ற ஒரு தேர்தலின் போது தன் கட்சிக்காக மேடையில் பேசிக் கொண்டிருந்த மாணவனைப் பார்த்த பெருந்தலைவர் காமராசர் அவர்கள், அந்த மாணவனிடம் இப்போது நீ படிக்க வேண்டிய வயது. போய் படி என்று அறிவுரை சொல்லி அனுப்பினார், அந்தமாணவன் இன்று ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக இருக்கிறார் என்று பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ‘ஒன்றே சொல் நன்றே சொல்’ என்ற தொலைக்காட்சி நிகழ்வின்போது விளக்கியிருக்கிறார். இது நேர்மையான தலைவர்களுக்கான அடையாளம், பண்பு.students at modi campaignதமிழ்நாட்டின் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்காத பிரதமர், தேர்தல் வந்தவுடன் ஓடோடி வருகிறார் தேர்தல் பிரச்சாரம் என்று, அதில் தவறு இல்லை.

ஆனால் கடந்த 18-03-2024 கோவையில் மோடிக்காக நடைபெற்ற ‘மோடி ரோட் ஷோ’ நிகழ்ச்சிக்காகச் சாலையோரம் நிறுத்தப்பட்ட மக்களுடன் கோவை, சாய்பாபா வித்யாலய நடுநிலைப் பள்ளியின் 6 முதல் 8 வயது வரையான பிஞ்சு மாணவக் குழந்தைகள் 50 பேர்களை நிறுத்தி உள்ளார்கள் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள நிலையில், மோடியின் பா.ஜ.க தேர்தல் பிரச்சாரத்தில் ‘நடுநிலை’ப் பள்ளியின் மாணவக் குழந்தைகளைப் பயன்படுத்தியது அப்பட்டமான தேர்தல் விதிமீறல், மனித உரிமை மீறல் அல்லவா!

தேர்தல் பரப்புரைக்காகச் செல்லும் போது அரசு ஹெலிகாப்டர்/ விமானத்தைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆந்திராவில் உள்ள சிலக்கலூரிப் பேட்டையில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ள விமானப்படை ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி உள்ளார். இதுவும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது.

விதிமீறல் என்பது மோடிக்கு வாடிக்கைதான். இதற்கு மக்கள்தான் தண்டனை தர வேண்டும் வர இருக்கும் தேர்தல் நாள்களில்.

தேர்தல் ஆணையத்தை விட மக்களின் விரல்களுக்கே வலிமை அதிகம்!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It