“விடமாட்டேன்”, ஸ்டாலின் சூளுரை!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 28.08.2018 அன்று பொறுப்பேற்ற நாள் முதல் தலைவர் மு.க.ஸ்டாலின் சித்தாந்த போரில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு களமாடி வருகிறார். அன்று பொதுக்குழுவில் ஆற்றிய உரையில் “இந்தியா முழுமைக்கும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் பா.ஜ.கவின் திட்டத்தை நான் நிறைவேற்ற விட மாட்டேன்” என்று அவர் சூளுரைத்தார்.

mk stalin 198அதன்படி தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் பா.ஜ.க கூட்டணியைத் தோற்கடித்து இந்த மண்ணில் மதவாதத்தை நுழைய விடாமல் காவல் அரணாக காத்து நிற்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனது ஆளுமையால் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை கட்டியமைத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் 39 தொகுதிகளை வென்று அமோக வெற்றி பெற்றுத் தந்தார் மு.க.ஸ்டாலின். அப்போது 21 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் 12 இடங்களையும் திமுக வென்றது.

2019 டிசம்பரில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்கள் 12 பேர், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் 243 பேர், ஒன்றியக் குழுத் தலைவர்கள் 112 பேர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 2090 பேர் என 6522 பொறுப்புகளை தி.மு.க கைப்பற்றியது. எதிர்க்கட்சி, உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை.

2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 132 இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றதன் மூலம் திமுகவின் 10 ஆண்டு கால தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து அரியணை ஏறினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அதன் பிறகு நடைபெற்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பெருவெற்றி பெற்றதுடன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் மாபெரும் வெற்றியை ஈட்டினார் திராவிட மாடல் நாயகர் மு.க.ஸ்டாலின்.

ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க அரசை விரட்டியடிக்க எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டைப் போலவே வலுவான கூட்டணியை கட்டமைத்தார் மு.க.ஸ்டாலின். அதனால் அச்சமுற்ற ஒன்றிய பா.ஜ.க அரசு தனது விசாரணை அமைப்புகள் மூலம் தி.மு.கவை வளைக்கப் பார்த்தது. “மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை” என்ற முடிவோடு ஒன்றிய அரசின் அடக்குமுறையை துணிவோடு எதிர்கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணியை உடைத்திடும் நோக்கத்தோடு பா.ஜ.க கூட்டணியில் இருந்து அ.இ.அ.தி.மு.க பிரிந்து நின்றது. ஆனால் “கடை விரித்தும் கொள்வாரில்லை” என்ற நிலைக்கு ஆளானது அ.இ.அ.தி.மு.க. சிந்தாமல் சிதறாமல் தொகுதிப் பங்கீட்டை சிறப்பாக முடித்து அதே வெற்றிக் கூட்டணியைத் தக்க வைத்து தலைமை ஏற்றுள்ளது தி.மு.க.

ஏறத்தாழ 50% இடங்களை கூட்டணிக் கட்சிகளுக்கு பகிர்ந்தளித்த பிறகு எஞ்சியுள்ள இடங்களில் தி.மு.க போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர்களும் நேர்த்தியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தி.மு.க வேட்பாளர் பட்டியலில் புதியவர்கள் - 11 பேர், பெண்கள் - 3 பேர், பட்டதாரிகள் - 19 பேர், முதுநிலை பட்டதாரிகள் - 12 பேர், முனைவர் - 2 பேர், மருத்துவர்கள் - 2 பேர், வழக்கறிஞர்கள் - 6 பேர் ஆவர். இப்படி குறை காண முடியாதபடி சிறப்பான வேட்பாளர்களைக் களமிறக்கியது மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஒன்றியமே ஏற்றுக் கொள்ளும் வகையில் ஆகச் சிறந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வெற்றியை மேலும் உறுதி செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

“அந்தந்த மாநிலங்களின் கட்சிகள் அவர்களது பகுதிகளில் அதிகபட்சத் தொகுதிகளை வெல்ல வேண்டும் என்பதே இந்தியா கூட்டணியின் முக்கிய நோக்கம். தேர்தலுக்குப் பிறகு, இக்கூட்டணியை வழிநடத்தும் காங்கிரஸுக்கு கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஆதரவளித்து ஆட்சியைக் கைப்பற்றும். இது தான் இந்தியா கூட்டணியின் தேர்தல் கணக்கு. இதில் தி.மு.க மிக முக்கியப் பங்காற்றும்” என்று டில்லியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ஷரத் குப்தா கூறியுள்ளார்.

அதே போல் பெங்களூருவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும் அரசியல் நோக்கருமான விஜய் க்ரோவர் “தென்னிந்தியாவின் முக்கியமான கட்சியான தி.மு.க.வின் தலைவர் என்ற அடிப்படையில் இக்கூட்டணியில் மு. க. ஸ்டாலினின் அவர்களின் பங்கு முக்கியத்தும் வாய்ந்தது” என்று கூறியுள்ளார்.

தேசிய அளவில் பா.ஜ.கவை வீழ்த்தி இந்தியாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் மீட்பார் என்ற நமது கருத்தை நாடெங்குமுள்ள அரசியல் நோக்கர்களும், ஊடகவியலாளர்களும் உறுதிப் படுத்துகிறார்கள்.

பாசிசம் வீழட்டும்!

இந்தியா. வெல்லட்டும்

வழக்கறிஞர் இராம.வைரமுத்து

Pin It